Color Quran - Introduction - வண்ணத் திருக்குர்ஆன் அறிமுகம்
இன்னொரு புதிய தமிழாக்கமா?
தமிழ் மொழியில் ஏற்கனவே பல குர்ஆன் தமிழாக்கங்கள் இருக்கும் போது, ஏன் இன்னொரு புதிய குர்ஆன் தமிழாக்கம்? என்ற கேள்வி எழும். ஆனால், இந்த வண்ணத் திருக்குர்ஆன் புதிய தமிழாக்கம் அல்ல. தமிழ் முஸ்லிம்கள் பயன்படுத்தும் குர்ஆன் தமிழாக்கங்களில் ஒன்றான "முஹம்மது ஜான் டிரஸ்ட் தமிழாக்கத்தின் மீது செய்யப்பட்ட ஆய்வு ஆகும்".
தற்போது தமிழ் மொழியில்,
- டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்
- அப்துல் ஹமீது பாகவி தமிழாக்கம்
- இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் (IFT) தமிழாக்கம்
- பி.ஜைனுல் ஆபிதீன் தமிழாக்கம்
போன்ற குர்ஆன் தமிழாக்கங்களோடு கூட, இன்னும் சில தமிழாக்கங்கள் உள்ளன.
எனவே, இந்த வண்ணத் திருக்குர்ஆன் என்பது ஒரு தமிழாக்கமல்ல, இது ஏற்கனவே இருக்கும் குர்ஆன் தமிழாக்கத்தின் மீது செய்யப்பட்ட ஆய்வு ஆகும்.
அரபி மூல குர்ஆன் ஆய்வு?
அப்படியானால், இந்த ஆய்வுக்கும், மூல அரபி குர்ஆனுக்கும் எந்த சம்மந்தமும் இல்லையா? என்று கேட்டால், நிச்சயம் சம்மந்தம் உண்டு. குர்ஆன் தமிழாக்கங்கள் அனைத்தும் மூல அரபி குர்ஆனிலுருந்து மொழியாக்கம் செய்யப்பட்டவைகள் தானே! எனவே மறைமுகமாக இந்த ஆய்வு மூல அரபி குர்ஆனில் தான் செய்யப்பட்டது. மேற்கொண்டு படித்தால், இதன் உண்மைத் தன்மை புரியும்.
இதன் நோக்கமென்ன?
மனித வார்த்தைகளை அல்லாஹ்வின் வசனங்களிலிருந்து வேறு பிரித்தல்
நாம் அனைவரும் அறிந்திருக்கின்றபடி, குர்ஆன் என்பது இஸ்லாமிய நபி முஹம்மது அவர்களுக்கு சிறிது சிறிதாக 23 ஆண்டுகள் இடைவெளியில் அல்லாஹ்வினால் இறக்கப்பட்டதாக முஸ்லிம்களால் நம்பப்படுகிறது. மேலும், குர்ஆனில் அதன் முந்தைய கால பல நிகழ்ச்சிகளை அல்லாஹ் சுட்டிக்காட்டுகின்றான். பைபிளிலிருந்து பல நிகழ்ச்சிகளை அல்லாஹ் குர்ஆனில் மறுபதிவு செய்கின்றான் . மேலும், முஹம்மதுவின் சமகாலத்தில் மக்கள் பேசிய வார்த்தைகளையும் சுட்டிக்காட்டுகின்றான்.
குர்ஆனில் அல்லாஹ் நபிகளோடு செய்த உரையாடல்கள், மக்கள் தங்களுக்குள் செய்த உரையாடல்கள், மலக்குகளின் உரையாடல்கள் என்று பல உரையாடல்களை குர்ஆனில் காணலாம்.
உதாரணத்திற்கு கீழ்கண்ட உரையாடல்களைச் சொல்லலாம்:
- ஆதாம் படைக்கப்பட்ட பின்பு, அல்லாஹ்விற்கும், இப்லீஸுக்கும் இடையே நடந்த உரையாடல்
- நூஹ் நபிக்கும் அக்கால மக்களுக்கும் இடையே நடைப்பெற்ற உரையாடல்
- நபி இப்றாஹீமுக்கும் தம் இன மக்களுக்கும் இடையே நடந்த உரையாடல்கள்
- நபி மூஸாவிற்கும், ஃபிர்அவ்னிற்கும், சூனியக்கரர்களுக்கும், இஸ்ராயீலர்களுக்கும் இடையே நடந்த உரையாடல்கள்
- நபி ஸுலைமான் மற்றும் ஹுத் ஹுத் பறவைக்கும் இடையே நடந்த உரையாடல்
- நபி ஸுலைமானின் காலத்தில் எறும்புகளுக்கு இடையே நடந்த உரையாடல்
- ஒவ்வொரு காலக்கட்டத்தில் அனுப்பப்பட்ட நபிகளுக்கும் தம் மக்களுக்கும் இடையே நடைப்பெற்ற உரையாடல்கள்
- இஸ்லாமிய இறைத்தூதர் முஹம்மதுவோடு குறைஷிகளுக்கும், யூதர்களுக்கும் மற்றும் கிறிஸ்தவர்களுக்கும் இடையே நடைப்பெற்ற உரையாடல்கள்
இவ்விதமாக பல கடந்த கால நிகழ்ச்சிகளை, அவர்களின் உரையாடல்களோடு (மனித வார்த்தைகளோடு) அல்லாஹ் தன் வார்த்தைகளையும் குர்ஆனில் பதிவு செய்துள்ளான். மேலும் குர்ஆனில் எதிர்காலத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளும் அப்போது நடக்கவிருக்கும் உரையாடல்களும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இப்லீஸின் பேச்சுக்கள்:
ஒரு எடுத்துக்காட்டு: இப்லீஸின் வார்த்தைகள் அடங்கிய குர்ஆன் வசனங்கள்:
குர்ஆன் 4:119 "இன்னும் நிச்சயமாக நான் அவர்களை வழி கெடுப்பேன்;. அவர்களிடம் வீணான எண்ணங்களையும் உண்டாக்குவேன்;. (ஆடு, மாடு, ஒட்டகை போன்ற) கால்நடைகளின் காதுகளை அறுத்து விடும்படியும் அவர்களை ஏவுவேன். இன்னும் அல்லாஹ்வின் படைப்புகளையுடைய கோலங்களை மாற்றும்படியும் ஏவுவேன்" என்றும் ஷைத்தான் கூறினான்;. எனவே எவன் அல்லாஹ்வை விட்டு ஷைத்தானை உற்ற நண்பனாக ஆக்கிக் கொள்கிறானோ, அவன் நிச்சயமாக பகிரங்கமான பெரு நஷ்டத்தை அடைந்தவன் ஆவான்.
குர்ஆன் 7:12 "நான் உனக்குக் கட்டளையிட்ட போது, நீ ஸஜ்தா செய்யாதிருக்க உன்னைத் தடுத்தது யாது?" என்று அல்லாஹ் கேட்டான்; "நான் அவரை (ஆதமை)விட மேலானவன் - என்னை நீ நெருப்பினால் படைத்தாய், அவரை களிமண்ணால் படைத்தாய்" என்று (இப்லீஸ் பதில்) கூறினான்.
இவ்வசனங்களில் அடிக்கோடிட்ட வார்த்தைகளை கவனித்துப்பாருங்கள். அவைகள் அல்லாஹ்வின் வார்த்தைகள் அல்ல, அவைகள் இப்லீஷின் வார்த்தைகள். அடிக்கோடு இடாத வார்த்தைகள் தான் அல்லாஹ்வின் வார்த்தைகள்.
இந்த உரையாடல் அல்லாஹ்விற்கு, இப்லீஸுக்கும் இடையே ஆதிகாலத்தில் நடந்த ஒன்று என்று குர்ஆன் பதிவு செய்துள்ளது. அதனை கி.பி. ஏழாம் நூற்றாண்டில் குர்ஆனில், அல்லாஹ் சுட்டிக்காட்டும்போது, இவ்வுரையாடலை பதிவு செய்கின்றான். அதாவது "இப்லீஸ் அப்படி பேசினான்", "நான் இப்படி பதில் அளித்தேன்" என்று அல்லாஹ் கடந்த கால நிகழ்ச்சியை எடுத்துரைக்கின்றான். இப்லீஷ் பேசிய வார்த்தைகளை அல்லாஹ் மறுபடியும் சொல்லிக்காட்டும் பொது, அவைகள் எப்படி 'அல்லாஹ்வின் வார்த்தைகள் ஆகும்'?
இந்த வண்ணத் திருக்குர்ஆனில், குர்ஆன் முழுவதிலும் உள்ள 'அல்லாஹ் பேசாத வார்த்தைகள், வரிகள், நிகழ்ச்சிகள்' வண்ணமிடப்பட்டுள்ளன. இதன் மூலமாக, அல்லாஹ்வின் வார்த்தைகள் எவையென்றும், மற்றவர்களின் (மனிதர்களின், பறவை, எறும்பு, இப்லீஸ்,..) வார்த்தைகள் எவை என்றும் நாம் சுலபமாக புரிந்துக் கொள்ளலாம்.
குர்ஆனில் அல்லாஹ் அல்லாதவர்களின் வார்த்தைகள் உண்டா?
முஸ்லிம்களின் படி குர்ஆன் அல்லாஹ்வின் வார்த்தையாகும், ஆனால், அல்லாஹ் தன் சுய விருப்பத்தின் படி, மனித வார்த்தைகளையும், மலக்குகளின் வார்த்தைகளையும், காஃபிர்களின் வார்த்தைகளையும் இன்னும் எறும்பு மற்றும் ஹுத் ஹுத் பறவையின் வார்த்தைகளையும் சேர்த்துள்ளான்.
அல்லாஹ் முடிவு செய்து சேர்த்த ஒன்றை, இல்லை என்று மறுக்க யாருக்கும் உரிமையோ அதிகாரமோ இல்லை.
கவனிக்கவும், கடந்த கால நிகழ்ச்சிகளை உரையாடல்களை அல்லாஹ் மேற்கோள் காட்டும் போதெல்லாம், மனித வார்த்தைகளை மற்றவர்களின் வார்த்தைகளை அல்லாஹ் குர்ஆனில் சேர்த்துள்ளான்.
எறும்புகளின் பேச்சுக்கள்:
இந்த கீழ்கண்ட வசனத்தை அல்லாஹ் இறக்கும் போது, எறும்புகளின் வார்த்தைகளை தன் வேதத்தில் சேர்த்துக்கொள்ள அவன் தயங்கியதில்லை.
27:18 இறுதியாக, எறும்புகள் நிறைந்த இடத்திற்கு அவர்கள் வந்த போது ஓர் எறும்பு (மற்ற எறும்புகளை நோக்கி) "எறும்புகளே! நீங்கள் உங்கள் புற்றுகளுக்குள் நுழைந்து கொள்ளுங்கள்; ஸுலைமானும் அவருடைய சேனைகளும், அவர்கள் அறியாதிருக்கும் நிலையில் உங்களை நசுக்கி விடாதிருக்கும் பொருட்டு (அவ்வாறு செய்யுங்கள்)" என்று கூறிற்று.
எறும்புகள் பேசிய வார்த்தைகளை எடுத்துக்கொண்டு, அவைகள் 'அல்லாஹ் பேசிய வார்த்தைகள்' என்றுச் சொல்வது, அல்லாஹ்விற்கு எதிரான குற்றமாகாதா?
இவ்வசனத்தில் "இறுதியாக, எறும்புகள் நிறைந்த இடத்திற்கு அவர்கள் வந்த போது ஓர் எறும்பு " என்ற வார்த்தைகளும், "என்று கூறிற்று" என்ற வார்த்தைகள் மட்டுமே அல்லாஹ்வின் வார்த்தைகள் ஆகும், மீதமுள்ளது எறும்பு பேசிய வார்த்தைகளாகும்.
சுருக்கமாக சொல்வதென்றால், குர்ஆனில் அல்லாஹ்வின் வார்த்தைகளோடு மற்றவர்களின் வார்த்தைகளும் உள்ளன என்பது தான் இதன் மூலமாக நாம் அறியமுடிகின்றது.
ஜின்களின் பேச்சுக்கள்:
கீழ்கண்ட வசனத்தில் பேசுவது யார்? ஜின்கள். இந்த வசனத்தை அல்லாஹ் இறக்கியிருந்தாலும், அந்த வார்த்தைகளை சொல்பவர்கள் ஜின்கள் தானே! முதல் வக்கியம் எப்படி தொடங்குகிறது என்று பாருங்கள், "(ஜின்கள்) கூறினார்கள்" என்று தொடங்குவதிலிருந்து ஜின்கள் இவ்வார்த்தைகளை பேசுகிறார்கள் என்று புரிகின்றதல்லவா!
குர்ஆன் 46:30 (ஜின்கள்) கூறினார்கள்; "எங்களுடைய சமூகத்தார்களே! நிச்சயமாக நாங்கள் ஒரு வேதத்தைச் செவிமடுத்தோம், அது மூஸாவுக்குப் பின்னர் இறக்கப்பட்டிருக்கின்றது, அது தனக்கு முன்னுள்ள வேதங்களை உண்மை படுத்துகிறது. அது உண்மையின் பக்கமும், நேரான மார்க்கத்தின் பாலும் (யாவருக்கும்) ´வழி´ காட்டுகின்றது.
நோவாவின் பேச்சு:
இந்த வசனத்தில் பேசுபவர் நபி நோவா ஆவார். இந்த வசனத்தில் "என்று கூறினார்" என்பது தான் அல்லாஹ்வின் வார்த்தைகள், மீதமுள்ளது நோவா தம் மக்களுக்கு எடுத்துச் சொன்ன செய்தியாகும்.
குர்ஆன் 71:2 "என் சமூகத்தார்களே! நிச்சயமாக நான் உங்களுக்கு பகிரங்கமாக அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவன்" என்று கூறினார்.
மக்களின் பேச்சு:
கீழ்கண்ட வசனங்கள் குர்ஆனில் இருந்தாலும், இங்கு பேசுபவர்கள் யார்? நம்பிக்கையில்லாத மக்கள் பேசுகிறார்கள். அல்லாஹ்வே தன் வசனங்களை 'சூனியம் என்றோ, இவைகள் மனித வார்த்தைகள்' என்றோ சொல்லிக்கொள்வானா? சிந்தித்துப் பாருங்கள்?
குர்ஆன் 74:24, 25 அப்பால் அவன் கூறினான்: "இது (பிறரிடமிருந்து கற்றுப்) பேசப்படும் சூனியமே அன்றி வேறில்லை. "இது மனிதனின் சொல்லல்லாமலும் வேறில்லை" (என்றும் கூறினான்.)
குர்ஆன் 75:6 "கியாம நாள் எப்போழுது வரும்?" என்று (ஏளனமாகக்) கேட்கிறான்.
கீழ்கண்ட வசனத்தில், தன்னுடைய இறைத்தூதரை அல்லாஹ்வே "இவர் ஒரு பைத்தியக்காரர்" என்றுச் சொல்வானா? இல்லையல்லவா? இவைகள் மனிதர்கள் பேச்சுக்கள் தானே! அதுவும் இஸ்லாமை நம்பாத மக்களின் பேச்சுக்கள் என்று அல்லாஹ்வே சொல்கிறான்.
குர்ஆன் 23:25 "இவர் ஒரு பைத்தியக்கார மனிதரேயன்றி வேறில்லை எனவே இவருடன் நீங்கள் சிறிது காலம் பொறுத்திருந்து பாருங்கள்" (எனவும் கூறினர்).
"இல்லை, இல்லை, நாங்கள் நம்பமாட்டோம், இது குர்ஆனில் இருப்பதினால், அது அல்லாஹ்வின் பேச்சுக்கள்" என்று நீங்கள் சொல்வீர்களென்றால், நீங்கள் நேரடியாக அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும் கேவலப்படுத்துகிறீர்கள் என்று பொருள். அல்லாஹ் முஹம்மதுவை 'பைத்தியக்காரர்' என்று சொல்வதாக ஆகிவிடுமோ, இது உண்மையென்றால், மொத்த குர்ஆனுமே பொய்யாகிவிடுமே!
ஒரு அடிப்படை உண்மையை புரிந்துக்கொள்ளுங்கள்: எந்த வரிகள் ஒருவரின் மூளையிலிருந்து/மனதிலிருந்து/எண்ணத்திலிருந்து வருகிறதோ, அது தான் அந்த நபர் பேசுவதாக அமையும். ஆனால், மற்றவர்கள் சொல்வதை இன்னொருவர் குறிப்பிட்டு "அவர் அப்படி சொன்னார், இவர் இப்படி சொன்னார்" என்று சொல்வாரானால், அது சொல்பவரின் வார்த்தைகளாக கருதக்கூடாது.
உதாரணம்: உமர் என்ற பெயர் கொண்ட ஒரு மாணவன் தன் ஆசிரியரிடம் சென்று, "சார், அப்துல் உங்களை 'நாய்' என்று திட்டிணான்" என்று சொல்கிறான் என்று வைத்துக்கொண்டால், அந்த ஆசிரியர் என்ன செய்வார்? இப்படிச் சொல்லும் உமரை அடிப்பார்களா? இல்லை. அதற்கு பதிலாக, அந்த அப்துல் என்ற மாணவனை அழைத்து, 'நீ என்னை நாய் என்று திட்டினாயா?' என்று கேட்பார் அல்லவா? அதன் பிறகு, அது உண்மையென்று அறியப்பட்டால், அந்த அப்துலின் மீது தகுந்த ஒழுங்கு நடவடிக்கை எடுப்பார்கள். இதே போலத்தான், அல்லாஹ் குர்ஆனில் "மக்கள் முஹம்மதுவை பைத்தியக்காரர்" என்றுச் சொல்கிறார்கள் என்று சுட்டிக்காட்டுகின்றானே தவிர, அவரது மனதிலிருந்து அவர் முஹம்மதுவை "பைத்தியக்காரர்" என்று குற்றம்சாட்டவில்லை.
இப்பொழுது வாசகர்களுக்கு புரிந்திருக்கும், குர்ஆனில் மனித வார்த்தைகள் எவை, அல்லாஹ்வின் வார்த்தைகள் எவை என்பதை பிரித்துப் பார்ப்பது அவசியம்.
நாம் இந்த தொடர் கட்டுரைகளில், ஒவ்வொரு ஸூராவிலும், எத்தனை வசனங்களில் அல்லாஹ்வின் வார்த்தைகள், எத்தனை வசனங்களில் மற்றவர்களின் வார்த்தைகள் உள்ளன என்ற பட்டியலும் கொடுக்கப்பட்டு இருக்கும். குர்ஆனை சரியாக புரிந்துக்கொள்ள இது உதவியாக இருக்கும்.
தேதி: 4th Mar 2025
வண்ணத் திருக்குர்ஆன்
உமரின் கட்டுரைகள் பக்கம்
Source: https://www.backend.ai-deutschland.de/tamil/authors/umar/ramalan/ramalan2025/colorquran-intro.html