மக்காவின் பிரச்சனை 5
ஸஃபா மர்வா பெரிய மலைகளா? (அ) பொடிக்குன்றுகளா?
முன்னுரை:
"குர்-ஆனிக் ஜியோகிரஃபி" என்ற புத்தகத்தின் அடிப்படையில், "இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல" என்ற தலைப்பில் தொடர் கட்டுரைகளை பார்த்துக் கொண்டு இருக்கிறோம். இஸ்லாமிய புனித நூல்களில் காணப்படும் மக்கா பற்றிய புவியியல் விவரங்கள் தற்போதையை மக்காவை குறிப்பதாக இல்லை என்று ஆசிரியர் கிப்சன் முன்வைத்த காரணங்களை ஒவ்வொன்றாக பார்த்துக் கொண்டு இருக்கிறோம்.
மேற்கண்ட கட்டுரைகளில், கடைசியாக பார்த்த கட்டுரை காபாவின் அருகில் இருக்கும் இரண்டு மலைகள் பற்றியதாகும். அவைகளை ஸஃபா மற்றும் மர்வா என்று அழைப்பார்கள். முஸ்லிம்கள் ஹஜ் செய்யும் போது, இம்மலைகளுக்கு இடையில் ஏழு முறை ஓடுவார்கள். இம்மலைகளுக்கு மத்தியில் (ஒரு மலையிலிருந்து இன்னொரு மலைக்கு இடையில்) ஒரு நீரோடை இருந்ததாக புகாரி ஹதீஸ் கூறுகிறது. இந்த நீரோடையின் வழியாக முஹம்மது ஸயீ செய்வார் (ஓடுவார்) என்றும் புகாரி ஹதீஸ் கூறுகின்றது. ஆனால், இந்த நீரோடை தற்கால மக்காவில் காணப்படும் ஸஃபா மர்வா மலைகளுக்கு இடையே இருக்க சாத்தியமில்லை என்பதை கண்டோம். அந்த அக்கட்டுரையை இங்கு படித்துவிட்டு, அதன் பிற்கு தற்போதைய கட்டுரையை படிக்கவும்.
மக்காவின் பிரச்சனை 5
ஸஃபா மற்றும் மர்வா மலைகள் பற்றி இஸ்லாமிய நூல்கள் சொல்லும் இன்னொரு புவியியல் பிரச்சனைப் பற்றி இப்போது காண்போம். இவ்விரு மலைகளை "மலைகள்" என்றுச் சொல்லாமல், "குட்டி குன்றுகள்" என்றுச் சொல்லலாம், அவ்வளவு சிறிய குன்றுகள் இவைகள்.
படம்: மர்வா மலை - கட்டிடத்திற்குள் (ground floor) அடங்கிவிட்ட குன்று.
படம்: ஸஃபா மலை - கட்டிடத்திற்குள் (ground floor) அடங்கிவிட்ட குன்று.
புகாரி ஹதீஸ்களில் "ஸஃபா, மர்வா" பெரிய மலைகளாக வர்ணிக்கப்பட்டுள்ளது. இதனால், தற்கால மக்கா மீது நமக்கு சந்தேகம் வருகிறது. புகாரி சொல்லும் நிகழ்ச்சிகள் இன்றுள்ள ஸஃபா மர்வா மலைகளில் நடக்கவில்லையோ! என்ற சந்தேகம் வருகிறது. இந்த கட்டுரையில் புகாரி சொல்லும் இரண்டு நிகழ்ச்சிகளை ஆய்வு செய்யப்போகிறோம். முதலாவது நிகழ்ச்சி, ஆபிரகாம், ஆகாரை இன்றுள்ள காபாவிற்கு அருகில் விட்டுச் சென்ற நிகழ்ச்சியாகும். இரண்டாவது நிகழ்ச்சி, மக்காவாசிகளுக்கு இஸ்லாம் பற்றி போதனை செய்ய முஹம்மது மேற்கொண்ட ஒரு முயற்சியாகும்.
1) ஸஃபா மர்வா மலைகளும் ஹாஜர் (ஆகார்) அவர்களும்:
இந்த புகாரி ஹதீஸ் மிகவும் நீளமானது, எனவே இக்கட்டுரைக்கு தேவையானதை மட்டும் இங்கு பதிக்கிறேன். இஸ்லாமின் படி, ஆபிரகாம் ஆகாரையும், இஸ்மவேலையும் மக்காவில் தனிமையில் விட்டுச் சென்றுவிடுகிறார். ஆகார் இவ்விரண்டு மலைகளிலும் ஏறி யாராவது மக்கள் தென்படுகிறார்களா என்று பார்க்கிறார். இந்த நிகழ்ச்சியை விளக்கும் பகுதியை முதலில் பார்த்துவிட்டு, அதன் பிறகு நம் கேள்விகளுக்குச் செல்வோம்.
புகாரி எண்: 3364 & 3365
3364. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: . . .
இஸ்மாயீலின் அன்னை இஹ்மாயீலுக்கு பாலூட்டும் அந்த தண்ணீரிலிருந்து (தாகத்திற்கு நீர்) அருந்தவும் தொடஙகினார்கள். தண்ணீர்ப்பையிலிருந்த தண்ணீர் தீர்ந்துவிட்ட போது அவளும் தாகத்திற்குள்ளானார். அவருடைய மகனும் தாகத்திற்குள்ளானார். தம் மகன் (தாகத்தில்) புரண்டு புரண்டு அழுவதை... அல்லது தரையில் காலை அடித்துக் கொண்டு அழுவதை.... அவர்கள் பார்க்கலானார்கள். அதைப் பார்க்கப் பிடிக்காமல் (சிறிது தூரம்) நடந்தார்கள். பூமியில் தமக்கு மிக அண்மையிலுள்ள மலையாக ஸஃபாவைக் கண்டார்கள்.அதன் மீது (ஏறி) நின்று கொண்டு (மனிதர்கள்) யாராவது கண்ணுக்குத் தென்படுகிறார்களா என்று நோட்டமிட்டபடி பள்ளத்தாக்கை நோக்கி பார்வையைச் செலுத்தினார்கள். எவரையும் அவர்கள் காணவில்லை. ஆகவே ஸஃபாவிலிருந்து இறஙகிவிட்டார்கள். இறுதியில் பள்ளத்தாக்கை அவர்கள் அடைந்த போது தம் மேலஙகியின் ஓரத்தை உயர்த்திக் கொண்டு சிரமம்பட்டு ஓடும் ஒரு மனிதனைப் போன்று ஓடிச்சென்று பள்ளத்தாக்கை கடந்தார்கள். பிறகு மர்வா மலைக் குன்றிற்கு வந்து அதன் மீது (ஏறி) நின்று யாராவது தென்படுகிறார்களா என்று நோட்டமிட்டார்கள். எவரையும் காணவில்லை. இவ்வாறே ஏழு முறை செய்தார்கள். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள். இதுதான் (இன்று ஹஜ்ஜில்) மக்கள் ஸஃபாவுக்கும் மர்மாவுக்குமிடையே செய்கின்ற சஃயு (தொஙகோட்டம்) ஆகும். என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.. . . Volume :4 Book :60
3365. இப்னு அப்பாஸ்(ரலி) கூறியதாவாது:
. . .பின்னர் திரும்பி வந்து தோல் பையிலிருந்து நீர் அருந்தினார். அவரின் குழந்தைக்காக பால் சுரந்தது. பின்னர் தண்ணீர் தீர்ந்தவுடன் அவர் (தமக்குள்), 'நான் போய் (மலை மீதேறி) நோட்டமிட்டால் எவராவது எனக்குத் தென்படலாம்" என்று கூறினார்கள்; பிறகு, ஸஃபா மலைக் குன்றுக்கச் சென்று ஏறினார். அவர் (அங்கிருந்து) நோட்டமிட்டார்; எவராவது தமக்குத் தென்படுகிறாரா என்று பார்த்தார். ஆனால் எவரும் அவருக்குத் தென்படவில்லை. எனவே, பள்ளத்தாக்கிற்குச் சென்றார். அங்கு சென்று சேர்ந்தததும் ஓடிச் சென்று மர்வாவை அடைந்தார். அப்படிப் பல சுற்றுகள் ஓடினார். பிறகு, 'நான் போய் குழந்தை என்ன செய்கிறது என்று பார்த்தால் (நன்றாயிருக்குமே)" என்று தமக்குள் கூறினார். எனவே, (மலைக்குச்) சென்று நோட்டமிட்டார். ஆனாலும், குழந்தை இஸ்மாயீல் அதே நிலையில் தான் (அழுதபடி) இறப்பற்கு முன் மூச்சுத் திணறுவதைப் போல் முனகிக் கொண்டிருந்தார். அவரின் (பெற்ற) மனம் அவரை நிம்மதியாக இருக்கவிடவில்லை. எனவே, அவர் (தமக்குள்) 'நான் போய் நோட்டமிட்டால் எவராவது தென்படக் கூடும்" என்று கூறிச் சென்று ஸஃபா மலைக் குன்றின் மீதேறிப் பார்த்தார்; பார்த்தார்; (பார்த்துக்கொண்டேயிருந்தார்.) எவரும் அவருக்குத் தென்படவில்லை. இவ்வாறே ஏழு சுற்றுகளை நிறைவுசெய்துவிட்டார். Volume :4 Book :60
இந்த ஹதீஸ்களில் ஸஃபா மர்வா மலைகளை ஒட்டி நிகழ்ந்த நிகழ்ச்சிகளின் வர்ணனைகளை கவனியுங்கள். மேற்கண்ட நிகழ்ச்சியை படிக்கும் போது, இந்த மலைகள் பற்றி எப்படிப்பட்ட பிம்பம் நம் மனதில் தோன்றுகிறது? மிகப்பெரிய இரண்டு மலைகள், அவைகளுக்கு மத்தியில் மிகப்பெரிய பள்ளத்தாக்கு இருந்திருக்கிறது என்று தோன்றுகிறதல்லவா?
ஸஃபாவும், மர்வாவும் உயரமான மலைகளா?
மனிதர்கள் யாராவது தென்படுகிறார்களா? என்று ஸஃபாவின் மீது ஏறி ஆகார் பார்க்கிறார். மேலும் அங்கிருந்து பள்ளத்தாக்கையும் நோட்டமிட்டார்.
… அதன் மீது (ஏறி) நின்று கொண்டு (மனிதர்கள்) யாராவது கண்ணுக்குத் தென்படுகிறார்களா என்று நோட்டமிட்டபடி பள்ளத்தாக்கை நோக்கி பார்வையைச் செலுத்தினார்கள். எவரையும் அவர்கள் காணவில்லை. ஆகவே ஸஃபாவிலிருந்து இறஙகிவிட்டார்கள். …(3364)
… பின்னர் தண்ணீர் தீர்ந்தவுடன் அவர் (தமக்குள்), 'நான் போய் (மலை மீதேறி) நோட்டமிட்டால் எவராவது எனக்குத் தென்படலாம்" என்று கூறினார்கள்; பிறகு, ஸஃபா மலைக் குன்றுக்கச் சென்று ஏறினார். அவர் (அங்கிருந்து) நோட்டமிட்டார்; எவராவது தமக்குத் தென்படுகிறாரா என்று பார்த்தார். ஆனால் எவரும் அவருக்குத் தென்படவில்லை…. (3365)
முந்தையை கட்டுரையில் கொடுக்கப்பட்ட படங்களையும், வீடியோக்களையும் பாருங்கள். இந்த வீடியோவில் ஒரு முஸ்லிம், ஸஃபாவிற்கு வேலியாக இருக்கும் கண்ணாடியை உடைத்து, ஸஃபாவின் மீது ஏறுகிறார். ஸஃபா மலையின் (குன்றின்) உயரத்தைப் பாருங்கள். நாம் இன்று காணும் ஸஃபா எவ்வளவு சிறியதாக இருக்கிறது! உண்மையில், இப்படிப்பட்ட சிறிய குன்றாக இருந்தால், அதிக சிரமத்தை எடுத்துக்கொண்டு அதன் மீது ஏறத்தேவையில்லை, பக்கவாட்டில் நடந்துச் சென்று குன்றின் அடுத்த பக்கத்திலிருந்து மனித நடமாட்டம் ஏதாவது தெரிகின்றதா என்று சுலபமாக பார்த்துவிடலாம். இந்த அடிப்படை அறிவு ஆகார் அவர்களுக்கு இருந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
ஆனால், அதே மலையைப் பற்றி மேற்கண்ட ஹதீஸ் சொல்கிறது: "இந்த மலையில் ஏறி ஆகார் அவர்கள் பள்ளத்தாக்கைக் நோட்டமிட்டார்களாம், யாராவது மனிதர்கள் தென்படுகிறார்களா என்று பார்த்தார்களாம்". பள்ளத்தாக்கு என்றால் என்னவென்று நமக்குத் தெரியும், பல மலைகளுக்கு மத்தியிலே இருக்கும் மிகப்பெரிய விசாலமான பள்ளமான இடம்.
இன்று நாம் பார்க்கும் ஸஃபாவின் மீது ஏறி, "மனிதர்கள் வருகிறார்களா என்று" பார்க்கவேண்டிய அவசியமில்லை. ஸஃபாவில் ஏறாமல் அதன் அடியில் நின்றுக்கொண்டு பார்த்தால் என்ன தெரியுமோ, அதே தான் ஸஃபாவின் மீது ஏறிப்பார்த்தாலும் தெரியும், ஒருவேளை சில அடிகள் தூரமாகத் தெரியலாம், அவ்வளவு தான். புகாரி ஹதீஸ் சொல்லும் ஸஃபாவிற்கு, நாம் காணும் இன்றுள்ள ஸஃபாவிற்கும் அதிக வித்தியாசம் உள்ளது.
ஸஃபாவிற்கும் மர்வாவிற்கும் இடையில் பள்ளத்தாக்கு உள்ளதா?
இவைகளில் உள்ள இன்னொரு பிரச்சனை, ஸஃபா மற்றும் மர்வாவிற்கு இடையே இருக்கும் பள்ளத்தாக்கு. கீழ்கண்ட விவரங்களை கற்பனை செய்துப் பாருங்கள்.
. . . ஆகவே ஸஃபாவிலிருந்து இறஙகிவிட்டார்கள். இறுதியில் பள்ளத்தாக்கை அவர்கள் அடைந்த போது தம் மேலஙகியின் ஓரத்தை உயர்த்திக் கொண்டு சிரமம்பட்டு ஓடும் ஒரு மனிதனைப் போன்று ஓடிச்சென்று பள்ளத்தாக்கை கடந்தார்கள். பிறகு மர்வா மலைக் குன்றிற்கு வந்து அதன் மீது (ஏறி) நின்று யாராவது தென்படுகிறார்களா என்று நோட்டமிட்டார்கள். எவரையும் காணவில்லை. . . . (3364)
. . . அவர் (அங்கிருந்து) நோட்டமிட்டார்; எவராவது தமக்குத் தென்படுகிறாரா என்று பார்த்தார். ஆனால் எவரும் அவருக்குத் தென்படவில்லை. எனவே, பள்ளத்தாக்கிற்குச் சென்றார். அங்கு சென்று சேர்ந்தததும் ஓடிச் சென்று மர்வாவை அடைந்தார். . . (3365)
ஆகார் முதலாவது ஸஃபாவில் ஏறி மனிதர்களுக்காக நோட்டமிட்டார்கள் யாரும் தென்படவில்லை, அங்கிருந்து பள்ளத்தாக்கையும் நோட்டமிட்டார்கள். உடனே ஸஃபாவை விட்டு இறங்கிவிட்டார்கள். ஸஃபாவிற்கும் அடுத்தபடியாக, மர்வாவிற்கு செல்லும் வழியில் பள்ளத்தாக்கு இருந்திருக்கிறது. மர்வாவிற்கு செல்லவேண்டுமென்றால், அந்த பள்ளத்தாக்கை கடக்கவேண்டும். ஒரு ஆண் சிரமம்பட்டு எப்படி ஓடுவானோ அது போல ஓடி அந்த பள்ளத்தாக்கை கடந்துள்ளார்கள். அதன் பிறகு மர்வா மலையில் ஏறி பார்க்கிறார்கள்.
இன்று காபாவிற்கு அருகில் இருக்கும் ஸஃபா மற்றும் மர்வாவிற்கு இடையே மேற்கண்ட ஹதீஸ் சொல்லும் அளவிற்கு பெரிய பள்ளத்தாக்கு இருந்திருக்குமா? மேலும், இன்றுள்ள இவ்விரண்டு மலைகளுக்கும் இடையே 300 மீட்டர்கள் தூரம் இருக்கிறது[1]. ஆனால், மேற்கண்ட ஹதீஸ்கள் சொல்லும் விவரங்களை பார்த்தால், 300 மீட்டர் தூரம் இருக்கும் இடத்தை ஆகார் கடந்ததாக தெரியவில்லை, அதைவிட தூரம் உள்ள பெரிய பள்ளத்தாக்கை கடந்ததாகத் தெரிகின்றது.
ஸஃபா மர்வா பற்றி நாம் பார்த்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை இன்னொரு முறை பாருங்கள், மேற்கண்ட வர்ணனைகள் அவைகளுக்கு பொருந்துகின்றதா என்பதை சிந்தித்துப்பாருங்கள்?
2) குதிரைப் படையை மறைக்கும் அளவிற்கு பெரியதான மலை ஸஃபா:
இன்னொரு புகாரி ஹதீஸ் இதைப் பற்றி இன்னும் சிறிது தெளிவுப்படுத்தும் படி இருப்பதையும் நாம் காண்போம்.
மக்காவில் காணும் இந்த ஸஃபா மலையை (குன்றை) ஒரு முறை பார்த்துவிடுங்கள்.
படம்: ஸஃபா மலை
இப்போது நாம் புகாரி ஹதீஸ் எண்: 4971ஐ பார்ப்போம்:
4971. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்
'(நபியே!) உங்களுடைய நெருங்கிய உறவினர்களுக்கு எச்சரிக்கை செய்வீராக!' (அதாவது,) 'தூய மனம் படைத்த உம்முடைய குழுவினரையும் (எச்சரிக்கை செய்வீராக!') எனும் (திருக்குர்ஆன் 26:214 வது) இறைவசனம் அருளப்பட்டபோது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் புறப்பட்டுச் சென்று 'ஸஃபா' (மலை) மீதேறி உரத்த குரலில், 'யா ஸபாஹா (அதிகாலை ஆபத்து! உதவி! உதவி!)' என்று கூறினார்கள். அப்போது (மக்கா நகர) மக்கள், 'யார் இவர்?' என்று கூறியவாறு நபியவர்களிடம் ஒன்று கூடினர். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'இந்த மலையின் அடிவாரத்திலிருந்து (உங்களைத் தாக்குவதற்காக பகைவர்களின்) குதிரைப் படையொன்று புறப்பட்டு வருகிறது என்று நான் உங்களிடம் தெரிவித்தால், என்னை நீங்கள் நம்பியிருப்பீர்களா?' என்று கேட்டார்கள். மக்கள், 'உம்மிடமிருந்து எந்தப் பொய்யையும் நாங்கள் அனுபவித்ததில்லை. (அவ்வாறிருக்க, இதை நாங்கள் நம்பாமல் இருப்போமா?)' என்று கூறினார்கள். . . . . .. 2 Book : 65
(இதே நிகழ்ச்சி புகாரி எண்கள் 4801 & 4972 களிலும் வருகிறது, அவைகளில் காலையிலோ, மாலையிலோ படைகள் வருவார்கள் என்று சொன்னால் நம்புவீர்களா? என்று முஹம்மது கேட்டார் என்று இடம்பெறுகிறது).
இந்த ஹதீஸ் சொல்வதை சுருக்கமாக கீழே கொடுத்துள்ளேன், நீங்கள் இந்த நிகழ்ச்சியை கற்பனை செய்து பாருங்கள்:
- முஹம்மது காபாவின் பகுதியில் உள்ள ஸஃபா மலை மீது ஏறுகிறார்
- உரத்த குரலில் மக்களை அழைக்கிறார், மக்கள் ஒன்று கூடுகிறார்கள்.
- ஸஃபாவின் ஒரு பக்கத்தில் மக்கள் உள்ளனர், ஸஃபாவின் மீது முஹம்மது இருக்கிறார். ஸஃபாவின் அடுத்த பக்கத்தில் என்ன நடக்கிறது என்பதை, மலையின் மீது ஏறி இருப்பவரால் மட்டுமே பார்த்து சொல்லமுடியும், கீழே இருக்கும் மக்களுக்கு அது தெரிய வாய்ப்பு இல்லை. ஏனென்றால், மலை அவ்வளவு பெரியது மற்றும் விசாலமானது என்று நாம் இந்த ஹதீஸ் மூலம் அறியலாம்.
- ஒரு பக்கம் மக்கள் கூடிவிட்டார்கள், இப்போது முஹம்மது அவர்கள் 'இந்த மலையின் அடிவாரத்திலிருந்து (உங்களைத் தாக்குவதற்காக பகைவர்களின்) குதிரைப் படையொன்று புறப்பட்டு வருகிறது என்று நான் உங்களிடம் தெரிவித்தால், என்னை நீங்கள் நம்பியிருப்பீர்களா?' என்று கேள்வி கேட்கிறார்.
- உம்மை நாங்கள் நம்புவோம் என்று மக்கள் பதில் அளிக்கிறார்கள்.
- மக்கள் நம்புவதற்கு காரணம் இதுவரை 'முஹம்மது பொய் சொல்லவில்லையென்று' அவர்களே சாட்சி சொல்கிறார்கள்.
- இந்த கேள்வியை முஹம்மது கேட்டதற்கு காரணம், இஸ்லாம் பற்றி அவர் போதிக்கவேண்டியுள்ளது. எனவே, தன் மீது மக்காவினர் வைத்துள்ள நம்பிக்கையை அடிப்படையாக வைத்துக் கொண்டு, இஸ்லாமை போதிக்கலாம் என்று நினைத்து, மலை மீது ஏறினார். மலையின் பின்புறத்தில் நடக்கும் விவரங்களை மக்கள் இந்த பக்கத்திலிருந்து பார்க்கமுடியாத அளவிற்கு பெரிய மலையாக ஸஃபா இருப்பதினால், ஒரு கேள்வியை கேட்டு தன் நம்பகத்தன்மையை நிருபித்தார்.
இந்த ஹதீஸ் சொல்வது உண்மையென்றால், முஹம்மது ஏறிய மலை எவ்வளவு பெரியதாகவும், விசாலமானதாகவும் இருந்திருக்கவேண்டும்?
இந்த புகாரி ஹதீஸோடு இன்றுள்ள ஸஃபா மலையை உரசிப்பார்ப்போம் வாருங்கள்:
இன்று காபாவின் பக்கத்தில் காணப்படும் ஸஃபா மலையை நாம் பார்த்து இருக்கிறோம், அதன் உயரத்தையும் பார்த்து இருக்கிறோம், ஸஃபா மலை கட்டிடத்தின் தரைத்தளத்திற்குள் (ground floor) அடங்கிவிட்டது, அதிக பட்சம் 20 அடி உயரம் இருக்குமா?
- இவ்வளவு சிறியதாக இருக்கும் ஒரு குன்றின் மீது முஹம்மது ஏறிக்கொண்டு, இந்த மலையின் அடுத்த பக்கத்தின் அடிவாரத்திலிருந்து ஒரு குதிரைப்படை வருகிறது என்று சொல்வதை கற்பனை செய்துப் பாருங்கள், இது மிகவும் வேடிக்கையாக இருக்கும்.
- இன்று மக்காவில் காணும் ஸஃபாவிற்கு பின்பாக எத்தனை குதிரை வீரர்கள் மறையமுடியும்? 10 வீரர்கள், 50 வீரர்கள், 100 வீரர்கள்?
- முஹம்மது குதிரைப்படை என்றுச் சொன்னது எத்தனை வீரர்கள் கொண்ட படையாக இருக்கும்? ஒரு பட்டணத்தை பிடிக்க ஒரு படையை அனுப்பவேண்டுமென்றால், எவ்வளவு பெரிய படையை அனுப்பவேண்டும்?
- உதாரணத்திற்கு பத்ரு போரை எடுத்துக் கொள்வோம். வியாபாரிகளை தாக்கி பொருட்களை அபகரிக்க, முஹம்மது 313 பேர் கொண்ட படையை அழைத்துக் கொண்டுச் சென்றார் (2 குதிரைகள், 70 ஒட்டகங்கள்). இவர்களிடமிருந்து வியாபாரிகளை காப்பாற்ற மக்காவினர், கிட்டத்தட்ட 1000 பேர் கொண்ட படையுடன் புறப்பட்டனர்[2]. அப்படியானால், ஒரு பட்டணத்தை பிடிக்க எவ்வளவு பெரிய படை தேவைப்படும்?
- நம் கருப்பொருளுக்கு வருவோம், மக்காவின் ஸஃபாவிற்கு பின்பு குறைந்த பட்சம் 300 பேர் கொண்ட குதிரைப்படை மறையமுடியுமா? இன்று காபாவின் வெளிப்புற கட்டிடத்திற்குள் அடங்கிவிட்ட ஸஃபா மலைக்கு பின்பு, 300 குதிரைப்படை வீரர்கள் மறைந்திருப்பதாக சிந்தித்துப் பாருங்கள். இன்று நாம் காணும் ஸஃபாவிற்கு இது நடைமுறை சாத்தியமா?
- முஹம்மது இப்படி மக்காவினரிடம் பேசும்போது அது நடைமுறைக்கு ஏற்றதாக இருந்திருக்கவேண்டும் அப்போது தான் அவர்கள் இவருக்கு பதில் சொல்லமுடியும்.
- நடைமுறைக்கு ஏற்காத வகையில் "ஒரு சிறிய குன்றின் (இன்றுள்ள ஸஃபாவின்) மீது ஏறிக்கொண்டு, ஒரு குதிரைப்படை வருகிறது, இதனை நம்புவீர்களா?" என்று முஹம்மது கேட்டு இருந்திருந்தால், உடனே மக்காவினர், அந்த படையை நாங்களே பார்த்துக் கொள்ளமுடியும், எங்களுக்கு கண் தெரிகிறது, அதற்காக இந்த சின்ன குன்றில் ஏறவேண்டிய அவசியமில்லை என்று சொல்லியிருப்பார்கள்.
- மலை மிகவும் பெரியதாக இருந்தபடியினால், மக்கள் அவரிடம் "உம்மை நாங்கள் நம்புவோம்" என்றுச் சொன்னார்கள்.
இதுவரை கண்ட விவரங்களிலிருந்து அறிவது என்னவென்றால், முஹம்மது பற்றிய மேற்கண்ட ஹதீஸ் சொல்லும் ஸஃபா மலை தற்போது மக்காவில் நாம் காணும் ஸஃபாவாக இருக்க சாத்தியமில்லை என்பது தெளிவாக தெரிகிறது.
முடிவுரை:
மக்காவில் முஸ்லிம்கள் ஸஃபா மர்வா மலைகளுக்கு இடையே ஒவ்வொரு ஆண்டும் ஸயீ செய்கிறார்கள். ஆனால், உண்மையாகவே முஹம்மது ஸயீ செய்த அதே ஸஃபா மர்வா மலைகளுக்கு இடையே இன்று முஸ்லிம்கள் ஸயீ செய்கிறார்களா? புகாரி ஹதீஸ் கொடுக்கும் வர்ணனை இன்று மக்காவில் காணும் ஸஃபா மர்வாவிற்கு பொருந்தவில்லை.
இதற்கு இரண்டு உதாரணங்களைக் கண்டோம்:
- ஸஃபா மர்வா மலைகளுக்கு இடையே சிரமப்பட்ட ஆகார் (புகாரி எண்கள்: 3364 & 3365).
- ஸஃபா மலையில் ஏறி மக்களுக்கு இஸ்லாமை போதிக்க, குதிரைப்படை பற்றிய ஒரு எடுத்துக்காட்டைச் சொன்ன முஹம்மது (புகாரி எண்: 4971)
முஸ்லிம்கள் இந்த ஹதீஸ்களை ஆய்வு செய்து, தங்கள் ஆய்வின் முடிவை உலகிற்கு சொல்வார்கள் என்று நம்புகிறேன், முக்கியமான எனக்கு தெரிவிப்பார்கள் என்று நம்புகிறேன்.
மக்காவின் அடுத்த பிரச்சனையில் சந்திப்போம்.
இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல - தொடர் கட்டுரைகள்:
- மக்காவின் பிரச்சனைகள்: அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல!
- மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்?
- மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா?
- மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் "மக்காவின்" பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை?
- மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை
அடிக்குறிப்புகள்
[1] Al-Safa and Al-Marwah - https://en.wikipedia.org/wiki/Al-Safa_and_Al-Marwah
[2] பதுருப் போர் விக்கிபீடியா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக