நேரத்திற்குள்ளும் இடத்திற்குள்ளும் கட்டுப்பட்டுள்ள மனிதனால், நேரத்திற்கும் இடத்திற்கும் அப்பாற்பட்ட எல்லையில்லாதவராகிய இறைவனிடம் எவ்வாறு தொடர்பு கொள்ள முடியும்?
உங்களுடன் பேசவேண்டும் என்று ஒரு எறும்பு விரும்புகிறது என்றுச் சொன்னால், நீங்கள் நம்புவீர்களா? படைத்தவருக்கும் (இறைவன்) படைக்கப்பட்டவைகளுக்கும் (மனிதன்) இடையே உரையாடல் நடக்கும் என்றுச் சொல்வது இதை விட பெரிய ஆச்சரியமானதாகும்.
"மனிதன் இறைவனுடன் தொடர்பு கொள்ள முடியும்" என்று நீங்கள் நம்பினால், கீழ்கண்ட இரண்டு தெரிவுகளில் ஏதாவது ஒன்றை தெரிவு செய்யவேண்டி வரும்:
1. நீங்கள் அவருடைய நிலைக்கு உங்களை உயர்த்திக்கொள்ள வேண்டும்
அல்லது
2. நீங்கள் இறைவனை உங்கள் நிலைக்கு இழுத்துக்கொண்டு, அவர் தன்னை தாழ்த்தும் படி செய்யவேண்டும்
இந்த இரண்டு காரியங்களுக்கும் இஸ்லாமில் ஒரு சொல் உண்டு, அது தான் ஷிர்க். உங்களை இறைவனுக்கு சமமாக நீங்கள் மாற்ற விரும்புகிறீர்கள் என்று இதன் பொருள். இஸ்லாமில் இது மிகப்பெரிய பாவம் (ஷிர்க்) ஆகும்.
இறைவன் மனிதனாக தன்னை தாழ்த்திக்கொண்டு, நம் நிலைக்கு இறங்கி வருவதை கிறிஸ்தவம் "மனித அவதாரம்" என்றுச் சொல்கிறது.
கண்ணுக்குத் தெரியாத இறைவன் மனிதனாக வருவதினால் அவரை பார்க்கமுடிகின்றது, நாம் அவரை அறிந்து கொள்ளமுடிகின்றது. இஸ்லாமிய தெய்வம் அறியப்படாதவராக இருப்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லையே!
நாம் புரிந்துக்கொள்ளக் கூடிய வகையில் நம்முடைய இறைவன் தம்மை வெளிப்படுத்துகின்றார். அதனால் தான் அவருக்கு இம்மானுவேல் என்று பெயர். இம்மானுவேல் என்றால் "தேவன் நம்மோடு இருக்கிறார்" என்று அர்த்தம். அவர் தான் இயேசு.
மோசேவுடன் தேவன் எப்படி பேசினார், மோசே தேவனுடன் எப்படி பேசினார் என்பதை சிறிது சிந்தித்தால், இங்கு சொல்லப்படும் விவரம் இன்னும் தெளிவாக புரியும். தேவனுடன் பேசுவதற்காக மோசே தன்னை அவருக்கு சமமாக உயர்த்திக்கொண்டாரா? இல்லை. அதற்கு பதிலாக தேவன் தான் தன்னை மோசேக்கு வெளிப்படுத்துவதற்காக எரியும் புதரிலிருந்து பேசினார். இப்படி செய்தால் தான் தேவனின் வார்த்தைகளை மோசே கேட்கமுடியும்.
இப்படி சொல்வதினால், நெருப்பு தான் தேவன் என்றோ, எரியும் புதர் தான் தேவன் என்றோ நான் சொல்லவில்லை. எந்த வகையில் பேசினால் மனிதனாகிய மோசே தன்னுடைய புலன்களால் அதாவது கண்களால் கண்டு, காதுகளால் தேவன் பேசுவதை கேட்டு புரிந்துக்கொள்ள முடியுமோ, அப்படி தம்மை தேவன் வெளிப்படுத்தினார்.
சுருக்கமாகச் சொல்லவேண்டுமென்றால், எல்லையில்லாதவரும் கண்ணுக்குத் தெரியாதவருமாகிய தேவன், தன்னை ஒரு எல்லைக்குட்படுத்திக் கொண்டு (புதரிலிருந்து பேசியதால்), தன் நிலையிலிருந்து கீழே இறங்கி வந்தார்.
மனிதனின் அறிவுக்கும் அனுபவங்களுக்கும் அப்பாற்பட்டவராக தேவன் இருந்தாலும், மனிதன் தன்னை அறியவேண்டும் என்பதற்காக அவர் தன்னை தாழ்ந்தி வந்தார். இப்படி செய்ததால் தான் மனிதன் தேவனோடு உறவாடவும் அறியவும் முடிந்தது.
இதனை புதிய ஏற்பாடு கீழ்கண்டவாறு கூறுகின்றது:
5. கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையே உங்களிலும் இருக்கக்கடவது; 6. அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல், 7. தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார். 8. அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார். (பிலிப்பியர் 2: 5-8)
இஸ்லாமிய இறைவன் தன்னை மனிதன் அறியவேண்டுமென்று விரும்புவதில்லை, அதனால் தான் அவன் ஏழு வானங்களுக்கு மேலே இருக்கிறான், பூமியில் இறங்கி வருவதில்லை. ஆனால் பைபிளில் தேவன் மனிதன் தன்னை அறிந்துக்கொள்ளவேண்டும் என்று விரும்பி பரலோகத்திலிருந்து இறங்கி வந்தார். பழைய ஏற்பாட்டில் மோசேவுடனும், இதர தீர்க்கதரிசிகளுடனும் பூமியில் வந்து உரையாடினார். மனிதனுக்காக அவர் தன்னை தாழ்த்தினார்.
மனிதன் தன்னை தேவனுக்கு சமமாக உயர்த்திக்கொள்வது ஷிர்க் என்று அழைப்பது சரியே, அதே போல, தேவன் தன்னை தாழ்த்தி மனிதனுக்காக இறங்கி வருவதை அன்பு என்று அழைப்பதும் சரி தானே.
ஆங்கில மூலம்: www.faithbrowser.com/how-can-you-communicate-with-god/
தேதி: 27th Feb 2020