[அன்புள்ள தம்பிக்கு உமர் எழுதும் கடிதங்கள்: கடிதம் 1, கடிதம் 2, கடிதம் 3, கடிதம் 4, கடிதம் 5, கடிதம் 6, கடிதம் 7, கடிதம் 8 , கடிதம் 9, கடிதம் 10, கடிதம் 11, கடிதம் 12, கடிதம் 13, கடிதம் 14, கடிதம் 15, கடிதம் 16, கடிதம் 17, கடிதம் 18, கடிதம் 19 ]
அன்புள்ள தம்பிக்கு,
உனக்கு சமாதானம் உண்டாவதாக.
உன்னுடைய முந்தைய கடிதத்தில் இயேசுவின் தெய்வீகத்தன்மையைக் குறித்து நீ எழுப்பிய கேள்விக்கு நான் சில விவரங்களை பதிலாக எழுதியிருந்தேன். அதாவது சுவிசேஷங்களில் இயேசு தம்முடைய தெய்வீகத்தன்மையை மறுக்கிறார் என்று இஸ்லாமியர்கள் கேள்வி எழுப்புகிறார்கள். இது தவறு என்று நான் விளக்கியிருந்தேன்.
1) இயேசு தேவாலயத்தைவிட பெரியவர், 2) யோனாவை விட பெரியவர், 3) சாலொமோனை விட பெரியவர் மேலும் 4) தாம் ஓய்வு நாளுக்கும் ஆண்டவராக இருக்கிறார் என்று இயேசு கூறிய வசனங்களை மேற்கோள் காட்டினேன். நீண்ட கடிதத்தை நீ படித்தால், உனக்கு சோர்வு உண்டாகும் என்பதால் இயேசுவின் நான்கு உரிமை பாராட்டல்களை விளக்கி முடித்தேன்.
அதன் தொடர்ச்சியாக, இந்த கடிதத்தில், அதே சுவிசேஷங்களில் இன்னும் எந்தெந்த வகையில் இயேசு தம்முடைய தெய்வீகத்தன்மையை வெளிப்படுத்தியுள்ளார் என்பதை காண்போம்.
5) யோவான் ஸ்நானகனுக்கு முன்பு இருந்தவர் இயேசு:
தம்பி, இயேசு எல்லாரையும் விட பெரியவர் மட்டுமல்ல, அவர் எல்லாருக்கும் முன்பு இருக்கிறார் என்பதை நற்செய்தி நூல்கள் தெளிவாக சொல்கின்றன. உதாரணத்திற்கு, இயேசுவைப் பற்றி யோவான் ஸ்நானகன் என்ன சொல்கிறார் என்று கவனி:
யோவான் 1:29 மறுநாளிலே யோவான் இயேசுவைத் தன்னிடத்தில் வரக்கண்டு: இதோ, உலகத்தின் பாவத்தைச் சுமந்துதீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி.
யோவான் 1:30 எனக்குப்பின் ஒருவர் வருகிறார், அவர் எனக்கு முன்னிருந்தபடியால் என்னிலும் மேன்மையுள்ளவரென்று நான் சொன்னேனே, அவர் இவர்தான்.
யோவான் ஸ்நானகனுக்கு மூன்று மாதங்களுக்கு பிறகு இயேசு பிறந்தார், அப்படி இருக்கும் போது, யோவான் எப்படி "இவர் எனக்கு முன்னிருந்தவர் என்றுச் சொல்கிறார்?".
மேலும் "உலகத்தின் பாவத்தைச் சுமந்துதீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி" என்று இயேசுவைப் பற்றி யோவான் சாட்சி கொடுக்கிறார். இன்னொரு வசனத்தில் "இயேசுவின் காலணிகளின் வாரை அவிழ்க்கிறதற்கு தனக்கு தகுதியில்லை என்று" யோவான் கூறுகிறார்.
ஒரு தீர்க்கதரிசி இன்னொரு தீர்க்கதரிசியைப் பற்றி இப்படி சொல்லவேண்டிய அவசியமில்லை. மேலும் யோவானுக்கு முன்பாக இயேசு இருக்கிறார் என்று சொல்வதிலிருந்து, இயேசு தேவன் என்பதை யோவான் அங்கீகரிக்கிறார் என்று அர்த்தமாகிறது. இவ்விதமான வசனங்கள் இஸ்லாமியர்களின் கண்களைவிட்டு ஏன் மறைந்துவிடுகின்றன? நற்செய்தி நூல்களின் இப்படிப்பட்ட வசனங்கள் எல்லாம், வெளிப்படையாக புரியக்கூடியது. ஏனோ சிலருக்கு புரியவில்லை? தம்பி உனக்கு புரிகிறதா? ஒருவேளை யோவான் "எனக்கு முன்னிருந்தவர்" என்று சொன்ன வசனத்திற்கு வேறு வகையான அர்த்தம் இருக்கிறது என்றுச் சொல்லுகிற இஸ்லாமிய அறிஞர்கள் யாராவது இருந்தால், அதற்கான விளக்கத்தை தரட்டும், நான் அவர்களுக்கு மறுப்பு எழுத தயாராக இருக்கிறேன்.
6) ஆபிரகாமுக்கு முன்பே இருந்தவர்:
முஸ்லிம்கள் சுவிசேஷ நூல்களை நன்றாக படித்து கரைத்து குடித்துவிட்டது போல பேசுகிறார்கள், நற்செய்தி நூல்களில் இயேசு தன்னை மனிதன் என்றே கூறினார் என்று அடித்துச் சொல்வார்கள். ஆனால், மேலோட்டமாக நற்செய்தியை படித்தாலும், இஸ்லாமியர்கள் கூறுவது பொய் என்பதை அறிந்துக்கொள்ளலாம். உதாரணத்திற்கு, இயேசு தம்மைப் பற்றி கூறும் போது, "ஆபிரகாம் உண்டாவதற்கு முன்பே நான் இருக்கிறேன்" என்று யூத தலைவர்களிடம் கூறுகிறார்.
யோவான் 8: 58 அதற்கு இயேசு: ஆபிரகாம் உண்டாகிறதற்கு முன்னமே நான் இருக்கிறேன் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
ஒரு மனிதனின் வாயிலிருந்தும், ஒரு தீர்க்கதரிசியின் வாயிலிருந்தும் இப்படிப்பட்ட வார்த்தைகளை யூதர்கள் எதிர்ப்பார்க்கவில்லை, தம்மை தேவனுக்கு சமமாக இயேசு பேசினார் என்பதால் யூதர்கள் கற்கலை எடுத்துக் கொண்டு அவர் மீது கல்லெறிய வேண்டும் என்று முயன்றார்கள்.
ஆபிரகாம் வாழ்ந்த காலம் தோராயமாக கி.மு. 2000 ஆகும், ஆனால், இயேசு இந்த வார்த்தைகளை பேசியது முதல் நூற்றாண்டிலாகும் (கி.பி. 30 – 33 காலக்கட்டமாகும்)
யூதர்களின் ஆரம்பம், அஸ்திபாரம், ஆணிவேர் எல்லாம் ஆபிரகாம் ஆவார், ஆனால், இயேசு அந்த ஆபிரகாமுக்கு முன்பாகவே நான் இருக்கிறேன் என்றுச் சொல்கிறார், இந்த வார்த்தைகள் எதைக் காட்டுகிறது? இயேசு ஒரு மனிதன் என்றொ, தீர்க்கதரிசி என்றோ காட்டுகின்றதா? நிச்சயமாக இல்லை. இறைவன் மட்டுமே இப்படி சொல்லமுடியும், அதாவது நான் பல ஆயிரம் ஆண்டுகளாக இருக்கிறேன் என்றுச் சொல்வது இறைவனுக்கு மட்டுமே தகும். இதனை புரிந்துக்கொண்டு தான் யூதர்கள் இயேசுவை கல்லெறிந்து கொல்லவேண்டும் என்று கற்களை எடுத்துக்கொண்டார்கள்.
தம்பி, இயேசு சுவிசேஷங்களில் தன்னுடைய தெய்வீகத்தன்மையை பல வகைகளில் வெளிப்படுத்தியுள்ளார், ஆனால், இவைகள் இஸ்லாமியர்களின் கண்களுக்கு ஏனோ தெரியவில்லை?
7) உலகம் உண்டாவதற்கு முன்பே மகிமைப்படுத்தப்பட்டு இருந்தவர்:
நற்செய்தி நூல்களில் இயேசுவின் தெய்வீகத்தன்மை மறுக்கப்படுகிறது என்று சொல்கிறவர்கள், முதலாவது கீழ்கண்ட இரண்டு வசனங்களை படித்து அவைகளின் அர்த்தம் என்னவென்று விளக்கவேண்டும்.
இந்த வார்த்தைகள் சொல்ல்லும் நபரை நாம் 'மனிதன்' என அழைக்கமுடியுமா? 'தீர்க்கதரிசி' என்று அழைக்கமுடியுமா?
யோவான் 17:5 பிதாவே, உலகம் உண்டாகிறதற்கு முன்னே உம்மிடத்தில் எனக்கு உண்டாயிருந்த மகிமையினாலே இப்பொழுது நீர் என்னை உம்மிடத்திலே மகிமைப்படுத்தும்.
யோவான் 17:24 பிதாவே, உலகத்தோற்றத்துக்கு முன் நீர் என்னில் அன்பாயிருந்தபடியினால், நீர் எனக்குத் தந்த என்னுடைய மகிமையை நீர் எனக்குத் தந்தவர்கள் காணும்படியாக, நான் எங்கே இருக்கிறேனோ அங்கே அவர்களும் என்னுடனேகூட இருக்க விரும்புகிறேன்.
தேவன் தன்னை மகிமைப்படுத்தவேண்டும் என்று எதிர்ப்பார்க்கும் இந்த நபர் யார்? உலக தோற்றத்திற்கு முன்பே தாம் தேவனோடு இருந்தவராக தம்மை காட்டிக்கொள்ளும் இவர் யார்?
"ஓ அல்லாஹ், உலகம் உண்டாகிறதற்கு முன்னே உம்மிடத்தில் எனக்கு உண்டாயிருந்த மகிமையினாலே இப்பொழுது நீர் என்னை உம்மிடத்திலே மகிமைப்படுத்தும்" என்று ஒருவர் உரிமையோடு அல்லாஹ்விடம் கேட்டால், அந்த நபரை இஸ்லாமியர்கள் எந்த அளவு கோலில் அளப்பார்கள்? இப்படி கேட்பவரை மனிதன் என்பார்களா? அல்லது தீர்க்கதரிசி என்பார்களா? அல்லது இந்த இரண்டும் இல்லாத இன்னொருவர் என்பார்களா? காதுள்ளவன் கேட்கக்கடவன்.
இயேசுவின் தெய்வீகத்தன்மையை மறுக்கவேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக முஸ்லிம்கள் சொல்லும் பொய்யானது, சூரியனைக் கண்ட பனிபோல சிறிது சிறிதாக மறைவதை தம்பி நீ காணமுடியும்.
8. தன் உயிரை கொடுக்கவும், மறுபடியும் எடுத்துக்கொள்ளவும் அதிகாரம் படைத்தவர்:
சில தீர்க்கதரிசிகள் மரித்தவர்களை உயிரோடு எழுப்பியுள்ளார்கள், ஆனால், தங்களை தாங்களே மரித்தோரிலிருந்து எழுப்பிக்கொள்ள அவர்களால் முடியுமா? ஆனால், இவரால் முடியும், தம்மை தாமே மரித்தோரிலிருந்து எழுப்பிக்கொள்ள இவரால் முடியும்.
யோவான் 2:19 இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: இந்த ஆலயத்தை இடித்துப்போடுங்கள், மூன்று நாளைக்குள்ளே இதை எழுப்புவேன் என்றார்.
யோவான் 2:20 அப்பொழுது யூதர்கள்: இந்த ஆலயத்தைக் கட்ட நாற்பத்தாறு வருஷம்சென்றதே, நீர் இதை மூன்று நாளைக்குள்ளே எழுப்புவீரோ என்றார்கள்.
யோவான் 2:21 அவரோ தம்முடைய சரீரமாகிய ஆலயத்தைக்குறித்துப் பேசினார்.
யோவான் 10:17 நான் என் ஜீவனை மறுபடியும் அடைந்துகொள்ளும்படிக்கு அதைக் கொடுக்கிறபடியினால் பிதா என்னில் அன்பாயிருக்கிறார்.
யோவான் 10:18 ஒருவனும் அதை என்னிடத்திலிருந்து எடுத்துக்கொள்ளமாட்டான்; நானே அதைக் கொடுக்கிறேன், அதைக் கொடுக்கவும் எனக்கு அதிகாரம் உண்டு, அதை மறுபடியும் எடுத்துக்கொள்ளவும் எனக்கு அதிகாரமுண்டு. இந்தக் கட்டளையை என் பிதாவினிடத்தில் பெற்றுக்கொண்டேன் என்றார்.
மேற்கண்ட 18ம் வசனத்தைப் பாருங்கள், தன் உயிரை தானே எப்படி மறுபடியும் எடுத்துக்கொள்ளமுடியும்? அதாவது மரித்த நிலையிலிருந்து தம்மைத் தாமே உயிர்ப்பித்துக்கொள்ளமுடியும்? மனிதனால் முடியாதது தான். ஆனால், இயேசுவால் முடியும். தம்பி சிந்தித்துப் பார். நீண்ட விளக்கங்கள் நமக்கு தேவையில்லை, ஏனென்றால், நாம் வசனங்களை நமக்கு புரியும் மொழியில் தான் படிக்கிறோம்.
9) பாவங்களை மன்னிக்க அதிகாரம் உள்ளவர்:
தம்பி, நற்செய்தி நூல்களை படித்துவிட்டு, அதில் இயேசு தம்முடைய தெய்வீகத்தன்மையை உரிமை பாராட்டவில்லை என்று எந்த மனுஷனாவது சொன்னால், அவனுக்கு படிக்கத்தெரியவில்லை என்று பொருள். இதோ இங்கு இன்னொரு உதாரணத்தை உனக்கு காட்ட விரும்புகிறேன், இதுவே இந்த கடிதத்திற்கு கடைசி உதாரணமும் கூட.
லூக்கா 5:20 அவர்களுடைய விசுவாசத்தை அவர் கண்டு, திமிர்வாதக்காரனை நோக்கி: மனுஷனே, உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது என்றார்.
லூக்கா 7:48 அவளை நோக்கி: உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டது என்றார்.
யாருடைய பாவங்களை யார் மன்னிப்பது? ஒருவனுக்கு விரோதமாக இன்னொருவன் பாவம் செய்தால், அல்லது குற்றம் புரிந்தால், அந்த குற்றத்தை மன்னிக்கும் உரிமை யாருக்கு இருக்கிறது? தம்பி, உனக்கு விரோதமாக நான் குற்றம் செய்தால், நான் செய்த குற்றத்தை இரண்டு பேர் மன்னித்துவிடலாம்.
• முதலாவது என்னை மன்னிக்க உனக்கு உரிமை,
• இரண்டாவது உன்னையும், என்னையும் படைத்த தேவனுக்கு உரிமை உண்டு.
மேற்கண்ட வசனங்களில் இயேசு மக்களின் பாவங்களை மன்னிக்கிறார், இப்படி செய்து தம்முடைய தெய்வீகத்தன்மையை உரிமைபாராட்டிக் கொள்கிறார். இதனை கண்ட யூதர்கள் மூர்க்கம் கொண்டார்கள், தேவன் மட்டுமே செய்யவேண்டிய காரியத்தை இயேசு எப்படி உரிமை பாராட்டலாம் என்று யூதர்கள் கோபம் கொண்டனர்.
மாற்கு 2:5 இயேசு அவர்கள் விசுவாசத்தைக் கண்டு, திமிர்வாதக்காரனை நோக்கி: மகனே, உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது என்றார்.
2:6 அங்கே உட்கார்ந்திருந்த வேதபாரகரில் சிலர்:
2:7 இவன் இப்படித் தேவதூஷணம் சொல்லுகிறதென்ன? தேவன் ஒருவரேயன்றிப் பாவங்களை மன்னிக்கத்தக்கவர் யார் என்று தங்கள் இருதயங்களில் சிந்தித்துக்கொண்டிருந்தார்கள்.
2:8 அவர்கள் தங்களுக்குள்ளே இப்படிச் சிந்திக்கிறார்களென்று இயேசு உடனே தம்முடைய ஆவியில் அறிந்து, அவர்களை நோக்கி: நீங்கள் உங்கள் இருதயங்களில் இப்படிச் சிந்திக்கிறதென்ன?
2:9 உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டதென்று சொல்வதோ, எழுந்து உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நடவென்று சொல்வதோ, எது எளிது?
2:10 பூமியிலே பாவங்களை மன்னிக்க மனுஷகுமாரனுக்கு அதிகாரம் உண்டென்பதை நீங்கள் அறியவேண்டும் என்று சொல்லி, திமிர்வாதக்காரனை நோக்கி:
2:11 நீ எழுந்து, உன் படுக்கையை எடுத்துக்கொண்டு, உன் வீட்டுக்குப் போ என்று உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.
எனவே, பூமியில் பாவங்களை மன்னிக்கின்ற அதிகாரம் ஒரு தீர்க்கதரிசிக்கு உண்டா? நிச்சயமாக இல்லை, இறைவனுக்கு மட்டுமே உண்டு. இதனையே இயேசு உரிமைபாராட்டினார்.
தம்பி, இதுவரை கடந்த இரண்டு கடிதங்களில் வெறும் 9 காரியங்களை மட்டும் உன்னோடு பகிர்ந்துக்கொண்டேன். நற்செய்தி நூல்களில் இயேசு தம்முடைய தெய்வீகத்தை ஆணித்தரமாக நிலைநாட்டியுள்ளார். இன்னும் அனேக காரியங்களை நான் பகிர்ந்துக் கொள்ளமுடியும், ஆனால் தேவையில்லை, ஏனென்றால், தூங்குவது போல நடிப்பவர்களை எழுப்பமுடியாது.
கடந்த இரண்டு கடிதங்களில் நான் முன்வைத்த விவரங்கள் குறித்து ஒரு சிறிய முடிவுரையை அடுத்த கடிதத்தில் உனக்கு எழுத விரும்புகிறேன்.
நற்செய்தி நூல்களில் இயேசு தம்முடைய தெய்வீகத்தன்மையை மறுக்கிறார் என்றுச் சொல்கிறவர்கள் மிகப்பெரிய பொய்யினை சொல்கிறார்கள் என்று பொருள். இல்லை என்றுச் சொல்பவர்களுக்கு நான் சவால் விடுகிறேன், அவர்கள் இதனை நற்செய்தி நூல்களிலிருந்து நிருபிக்கட்டும்.
அடுத்த கடிதத்தில் உன்னை சந்திக்கிறேன்.
இப்படிக்கு உன் சகோதரன்
தமிழ் கிறிஸ்தவன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக