சின்னஞ்சிறு "இஸ்லாம் கிறிஸ்தவம்" தலைப்பின் முந்தைய 520 கேள்வி பதில்களை படிக்க இங்கு சொடுக்கவும். முந்தைய கட்டுரையில் "எருசலேம்" சம்மந்தப்பட்ட 10 கேள்வி பதில்களைக் கண்டோம், இந்த கட்டுரையில் அதே தலைப்பில் மேலும் 10 கேள்வி பதில்களைக் காண்போம்.
கேள்வி 521: கி.பி. 638ல் எருசலேம் தலைவர்கள், "தங்களை ஆளும்படி கலிஃபா உமர் அவர்களிடம் வலியச்சென்று கேட்டுக்கொண்டார்கள்" என்கிறார்களே, இது உண்மையா?
பதில் 521: சினிமாவில் தான் இது சாத்தியம், நிஜத்தில் யாரை நாம் ஹீரோ என்று நினைத்து பேசிக்கொண்டு இருப்போமோ, அவரே வில்லனாக இருப்பார், புரியவில்லையா? இஸ்லாமிய இரண்டாம் கலிஃபா உமர் அவர்கள் தான் போர் புரிந்து மக்களை தும்சம் செய்து, இரத்தவெள்ளம் ஓடச் செய்து எருசலேமையும் இதர நாடுகளையும் பிடித்தார்.
சிறு பிள்ளைகளிடம் சென்று, "நிலாவில் வடைசுடும் ஆயா பற்றி உனக்குத் தெரியுமா?" என்று கேட்டால் "தெரியாதே, நீங்களே சொல்லுங்களேன்" என்று கேட்பார்கள். இதே போன்று தான் சரித்திரமும், இஸ்லாமிய வரலாறுகளும் தெரியாவர்களிடம் சென்று பொய்களை அழகாகச் சொல்லி அவர்களை நம்பவைத்துவிடலாம். ஆனால், நீல் ஆம்ஸ்ட்ராங்கிடம் சென்று, நிலாவில் வடைசுடும் ஆயா பற்றி பேசினால், அவர் நம்மைப் பார்த்து ஏளனமாக சிரிப்பார்.
எப்படி எருசலேம் உமரிடம் சரணடைந்தது என்பதை சுருக்கமாக இங்கு தருகிறேன்: எழுத்தாளர் பா. ராகவன் அவர்களுக்கு கொடுத்த ஒரு மறுப்பு கட்டுரையிலிருந்து ஒரு பகுதி இங்கு, முழு கட்டுரையை படிக்க இங்கு சொடுக்கவும்.
ஜெருசலேம் முற்றுகை (637)
பைசாந்தியப் பேரரசிற்கும் ராசிதீன் கலீபாக்களுக்கும் இடையில் இடம் பெற்ற படை முரண்பாட்டின் ஒரு பகுதியாக 637 இல் இடம்பெற்றது. இது ராசிதீன் படை 636 நவம்பரில் எருசலேமை சூழ்ந்து கொண்டதுடன் ஆரம்பமாகியது. ஆறு மாதங்களுக்குப் பின், நகரத் தலைவர் சரணடைய உடன்பட்டார். 637 ஏப்ரல், கலிப்பா உமர் எருசலேமிற்கு பயணம் சென்று, நகரின் சரணடைவை ஏற்றுக் கொண்டார். நகரத் தலைவர் உமரிடம் சரணடைந்தார். மூலம்
உண்மையில் என்ன நடந்தது என்பதை சுருக்கமாக பார்ப்போம்.
1) முஹம்மது மரித்த பிறகு (632), அபூ பக்கர் அவரது ஸ்தானத்தில் முதல் கலிஃபாவாக மதினாவில் பதவியில் உட்காருகிறார்.
2) அபூ பக்கர் இரண்டாண்டுகள் ரித்த போர்கள் புரிந்து, அதன் பிறகு மரித்துவிடுகிறார்.
3) இரண்டாம் கலிஃபாவாக, பதவியில் அமருகிறார் உமர். இவரும் இஸ்லாமிய பாணியில் அரேபியாவிற்கு சுற்றியுள்ள நாடுகளை தாக்கி அவைகளை பிடிக்கிறார். இதனை பாரா அவர்கள் அழகாக, "உமரின் காலத்தில் இஸ்லாம் அரேபியாவிற்கு வெளியே வெகு வேகமாக பரவியது" என்று எழுதி இருக்கிறார். இதைப் பற்றி என் முந்தைய கட்டுரையில் எழுதினேன்.
4) ஏற்கனவே முஸ்லிம்களிடம் இழந்த தன் இராஜ்ஜியங்களை திரும்ப பிடிக்க, பைசாந்திய அரசர் ஹெரகுலிஸ் யர்முக் என்ற இடத்தில் முஸ்லிம்களின் இராணுவத்தை சந்திக்கிறார், ஆனால் படுதோல்வி அடைகிறார். இது நடந்தது ஆகஸ்ட் 636ம் ஆண்டு.
5) இந்த யர்முக் போரில் இஸ்லாமிய இராணுவத்துக்கு தளபதியாக இருந்த அபூ உபைதா, அக்டோபரில் இனி எந்த பட்டணத்தை பிடிக்கலாம் என்று ஆலோசிக்கிறார். செசரியா பட்டணமா? ஜெருசலேம் பட்டணமா? என்ற முடிவை எடுக்கமுடியாமல், மதினாவில் இருந்த இஸ்லாமிய இரண்டாம் கலிஃபா உமருக்கு கடிதம் எழுதி கேட்கும் போது, முதலாவது ஜெருசலேம் என்று உமர் பதில் தருகிறார்.
6) இஸ்லாமிய இராணுவம், தளபதி அபூ உபைதாவின் தலைமையில் ஜெருசலேம் நகரை நவம்பர் 636ல் முற்றுகையிட்டது. ஜெருசலேம் மக்கள் நகரைவிட்டு வெளியே வராமல் திகைத்தார்கள். இதற்கு முன்பாகவே, பெர்சியாவிடமிருந்து ஜெருசலேமை கைப்பற்றியிருந்த ஹெரகுலிஸ் நகரைச் சுற்றி பலத்த சுவரைக் கட்டி அதிகமாக பாதுகாத்து வைத்திருந்தார்.
7) ஜெருசலேமுக்குள் இருக்கும் மக்களின் உணவுப்பண்டங்கள் குறையத்தொடங்கின. இது ஒரு போர் யுக்தியாகும். ஒரு நகரைச் சுற்றி முற்றுகையிட்டால், பல நாட்கள் அந்நகர மக்கள் உணவு பற்றாக்குறையில் வாடி, கடைசியாக சரணடைந்துவிடுவார்கள். நகருக்குள் வெளியேயிருந்து உணவுப் பண்டங்கள் இதர பொருட்கள் செல்லாமல் தடுத்துவிடுவது, ஒரு போர் யுக்தி.
8) முஸ்லிம்களின் இந்த முற்றுகை ஆறு மாதங்கள் தொடர்ந்தது. யாராவது இறங்கிவந்தால் தவிர, இப்படிப்பட்ட முற்றுகை ஒரு முடிவுக்கு வராது.
9) கடைசியாக, ஜெருசலேமில் இருந்த ஆர்ச் பிஷப், அதாவது நகரத்தின் தலைவர், சரணடைவது என்று முடிவுக்கு வந்தார். இவர் இப்படிப்பட்ட முடிவு எடுக்கவில்லையென்றால், நகர மக்கள் பசியாலேயே செத்து மடிந்து இருந்திருப்பார்கள்.
10) ஜெருசலேம் நகர தலைவர், இஸ்லாமிய இராணுவத்தோடு பேசினார். நாங்கள் சரணடைகிறோம், ஜிஸ்யா வரி கட்டுகிறோம் ஆனால், உங்கள் தலைவர் உமர் வரவேண்டும், அவர் எங்களோடு ஒரு ஒப்பந்தம் செய்யவேண்டும், அவரிடம் தான் நாங்கள் சரணடைவோம் என்று நிபந்தனை விதித்தார்.
11) உமர் மதினாவிலிருந்து வரவேண்டுமென்றால் நாட்கள் செல்லும், எனவே, கலித் இப்னு வலித் என்பவரை காட்டி, இவர் தான் 'உமர்' என்றுச் சொல்லுவோம் என்று இஸ்லாமிய இராணுவத்தில் ஆலோசனை கூறப்பட்டது. ஆனால், கலித் இப்னு வலித் என்பவர் சிரியாவில் ரொம்ப பிரபலமானவர், எனவே கிறிஸ்தவர்கள் அவரை அறிந்திருப்பார்கள் என்பதால், இந்த ஆலோசனை கைவிடப்பட்டது.
12) எனவே, தளபதி அபூ உபைதா, உமருக்கு கடிதம் எழுத, மதினாவிலிருந்து உமர் ஜெருசலேமுக்கு வர ஒப்புக்கொண்டார்.
13) ஜெருசலேம் முற்றுகையிட்டு ஆறுமாதம் கழித்து, ஏப்ரில் மாதம் 637ம் ஆண்டு, உமர் ஜெருசலேமுக்கு வந்தார். ஜெருசலேமின் ஆர்ச் பிஷப்பும் உமரும் உடன்படிக்கை செய்தார்கள், ஜெருசலேம் சரணடைகிறது என்று ஆர்ச் பிஷப் அறிவித்தார் (அவரால் வேறு என்ன முடியும், சரணடையத்தான் முடியும்). உமருக்கு ஊரெல்லாம் சுற்றிக்காண்பித்தார்.
14) ஒரு வேடிக்கையான நிகழ்வை இங்கு குறிப்பிடவேண்டும். ஊரை சுற்றிக்காண்பிக்கும் போது, ஆர்ச் பிஷம் உமரிடம் உங்களுடைய மதிய தொழுகையை இதோ இந்த புதுப்பித்துள்ள சர்சில் செய்யுங்கள் என்று அழைப்பு விடுத்தார். இதனை உமர் மறுத்தார். இதற்கு என்ன காரணம் என்று கேட்ட போது. இது கிறிஸ்தவர்களின் சர்ச், இங்கு நான் தொழுகை நடத்தினால், எங்கள் முஸ்லிம்கள் நான் போட்ட உடன்படிக்கையை தள்ளிவிட்டு, 'எங்கள் தலைவர் தொழுகை நடத்திய இடம், மசூதி ஆகும், சர்ச் அல்ல என்றுச் சொல்லி, சர்சை மசூதியாக மாற்றிவிடுவார்கள்'. எனவே, நான் இங்கு தொழுகை செய்யமாட்டேன் என்று மறுத்துவிட்டார். எப்படிப்பட்ட தலைவர், எப்படிப்பட்ட மார்க்கம் பாருங்கள். காலம் உருண்டோடிய போது அது தான் நடந்தது.
15) ஜெருசலேமில் 10 நாட்கள் இருந்து, உமர் மதினா சென்றார். இது தான் ஜெருசலேம் பிடிக்கப்பட்ட சரித்திரம். அதன் பிறகு செக்சரியா பட்டணம் பக்கம் இஸ்லாமிய இராணுவம் சென்றது. மூலம்
எருசலேமின் தலைவர்கள் உமரிடம் சரணடைந்தது உண்மை தான், அதனை ஏன் செய்தார்கள்? அவர்களுக்கு வந்த நிர்பந்தம் என்னவென்பதை கவனிக்கவேண்டும். இது எப்படி உள்ளதென்றால், ' பணம் படைத்த, அதிகாரம் படைத்த ஒரு கெட்டவன், ஒரு குடும்பத்தின் தலைவனை கொன்றுவிட்டு, அவன் மனைவியிடம் நீ என்னை திருமணம் செய்துக்கொள், இல்லையென்றால், உன் கணவனை கொன்றது போலவே உன் பிள்ளைகளையும் கொன்றுவிடுவேன்' என்று மிரட்டினால் எப்படி இருக்கும்?அந்தப் பெண் தன் பிள்ளைகளின் உயிரைக் காக்க அந்த கொலைக்காரனை திருமணம் செய்துக்கொள்கிறாள் என்று வைத்துக்கொள்வோம்.
இப்போது, அந்த தீயவனைப் பற்றியும், அந்த பெண்ணைப் பற்றியும் என்ன சொல்லுவோம்? "பார்த்தீர்களா, தன் கணவனை கொன்றவனையே அந்த பெண் திருமணம் செய்துக்கொண்டாள், இதனால் அந்த நபர் நல்லவன்' என்று சொல்லுவோமா? இல்லையல்லவா? இது போலத்தான், கலிஃபா உமர் அவர்களிடம் 'எருசலேம் தலைவர்கள்' நகரத்தை ஆளுங்கள் என்று கேட்டுக்கொண்டது உள்ளது.
கேள்வி 522: கிறிஸ்தவர்கள் எருசலேமுக்காக போர் செய்யவில்லை என்பது பொய் தானே! சிலுவைப்போர்கள் எருசலேமை முஸ்லிம்களிடமிருந்து கைப்பற்றத்தானே செய்யப்பட்டன?
பதில் 522: சிலுவைப் போர்கள் (குருசேட்ஸ்), கி.பி. 11வது நூற்றாண்டின் கடைசியிலிருந்து, 13வது நூற்றாண்டு வரை ஐரோப்பிய கிறிஸ்தவர்களால் நடத்தப்பட்ட போர்களாகும். புனித நகரமாக கருதப்பட்ட எருசலேம் நகரையும், இதர புனித இடங்களையும் முஸ்லிம் ஆட்சியாளர்களிடமிருந்து மீட்டுக்கொள்ளவும், முஸ்லிம் ஆக்கிரமிப்புக்களுக்கு தடை போடவும் இந்த போர்கள் நடத்தப்பட்டன.
சிலுவைப் போர்கள் ஏன் தொடங்கப்பட்டன?
சிலுவைப்போர்கள் என்றுச் சொன்னாலே, முஸ்லிம்கள் கோபம் கொள்வார்கள். கிறிஸ்தவர்கள் செய்தது தவறு என்பார்கள். முஹம்மது மரித்த பிறகு, முஸ்லிம்கள் உலகம் அனைத்திற்கும் சென்று அமைதியான முறையில் இஸ்லாமை பரப்பியது போல நினைத்து இன்றுள்ள முஸ்லிம்கள் பேசுகிறார்கள். ஆனால், உண்மையில் அவர்கள் புரிந்த போர்கள், செய்த கொலைகள், சிந்திய இரத்தம், அழித்த தேவாலயங்கள் போன்றவற்றிற்கு அளவே இல்லை.
கத்தோலிக்க போப் முதன் முதலாக சிலுவைப்போர் பற்றி அறிவிப்பு கொடுப்பதற்கு முன்பு என்ன நடந்தது? சிலுவைப்போர்களின் ஆணிவேர் எது? என்று சரித்திர ஏடுகளை படிக்கும் போது, முஸ்லிம்களின் மண்ணாசையும், பொருளாசையும் தான் காரணம் என்பதை அறிய முடியும்.
ஏன் சிலுவைப்போர்கள் தொடங்கப்பட்டன என்ற கேள்விக்கு பதில் எங்கு கிடைக்கும்? முஹம்மது மரித்த ஆண்டிலிருந்து முஸ்லிம்கள் கிறிஸ்தவர்கள் ஆட்சி புரிந்துக்கொண்டு இருந்த நாடுகளில் புரிந்த போர்களைப் ஆய்வு செய்தால் பதில் கிடைக்கும். ஒரு வரியில் பதில் சொல்வதானால், 400 ஆண்டுகளுக்கு மேலாக முஸ்லிம்களால் கைப்பற்றப்பட்டிருந்த கிறிஸ்தவ நாடுகள், மிகவும் காலதாமதமாக தொடுத்த எதிர் போர் தான் சிலுவைப்போர்கள்.
சிலுவைப்போர்கள் மனிதன் எடுத்த முடிவுகளாகும். பைபிளின் படி திருச்சபை ஒருபோதும் போர்களை துவக்கக்கூடாது. திருச்சபையும் அரசாங்கமும் வெற்வேறானவைகளாகும். இவ்விரண்டையும் ஒன்று படுத்தும் போது, சிலுவைப்போர்கள் போன்ற விளைவுகள் உண்டாகும்.
சிலுவைப்போர்கள் பற்றிய காரணங்களையும், இதர சரித்திர விவரங்களையும் அறிய கீழ்கண்ட தொடுப்பில் உள்ள ஆய்வுக் கட்டுரைகளை படிக்கவும்.
2019 கிறிஸ்துமஸ் தொடர் கட்டுரைகள்: ஜிஹாதின் அடிச்சுவடுகளில் சிலுவைப்போர் – ஓர் ஆய்வு
- ஜிஹாதின் அடிச்சுவடுகளில் சிலுவைப்போர் – ஓர் ஆய்வு
- சிலுவைப்போர் என்றால் என்ன? அவைகள் தொடங்கப்பட காரணங்கள் யாவை? - பாகம் 2
- முஹம்மது முதல் சிலுவைப்போர் வரை - வரைபடங்கள் மற்றும் விளக்கங்கள்: பாகம் 3
- முதல் சிலுவைப்போரை நிஜமாக்கியவர்கள் யார்? செல்ஜுக் துருக்கி முஸ்லிம்களும் & அர்பன் II போப்பும் (பாகம் 4)
- சிலுவைப்போர்கள் பற்றிய தவறான 6 கேள்விகளும் அவைகளுக்கான பதில்களும் (பாகம் 5)
- சிலுவைப்போர் – சின்னஞ்சிறு 25 கேள்வி பதில்கள் (பாகம் 6)
சிலுவைப்போர்கள் இயேசுவின் போதனைகளுக்கு எதிராக நடத்தப்பட்ட செயல்களாகும் என்பதை மட்டும் இங்கு மறுபடியும் தெரிவித்துக்கொள்கிறேன். அன்று வாழ்ந்த கிறிஸ்தவர்கள் செய்த தவறை இன்றுள்ள கிறிஸ்தவர்கள் செய்வதில்லை, அதாவது எருசலேமுக்காக போர்கள் செய்வதில்லை என்பதை மட்டும் பதிவு செய்ய விரும்புகிறேன்.
கேள்வி 523: "எருசலேமுக்கும் முஸ்லிம்கள் புனித (ஹஜ்) பயணம் மேற்கொள்ளலாமா?
பதில் 523: முஸ்லிம்கள் மக்கா மற்றும் மதினாவிற்கு புனித பயணம் செல்வது போன்று, எருசலேமுக்கும் புனித பயணம் செய்யலாம் என்று முஹம்மது கூறியதாக ஹதீஸ்களில் வருகின்றது. பல நாடுகளிலிருந்து இன்றும் முஸ்லிம்கள் எருசலேமுக்குச் சென்று, அங்குள்ள மசூதியை பார்த்து வருகிறார்கள். ஆனால், மக்காவில், மதினாவில் செய்வது போலவே ஹஜ் சம்மந்தப்பட்ட சட்டதிட்டங்களை கடைபிடிப்பதில்லை.
புகாரி எண் 1995:
1995. நபி (ஸல்) அவர்களுடன் பன்னிரண்டு போர்களில் கலந்துகொண்ட அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் நபி (ஸல்) அவர்களிடமிருந்து நான்கு செய்திகளைச் செவியுற்றேன். அவை என்னைக் கவர்ந்தன. அவை: ஒரு பெண் தன் கணவன் அல்லது மணமுடிக்கத் தகாத நெருங்கிய உறவினர் (மஹ்ரம்) ஒருவர் தம்முடன் இருக்கும் நிலையில் தவிர, (மற்ற நிலைகளில்) இரண்டு நாட்கள் தொலைவுள்ள பயணத்தை மேற்கொள்ளக் கூடாது; நோன்புப் பெருநாள், ஹஜ்ஜுப் பெருநாள் (ஈதுல் ஃபித்ர், ஈதுல் அள்ஹா) ஆகிய இரு நாட்களில் நோன்பு நோற்கக் கூடாது; சுப்ஹுக்குப் பிறகு சூரியன் உதிக்கும் வரையும் அஸ்ருக்குப் பிறகு சூரியன் மறையும் வரையும் தொழக் கூடாது. (அதிக நன்மையைப் பெற நாடி) மஸ்ஜிதுல் ஹராம் (மக்கா), பைத்துல் முகத்தஸ் (ஜெருசலேம்), எனது இந்த (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசல் ஆகிய மூன்று பள்ளிவாசல்களுக்குத் தவிர வேறெங்கும் (புனிதப்) பயணம் மேற்கொள்ளக் கூடாது.
கேள்வி 524: யூதர்கள் இயேசுவை நம்பவில்லை, இன்றும் நம்புவதில்லை, இருந்தபோதிலும் ஏன் கிறிஸ்தவர்கள்(சில நாடுகள்) யூதரகளை/இஸ்ரேல் நாட்டை இன்றும் ஆதரிக்கின்றனர்?
பதில் 524:
முதலாவதாக, யூதர்கள் இயேசுவை நம்பவில்லை என்பது உண்மை தான், அவரை சிலுவையில் அறைய காரணமாக இருந்தவர்களும் இவர்கள் தான், ஆனால், அன்றே இயேசு அதாவது 2000 ஆண்டுகளுக்கு முன்பே, 'ரோமர்களையும், யூதர்களையும் மன்னித்துவிட்டாரே' இப்படி இருக்கும் போது, நாம் ஏன் அவர்களை மன்னிக்கக்கூடாது?
இரண்டாவதாக, இயேசுவின் போதனைகளின் படி, யாரையும் கிறிஸ்தவர்கள் தேவையில்லாமல் வெறுக்கக்கூடாது.
மூன்றாவதாக, கிறிஸ்தவர்களுக்கும் பழைய ஏற்பாட்டிற்கும் சம்மந்தமிருப்பதினால், அவர்கள் மீது ஒருவகையான விவரிக்கமுடியாத ஒரு அன்பு கிறிஸ்தவர்களுக்கு உண்டு. நாங்கள் கொண்டாடும் பழைய ஏற்பாட்டு நபிகளும், கதாநாயகன்களும், கதாநாயகிகளும் யூதர்களின் மூதாதையர்கள் என்பதால், அவர்களை நேசித்து, இவர்களை வெறுக்கமுடியாதே!
நான்காவதாக, யூதர்கள் 1948ம் ஆண்டு இஸ்ரேல் நாட்டில் மறுபடியும் ஒன்று சேர்க்கப்பட்டதை கிறிஸ்தவர்கள் யெகோவா தேவனின் செயலாக, தீர்க்கதரிசனங்களின் நிறைவேறுதலாக பார்க்கிறார்கள். எனவே, எங்கள் இரட்சகரை சிலுவையில் அறைந்து கொன்றவர்களாக அவர்கள் இருந்தாலும், அவர்கள் பற்றி அவர் அக்கரை கொண்டு இருப்பதினால், அவருடைய கையிலேயே அவர்களை விட்டுவிட்டார்கள். யூதர்களை வெறுக்கவோ, சபிக்கவோ கிறிஸ்தவர்கள் செய்வதில்லை, இந்த விஷயத்திற்கு வந்தால், கிறிஸ்தவர்கள் யாரையும் அதாவது முஸ்லிம்களையும் சேர்த்து வெறுக்கவோ சபிக்கவோ கூடாது.
கடைசியாக, நியாயம் யார் பக்கம் இருக்கிறதோ அவர்கள் பக்கம் கிறிஸ்தவர்கள் இருக்கவேண்டும் என்று போதிக்கப்பட்டு இருப்பதினால், கிறிஸ்தவர்கள் இஸ்ரேல் நாட்டின் நியாயமான செயல்களுக்கு ஆதராவாக இருக்கிறார்கள் என்பது என் கருத்து. ஒரு வேளை இஸ்ரேல் நாடு அநியாயமாக நடந்துக்கொண்டால்? நிச்சயம் கிறிஸ்தவர்கள் அவர்களை அந்த காரியங்களில் ஆதரிக்கமாட்டார்கள்.
கேள்வி 525: கலிஃபா "அப்துல் மாலிக் இப்னு மர்வான்" என்பவருக்கும் எருசலேமுக்கும் என்ன சம்மந்தம்?
பதில் 525: எருசலேமில் இன்று முஸ்லிம்களின் மசூதி என்று அழைக்கப்படும் Dome of Rock (பாறை குவிமாடம்) ஐ கட்டியவர் தான் கலிஃபா அப்துல் மாலிக் இப்னு மர்வான். இவர் கி.பி. 685 லிருந்து 705 வரை உம்மையத் வம்சத்தின் ஐந்தாவது கலிஃபாவாக இருந்தார்.
முஹம்மது 632ல் மரிக்கிறார், இரண்டாவது கலிஃபா உமர் அவர்களால் எருசலேம் 638ல் ஆக்கிரமிக்கப்படுகிறது. முஹம்மதுவின் மரணத்திற்கு பிறகு 60 ஆண்டுகள் கழித்து தான் இன்று சண்டைகளின் பிறப்பிடமாக திகழுகின்ற அந்த டோம் ஆஃப் ராக் (Dome of Rock) கி.பி. 691ல் கட்டப்படுகின்றது.
இப்போது நாம் காண்கின்ற எருசலேமின் மசூதி, முஹம்மதுவின் காலத்தில் கட்டப்படவில்லை. அந்த இடத்தில் முந்தைய யூத தேவாலயம் இருந்தது, அது கி.பி. 70 அழிக்கப்பட்டது, அதன் பிறகு தான், அதே இடத்தில் இன்றுள்ள மசூதி கட்டப்பட்டதாக கூறப்படுகின்றது.
கேள்வி 526: மேற்குச்சுவர்(Western Wall), அழுகைச் சுவர் என்றால் என்ன?
பதில் 526: இன்று எருசலேமில் பார்க்கும் போது, டோம் ஆஃப் ராக் மசூதி இருக்கும் பகுதியில் ஒரு பெரிய சுவர் காணப்படும் அந்த இடத்தில் யூதர்கள் நின்று அழுது ஜெபிப்பதை காணமுடியும்.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இரண்டாம் யூத தேவாலயத்தின் ஒரு பகுதி அல்லது சுவர் தான் மேற்குச் சுவர் என்று அழைக்கப்படுகின்றது.
முதல் ஆலயத்தை சாலொமோன் அரசர் கட்டினார், அது பாபிலோனியர்களால் அழிக்கப்பட்டது. நெகேமியா எஸ்றா காலத்தில் இரண்டாம் ஆலயம் கட்டப்பட்டது, அதனை ஏரோது அரசர் புதுப்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆலயத்தில் தான் இயேசு உலாவினார், பிரசங்கித்தார். அந்த ஆலயம் அழிக்கப்படும் என்றும் அவர் முன்னறிவித்தார். கி.பி. 70ம் ஆண்டில் ரோமர்கள் அந்த ஆலயத்தை எரித்தார்கள், எருசலேமை கைப்பற்றினார்கள்.
அந்த ஆலயத்தின் ஒரு பகுதி அல்லது சுவர் தான் மேற்குச் சுவர் எனப்படுகின்றது.
கேள்வி 527: பழைய எருசலேம் நகரை எப்போது இஸ்ரேல் மறுபடியும் தன் கைவசப்படுத்தியது?ஆறு நாள் யுத்தம் என்றால் என்ன?
பதில் 527: ஆறு நாள் போர் என்பது ஜூன் போர் என்றும் அழைக்கப்படுகின்றது. இந்தப்போர் ஜூன் மாதம் 5 லிருந்து 10 வரை, இஸ்ரேல், ஜோர்டான், சிரியா மற்றும் எகிப்திற்கு மத்தியில் நடந்தது. இதில் இஸ்ரேல் ஆறு நாட்களில் வெற்றிப்பெற்றது. ஜோர்டான், சிரியா மற்றும் எகிப்து நாடுகள் ஒன்றாக சேர்ந்துக்கொண்டு, இஸ்ரேலுக்கு எதிராக சண்டையிட்டனர்.
எருசலேம் நாள் (Jerusalem Day, எபிரேய மொழியில்: Yom Yerushalayim) என்பது இஸ்ரேலின் தேசிய நாள் ஆகும். 1967ம் ஆண்டில் நடந்த ஆறு நாள் போரின் விளைவாக, எருசலேமின் பழைய நகர் பகுதி, மறுபடியும் இஸ்ரேலின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. இதனை நினைவு கூறும் வண்ணமாகவும், அதே நேரத்தில் பல்லாண்டு காலமாக யூதர்களின் கட்டுப்பாட்டில் வராத ஜெருசலேம் (எருசலேம்) இந்த நாளில் யூதர்களின் முழு கட்டுப்பாட்டுக்குள் வந்ததால், இந்த நாளை தேசிய நாளாக இஸ்ரேல் கொண்டாடுகிறது. இந்நாள் யூதர்கள் வெற்றிக்கொடி நாட்டிய நாள், 2000 ஆண்டுகளாக நடக்காத ஒன்று நடந்த நாள் (எருசலேம் யூதர்களின் கையில் வந்த நாள்).
1948 முதல் கிழக்கு எருசலேம் ஜோர்டான் நாட்டின் கட்டுப்பாட்டுக்குள் இருந்தது, அதனை முழுவதுமாக இஸ்ரேல் கைப்பற்றியது இந்த போரின் மூலமாகத் தான்.
கேள்வி 528: எருசலேமில் முஹம்மது தம் வாழ்நாளில் ஒரு முறையாவது கால் வைத்துள்ளாரா?
பதில் 528: முதலாவதாக, முஹம்மது எருசலேமுக்குச் சென்றார் என்று எந்த ஒரு சரித்திர ஆதாரமும் நம்மிடம் இல்லை. முஹம்மது தம்மை நபியாக பிரகடனம் செய்த ஆண்டுக்கு (கி.பி 610) முன்பு, அவர் பல முறை வியாபாரத்திற்காக மக்காவிலிருந்து சிரியாவிற்கும் இதர பல நாடுகளுக்கும் சென்றுள்ளார். ஆனால், வரும் வழியில் அவர் எருசலேமுக்குச் சென்றார், குறைந்தபட்சம் வியாபாரத்திற்காகவாவது சென்றார் என்ற விவரத்தை இஸ்லாம் எங்கும் கூறவில்லை.
ஆக, முஹம்மது தம் வாழ்நாளில் ஒரு முறையும் எருசலேமில் கால்வைக்கவில்லை என்பது தான் உண்மை. ஒருவேளை அவர் நபித்துவத்திற்கு முன்பு சென்றுயிருந்தால், அவர் நபியாகிவிட்ட பிறகு , அவர் யூத கிறிஸ்தவர்களிடம் பேசும் போதும் விவாதம் புரியும் போதும் பல முறை சில உதாரணங்களை, நிகழ்ச்சிகளை விளக்கியிருந்திருப்பார், ஆனால் இதைப் பற்றி ஹதீஸ்களில் நாம் ஒன்றையும் காண்பதில்லை.
இரண்டாவதாக, எருசலேம் என்ற வார்த்தை குர்ஆனில் ஒரு முறையும் வருவதில்லை. ஆனால், குர்ஆனின் 17வது ஸூராவில் 'அல்லாஹ் முஹம்மதுவை ஒரு வித்தியாசமான குதிரையில் (புராக்) ஏற்றிக்கொண்டு, தூரமாக உள்ள மசூதிக்கு அழைத்துச் சென்றதாக, அதன் பிறகு அங்கிலிருந்து சொர்க்கத்திற்கு அழைத்துச் சென்றதாக' சொல்லப்பட்டுள்ளது.
குர்ஆன் 17:1. (அல்லாஹ்) மிகப் பரிசுத்தமானவன்; அவன் தன் அடியாரை பைத்துல் ஹராமிலிருந்து (கஃபத்துல்லாஹ்விலிருந்து தொலைவிலிருக்கும் பைத்துல் முகத்தஸிலுள்ள) மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு ஓரிரவில் அழைத்துச் சென்றான்; (மஸ்ஜிதுல் அக்ஸாவின்) சுற்றெல்லைகளை நாம் அபிவிருத்தி செய்திருக்கின்றோம்; நம்முடைய அத்தாட்சிகளை அவருக்குக் காண்பிப்பதற்காக (அவ்வாறு அழைத்துச் சென்றோம்); நிச்சயமாக அவன் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும்; பார்ப்போனாகவும் இருக்கின்றான்.
இந்த வசனத்திலும் குர்ஆன் "எருசலேமில் உள்ள மசூதி" என்றுச் சொல்லாமல், "மஸ்ஜிதுல் அக்ஸா" என்று குறிப்பிடுகின்றது, இத பொருள் "தூரத்திலுள்ள மசூதி" என்று பொருள்.
பல முஸ்லிம் அறிஞர்கள், இந்த மசூதி எருசலேமில் இருந்த மசூதி என்று கூறுகிறார்கள், இதனால் தான் இன்று முஸ்லிம்கள் எருசலேமை சொந்தம் கொண்டாட முயலுகிறார்கள். ஆனால், முஹம்மதுவின் காலத்தில், யூதர்களின் இரண்டாம் ஆலயம் அந்த இடத்தில் இல்லை என்பது சரித்திரம் சொல்லும் சத்தியமாகும், அதாவது கி.பி. 70 ஆண்டில், முஹம்மதுவிற்கு 500 ஆண்டுகளுக்கு முன்பு, அந்த ஆலயம் ரோமர்களால் அழிக்கப்பட்டுவிட்டது. சரித்திரம் இப்படி சொல்லும் போது, எப்படி முஹம்மது அங்கு சென்றுயிருந்திருக்கமுடியும்?
மஸ்ஜிதுல் அக்ஸா என்பது எருசலேம் ஆலயம் அல்ல:
இன்னும் சில அறிஞர்களின் கருத்துப்படி, தூரத்திலுள்ள மசூதி என்பது (சௌதி) அரேபியாவில் உள்ள இன்னொரு மசூதியைத் தான் குறிக்கும், எருசலேமில் உள்ள ஆலயத்தை அல்ல என்கிறார்கள்.
மேலும், ஹதீஸ்கள் அனைத்தும் முஹம்மதுவின் காலத்திற்கு 150 ஆண்டுகளுக்கு பின்பு எழுதப்பட்டன என்பதாலும், கி.பி. 691ல் (முஹம்மது மரித்த 60 ஆண்டுகளுக்கு பிறகு) எருசலேமில் அப்துல் மாலிக் இப்னு மர்வான் என்ற கலிஃபா 'இன்று நாம் காணும் டோம் ஆஃப் ராக்' மசூதியை கட்டியதால், எருசலேமை சொந்தம் கொண்டாட முஸ்லிம்கள் செய்த தில்லுமுல்லு அல்லது பொய்கள் தான், அந்த புராக் என்ற குதிரையில் முஹம்மது எருசலேமுக்குச் சென்றதும், அங்கிருந்து சொர்க்கத்துச் சென்ற ஹதீஸ்கள். இதன் படி பார்த்தால், முஹம்மது எருசலேமுக்கு செல்லவில்லை என்று சொல்லலாம்.
மீரஜ் என்பது கனவா? தரிசனமா?
குர்ஆன் சொல்லும் மீரஜ் என்ற பயணம் நிச்சயமாக அது 'முஹம்மதுவிற்கு வந்த ஒரு கனவாக, அல்லது தரிசனமாக இருக்கமுடியுமே தவிர, அது உண்மையாக இருக்கமுடியாது'.
கீழ்கண்ட படத்தை பாருங்கள். முஹம்மது மீரஜ் பயணம் மேற்கொண்டதாகச் சொல்லப்படும் காலத்தில், யூதர்களின் ஆலயமும் இல்லை (கி.பி. 70 அழிக்கப்பட்டுவிட்டது), அதே நேரத்தில், இன்று காணும் டோம் ஆஃப் ராக் மசூதியும் இல்லை, அது முஹம்மது மரித்து 60 ஆண்டுகள் கழித்து கட்டப்பட்டது? அப்படியானால், அந்த பயணம் என்பது ஒரு கட்டுக்கதையே அல்லாமல் அல்லது கனவேயல்லாமல் வேறு என்னவாக இருக்கமுடியும்?
கேள்வி 529: இன்றைய எருசலேமிலுள்ள சிறப்புமிக்க விவரங்கள் என்ன?
பதில் 529:
இன்று இஸ்ரேல் மியூசியம் என்ற அருங்காட்சியகத்தில், சவக்கடல் சுருள்கள் என்ற மிகவும் பழமையான பைபிளின் கையெழுத்துப் பிரதிகள் வைக்கப்பட்டுள்ளன.
3000 ஆண்டுகளாக "மௌண்ட் ஒஃப் ஆலிவ் (Mount of Olive)" என்ற கல்லறைத்தோட்டத்தில் சவஅடக்கம் செய்யப்பட்டுக் கொண்டு வருகிறது. இது தான் உலகத்திலேயே மிகவும் பழமைவாய்ந்த கல்லறைத்தோட்டமாகும். சாலொமோன் கட்டிய முதலாம் ஆலயம் காலம் தொடங்கி இங்கு இன்றுவரை சவஅடக்கம் செய்யப்பட்டுக்கொண்டு இருக்கிறது. இதில் 2,50,000 பேருக்கும் அதிகமாக அடக்கங்கள் செய்யப்பட்டு இருக்கலாம் என்று சொல்லப்படுகின்றது.
இன்று எருசலேம் நகரில் 50க்கும் அதிகமான கிறிஸ்தவ திருச்சபைகளும், 33 மசூதிகளும், 300+ யூத ஜெபஆலயங்களும் இயங்குகின்றன.
கேள்வி 530: எருசலேம் சின்ட்ரோம்(Jerusalem Syndrome) என்றால் என்ன?
பதில் 530:
நல்ல ஆரோக்கியமான மனிதர்கள் கூட, எருசலேமுக்குச் சுற்றுலா சென்றால், அங்கு அவர்கள் தங்களை தாங்களே தீர்க்கதரிசிகள் என்று நம்பும்படியான ஒரு வகையான மனநோய்க்கு ஆளாவதாக கண்டுபிடித்துள்ளார்கள். அதாவது, 1980 லிருந்து 1993வரை கிட்டத்தட்ட 42 ஆரோக்கியமான சுற்றுலா பயணிகள், எருசலேமில் தங்கி சுற்றிப்பார்க்கும் போது, "தங்களை தீர்க்கதரிசிகள்" என்று கருதிக்கொண்ட ஒரு மன்நோய்க்கு ஆளாகியிருக்கிறார்கள். இதனை இஸ்ரேலிய மனநல மருத்துவர் யெய்ர் பார்எல் (psychiatrist Yair Bar-Eல்) மற்றும் இதர நிபுனர்கள் கூறுகிறார்கள். இந்த விவரத்தைக் கண்டு யாரும் பயப்படவேண்டாம்.
தேதி: 20th Jun 2021
சின்னஞ்சிறு 1000 கேள்வி பதில்கள் பொருளடக்கம்
உமரின் கட்டுரைகள் பக்கம்
Source: https://www.answering-islam.org/tamil/authors/umar/ramalan/2020ramalan/2020-ramalan-24.html