[உமருக்கும் அவரது தம்பிக்கும் இடையே நடைப்பெற்ற கடித உரையாடல்களை படிக்க சொடுக்கவும்: 2015 ரமளான் கடிதங்கள். ரமளான் மாதம் முடிந்து அடுத்த மாதத்தில் நுழைந்துவிட்டாலும், இக்கடித உரையாடல்கள் தொடர்கின்றன.]
அன்புள்ள அண்ணாவிற்கு,
உங்கள் தம்பி சௌதி அரேபியாவிலிருந்து எழுதிக் கொள்வது.
ரமளான் முடிந்து பல நாட்கள் கடந்துவிட்டது, நானும் கொஞ்சம் பிஸியாகவே இருந்துவிட்டேன், இன்று உங்களுக்கு மெயில் அனுப்பலாம் என்று நினைத்து இதனை எழுதுகிறேன்.
உங்களுடைய 14வது கடிதத்தில், எங்கள் முதல் கலிஃபா அபூ பக்கர் அவர்களை விமர்சித்து எழுதியிருந்தீர்கள். அதற்கு தக்க பதில் கொடுக்கத்தான் இந்த கடிதத்தை எழுதுகிறேன்.
1. ஒரு ஜனநாயக நாட்டின் அதிபதி எவைகளைச் செய்வாரோ, அதைத் தான் அபூ பக்கர் அவர்களும் "ரித்தா போர்களில்" செய்தார்கள். உதாரணத்திற்கு, இதனை கவனியுங்கள். இந்தியா பல மாநிலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அவைகளில் ஒரு மாநிலத்தின் தலைவர்கள் (முதலமைச்சரும் ஆளுநரும்) ஒன்றாக சேர்ந்துக்கொண்டு, இனி நாங்கள் மத்திய அரசுக்கு உட்படமாட்டோம், எங்களை அவர்கள் ஆளக்கூடாது, நாங்கள் வரிகளை செலுத்தமாட்டோம் என்றுச் சொல்லி, சண்டைக்கும் வந்தால், மத்திய அரசு என்ன செய்யும்?
2. இந்திய அரசு ஜனநாயக ஆட்சி என்பதால், "சண்டையில்லாமல் விட்டுவிடுவோம்" என்று மத்திய அரசு முடிவு செய்யுமா? அல்லது அந்த மாநிலத்தை மறுபடியும் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர தேவையான (இராணுவ) நடவடிக்கை எடுக்குமா?
3. மதினாவில் இஸ்லாமின் மத்திய அரசு இருந்தது, அங்கிருந்து தான் எங்கள் இறைத்தூதர் அவர்களும் ஆட்சி செய்தார்கள். அவருக்கு பிறகு, அவரது ஸ்தானத்தில் இருந்து தான் அபூ பக்கர் அவர்களும் ஆட்சி செய்தார்கள். இஸ்லாமின் முதல் கலிஃபா செய்தது, ஒரு சதவிகிதம் கூட தவறில்லை.
நான் மேலே சொன்ன எடுத்துக்காட்டுக்கு, உங்கள் பதிலை எழுதுங்கள்.
உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன்.
இப்படிக்கு
உங்கள் தம்பி
சௌதி அரேபியா
தேதி: 1 ஆகஸ்ட் 2015
-----------------------------------------
அபூ பக்கரின் ரித்தா போர்கள் – ஜனநாயகமா? (அ) மதவாத அடக்குமுறையா?
அன்புள்ள தம்பிக்கு,
அண்ணன் உமர் வாழ்த்தி எழுதும் கடிதம்.
ரமளான் முடிந்து பல நாட்கள் கடந்துவிட்டது, இன்னும் தம்பியிடமிருந்து எந்த ஒரு மெயிலும் வரவில்லையே என்று சிந்தித்துக் கொண்டு இருந்தேன். இன்று உன் மெயில் கண்டு மகிழ்ச்சி அடைந்தேன்.
தம்பி, இவ்வாண்டின் ரமளானை நீ நன்றாக என்ஜாய் செய்திருப்பாய் என்று நம்புகிறேன். முப்பது நாட்கள் நோன்பு இருந்ததின் விளைவாக, உன் எடை ஓரிரு கிலோ கூடியிருக்கும் என்று நினைக்கிறேன்! உண்மை தானே! ரமளான் பண்டிகையன்று உன் நண்பர்களோடு நீ எடுத்துக்கொண்ட புகைப்படத்தை எங்களுக்கு அனுப்பினாயே, அதைப் பார்த்தால், அப்படித் தான் தெரிகின்றது.
சரி, இப்போது நீ கேட்ட கேள்விகளுக்கு வருகிறேன்.
உன் கடிதத்தில் கீழ்கண்ட விவரங்களை நீ கூறியுள்ளாய்:
- இஸ்லாமிய ஆட்சி ஒரு ஜனநாயக ஆட்சியாகும்.
- அபூ பக்கர் ஒரு ஜனநாயக தலைவரைப் போல ஆட்சி செய்தார்.
- ஜனநாயக ஆட்சியிலும் கூட, வரம்புமீறும் மாநிலங்களை எப்படி நடத்தவேண்டுமோ அப்படித்தான் அபூ பக்கரும் செய்தார்கள்.
நீ இஸ்லாமை புரிந்துக் கொண்டதில் பல தவறுகள் உள்ளது.
1) இஸ்லாமிய ஆட்சி ஜனநாயக ஆட்சியன்று, அது ஒரு சர்வாதிகார ஆட்சியாகும்
தம்பி நீ இஸ்லாமிய ஆட்சியை ஜனநாயக ஆட்சியோடு ஒப்பிட்டாய், இது மிகப்பெரிய தவறாகும். இந்தியாவின் ஜனநாயக ஆட்சிக்கும், இஸ்லாமின் சர்வாதிகார ஆட்சிக்கும் சம்மந்தமில்லை.
அப்ரகாம் லிங்கன் சொல்லிய ஒரு கூற்றை உனக்கு ஞாபகப்படுத்துகிறேன்:
"Democracy is the government of the people, by the people, for the people"
ஜனநாயக அரசு என்பது மக்களுக்காக, மக்களால் நடத்தப்படும் மக்களின் அரசாகும்.
இஸ்லாமின் ஆட்சி இப்படிப்பட்ட ஜனநாயக ஆட்சி என்று நீ நினைக்கிறாயா?
இஸ்லாமிய அரசு என்பது அல்லாஹ்விற்காக, அல்லாஹ்வால் நடத்தப்படும் அல்லாஹ்வின் ஆட்சியாகும்.
முஹம்மது அமைத்த இஸ்லாமிய அரசு சர்வாதிகார ஆட்சியாகும். முஹம்மது எப்படி இஸ்லாமிய அரசை மதினாவில் அமைத்தார்?
- மக்காவில் முஹம்மதுவிற்கு தொல்லைகள் பெருகியபோது, மதினாவிலிருந்த ஒரு இனக்குழுவினர் இவருக்கு உதவி செய்வதாக உடன்படிக்கை செய்தனர்.
- இதனால் இவர் உயிர் தப்பி மதினாவிற்கு ஓடிப்போனார்.
- மதினாவில் ஒரு இனக்குழுவோடு இவரும் ஒன்று சேர்ந்தார்.
- மக்காவின் வியாபாரிகள் மீது வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டார், மக்களைக் கொன்று, செல்வங்களை கொள்ளையிட்டார். இந்த செயல்களுக்கு அல்லாஹ்வின் அங்கீகாரம் உள்ளதென்று காட்டினார். மக்காவினர் உங்களை உங்கள் வீடுகளிலிருந்து துரத்தினார்கள், அதற்காக நீங்கள் இப்போது அவர்களை கொள்ளையிடுங்கள் என்பது தான் அந்த அங்கீகாரம்.
- மதினாவைச் சுற்றியுள்ள இதர இனக்குழுக்கள் மற்றும் யூதர்கள் இவரை இறைத்தூதர் என்று ஏற்கவேண்டுமென்று விரும்பினார், எதிர்த்தவர்களோடும், இவரை விமர்சித்தவர்களோடும் சண்டையிட்டு அவர்களின் ஊர்களை கைப்பற்றினார்.
- மதினாவைச் சுற்றியுள்ள இதர குழுக்கள் இவரது ஆள்பலத்தைக் கண்டு, சண்டையில்லாமல் இஸ்லாமை ஏற்க முன்வந்தனர், சிலர் சண்டையிட்டு, தோல்வி அடைந்து இஸ்லாமின் ஆட்சிக்குள் வந்தனர்.
- கடைசியாக, பெரும்படையுடன் சென்று மக்காவையும் கைப்பற்றினார்.
- இது மட்டுமல்ல, இவராகவே இதர நாடுகளுக்கு இஸ்லாமை ஏற்கவேண்டுமென்று கடிதம் எழுதினார். மறுத்தால் தன் இராணுவம் அவர்களின் மண்ணில் இரத்தம் சிந்துவதற்கு தயாராக இருக்கிறது என்றும் அதட்டினார். சிலர் ஏற்றனர், சிலர் எதிர்த்து சண்டையிட்டு தோல்வி அடைந்தனர், இஸ்லாம் அவர்கள் நாடுகளை பிடித்தது.
இப்படி அமைக்கப்பட்டது தான் இஸ்லாமிய அரசு, இதனையா நீ ஜனநாயகம் என்று கூறுவாய்? அரேபிய தீபகர்ப்பத்தில் உள்ள அனைத்து நாடுகளையும் ஒன்று கூட்டி, ஓட்டு போடவைத்தா உங்கள் இறைத்தூதர் ஜனாதிபதியானார்?
முஹம்மதுவின் மரணத்திற்கு பிறகு, ஆட்சியில் அமர்ந்தவர் தான் அபூ பக்கர். இவரென்ன ஜனநாயக ஆட்சியா புரியப்போகிறார்? தலைவர் சென்ற வழி இவருக்கு தெரியாதா என்ன? அன்றும் சரி, இன்றும் சரி, ஜனநாயகத்துக்கும் இஸ்லாமுக்கும் சம்மந்தமில்லை. சில இஸ்லாமியர்களின் கருத்துப்படி, ஜனநாயக ஆட்சி முறை என்பது இஸ்லாமுக்கு எதிரானதாகும். இஸ்லாம் விரும்புவது கலிஃபாவின் ஆட்சியின் கீழ் அனைத்து நாடுகளும் வரவேண்டுமென்பது, அதற்காக இரத்தம் சிந்தவும் இஸ்லாம் அனுமதிக்கிறது.
2) அபூ பக்கரின் – ஆக்கிரமிப்பு யுக்தி
"முஹம்மது மரித்துவிட்டார், அவரோடு செய்திருந்த உடன்படிக்கை இதோடு முடிவிற்கு வந்துவிட்டது, இனி நாங்கள் மதினாவிற்கு அடிமைகளல்ல" என்று மதினாவை சுற்றியுள்ள இனக்குழுக்கள் எண்ணினர். முஹம்மது மரித்ததால், இஸ்லாமின் பலம் குன்றிவிட்டது என்று எண்ணினர். முஹம்மதுவைப் போல நாங்களும் தீர்க்கதரிசிகள் என்று சொல்லிக்கொண்டும் சிலர் எழும்பினர். தேவைப்பட்டால் மதினாவோடு சண்டையிட தயார் என்று சில குழுக்கள் எண்ணினர், சிலர் அதற்கு தயாராகிக் கொண்டும் இருந்தனர்.
முஹம்மது செய்ததும் இதைத் தானே! முஹம்மது இனக்குழுக்கள் மீது கடந்த காலத்தில் செய்ததை, இன்று இவர்கள் இஸ்லாமுக்கு செய்ய ஆரம்பித்தார்கள். பதிலுக்கு பதில், பழிக்கு பழி. [முஹம்மது மற்றவர்களின் கழுத்துக்களை வெட்டினார், இதே நிலை தன் அன்பான பேரனுக்கும் நடந்தது, அதுவும் முஸ்லிம்களாலேயே நடந்தது. முஹம்மது புளிப்பு காய்களை சாப்பிட்டார், இவரின் குடும்ப நபர்களின் பற்கள் கூசியது. முஹம்மது விதைத்த இஸ்லாமிய விதை, அவரது பேரனின் காலத்தில் கனி கொடுத்தது, அவ்வளவு ஏன் இன்றும் உலகத்தில் கனிகளை கொடுத்துக்கொண்டே இருக்கிறது. இதைப் பற்றி அடுத்தடுத்த கடிதங்களின் நான் உனக்கு விளக்குவேன்.]
பலவீனமான நாடுகள் மற்றும் இனக்குழுக்கள் மீது தாக்குதல் செய்து, அவர்கள் மண்ணை கவ்விக்கொண்டால், இது எதிர்காலத்தில் வெடிக்கவிருக்கும் ஒரு புரட்சியின் விதை என்பதை முஹம்மதுவும், அல்லாஹ்வும் ஏன் அறியவில்லை?
உலக வரலாற்றில் வெடித்த பெரும்பான்மையான புரட்சிகளுக்கு ஆணிவேர், சர்வாதிகாரமும், அடக்குமுறையும் தான் காரணம் என்பதை நீ அறியமாட்டாயா தம்பி?
இன்றுள்ள முஸ்லிம்கள் அமைதி மார்க்கம் என்று கருதும் இஸ்லாமை அன்று அபூ பக்கர் பின்பற்றுபவராக இருந்திருந்தால், உமரின் அறிவுரைப்படி செய்திருக்கவேண்டாமா?
வலிய சண்டைக்கு வருபவரிடம் சண்டையிடலாம், தவறு இல்லை. ஆனால், நாங்கள் முஸ்லிம்களாக இருந்துவிடுகிறோம், எங்கள் நாட்டை நாங்கள் ஆண்டுக்கொள்கிறோம், உங்களுக்கு இனி ஸகாத்தை கொடுக்கமாட்டோம் எங்களை அமைதியாக வாழவிட்டுவிடுங்கள் என்றுச் சொல்கின்ற இனக்குழுக்களோடு ஏன் சண்டையிடவேண்டும்? அவர்களும் முஸ்லிம்கள் தானே என்று உமர் அறிவுரை கூறினார். அபூ பக்கர் இந்த அறிவுரையை கேட்கவில்லை, ஏனென்றால், அபூ பக்கருக்கு இஸ்லாமின் அடிப்படை நன்றாகவே தெரியும்.
அபூ பக்கர் எப்படி ஒரு இனக்குழுவோடு சண்டையிடவேண்டும் என்று தம் இராணுவ தளபதிகளுக்கு கட்டளையிட்டார் என்பதை பார், தம்பி:
அ) சண்டையிடவேண்டிய இனக்குழு இருக்கும் ஊருக்கு வெளிவே செல்லுங்கள்.
ஆ) நீங்கள் தொழுவதற்கு அழைப்பு விடுக்கும் அதான் (அஜான்/பாங்கு) கொடுங்கள்.
இ) அந்த இனக்குழுவிடமிருந்து "பதில் பாங்கு" வருமானால், அவர்களை தாக்காதீர்கள். அவர்களிடம் சென்று, நீங்கள் இஸ்லாமிய ஆட்சிக்குள் இருப்பீர்களா? ஸகாத் கொடுப்பீர்களா? என்று கேளுங்கள். அவர்கள் "ஆம்" என்று இரண்டிற்கும் ஒப்புக்கொண்டால், அவர்களை தாக்காதீர்கள்.
ஈ) இஸ்லாமிய ஆட்சிக்கு உட்படுகிறோம், ஸகாத் கொடுக்கிறோம் என்று சொல்பவர்கள் மீது தாக்குதல் நடத்தாதீர்கள்.
உ) யார் உங்கள் "பாங்கு" சத்தத்திற்கு பதில் "பாங்கு" சொல்லவில்லையோ, ஒருவேளை "பதில் பாங்கு" கொடுத்துவிட்டு, ஸகாத் கொடுக்க மறுப்பார்களோ, அவர்களிடம் சண்டையிடுங்கள்.
ஊ) இஸ்லாமை விட்டுவெளியேறி முஸ்லிம்களை கொன்ற அனைவரும் கொல்லப்படவேண்டும். (https://en.wikipedia.org/wiki/Ridda_wars)
"மார்க்கத்தில் கட்டாயமில்லை" என்ற வசனம் எங்கே போய்விட்டது?
மேற்கண்ட விதமாக சண்டைக்கு செல்லும் படி அபூ பக்கர் கட்டளையிட்டார். இதில் கவனிக்கவேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால், "முஸ்லிமாக இருக்கிறோம்" என்று சொன்னாலும் விடக்கூடாது, அவர்கள் ஸகாத் கொடுக்கிறார்களா? என்று கேட்கவேண்டும், கொடுப்போம் என்று சொன்னால் சண்டையில்லை, "கொடுக்க மாட்டோம்" என்று சொன்னால், "சண்டையிடவேண்டும், இஸ்லாமிய வாளால் அவர்களுக்கு பதில் கொடுக்கவேண்டும்".
ஒரு முஸ்லிமை இன்னொரு முஸ்லிம் கொல்லும் காட்டுமிராண்டித் தனம் தான் இது.
• நீ அல்லாஹ்வை மட்டுமே நம்பினாலும் போதாது,
• நீ முஹம்மதுவை இறைத்தூதர் என்று நம்பினாலும் போதாது,
• நீ ஐந்து வேளை தொழுதாலும் போதாது,
• நீ நோன்பு இருந்தாலும் போதாது,
• நீ ஹஜ் செய்தாலும் போதாது, உன்னோடு இஸ்லாம் சண்டையிடும்.
• நீ இஸ்லாமிய ஆட்சிக்கு கீழ்படிந்து, "ஸகாத்" கொடுத்தால் தான் உன் உயிர் தப்பும், இல்லையேல் இஸ்லாமிய வாள் உன் கழுத்தை அறுக்கும்.
தம்பி, மார்க்கத்தில் கட்டாயமில்லை (2:256) என்ற குர்-ஆன் வசனம் எங்கே? இவ்வசனம் குர்-ஆனில் இருப்பது அபூ பக்கருக்கு தெரியாதா?
தலைவர் எவ்வழியோ தொண்டர் அவ்வழி:
முஹம்மது எவ்வழியோ அபூ பக்கரும் அவ்வழி தான். மேற்கண்ட முறையில் போர் புரிவது என்பது அபூ பக்கருக்கு புதிதல்ல. முஹம்மதுவும் இப்படித்தான் செய்திருக்கிறார். ஒரு ஊரை தாக்குவதற்கு முன்பாக, இராத்திரியில் அவ்வூருக்கு முன்பாக தங்குவது, அதிகாலையில் அங்கிருந்து இஸ்லாமிய தொழுகையின் அழைப்பு (பாங்கு) வருகிறதா என்று பார்ப்பது, பாங்குச் சத்தம் வந்தால் சண்டையில்லை. அவ்வூரிலிருந்து பாங்கு சத்தம் வரவில்லையானால், அவர்களின் உடல்கள் பங்கு பங்காக வெட்டப்படும் மேலும் அவர்களின் பெண்களும், பிள்ளைகளும் முஸ்லிம் ஜிஹாதிகளுக்கு பங்காக கொடுக்கப்படும். இதே வழியை கொஞ்சம் மாற்றி அபூ பக்கர் பின்பற்றினார். முஹம்மது இருந்திருந்தாலும் இதையே செய்திருப்பார்.
புகாரி ஹதீஸ்கள் (2943 & 610)
2943. அனஸ்(ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஒரு சமுதாயத்தார் மீது படையெடுத்துச் சென்றால் காலை நேரம் வரும் வரை தாக்குதல் நடத்த மாட்டார்கள். (அந்த மக்களிடையே தொழுகை அழைப்பான) பாங்கின் ஓசையைக் கேட்டால் தாக்குதல் நடத்த மாட்டார்கள். பாங்கின் ஓசையைக் கேட்காவிட்டால் காலை நேரம் வந்த பின் தாக்குதல் நடத்துவார்கள். கைபரில் நாங்கள் இரவு நேரத்தில் சென்று தங்கினோம். Volume :3 Book :56
610. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் எந்தக் கூட்டத்தினரோடாவது போரிடுவதாக இருந்தால் களத்தில் ஸுபுஹ் நேரம் வரும் வரை எங்களைப் போரில் ஈடுபடுத்த மாட்டார்கள். ஸுபுஹ் நேரம் வந்ததும் கவனிப்பார்கள். எதிர் தரப்பிலிருந்து பாங்கு சொல்லும் சப்தம் கேட்டால் தாக்காமலிருப்பதும் கேட்கவில்லையானால் திடீர்த் தாக்குதல் நடத்துவதும் நபி(ஸல்) அவர்களின் வழக்கமாக இருந்தது. இந்நிலையில் நாங்கள் கைபரை நோக்கிப் புறப்பட்டோம். இரவு நேரத்தில் அந்த இடத்தைச் சென்றடைந்தோம். ஸுபுஹ் நேரம் வந்ததும்பாங்கு சப்தம் கேட்காததால் நபி(ஸல்) அவர்கள் வாகனத்தில் ஏறினார்கள். நான் அபூ தல்ஹாவுக்குப் பின்னால் அவரின் வாகனத்தில் ஏறிக் கொண்டேன். என்னுடைய பாதம் நபி(ஸல்) அவர்களின் பாதத்தில் (அடிக்கடி) படும் (அளவுக்கு நெருக்கமாகச் சென்றோம்), அப்போது கைபர் வாசிகள் தங்களின் மண் வெட்டிகளையும் தானியம் அளக்கும் (மரக்கால் போன்ற) அளவைகளையும் எடுத்துக் கொண்டு எங்களை நோக்கி வந்து கொண்டிருந்தார்கள். நபி(ஸல்) அவர்களைப் பார்த்ததும் (கிலியுடன்) 'அல்லாஹ்வின் மீது ஆணையாக அதோ முஹம்மத்! அவரின் படை!' என்றனர். நபி(ஸல்) அவர்கள், அம்மக்களைக் கண்டதும் 'அல்லாஹு அக்பர்! அல்லாஹு அக்பர்! கைபர் வீழ்ந்தது! நாம் ஒரு கூட்டத்தினரைத் தாக்கினால், அவர்களின் காலைப்போது கெட்டதாயிருக்கும்" என்றார்கள். Volume :1 Book :10
முஸ்லிம் ஹதீஸ் எண்: 626
626. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (போர்க் காலத்தில்) ஃபஜ்ர் நேரம் ஆரம்பிக்கும்போது போர் தொடுப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள்.(போரை ஆரம்பிக்கு முன்) ஃபஜ்ர் தொழுகையின் அறிவிப்பு சப்தத்தை எதிர்பார்ததுக் கொண்டிருப்பார்கள். அப்படி தொழுகை அறிவிப்பு சப்தத்தைக் கேட்டால் போரை நிறுத்திவிடுவார்கள். இல்லையென்றால் தாக்குவார்கள்.
(ஒரு முறை) ஒரு மனிதர், அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர் என்று சொல்லக் கேட்டார்கள். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், நீ இயற்கையில் (இஸ்லாத்தில்) இருக்கிறாய் என்று சொன்னார்கள். பின்பு அவர், அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹ், அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹ் என்று சொன்னார். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், நீ நரகத்திலிருந்து (விடுதலை பெற்று) வெளியேறி விட்டாய் என்று சொன்னார்கள். நபித்தோழர்கள் அவர் யாரென்று பார்த்தபோது அவர் வெள்ளாடுகளை மேய்க்கும் ஓர் இடையர் என்று தெரிந்தது.Book :4
3) இந்திய மாநில அரசுகளும், மதினாவின் பழக்குடி இன குழுக்களும்
தம்பி, இஸ்லாமின் நியாயமற்ற தாக்குதல்களை மறைப்பதற்கு, நீ இந்திய ஜனநாயக முறையை உதாரணம் காட்டினாய். இது மிகப்பெரிய மோசடியாகும்.
ஜனநாயக ஆட்சி முறையில் இந்திய மாநிலங்கள் பிரிக்கப்பட்டு இருக்கின்றன, நீ சொல்வது போல நடக்காது, ஒருவேளை ஏதாவது ஒரு மாநிலம் தனி நாடாக இருக்கவிரும்பினால், மதத்தின் அடிப்படையில் மத்திய அரசு அவர்களோடு செயல்படாது. எனவே, உன் ஒப்பிடுதல் தவறானதாகும்.
ஆனால், முஹம்மதுவின் ஆட்சி, பயமுறுத்தல்கள் மற்றும் மதத்தின் அடிப்படையில் அமைக்கப்பட்டது, அபூ பக்கரின் ரித்தா போர்கள் என்று அழைக்கப்படும் "இஸ்லாமை விட்டு வெளியேறியவர்களுடன் நடந்த போர்கள்" மதத்தின் அடிப்படையில் செய்யப்பட்டது.
தற்காலக் கட்டத்தில் ஒரு இஸ்லாமிய கலிஃபா உருவாகிவிட்டால், அவனும் அபூ பக்கர் செய்தது போலவே செய்வான். பாகிஸ்தானிடமும், சௌதி அரேபியாவிடமும் மற்றும் இதர இஸ்லாமிய நாடுகளிடமும், என் தலைமையை ஏற்றுக்கொண்டு, என் அரசுக்கு ஸகாத் கொடுப்பாயா இல்லையா என்று கேட்பான். இஸ்லாமிய நாடுகள் என்ன தான் சாக்குபோக்கு சொன்னாலும், தலை தப்பாது, உடனே சண்டை தான் நடக்கும். எங்கள் நாட்டில் தான் மக்கா மதினா இருக்கிறது, நாங்கள் ஒசத்தியாக்கும் என்று சௌதி அரேபியா சொன்னாலும் சரி, எனக்கு ஸகாத் கொடுத்தால் சண்டையில்லை, மறுத்தால், சண்டை தான் என்று கலிஃபா சொல்வான்.
அப்போது தான் எல்லா நாடுகளுக்கும் இஸ்லாமின் உண்மை முகம் தெரியும். இப்போது நான் சொன்ன இவ்வார்த்தைகளை நீ எழுதி வைத்துக் கொள், இது தான் இஸ்லாமிய கலிஃபாவால் நடக்கவிருக்கும் எதிர்கால நிகழ்வுகள். இதனைச் சொல்ல ஒரு தீர்க்கதரிசி வரத்தேவையில்லை, இஸ்லாமை சரியாக புரிந்துக்கொள்பவர்கள் இதனை அறிவார்கள். இதனை நோக்கியே ஐஎஸ் என்ற தீவிரவாத குழு முன்னேறிச் சென்றுக்கொண்டு இருக்கிறது. தம்பி, நீ ஒரு முஸ்லிம் நாட்டில் இருப்பதினாலோ, ஒரு முஸ்லிமாக மாறியிருப்பதினாலோ, அல்லது மக்கா என்ற புனித பூமியுள்ள நாட்டில் இருப்பதினாலோ இஸ்லாமிய கலிஃபாவிடமிருந்து தப்பித்துக் கொள்ளலாம் என்று கனவு காணாதே. காபாவில் ஒளிந்துக் கொண்டாலும் கலிஃபாவின் ஆட்கள் காபாவிற்குள்ளேயே வெட்டுவார்கள், இதனை மனதில் வை.
வலிய போருக்கு வருபவர்களிடம் அபூ பக்கர் சண்டையிடுவது தவறில்லை, ஆனால், முஸ்லிமாகவில்லை என்றுச் சொல்லி, ஸகாத் கொடுக்கவில்லை என்றுச் சொல்லி போரிடுவது சர்வாதிகாரமாகும், மத அடக்குமுறையாகும்.
இஸ்லாம் ஒரு அமைதி மார்க்கமென்று கூப்பாடு போடும் முஸ்லிம்கள் இஸ்லாமின் ஆரம்ப கால சரித்திரத்தை முழுவதுமாக படிக்கவேண்டும். முஸ்லிம் கலிஃபாக்கள் செய்தது போலவே இதர மார்க்க தலைவர்கள் செய்தால், இதனையும் முஸ்லிம்கள் அங்கீகரிப்பார்களா?
பலமுள்ளவர்கள் பலவீனமாவர்கள் மீது தொடுக்கும் போர் தான் காலாகாலமாக நடந்துவருகிறது. முஹம்மது மக்காவில் இருக்கும்போது பூனையைப் போல அடங்கி நடந்துக்கொண்டார், அதற்கு ஏற்றாற்போல வசனங்களையும் அல்லாஹ் இறக்கினார். ஆனால், ஆள்பலம் கூடி முஹம்மது பலமுள்ளவராக மாறிய போது வலியச் சென்று சண்டையிட்டார் இது நியாயமானது என்று கருதினால், இதே போல மற்றவர்கள் ஏன் செய்யமாட்டார்கள்? முஹம்மதுவிற்கு ஒரு நியாயம், இதர மக்களுக்கு ஒரு நியாயமா? தம்பி.
இதுமட்டுமல்ல, அபூ பக்கர் செய்த இன்னொரு தவறு என்ன தெரியுமா? இதர நாடுகள் மீது வலியச் சென்று போர் செய்தார். யார் இவருக்கு போர் செய்யச் சொன்னார்கள்? இதைப் பற்றி அடுத்த கடிதத்தில் எழுதுகிறேன்.
தம்பி, நீ கொஞ்சம் நியாயமாக சிந்தித்துப் பார்.
இப்படிக்கு
உன் தம்பி
உமர்