"பைபிளின் மூல கையெழுத்துப் பிரதிகள் தொலைந்துவிட்டதால், பைபிள் நம்பகத்தன்மையற்றது" என்ற இஸ்லாமியர்களின் வாதம்
பைபிளின் மூல கையெழுத்துப் பிரதிகள் தொலைந்துவிட்டதால், பைபிளை நம்பமுடியாது என்று சில முஸ்லிம்கள் வாதம்புரிகிறார்கள். அதாவது முதன் முதலில் எழுதப்பட்ட பிரதிகள் இல்லாததால், நம்மிடமுள்ள பிரதிகளோடு ஒப்பிட வாய்ப்பு இல்லை என்று இவர்கள் கூறுகிறார்கள்.
முதன் முதலில் எழுதப்பட்ட மூல கையெழுத்துப்பிரதிகள் இல்லை என்பது உண்மை தான், ஆனால், இதே நிலையில் தான் குர்-ஆனும் உள்ளது என்பதை இந்த முஸ்லிம்கள் அறிவார்களா? "The Holy Qur'an / Tratislatioti and Commentary, (2nd Edition, 1977)," என்ற குர்-ஆன் மொழியாக்கத்தில் யூசுஃப் அலி அறிமுகத்தில் கீழ்கண்டவாறு கூறுகிறார்:
குர்-ஆனின் வார்த்தைகள் இறக்கப்பட்டவுடன், பரிசுத்த இறைத்தூதர் சொல்லச் சொல்ல, அவைகளை பனை மர இலைகளிலும், மரப்பட்டைகளிலும், எலும்புகளிலும் எழுதி அவைகளை ஒரு பையில் போட்டு வைப்பார்கள்.
நன்றாக கூர்ந்து கவனிக்கவும், குர்-ஆன் வசனங்களை இலைகளிலும், மரப்பட்டைகளிலும், எலும்புகளிலும் எழுதி வைத்தார்கள். மேலும் இவைகள் பற்றி ஆய்வு செய்தால், ஹதீஸ்கள் என்று அறியப்படுகின்ற, அல் புகாரி என்பவரால் தொகுக்கப்பட்ட சஹீ அல் புகாரி என்ற ஹதீஸ்களின் படி, குர்-ஆன் என்பது வெள்ளை கற்களிலும், மனிதர்களின் மார்புகளிலும் எழுதப்பட்டதாக வாசிக்கிறோம். மனிதர்களின் மார்புகளில் எழுதப்பட்டதாக சொல்லப்படுவது என்பது, மனிதர்களின் மூளையிலே(மனதிலே) பதியப்படுகின்றது என்று அர்த்தம். ஆக, வெள்ளைக் கற்களில் மேலும் மனிதர்களின் மார்புகளில் எழுதப்படும் வசனங்கள் யூசுஃப் அலி அவர்கள் சொல்வது போல "பையிலேபோட்டு சேமிக்க முடியாது".
குர்-ஆன் ஆரம்பத்தில் எழுதப்பட்ட இலைகள், மரப்பட்டைகள், எலும்புகள் போன்றவற்றை எந்த ஒரு அருங்காட்சியகத்திலும் இதுவரை உலகிலே நாம் காணமுடியாது. அதாவது ஆரம்பத்தில் குர்-ஆன் வசனங்கள் எழுதப்பட்ட இந்த வகையாக இலைகள், எலும்புகள் மரப்பட்டைகளை சேகரித்து, அவைகளை ஒரு அருங்காட்சியகத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டதாக நாம் உலகத்தில் காணமுடியாது. இப்படி ஏதாவது அருங்காட்சியகத்தில் அவைகள் இருந்தால் தானே, இன்று நம்மிடம் உள்ள குர்-ஆன் வசனங்களை மூலங்களோடு சரி பார்க்கமுடியும்?
இன்று நம்மிடம் இருக்கும் குர்-ஆன், முஹம்மது மரித்து 20 ஆண்டுகளுக்கு பிறகு உஸ்மான் அவர்கள் தயாரித்த குர்-ஆன் பிரதியோடு ஒத்து இருந்தாலும், உஸ்மான் அவர்கள் தயாரித்த குர்-ஆன் பிரதியானது, முஹம்மது சொன்ன வசனங்களோடு ஒத்து இருக்கிறது என்பதை நாம் எப்படி அறியமுடியும்? அது சாத்தியமில்லை, இதற்கு எந்த ஒரு ஆதாரமும் (இலைகள், மரப்பட்டைகள், எலும்புகள் போன்றவைகள்) நம்மிடம் இல்லை. அதாவது குர்-ஆனின் மூல பிரதிகள் நம்மிடம் இல்லை அவைகள் தொலைந்துவிட்டது. எப்படி கிறிஸ்தவர்களின் மூலப் பிரதி (முதல் கையெழுத்துப் பிரதி) இல்லையோ, அதே போல, குர்-ஆனின் மூலப் பிரதிகள் (முதல் கையெழுத்துப் பிரதிகள் - இலைகள், மரப்பட்டைகள், எலும்புகள்) இல்லை, அவைகள் தொலைந்துவிட்டன.
குர்-ஆனின் முதல் மூல கையெழுத்துப் பிரதிகள் நம்மிடம் இல்லாமல் இருந்தாலும், "குர்-ஆன் நம்பகமானது தான்" என்று ஒரு முஸ்லிமால் ஏற்றுக்கொள்ள முடியுமென்றால், இதே போல கிறிஸ்தவர்கள் தங்கள் "பைபிள் நம்பகமானது என்று" ஏற்றுக்கொள்ள அவர்களுக்கு எந்த ஒரு பிரச்சனையும் இருப்பதில்லை. இதனை அங்கீகரிக்க எந்த முஸ்லிமுக்கும் பிரச்சனை இருக்காது.
பைபிளைப் பற்றி முஸ்லிம்கள் கவலைப்படவே தேவையில்லை. ஏனென்றால், முஸ்லிம்கள் வேதம் என்று நம்பும் தங்கள் குர்-ஆனே, பைபிளைக் குறித்து சாட்சி சொல்கிறது, அதாவது, முந்தைய வேதங்களை மெய்ப்பிக்க நான் வந்தேன் என்று குர்-ஆன் சாட்சி சொல்லுகிறது. குர்-ஆனின் இந்த மெய்ப்பிக்கின்ற வசனங்கள் உண்மை என்று ஒரு முஸ்லிம் நம்புவாரானால், அவருக்கு பைபிளின் மூல பிரதிகள் எங்கே என்று கேட்டு, கவலைப்படவேண்டிய அவசியமே அவனுக்கு இல்லை. பைபிளில் மிகப்பெரிய தவறுகள் இருந்திருக்குமானால், "பைபிளை மெய்ப்பிக்க வந்துள்ளேன்" என்று குர்-ஆன் சொல்லியிருக்காது. அதற்கு பதிலாக குர்-ஆன் தெளிவாக "நான் முந்தைய வேதங்களை மாற்ற, தள்ளுபடி செய்ய, சரிப்படுத்த, நீக்க வந்துள்ளேன்" என்று கூறியிருக்கும். ஆனால், இப்படிப்பட்ட வசனம் குர்-ஆனில் இல்லை. ஆகவே, இஸ்லாமியர்கள் தங்கள் சொந்த வேதமாகிய குர்-ஆன் சொல்லும் சாட்சியின் அடிப்படையில் தாராளமாக பைபிளை நம்பலாம், இதற்கு எந்த ஒரு தயக்கமும் அவர்களுக்கு தேவையில்லை.
ஆங்கில மூலம்: The Claim that the Bible is no longer Reliable because the Original Manuscripts are Lost
© Answering Islam, 1999 - 2012. All rights reserved.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக