"பைபிளிலிருந்து முஹம்மதுவின் பெயர் நீக்கப்பட்டுவிட்டது" என்ற இஸ்லாமியர்களின் வாதம்
முஹம்மதுவின் பெயர் ஒரு முறை கூட பைபிளில் காணப்படவில்லை என்பதால் அனேக இஸ்லாமியர்கள் பைபிளை குற்றப்படுத்துகிறார்கள். யூத மற்ற கிறிஸ்தவர்களின் வேதங்களில் முஹம்மதுவின் பெயர் காணப்படவேண்டும் என்று முஸ்லிம்கள் எதிர்ப்பார்க்கின்றனர். இப்படி இவர்கள் எதிர்ப்பார்ப்பதற்கு காரணம் குர்-ஆனில் காணப்படும் இரண்டு வசனங்களாகும்.
மேலும், மர்யமின் குமாரர் ஈஸா, "இஸ்ராயீல் மக்களே! எனக்கு முன்னுள்ள தவ்ராத்தை மெய்ப்பிப்பவனாகவும்; எனக்குப் பின்னர் வரவிருக்கும் 'அஹமது' என்னும் பெயருடைய தூதரைப் பற்றி நன்மாராயம் கூறுபவனாகவும் இருக்கும் நிலையில் அல்லாஹ்வின் தூதனாக உங்களிடம் வந்துள்ளேன்" என்று கூறிய வேளையை (நபியே! நீர் நினைவு கூர்வீராக!) எனினும், அவர்களிடம் தெளிவான அத்தாட்சிகளை அவர் கொண்டு வந்த போது, அவர்கள் "இது தெளிவான சூனியமாகும்" என்று கூறினார்கள். (குர்-ஆன் 61:6)
எவர்கள் எழுதப்படிக்கத் தெரியாத நபியாகிய நம் தூதரைப் பின்பற்றுகிறார்களோ - அவர்கள் தங்களிடமுள்ள தவ்ராத்திலும் இன்ஜீலிலும் இவரைப் பற்றி எழுதப் பட்டிருப்பதைக் காண்பார்கள்; அவர், அவர்களை நன்மையான காரியங்கள் செய்யுமாறு ஏவுவார்; பாவமான காரியங்களிலிருந்து விலக்குவார்; ….(குர்-ஆன் 7:157)
இஸ்லாமியர்களில் நன்கு கற்றுத் தேர்ந்த அறிஞர்கள், ஆய்வு மூலமாக, முஹம்மதுவிற்கு பின்பு உள்ள பைபிளின் கையெழுத்துப் பிரதிகளும், முஹம்மதுவிற்கு முன்பு இருந்த பைபிளின் கையெழுத்துப் பிரதிகளும் ஒரே மாதிரியாகத் தான் இருக்கின்றன என்பதை அறிவார்கள். ஆகையால், முஹம்மதுவின் பெயரை பைபிளிலிருந்து நீக்கிவிட்டார்கள் என்ற குற்றச்சாட்டு அடிப்படையற்ற ஒன்றாகும். எனினும், முஹம்மதுவின் பெயர் பைபிளில் காணப்படவில்லையானாலும், பைபிளில் காணப்படும் சில வசன்ங்கள் முஹம்மதுவை குறிக்கின்றன என்று முஸ்லிம்கள் கூறுகிறார்கள். ஆகவே, யூத கிறிஸ்தவர்களையும் சேர்த்து, உலகமனைத்திற்கும் முஹம்மது நபியாக வந்தார் மற்றும் ஊழியம் செய்தார் என்பது இதன் மூலம் நிருபிக்கப்படுகிறது என்று வாதிக்கிறார்கள். இப்படிப்பட்ட வாதங்களினால், முடிந்தவரை முஹம்மதுவை கிறிஸ்தவர்கள் பின்பற்றும்படி செய்யலாம் என்றும் மேலும் முஹம்மது உருவாக்கிய மார்க்கமாகிய் இஸ்லாம் ஒருமுழுமை அடைந்த மதம் என்று கிறிஸ்தவர்கள் கருதுவார்கள் என்று முஸ்லிம்கள் நினைக்கிறார்கள்.
மேற்கண்ட குர்-ஆன் வசனம் இயேசு கூறியதாக இப்படி சொல்கிறது: "எனக்குப் பின்னர் வரவிருக்கும் 'அஹமது' என்னும் பெயருடைய தூதரைப் பற்றி நன்மாராயம் கூறுபவனாகவும்". இதனை படித்த அனேக இஸ்லாமியர்கள் பைபிளை முழுவதுமாக தேடிப்பார்த்தார்கள், ஆனால் அவர்களுக்கு எந்த வசனமும் தென்படவில்லை. ஆகையால், பரிசுத்த ஆவியானவர் பற்றி புதிய ஏற்பாட்டில் யோவான் சுவிசேஷத்தின் சில வசனங்களை எடுத்துக்கொண்டு, இவைகள் தான் முஹம்மது பற்றிய முன்னறிவிப்பு வசனங்கள் என்று இஸ்லாமியர்கள் வாதிக்கிறார்கள். உதாரணத்திற்கு கூறவேண்டுமென்றால், யோஆவன் 14:16, 15:26 மற்றும் 16:7 வசனங்களை கூறலாம். மூல கிரேக்க மொழியில் "பராக்லெடோஸ் (paracletos)" என்ற வார்த்தைக்கு ஆங்கில மொழியாக்கங்களில் "தேற்றரவாளன்", "அறிவுறுத்துகிறவர்" (அ) நமக்கு பதிலாக பேசுகிறவர் (வழக்கறிஞர்) என்று மொழியாக்கம் செய்துள்ளார்கள். தமிழில் "தேற்றரவாளன்" என்று தமிழாக்கம் செய்துள்ளார்கள். சில இஸ்லாமிய அறிஞர்கள், "கிரேக்க வார்த்தை ஆரம்பத்திலிருந்து தவறாக எழுதப்பட்டுள்ளது, அதாவது சரியான வார்த்தை "பெரிக்லோடஸ்" ஆகும், இவ்வார்த்தையின் நெருங்கிய அர்த்தம் "அஹமத்" என்பதாகும், அதாவது "போற்றுதலுக்கு உரியவர்" என்பதாகும்.
ஒரு முக்கியமான விஷயத்தை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும், அதாவது "அஹமத்" மற்றும் "முஹம்மத்" என்ற வார்த்தைகள் இரண்டும் வித்தியாசமானவைகள். முஹம்மத் என்பது ஒரு தனிப்பெயராகும் இதன் அர்த்தம் "போற்றுதலுக்குரிய ஒருவர் (the one who is praiseworthy)" என்பதாகும். ஆனால், "அஹமத்" என்பது ஒரு உரிச்சொல் ஆகும், இதன் அர்த்தம் "போற்றுதலுக்கு தகுதியானவர் – (worthy of praise)" என்பதாகும். மேலும் அஹமத் என்ற பெயர் முஹம்மதுவின் காலத்திற்கு முன்பு வேறு யாருக்கும் சூட்டப்படவில்லை என்று தெரிகின்றது. இதனால் தான் முழு குர்-ஆனிலும் இஸ்லாமிய நபியை குறிப்பிடும் போது, "அஹமத்" என்று குறிப்பிடவில்லை. இதற்கு பதிலாக "முஹம்மது" என்ற தனிப்பெயரையே நாம் குர்-ஆனில் குறிப்பிட்டு இருப்பதைக் காணலாம்.
புதிய ஏற்பாட்டின் யோவான் சுவிசேஷத்தின் வசனத்தைக் குறித்து கவனித்தால், இந்த வசனத்திற்கு அடுத்து வரும் வசனங்களில் அந்த "பராக்லேடோஸ் (தேற்றரவாளர், பரிந்து பேசுபவர், அறிவுறுத்துபவர்)" என்பவர், "சத்தியத்தின் ஆவியானவர்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சத்திய ஆவியானவரை உலகம் காணமுடியாது, ஏனென்றால் அவர் விசுவாசிகளின் உள்ளங்களில் வாழுபவர் மேலும் அவர் இயேசுக் குறித்து சாட்சி சொல்லுவார் என்று சொல்லப்பட்டுள்ளது. தம்முடைய சீடர்களுக்கு அறிவுரை கூறும் போது குறிப்பிட்டதும் இந்த சத்திய ஆவியானவரைப் பற்றித் தான், முஹம்மதுவைப் பற்றி அல்ல.
பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார். (அப்போஸ்தலர் நடபடிகள் 1:8)
இயேசுவின் மரணத்திற்கு 50 நாட்களுக்கு பின்பு, இந்த பரிசுத்த ஆவியானவர் பற்றிய வாக்குறுதி சீடர்களின் வாழ்வில் நிறைவேறியது. மேலும் பெந்தேகோஸ்தே என்ற நாளில் மிகவும் அற்புதமான ஒரு நிகழ்வாக அது நடைப்பெற்றது. இந்த மிகப்பெரிய நிகழ்ச்சிப் பற்றி, பேதுரு என்று இயேசுவால் பெயர் சூட்டப்பட்ட சீடர் கீழ்கண்டவாறு கூறுகிறார்:
இந்த இயேசுவைத் தேவன் எழுப்பினார்; இதற்கு நாங்களெல்லாரும் சாட்சிகளாயிருக்கிறோம். அவர் தேவனுடைய வலதுகரத்தினாலே உயர்த்தப்பட்டு, பிதா அருளிய வாக்குத்தத்தத்தின்படி பரிசுத்த ஆவியைப் பெற்று, நீங்கள் இப்பொழுது காண்கிறதும் கேட்கிறதுமாகிய இதைப் பொழிந்தருளினார். (அப்போஸ்தலர் நடபடிகள் 2:32-33)
மேற்கண்ட விவரங்கள் மூலமாக அறிவது என்னவென்றால், "பராக்லெடோஸ்" என்ற வார்த்தையானது தேவனின் ஆவியானவரை குறிப்பிடுகின்றதே தவிர, ஒரு மனிதனை அது குறிப்பிடவில்லை. மேலும், இந்த "பாரக்லேடோஸ்" என்பவர், பிதாவிடமிருந்து சீடர்களுக்கு கொடுக்கப்படுகிறார். எனவே, சீடர்களின் வாழ்நாளிலேயே அவர் வந்தாகவேண்டும். இயேசுவின் சீடர்கள் மரித்து 500 ஆண்டுகளுக்கு பிறகு தான் முஹம்மது வருகிறார், இப்படி இருக்கும் போது, "பாரக்லேடோஸ்" என்பவர் எப்படி முஹம்மதுவாக இருக்கமுடியும்?
முஸ்லிம்கள் பழைய ஏற்பாட்டையும் தேடிப்பார்த்துள்ளனர், முக்கியமாக தோராவில் முஹம்மது பற்றி ஏதாவது வசனம் கிடைக்குமா என்று தேடிப்பார்த்துள்ளனர். இதன் பயனாக அவர்கள் இரண்டு பழைய ஏற்பாட்டு வசனங்களை பொதுவாக மேற்கோள் காட்டுவார்கள், அவைகள் உபாகமம் 18:15 மற்றும் 18ம் வசனங்கள் ஆகும்.
உன் தேவனாகிய கர்த்தர் என்னைப் போல ஒரு தீர்க்கதரிசியை உனக்காக உன் நடுவே உன் சகோதரரிலிருந்து எழும்பப்பண்ணுவார்; அவருக்குச் செவிகொடுப்பீர்களாக. உன்னைப் போல ஒரு தீர்க்கதரிசியை நான் அவர்களுக்காக அவர்கள் சகோதரரிலிருந்து எழும்பப்பண்ணி, என் வார்த்தைகளை அவர் வாயில் அருளுவேன்; நான் அவருக்குக் கற்பிப்பதையெல்லாம் அவர்களுக்குச் சொல்லுவார். (உபாகமம் 18:15,18)
மோசேயைப் போல வெளிப்பட அந்த தீர்க்கதரிசி, முஹம்மது தான் என்று அனேக இஸ்லாமியர்கள் வாதம் புரிவார்கள். இந்த தலைப்பு பற்றி அடுத்த கட்டுரையில் நான் விவரிக்கிறேன்.
ஆங்கில மூலம்: The Claim that Muhammad's Name has been Removed from the Bible
© Answering Islam, 1999 - 2012. All rights reserved.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக