முன்னுரை:
இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல என்ற தலைப்பில் தொடர் கட்டுரைகளை பார்த்துக் கொண்டு இருக்கிறோம்.
இக்கட்டுரையின் பின்னணியை அறிந்துக் கொள்ள, மேற்கண்ட அறிமுக கட்டுரையை படிக்கும் படி கேட்டுக் கொள்கிறேன்.
மக்காவின் பிரச்சனை 6
சரித்திர ஆசிரியர் கிப்சன், தம்முடைய "குர்-ஆனிக் ஜியோகிரஃபி" என்ற புத்தகத்தில், இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல, அது ஜோர்டானின் உள்ள பெட்ரா ஆகும் என்ற வாதத்தை முன்வைத்துள்ளார். இதற்காக அவர் பல ஆதாரங்களை கொடுத்துள்ளார். மக்காவைப் பற்றி இதுவரை ஐந்து பிரச்சனைகளை பார்த்து இருக்கிறோம், இப்போது அவர் முன்வைத்த மற்றொரு பிரச்சனையை பார்ப்போம்.
மக்கா ஒரு வறட்சியான இடம், அங்கு திராட்சை போன்ற கனிவகைகள் பயிரிடப்படுவதில்லை, ஆனால், புகாரி ஹதீஸ் "மக்காவில் திராட்சை பயிரிடப்படுவதாக" சொல்கிறது. இது எப்படி சாத்தியம் என்று சரித்திர ஆசிரியர் கிப்சன் கேட்கிறார். மேலும், இதன் அடிப்படையில் பார்த்தால், இஸ்லாமின் பிறப்பிடம் மக்காவாக இருக்கமுடியாது என்று அவர் கருதுகிறார். இதற்காக அவர் கீழ்கண்ட ஆதாரத்தைத் தருகிறார்.
10. உண்மையான புனித நகரத்தில் திராட்சை பயிரிடப்பட்டு இருந்தது:
3045. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
. . . அல்லாஹ்வின் மீதாணையாக! அவர் ஒரு நாள் தம் கையிலிருந்ததிராட்சைக் குலை ஒன்றிலிருந்து (பழங்களை எடுத்து) உண்டு கொண்டிருக்கக் கண்டேன். அப்போது அவரின் கை இரும்புக் சங்கிலிகளால் கட்டப்பட்டு இருந்தது. மேலும், அப்போது மக்கா நகரில் பழம் (விளையும் பருவம்) எதுவும் இருக்கவில்லை. . . . (ஸஹீ புகாரி எண்: 3045)
இந்த ஹதீஸின் படி, புராதன புனித பூமியிலும், அதைச் சுற்றிலும் மரங்கள் இருந்ததாகவும், பழங்கள் விளைந்ததாகவும் பார்க்கிறோம். ஆனால், இன்று நாம் காணும் மக்காவில், இப்படிப்பட்ட விவசாயம் நடந்ததாக கற்பனை செய்து பார்ப்பதும் கடினமே!
இதன் மூலம் ஆசிரியர் சொல்லவருவது என்னவென்றால், இஸ்லாம் பிறந்த பூமியில், முஹம்மது வாழ்ந்த காலத்தில் விவசாயம் நடந்துள்ளது, திராட்சை பழங்கள் பயிரிடப்பட்டு இருந்துள்ளது. ஆனால், தொல்பொருள் ஆய்வின்படியும், மக்காவின் புவியியல் விவரங்களின் படியும், மக்காவில் திராட்சை பயிராகுதல் சாத்தியமில்லை. ஆனால், நாம் பெட்ராவை இஸ்லாமின் புனித பூமியாக கருதினால், மேற்கண்ட ஹதீஸ் சரியாக பொருந்துவதைக் காணமுடியும். எனவே, பெட்ரா தான் இஸ்லாமின் பிறப்பிடமாக கருதலாம் என்று ஆசிரியர் கிப்சன் கூறுகிறார். இவர் சொல்வதை அனைவரும் அப்படியே நம்பவேண்டிய அவசியமில்லை, இவர் முன்வைத்த ஆதாரங்களை ஆய்வு செய்து நாம் முடிவு செய்யலாம்.
நான் (உமர்) இந்த தலைப்பு பற்றி மேலதிக விவரங்களை குர்-ஆன் மற்றும் ஹதீஸ்களிலிருந்து சேகரித்து, கீழ்கண்ட தலைப்புகளில் வாசகர்களின் பரிசீலனைக்காகத் தருகிறேன். இஸ்லாமில் காணப்படும் ஆதாரங்களை கவனித்தால், மக்காவின் மீதுள்ள நம்முடைய சந்தேகம் இன்னும் வலுப்பெறுகிறது. முஸ்லிம்கள் இந்த ஆதாரங்களை ஆய்வு செய்து, தங்களின் பதிலை நம்முன் வைப்பார்கள் என்று எதிர்ப்பார்க்கிறேன்.
இக்கட்டுரையில் பதித்த அனைத்து குர்-ஆன் வசனங்களும் முஹம்மது ஜான் தமிழாக்கத்திலிருந்து எடுக்கப்பட்டதாகும்.
மக்காவின் கனிவகைகள்:
1) கனிகள் பற்றி குர்-ஆன் என்ன சொல்கிறது?
2) சோதிக்கமுடியாத விஷயங்களை சோதிக்கச் சொல்லும் அல்லாஹ்
3) தெளிக்காத இடத்தில் சேர்ப்பதென்றால், விதைக்காதவற்றை அறுப்பதென்றால் இது தானா?
4) மக்காவினருக்கு திராட்சை தோட்டங்கள் இருந்தனவா?
5) அத்தி எங்கே? ஒலிவம் எங்கே? ஸீனாய் எங்கே?
6) மக்காவின் திராட்சை அறுவடையின் பருவகாலம் எது?
முடிவுரை
1) கனிகள் பற்றி குர்-ஆன் என்ன சொல்கிறது?
குர்-ஆன் கீழ்கண்ட கனிவகைகள் பற்றி பேசுகிறது.
- திராட்சை
- மாதுளை
- ஒலிவம்
- அத்தி
- பேரிச்சை
- வாழை
வாழை: முஸ்லிம்களுக்கு சொர்க்கத்தில் வாழைப்பழம் கிடைக்கும் என்று அல்லாஹ் சொல்கிறான். சொர்க்கத்தில் முஸ்லிம்கள் குலை குலையாக தொங்கும் வாழை மரத்தின் கீழ் இளைப்பாறுவார்கள் என்று குர்-ஆன் சொல்கிறது:
குர்-ஆன் 56:29. (நுனி முதல் அடிவரை) குலை குலையாகப் பழங்களுடையவாழை மரத்தின் கீழும்;
இது மக்காவிற்கு சம்மந்தமில்லாத கனி என்பதால், நம் ஆய்விலிருந்து இதனை நீக்கிவிடுகிறோம்.
இதர கனிகள் பற்றி பேசும் குர்-ஆன் வசனங்கள்:
அதனைக் கொண்டே, (விவசாயப்) பயிர்களையும், ஒலிவம்(ஜைத்தூன்) மரத்தையும், பேரீத்த மரங்களையும், திராட்சைக் கொடிகளையும், இன்னும் எல்லாவகைக் கனிவர்க்கங்களிலிருந்தும் அவன் உங்களுக்காக விளைவிக்கிறான் - நிச்சயமாக இதில் சிந்திக்கும் மக்கள் கூட்டத்தாருக்கு(த் தக்க) அத்தாட்சி இருக்கிறது. (குர்-ஆன் 16:11)
அன்றியம், இறந்து (தரிசாகக்)கிடக்கும் பூமி அவர்களுக்கு ஓர் அத்தாட்சியாகும்; (பின்னர் மழையினால்) அதனை நாமே உயிர்ப்பித்து, அதிலிருந்து தானியத்தை வெளிப்படுத்துகின்றோம்; அதிலிருந்துதான் இவர்கள் உண்கிறார்கள். மேலும், அதில் நாம் பேரீத்த மரங்களினாலும், திராட்டசை(க் கொடி)களினாலும் தோட்டங்களை உண்டாக்குகிறோம்; இன்னும் அதில் நீரூற்றுக்களைப் பீறிட்டு ஓடச்செய்கின்றோம்.(குர்-ஆன் 36:33-34)
அவனே வானத்திலிருந்து மழையை இறக்கினான். அதைக் கொண்டு எல்லா வகையான புற்பூண்டுகளையும் நாம் வெளியாக்கினோம்; அதிலிருந்து பச்சை(த் தழை)களை வெளிப்படுத்துகிறோம்; அதிலிருந்து நாம் வித்துகளை அடர்த்தியான கதிர்களாக வெளிப்படுத்துகிறோம்; பேரீத்த மரத்தின் பாளையிலிருந்து வளைந்து தொங்கும் பழக்குலைகளும் இருக்கின்றன; திராட்சைத் தோட்டங்களையும், (பார்வைக்கு) ஒன்று போலவும் (சுவைக்கு) வெவ்வேறாகவும் உள்ள மாதுளை,ஜைத்தூன் (ஒலிவம்) ஆகியவற்றையும் (நாம் வெளிப்படுத்தியிருக்கிறோம்); அவை (பூத்துக்) காய்ப்பதையும், பின்னர் கனிந்து பழமாவதையும் நீங்கள் உற்று நோக்குவீர்களாக - ஈமான் கொள்ளும் மக்களுக்கு நிச்சயமாக இவற்றில் அத்தாட்சிகள் அமைந்துள்ளன. (குர்-ஆன் 6:99)
அத்தியின் மீதும், ஒலிவத்தின் (ஜைத்தூன்) மீதும் சத்தியமாக- (குர்-ஆன் 95:1)
மேலே தரப்பட்ட ஐந்து கனிகளில், பேரிச்சையைத் தவிர மீதமுள்ள நான்கு கனிகள் மக்காவில் பயிரிடப்படுவதில்லை.
2) சோதிக்கமுடியாத விஷயங்களை சோதிக்கச் சொல்லும் அல்லாஹ்
பல முறை முஸ்லிம்கள் இவ்வசனங்களை படித்து இருப்பார்கள், ஆனால், இந்த முறை இவைகளை படிக்கும் போது, மக்காவை தங்கள் மனதில் கற்பனை செய்துக் கொண்டு படிக்கும் படி கேட்டுக் கொள்கிறேன்.
அவனே வானத்திலிருந்து மழையை இறக்கினான். அதைக் கொண்டு எல்லா வகையான புற்பூண்டுகளையும் நாம் வெளியாக்கினோம்; அதிலிருந்து பச்சை(த் தழை)களை வெளிப்படுத்துகிறோம்; அதிலிருந்து நாம் வித்துகளை அடர்த்தியான கதிர்களாக வெளிப்படுத்துகிறோம்; பேரீத்த மரத்தின் பாளையிலிருந்து வளைந்து தொங்கும் பழக்குலைகளும் இருக்கின்றன; திராட்சைத் தோட்டங்களையும், (பார்வைக்கு) ஒன்று போலவும் (சுவைக்கு) வெவ்வேறாகவும் உள்ள மாதுளை,ஜைத்தூன் (ஒலிவம்) ஆகியவற்றையும் (நாம் வெளிப்படுத்தியிருக்கிறோம்);அவை (பூத்துக்) காய்ப்பதையும், பின்னர் கனிந்து பழமாவதையும் நீங்கள் உற்று நோக்குவீர்களாக - ஈமான் கொள்ளும் மக்களுக்கு நிச்சயமாக இவற்றில் அத்தாட்சிகள் அமைந்துள்ளன.(குர்-ஆன் 6:99)
நீர் பார்க்கவில்லையா? அல்லாஹ் வானத்திலிருந்து நீரை இறக்கி, அதனை பூமியில் ஊற்றுகளில் ஓடச் செய்கிறான்; அதன்பின், அதைக் கொண்டு வெவ்வேறு நிறங்களை உடைய பயிர்களை வெளிப்படுத்துகிறான். அப்பால், அது உலர்ந்து மஞ்சள் நிறமடைகிறதை நீர் பார்க்கிறீர்; பின்னர் அதைக் கூளமாகச் செய்து விடுகிறான் - நிச்சயமாக இதில் அறிவுடையோருக்குப் படிப்பினை இருக்கிறது. (குர்-ஆன் 39:21)
இவ்வசனங்களில் சொல்லப்பட்ட கனிகளும் இதர பயிர் வகைகளும் மக்காவில் பயிரிடப்படுவதில்லை. இந்த கனிகள் (பூத்துக்) காய்ப்பதையும், பின்னர் கனிந்து பழமாவதையும் பார்க்கவேண்டுமென்றால், முஹம்மது பக்கத்து நாட்டிற்குச் செல்லவேண்டும். அதாவது, முஹம்மது குறைந்தபட்சம் அரேபியாவின் வடக்கு பகுதியில் உள்ள ஜோர்டான் நாட்டிற்குச் சென்றால் மட்டுமே, மேலே குர்-ஆன் சொல்லும் விதமாக, பூக்களையும், அவைகள் கனிகளாக மாறுவதையும், மஞ்சல் நிறமாக மாறுவதையும் பார்க்கமுடியும். மேலும் ஒரே நாளில் குர்-ஆன் சொல்லும் கனிகளின் வளர்ச்சி பற்றிய அனைத்து நிலைகளையும் பார்க்கமுடியாது. பல நாட்கள் தொடர்ச்சியாக வேளாண்மை நடக்கும் இடத்தில் இருந்தால் மட்டுமே பார்க்கமுடியும்.
குர்-ஆன் 39:21ல், "நீர் பார்க்கவில்லையா?" என்று முஹம்மதுவிடம் ஒரு கேள்வியை அல்லாஹ் கேட்கிறான், அல்லது தினந்தோறும் முஹம்மது பொதுவாக பார்க்கும் விஷயத்தைத் தான் அல்லாஹ் குர்-ஆனில் சொல்லியுள்ளான் என்பதை இவ்வசனத்தின் மூலம் அறியலாம். இதே வசனத்தில் "நீர் பார்க்கிறீர்" என்றும் சொல்கிறான். இதே போல குர்-ஆன் 6:99ல், "நீங்கள் உற்று நோக்குவீர்களாக" என்று முஸ்லிம்களுக்கு அல்லாஹ் கட்டளையிடுகிறான். மக்காவில் நடைப்பெறாத நிகழ்வுகளை (கனிகளின் நிலைகளை) உற்று நோக்கும்படி ஏன் அல்லாஹ் சொல்கிறான்? இவ்வசனங்களை சரியாக புரிந்துக் கொண்டால், இவைகள் மக்காவில் அல்லாமல், நன்றாக கனிகள் பயிராகும் நாட்டில் அல்லாஹ் இறக்கியிருக்கவேண்டும் என்று தெரிகின்றது. எனவே, மக்காவின் மீது நமக்கு சந்தேகம் இன்னும் அதிகரிக்கிறது.
பொதுவாக, வேதங்களில் வரும் உரையாடல்களை கவனித்தால், அக்காலத்தில் கேட்கும் மக்களுக்கு புரிந்துக் கொள்ளும் வகையில் அவைகள் இருக்கும். உதாரணத்திற்கு, இயேசு கூறிய உவமைகளை எடுத்துக் கொண்டால், அக்காலத்தில் வாழ்ந்த ஒரு சராசரி யூதனுக்கு புரியும் வகையில் எடுத்துக் காட்டுக்கள் இருந்தன. இயேசுவின் நிலம் மற்றும் குத்தகை பற்றிய உவமைகள், திராட்சை தோட்டம், நல்ல மேய்ப்பன் போன்ற உவமைகள் அனைத்தும் அக்கால மக்கள் அனுதினமும் பார்க்கும் பொதுவான விவரங்களாகவே இருந்தன.
மாம்பழம் விளையாத நாட்டு மக்களிடம் வந்து "ஒரு பூவிலிருந்து மாம்பழம் எப்படி வளருகின்றது என்று நீங்கள் பார்க்கவில்லையா?" என்று சொன்னால், அவர்கள் "ஆம், நாங்கள் பார்க்கவில்லை" என்று தான் சொல்வார்கள்.
மக்காவில் விளையாத கனிகள் பற்றி "அவைகள் எப்படி வளருகின்றன என்பதை பாருங்கள்?" என்று அல்லாஹ் ஏன் கூறுகின்றான்? இதற்கான பதில் மிகவும் சுலபமானதாகும். உண்மையில், இவ்வசனங்கள் வறட்சி பிரதேசமான மக்காவில் அல்ல, அதற்கு பதிலாக, கனிகள் விளையும் பெட்ராவில் இறக்கப்பட்டு இருந்திருக்கவேண்டும். அப்போது தான் ஒவ்வொரு வசனத்தை முஹம்மது செல்லும் போதும் மக்கள் அதனை சரியாக புரிந்துக் கொண்டு இருந்திருப்பார்கள். அனுதினமும் தாங்கள் வயல்வெளிகளில் தோட்டங்களில் காணும் விவரத்தைத் தான் அல்லாஹ் சொல்கிறான் என்று புரிந்துக் கொண்டு இருந்திருப்பார்கள். இன்றுள்ள மக்காவில் இவ்வசனங்கள் இறங்கியிருந்தால், முஸ்லிம்கள் ஒருவரின் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டு, நாம் வாழும் இடத்தில் இல்லாத ஒன்றை எப்படி அல்லாஹ் உற்று நோக்கும்படி சொல்கிறான் என்று கேள்வி கேட்டு இருந்திருப்பார்கள்.
மக்கீ வசனங்கள்:
ஸூரா 6 மற்றும் 39, இவை இரண்டும் மக்கீ ஸூராக்கள் ஆகும், அதாவது முஹம்மது மக்காவில் இஸ்லாமை போதனை செய்துக் கொண்டு இருந்தபோது அல்லாஹ் இறக்கிய அத்தியாய வசனங்களாகும், எனவே, இவ்வசனங்களில் மக்காவினரிடம் தான் அல்லாஹ் பேசிக்கொண்டு இருக்கிறான் என்பதை அறிந்துக் கொள்ளமுடியும். மேலும் இக்கட்டுரையின் ஆரம்பத்தில் கனிகள் பற்றிய வசனங்களை மேற்கோள் காட்டினோம். அவைகள் ஸூராக்கள் 16, 17, 36 ஆகும். இவைகளும் மக்கீ ஸூராக்கள் தான். சில இஸ்லாமிய அறிஞர்களுக்கு 16வது ஸூரா மக்கீயா அல்லது மதனியா என்று சந்தேகம் உண்டு.
3) தெளிக்காத இடத்தில் சேர்ப்பதென்றால், விதைக்காதவற்றை அறுப்பதென்றால் இது தானா?
மக்காவின் மீதுள்ள சந்தேகத்தின் உச்சக்கட்டம் இது!
இப்போது ஒரு முக்கியமான வசனத்தைக் காண்போம். மக்காவின் மீதுள்ள நம் சந்தேகத்தை இவ்வசனம் உறுதிச் செய்கிறது.
பந்தல்களில் படரவிடப்பட்ட கொடிகளும், படரவிடப்படாத செடிகளும், பேரீத்த மரங்களும் உள்ள சோலைகளையும், புசிக்கத்தக்க விதவிதமான காய், கறி, தானியங்களையும், ஒன்றுபோலும் வெவ்வேறாகவும் தோற்றமளிக்கும் ஜைத்தூன் (ஒலிவம்) மாதுளை ஆகியவற்றையும், அவனே படைத்தான். ஆகவே அவை பலனளித்தால் அவற்றின் பலனிலிருந்து புசியுங்கள். அவற்றை அறுவடை செய்யும் காலத்தில் அதற்குரிய (கடமையான) பாகத்தைக் கொடுத்து விடுங்கள். வீண் விரயம் செய்யாதீர்கள்- நிச்சயமாக அவன் (அல்லாஹ்) வீண் விரயம் செய்பவர்களை நேசிப்பதில்லை. (குர்-ஆன் 6:141)
மக்காவின் தட்பவெப்ப நிலையின் படி, பேரீச்சம் தவிர வேறு கனிவகைகள் விளைவதில்லை என்பதை நாம் அறிவோம். ஆனால், இவ்வசனத்தில் "படரவிடப்பட்ட கொடிகள், படரவிடப்படாத செடிகள், பேரிச்சை தோட்டங்கள், புசிக்கும் காய் கறி தானியங்கள், ஒலிவம் மற்றும் மாதுளை" போன்றவைகள் நன்றாக விளையும் போது இவைகளிலிருந்து ஸகாத் என்னும் கடமையை செலுத்துங்கள் என்று அல்லாஹ் கட்டளையிடுகின்றான். இந்த வசனம் மக்கா மக்களுக்கு இறக்கப்பட்ட நாளில் அவர்கள் நன்றாக சிரித்து இருந்திருப்பார்கள், ஏனென்றால், 'அல்லாஹ் சொல்லிய கனிகளில், தானிய வகைகளில், பேரிச்சம் தவிர வேறு எந்த ஒரு கனியும் விளையாத எங்களிடம், எப்படி அல்லாஹ் ஜகாத் கேட்கிறார்?" என்று கேள்வி எழுப்பியிருப்பார்கள்.
ஆனால், இதே வசனத்தை, பெட்ரா நகரத்தில் உள்ள குறைஷி மக்களுக்கு இறக்கப்பட்டு இருந்திருந்தால், இவ்வசனம் அம்மக்களுக்கு சரியாக பொருந்தும், மேலும் இதன் பொருளை அவர்கள் சரியாக புரிந்துக் கொண்டு இருந்திருப்பார்கள்.
வாசகர்களே! இவ்வசனம் மக்காவின் புவியியலுக்கு பொருந்தாமல் எப்படி மாட்டிக்கொண்டு தவிக்கிறது என்பதையும், பெட்ராவின் புவியியலுக்கு எப்படி இவ்வசனம் பொருந்துகிறது என்பதையும் கவனிக்க முடிகின்றதா?
"உங்கள் அறுவடைகளாகிய திராட்சைகள், மாதுளைகள், ஒலிவம் மற்றும் இதர கனிகளிலிருந்து ஜகாத்தை கொடுங்கள் என்று அல்லாஹ் மக்கா முஸ்லிம்களிடம் கேட்பது எப்படி இருக்கின்றதென்றால், தமிழ் நாட்டு மக்களிடம் அரசாங்கம் வந்து 'உங்கள் வயல்களில் அபரிதமாக விளைந்துள்ள கிவி பழத்திற்கான வரியை செலுத்துங்கள்" என்று சொல்வது போல இருக்கிறது. தமிழ் நாட்டில் கிவி பழம் விளையுமா? அதனை தமிழ் மக்கள் அறுவடை செய்யமுடியுமா? ஒரு பாமரன் கூட இப்படி கேட்கமாட்டான்.
மக்காவினரைப் பார்த்து, உங்கள் பேரிச்சை பழ தோட்டங்களின் அறுவடையிலிருந்து ஜகாத் கொடுங்கள் என்றுச் சொல்வது நியாயமானதாக இருக்கும், ஆனால், மேற்கண்ட குர்-ஆன் வசனம் சொல்வது மக்காவிற்கு 100% பொருந்தாது. கனிகள் மக்காவில் விளைந்தால் தானே அறுவடை செய்வதற்கு, அறுவடை செய்தால் தானே ஜகாத் கொடுப்பதற்கு? அஸ்திபாரமே ஆட்டம் காணும்போது, மாளிகை எப்படி நிலைத்து நிற்கும்?
இந்த வசனத்தை இறக்கும் போது முஹம்மது மக்காவில் தான் இருக்கிறார் என்று அல்லாஹ்விற்குத் தெரியாதா? தெளிக்காதவற்றை எப்படி சேகரிக்கச் சொல்கிறார்? விதைக்காத ஒன்றை எப்படி அறுவடை செய்யச் சொல்கிறார்? மக்காவில் விளையாதவற்றின் மீது வரி கேட்பது அறிவுடமையா? உண்மையில், இந்த குர்-ஆன் வசனம் மக்காவில் அல்லாமல், பெட்ரா போன்ற வளமான வேளாண்மையுள்ள நகரில், திராட்சையும், மாதுளையும், ஒலிவமும், இதர தானிய வகைகளும் அபரிதமாக விளைகின்ற நகரில் இறக்கப்பட்டு இருந்திருக்கவேண்டும். இவ்வசனத்திற்கு இவ்விளக்கம் அல்லாமல், வேறு விளக்கத்தை முஸ்லிம்கள் தர முன்வந்தால், நன்றாக இருக்கும்.
4) மக்காவினருக்கு திராட்சை தோட்டங்கள் இருந்தனவா?
இப்போது இன்னொரு உதாரணத்தைப் பார்ப்போம். கீழ்கண்ட வசனங்களை உற்று நோக்குங்கள். மக்காவினருக்கு திராட்சை தோட்டங்களை உண்டாக்கியிருப்பதாக அல்லாஹ் இங்கு சொல்கிறான். பலவகையான கனிகளை இம்மக்கள் புசிக்கிறார்கள் என்று நிகழ்காலத்தில் சொல்கிறான்.
23:19. அதனைக் கொண்டு, நாம் உங்களுக்கு பேரீச்சை திராட்சை தோட்டங்களை உண்டாக்கியிருக்கின்றோம்; அவற்றில் உங்களுக்கு ஏராளமான கனிவகைகள் இருக்கின்றன; அவற்றிலிருந்து நீங்கள் புசிக்கின்றீர்கள்.
23:20. இன்னும் தூர் ஸினாய் மலைக்கருகே உற்பத்தியாகும் மரத்தையும் (உங்களுக்காக நாம் உண்டாக்கினோம்) அது எண்ணெயை உற்பத்தி செய்கிறது. மேலும் (ரொட்டி போன்றவற்றை) சாப்பிடுவோருக்கு தொட்டு சாப்பிடும் பொருளாகவும் (அது அமைந்துள்ளது).(குர்-ஆன் 23:19,20)
மக்காவில் திராட்சை தோட்டங்களை யார் வைத்திருந்தார்கள்? மக்காவில் திராட்சை தோட்டங்களையும், இதர கனிவகைகள் விளையும் தோட்டங்களையும் வைத்து வேளாண்மை செய்யும் அளவிற்கு, அதன் தட்பவெட்ப நிலை அனுமதிக்குமா? இவ்வசனங்களில் அல்லாஹ் பொதுவாக சொல்கிறாரா அல்லது மக்கா மக்களுக்குச் சொல்கிறாரா என்பதை அறிய இப்னு கதீர் அவர்களின் விரிவுரையை படித்தேன், அதில் இந்த விவரங்களில் அல்லாஹ் குறிப்பிடுவது மக்காவினரைத் தான் என்று சொல்லப்பட்டுள்ளது:
(of date palms and grapes,) These were the kinds of gardens that were known to the people of the Hijaz, but there is no difference between a thing and its counterpart. The people of each region have fruits which are the blessing of Allah given to them, and for which they cannot properly thank Allah enough. (source: http://www.qtafsir.com/index.php?option=com_content&task=view&id=2479&Itemid=78)
இந்த வசனம் தற்போதைய மக்காவில் இறக்கப்பட்டு இருக்கமுடியாது, திராட்சை தோட்டங்களையும், இதர கனிவகை தோட்டங்களையும் அமைத்து வேளாண்மைச் செய்யும் மக்களுக்குத் தான் இறங்கி இருக்கமுடியும்! இதில் சந்தேகமில்லை. மேலும், மக்காவிற்கு ஆயிரத்திற்கும் அதிகமான கிலோமீட்டருக்கு அப்பால் இருக்கும் ஸீனாய் மலையைப் பற்றி மக்காவினரிடம் ஏன் அல்லாஹ் பேசுகின்றான்? ஸீனாய் மலையில் ஒலிவம் விளைந்தால், வறட்சி பிரதேசமான மக்காவில் வாழும் முஸ்லிம்களுக்கு என்ன பயன்? இந்த மலைக்கு அருகாமையில் வாழும் மக்களுக்குத் தான் அதன் முழு பயமும் கிடைக்கும். இவ்வசனத்தை (23:20) பார்த்தால், மக்காவினருக்கு அருகாமையில் ஸீனாய் மலை இருப்பதாகவும், அதில் விளையும் ஒலிவத்தினால் மக்காவினருக்கு எண்ணையாகவும், சாப்பிடுவதற்கு உபயோகமானதாகவும் ஒலிவம் இருப்பதாக தெரிகின்றது.
முஹம்மது ஜான் குர்-ஆன் தமிழாக்கத்தில் அடைப்பு குறிக்குள் (உங்களுக்காக நாம் உண்டாக்கினோம்) என்று எழுதியுள்ளார். வசனம் சொல்லப்பட்ட சூழலைப் பார்த்தால், மக்காவினருக்காகத் தான் அல்லாஹ் இவைகள் அனைத்தையும் படைத்ததாக சொல்லிக் கொண்டு வருகிறான்.
இது உண்மையானால், இவ்வசனங்கள் ஸீனாய் மலைக்கு அருகாமையில் உள்ள நாடு அல்லது நகரத்தில் இறக்கப்பட்டு இருக்கவேண்டும். ஸீனாய்க்கு அருகாமையில் இருக்கும் நாடு எது? நகரம் எது? அது தான் தற்போது ஜோர்டான் நாட்டிலுள்ள பெட்ரா நகரம்.
5) அத்தி எங்கே? ஒலிவம் எங்கே? ஸீனாய் எங்கே?
கீழ்கண்ட வசனங்களை கவனியுங்கள், அல்லாஹ் சத்தியம் செய்யும் விதத்தையும், புவியியல் விவரங்களையும் பாருங்கள்:
95:1. அத்தியின் மீதும், ஒலிவத்தின் (ஜைத்தூன்) மீதும் சத்தியமாக-
95:2. "ஸினாய்" மலையின் மீதும் சத்தியமாக-
95:3. மேலும் அபயமளிக்கும் இந்த (மக்கமா) நகரத்தின் மீதும் சத்தியமாக-
அத்தி மக்காவில் விளைவதில்லை, ஆனால் பெட்ராவில் விளைகிறது.
ஒலிவம் மக்காவில் விளைவதில்லை, ஆனால், பெட்ராவில் விளைகிறது.
ஸீனாய் மலை மக்காவில் இல்லை, ஆனால், ஜோர்டானில் உள்ளது.
அப்படியானால், அபயமளிக்கும் நகரம் நிச்சயமாக இவைகள் அனைத்தும் இருக்கும் இடத்தில் தான் இருக்கவேண்டும் என்று தெரிகின்றது. குர்-ஆனின் புவியியல் விவரங்கள் மற்றும் கனிகள் பற்றிய வசனங்கள் அனைத்தும் அரேபியாவின் வடக்கு நோக்கியே விரல்களை நீட்டுகின்றன.
6) மக்காவின் திராட்சை அறுவடையின் பருவகாலம் எது?
கடைசியாக, சரித்திர ஆசிரியர் கிப்சன் அவர்கள் மேற்கோள்காட்டிய ஹதீஸுக்கு வருவோம்.
இந்த ஹதீஸை நான் புகாரியில் மூன்று எண்களில் கண்டேன். இதன் படி, மக்காவில் திராட்சை அறுவடைக்கென்று ஒரு காலம் இருந்துள்ளது என்று தெரியவருகிறது.
நம் தமிழ் முஸ்லிம் அறிஞர்களிடம் கேட்கவிரும்பும் கேள்வி இதுதான்:
மக்காவில் திராட்சை கனியின் அறுவடை காலம் பற்றி நீங்கள் கேள்விப்பட்டதுண்டா? "மக்காவில், திராட்சை வேளாண்மை நடந்ததில்லை" என்பது உங்கள் பதிலாக இருந்தால், கீழ்கண்ட நிகழ்ச்சி எங்கு நடந்திருக்கும் என்று உங்களால் சொல்லமுடியுமா?
இந்த ஹதீஸில் வரும் அடிமை, உலர்ந்த திராட்சைகளை அல்ல, உலராத திராட்சைகளை உண்டுக் கொண்டு இருந்தார், மேலும் அந்த சமயம் திராட்சையின் அறுவடைக் காலம் அல்ல என்றும் இந்த ஹதீஸ்கள் தெளிவாக கூறுகின்றன என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.
புகாரி 3045. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
அல்லாஹ்வின் மீதாணையாக! குபைப் அவர்களை விடச் சிறந்த ஒரு கைதியை நான் ஒருபோதும் பார்த்ததில்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! அவர் ஒரு நாள் தம் கையிலிருந்த திராட்சைக் குலை ஒன்றிலிருந்து (பழங்களை எடுத்து) உண்டு கொண்டிருக்கக் கண்டேன். அப்போது அவரின் கை இரும்புக் சங்கிலிகளால் கட்டப்பட்டு இருந்தது. மேலும், அப்போது மக்கா நகரில் பழம் (விளையும் பருவம்) எதுவும் இருக்கவில்லை. . . .
புகாரி 3989. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
. . .'குபைபை விடச் சிறந்த ஒரு கைதியை நான் (என் வாழ்நாளில்) ஒருபோதும் கண்டதில்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! ஒரு நாள் திராட்சைப் பழக் குலையொன்றை தம் கையில் வைத்து அவர் சாப்பிட்டுக கொண்டிருப்பதை பார்த்தேன். அப்போது அவர் இரும்புச் சங்கிலியால் பிணைக்கப்பட்டிருந்தார்.(அந்தப் பருவத்தில்) மக்காவில் எந்தப் பழங்களும் இருக்கவில்லை. 'அது குபைபுக்கு அல்லாஹ் வழங்கிய உணவு" என்று அந்தப் பெண் கூறி வந்தார்.. . .
புகாரி 4086. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
குபைபை விடச் சிறந்த ஒரு கைதியை நான் (என் வாழ்நாளில்) கண்டதில்லை. ஒரு நாள் அவர் தம் கையிலிருந்த திராட்சைப் பழக் குலையிலிருந்து (பழங்களைப் பறித்து) சாப்பிட்டுக் கொண்டிருக்கக் கண்டேன். அந்நாளில் மக்காவில் எந்தப் பழவகையும் இருக்கவில்லை. மேலும், அப்போது அவர் இரும்புச் சங்கிலியால் பிணைக்கப்பட்டிருந்தார். (பிற்காலத்தில் அந்த நிகழ்ச்சியை நினைவு கூர்ந்து)" அது குபைபுக்கு அல்லாஹ் வழங்கிய உணவு" என்று அந்தப் பெண் கூறிவந்தார்.
இஸ்லாமின் புனித பூமி மக்கா தான் என்று நம்பும் முஸ்லிம்கள் மக்காவின் திராட்சை அறுவடைக்காலம் எது என்றுச் சொல்லவேண்டும்.
இந்த ஹதீஸில் சொல்லப்பட்ட இடம் நிச்சயமாக மக்காவாக இருக்கமுடியாது, இது பெட்ராவாகத்தான் இருக்கவேண்டும்.
முடிவுரை:
இதுவரை மக்காவின் திராட்சை மற்றும் இதர கனிவகைகளின் அறுவடை என்ற தலைப்பில் பல குர்-ஆன் வசனங்களைக் கண்டோம், சில ஹதீஸ்களையும் கண்டோம். இவைகள் அனைத்தும் மக்கா இஸ்லாமின் புனித பூமியாக இருக்கமுடியாது என்பதைச் சொல்கின்றன. இஸ்லாமின் புனித பூமியாக பெட்ரா இருக்க பல சாத்தியக்கூறுகள் தென்படுகின்றன.
இந்த கட்டுரையில் மேற்கோள் காட்டப்பட்ட அனைத்து குர்-ஆன் வசனங்களையும், ஹதீஸ்களையும் ஆய்வை செய்யும் படி முஸ்லிம்களை கேட்டுக் கொள்கிறேன். இஸ்லாமையும் மக்காவையும் வேறு பிரித்து பார்க்க எனக்கும் விருப்பமில்லை தான், ஆனால், இஸ்லாமிய ஆதாரங்கள் என்னைப் பார்த்து "நீ விருப்பம் கொள்" என்றுச் சொல்வதாக தெரிகின்றது.
நாம் அடுத்த மக்காவின் பிரச்சனையில் சந்திப்போம்.
இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல - தொடர் கட்டுரைகள்:
- மக்காவின் பிரச்சனைகள்: அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல!
- மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்?
- மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா?
- மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் "மக்காவின்" பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை?
- மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை
- மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா? (அ) பொடிக்குன்றுகளா?
மக்காவின் பிரச்சனைகள் பற்றிய கட்டுரைகள்
Source: http://www.answering-islam.org/tamil/authors/umar/mecca_petra/mecca_problem_6.html
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக