குர்ஆனின்/முஹம்மதுவின் இன்னா நாற்பது - பாகம் 1
நம்மில் அனேகருக்கு "இன்னா நாற்பது" என்ற தமிழ் நூல் பற்றி தெரிந்திருக்கும். இந்நூல் பற்றிய ஒரு சிறு குறிப்பை விக்கிபீடியாவிலிருந்து பார்ப்போம், அதன் பிறகு "குர்ஆன் மற்றும் முஹம்மதுவின் இன்னா நாற்பது" பற்றி ஆய்வு செய்வோம்.
இன்னா நாற்பது விக்கிபீடியா அறிமுகம்:
இன்னா நாற்பது என்னும் நூல் கபிலர் என்னும் புலவரால் இயற்றப்பட்டது. நாற்பத்தொரு பாடல்களைக் கொண்ட இது பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் என அழைக்கப்படும் சங்கம் மருவிய காலத் தமிழ் நூற்றொகுதியுள் அடங்குவது. உலகத்தில் கூடாதவை என்னென்ன என்பது பற்றிக் கூறி நீதி உரைப்பது இந்நூல். இது கி. பி. நான்காம் நூற்றாண்டைச் சார்ந்த நூலாகும்.
எடுத்துக்காட்டு
அறிவிற் சிறந்தவர்கள் வீற்றிருக்கின்ற சபையிலே அறிவில்லாத ஒருவன் புகுவது துன்பத்தைத் தரும். இருட்டிய பின்னர் வழியிற் செல்வது பெரிதும் துன்பம் விளைவிக்கும். விளையக் கூடிய துன்பங்களைத் தாங்கக் கூடிய ஆற்றல் இல்லாதவர்களுக்குத் தவம் துன்பம் தரும். தன்னைப் பெற்ற அன்னையைப் பேணிக் காப்பாற்றாமல் விடுவதும் துன்பமாகும் என்று மனித வாழ்வில் துன்பத்துக்குரிய நான்கு விடயங்களைக் கூறி நீதி புகட்டும் கீழ்க்காணும் பாடல் இந் நூலில் வருகிறது.
ஆன்றவித்த சான்றோருட் பேதை புகலின்னா
மான்றிருண்ட போழ்தின் வழங்கல் பெரிதின்னா
நோன்றவிந்து வாழாதார் நோன்பின்னா வாங்கின்னா
ஈன்றாளை யோம்பா விடல்.
குர்ஆனின்/முஹம்மதுவின் இன்னா நாற்பது - பாகம் 1 (1 to 4)
"இன்னா" என்றால், செய்யக்கூடாதவை அல்லது தீமை விளைவிக்ககூடிய தவறான செயல்கள் என்று பொருள்.
சமுதாயத்தின் பார்வையில் குர்ஆனின் கட்டளைகள் மற்றும் முஹம்மதுவின் செயல்கள் எப்படி 'இன்னா செயல்களாக, மக்களுக்கும், சமுதாயத்திற்கும் தீமை விளைவிக்கக்கூடிய செயல்களாக' இருக்கின்றன என்பதை இந்த தொடர் கட்டுரைகளில் காண்போம்.
- குர்ஆனின் இன்னா 1: குர்ஆனின் முபாஹலாயின்னா (சாபம் கொடுப்பது இன்னா)
- குர்ஆனின் இன்னா 2: மணமுடித்த மனைவியை அடித்தலின்னா
- குர்ஆனின் இன்னா 3: திருடர்களின் கைகளை வெட்டுதலின்னா
- குர்ஆனின் இன்னா 4: கட்டளைகளை மீறியதால், குரங்குகளாக & பன்றிகளாக மாற்றுதல் இன்னா
குர்ஆனின் இன்னா 1: குர்ஆனின் முபாஹலாயின்னா (சாபம் கொடுப்பது இன்னா)
ஆசீர்வாதம் மற்றும் சாபம் இவ்விரண்டும் எதிர் துருவங்கள்.
"ஒருவர் நன்றாக இருக்கவேண்டும்" என்று இறைவனிடம் வேண்டிக்கொள்வதும், அல்லது நேரடியாக ஒரு நபரிடம் "நீங்கள் நன்றாக இருக்கவேண்டும்" என்று சொல்வதும் ஒரு நல்ல செயல் ஆகும். "ஒருவர் அழிந்துவிடவேண்டும், மரித்துவிடவேண்டும், அவருக்கு தீமை நடக்கவேண்டும்" என்று இறைவனிடம் வேண்டிக்கொள்வதும், அல்லது ஒருவரைப் பார்த்து 'நீ நன்றாக இருக்கமாட்டாய்' என்றுச் சொல்வதும் ஒரு தீயச்செயல் ஆகும்.
முஹம்மதுவின் படி சபித்தல் ஹலால் செயலாகும்:
இஸ்லாமிய நபியாகிய முஹம்மதுவின் படியும், குர்ஆனின் படியும், மற்றவர்கள் மீது சாபம் கூறுவது, அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும் என்று பிரார்த்தனை செய்வது என்பது ஒரு ஹலால் (நல்ல) செயலாகும். அதாவது இஸ்லாமில் அனுமதிக்கப்பட்ட செயலாக "மற்றவர்களை சபித்தல்" உள்ளது.
முபாஹலா என்ற சாப பிரார்த்தனை:
அல்லாஹ் முஹம்மதுவிற்கு முபாஹலா செய்ய கட்டளையிடுகின்றான். பார்க்க குர்ஆன் 3:61
3:61. (நபியே!) இதுபற்றிய முழு விபரமும் உமக்கு வந்து சேர்ந்த பின்னரும் எவரேனும் ஒருவர் உம்மிடம் இதைக் குறித்து தர்க்கம் செய்தால்: "வாருங்கள்! எங்கள் புதல்வர்களையும், உங்கள் புதல்வர்களையும்; எங்கள் பெண்களையும், உங்கள் பெண்களையும்; எங்களையும் உங்களையும் அழைத்து (ஒன்று திரட்டி வைத்துக் கொண்டு) "பொய்யர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்" என்று நாம் பிரார்த்திப்போம்!" என நீர் கூறும். (டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்)
3:61. (நபியே!) இதைப்பற்றி உங்களுக்கு உண்மையான விவரம் கிடைத்த பின்னரும், உங்களிடம் எவரும் தர்க்கித்தால் (அவர்களுக்கு) நீங்கள் கூறுங்கள்: "வாருங்கள் எங்களுடைய பிள்ளைகளையும், உங்களுடைய பிள்ளைகளையும், எங்களுடைய பெண்களையும், உங்களுடைய பெண்களையும், எங்களையும், உங்களையும் அழைத்து (ஒன்று சேர்த்து) வைத்துக்கொண்டு (ஒவ்வொருவரும் நாம் கூறுவதுதான் உண்மையென) சத்தியம் செய்து (இதற்கு மாறாகக் கூறும்) பொய்யர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாவதாக! என பிரார்த்திப்போம்" (என்று கூறும்படி கட்டளையிட்டான். இவ்வாறு நபியவர்கள் அழைத்த சமயத்தில் ஒருவருமே இவ்வாறு சத்தியம் செய்ய முன்வரவில்லை.) (அப்துல் ஹமீது பாகவி தமிழாக்கம்)
இந்த இன்னா செயல்களை "முஸ்லிம்கள் தங்களுக்கு இடையேயும் செய்கிறார்கள்" என்பது வேதனைகுரிய செயலாகும். ஒருவரை சபிப்பது எப்படி இனிய செயலாக இருக்கும்? இது குர்ஆனின் "இன்னா செயலாகும்", சமுதாயத்திற்கு தீமை விளைவிக்கும் செயலாகும்.
குர்ஆனில் காணப்படும் இந்த "இன்னா" செயல் பற்றிய மேலதிக விவரங்களை அறிய கீழ்கண்ட கட்டுரையை படிக்கவும்.
குர்ஆனின் இன்னா 2: மணமுடித்த மனைவியை அடித்தலின்னா
ஒரு முஸ்லிம் தன் மனைவியை அடிக்க குர்ஆன் ஆண்களுக்கு அனுமதி அளிக்கிறது. பொதுவாகவே ஞானமில்லாத பெரும்பான்மையான ஆண்கள் பெண்கள் மீது ஆதிக்கம் செலுத்துவார்கள், அதிலும் தன் இறைவேதம் அதற்கு அனுமதி அளிக்கும் போது, சொல்லவா வேண்டும்?
குர்ஆன் 4:34. (ஆண், பெண் இருபாலாரில்) அல்லாஹ் சிலரை சிலரைவிட மேன்மைப்படுத்தி வைத்திருக்கிறான். (ஆண்கள்) தங்கள் சொத்துகளிலிருந்து (பெண் பாலாருக்காகச்) செலவு செய்து வருவதினாலும், ஆண்கள் பெண்களை நிர்வகிக்க வேண்டியவர்களாக இருக்கின்றனர். எனவே நல்லொழுக்கமுடைய பெண்டிர் (தங்கள் கணவன்மார்களிடம்) விசுவாசமாகவும், பணிந்தும் நடப்பார்கள். (தங்கள் கணவன்மார்கள்) இல்லாத சமயத்தில், பாதுகாக்கப்பட வேண்டியவற்றை, அல்லாஹ்வின் பாதுகாவல் கொண்டு, பாதுகாத்துக் கொள்வார்கள்; எந்தப் பெண்கள் விஷயத்தில் - அவர்கள் (தம் கணவருக்கு) மாறு செய்வார்களென்று நீங்கள் அஞ்சுகிறீர்களோ, அவர்களுக்கு நல்லுபதேசம் செய்யுங்கள்; (அதிலும் திருந்தாவிட்டால்) அவர்களைப் படுக்கையிலிருந்து விலக்கிவிடுங்கள்; (அதிலும் திருந்தாவிட்டால்) அவர்களை (இலேசாக) அடியுங்கள். அவர்கள் உங்களுக்கு வழிப்பட்டுவிட்டால், அவர்களுக்கு எதிராக எந்த வழியையும் தேடாதீர்கள் - நிச்சயமாக அல்லாஹ் மிக உயர்ந்தவனாகவும், வல்லமை உடையவனாகவும் இருக்கின்றான்.
குர்ஆனின் இந்த "இன்னா செயலை" எப்படி முஹம்மதுவும் சஹாபாக்களும் பின்பற்றினார்கள் என்பதை அறிய கீழ்கண்ட கட்டுரையின் கேள்விகள் 287, 288, 289, 290 & 293 ஐ படிக்கவும்.
- கேள்வி 287: முஹம்மது தம் மனைவியை அடித்துள்ளாரா?
- கேள்வி 288: சஹாபாக்கள் தம் மனைவிகளை அடித்துள்ளார்களா? முஹம்மது இதற்கு அனுமதி அளித்தாரா?
- கேள்வி 289: ஒரு முஸ்லிம் ஆணிடம் அவன் ஏன் தன் மனைவியை அடித்தான் என்று கேட்கக்கூடாது என்று முஹம்மது கூறியுள்ளாரா?
- கேள்வி 290: மனைவியை முகத்தில் அறையக்கூடாது என்று ஆண்களுக்கு இஸ்லாம் கட்டளையிடுகிறது, மிகப்பெரிய வரப்பிரசாதம் அல்லவா? அல்லாஹ்வின் அருள் அல்லவா?
- கேள்வி 293: மனைவியை அடிப்பதாக யோபு (பழைய ஏற்பாட்டு பக்தன்) அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்தாரா?
எனவே, மனைவியை அடிக்க குர்ஆன் முஸ்லிம் ஆண்களுக்கு அனுமதி கொடுத்திருப்பது இன்னா செயலாகும், இது சமுதாயத்திற்கு முக்கியமாக பெண்களுக்கு தீங்கு விளைவிக்கும் செயலாகும். இதனால் பல குடும்பங்கள் அழிந்து, குடும்ப நிம்மதி கெடும்.
எனக்குத் தெரிந்தவரை உலகத்தின் எந்த ஒரு மதத்தின் வேதத்திலும் சரி, 'மனைவியை அடிக்கச் சொல்லி இறைவன் கட்டளை கொடுத்திருப்பது குர்ஆனில் மட்டுமே' காணமுடியும், இது ஒரு சாதனையே!
குர்ஆனின் இன்னா 3: திருடர்களின் கைகளை வெட்டுதலின்னா
அல்லாஹ்வின் கட்டளையின் படி, திருடியவர்களுக்கு தண்டனையாக அவர்களின் கைகளை வெட்டிவிடவேண்டும்.
குர்ஆன் 5:38. திருடனோ திருடியோ அவர்கள் சம்பாதித்த பாவத்திற்கு, அல்லாஹ்விடமிருந்துள்ள தண்டனையாக அவர்களின் கரங்களைத் தரித்து விடுங்கள். அல்லாஹ் மிகைத்தவனும், ஞானம் மிக்கோனுமாக இருக்கின்றான்.
குர்ஆன் திருடனை சமுதாயத்திற்கு பாரமாக மாற்றுகிறது
திருடர்களின் கைகளை வெட்டிவிட்டால், அதன் பிறகு அவர்கள் வாழ்நாள் முழுவதும், ஊனமுற்றவர்களாக தன் குடும்பத்துக்கும், சமுதாயத்திற்கும் பாரமாக மாறிவிடுகிறார்கள். அவர்கள் மனந்திரும்பி, இனி திருடப்போவதில்லை என்று முடிவு எடுத்தாலும், அவர்களால் நல்ல மனிதர்களாக மாறி சமுதாயத்திற்கு மிகவும் பயனுள்ள குடிமக்களாக வாழ வாய்ப்பு இல்லாமல் போய்விடுகிறது.
இதற்கு யார் காரணம்? குர்ஆனும் அல்லாஹ்வின் கட்டளையும் தான்.
பொருட்சேதத்திற்கு சரீர உறுப்புகளை வெட்டுவது நியாயமற்ற செயலாகும்
பொதுவாக நீதி செலுத்துவதில், தண்டனை கொடுப்பதில் ஒரு 'நியாயம்' இருக்கவேண்டும். கொலை செய்வது என்பது வேறு, பொருட்களை திருடுவது என்பது வேறு. ஒருவரிடமிருந்து பொருட்களை/பணத்தை திருடினால், அதற்கு தண்டனையாக 'திருடிய அனைத்து பொருட்களையும் தரவேண்டும், அதோடு கூட கூடுதலாக இன்னும் அதிக பொருட்களை கொடுக்கவேண்டும்'.
சிலவேளைகளில் திருடப்பட்ட பொருட்களின் அளவிற்கு ஏற்ப, சிறைச்சாலையிலும் சில மாதங்கள், சில ஆண்டுகள் அடைக்கலாம். ஆனால், பொருட்களை திருடியதற்கு தண்டனையாக 'தூக்கு தண்டனை கொடுப்பதும், கைகளை வெட்டுவதும்' மிகவும் அநியாயமான செயலாகும். மனந்திரும்பினாலும் வாழ்க்கையை இழந்துவிட்டதால், வாழ்நாள் முழுவதும் தண்டனை அனுபவிப்பது உண்மையான இறைவனின் செயல் அல்ல. மனிதன் அடிக்கடி மாறுபவன். நாம் எத்தனை முறை தவறுகள் செய்திருப்போம், அதன் பிறகு மனந்திரும்பி அந்த தவறுகளை செய்யாமல் இருந்திருப்போம்.
மனிதனுக்கு திருந்துவதற்கு வாய்ப்புக்கள் கொடுக்கப்படவேண்டும்
எத்தனை உண்மை நிகழ்ச்சிகளை நாம் கேட்டிருப்போம், ரௌடிகளாக ஒரு காலத்தில் இருந்தவர்கள், மனந்திருந்தி நல்ல மனிதர்களாக மாறி சமுதாயத்திற்கு நன்மைகளைச் செய்யும் செம்மல்களாக மாறியிருக்கிறார்கள். திருடர்களாக இருந்தவர்கள் சிறைச்சாலைக்கு சென்று வந்த பிறகு நல்லவர்களாக வாழ்ந்தவர்கள் உலகில் உண்டு. ஆனால் அல்லாஹ்வும் குர்ஆனும், திருடர்களின் கைகளை வெட்டிவிட்டு, அவர்களின் எதிர்காலத்தை சூனியமாக்கிவிடுகிறார்கள்.
திருடர்களின் கைகளை வெட்டி, அவர்களை வாழ்நாள் முழுவதும் ஒரு ஊனமுற்றவர்களாக மாற்றுவது 'இன்னா செயலாகும்', இதனை இறைவேதம் என்றுச் சொல்லக்கூடிய குர்ஆன் கட்டளையிடுவது ஏற்றுக்கொள்ளக்கூடிய செயலாக இல்லை.
இதைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது? என்பதை அறிய கீழ்கண்ட கட்டுரையை படிக்கவும்.
- குர்ஆனும் பைபிளும்: திருடர்களின் கைகளை வெட்டுதல் (அ) அவர்களின் கைகளால் வேலை செய்யவைத்து கடனை தீர்க்கச் செய்தல், எது சரியானது? (குர்ஆன் 5:38 & லேவியராகமம் 6:1-5 & எபேசியர் 4:28)
குர்ஆனின் இன்னா 4: கட்டளைகளை மீறியதால், குரங்குகளாக & பன்றிகளாக மாற்றுதலின்னா
நாட்டில் சட்டங்களை மற்றும் கட்டளைகளை மீறினால் தண்டனை கொடுப்பது சமுதாயத்திற்கு தேவையானதே! இதனால், நாட்டில் சட்ட ஒழுங்கு சீர்படும். இதே போன்று இறைவன் கூட மனிதர்கள் கட்டளைகளை மீறும் போது, தன் பாணியில் தண்டனை கொடுப்பான், மேலும் அவர்கள் தங்கள் தவறை உணர்ந்து திரும்பவும், நல்லவர்களாக மாற அவன் வாய்ப்புத் தருவான்.
ஆனால், கீழ்கண்ட மூன்று குர்ஆன் வசனங்களில், 'கட்டளைகளை மீறுபவர்களை குரங்குகளாகவும், பன்றிகளாகவும் அல்லாஹ் மாற்றியதாக' கூறப்பட்டுள்ளது.
குர்ஆன் 2:65. உங்க(ள் முன்னோர்க)ளிலிருந்து சனிக் கிழமையன்று (மீன் பிடிக்கக் கூடாது என்ற) வரம்பை மீறியவர்களைப் பற்றி நீங்கள் உறுதியாக அறிவீர்கள். அதனால் அவர்களை நோக்கி "சிறுமையடைந்த குரங்குகளாகி விடுங்கள்" என்று கூறினோம்.
குர்ஆன் 5:60. "அல்லாஹ்விடமிருந்து இதைவிடக் கெட்ட பிரதிபலனை அடைந்தவர்களைப் பற்றி உங்களுக்கு அறிவிக்கட்டுமா? (அவர்கள் யாரெனில்) எவரை அல்லாஹ் சபித்து, இன்னும் அவர்கள் மீது கோபமுங்கொண்டு, அவர்களில் சிலரைக் குரங்குகளாகவும், பன்றிகளாகவும் ஆக்கினானோ அவர்களும், ஷைத்தானை வழிப்பட்டவர்களும் தான் - அவர்கள்தாம் மிகவும் தாழ்ந்த நிலையினர்; நேரான வழியிலிருந்தும் தவறியவர்கள்" என்று (நபியே!) நீர் கூறுவீராக.
குர்ஆன் 7:166. தடுக்கப்பட்டிருந்த வரம்பை அவர்கள் மீறிவிடவே, "நீங்கள் இழிவடைந்த குரங்குகளாகி விடுங்கள்" என்று அவர்களுக்கு நாம் கூறினோம்.
தீய முஸ்லிம்களையும் குரங்கு பன்றிகளாக அல்லாஹ் ஆக்குவான்:
புகாரி நூல்: 5590. அப்துர் ரஹ்மான் இப்னு ஃகன்கி அல்அஷ்அரீ(ரஹ்) கூறினார். . . . நான் நபி(ஸல்) அவர்கள் சொல்லக் கேட்டேன்:
என் சமுதாயத்தாரில் சில கூட்டத்தார் தோன்றுவார்கள். அவர்கள் விபசாரம் (புரிவது), (ஆண்கள்) பட்டுத் துணி (அணிவது), மது (அருந்துவது), இசைக் கருவிகள் (இசைப்பது) ஆகியவற்றை அனுமதிக்கப்பட்டவையாகக் கருதுவார்கள். இன்னும் சில கூட்டத்தார் மலை உச்சியில் தங்குவார்கள். அவர்களின் ஆடுகளை இடையன் (காலையில் மேய்த்துவிட்டு) மாலையில் அவர்களிடம் ஓட்டிச் செல்வான். அவர்களிடம் தன் தேவைக்காக ஏழை (உதவி கேட்டுச்) செல்வான். அப்போது அவர்கள், 'நாளை எங்களிடம் வா' என்று சொல்வார்கள். (ஆனால்) அல்லாஹ் இரவோடு இரவாக அவர்களின் மீது மலையைக் கவிழ்த்து அவர்க(ளில் அதிகமானவர்க)ளை அழித்துவிடுவான். (எஞ்சிய) மற்றவர்களைக் குரங்குகளாகவும் பன்றிகளாகவும் மறுமை நாள் வரை உருமாற்றிவிடுவான்.
கட்டளைகளை மீறியதால், குரங்குகளாக & பன்றிகளாக மாற்றுதல் இன்னா:
தன் சாயலில் படைத்த மனித இனத்தை குரங்குகளாக, பன்றிகளாக மாற்றுவது, இறைவனின் இலக்கணத்திற்கு ஏற்றதல்ல, இது ஒரு 'இன்னா செயலாகும்', இது அல்லாஹ்விற்கே இழுக்காக கருதப்படும்.
குறிப்பு: சட்டங்களை மீறியவர்களை குரங்குகளாகவும், பன்றிகளாகவும் அல்லாஹ் மாற்றியதாக வரும் வசனங்கள் பொய்யானவையாகும். இவைகளை நம்புவதும் மூடநம்பிக்கையே! மக்களில் சிலருக்கு கோபம் வரும் போது, மற்றும் மற்றவர்களோடு சண்டை நடக்கும் போது, எதிர்த்து வாக்குவாதம் செய்பவர்களை அவமானப்படுத்த எண்ணினால், 'நாயே, குரங்கே, பன்றியே' என்றுச் சொல்லி திட்டுவார்கள். மனிதர்களிடமே நாம் இப்படிப்பட்ட கூற்றுகளை விரும்பாத போது, இறைவன் என்று முஸ்லிம்கள் கருதும் அல்லாஹ் இப்படிப்பட்ட வசனங்களை சொல்வதும், மக்களை குரங்குகளாக, பன்றிகளாக மாற்றினேன் என்றுச் சொல்வதும் ஏற்றுக் கொள்ளக்கூடியதாக உள்ளதா?
இதுவரை 'இன்னா நாற்பது' தலைப்பில் "குர்ஆனின்/முஹம்மதுவின் இன்னா செயல்கள் நான்கை கண்டோம்". அடுத்த பாகத்தில், இன்னும் நான்கு இன்னா செயல்களை காண்போம்.