முஸ்லிம்களுக்கான பைபிள் பாடங்கள்
அறிமுகம்
அன்புள்ள நண்பனுக்கு,
இந்த வேதாகம நம்பிக்கை பற்றிய ஆராய்ச்சிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்!
பதிமூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த ”ஜலலுத்-தீன் ரூமி” என்பவர் ஒரு புகழ்பெற்ற முஸ்லிம் கவிஞர் ஆவார். இவர் “இருட்டறையில் ஒரு யானை” என்ற கதையை சொன்னார். ஒரு முறை சிலர் ஒன்றாக கூடி, ஒரு யானையை அரேபியாவிற்கு கொண்டு வந்தார்கள். அந்த யானையைக் காண மக்கள் அலைமோதிக்கொண்டு வந்தார்கள். துரதிஷ்டவசமாக, அந்த யானை கட்டப்பட்டு இருந்த அறை மிகவும் இருட்டாக இருந்தது. மக்கள் அந்த யானையை தொட்டுப் பார்த்து தான் தெரிந்துக் கொள்ளவேண்டிய அளவிற்கு அந்த அறை இருட்டாக இருந்தது. ஒருவர் யானையின் தும்பிக்கையை தொட்டுப் பார்த்தார், யானை என்றால் ”குழாய் போல தொற்றமுள்ள ஒரு மிருகம்” என்று நினைத்துக் கொண்டார். இன்னொருவர் யானையின் காதை தொட்டுப்பார்த்தார், யானை என்றால் விசிறி போல இருக்கும் ஒரு மிருகம் என்று நினைத்துக் கொண்டார். இதே போல யானையை அனேகர் தொட்டுப் பார்த்தனர். யானையின் பக்கவாட்டு உடலை தொட்டுப் பார்த்தவர், யானை ஒரு சுவர் போல இருக்கும் என்று நினைத்தார். யானையின் காலை தொட்டுப்பார்த்தவர், யானை மரம் போல இருக்கும் எனவும், வாலை தொட்டவர் “கயிறு” போல யானை இருக்கும் எனவும் நினைத்துவிட்டார். இப்படி இருட்டறையில் யானையை தொட்டுப் பார்த்தவர்கள் அனைவரும், உண்மையின் ஒரு பகுதியை மட்டும் அறிந்துக் கொண்டார்கள், உண்மையில் ஒரு யானை எப்படி இருக்கும் என்று முழுவதுமாக ஒருவருக்கும் தெரியவில்லை.
இந்த பைபிள் பாடத்திட்டமானது, முஸ்லிம்கள் ”பைபிளின் நம்பிக்கையை” சரியான விதத்தில் அறிந்துக் கொள்ளும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. அதாவது, யானையை இருட்டறையில் அல்ல, வெளிச்சத்தில் முழுவதுமாக பார்த்து உண்மையை அறிந்துக் கொள்ளும் வகையில் இப்பாடங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அல் கிதாப் என்று சொல்லப்படும் பரிசுத்த வேதாகமத்தை (அல் குதுபுள் முகத்தஸ்) அதன் தூய வடிவில் அறிந்துக் கொள்ள இப்பாடங்கள் உதவும்.
கிறிஸ்தவர்கள் பல சபை பிரிவுகளாக பிரிந்து காணப்பட்டாலும், பைபிளின் அடிப்படை போதனைகளை அனைவரும் இன்னமும் கடைபிடிக்கின்றனர். இதுமட்டுமல்ல, கிறிஸ்தவம் பற்றி நீங்கள் நினைத்துக் கொண்டு இருப்பதை விட, பைபிளின் போதனை வித்தியாசமாக இருப்பதை நீங்கள் பைபிளில் கண்டு கொள்வீர்கள். நாம் பைபிள் நம்பிக்கை பற்றிய அறிவை பைபிளின் மூலமாக பெறவில்லை எனில், அல்லது பைபிளை முழுவதுமாக படிக்காமல், ஆங்காங்கே சில வசனங்களை மட்டும் நீங்கள் படிப்பவராக இருந்தால், உங்களுக்கு பைபிள் என்பது, ”இருட்டறையில் தொட்டுப் பார்த்த யானையைப் போலவே” காட்சி அளிக்கும்.
இந்த பாடங்களை ஒவ்வொன்றாக நீங்கள் படிக்கும் போது, மேற்கத்திய உலகில் காணப்படுகிற கட்டுப்பாடற்ற, இறைவனுக்கு இடம் கொடுக்காத வாழ்க்கை கிறிஸ்தவம் அல்ல , மாறாக பைபிளின் போதனையை புறந்தள்ளின அல்லது மறுதலித்த ஒரு வாழ்க்கை என்பதை அறிந்துக் கொள்வீர்கள். எனவே, சுயமாக கிறிஸ்தவம் பற்றிய பல கற்பனைகளை உருவாக்கிக் கொள்ளாமல், ஒரு முஸ்லிம் கிறிஸ்தவர்களிடம் சென்று, உங்கள் பைபிளில் காணப்படும் இறைவனுடைய வெளிப்பாடு என்ன என்று கேட்டுத் தெரிந்துக் கொள்வது மிகவும் சிறந்ததாகும். இதைத் தான் குர்-ஆன் ஸுரா 10:94 கீழ்க்கண்டவாறு கூறுகின்றது:
(நபியே!) நாம் உம் மீது இறக்கியுள்ள இ(வ்வேதத்)தில் சந்தேகம் கொள்வீராயின், உமக்கு முன்னர் உள்ள வேதத்தை ஓதுகிறார்களே அவர்களிடம் கேட்டுப் பார்ப்பீராக; நிச்சயமாக உம் இறைவனிடமிருந்து உமக்குச் சத்திய (வேத)ம் வந்துள்ளது - எனவே சந்தேகம் கொள்பவர்களில் நீரும் ஒருவராகி விட வேண்டாம். 10:94
பைபிளின் ஆழமான போதனைகளை, ஆன்மீக விவரங்களை விவரிக்க இப்பாடங்கள் தயாரிக்கப்படவில்லை. நீங்கள் பைபிளை மேற்கொண்டு ஆய்வு செய்ய விரும்பினால், இப்பாடங்கள் உங்கள் ஆய்விற்கு ஒரு அஸ்திபாரமாக இருக்கும். எனவே, இந்த பைபிள் ஆராய்ச்சி பயணத்தை எங்களோடு தொடரும் படி உங்களை அன்புடன் அழைக்கிறோம். உலகமனைத்திலும் இருக்கும் கோடிக்கணக்கான மக்கள் எப்படி ஒரு புதிய வாழ்வையும், மாபெரும் மகிழ்ச்சியையும் பைபிளை படிப்பதின் மூலம் பெற்றுக் கொண்டு இருக்கிறார்கள் என்பதை இதன் மூலமாக நீங்களும் அறிந்துக் கொள்வீர்கள்.
ஒவ்வொரு பாடத்தின் கடைசியில் “உங்களை நீங்களே சோதித்து அறியுங்கள்” என்ற பகுதியில், அப்பாடத்தில் கற்றுக்கொண்டவைகள் பற்றிய சில கேள்விகள் தரப்பட்டிருக்கும். அவை நீங்கள் கற்றுக் கொண்டவைகளை உள்வாங்கிக் கொள்ள உதவும்.
இப்பாடங்களில் மேற்கோள் காட்டப்பட்டிருக்கும் குர்-ஆன் வசனங்கள் அனைத்தும் “டாக்டர் முஹம்மது ஜான் குர்-ஆன் தமிழாக்கத்திலிருந்து” எடுக்கப்பட்டதாகும். சில இடங்களில் வேறு குர்-ஆன் தமிழாக்கம் பயன்படுத்தப்பட்டு இருந்தால், அதன் பெயர் குறிப்பிடப்படும். பைபிள் வசனங்கள் “பைபிள் சொசைட்டி ஆஃப் இந்தியா” வெளியிட்ட தமிழ் பைபிளிலிருந்து எடுக்கப்பட்டதாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக