இஸ்லாமிய அரச குடும்பம்
பாகம் 2 - புதிய அரசர்
ஆசிரியர்: சைலஸ்
யோவான் 13:34,35நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்; நான் உங்களில் அன்பாயிருந்தது போல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள் என்கிற புதிதான கட்டளையை உங்களுக்குக் கொடுக்கிறேன். நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்து கொள்வார்கள் என்றார்.குர்ஆன் 8:63மேலும், (முஃமின்களாகிய) அவர்கள் உள்ளங்களுக்கிடையில் (அன்பின்) பிணைப்பை உண்டாக்கினான்; பூமியிலுள்ள (செல்வங்கள்) அனைத்தையும் நீர் செலவு செய்த போதிலும், அவர்கள் உள்ளங்களுக்கிடையே அத்தகைய (அன்பின்) பிணைப்பை உண்டாக்கியிருக்க முடியாது - ஆனால் நிச்சயமாக அல்லாஹ் அவர்களிடையே அப்பிணைப்பை ஏற்படுத்தியுள்ளான்; மெய்யாகவே அவன் மிகைத்தவனாகவும், ஞானமுள்ளவனாகவும் இருக்கின்றான் (முஹம்மது ஜான் டிரஸ்ட் குர்ஆன் தமிழாக்கம்)
பாகம் 2: புதிய அரசர்
(அபூ பக்கர், அலி மற்றும் அபூ சுஃப்யான்)
அறிமுகம்
எதிர்பாராத விதமாக விஷத்தின் காரணமாக முஹம்மது மரித்தபோது[1], இஸ்லாமிய சமுதாயத்தில் "அடுத்த தலைவர் யார்?" என்பதில் குழப்பம் ஏற்பட்டது. முஹம்மது மரித்தவுடனே அபூ பக்கர் அவர்கள் அடுத்த கலீஃபாவாக (தலைவராக) தெரிவு செய்யப்பட்டார் என்று நான் முந்தைய கட்டுரையில் கூறியிருந்தேன். அபூ பக்கர் அவர்கள் அடுத்த தலைவராக தெரிவு செய்யப்பட்ட நிகழ்ச்சி ஒரு சுலபமான வேலையாக இருக்கவில்லை, மேலும் சண்டை சச்சரவு இல்லாமல் அவர் தெரிவு செய்யப்படவில்லை. அடுத்த கலீஃபாவாக அபூ பக்கர் அரியாசனையில் உட்காரவேண்டும் என்று எல்லாரும் விரும்பவில்லை.
(குறிப்பு 1: முஹம்மதுவின் மரணம் பற்றிய விவரங்களை அறிய இந்த கட்டுரையை படிக்கவும்)
அபூ பக்கர் அவர்கள் எப்படி கலீஃபாவாக தெரிவு செய்யப்பட்டார் என்பது பற்றி பலவகையான விவரங்களை பல மூல நூல்கள் கூறுகின்றன, எதிர்ப்புக்களின் மத்தியிலே கடைசியாக அவர் கலீஃபாவாக மாறினார். இவர் தலைவராக மாறியது எல்லோருக்கும் மகிழ்ச்சி அளிக்கவில்லை. இவரது தலைமைத்துவத்தை பல இஸ்லாமிய குழுக்கள் அங்கீகரிக்கவில்லை. ஆனால், அபூ பக்கருக்கு பல இஸ்லாமிய தலைவர்களின் ஆதரவு இருந்ததால், அவரே தலைவராக தெரிவு செய்யப்பட்டார்.
முதலில் அலி அவர்கள் அபூ பக்கருக்கு ஆதரவு அளிக்க மறுத்துவிட்டார்கள், ஏனென்றால், தாமே கலீஃபாவாக தலைவர் பொறுப்பை ஏற்கவேண்டும் என்று அவர்கள் விரும்பினார்கள். சரித்திர ஆசிரியர் தபரி அவர்களால் பதிவு செய்யப்பட்ட அலி அவர்களின் வார்த்தைகளை இப்போது படியுங்கள் (தபரி, வால்யும் 16, பக்கம் 51 [4])
இறைத்தூதர் மரித்துவிட்டார்கள். இஸ்லாமிய சமுதாயத்தின் தலைவர் பதவிக்கு தகுதியானவர் என்னைத் தவிர வேறு யாருமில்லை. ஆனால், மக்கள் அபூ பக்கர் அவர்களுக்கு தங்கள் ஆதரவை கொடுத்தனர், எனவே, நானும் என் ஆதரவை அபூ பக்கருக்கு கொடுத்தேன். அதன் பிறகு அபூ பக்கர் மரித்துவிட்டார்கள். இப்போது கூட இஸ்லாமிய சமுதாயத்தின் தலைவர் பதவிக்கு தகுதியானவர் என்னைத் தவிர வேறு யாருமில்லை. ஆனால், மக்கள் உமர் அவர்களுக்கு தங்கள் ஆதரவை கொடுத்தார்கள், நானும் அப்படியே செய்தேன். இதன் பிறகு உமர் அவர்களும் மரித்துவிட்டார்கள். இப்போதும் தலைவர் பதவிக்கு என்னைத் தவிர பொறுத்தமானவர் யாருமில்லை. இருந்தபோதிலும் ஆறு வாக்கெடுப்பில் ஒரு வாக்கை போடும்படி மக்கள் எனக்கு அதிகாரம் கொடுத்தனர், மற்றும் உஸ்மான் தங்கள் தலைவராக வரவேண்டும் என்று அவர்கள் விரும்பி தங்கள் ஆதரவை கொடுத்தனர், மறுபடியும் நான் என் ஆதரவையும் தரவேண்டியதாக இருந்தது.
இஸ்லாமிய சமுதாயத்தில் இன்னொரு நபரும் இருந்தார், இவரும் வேறுபல காரணங்களுக்காக அபூபக்கர் கலீஃபாவாக ஆவதை விரும்பவில்லை. இவர் ஒரு தலைவராக இல்லாமல் இருந்தாலும், மிகவும் முக்கியமானவராக இருந்தார்.
நாம் இந்த நிகழ்ச்சிப் பற்றி ஆய்வு செய்யவேண்டும். இஸ்லாமிய அரியாசனத்தில் அபூ பக்கர் அவர்கள் உட்காருவதை விரும்பாத இந்த முக்கியமான இஸ்லாமியரின் நோக்கங்கள் மற்றும் வார்த்தைகளை நாம் ஆய்வு செய்து பார்க்கவேண்டும். இது ஒரு சிறிய நிகழ்ச்சி தான், ஆனால் இதன் தாக்கம் இஸ்லாமிய சரித்திரத்தில் தொடர்ந்து வந்துள்ளது மேலும் இன்று வரை இஸ்லாமிய சமுதாயத்தில் இதன் நிழல் காணப்படுகிறது. அன்பர்களே, நீங்கள் நினைவில் கொள்ளவேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால், நாம் " மனிதர்களிலேயே மிகவும் சிறந்த முஸ்லீம்கள் என்று முஹம்மதுவினால் அங்கீகாரம் கொடுக்கப்பட்ட" முஸ்லிம்களைப் பற்றி ஆய்வு செய்துக்கொண்டு இருக்கிறோம் என்பதாகும். இஸ்லாம் என்னும் மரத்தின் கனிகள் தான் இவர்கள். வாருங்கள்!, இந்த இஸ்லாமிய கனிகளை சிறிது சுவைத்துப் பார்ப்போம்....
முக்கிய நபர்கள்:
அபூ பக்கர் - இவர் இஸ்லாமிய சாம்ராஜ்ஜியத்தின் முதல் கலீஃபா (அரசை நடத்திச் செல்லும் தலைவர்) ஆவார். "சரியாக வழிநடத்தப்பட்ட நான்கு கலீஃபாக்கள்" என்று அழைப்படும் கலீஃபாக்களில் முதன்மையானவர் இவர் ஆவார். முஹம்மது மரித்த பிறகு இவர் கலீஃபாவாக பதவி ஏற்றார். இவர் முஹம்மதுவின் நெருங்கிய நண்பராவார். இவர் இரண்டு ஆண்டுகள் ஆட்சி புரிந்து அதன் பிறகு காலமானார்.
அலி - இவர் முஹம்மதுவின் மருமகன் ஆவார். இவர் முஹம்மதுவின் மகள் ஃபாதிமாவை திருமணம் செய்து இருந்தார். இவர் வீரமிக்க இஸ்லாமிய போர் வீரனாக இருந்தார், யுத்தக் களத்தில் அனேக வெற்றிகளுக்கு உறுதுணையாக இருந்தார். அலி அவர்களுக்கு ஹசேன் மற்றும் ஹுசேன் என்ற பெயர்களில் இரண்டு மகன்கள் இருந்தார்கள். அலி அவர்கள் நான்காவது கலீஃபாவாக இருந்தார், மேலும் "சரியாக நடத்தப்பட்ட கலீஃபாக்களின்" பட்டியலில் இவர் கடைசியானவராக இருக்கிறார்.
அபூ சுஃப்யான் – இவர் முஹம்மதுவின் மிகப்பெரிய எதிரியாக இருந்தார். மக்காவின் ஒரு புகழ்பெற்ற வம்சத்தில் பிறந்த இவர், மக்காவினருக்கு தலைவராக இருந்தார். உஹூத் என்ற போரின் போது, முஸ்லிம்களை தோற்கடித்த மக்காவினரின் படைத்தலைவராக இருந்தவர் இவர் தான். இந்த போரின் போது முஹம்மது அதிகமாக காயப்பட்டார் மேலும் அதிகமாக பயந்துபோய் இருந்தார். இந்த போரில் அனேக முஸ்லிம்களை கொன்று அதனை சுவாரசியமாக கண்டு களித்தவர் இவர், மேலும் இந்த வெற்றியைப் பற்றி புகழ்ந்துப்பேசி, முஹம்மதுவை ஏளனப்படுத்தினார் அபூ சுஃப்யான். ஒரு காலக் கட்டத்தில் இந்த அபூ சுஃப்யானை கொலை செய்யும் படி முஹம்மது சிலரை அனுப்பினார், ஆனால் அவர்கள் தோல்வியடைந்தார்கள், அபூ சுஃப்யானை கொலை செய்ய அவர்களால் முடியவில்லை. அதன் பிறகு முஹம்மது ஒரு வலிமை வாய்ந்த நபராக மாறிவிட்டபிறகு, அவர் மக்காவை நோக்கி தன் படைகளோடுச் சென்றார். இந்த நேரத்தில் அபூ சுஃப்யான் முஹம்மதுவை சந்திக்கச் சென்றார். இந்த இடத்தில் அபூ சுஃப்யான் ஒரு முஸ்லிமாக மாற கட்டாயப்படுத்தப்பட்டார், இல்லையானால் அவர் அங்கேயே கொலை செய்யப்பட்டு இருக்கவேண்டும் (ஆரம்பத்தில் அபூ சுஃப்யானுக்கு பாதுகாப்பு அளிப்பதாக முஸ்லிம்கள் வாக்கு கொடுத்தனர், அதன்பிறகு முஸ்லிம்கள் தங்கள் முடிவை மாற்றிக்கொண்டனர், முஹம்மதுவை இவர் சந்திக்கும் நேரத்தில் கொலை செய்யப்படக்கூடும் என்ற சூழ்நிலை நிலவியது). இந்த நேரத்தில் தான் திடீரென்று "முஹம்மது ஒரு இறைத்தூதர்" என்று இவர் ஒப்புக்கொண்டார்! அதாவது தன் உயிருக்கு பயந்து முஹம்மது ஒரு தீர்க்கதரிசி என்று இவர் நம்பினார். முஹம்மது மக்காவை முழுவதுமாக கைப்பற்றிக்கொண்ட பிறகு, ஒரு விலை உயர்ந்த பரிசு ஒன்றை முஹம்மது அபூ சுஃப்யானுக்குக் கொடுத்தார், இதனால் அனேக இஸ்லாமியர்கள் கோபமும் அடைந்தார்கள். மேலும் இவரை கிறிஸ்தவ நகரமாகிய நஜ்ரான் என்ற நகரத்திற்கு பிரதிநிதியாக முஹம்மது நியமித்தார். அபூ சுஃப்யான் தனக்கு அரசியல் அதிகாரம் கிடைப்பதை அதிகமாக விரும்பினார். அரசியல் அதிகாரம் என்றால் என்ன என்பதை இவர் சரியாக புரிந்துக்கொண்டார், தனக்கும் தன் மகன்களுக்கும் இந்த அதிகாரம் "இஸ்லாமிய சமுதாயத்தின்" மூலமாக கிடைக்கும் என்று இவர் நம்பினார்.
அபூ சுஃப்யான் அவர்களை நாம் இஸ்லாமிய அரச குடும்பமாக கருதமுடியாது, அல்லது முஸ்லிம்களிலே இவர் ஒரு சிறந்த முஸ்லிம் என்றும் கருதமுடியாது. ஆனால், முஹம்மதுவின் காலத்தில் இவர் முக்கிய நபராக இருந்தார் என்பதையும் நாம் மறுக்கமுடியாது. இஸ்லாமை இவர் ஏற்றதால் முஹம்மது இவருக்கு பொருளாதார பரிசுகளை அளித்தார் மேலும் ஒரு நகரத்திற்கு பிரதிநிதியாக நியமித்தார்.
அல்ஜுபைர் – இவர் மதிப்புமிக்க ஒரு முஸ்லிமாக இருந்தார், முஹம்மதுவின் நெருங்கிய நண்பராகவும் இருந்தார். இவர் ஒரு நல்ல இஸ்லாமிய அடியாராக (சீடராக) இருந்தார். இது மட்டுமல்ல, ஒரு குறிப்பிட்ட காலத்தில் அலி அவர்களுடன் இணைந்து இவர் ஒரு முக்கியமான செயலை செய்தார்.
பின்னணி:
முஹம்மது மரித்து சிறிது நேரம் தான் ஆகியிருந்தது. இஸ்லாமிய சமுதாயத்தின் தலைவர்கள் தங்கள் நண்பர்கள், வம்சத்தினர்களுடன் உறவினர்களுடன் இங்கும் அங்குமாக கூட்டம் கூட்டினார்கள். இஸ்லாமிய சமுதாயத்தின் அடுத்த பெருந்தலைவர் (கலீஃபா) யார் என்ற முடிவை எடுப்பதற்கு அவர்கள் கூட்டம் கூடியிருக்கிறார்கள். யார் தலைவராக இருக்கவேண்டும் என்ற முடிவை ஆரம்பத்தில் போட்டியின்றி ஒருமனதாக எடுக்கமுடியவில்லை.
தபரியின் சரித்திரம் புத்தகம், வால்யூம் 9 லிருந்து விவரங்கள்:
"இறைத்தூதர் அவர்கள் ரபிவுல் மாதம் இரண்டாம் நாள் திங்கட்கிழமையன்று காலமானார்கள். இறைத்தூதர் மரித்த அதே திங்கட்கிழமையன்று அபூ பக்கர் அவர்கள் தலைவராக இருப்பதற்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டது (பக்கம் 184).உமர் எழுந்து நின்று இவ்விதமாக கூறினார், "உங்களில் யார் அபூ பக்கர் அவர்களை விட்டு வேறு பிரிந்துவிட்ட விரும்புகிறீர்கள்? ஆனால், இவருக்குத் தான் இறைத்தூதர் முன்னுரிமை கொடுத்தார்". நானும் இவருக்கு என் ஆதரவைத் தருகிறேன் என்றார். உமருடைய வார்த்தைகளுக்கு மக்கள் கீழ்படிந்தார்கள், அவர் சொன்னது போலவே செய்தார்கள். ஆனால், அன்சாரிகள் அல்லது அங்கிருந்தவர்களில் சிலர் "நாங்கள் அலி அவர்களுக்குத் தவிர வேறு யாருக்கும் எங்கள் ஆதரவை தரமாட்டோம்" என்று கூறினார்கள் (பக்கம் 186).உமர் அவர்கள் அபூ பக்கர் அவர்களின் கரங்களை உயர்த்திப்பிடித்து, இவ்விதமாக கூறினார்கள், "என் அதிகாரம் உங்களுக்குத் தான், ஆதரவு உங்கள் அதிகாரத்திற்குத் தான்". இதைக் கண்ட மக்களும் இதே போல தங்கள் ஆதரவை கொடுத்தார்கள். இந்த ஆதரவை உறுதிபடுத்தும்படி கேட்டுக்கொண்ட போது, அலியும் அல்ஜுபைரும் ஒதுங்கி நின்றுவிட்டார்கள். ஜுபைர் தன் வாளை அதன் இடத்திலிருந்து உருவி, இவ்விதமாக கூறினார் "அலி அவர்கள் தலைவர் ஆவதற்கு முழு ஆதரவும் கிடைக்கும் வரை, இந்த வாளை அதன் உறையில் வைக்கமாட்டேன்". இந்தச் செய்தி அபூ பக்கர் மற்றும் உமர் அவர்களுக்கு எட்டியது. அப்போது உமர் "அவனை கல்லால் அடித்து, அவன் வாளை அவனிடமிருந்து பிடுங்கிக்கொண்டு வாருங்கள்" என்று கூறினார் (1). உமர் அங்கு விரைந்துச் சென்று, ஜுபைரின் வாளை கட்டாயமாக பிடுங்கிக்கொண்டு வந்ததாக கூறப்படுகிறது. மேலும் "விருப்பமிருந்தாலும், இல்லாவிட்டாலும் தங்கள் ஆதரவை அபூ பக்கருக்கு கொடுத்தே ஆகவேண்டும்" என்று உமர் கூறினாராம் (பக்கங்கள் 188, 189).
குறிப்பு 1: அந்த நேரத்தில் ஜுபைர் ஃபாத்திமாவின் வீட்டில் இருந்தார். ஃபாத்திமா அலியின் மனைவியாவார்கள் மற்றும் முஹம்மதுவின் மகள் ஆவார்கள்)
அபூ பக்கர் அவர்கள் தங்கள் பேச்சை முடித்ததும், அன்சாரிகளில் ஒருவர் எழுந்து நின்று இவ்விதமாக கூறினார். . ."அன்சாரிகளாகிய எங்களில் ஒருவரும், குறைஷிகளாகிய உங்களில் ஒருவருமாக இரண்டு நபர்களை நாம் தலைவர்களாக ஏற்படுத்துவோம்". இதனால் அங்கு அமளியும் மக்களின் சத்தங்களும் அதிகமாகிவிட்டன. உமராகிய நான் மிகவும் பயந்துவிட்டேன், எல்லோடும் அபூ பக்கருக்கு ஆதரவு கொடுக்காமல் இருந்துவிடுவார்களோ என்று பயந்து, நான் அபூ பக்கரை நோக்கி, "உங்கள் கரங்களை என்னிடம் நீட்டுங்கள், நான் உங்களுக்கு என் ஆதாரவை தருகிறேன்" என்று கூறினேன். அவரும் அப்படியே செய்தார், நான் அவர் கரங்களை பிடித்துக்கொண் டு என் ஆதரவை தெரிவித்தேன். இதனைக் கண்டு என்னைத் தொடர்ந்து முஜாஹிர்களும், அவர்களைத் தொடர்ந்து அன்சாரிகளும் தங்கள் ஆதரவை அபூ பக்கருக்கு கொடுத்தார்கள்.
இப்படி செய்த போது, நாங்கள் சயித் பி. உபதா என்பவரின் மீது பாய்ந்தோம், நாங்கள் அவரை கொன்றுவிட்டோம் என்று யாரோ சொன்னார்கள். நான் சொன்னேன் "அல்லாஹ் அவனை கொல்வானாக!". அபூபக்கருக்கு எங்கள் ஆதரவை கொடுப்பதை விட மிகவும் வலிமை மிக்கது எதுவுமில்லை என்று இறைவனின் பெயரில் ஆணையிட்டு கூறுகிறேன். நாங்கள் எதற்கு பயந்தோம் என்றால், அந்த நேரத்தில் நாங்கள் எங்கள் ஆதரவை அபூ பக்கருக்கு கொடுக்காமல் இருந்திருந்தால், அதன் பிறகு அவருக்கு மொத்த ஆதரவு கிடைத்து இருக்காது. அதாவது நாங்கள் விரும்பாத அன்சாரிகளுக்கு ஆதரவு கொடுத்திருப்பார்கள், அல்லது அன்சாரிகளை எதிர்த்து இருந்திருப்பார்கள், இதனால் சட்டஒழுங்கு கெடுக்கப்பட்டு இருக்கும்" (பக்கம் 194).
இரண்டு 'அபூ' க்கள்:
இப்போது சரித்திர ஆசிரியர், தன் கவனைத்தை அபூ சுஃப்யான் பக்கம் திருப்புகிறார். அபூ பக்கர் கலீஃபாவாக பதவி ஏற்பதைப் பற்றி அபூ சுஃப்யானின் கருத்து என்ன என்பதை தபரி கீழ்கண்ட விதமாக விவரிக்கிறார்.
அபூ சுஃப்யான் அலியிடம் இவ்விதமாக கூறினார், "குறைஷிகளில் மிகவும் தாழ்ந்த வம்சத்திடம் இந்த கலீஃபா பதவி கொடுக்கும் அளவிற்கு நமக்கு என்ன ஆனது? இறைவனின் பெயரில் சத்தியமிட்டுக் கூறுகிறேன், நீங்கள் விருப்பினால், இந்த இடம் முழுவதும் போர் வீரர்களாலும், குதிரைகளாலும் நிரப்பிவிடுகிறேன்". இதற்கு அலி பதில் அளித்தார்: "ஓ அபூ சுஃப்யான், நீண்ட காலமாக நீங்கள் இஸ்லாமுக்கும், முஸ்லிம்களுக்கும் எதிராக போர் புரிந்தவராக இருந்தீர், ஆனால் எந்த ஒரு தீயகாரியத்தையும் செய்ய உங்களால் முடியாமல் போனது. இந்த பதவிக்கு தகுதியானவராக அபூ பக்கரை நாங்கள் காண்கிறோம் (பக்கம் 198)".இறைத்தூதருக்கு பிறகு, அபூ பக்கர் அந்த பதவியை ஏற்ற போது, அபூ சுஃப்யான் கூறியதாவது, "நமக்கும் அபூ ஃபசில் வம்சத்தாருக்கும் சம்மந்தமேது? உண்மையில் இந்த தலைமைத்துவம் அப்த் மனாஃப் வம்சத்திற்கே உரியது". [அபூ சுஃப்யானின் மகன் யாஜித் ஆளுநர் ஆக்கப்பட்டபோது,] அவரிடம் "உம்முடைய மகனிடம் அதிகாரம் ஒப்படைக்கப்பட்டது" என்று சொல்லப்பட்டது. இதற்கு அபூ சுஃப் இப்படி பதில் அளித்தார், "அவர் தன் வம்சங்களுக்கிடையே உள்ள உறவை அன்புடன் பெலப்படுத்திக்கொண்டார்" (1). (பக்கம் 199)
மக்கள் தங்கள் ஆதரவை அபூ பக்கருக்கு கொடுக்க கூடியிருந்த நேரத்தில், அபூ சுஃப்யான் அங்கு வந்தார். அவர் வந்து "இறைவன் மீது சத்தியமாக, இந்த இடத்தில் புகையின் மேகம் இருப்பதை காண்கிறேன், ஒ அப்த் மனாஃப் வம்சத்தார்களே, உங்கள் காரியங்களை பார்ப்பதற்கு உங்கள் மீது தலைவராக மாறுவதற்கு அபூ பக்கர் எங்கேயிருந்து வந்தார்? மிகவும் பலவீனமான அலி மற்றும் அல்-அப்பாஸ் எங்கே?" என்று கூறினார். மேலும் அலியை நோக்கி, அபூ சுஃப்யான் "ஓ அபூ ஹசேன், உங்கள் கரங்களை உயர்த்துங்கள், நான் உங்களுக்கு என் ஆதரவைத் தருகிறேன்" என்று கூறினார். ஆனால், அலி இதனை மறுத்துவிட்டார். ஆகையால், அவர் மிகவும் புகழ்பெற்ற முத்தலமிஸின் பாடல் வரிகளை சரியாக அப்போது சொன்னார்:"அவனுக்காக நியமித்த அவமானத்தில் யாரும் நிலைத்து இருக்கமாட்டார்கள், வெட்கமில்லாத இருவர் தவிர – அவர்களில் ஒருவர் வீட்டுக் கழுதை இன்னொருவர் கட்டையினால் ஆன கூடார ஆணியாகும்.ஒரு பழைய கயிற்றினால் அடித்தால், அந்த வீட்டுக்கழுதை தன் அவமானத்திற்கு திரும்பும்.கூடார ஆணியின் தலையை உடைத்தாலும், அதற்காக யாரும் துக்கம் கொண்டாடமாட்டார்கள்."அலி அபூ சுஃப்யானை இப்படியாக கடிந்துக்கொண்டார், "இறைவன் மீது சத்தியமாக, நீங்கள் குழப்பம் உண்டாக்குவதைத் தவிர வேறு எதையும் செய்யவில்லை. நீண்ட காலமாக இஸ்லாமுக்கு தீமையையே நீங்கள் விரும்புகிறீர்கள். உங்களுடைய அறிவுரை எங்களுக்குத் தேவையில்லை (பக்கம் 199)".
அபூ பக்கருக்கு ஆதரவு கொடுக்கப்பட்டபோது, அபூ சுஃப்யான் அலியிடமும், அப்பாஸிடமும் "நீங்கள் இருவரும் வெட்கமில்லாதவர்கள்" என்று கூறினார், மேலும் கீழ்கண்ட பாடலை பாடிக்காண்பித்தார்.
"வீட்டுக்கழுதை தன் மேன்மையின்மையை அறியும்,ஆனால், ஒரு விடுதலையான மனிதனும், ஒரு திடகாத்தரமான ஒட்டகமும் மேன்மையின்மையை எதிர்க்கும்.""அவனுக்காக நியமித்த அவமானத்தில் யாரும் நிலைத்து இருக்கமாட்டார்கள், வெட்கமில்லாத இருவர் தவிர – அவர்களில் ஒருவர் வீட்டுக் கழுதை இன்னொருவர் கட்டையினால் ஆன கூடார ஆணியாகும்.ஒரு பழைய கயிற்றினால் அடித்தால், அந்த வீட்டுக்கழுதை தன் அவமானத்திற்கு திரும்பும்.கூடார ஆணியின் தலையை உடைத்தாலும், அதற்காக யாரும் துக்கம் கொண்டாடமாட்டார்கள்."
சுருக்கம்:
முஹம்மது மரித்துவிட்டார். யார் அடுத்த தலைவர் என்பதில் கருத்து ஒற்றுமையில்லை. அன்சாரிகளில் சிலர் ஏற்கனவே தங்கள் தலைவரை தங்களுக்குள் தெரிவு செய்வதற்கு முடிவு செய்துவிட்டார்கள், ஆனால், உமரும் அபூபக்கரும் அவர்களை தடுத்து நிறுத்தினார்கள். உமர் முன்னுக்கு வந்து அபூ பக்கர் தான் அடுத்த கலீஃபா என்று முன்மொழிந்தார். கருத்து வேற்றுமை அதிகமாக இருந்தது, உமர் வெளிப்படையாக தன் ஆதரவை அபூ பக்கருக்கு கொடுத்த போது, சண்டையிட்டு, இரத்தம் சிந்துவதற்கான சூழ்நிலை வெகு தொலைவில் இல்லை என்ற சூழ்நிலை உருவாகியிருந்தது. உமரின் அடிச்சுவடிகளையே இதர முஸ்லிம்களும் பின்பற்றினர். அலியும் ஜுபைரும் தங்கள் அங்கீகாரத்தை கொடுக்கும்படி கட்டாயப்படுத்தப்பட்டனர். அலி விரும்பினால், போர் வீரர்களை கொண்டுவந்து, அபூ பக்கர் கலீஃபா ஆவதை தன்னால் தடுக்கமுடியும் என்று அபூ சுஃப்யான் கூறினார், ஆனால் அலி மறுத்துவிட்டார். அலி அவர்களுக்காக கொலை செய்யவும் ஜுபைர் தயார் நிலையில் இருந்தார். அலி "தாம் கலீஃபா ஆக வேண்டும்" என்று தன் இருதயத்தின் ஆழத்தில் விரும்பினார், ஆனால், அந்த நேரத்தில் இரத்தம் சிந்தக்கூடாது என்று விரும்பியதால், அமைதியாக விட்டுக்கொடுத்தார். மக்காவின் வம்சங்களில் மிகவும் தாழ்ந்த வம்சத்திலிருந்து வந்தவர் தங்கள் மீது ஆளுகை செய்வதை அபூ சுஃப்யான் விரும்பவில்லை. இந்த தவறை சரி செய்வதற்கு எதிர் காலத்தில் இரத்தம் சிந்தவேண்டி வரும் என்று அபூ சுஃப்யான் முன்னறிந்து கண்டுக்கொண்டார்.
கலந்துரையாடல்:
இப்போது மறுபடியும் ஸூரா 8:63ஐ அலசுங்கள். முஸ்லீம்களின் உள்ளங்கள் ஒன்றாக இணைக்கப்படவில்லை என்பதை நாம் காணமுடியும். இந்த வசனம் ஏதோ ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் கொடுக்கப்பட்ட வசனமாக இருக்கக்கூடும் அல்லது இவ்வசனம் இரத்து செய்யப்பட்டு இருக்கக்கூடும், ஆனால் ஒருவிஷயம் மட்டும் தெளிவாக தெரிகின்றது, அது என்னவென்றால், முஹம்மதுவின் மரணத்திற்கு பின்பு, இஸ்லாமிய சமுதாயம் ஒற்றுமையாக வாழவில்லை, ஒருவருடைய கழுத்தில் இன்னொருவர் கத்தியை வைத்திருந்தார், இதுதான் உண்மை.
இந்த நிகழ்ச்சியைச் சுற்றியுள்ள சில முக்கியமான விஷயங்களை இப்போது காண்போம்.
1) தற்பெருமையும் இறுமாப்பும்:
அபூ பக்கர் இஸ்லாமிய சமுதாயத்தின் தலைவராக (கலீஃபாவாக) வரக்கூடாது என்று அபூ சுஃப்யான் எண்ணியதின் பின்னணி என்னவென்றால், அபூ பக்கர் ஒரு சிறிய அல்லது தாழ்ந்த வம்சத்திலிருந்து வந்தவர் என்பதாகும். சுஃப்யான் அபூ பக்கரை தாழ்வாக நினைத்தார். தம்மை விட அபூ பக்கர் தரத்தில் குறைந்தவர் என்று எண்ணினார். இதனால், அபூ பக்கரிடமிருந்து கட்டளைப் பெற்று அவருக்கு கீழ்படியவேண்டிய நிலையில் தாம் இருக்கக்கூடாது என்று சுஃப்யான் நினைத்தார்.
அபூ பக்கரை தலைவராக நியமித்தது, எதிர்காலத்தில் இரத்தம் சிந்தவேண்டிய நிலைக்கு இஸ்லாமிய சமுதாயத்தை தள்ளிவிடும் என்று அபூ சுஃப்யான் தன் உள்ளத்தில் நினைத்தார். சுஃப்யான் தன் கண்களை தலைவர் நாற்காலி மீதும் அதிகாரத்தின் மீதும் வைத்திருந்தார். இவர் ஒரு ஞானமிக்க அரசியல் தலைவராக சிந்தித்தார். எப்படி தலைவர் பதவியை பிடிப்பது என்பது பற்றி சுஃப்யான் நன்றாக அறிந்திருந்தார். மேலும் தன் மகன்களுக்கு அரசாங்கத்தில் உயர்ந்த இடத்தை பிடித்துத்தரவும், அரசியலில் வலிமையுள்ள குடும்பமாக தன் குடும்பம் இருக்கவும் இவர் விரும்பி, அதை அடையக்கூடிய வழிகளை ஆய்வு செய்துக்கொண்டு இருந்தார்.
2) கலகம் மற்றும் பணியாமை:
அபூ பக்கருக்கு தன் ஆதரவை கொடுக்கவேண்டும் என்று அலி அவர்கள் கட்டாயப்படுத்தப்பட்டார். ஆனால், தன் உள்ளத்தில் அலி அபூ பக்கரை புறக்கணித்து இருந்தார். முஹம்மதுவின் நெருங்கிய நண்பராகவும், நம்பிக்கையானவராகவும் அபூ பக்கர் இருந்தார். இவர் கலீஃபா ஆவதை அலி விரும்பவில்லை, இருந்தபோதிலும், காலத்தின் கட்டாயத்தினால், அந்த சமயத்தில் அலி தன் ஆதரவை கட்டாயத்தின் பெயரில் அபூ பக்கருக்கு கொடுத்தார்.
அந்த நேரத்தில் இஸ்லாமிய சமுதாயத்தில் விரிசல்கள் ஏற்பட்டு இருந்தது. ஆனால், உமருடைய புத்திசாலித்தனமும், செயல்பாடுகளும் இஸ்லாமிய சமுதாயத்தில் ஏற்படயிருந்த உள்நாட்டு சண்டைகளையும் தற்காலிகமாக தடுத்துவிட்டது. முஸ்லிம்களின் உள்ளங்களுக்கிடையில் அன்பின் பிணைப்பை உண்டாக்கினேன் என்ற அல்லாஹ்வின் வார்த்தைகள் பொய்யாயின. பிணைப்பு உடைந்துவிட்டபடியால் அல்லாஹ் இவர்களை இணைக்கவேண்டிய விதம் பற்றி பாடம் கற்றுக்கொள்ளவேண்டி இருந்தது.
விமர்சனமும் கேள்விகளும்:
ஷேக்ஸ்பியரின் நாடகங்களில் வரும் எதிர்பாராத நிகழ்வுகள் போன்ற நிகழ்வுகள் இஸ்லாமிய சமுதாயத்திலும் ஆரம்ப காலத்திலிருந்தே நிகழ்வதை நாம் காணமுடியும். இஸ்லாமிய சமுதாயத்தின் தலைவர்களின் உள்ளங்களில் வெறுப்புணர்ச்சியும், பொறாமையும் கசப்பும் வேர்விட்டு படர்ந்து இருப்பதை காண முடியும். இன்னும் சிலரோ எதிர் காலத்தில் உள்நாட்டு கலவரங்கள் ஏற்படும் என்பதை நிச்சயமாக கணித்து இருந்தனர். இப்படிப்பட்ட அடிமட்ட மனோபாவங்கள் மற்றும் பதவி மீது, செல்வத்தின் மீது கொண்டு இருந்த பேராசைகள் இஸ்லாமிய சமுதாயத்தில் தீயவிளைவுகளை கொண்டு வர இருந்தது.
இங்கு கவனிக்கவேண்டிய முக்கிய குறிப்பு என்னவென்றால், இஸ்லாமிய சமுதாயத்தில் காணப்பட்ட இந்த வன்மையான கருத்து வேறுபாடுகள் ஒரு தீயசக்தியாகவே உருவெடுத்தது. எதிர்காலத்தில் பல கொடுமையான தீய செயல்கள் நடைப்பெற இந்த கருத்துவேறுபாடுகள் வழிமொழிந்தது. முஹம்மதுவினால் மிகவும் சிறந்த முஸ்லிம்கள் என்று போற்றப்பட்ட இந்த இஸ்லாமிய தலைவர்களின் உள்ளங்களில் இந்த தீய நினைவுகள் எப்படி வேரூண்றி இருந்தது என்பதை நாம் மேன்மேலும் அடுத்தடுத்த ஆய்வுகளில் காண்போம்.
இந்த ஆரம்ப கால இஸ்லாமியர்களின் மத்தியில் "சகோதர அன்பு" என்ற ஒன்று இருந்திருக்கவேண்டாமா?
அலி கலீஃபாவாக ஆக வேண்டும் என்பதற்காக, இதர முஸ்லிம்களைக் கொல்ல தயாராக இருக்கிறேன் என்று ஏன் ஜுபைர் விரும்பவேண்டும்?
முஹம்மதுவின் மிகவும் நெருங்கிய நண்பரும், மிகவும் நம்பகததன்மை மிக்கவராகிய அபூ பக்கரை கலீஃபாவாக நியமித்த போது, ஏன் அலி அதனை விரும்பவில்லை?
அபூ பக்கர் காலிஃபாவாக மாறுவதை ஏன் அலியினால் ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை? அலி தம்முடைய தீய எண்ணங்களை கட்டுப்படுத்தியிருக்கவேண்டாமா?
உலக அளவில் பார்க்கும் பொது, பெரும்பான்மையான அரசியல் தலைவர்களை தெரிந்தெடுக்கும் மக்கள் மென்மையானவர்களாகவும், சகிப்புத்தன்மையுள்ளவர்களாகவும் இருக்கிறதை நாம் காணமுடியும். அல்லாஹ்வினால் உண்டாக்கப்பட்ட இஸ்லாம் என்ற அரசாங்கம், இதர மதசார்பற்ற அரசாங்களோடு ஒப்பிடும் போது, ஏன் இஸ்லாம் தரைமட்டும் தாழவிழுகிறது? இஸ்லாமியரல்லாத அரசாங்கத்தோடு ஒப்பிடும் போது, இஸ்லாமிய அரசாங்கத்தில் ஏன் இப்படிப்பட்ட கீழ்தரமான நிகழ்வுகள் நடைப்பெற்றுள்ளது?
நூற்குறிப்புக்கள்:
2) al-Tabari, "The History of al-Tabari", (Ta'rikh al-rusul wa'l-muluk), State University of New York Press 1993
ஆங்கில மூலம்: http://www.answering-islam.org/Silas/rf2_newking.htm
சைலஸ் அவர்களில் இதர கட்டுரைகள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக