செண்பகப்பெருமாள் அவர்களின் "யூதர்களின் இயேசுவும் பவுலின் கிறிஸ்துவும்" என்ற புத்தகத்துக்கு மறுப்புக்கள்
இரண்டு வாரங்களுக்கு முன்பு என்னுடைய நண்பர் ஒருவர் ஒரு புத்தகத்தை எனக்கு அனுப்பினார். அந்தப் புத்தகத்தின் பெயர் "யூதர்களின் இயேசுவும் பவுலின் கிறிஸ்துவும்" என்பதாகும். இதனை எழுதியவர் திரு எஸ். செண்பகப்பெருமாள் ஆவார். இப்புத்தகம் இவ்வருடம் (2019) ஜனவரி மாதம் வெளியானது. நானும் இந்த புத்தகத்தை ஆர்வமாக படிக்க ஆரம்பித்தேன்.
அப்படி என்னதான் இவர் எழுதி இருக்கிறார்? பைபிளை விமர்சிக்கும் நாத்திகர்கள் மற்றும் முஸ்லிம்கள் முன்வைக்காத வேறு ஏதாவது விமர்சனங்களை இவர் முன்வைத்திருக்கிறாரா? என்பதை அறிய நான் மிகவும் ஆர்வமாக படிக்க ஆரம்பித்தேன். மேலும் இந்தப் புத்தகத்தை எழுதியவர் எந்த பின்னணியில் இருந்து இந்த விமர்சனங்களை முன் வைத்திருக்கிறார் என்பதை அறிய நான் கூர்ந்து படிக்க ஆரம்பித்தேன்.
மேற்கத்திய நாத்திகர்களும் ஆய்வாளர்களும் இதுவரையில் பைபிளை மிகவும் ஆழமாக விமர்சித்திருக்கிறார்கள். ஒருவேளை செண்பகப்பெருமாள் அவர்கள் ஒரு படி மேலே சென்று, சாரி, பல அடிகள் ஆழமாகச் சென்று ஆய்வு செய்து இருப்பாரோ என்ற கேள்வி எழுந்தது. ஒரு புதிய பென்சிலை சீவிக்கொண்டு, ஒரு நோட்புக்கையும், கமகம என்று வாசனை வீசும் ஆவிபறக்கும் ஃபில்டர் காஃபியையும் பக்கத்தில் வைத்துக்கொண்டு, நிதானமாக படிக்க ஆரம்பித்தேன். ஆனால், ஃபில்டர் காஃபியின் ஆவி அடங்குவதற்கு முன்பாகவே, திரு செண்பகப்பெருமாள் அவர்களின் ஆய்வின் இலட்சணம் வெளிப்பட்டுவிட்டது. இப்புத்தகத்தின் வாழ்த்துரையையும், முகவுரையையும் படிக்கும் போதே, இவரின் ஆய்வு இவ்வளவு தானா? என்று என்னை நானே கேள்வி கேட்டுக்கொண்டேன். அதாவது, இவரின் ஆய்வு அரைகுறையானது என்பதை இப்புத்தகத்தின் வாழ்த்துரையும், முகவுரையும் ஆரம்பத்திலேயே ஒப்புக்கொண்டு விட்டன.
ஆய்வு என்ற பெயரில் தன் மனதில் தோன்றியவைகளையெல்லாம் இவர் புத்தகமாக எழுதியுள்ளார். இவர் தம்முடைய ஆய்வை நேர்மையான முறையில் செய்யவில்லை, மனதிலே ஏதோ ஒன்றை வைத்துக் கொண்டு இந்த புத்தகத்தை எழுதி இருக்கிறார். ஒரு நாத்திகர் பைபிளை விமர்சித்தால் எப்படி விமர்சிப்பார் என்று எனக்கு நன்றாக தெரியும்? அதேபோல ஒரு இஸ்லாமியர் பைபிளை விமர்சிக்கும்போது அவருடைய வரிகள் மற்றும் ஆய்வு எப்படி இருக்கும் என்றும் எனக்குத்தெரியும். மேலும் எந்த மதத்தையும் சாராமல், பைபிளை சமநிலையிலிருந்துக்கொண்டு பொதுவாக விமர்சிப்பவர்கள் எப்படி எழுதுவார்கள் என்றும் நான் நன்கு அறிவேன். ஆனால் இவருடைய வரிகளில் இறைமறுப்பு தெரியவில்லை, மதசார்பின்மையும் தெரியவில்லை, அதே நேரத்தில் எந்த நிலைப்பாட்டில் இருக்கிறோம் அல்லது என்ன மார்க்கத்தைப் பின்பற்றி கொண்டு இந்த விமர்சனத்தை முன் வைக்கிறோம் என்பதை வேண்டுமென்றே மறைத்துக்கொண்டு இந்தப் புத்தகத்தை எழுதி இருக்கிறார். ஆனால், இவரின் பின்னணி என்னவென்பதை ஆரம்பத்திலேயே நான் கண்டுபிடித்துவிட்டேன்.
ஒரு விமர்சனத்தை முன் வைப்பவர் யாராக இருந்தால் நமக்கு என்ன? அவருடைய விமர்சங்களுக்கு பதில்கள் சொல்வது தான் நம் கடமை. திரு செண்பகப்பெருமாள் அவர்களின் உண்மை முகத்தை அல்லது நிலைப்பாட்டை இந்தப் புத்தகத்திற்கு கொடுக்கும் பதில்களில் ஆங்காங்கு வெளிப்படும் என்பது மட்டும் நிச்சயம். அதனை இப்போது நான் சொல்ல விரும்பவில்லை.
பைபிள் மீது அவர் முன்வைக்கும் விமர்சனங்கள் அனைத்தும் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக முன் வைக்கப்பட்டுள்ளது என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது. காரணம் எதுவாக இருந்தாலும், இப்படிப்பட்ட விமர்சனங்களை வைப்பவர்களுக்கு தகுந்த ஆதாரங்களோடு பதில்கள் தர வேண்டியது கிறிஸ்தவர்களின் கடமையாக இருக்கிறது. எனவே அவரின் இந்த புத்தகத்திற்கு தொடர்ச்சியாக பதில்களை தரலாம் என்று கர்த்தருக்குள் நிச்சயித்திருக்கிறேன்.
இன்று தான் அவருடைய புத்தகத்தை முழுவதுமாக படித்து முடித்தேன். திரு செண்பகப்பெருமாள் அவர்கள் முன்வைத்த விமர்சனங்கள், கேள்விகள் சந்தேகங்கள் அனைத்தையும் கீழ்கண்ட தலைப்புகளில் நாம் அடக்கிவிடலாம்.
1) அவர் தம் ஆய்வை நேர்மையான முறையில் செய்யவில்லை
2) செண்பகப்பெருமாள் அவர்களுக்கு காலவரிசையை புரிந்துக்கொள்வதில் பிரச்சனையுள்ளது
3) வசன பின்னணிகளை வேண்டுமென்றே மறைத்துவிட்டு விமர்சனம் செய்துள்ளார்
4) தெரிந்தே பல பொய்களை சொல்லியுள்ளார்
5) மேசியா மற்றும் கிறிஸ்து என்ற வார்த்தைகள் இவரை தூங்கவிடாமல் செய்துள்ளன
6) பைபிள் பெண்களை அடிமைப்படுத்துகிறது என்று குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்
7) பைபிளின் தேவன் யூதர்களுக்கு மட்டும்தான் என்ற தன் சொந்த கருத்தை நிலைநாட்ட முயன்றுள்ளார்
8) இயேசு யூதர்களுக்காக மட்டுமே வந்தார் என்பதை நிரூபிக்க பல உண்மைகளை மறைத்துள்ளார்
9) பைபிளின் அடிப்படை கோட்பாடுகளை தவறாக புரிந்து கொண்டுள்ளார்
10) பவுலடியார் தான் இயேசுவை கிறிஸ்துவாக அடையாளம் காட்டினார் என்று பொய்க் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்
இவருடைய இந்த புத்தகத்தைப் படித்துக் கொண்டிருக்கும்போது, இவர் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளை மேற்கண்ட தலைப்புகளில் அடக்கி பதில் அளிக்கலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால், இவருடைய அறியாமையும் மடமையும் பக்கத்துக்கு பக்கம் அதிகரித்துக் கொண்டே சென்று கொண்டிருந்ததை கவனித்தேன். எனவே மொத்தமாக பதில் கொடுக்காமல் இவர் எழுதிய ஒவ்வொரு பக்கத்துக்கும் வரிசைப்படி தொடர்ச்சியாக பதில்களை கொடுக்கலாம் என்று முடிவு செய்திருக்கிறேன்.
பரிசுத்த வேதாகமத்திற்கு எதிராக இவர் முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு, கொடுக்கப்படும் பதில்கள் அவரிடம் சென்றடைய வேண்டும். அவர் இவைகளுக்கு என்ன பதில் சொல்லுவார் என்பதை பார்க்க வேண்டும். திரு செண்பகப்பெருமாள் அவர்களே, உங்கள் புத்தகத்துக்கு ஒரு இலவச விளம்பரம் கிடைத்துவிட்டது. (கிறிஸ்தவ நண்பர்கள் மற்றும் வாசகர்கள் இந்த தொடர் பதில்களை பிரிண்ட் எடுத்து அவருக்கு அனுப்புவீர்களா? அல்லது அவரது மெயில் ஐடி கிடைத்தால் எனக்கு தெரிவிப்பீர்களா?).
இந்த மறுப்புக்கள் மூலமாக, இயேசுவின் போதனைகளும், இரட்சிப்பும் செண்பகப்பெருமாள் போன்றவர்களை சந்திக்கவேண்டும், அவர்களை சிந்திக்கச்செய்யவேண்டும் என்பது என் ஆசை.
"செண்பகப்பெருமாள் அவர்களின் பொய்களும் இயேசுவின் வெற்றியும்" என்ற தலைப்பில் இந்த தொடர் மறுப்புக்கள் எழுதப்படுகின்றன.
இந்த புத்தகத்தின் முதலாவது வேடிக்கை என்னதெரியுமா?
செண்பகப்பெருமாள் அவர்களின் இந்த புத்தகத்திற்கு "Rev. Dr. S. Joel Chellathurai" அவர்கள் வாழ்த்துரை எழுதியது தான். எனவே, வாங்க முதலாவது, வாழ்த்துரையிலிருந்து ஆரம்பிக்கலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக