இஸ்லாமியர்களின் வேத நூலான குர்ஆனையும், முஹம்மதுவின் போதனைகளும், செயல்களும் அடங்கிய ஹதீஸ்களையும் படிக்கும் போது, அல்லாஹ் மீது பல பொய்யான குற்றச்சாட்டுக்கள், அவதூறுகள் இருப்பதாக தெரிகின்றது. அல்லாஹ்விற்கு கெட்டப்பெயர் கொண்டுவருகின்ற விதமாக குர்ஆனிலும், ஹதீஸ்களிலும் அனேக விஷயங்கள் உள்ளன. "அல்லாஹ் என்பவன் இறைவன்" என்று நம்பினால், அவன் பெயரில் இட்டுக்கட்டப்பட்ட பொய்களை களையவேண்டியது ஒவ்வொரு முஸ்லிமின் கடமையாகும்.
இறைவன் பரிசுத்தமானவன், சர்வ வியாபி, சர்வ ஞானி இப்படிப்பட்ட ஒரு நபரைப் பற்றி இஸ்லாம் சொல்லும் விவரங்களை பார்க்கும் போது அவைகள் இறைவனின் இலக்கணத்திற்கும் தகுதிக்கும் முரணாக தெரிகின்றது.
இந்த தொடர் கட்டுரைகளில், அல்லாஹ்வின் பெயரில் இட்டுக்கட்டப்பட்ட பொய்கள் ஒவ்வொன்றையும் வெளியே கொண்டுவரப்போகிறேன். இதற்காக முஸ்லிம்கள் தங்கள் ஆதரவை அளிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். இந்த தொடர் கட்டுரைகளில் குர்ஆன் வசனங்களையும், ஹதீஸ்களையும் சான்றுகளாக காட்டப்போகின்றேன்.
பாகம் 1: முஹம்மது மரிப்பதற்கு முன்பு குர்ஆனை பாதுகாக்க அல்லாஹ் முயலவில்லை
சர்வ ஞானியான அல்லாஹ், எதிர்காலத்தில் நடப்பவற்றை அறிந்து இருக்கும் போது, முஹம்மது மரிப்பதற்கு முன்பு குர்ஆனை ஒரு முழு புத்தகமாக தொகுக்கச் செய்து, முஹம்மது மூலமாகவே அதை சரி பார்த்து இருந்திருப்பான் அல்லாஹ். ஆனால், இதை அல்லாஹ் (இறைவன்) செய்யவில்லையென்று இஸ்லாம் குற்றம் சாட்டுகின்றது.
கி.பி. 610ல் மக்காவில் வாழ்ந்த ஒரு வியாபாரிக்கு இறைவன் தன் தூதன் மூலமாக தரிசனம் தந்து, அந்த வியாபாரியை 'அல்லாஹ்வின்' நபியாக (அ) தீர்க்கதரிசியாக நியமித்ததாக இஸ்லாம் கூறுகின்றது. அதன் பிறகு 23 ஆண்டுகள், அல்லாஹ் தொடர்ந்து தன் தூதன் ஜிப்ரீல் மூலமாக அந்த வியாபாரிக்கு, அதாவது முஹம்மதுவிற்கு இறைவசனங்களை கொடுத்ததாக இஸ்லாம் கூறுகின்றது.
ஆனால், 23 ஆண்டுகள் சிறிது சிறிதாக இறக்கப்பட்ட இறை வசனங்களை ஒரு புத்தகமாக தொகுத்து, அதனை சரி பார்க்க அல்லாஹ் தவறிவிட்டான் என்று இஸ்லாம் சொல்கிறது. முஹம்மதுவிற்கு குர்ஆன் வசனங்கள் இறங்கும் போதெல்லாம், அவர் இலைகளிலும், எலும்புகளிலும், முஸ்லிம்களைக் கொண்டு எழுதி வைத்தார் என்றும் இஸ்லாம் சொல்கிறது. ஆனால், மக்களின் மனதில் மட்டுமே அல்லாஹ் தன் வார்த்தைகளை சேமித்து வைத்தான், பாதுகாத்தான், எழுத்துவடிவில் பாதுகாக்கவில்லை என்று இஸ்லாம் சொல்வது, அல்லாஹ்விற்கு பெரிய அவமானமாகும்.
அழியாமல் நித்தியமாக இருக்கும் தன் வார்த்தைகளை அநித்தியமான மனிதர்களின் மனதில் பாதுகாத்தான் அல்லாஹ் என்று இஸ்லாம் சொல்வது வேடிக்கையாகவும், அல்லாஹ்விற்கு அவதூறாகவும் இருக்கிறது.
மனிதன் மறதியுள்ளவன் (மனிதன் பிறக்கும் போதே கூடவே பிறந்த மறதி):
மனிதன் மறதியுள்ளவன், அவன் மூளையில் (மனதில்) ஒரு புத்தகத்தை பாதுகாத்து வைப்பது என்பது அறிவுடையோர் செய்யும் செயல் அல்ல. ஏனென்றால், பல காரணங்களினால் மனிதன் தான் மனப்பாடம் செய்ததை மறந்துவிடுவான்.
முதலாவதாக, ஒரு மனிதன் குர்ஆன் முழுவதையும் மனப்பாடம் செய்திருந்தாலும், நாட்கள் செல்லச் செல்ல, அம்மனிதன் அவ்வப்போது மனப்பாடம் செய்த முழுவதையும் மறுபடியும் ஞாபகத்திற்கு கொண்டுவந்து 'சரி பார்க்கவேண்டும்', அப்படி செய்யாத பட்சத்தில், மனப்பாடம் செய்யப்பட்டவைகள் மறந்துப்போகும். கவனிக்கவும், ஒரு சில அத்தியாயங்களை மட்டுமல்ல, மனப்பாடம் செய்த முழுவதையும், அவன் மறுபடியும் அடிக்கடி சொல்லிப்பார்க்கவேண்டும். இதனை அவன் வாழ்நாள் முழுவதும் செய்யவேண்டும், இது சாத்தியமா? இல்லையல்லவா? நாம் படிக்கும் போது மனப்பாடம் செய்த சில திருக்குறள்கள், இதர செய்யுள்கள் நமக்கு இன்றும் ஞாபகத்தில் இருக்கும், ஆனால், படித்த அனைத்து செய்யுள்களும் மனப்பாடம் செய்த எல்லா திருக்குறள்களும் நமக்கு ஞாபகம் இருக்கின்றதா? இல்லையல்லவா? இரண்டாவதாக, முதுமையின் காரணமாக, ஞாபகசக்தி குறையும், மூன்றாவதாக, அக்காலத்தில் நோய்களினாலும், யுத்தங்களினாலும் மக்கள் மரித்துக்கொண்டு இருந்தார்கள். இந்த மூன்று காரணங்களினால் நாம் அறிவது என்னவென்றால், மனிதர்களுக்குள் ஒரு புத்தகத்தை பாதுகாப்பது என்பது முட்டாள்தனமாக செயலாகும். அதுமட்டுமல்லாமல், ஒவ்வொரு வம்சத்திலிருந்து இன்னொரு வம்சத்திற்கு இந்த மனப்பாடம் மாறி மாறி பல நூற்றாண்டுகள் வரவேண்டும், இது சாத்தியமா? என்பதை சிந்தித்துப் பாருங்கள்.
மனிதர்களுக்கு தெரிந்திருக்கும் இந்த ஒரு அற்பமான விவரம் அல்லாஹ்விற்குத் தெரியவில்லை என்று இஸ்லாம் சொல்வது ஏற்றுக்கொள்ளமுடியாது.
ஹதீஸ்களின் படி, குர்ஆன் ஒரு அதிகாரபூர்வமான புத்தகமாக தோல் சுருள்களிலோ, அல்லது இதர வகையிலோ கொண்டுவருவதற்கு முன்பாக முஹம்மது கி.பி. 632ல் மரித்துவிடுகின்றார்.
அதன் பிறகு நடந்த போர்களில், குர்ஆனை மனப்பாடம் செய்திருந்த முஸ்லிம்கள் கொத்து கொத்தாக மரித்துவிடுகிறார்கள். அதன் பிறகு முதல் மூன்று கலிஃபாக்களாகிய அபூ பக்கர், உமர் மற்றும் உஸ்மான் அவர்கள் குர்ஆனை இனி பாதுகாக்க ஒரே வழி தான் இருக்கிறது. அந்த வழி மனிதர்களின் மனதில் ஒலி வடிவில் இருக்கும் குர்ஆனை, எழுத்து வடிவில் கொண்டு வந்து தோல் சுருள்களில் (அக்கால பேப்பர்) பாதுகாத்தால் தான் முடியும், இல்லையென்றால் குர்ஆன் உலகிலிருந்து அழிந்தே போய்விடும் என்று முடிவு செய்தார்கள், (இந்த அறிவு அல்லாஹ்விற்கு இல்லை என்று இஸ்லாம் சொல்கிறது), குர்ஆனை எழுத்துவடிவில் இவர்கள் தான் கொண்டு வந்தார்கள் என்று இஸ்லாம் கூறுகின்றது.
இந்த காரியத்தை, அதாவது குர்ஆனை எழுத்துவடிவில் ஒரு புத்தகமாக தொகுத்த இந்த செயலை அல்லாஹ்வும் முஹம்மதுவின் செய்யாதது, அல்லாஹ்வின் சார்பிலிருந்து பார்த்தால், இது அவனுக்கு அவமானமேயாகும்.
இந்த அவதூறை எப்படி நீக்குவது?
குர்ஆனை அல்லாஹ் எழுத்து வடிவில் பாதுகாக்கவில்லை, முஹம்மதுவும் இதைப் பற்றி அக்கரைக் கொள்ளவில்லை என்று முஸ்லிம் அறிஞர்களும், ஹதீஸ்களும் சொல்வது அல்லாஹ்வின் இலக்கணத்திற்கு ஏற்றது அல்ல என்பதைப் பார்த்தோம்.
இதற்கு தீர்வு என்ன?
முதலாவதாக, குர்ஆனை கலிஃபாக்கள் தான் எழுத்து வடிவில் கொண்டு வந்தார்கள் என்பதை முஸ்லிம்கள் சொல்வதை கைவிடவேண்டும். இஸ்லாமிய சரித்திரத்திலிருந்து, முஹம்மது உயிரோடு இருக்கும் போதே, ஒரு புத்தகமாக எழுத்துவடிவில் அல்லாஹ் குர்ஆனை கொண்டு வந்துவிட்டான் என்பதை முஸ்லிம்கள் வரலாற்று சான்றுகளோடு நிருபிக்கவேண்டும். அபூ பக்கர் அவர்கள் மற்றும் உஸ்மான் அவர்கள் குர்ஆனை தொகுத்ததாகச் சொல்லக்கூடிய அனைத்து ஹதீஸ்களையும் பொய்யானவை என்று முஸ்லிம்கள் புறக்கணிக்கவேண்டும்.
இரண்டாவதாக, மேற்கண்ட சான்றுகளை முஸ்லிம்களால் கொண்டு வரமுடியவில்லையென்றால், அல்லாஹ்வின் மீது இஸ்லாம் சுமத்திய அவதூறை சுமந்துக்கொண்டு தான் வாழவேண்டும். இது "அல்லாஹ் ஒரு சர்வ ஞானியல்ல" என்பதைத் தான் காட்டுகின்றது என்பதையும் அவர்கள் ஒப்புக் கொள்ளவேண்டும்.
முஸ்லிம்களுக்கு வேண்டுகோள்:
மேலே சொன்ன முதலாவது தீர்வுக்காக முஸ்லிம்கள் ஆய்வுகள் செய்வார்களா? அல்லாஹ், தன் வார்த்தைகளை தானே எழுத்து வடிவில் பாதுகாத்தான், மனிதர்களாகிய கலிஃபாக்கள் அல்ல என்பதை நிருபிக்க முயலுவார்களா?
அல்லாஹ்வினால் முடியாததை, நாங்கள் செய்துக்காட்டினோம், அல்லாஹ்விற்கும் முஹம்மதுவிற்கும் வராத சமயோசிதமான புத்தி எங்களுக்கு வந்தது என்ற தோரணையில் இஸ்லாம் சொல்லும் குர்ஆன் தொகுப்பு சரித்திரம் பொய்யானது என்பதை முஸ்லிம்கள் நிருபிப்பார்களா?
வாருங்கள், அல்லாஹ்வின் மீது சுமத்தப்பட்ட அவதூறை துடைத்தெறிவோம்...
கிறிஸ்தவர்களின் சந்தேகமும் பதிலும்:
இந்த சிறிய கட்டுரையை படித்த கிறிஸ்தவர்களுக்கு ஒரு கேள்வி எழலாம். அல்லாஹ்வினால் தன் வேதத்தை பாதுகாக்க தெரியவில்லை, என்று இஸ்லாம் சொல்லும் அவதூறை துடைக்க முஸ்லிம்கள் ஆய்வுகள் செய்யட்டும், நாங்கள் என்ன செய்வது? கிறிஸ்தவர்களுக்கும் அல்லாஹ்விற்கும் என்ன சம்மந்தம் என்ற கேள்வி கிறிஸ்தவர்களுக்கு எழலாம்.
கிறிஸ்தவர்களில் சிலர் 'குர்ஆனின் அல்லாஹ்வும், பைபிளின் யெகோவா தேவனும் ஒருவரே' என்று அறியாமையில் நம்பிக்கொண்டு இருக்கிறார்கள். உண்மையாகவே, யெகோவா தேவன் தான் 'அல்லாஹ்' என்று நம்புகிறவர்கள், நம் தேவன் குர்ஆனை இறக்கியிருந்தால், அதனை எழுத்துவடிவில் பாதுகாத்து இருந்திருப்பாரே என்ற சந்தேகம் வரவேண்டும். யெகோவா தேவன் தம் வார்த்தைகளை தம் தீர்க்கதரிசிகள் மூலமாக சரியாக பாதுகாத்தார், தோல்களில் தம் வார்த்தைகளை எழுதவைத்தார். மக்களின் மனதில் பாதுகாக்கவில்லை. இயேசுவின் காலத்திற்கு 200 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட பழைய ஏற்பாட்டு நூல்களை சவக்கடல் குகைகளில் (Dead Sea Scrolls) 2000 ஆண்டுகளாக பாதுகாத்து 1940ம் ஆண்டுக்கு பிறகு உலக வெளிச்சத்திற்கு கொண்டு வந்தார். மேலும், கி.மு. இரண்டாம் நூற்றாண்டு காலத்திலேயே, எபிரேய மொழியிலிருந்து கிரேக்க மொழியாக்கம் செய்யும் படிச் செய்தும், இன்னும் இதர மொழிகளில் தம் வார்த்தைகளை மொழியாக்கம் செய்யச் செய்தும் பாதுகாத்தார்.
எனவே, அல்லாஹ் தான் யெகோவா என்று அறியாமையில் நம்புகிறவர்களும், மேற்கண்ட அவதூறை ஏற்கமாட்டார்கள், ஏற்கக்கூடாது. அல்லாஹ்வும் யெகோவாவும் ஒருவரே என்று நம்பும் கிறிஸ்தவர்கள், இந்த ஒரு அவதூறு அல்லாஹ் மீது அல்ல, யெகோவா தேவன் மீது சுமத்தப்பட்டதாகவே கருதவேண்டும்.
"அல்லாஹ் வேறு, யெகோவா தேவன் வேறு" என்று நம்புகிறவர்களுக்கு இந்த பிரச்சனை ஒன்றும் செய்யாது, ஏனென்றால், இது அல்லாஹ் மீது இஸ்லாம் சுமத்திய குற்றச்சாட்டே தவிர யெகோவா தேவன் மீது அல்ல என்பதால், இப்படிப்பட்டவர்கள் கவலைப்படத் தேவையில்லை.
விஷயம் புரிகின்றதா?
அடுத்த தொடர் கட்டுரையில் இஸ்லாம் "அல்லாஹ் மீது" சுமத்திய இன்னொரு அவதூறைப் பற்றிப் பார்ப்போம்.
புகாரி ஹதீஸ் சான்று: மலைகளில் ஒன்றை நகர்த்த வேண்டுமென எனக்கு அவர்கள் கட்டளையிட்டிருந்தாலும் கூட. . .
சஹீ புகாரி ஹதீஸ்: பாகம் 5, அத்தியாயம் 66, எண் 4986
(வேத அறிவிப்பை எழுதுவோரில் ஒருவராக இருந்த) ஸைத் இப்னு ஸாபித் அல் அன்சாரி(ரலி) கூறினார்.
யமாமா போர் நடைபெற்ற பின் (கலீஃபா) அபூ பக்ர்(ரலி), எனக்கு ஆளனுப்பி (என்னை அழைத்து வரச் சொன்)னார்கள். (நான் சென்றேன்.) அங்கே அவர்களுடன் உமர் இப்னு கத்தாப்(ரலி) அவர்களும் இருந்தார்கள். அப்போது அபூ பக்ர்(ரலி) கூறினார்:
உமர்(ரலி) என்னிடம் வந்து, 'இந்த யமாமா போரில் ஏராளமான குர்ஆன் அறிஞர்கள் கொல்லப்பட்டுவிட்டார்கள். (இறை மறுப்பாளர்களுடன் போர் நடக்கும்) பல்வேறு இடங்களில் குர்ஆன் அறிஞர்களில் ஏராளமான பேர் கொல்லப்பட்டு, அதனால் குர்ஆனின் பெரும்பகுதி (நம்மைவிட்டுப்) போய்விடுமோ என நான் அஞ்சுகிறேன். (எனவே,) தாங்கள் குர்ஆனைத் திரட்டி ஒன்று சேர்க்க உத்தரவிட வேண்டுமென நான், 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள் செய்யாத ஒன்றை நாம் எப்படிச் செய்வது?' என உமர் அவர்களிடம் கேட்டேன். அதற்கு உமர் அவர்கள், 'அல்லாஹ்வின் மீதாணையாக! இது (குர்ஆனைத் திரட்டுவது) நன்மை(யான பணி)தான்' என்று கூறினார்கள். இதற்காக என் மனத்தை அல்லாஹ் விரிவாக்கும் வரை இது விஷயத்தில் (தொடர்ந்து) அவர்கள் என்னிடம் வலியுறுத்திக் கொண்டேயிருந்தார்கள். (முடிவில்) உமர் அவர்கள் கருதியதை(யே) நானும் (பொறுத்தமானதாகக்) கண்டேன். (இதை அபூ பக்ர் அவர்கள் என்னிடம் தெரிவித்தபோது உமர்(ரலி) ஏதும் பேசாமல் அபூ பக்ர்(ரலி) அவர்களுக்கு அருகில் அமர்ந்துகொண்டிருந்தார்கள்.)
(பிறகு) அபூ பக்ர்(ரலி) (என்னிடம்) '(ஸைதே!) நீங்கள் புத்திசாலியான இளைஞர்; உங்களை நாங்கள் (எந்த விதத்திலும்) சந்தேகப்படமாட்டோம். நீங்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்காக 'வஹீ' (வேத வசனங்களை) எழுதக்கூடிய வராயிருந்தீர்கள். எனவே, நீங்கள் குர்ஆனைத் தேடிக் கண்டுபிடித்து (ஒரே பிரதியில்) ஒன்று திரட்டுங்கள்' என்று கூறினார்கள் .
அல்லாஹ்வின் மீதாணையாக! மலைகளில் ஒன்றை நகர்த்த வேண்டுமென எனக்கு அவர்கள் கட்டளையிட்டிருந்தாலும் கூட அது எனக்குப் பளுவாக இருந்திருக்காது. குர்ஆனை ஒன்றுதிரட்டும்படி எனக்கு அவர்கள் கட்டளையிட்டது அதைவிட எனக்குப் பளுவாக இருந்தது . நான், 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள் செய்யாத ஒன்றை நீங்கள் எப்படிச் செய்கிறீர்கள்?' என்று கேட்டேன். அதற்கு அபூ பக்ர்(ரலி), 'அல்லாஹ்வின் மீதாணையாக! இது நன்மை(யான பணி) தான்' என்று பதிலளித்தார்கள். இதையே அன்னார் என்னிடம் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டிருந்தார்கள். முடிவில் எதற்காக அபூ பக்ர் மற்றும் உமர் ஆகியோரின் மனத்தை அல்லாஹ் விரிவாக்கினானோ அதற்காக என் மனத்தையும் அல்லாஹ் விரிவாக்கினான். …….
குர்ஆனின் முடிவான ஒரு முழு தொகுப்பை முஹம்மது தம் வாழ்நாட்களில் தயாரிக்கவில்லை/தொகுக்கவில்லை என்பதை மேற்கண்ட ஹதீஸ் தெளிவாக காட்டுகிறது. முழு குர்ஆனையும் ஒன்று சேர்த்து ஒரு தொகுப்பாக (புத்தகமாக) மாற்றவேண்டும் என்று அபூ பக்கர் கூறும் போது: அல்லாஹ்வின் தூதர் செய்யாத ஒரு வேலையை நீங்கள் எப்படி செய்யலாம் என்று அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது. முஹம்மது குர்ஆனை ஒரு தொகுப்பாக முழுவதுமாக ஒன்று சேர்த்து தொகுக்கவில்லை. ஏனென்றால், அவருக்கு நம்பகமான, குர்ஆனை கற்றுக்கொடுக்கும் தோழர்கள் தங்கள் சொந்த குர்ஆன் தொகுப்புக்களை கொண்டு இருந்தார்கள்.
தேதி: 16 Jan 2021
அல்லாஹ் மீது இஸ்லாமின் குற்றச்சாட்டுகளும் தீர்வுகளும் - கட்டுரைகள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக