(இமெயில் கேள்வி பதில்கள்)
நம்முடைய கீழ்கண்ட கட்டுரையை படித்துவிட்டு, மலேசியாவிலிருந்து ஒரு கிறிஸ்தவ சகோதரர் மெயில் மூலமாக ஒரு கேள்வியை கேட்டார்.
- அரபி குர்ஆனில் மிக எச்சரிக்கையுடன் ஓதவேண்டிய இடங்கள்: பாகம் 1 - பிழையானதும், சரியானதும் (அப்துல் ஹமீது பாகவி மற்றும் சிராஜுத்தீன் நூரி தமிழாக்க விளக்கங்களின் ஆய்வுகள்)
அவரது கேள்விக்கு ஒரு சுருக்கமான பதிலை இந்த கட்டுரையில் காண்போம்.
அவர் கேட்ட கேள்வி இது தான் (வாசகரின் பெயர் மாற்றப்பட்டுள்ளது):
அன்புடையீர்,
கர்த்தருடைய பரிசுத்த நாமத்துக்கு மகிமை உண்டாவதாக.
. . .
நாம் ஏன் குர்ஆன் ஓதுதல் என்று சொல்கிறோம் என்பதுதான் எனது சந்தேகம். அவர்கள் குர்ஆனை ஏன் ஒரு பாடல் போல் 'ஓதுகிறார்கள்' என்பது எனக்குப் புரியவில்லை. அத்தோடு, காதுகளை பொத்திக் கொள்வது போல் பாவனை செய்வதும் எனக்குப் புரியவில்லை. நாம் வேதத்தை வாசிக்கிறோம்... தியானிக்கிறோம்... ஆய்வு செய்கிறோம். இது போன்ற கலைச் சொற்களை அவர்களின் சமய காரியங்களில் கவனிக்க முடியவில்லை. குறிப்பாக ஓதுதல் என்று அவர்கள் ஏன் தனித்துச் சொல்கிறார்கள்? ஓதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம் என்று ஆத்திச்சூடி சொல்கிறது. இதன் அர்த்தம் கல்வி கற்காமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம் என்று நான் புரிந்து கொள்கிறேன். இந்துக்களும் மந்திரத்தை ஓதுவதாகச் சொல்கிறார்கள்.
தயவுசெய்து சற்று நேரம் ஒதுக்கி எனது சந்தேகத்தைத் தீர்த்து வையுங்கள்.
நன்றி.
அன்புடன்
ஜான்சன்.
மலேசியா
நம்முடைய பதில்:
அன்பான சகோதரர் ஜான்சன் அவர்களுக்கு,
உங்களுடைய கருத்துக்களுக்காகவும், கேள்விக்காகவும் மிக்க நன்றி. உங்களுடைய கேள்விக்கான பதிலை இப்போது காண்போம்.
1) முஸ்லிம்கள் ஏன் குர்ஆனை ஓதுகிறார்கள், ஏன் படிப்பதில்லை?
ஒரு மொழியின் மொழிநடை பலவகைகளில் இருக்கும்,
- செய்யுள்/கவிதை/பாடல்
- உரைநடை
- கவிதை/உரைநடை இரண்டும் சேர்ந்த கலவை
"செய்யுள், பாடல் மற்றும் கவிதைகள்" போன்றவற்றை படிக்கமுடியாது, பாடத்தான் முடியும். அதாவது உரைநடை போன்று செய்யுள்களையும், பாடல்களையும் நாம் படித்தால், கேட்பதற்கு சிறிது அசௌகரியமாக இருக்கும், அல்லது காதுகளுக்கு இனிமையாக இருக்காது.
பாரதியாரின் கீழ்கண்ட பாடலை, உரைநடை போன்று படிப்பதைக் காட்டிலும், பாடல் போன்று அதன் இராகத்தில் பாடினால் தான் உண்மையான தமிழ்ச்சுவை நம் காதுகளின் சுவர்களை சுகமாக வருடும் (உண்மையில் ஓசையின்/பாடலின் சுவையை அறிவது மனது அல்லது மூளை காதுகள் அல்ல என்ற விஞ்ஞான விவரம் ஒரு பக்கம் இருக்கட்டும்).
செந்தமிழ் நாடெனும் போதினிலே - மகாகவி சுப்பிரமணிய பாரதியார்
செந்தமிழ் நாடெனும் போதினிலே - இன்பத்
தேன் வந்து பாயுது காதினிலே - எங்கள்
தந்தையர் நாடென்ற பேச்சினிலே - ஒரு
சக்தி பிறக்குது மூச்சினிலே
இதே போன்று, உரைநடை என்பது பாடல்/செய்யுள்/கவிதை போன்ற வடிவில் அல்லாமல், நாம் தினமும் பேசும் வடிவில், உரைநடை இலக்கணத்தின் படியுள்ளதாகும், இதனை நாம் அறிவோம்.
உரைநடை மற்றும் பாடல் போன்ற இரண்டு நடைகளையும் ஒன்றாகச் சேர்த்து பேசுவதும் உண்டு என்று கூறுவார்கள், முக்கியமாக இந்திய சுதந்திரத்திற்கு முன்பான நாடகங்கள் இந்த வகையில் சார்ந்ததாக கூறுவார்கள்.
குர்ஆனின் நடை செய்யுளா/கவிதையா அல்லது உரைநடையா?
குர்ஆன் எந்த நடையில் உள்ளது? முஸ்லிம் அறிஞர்களின் படி, அரபி மொழியில் உள்ள மூல குர்ஆன் 'முழுவதுமான செய்யுள்/கவிதை வடிவிலும் இல்லை, உரைநடையிலும் இல்லை', இவ்விரண்டிற்கும் இடைப்பட்ட ஒன்றாக இருக்கிறது என்பதாகும். மேலும் உரைநடை குறைவாகவும், செய்யுள் நடை அதிகமாகவும் உள்ளது எனலாம். குர்ஆனில் காணப்படும் அரபி மொழி பண்டைய கால அரபியாகும் (Classical Arabic), இன்று அரபியர்கள் பேசுவது நவீன கால அரபியாகும் (Modern Arabic). இது நம் தமிழ் மொழிக்கும் பொருந்தும், அன்று 1000 ஆண்டுகளுக்கு முன்பு, நம் முன்னோர்கள் பேசிய தமிழ், இன்று நாம் பேசும் தமிழ் இவ்விரண்டிற்கும் வித்தியாசம் இருப்பது போன்று தான் குர்ஆனிய அரபியும், இன்றைய அரபியும்.
ஏன் இவ்வளவு சுற்றி வளைத்து வரவேண்டும்? சுருக்கமாகச் சொல்வதானால், குர்ஆன் அதிகமாக கவிதை வடிவில் இருப்பதினால், அதனை படிப்பதைக் காட்டிலும், பாடல் போன்று பாடுவதை முஸ்லிம்கள் விரும்புகிறார்கள். இதனால் தான் குர்ஆனை ஓதுவது என்கிறார்கள்.
2) மூல குர்ஆனை ஓதவேண்டும், தமிழாக்கத்தை படிக்கவேண்டும்:
என் குடும்பத்தில் என் சகோதரிகள் குர்ஆனை அரபியில் படிக்க கற்றுக்கொண்டார்கள் (இராகத்தோடு அழகாக ஓத தெரியாது). ஒரு அரபி ஆசிரியை தினமும் வீட்டுக்கு வந்து, குர்ஆனை கற்றுக்கொடுத்துச் செல்வார்கள். என் சகோதரிகள் அரபியில் குர்ஆனை படித்து முடித்த அந்த நாளை கொண்டாடி, அந்த ஆசிரியைக்கு மரியாதைச் செய்தார்கள். ஆனால், ஒரு குர்ஆன் வசனத்திற்கும் என் சகோதரிகளுக்கு பொருள் தெரியாது. மேலும், அவர்கள் குர்ஆனை மிகவும் அழகான தொனியில் ஓதுவதில்லை, அதற்கு பதிலாக உரைநடையில் படிப்பது போன்று படித்துக்கொண்டுச் செல்வார்கள்.
பொதுவாக மத நூல்கள் என்று வந்துவிட்டால், மக்கள் அவைகளை படிப்பதில்லை, அவைகளை ஓதுவார்கள். ஏன் ஓதுவார்கள்? என்று கேட்டால், அவர்களுக்குத் தான் பொருள் தெரியப்போவதில்லை எனவே மத நூல்களை அரபியில் ஓதுவார்கள், சமஸ்கிருதத்தில் ஓதுவார்கள் எனலாம்.
எனவே, "குர்ஆனை அரபியில் ஓதுவார்கள், தமிழாக்கங்களில் படிப்பார்கள்" எனலாம்.
முஸ்லிம் குடும்பங்களில் ஏதாவது ஒரு சிறுவன்/சிறுமி குர்ஆனை அழகாக ஓத கற்றுக்கொண்டால் போதும், அவருக்கு நல்ல மரியாதை கிடைக்கும். அதுவும் இன்றுள்ள யுடியூப் (Youtube) & மொபைள்(Mobile) நாட்களில், அவர்கள் ஓதும் அந்த வீடியோவை அப்லோட் செய்து, வாட்ஸப்பில் அனுப்பி பெருமிதம் கொள்வார்கள் அவர்களின் பெற்றோர்கள். கிறிஸ்தவத்தில், நம் பிள்ளைகள் நன்றாக இயேசுவின் பாடல்களை பாடுவது மற்றும் பைபிள் வசனங்களை மனப்பாடம் செய்வது எப்படி பெற்றோர்களால் கருதப்படுகின்றதோ அது போல, இஸ்லாமில் குர்ஆனை அரபியில் ஓதுவதாகும்.
முஸ்லிம் பிள்ளைகள் தங்கள் பெற்றோர்களிடம் "நான் 100 குர்ஆன் வசனங்களை தமிழாக்கத்தில் மனப்பாடம் செய்துள்ளேன்" என்று சொல்லும் போது, அவர்களுக்கு எந்த ஒரு வித்தியாசமும் தெரியாது, ஆனால் பிள்ளைகள் "அரபியில் 10 வசனங்களை மனப்பாடமாக ஓதினால் போதும்", பெற்றோர்களின் மனது சந்தோஷத்தில் தாண்டவமாடி மனது குளிர்ந்துவிடும்.
3) குர்ஆன் என்ற அரபி வார்த்தையின் பொருள் "ஓதுதல் - Recite" என்பதாகும்
குர்ஆன் என்ற அரபி வார்த்தையின் பொருள் "ஓதுதல் - Recite" என்பதாகும். எனவே முஸ்லிம்கள் குர்ஆனை ஓதுகிறார்கள். இதுவரை வெளிவந்துள்ள குர்ஆன் தமிழாக்கங்களை அதிகமாக படிப்பவர்கள் முஸ்லிம்களாக இருக்கமாட்டார்கள், முஸ்லிமல்லாதவர்களாகத் தான் இருப்பார்கள்.
ஒரு முஸ்லிம் ஒரு குர்ஆன் தமிழாக்கத்தை முழுவதுமாக தமிழில் படித்து முடித்துவிட்டு, 'நான் குர்ஆனை ஒரு முறை ஓதிவிட்டேன்' என்று சொல்லமாட்டார், ஒருவேளை அப்படி அவர் சொல்வாரானால், மற்ற முஸ்லிம்கள், 'நீ அரபியில் ஓதினாயா?' என்று கேட்பார்கள். "இல்லை, நான் குர்ஆன் தமிழாக்கத்தை ஓதினேன்" என்று கூறினால், "இனி இப்படி குர்ஆனை தமிழில் ஓதினேன் என்றுச் சொல்லாதே, தமிழில் குர்ஆனை படித்தேன் என்றுச் சொல். மேலும் குர்ஆனை அரபியில் ஓதினால் தான் அல்லாஹ் உனக்கு அதிக நன்மைகளைத் தருவான்", தமிழில் படித்தால் அதிக நன்மைகளை தரமாட்டான் இல்லை என்று சொல்லுவார்.
ஆக, பெரும்பான்மையான நேரங்களில், ஒரு முஸ்லிம் "நான் குர்ஆனை ஓதினேன்" என்று பெருமிதத்துடன் மற்றவர்களிடம் கூறும் போது, அவர் குர்ஆனை அரபியில் ஓதுவதைப் பற்றியே கூறுகின்றார் (ஒருவசனம் கூட புரியவில்லையென்றாலும் சரி) என்று பொருள் தமிழாக்கத்தை படித்து புரிந்துக்கொண்டார் என்று பொருள் அல்ல. பெற்றோர்களும் "என் மகன்/மகள், குர்ஆனை இதுவரை 3/5/10 முறை ஓதியிருக்கிறான்(ள்)" என்று சொல்லும் போது, அவர்கள் அரபியில் ஓதுவதைப் பற்றியே கூறுகிறார்கள் என்று பொருள். தமிழில் ஒருவர் குர்ஆனை முழுவதுமாக படித்து விட்டு பெருமிதத்துடன் சொல்வதை நாம் பெரும்பான்மையாக முஸ்லிம்களிடமிருந்து கேட்கமுடியாது, அரபியில் ஓதுவதைத் தான் பெருமிதத்துடன் கூறுவார்கள்.
குறிப்பு: என் கருத்துப்படி ஒரு மார்க்கம் உண்மையானதா இல்லையா? என்பதை அறிய ஒரு சிறிய சோதனை. எந்த மார்க்கம் தான் உருவாக்கப்பட்ட காலத்தின் மொழியையே கலாச்சாரத்தையே உலக மக்கள் அனைவரும் எப்போதும் பின்பற்றவேண்டும், மக்களுக்கு புரியவில்லையென்றாலும் அம்மொழியிலேயே தொழுகை செய்யவேண்டும், பூஜைகள் செய்யவேண்டும் என்று கட்டளையிடுகிறதோ, அது ஒரு பொய்யான மனிதர்களால் உருவாக்கப்பட்ட மார்க்கமாகும். இதற்கு சரியான சான்று, இஸ்லாமாகும். அரபி புரியவில்லையென்றாலும், அரபியிலேயே தொழவேண்டும், குர்ஆனை அரபியிலேயே படிக்கவேண்டும் அப்போது தான் அல்லாஹ் அங்கீகரிப்பான் என்பதிலிருந்து இதனை நாம் அறியலாம். இறைவனுடன் மனிதன் பேசுவதற்கு, நெருங்குவதற்கு மொழியோ, இதர பாரம்பரியங்களோ, கடினமான சடங்காச்சாரங்களோ தடையாக இருக்கக்கூடாது என்று நான் நம்புகிறேன்.
4) எபிரேய, கிரேக்க மொழியில் கிறிஸ்தவர்கள் பைபிளை ஓதுவதில்லை, பைபிளை மொழியாக்கங்களில் படிக்கிறார்கள் - இது சரியா?
இந்து கோயில்களில் சமஸ்கிருதத்தில் பூஜைகள் செய்கிறார்கள். தமிழில் செய்வதற்கு மிகப்பெரிய சண்டையே நடந்துக்கொண்டு இருக்கிறது. முஸ்லிம்கள் அரபியில் தொழுகிறார்கள், அதிக நன்மைகளுக்கு குர்ஆனை அரபியில் படிக்கும்படி சொல்கிறார்கள். ஆனால், குர்ஆனுக்கு அரபி இருப்பது போன்று பைபிளுக்கும் எபிரேய மற்றும் கிரேக்க மொழிகள் உள்ளன. இருந்தபோதிலும், பைபிளின் தேவன் யாரையும் எபிரேயம் படிக்கும்படி, கிரேக்கம் படிக்கும்படி கட்டாயப்படுத்தவில்லை. கி.மு. 2ம் நூற்றாண்டுகளிலேயே எபிரேய மொழியிலிருந்து கிரேக்க மொழிக்கு பழைய ஏற்பாடு மொழியாக்கம் செய்யப்பட்டது. இன்று உலகில் 2000க்கும் அதிகமான மொழிகளில் பைபிள் மொழியாக்கம் செய்யப்பட்டு படிக்கப்பட்டுக்கொண்டு இருக்கிறது (ஓதப்பட்டுக்கொண்டு அல்ல).
வேத வசனங்களை வாசிப்பது மட்டுமல்ல, கேட்பது மட்டுமல்ல அவைகளை கைகொள்ளுகிறவர்கள் தான் பாக்கியவான்கள், இதைத் தான் பைபிளின் இறைவன் எதிர்ப்பார்க்கிறார்.
வெளி 1:3 இந்தத் தீர்க்கதரிசன வசனங்களை வாசிக்கிறவனும், கேட்கிறவர்களும், இதில் எழுதியிருக்கிறவைகளைக் கைக்கொள்ளுகிறவர்களும் பாக்கியவான்கள், காலம் சமீபமாயிருக்கிறது.
உனக்கு புரியாவிட்டாலும், நீ கைகொள்ளாமல் போனாலும் பரவாயில்லை, என் வேதத்தை மூல மொழிகளாகிய எபிரேய மற்றும் கிரேக்க மொழிகளில் ஓத வேண்டும் என்று அவர் கட்டளையிடவில்லை.
சகோதரர் ஜான்சன் அவர்கள் எழுதியவைகள்:
நாம் வேதத்தை வாசிக்கிறோம்... தியானிக்கிறோம்... ஆய்வு செய்கிறோம்.
சகோதரரே இது உண்மை! நாம் புரிந்துக்கொண்டு வாசித்தால் தான், தியானிக்கமுடியும், ஆய்வு செய்யமுடியும். புரியாத மொழியில் படித்தால், இந்த மூன்றையுமே செய்யமுடியாது.
5) குர்ஆனின் ஓதுதல் காதுகளுக்கு இனிமையாக இருக்கிறது என்ற மாயை?
குர்ஆனை அரபியில் ஓதுதல் காதுகளுக்கு இனிமையாக இருக்கிறது, இப்படி யாருமே ஒரு நூலை உருவாக்கமுடியாது என்று முஸ்லிம்கள் கருதுகிறார்கள். காதுகளுக்கு இனிமையான ஓசையுடன் கூடிய பாடலோ, கவிதையோ, செய்யுளோ 'அது இறைவனிடமிருந்து வந்ததாக இருக்கவேண்டும்' என்று கருதுவது தவறானதாகும். குர்ஆனின் ஓதுதல் இனிமையாக இருக்கிறது அதனால், அது அல்லாஹ்விடமிருந்து வந்திருக்கவேண்டும் என்று நம்புவது தவறானதாகும். ஏனென்றால், இறைவனுக்கு எதிரான கருத்துக்கள் கொண்ட பாடல்களையும் இனிமையான ஓசையுடன் எழுதவும் பாடவும் முடியும் என்பதை முஸ்லிம்கள் அறிவார்களா? ஆகையால், நல்ல இனிமையான பாடல், அல்லது இசை 'இறைவனிடமிருந்து வந்திருக்கவேண்டும்' என்றுச் சொல்வது தவறான நம்பிக்கையாகும்.
இரண்டாவதாக, ஒரு மொழியின் பாடல் இனிமையாக இருக்கிறது என்று ஒருவர் கருதினால், அது அவருக்கு மட்டுமே அல்லது அந்த மொழியை சார்ந்திருக்கும் மக்களுக்கு மட்டுமே அப்படி இனிமையாகத் தெரியும், மற்றவர்களுக்கு அது இனிமையாக இருக்காது.
உதாரணத்திற்கு தமிழ் மொழியின் ஒரு அழகான பாடல், எல்லா மொழிக்காரர்களுக்கும் பிடிக்கும் என்று எதிர்ப்பார்ப்பது தவறானதாகும்! குர்ஆனின் வசனங்கள் ஓதும் போது, அது உலகத்தில் உள்ள அனைத்து மொழிக்காரர்களுக்கும் இனிமையாக இருக்கும், அது தான் தெய்வீகத்திற்கு ஒரு சான்று என்றுச் சொல்வது தவறான எதிர்ப்பார்ப்பாகும்.
என்னைக் கேட்டால், எனக்கு பிடித்தமான பாடல்கள் தமிழ் பாடல்கள், செய்யுள்கள் என்பேன், உலகிலேயே இனிமையான பாடல்களைக் கொண்ட மொழி தமிழ் என்பேன். ஆனால், இது சரியான கூற்றா? தெலுங்கு, கன்னடம், மலையாளம் மொழிகளை பேசும் அறிஞர்களிடம், கவிஞர்களிடம் சென்று இதனை நான் சொன்னால், அதனை அவர்கள் ஏற்கமாட்டார்கள். ஏனென்றால், அவரவருக்கு அவரது மொழி இனிமையானது. ஆனால், உலகிலேயே மூத்த மொழி தமிழ் என்றுச் சொன்னால், யாரும் மறுக்கமாட்டார்கள், ஏனென்றால் அதற்கு தகுந்த சான்றுகள் உண்டு. ஆனால், "உலகிலேயே தமிழ் இனிமையானது" என்றுச் சொன்னால், இது தனிப்பட்ட மனிதனின் கருத்து.
இதே போன்று தான் "அரபியும், குர்ஆனின் ஓதுதலில் உள்ள இனிமையும்" தனிப்பட்ட மக்களின் கருத்துக்கள் ஆகும். இவைகளை மற்றவர்கள் மீது திணித்தால், மக்கள் ஏற்கமாட்டார்கள்.
முஸ்லிம்கள் அதான் ஓதும் போது, காதுகளை பொத்திக்கொள்வது ஏன்?
இதற்கு ஒரு ஆன்மீக காரணம் தேவையில்லை. பெரிய இசைக்கச்சேரிகளில், அல்லது பாடல்களை பதிவு செய்யும் அறைகளில் (Recording Rooms), பாடுபவர்கள் தங்கள் காதுகளில் ஒரு ஹெட்போன் (HeadPhone) போட்டுக்கொண்டு பாடுவதை பார்க்கமுடியும். இதற்கு காரணம் என்னவென்றால், காதுகளை நாம் பொத்திக்கொண்டு பாடும் போது, அல்லது நயம்பட ஓதும் போது, நம் சத்தம்/பாடல் நமக்கே கேட்பதற்காக இப்படி செய்வார்கள். இதனால் நாம் எங்கு எப்படி பாடவேண்டும், எந்த இடத்தில் ராகம் உயரவேண்டும், குறையவேண்டும் போன்றவற்றை அறிந்துக்கொண்டு சரி செய்துக்கொள்ள இது உதவும்.
மேலும், பெரிய பாட்டுக்கச்சேரிகளில், பலவகையான இசைக்கருவிகள் பாடுபவருக்கு பின்பாக அதிக சத்தத்தோடு இசைக்கும் போது, பாடுபவர்களுக்கு தாங்கள் பாடும் பாட்டும் அவர்களுக்கே கேட்காது, எனவே ஒரு காதை ஒரு விரலால் பொத்திக்கொண்டு, பாடுவார்கள். இதன் மூலம், தங்கள் பாட்டு, அவ்வளவு பெரிய இசைக்கருவிகளின் சத்தங்களுக்கு இடையில் தங்களுக்கு கேட்கும். இதனால் அவர்கள் தங்கள் சத்தங்களை உயர்த்தியோ, தாழ்த்தியோ பாடுவார்கள்.
இதனால் தான் குர்ஆனை நயம்பட ஓதும் முஸ்லிம்கள் இரு காதுகளை பொத்திக்கொண்டு, அழகாக பாடுவார்கள்.
"ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்" என்பது உலகநாதர் இயற்றிய உலகநீதி நூலிலிருந்து வரும் வரியாகும். மேலும், அக்காலத்தில் "ஓதுவது" என்பது பொதுவாக "படிப்பதற்கும், செய்யுள்களை வாசிப்பதற்கும், மத நூல்களை வாசிப்பதற்கும்" என்று அனைத்திற்கும் பயன்படுத்தியுள்ளார்கள். காலப்போக்கில் ஓதுவது என்பது வெறும் செய்யுள்களை அல்லது மதநூல்களை படிப்பதற்கு மட்டுமே என்ற வழக்கு மாறிவிட்டது. எனவே தான் குர்ஆனையும் அரபியில் முஸ்லிம்கள் ஓதுகிறார்கள், படிப்பதில்லை!
நான் இதோடு இந்த பதிலை முடிக்கிறேன்.
1) மத நூல்களை புரியாத மொழியில் படிக்கும் மக்கள் "தங்கள் வேதங்களை ஓதுவார்கள்".
2) மத நூல்களை புரியும் மொழியில் படிக்கும் மக்கள் "தங்கள் வேதங்களை படிப்பார்கள்".
3) ஒரு கவிதையின் இனிமையான ஓசையுள்ள வரிகள், "அது தெய்வீகமானது என்பதற்கான சான்று ஆகாது".
4) ஒரு மனிதனுக்கு இனிமையான ஓசையாக தோன்றும் வரிகள், உலக மக்கள் அனைவருக்கும் இனிமையாகவே இருக்கும் என்று எதிர்ப்பார்ப்பது, அறியாமையிலும் மிகப்பெரிய அறியாமையாகும்.
5) உலகில் எந்த ஒரு மொழியும் "தெய்வ மொழி" ஆகமுடியாது.
6) அன்று தேவன் ஆதாமுடன் பேசிய மொழி எதுவென்று நமக்குத் தெரியாது, ஒருவேளை அந்த மொழி எந்த மொழியென்று சான்றுகளோடு யாராவது இன்று கண்டுபிடித்துச் சொன்னாலும், அது தெய்வ மொழியென்று நான் ஏற்கமாட்டேன். "மொழி" கருத்துக்களை பரிமாறிக்கொள்ளும் ஒரு வழி.
தேதி: 10th Aug 2021
Source: https://www.answering-islam.org/tamil/authors/umar/email_replies/quran_recite_or_read.html
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக