(Salaam Alaikum)
ஆசிரியர் : ராபர்ட் ஸீவர்ஸ்
தமிழாக்கம்: தமிழ் கிறிஸ்தவர்கள்
நீங்கள் மசூதிக்கு சென்று இருந்தாலோ அல்லது முஸ்லிம் நண்பர்களோடு ஒன்றாக சேர்ந்து பேசிக்கொண்டு இருந்தாலோ, உங்கள் காதுகளில் "அஸ்ஸலாம் அலைகும்" என்ற வார்த்தைகள் அவ்வப்போது கேட்கும். முஸ்லிம்கள் ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது பொதுவாக "அஸ்ஸலாம் அலைகும்" என்று ஒருவரை ஒருவர் வாழ்த்துவார்கள். அரபி மொழி வாழ்த்துதலாகிய இதன் அர்த்தம் "உங்கள் மீது சாந்தி உண்டாகட்டும்" என்பதாகும். ஒருவர் இப்படி வாழ்த்தும் போது, இதற்கு மறுமொழியாக "வா அலைகும் அஸ்ஸலாம் (உங்கள் மீதும் சாந்தி உண்டாகட்டும்)" என்று கூறுவார்கள். ஒருவரை பார்க்கும் போது கூறப்படும் இந்த வாழ்த்துதலை நாம் சிந்தித்தால், கிறிஸ்தவத்திற்கும் இஸ்லாமுக்கும் இடையே இருக்கும் ஒரு ஆன்மீக எதிர்மறையை காணலாம். ஒருவர் மீது சாந்தியை கூறும் வாழ்த்துதல்களை நாம் மேலோட்டமாக கவனித்தால், கிறிஸ்தவமும், இஸ்லாமும் ஒன்று போலவே காணப்படும், ஆனால், ஆழமாக ஆய்வு செய்தால், என்னென்ன விஷயங்கள் வெளியே வரும்? அவைகளை இப்போது காண்போம்.
ஒருவர் கூர்ந்து கவனித்தால், இயேசு சமாதானத்தை கொண்டுவந்தார் (யோவான் 16:33) என்பதை கண்டுபிடிக்கலாம். எல்லா புத்திக்கும் மேலான தேவசமாதானம் பற்றி பவுல் கூறுகிறார் (பிலிப்பியர் 4:7). மேலும் "சலாம்" என்ற மூல அரபி வார்த்தையிலிருந்து "இஸ்லாம்" என்ற வார்த்தை வந்தது என்று முஸ்லிம்கள் கூறுவார்கள். இஸ்லாம் என்றால் "சமர்ப்பித்தல்" என்று அர்த்தம் இருந்தாலும், மூல வார்த்தையானது "சமாதானம்" என்று இருப்பதினால், "இஸ்லாம்" என்றால் "சமாதானம்" என்றும் கூட நாம் அர்த்தம் கொள்ளலாம் என்று முஸ்லிம்கள் கூறுவார்கள். நாம் இப்படி கூறும்போது, உடனே சிலர் "இஸ்லாம் ஒரு அமைதி மார்க்கமா?" என்ற தலைப்பு பற்றி பேச ஆரம்பித்து விடுவார்கள். ஆனால், இந்த தளத்தின் ஆசிரியர் அப்படிப்பட்ட உரையாடல் பக்கம் செல்ல விரும்புவதில்லை. இக்கட்டுரையின் தலைப்பிற்கு வெளியே செல்லாமல் ஆய்வு செய்தால், இன்னும் அதிகமான சத்தியங்கள் வெளிப்படும் என்பதில் சந்தேகமில்லை. இப்போது நாம் இருவரும் ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள் நிற்கிறோம், அதாவது கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும் தங்கள் மார்க்கம் அமைதி மார்க்கம் என்று சொல்லிக்கொள்கிறார்கள். மேலும், இயேசு கூட இஸ்லாமிய முறையிலான வாழ்த்துதலை கூறினார் (யோவான் 20:21), எனவே இயேசு கூட ஒரு முஸ்லிம் தான் என்றுச் சொல்லி முஸ்லிம்கள் உடனே பதில் சொல்வார்கள்[1].
இந்த குழப்பத்தை தீர்க்க நாம் "பைபிளில் எப்படி வாழ்த்துதல்கள் கூறப்பட்டது" என்பதைப் பற்றி ஆழமாக சிந்திப்போம். அப்போஸ்தலர் பவுல் அனேக கடிதங்களை எழுதியுள்ளார், இந்த கடிதங்களில் அனேக முறை வாழ்த்துதல்கள் கூறப்பட்டு இருக்கும். இதைப் பற்றி அறிய, 1 கொரிந்தியர் 1:3, ரோமர் 1:7 அல்லது கலாத்தியர் 1:3ம் வசனங்களை கவனிக்கலாம். இவைகளில் எந்த வகையான ஒரு வாழ்த்துதல் பாணி பின்பற்றப்பட்டுள்ளது? அல்லது அப்போஸ்தலர் பேதுரு எப்படி வாழ்த்துதல்களை கூறுகிறார் என்பதை 1 பேதுரு 1:2 அல்லது 2 பேதுரு 1:2ம் வசனங்களை கவனிக்கலாம். மேலும் அப்போஸ்தலர் யோவான் எப்படி வாழ்த்துதல்கள் கூறுகிறார் என்பதை 1 யோவான் 3 மற்றும் வெளிப்படுத்தின விசேஷம் 1:4ம் வசனங்களில் நாம் காணலாம். பைபிளில் மொத்தம் 17முறை வாழ்த்துதல்கள் கூறும் போது "கிருபையும் சமாதானமும்" என்று கூட்டாக சொல்லப்பட்டுள்ளது. இந்த 17 முறையையும் நாம் கவனித்தால், முதலாவது "கிருபையும்" அதற்கு அடுத்ததாக "சமாதானமும்" வருவதை நாம் காணமுடியும். அதாவது சமாதானத்திற்கு முன்பு கிருபை தவறாமல் வருகிறது. ஒரு இடத்திலும் முதலாவது "சமாதானம்" வந்து அதன் பிறகு "கிருபை" வரவில்லை என்பதை கவனிக்கவேண்டும்.
இப்போது ஒரு முக்கியமான கேள்வி எழுகின்றது, அதாவது கிருபைக்கு முன்பாக சமாதானம் வர வாய்ப்பு இருக்கின்றதா? பிலிப்பியருக்கு எழுதின கடிதத்தில் சமாதானம் பற்றி சொல்லப்படுகின்றது. அதாவது எல்லா புத்திக்கும் மேலான சமாதானம் எப்படி வருகிறது? நாம் சந்தோஷமாக இருந்து, ஜெபத்திலும், வேண்டுதலிலும், கர்த்தருக்கு நன்றி சொல்வதிலும் தரிந்து இருந்தால், இப்படிப்பட்ட சமாதானம் வருகிறது என்று சொல்லப்பட்டுள்ளது. நாம் ஏன் இதனை செய்கிறோம் என்று கேள்வி கேட்டால், கர்த்தர் தம்முடைய கிருபையினாலே நம்மை தம்மிடம் அழைத்துள்ளார் என்பதை முதலாவது நாம் கவனிக்கவேண்டும். யோவான் 16:33ம் வசனத்தில் இயேசு கூறிய சமாதானத்தின் பின்னணி இதுவாகும். அதாவது, இயேசு நமக்கு சமாதானம் கொடுத்துள்ளார், ஏனென்றால், அவர் உலகத்தை ஜெயித்துள்ளார், மேலும் தம் சீடர்களுக்கு "தாம் யார்" என்பதை வெளிப்படுத்தியுள்ளார், இதனால் தான் தனக்கு சமாதானத்தை கொடுக்கும் உரிமை உண்டு என்பதை விளக்குகிறார். தம்மை நம்பும் விசுவாசிகளுக்கு கிருபையை கொடுக்கும் படியாக, அவரே மூலகாரணமாக இருக்கும்படியாக பிதாவினிடத்தில் சென்றுள்ளார். இதன் பிறகு அவர் சமாதானத்தை விசுவாசிகளுக்கு கொடுக்கிறார்.
ஆக, இப்போது அதே கேள்வி மறுபடியும் கேட்கப்படுகின்றது, அதாவது கிருபை இல்லாமல் சமாதானம் உண்டாக முடியுமா? இயேசுக் கிறிஸ்து மூலமாக தேவன் கொடுத்த ஒப்புறவாகுதலை மனிதன் ஏற்றுக்கொள்ளாதவரை அவனுக்கும் தேவனுக்கும் இடையே "சமாதானம்" இருக்க சாத்தியம் இல்லை. இறைவனுக்கும் மனிதனுக்கும் இடையே நிலவும் "இந்த சமாதானம்" என்பது மனிதனுடைய செயல்களினால் உண்டாவதில்லை, அது கிருபையினால் உண்டாகிறது (எபேசியர் 2:8-9). தேவனோடுள்ள நம்முடைய உறவுமுறையும், சமாதானமும் தேவனுடைய கிருபையின் மூலமாகவே வருகிறது. மனிதர்களுக்கு இடையே, குழுக்களுக்கு இடையே அல்லது நாடுகளுக்கு இடையே நாம் தற்காலிகமாக சமாதானத்தை உண்டக்க முடியும். ஆனால், உலக சரித்திரத்தை நாம் பார்க்கும் போது, ஒவ்வொரு நாடும் மற்ற நாட்டுடன் நிரந்தரமாக சமாதானமாக இருந்ததில்லை. இதுமட்டுமல்ல, நம்முடைய தனிப்பட்ட அனுபவத்திலும் நாம் காணும் வண்ணமாக, நம் குடும்ப நபர்கள் மற்றும் நண்பர்கள் மத்தியில் எப்போதும் சமாதானமாக இருப்பது என்பது மிகவும் கடினமானதாக இருக்கிறது. எல்லாரோடும் சமாதானமாக இருப்பது என்பது ஒரு தொடர் போராட்டமாக இருக்கிறது. இப்படி தொடர்ச்சியாக சமாதானமாக இருக்க வேண்டுமென்றால், சில நேரங்களில் நமக்கு எதிராக தீமை செய்தவர்களை நாம் கிருபையோடு மன்னிக்க தயாராக இருக்கவேண்டும். இந்த இடத்திலும் சமாதானம் என்பது நமக்கு தீமை செய்தவர்களுக்கு சாதகமாக நாம் கிருபையை பொழிவதினால் மட்டுமே உண்டாகிறது என்பதை காணலாம்.
இயேசு ஒரு இஸ்லாமிய முறைப்படி வாழ்த்துதல்கள் கூறினார் என்றுச் சொல்லும் இஸ்லாமிய வாதங்களுக்கு பதில் என்ன? இப்படிப்பட்ட வாழ்த்துதல்களை இயேசு கூறியதாக நாம் நான்கு முறை பைபிளில் காணலாம்: அவையாவன - லூக்கா 24:36, யோவான் 20:19, யோவான் 20:21 மற்றும் யோவான் 20:26ம் வசனங்கள் ஆகும். இந்த அனைத்து வசனங்களில் காணப்படும் பொதுவான விவரம் என்ன? இவ்வசனங்களில் காணப்படும் பொதுவான விஷயம் என்னவென்றால், இந்த வாழ்த்துதல்கள் அனைத்தும், இயேசு உயிரோடு எழுத்த பிறகு கொடுத்த வாழ்த்துதல்கள் ஆகும். இந்த வாழ்த்துதல்களை இயேசு எப்போது கொடுத்தார் என்று கேட்டால், அவர் முதலாவது சிலுவையில் மரித்து, உயிர்த்தெழுந்து, பிதாவினிடத்தில் சென்று, மனிதனுக்கும் தேவனுக்கும் இடையே முறிந்த போய் இருந்த உறவுமுறையை சீர்படுத்திவிட்டு, அதன் பிறகு தான் "சமாதானம்" என்று வாழ்த்துதல்களை கூறுகிறார். "உங்களுக்கு சமாதானம்" என்ற இயேசுவின் வாழ்த்துதல்கள், இயேசு தம்முடைய ஊழியத்தை முடித்த பிறகு கூறுகிறார், அதாவது அவரது ஊழியத்தின் மூலமாக நாம் தேவனுடைய கிருபையை முழுவதுமாக பெற்ற பிறகு இயேசு "உங்களுக்கு சமாதானம்" என்று கூறுகிறார். மறுபடியும் இங்கும் நாம் அதே பாணியை பார்க்கிறோம், அதாவது கிருபையை தொடர்ந்து தான் சமாதானம் வருகிறது.
இந்த சிறிய உதாரணத்திலும் கூட, இஸ்லாமுக்கும் கிறிஸ்தவத்திற்கும் இடையே இருக்கும் வித்தியாசத்தை நம்மால் மறுபடியும் காணமுடியும். சமாதானத்தை இஸ்லாம் முதலாவது இடத்தில் வைக்கிறது, அந்த சமாதானத்தை கிருபை இல்லாமல் அடைய இஸ்லாம் முயற்சிக்கிறது. ஆனால், கிறிஸ்தவத்தில் நாம் காணும் போது, சமாதானம் என்பது கிருபைக்கு பின்பே எப்போதும் வருகிறது, கிருபைக்கு முன்பு வருவதில்லை.
கிறிஸ்தவர்களாகிய நாம் இப்படியாக வாழ்த்துதல்கள் கூறலாம், அதாவது "உனக்கு கிருபை உண்டாகட்டும் – Grace be unto You" என்று நாம் கூறினால் பொருத்தமாக இருக்கும். இந்த சமயத்தில், அரபி பேசும் இஸ்லாமியர்களிடம் நாம் கேட்கவிரும்பும் கேள்வி என்னவென்றால், "உங்களுக்கு கிருபை உண்டாகட்டும்" என்ற வார்த்தைகளுக்கு நிகராக அரபியில் எப்படி கூறலாம்? ஒருவேளை இதை நாம் கூறும் போது, அதற்கு மறுமொழியாக அடுத்தவர் எப்படி பதில் சொல்லவேண்டும்? அரபி தெரிந்தவர்கள் இந்த இரண்டு வாக்கியங்களை அரபியில் சொல்ல எங்களுக்கு உதவலாமே?
[1] my.opera.com/islamicworld/blog/
ஆங்கில மூலம்: Salaam Alaikum
ராபர்ட் ஸீவர்ஸ் அவர்களின் இதர கட்டுரைகள்
© Answering Islam, 1999 - 2013. All rights reserved.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக