இஸ்லாமின் அரச குடும்பம்
ஆசிரியர்: சைலஸ்
பாகம் 3: குர்ஆனில் தெரித்த இரத்தம்
(உஸ்மானும் இஸ்லாமிய அரச குடும்பமும்)
ஸஹீஹ் புகாரி 650. உம்மு தர்தா(ரலி) அறிவித்தார்.
அபூ தர்தா கோபமாக என்னிடம் வந்தார்கள். நீங்கள் கோபமாக இருக்கக் காரணம் என்ன? என்று கேட்டேன். அதற்கு, 'அல்லாஹ்வின் மீது ஆணையாக நபி(ஸல்) அவர்களின் சமூகம் கூட்டாகத் தொழுகிறார்கள் என்பதைத் தவிர வேறு எதையும் அவர்களிடம் நான் காணவில்லை!' எனக் கூறினார்கள்.
(இந்த நிகழ்ச்சி அபூ தர்தாவின் கடைசி காலத்தில் நடந்தது, மேலும் உஸ்மான் ஆட்சியின் போது நடந்தது)
ஸஹீஹ் புகாரி 3655. இப்னு உமர்(ரலி) கூறினார்.
நாங்கள் நபி(ஸல்) அவர்களின் காலத்தில் மக்களிடையே சிறந்தவர்கள் இன்னார், இன்னார் என்று மதிப்பிட்டு வந்தோம். (முதலில்) அபூ பக்ர்(ரலி) அவர்களைச் சிறந்தவராக மதிப்பிட்டோம். பிறகு உமர் இப்னு கத்தாப்(ரலி) அவர்களையும் பிறகு உஸ்மான் இப்னு அஃப்பான்(ரலி) அவர்களையும் சிறந்தவர்களாக மதிப்பிட்டு வந்தோம்.
ஸஹீஹ் புகாரி 3700. அம்ர் இப்னு மைமூன்(ரஹ்) அறிவித்தார்.
உமர் இப்னு கத்தாப்(ரலி) கொலை செய்யப்படுவதற்குச் சில நாள்களுக்கு முன் மதீனாவில் அவர்களை பார்த்தேன். . . . . இப்படி அவர்கள் சொல்லி நான்கு நாள்கள் கூட சென்றிருக்காது. அதற்குள் (பிச்சுவாக் கத்தியால்) உமர்(ரலி) குத்தப்பட்டு வட்டார்கள்.
உமர்(ரலி) குத்தப்பட்ட நாளில் அதிகாலை(த் தொழுகைக்காக) நான் (தொழுகை அணியில்) நின்று கொண்டிருக்கிறேன். எனக்கும் உமா(ரலி) அவர்களுக்கும் இடையில் அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களைத் தவிர வேறு எவரும் இருக்கவில்லை.
. . . (அங்கிருந்த ஆண்கள் உமர்(ரலி) அவர்களை நோக்கி), 'இறை நம்பிக்கையாளர்களின் தலைவரே! தங்களுக்கு ஒரு பிரதிநிதியை அறிவித்து, இறுதி உபதேசம் செய்யுங்கள்" என்று கூறினார்கள். அதற்கு அவர்கள், 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எவரைக் குறித்து திருப்தியடைந்த நிலையில் இறந்தார்களோ அந்தச் சிலர் அல்லது அந்தக் குழுவினர். தாம் இந்த (ஆட்சித் தலைமை) விஷயத்தில் (முடிவு செய்ய) வேறெவரை விடவும் மிகத் தகுதி படைத்தவர்களாக எனக்குத் தெரிகிறார்கள்." என்று கூறிவிட்டு, அலீ(ரலி), உஸ்மான்(ரலி), ஸுபைர்(பின் அவ்வாம் (ரலி), தல்ஹா(ரலி), ஸஅத் இப்னு அபீ வக்காஸ் (ரலி), அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி) ஆகியோரின் பெயர்களையும் அப்போது குறிப்பிட்டார்கள். மேலும், உமர்(ரலி), 'உமரின் மகன் அப்துல்லாஹ்வும் உங்களுடன் இருப்பார். ஆனால், ஆட்சி அதிகாரத்தில் அவருக்கு எந்தப் பங்குமீல்லை இதை மகன் அப்துல்லாஹ்வூக்கு ஆறுதல் போன்று கூறினார்கள்.
. . . .
(கத்திக்குத்துக்கு உள்ளாம் மூன்று நாள்களுக்குப் பிறகு) உமர்(ரலி) இறந்துவிட்டார்கள். . . . அவர்களை அடக்கம் செய்து முடித்தபோது அந்த (ஆறு பேர் கொண்ட) ஆலோசனைக் குழுவினர் (அடுத்த ஆட்சித் தலைவர் யார் என்று தீர்மானிப்பதற்காக ஓரிடத்தில்) குழுமினர். அப்போது, அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி) அவர்கள், '(கருத்து வேறுபாட்டைக் குறைப்பதற்காக, ஆட்சித் தலைவரைத் தேர்ந்தெடுக்கும்) உங்களின் உரிமையை உங்களில் மூன்று பேர்களிடம் ஒப்படையுங்கள்" என்று கூறினார்கள். அப்போது ஸுபைர்(ரலி), 'என்னுடைய அதிகாரத்தை அலீ அவர்களுக்கு (உரியதாக) நான் ஆக்கிவிட்டேன்" என்று கூறினார்கள். பிறகு தல்ஹழ(ரலி), 'என்னுடைய அதிகாரத்தை நான் உஸ்மான் அவர்களுக்கு (உரியதாக) ஆக்கி விட்டேன்" என்ற கூறினார்கள். பிறகு ஸஅத்(ரலி), 'என்னுடைய அதிகாரத்தை நான் அப்தூ ரஹ்மான் பின்அ வ்ஃப் அவர்களுக்கு (உரியதாக) ஆக்கிவிட்டேன்" என்று கூறினார்கள். அப்போது அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) (அலீ ரலி- அவர்களையும் உஸ்மான்- ரலி- அவர்களையும் நோக்கி), 'உங்கள் இருவரில் இந்த அதிகாரத்திலிருந்து விலகிக் கொள்(ள முன்வரு)கிறவரிடம் இந்தப் பொறுப்பை நாம் ஒப்படைப்போம்.
அல்லாஹ்வும், இஸ்லாமும் அவரின் மீது (கண்காணிப்பாளர்களாக) உள்ளனர். உங்களில் சிறந்தவர் யாரென (அவரவர் மனத்திற்குள்) சிந்தித்துக் கொள்ள வேண்டும்" என்று கூறினார்கள். அப்போது இருமூத்தவர்(களான உஸ்மான்(ரலி) அவர்களும், அலீ(ரலி) அவர்)களும் மெளனமாக இருந்தார்கள். அப்போது, அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி), 'நீங்கள் (ஆட்சியாளரைத் தேர்ந்தெடுக்கும்) அதிகாரத்தை என்னிடம் ஒப்படைக்கிறீர்களா? உங்களில் சிறந்தவரை நான் (தரத்தில்) குறைத்து மதிப்பிடவில்லை யென்பதை அல்லாஹ் கண்காணித்துக் கொண்டேயிருக்கிறான்" என்று கூறினார்கள். அதற்கு, அவ்விருவரும் 'ஆம்! (உங்களிடம் அப்பொறுப்பை ஒப்படைக்கிறோம்)" என்றனர். அப்போது அவ்விருவரில் ஒருவரின் ( - அலீ - ரலி அவர்களின்) கையை அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) பிடித்துக் கொண்டு 'உங்களுக்கு இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் (நெருங்கிய) உறவுமுறை இருக்கிறது. மேலும், இஸ்லாத்தில் உங்களுக்கு நீங்களே அறிந்துள்ள சிறப்பும் உண்டு. அல்லாஹ் உங்களைக் கண்காணித்துக் கொண்டேயிருக்கிறான். உங்களை நான் ஆட்சித் தலைவராக நியமனம் செய்தால் (குடிமக்களிடத்தில்) நீங்கள் நீதியுடன் நடந்து கொள்வீர்கள். உஸ்மான் அவர்களை நான் ஆட்சித் தலைவராக நியமனம் செய்தால் அவருக்கு செவிமடுத்து, கட்டுப்பட்டு நடப்பீர்கள்" என்று கூறினார்கள். பிறகு இன்னொருவரிடம் ( உஸ்மான் - ரலி - அவர்களிடம்) தனியே வந்து அலீ(ரலி) அவர்களிடம் கூறியதைப் போன்றே (அவர்களிடமும்) வாக்குறுதி வாங்கிய பின், 'உஸ்மான் அவர்களே! தங்களின் கையைத் தாருங்கள்" என்று கூறி (உஸ்மான் - ரலி - அவர்களின் கையைப் பிடித்து) அவர்களுக்கு பைஅத் (விசுவாசப் பிரமாணம்) செய்து கொடுத்தார்கள். அப்போது அலீ(ரலி) அவர்களும் உஸ்மான்(ரலி) அவர்களுக்கு விசுவாசப் பிரமாணம் செய்தார்கள். மேலும், அந்நாட்டவரும் (மதீனா வாசிகளும்) வந்து அவர்களிடம் பைஅத் செய்து கொடுத்தார்கள்.
ஸஹீஹ் புகாரி 4024. . . . .
என ஜுபைர் இப்னு முத்யிம்(ரலி) அறிவித்தார்.
ஸயீத் இப்னு முஸய்யப்(ரலி) கூறினார்
முதல் குழப்பமான உஸ்மான்(ரலி) அவர்களின் கொலை நடைபெற்றது. அது பத்ருப்போரில் பங்கெடுத்தவர்களில் ஒருவரையும்விட்டு வைக்கவில்லை. பிறகு இரண்டாம் குழப்பமான 'ஹர்ரா போர்' நடைபெற்றது. அது ஹுதைபிய்யா உடன் படிக்கையில் பங்கு கொண்ட மூன்றாவது (குழப்பம்) நடைபெற்றது. மக்களுக்கு ஆற்றல் இருந்தும் (அந்தக் குழப்பம்) விலகவே இல்லை.
சிந்தனைக்கு விருந்து:
கொலை செய்யாதிருப்பாயாக என்பதும், கொலைசெய்கிறவன் நியாயத்தீர்ப்புக்கு ஏதுவாயிருப்பான் என்பதும், பூர்வத்தாருக்கு உரைக்கப்பட்டதென்று கேள்விப்பட்டிருக்கிறீர்கள். நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; தன் சகோதரனை நியாயமில்லாமல் கோபித்துக்கொள்பவன் நியாயத்தீர்ப்புக்கு ஏதுவாயிருப்பான்; .. . .. (மத்தேயு 5:21,22)
இதன் காரணமாகவே, "நிச்சயமாக எவன் ஒருவன் கொலைக்குப் பதிலாகவோ அல்லது பூமியில் ஏற்படும் குழப்பத்தை(த் தடுப்பதற்காகவோ) அன்றி, மற்றொருவரைக் கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் யாவரையுமே கொலை செய்தவன் போலாவான்; மேலும், எவரொருவர் ஓராத்மாவை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார்" என்று இஸ்ராயீலின் சந்ததியினருக்கு விதித்தோம். . . . .. (குர்-ஆன் 5:32)
ஸஹீஹ் புகாரி 4590. ஸயீத் இப்னு ஜுபைர்(ரஹ்) அறிவித்தார்.
இது (திருக்குர்ஆன் 04:93 வது வசனம், இராக்கைச் சேர்ந்த) கூஃபாவாசிகள் (அதன் சட்டம் மாற்றப்பட்டுவிட்டதா இல்லையா என்பது தொடர்பாகக்) கருத்து வேறுபாடு கொண்டிருந்த வசனமாகும். நான் இந்த வசனம் குறித்துக் கேட்பதற்காக இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம் சென்று அதைப்பற்றிக் கேட்டேன். அவர்கள், 'ஓர் இறைநம்பிக்கையாளரை வேண்டுமென்றே கொலை செய்கிறவனுக்குரிய தண்டனை நரகமேயாகும்' எனும் இந்த (திருக்குர்ஆன் 04:93 வது) வசனம் அருளப்பட்டது. இதுதான் (இறைநம்பிக்கையாளரைக் கொலை செய்யும் குற்றம் தொடர்பாக) இறங்கிய கடைசி வசனமாகும்; இதை எதுவும் மாற்றிவிடவில்லை' என்று கூறினார்கள்.
முக்கிய நபர்கள்:
உஸ்மான் (உத்மான்): இஸ்லாமை தழுவியவர்களில் உஸ்மான் நான்காவது நபர் ஆவார். இவர் முஹம்மதுவின் நெருங்கிய நண்பராவார். மேலும் இவர் உம்மயத் என்ற சிறப்புமிக்க வம்சத்தில் வந்தவராவார். மக்காவின் சுற்று வட்டாரங்களில் வாழ்ந்த மக்களில் இவர் சிறப்புமிக்க வெற்றியுள்ள வாழ்க்கை வாழ்ந்தவராவார். இவர் ஒரு ஜமிந்தார் என்றுச் சொல்லக்கூடிய நிலையில் வாழ்ந்தார். இவர் முஹம்மதுவின் மகள் "ருகையா"வை திருமணம் செய்திருந்தார். ருகையா அவர்கள் மரித்த பிறகு, முஹம்மதுவின் இன்னொரு மகள் "உம் குள்தும்"ஐ மணந்தார். கடைசியாக, உஸ்மான் மூன்றாவது "கலிஃபா" ஆனார் (இஸ்லாமிய தலைவரானார்). முதல் நான்கு கலிஃபாக்களை "நேர் வழி காட்டப்பட்ட(Rightly-Guided)" கலிஃபாக்கள் என்று அழைப்பார்கள்.
அலி: இவரைப் பற்றிய குறிப்பை அறிய இரண்டாம் பாகத்தை பார்க்கவும்.
ஜுபைர்: இவரைப் பற்றிய குறிப்பை அறிய இரண்டாம் பாகத்தை பார்க்கவும்.
தல்ஹா: இவர் முஹம்மதுவின் நெருங்கிய நண்பராகவும், இஸ்லாமிய சமுதாயத்தில் ஒரு முக்கிய நபராகவும், தலைவராகவும் இருந்தார். இஸ்லாமிய முக்கிய தலைவர்களில் முதல் 10 நபர்களில் இவரும் ஒருவர் என்று சில ஹதீஸ்கள் கூறுகின்றன.
முஅவியாஹ்: இவர் அபூ சுஃப்யானின் மகனாவார். அபூ சுஃப்யான் ஒரு காலத்தில் முஹம்மதுவின் தீவிர எதிரியாக இருந்தவர், தற்போது (முஹம்மது மரித்தபிறகு) இவர் சீரியாவின் ஆளுநனராக இருக்கிறார்.
பின்னணி:
உமர் அவர்கள் மரண படுக்கையில் இருக்கிறார்கள் (இவரால் ஏமாற்றப்பட்ட ஒரு அடிமையினால் இவர் கத்தியால் குத்தப்பட்டார் என்று சொல்லப்படுகின்றது). இஸ்லாமிய சமுதாயத்தின் முக்கிய தலைவர்களை உமர் சந்தித்து, அடுத்த தலைவர் (கலிஃபா) யார் என்ற முடிவை எடுக்கவுள்ளார். ஏன் மற்றும் எப்படி உஸ்மான் அவர்கள் அடுத்த கலிஃபாவாக தெரிவு செய்யப்பட்டார் என்பதற்கு பலவகையான விவரங்களை இஸ்லாமிய நூல்கள் தருகின்றது. மேலும் இந்த தெரிவு செய்யும் குழுவானது ஒருமனதாக உஸ்மானை அடுத்த தலைவராக தெரிவு செய்யவில்லை. இருந்த போதிலும் கடைசியாக உஸ்மான் அடுத்த தலைவராக தெரிவு செய்யப்பட்டார். காலங்கள் செல்லச்செல்ல, உஸ்மானின் தலைமைத்துவத்தை கேள்விகேட்கவேண்டிய நிலை இஸ்லாமியர்கள் மத்தியிலே ஏற்பட்டது. அனேக முஸ்லிம்களுக்கு வாழ்க்கை மிகவும் கடினமானதாக மாறியிருந்தது. உஸ்மானுக்கு எதிராக அனேக குற்றச்சாட்டுகள் இஸ்லாமிய சமுதாயத்தில் வைக்கப்பட்டது. அதாவது உஸ்மான் தன் சொந்த இனத்தவருக்கு தனிச்சலுகை தருகின்றார், பணத்தை சரியாக கையாளவில்லை மேலும் இவரது ஆட்சியில் ஊழல் அதிகமாகிவிட்டது என்றும் அனேக குற்றச்சாட்டுகள் இவருக்கு எதிராக எழும்பின. இதனால் உஸ்மானின் சிறப்புக்கள் அனைத்தும் தரைமட்டமாக்கப்பட்டது. கடைசியாக, மக்கள் ஆயுதங்களை ஏந்திக்கொண்டு இவருக்கு எதிராக எழும்ப ஆரம்பித்தனர்.
எகிப்து , குஃபா மற்றும் பஸ்ரா நகரங்களிலிருந்து மூன்று குழுவாக மக்கள் உஸ்மானுக்கு எதிராக மதினாவை நோக்கி புறப்பட்டனர். உஸ்மான் தத்து எடுத்த மகன் கூட இவருக்கு எதிராக எழும்பினான். உஸ்மானுக்கு எதிராக எழும்பிய இந்த மக்களைப் பற்றி அனேக வகையான விவரங்களை இஸ்லாமிய நூல்கள் தருகின்றன. ஆனால், நாம் மிகவும் ஆழமாகச் செல்லாமல், பொதுவான விஷயங்களை மட்டுமே இங்கே அலசுகிறோம். முஸ்லிம்களுடைய மனதில் ஒட்டியிருந்த தீய எண்ணங்கள் சிறிது சிறிதாக வெளியே தெரிய ஆரம்பித்தது, அது ஆணிவேர் வரை சென்று மரம் முழுவதும் பரவி அதன் கனிகளின் மூலமாக வெளிப்பட ஆரம்பித்தது. உண்மையான இஸ்லாமின் கனிகளை மக்கள் சுவைக்க ஆரம்பித்தனர்.
தபரியின் சரித்திரம், வால்யூம் 15, " கலிஃபத்துவத்தின் ஆரம்பகால தடங்கல்கள்" என்ற உபதலைப்பிலிருந்து சில வரிகள்: [1]
இந்த ஆண்டு (654), உஸ்மான் இப்னு அஃப்பான்அவர்களை எதிர்த்த அனைவரும் ஒருவருக்கு ஒருவர் கடிதம் எழுதிக்கொண்டனர். உஸ்மானுக்கு எதிராக அவர்கள் ஒன்று கூடி, அனேக சர்ச்சைக்குரிய விஷயங்களைப் பற்றி உஸ்மானோடு நேரடியாக பேசவேண்டும் என்று திட்டமிட்டனர் (பக்கம் 131).
அனேக முஸ்லிம்கள் அடங்கிய ஒரு குழு, உஸ்மானின் செயல்கள் பற்றி பரிசீலனை செய்ய ஒன்று கூடியது. இந்த குழு ஒரு தூதனை உஸ்மானிடம் அனுப்பி பேசவேண்டும் என்று முடிவு செய்தது. அதாவது உஸ்மான் புரிந்த சர்ச்சைக்குரிய செயல்கள் பற்றி அவரிடம் பேச முடிவு செய்தது.(பக்கங்கள் 135 மற்றும் 136)
(உஸ்மான் அவர்களிடம் அலி கீழ்கண்டவாறு பேசுகிறார்)
அலி கூறினார், "நான் உங்களிடம் சொல்ல விரும்புவது என்னவென்றால், உமர் அவர்கள் யார் யாரையெல்லாம் பதவியில் அமர்த்தினாரோ, அவர்களை கவனமாக அவர் கண்காணித்துக்கொண்டு இருந்தார். யாராவது அவரைப் பற்றி ஒரு தவறான வார்த்தை பேசினாலும் சரி, அது உமரின் காதுக்கு எட்டும் போது அவர்களை உமர் சாட்டையால் அடிப்பித்து, தீவிரமாக தண்டிப்பார். ஆனால், இப்படி நீங்கள் (உஸ்மான்) செய்யவில்லை. நீங்கள் பலவீனமானவராகிவிட்டீர்கள், உங்கள் உறவினர்கள் எந்த தவறு செய்தாலும், அவைகளை பார்த்தும் பார்க்காதது போல இருந்துவிட்டீர்கள்". இதற்கு உஸ்மான், "அவர்கள் உங்களுக்கும் உறவினர்கள் தானே" என்று மறுமொழி கொடுத்தார். உடனே அலி அவர்கள் "ஆம், உண்மையாகவே அவர்கள் எனக்கும் மிகவும் நெருங்கிய உறவினர்களே, ஆனால், மற்றவர்கள் அவர்களை விட நல்லவிதமான நடந்துக்கொள்கிறார்கள் அல்லவா?" என்று கூறினார். மறுபடியும் உஸ்மான் இவ்விதமாக கூறினார், "உங்களுக்கு தெரியுமா? உமர் அவர்கள் தன் ஆட்சிகாலம் முழுவதும் முஅவியாவை ஆட்சியில் அமரவைத்திருந்தார்கள் அல்லவா? அதே போலத்தானே நானும் செய்தேன்". உடனே அலி இவ்விதமாக பதில் அளித்தார், "அல்லாஹ்வின் பெயரில் உங்களுக்கு சொல்கிறேன், உமரின் அடிமையாகிய யர்ஃபா என்பவர் உமருக்கு பயப்படுவதைக் காட்டிலும், முஅவியா அதிகமாக உமருக்கு பயந்திருந்தார் என்று உங்களுக்கு தெரியுமா?". உஸ்மான் "ஆம் எனக்குத் தெரியும்" என்று பதில் அளித்தார். அலி மேலும் இவ்விதமாக கூறினார், "உண்மை என்னவென்றால், முஅவியா உங்களிடமிருந்து அனுமதி பெறாமலேயே பிரச்சனைகளுகான தீர்வுகளை சுயமாக எடுக்கிறார். இதனை நீங்களும் அறிந்திருக்கிறீர்கள். மேலும் முஅவியா மக்களிடம் "இது உஸ்மானின் கட்டளை, இதற்கு யாரும் முரண்படாதீர்கள்" என்றுச் சொல்கிறார். இவைகளை உஸ்மானிடம் அலி சொல்லிவிட்டு, அங்கிருந்து கடந்து சென்றுவிட்டார். உஸ்மானும் தன்னுடைய நிலைக்கு திரும்பிவிட்டார். (பக்கங்கள் 142, 143)
எகிப்தியர்களை பொருத்தமட்டில், அடுத்த கலிஃபாவாக "அலி" வரவேண்டும் என்று விரும்பினார்கள். ஆனால், பஸ்ராவின் மக்கள் "தல்ஹா" கலிஃபாவாக வரவேண்டும் என்றும், குஃபா மக்கள் "அல் ஜுபைர்" கலிஃபாவாக பதவி ஏற்கவேண்டும் என்று விரும்பினார்கள். இவர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் தங்கள் இடத்தை விட்டு மதினாவை நோக்கி புறப்பட்டார்கள். இந்த மக்கள் பலவகையான எண்ணங்களோடு புறப்பட்டார்கள். ஒன்று மட்டும் தெளிவாக தெரிகின்றது அது என்னவென்றால், ஒரு குழுமட்டுமே வெற்றிப்பெறும், மீதமுள்ள இரண்டு குழுக்கள் தோல்வி அடையும் (பக்கம் 160).
இந்த புரட்சிக்காரர்கள் தங்கள் தளங்களை அடைந்தவுடன், மதினாவை சுற்றிவளைத்து அதனை தாக்க தயாராகிவிட்டனர். மதினா மக்களின் மீது திடீர் தாக்குதல் நடத்தினர். ஆச்சரியப்படும் விதமாக, "அல்லாஹு அக்பர்" என்று ஒருமித்து கோஷமிட்டு, மதினா பட்டணம் முழுவதையும் கலங்கடித்தனர். அலி, தல்ஹா மற்றும் அல் ஜுபைர் மூலமாக அமைக்கப்பட்ட பாளைய கூடாரங்களை இவர்கள் ஆக்கிரமித்துக்கொண்டு, உஸ்மானை சுற்றி வளைத்தனர். "யார் எங்களோடு கைகோர்த்து நிறபார்களோ, உஸ்மானை புறக்கணிப்பார்களோ, அவர்கள் பாதுகாப்பாக இருப்பார்கள்" என்று கோஷமிட்டனர்.(பக்கம் 162)
இந்த அதிருப்தியாளர்கள் ஒன்று கூடி, மசூதிகளில் உள்ள மக்கள் வெளியே வரும்வரை அவர்கள் மீது கற்களை வீசிக்கொண்டு இருந்தார்கள். மசூதியில் பிரசங்க பீடத்தில் இருந்த உஸ்மான் மயக்க நிலையை அடையும் வரை அவர் மீதும் கற்களை வீசினர். உஸ்மான் மயக்க நிலையில் தன்னுடைய வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டார். இப்போது எகிப்திய அதிருப்தியாளர்கள், மதினா மக்களில் வெறும் மூன்று நபர்களின் ஆதரவை எதிர்ப்பார்த்தனர், இம்மூவரோடு கடிதத்தொடர்பை இவர்கள் வைத்துக்கொண்டு இருந்தார்கள். இம்மூவரின் பெயர்கள்: முஹம்மது பி. அபூபக்கர் (அபூ பக்கரின் மகன்), முஹம்மது பி. அபீ உதைஃபா, மற்றும் அம்மர் பி. யாசிர் என்பவைகளாகும். மதினாவின் மக்களில் ஒரு குழுவானது தங்கள் தலைவருக்காக மரிக்கவும் தயாராக இருந்தது. இவர்களின் பெயர்களாவன, சைத் மாலிக், அபூ ஹுரைரா, ஜையத் பி. தாபித் மற்றும் அல் ஹசேன் பி அலி (அலியின் மகன்) என்பதாகும். இவர்கள் தன் விட்டைவிட்டு வெளியேறும்படி உஸ்மான கண்டிப்பாய் உத்தரவிட்டார், உடனே இவர்கள் அவரை விட்டுச் சென்றுவிட்டார்கள். உஸ்மான் பிரசங்க பீடத்திலிருந்து மயங்கி விழுந்துவிட்ட பிறகு, இவரை வீட்டில் காண அலி, தல்ஹா மற்றும் அல்ஜுபைர் சென்றனர். உஸ்மானிடம் தங்கள் வருத்தத்தை தெரிவித்துக்கொண்டு, தங்கள் வீட்டிற்கு திரும்பி சென்றுவிட்டனர் (பக்கங்கள் 165, 166)
இந்த அதிருப்தியாளர்கள் உஸ்மானிடம் வந்து இவ்விதமாக கூறினார்கள், "குர்ஆனை கொண்டுவரும் படி சொல்லுங்கள்?". உஸ்மான் கட்டளையிட குர்ஆன் கொண்டு வரப்பட்டது. பத்தாவது அத்தியாயத்தை எடுத்து படியுங்கள் என்று அவர்கள் கூற உஸ்மான் பத்தாவது அத்தியாயத்தை படிக்க ஆரம்பித்தார். கீழ்கண்ட வசனம் வரும்வரை அவர்கள் காத்திருந்தனர், அதன் பிறகு நிறுத்தச் சொன்னார்கள்:
"(நபியே!) நீர் கூறும்: "அல்லாஹ் உங்களுக்கு இறக்கிவைத்த ஆகாரங்களை நீங்கள் கவனித்தீர்களா? அவற்றில் சிலவற்றை ஹராமாகவும், சிலவற்றை ஹலாலாகவும் நீங்களே ஆக்கிக் கொள்கிறீர்கள்; (இப்படித் தீர்மானித்துக் கொள்ள) அல்லாஹ் உங்களுக்கு அனுமதி அளித்துள்ளானா? அல்லது அல்லாஹ்வின் மீது நீங்கள் பொய்க்கற்பனை செய்கின்றீர்களா?"
அவர்கள் உஸ்மானிடம் இவ்விதமாக கேட்டனர்: "சிலவற்றை ஹராமாகவும், சிலவற்றை ஹலாலாகவும் நீங்களே ஆக்கிக் கொள்கிறீர்கள்; (இப்படித் தீர்மானித்துக் கொள்ள) அல்லாஹ் உங்களுக்கு அனுமதி அளித்துள்ளானா? அல்லது அல்லாஹ்வின் மீது நீங்கள் பொய்க்கற்பனை செய்கின்றீர்களா?".
இதற்கு உஸ்மான் "இந்த வசனம் இன்ன இன்ன காரணத்திற்காக இறக்கப்பட்டது என்று அவர்களுக்கு விவரிக்க ஆரம்பித்தார்". ... அவர்கள் உஸ்மானோடு அந்த வசனம் பற்றி தீவிரமாக விவாதித்துக்கொண்டு இருந்தார்கள், ஆனால் உஸ்மானோ "இந்த வசனம் இன்ன இன்ன காரணத்திற்காக இறக்கப்பட்டது" என்று பதில் அளித்துக்கொண்டு இருந்தார். பக்கம் (167)
அதன் பிறகு, இந்த எகிப்திய அதிருப்தியாளர்களின் பிரதிநிதிகள் திருப்தியோடு எகிப்திற்கு திரும்பி சென்றுக்கொண்டு இருந்தார்கள். ஆனால், ஒரு மனிதன் குதிரையில் சென்றுக்கொண்டு இருந்தான். அவன் இந்த குழுவை தாண்டி சென்றுக்கொண்டு இருந்தான். சிறிது நேரம் கழித்து இவன் அவர்களை மறுபடியும் கடந்துச் சென்றான். இதனைக் கண்ட இவர்கள், அவனை அழைத்து, நீ என்ன செய்கிறாய்? என்று கேட்டார்கள். நீ எங்களிடம் ஏதோ ஒன்றை மறைக்கிறாய் என்று அவனிடம் தேட ஆரம்பித்தார்கள். அவனிடம் ஒரு கடிதம் காணப்பட்டது. அந்த கடிதத்தில் உஸ்மானின் கையெழுத்தும், முத்திரையும் காணப்பட்டது. இது எகிப்தின் ஆளுநருக்கு எழுதப்பட்டு இருந்தது. இந்த கடிதத்தில் "அவர்களை சிலுவையில் அறையுங்கள் அல்லது கொலை செய்துவிடுங்கள் அல்லது கை கால்களை வெட்டிவிடுங்கள்" என்று எழுதப்பட்டு இருந்தது. ஆகையால், இந்த எகிப்திய பிரதிநிதிகள் மறுபடியும் மதினாவிற்கு திரும்பினர்.(பக்கங்கள் 168, 169)
ஒட்டகத்தில் சென்றுக்கொண்டு இருந்த, உஸ்மானின் ஒரு அடிமையிடம் கண்டுபிடிக்கப்பட்ட கடிதத்தை படித்ததும், இந்த எகிப்திய பிரதிநிதிகள் மதினாவிற்கு உஸ்மானிடம் திரும்பி வந்தனர். அந்த கடிதத்தில், இவர்களில் சிலரை கொன்றுவிடும்படி, சிலரை சிலுவையில் அறையும்படி எகிப்திய ஆளுநருக்கு எழுதியிருந்தது. அவர்கள் உஸ்மானிடம் வந்து " இவன் உங்களுடைய அடிமையாவான்" என்று கூறினர். இதற்கு உஸ்மான், "என்னுடைய அனுமதி இல்லாமல் இவன் சென்றுள்ளான்" என்று பதில் அளித்தார். அவர்கள் மறுபடியும் உஸ்மானிடம், "இது உங்கள் ஒட்டகம் தானே?" என்று கேட்டனர். இதற்கு உஸ்மான், "இவன் என்னுடைய அனுமதியின்றி என் வீட்டிலிருந்து எடுத்துச் சென்றான்" என்று பதில் சொன்னார். மறுபடியும் அவர்கள் "இது உங்களுடைய அடையாள முத்திரை" என்றனர், அதற்கு உஸ்மான் "இது என்னுடையது அல்ல, இது போலியான முத்திரை" என்றார் (பக்கம் 185).
உஸ்மான் தனக்கு நேரிட்ட கொடுமைகளைக் கண்டு, மேலும் தனக்கு எதிராக வந்த மக்கள் திரளைக் கண்டு, சிரியாவில் உள்ள முஅவியா பி. அபீ சுஃப்யான் அவர்களுக்கு இவ்விதமாக எழுதினார்: " . . . மதினாவின் மக்கள் இறைநம்பிக்கை இல்லாதவர்களாக ஆகிவிட்டார்கள். அவர்கள் கீழ்படிதலை விட்டுவிட்டார்கள், ஆதரவு கொடுப்பதாக அவர்கள் செய்த வாக்கை புறக்கணித்து விட்டார்கள். ஆகையால், சிரியாவில் உள்ள இராணுவத்தை என்னிடம் அனுப்பவும். உங்களிடமிருக்கும் ஒவ்வொரு நல்ல ஒட்டகத்திலும், வலுவிழந்த ஒட்டகத்திலும் இராணுவத்தை அனுப்பவும்". இந்த கடிதத்தை முஅவியா பெற்ற பிறகு, அதன் படி செய்ய தாமதம் செய்தார். ஏனென்றால், இறைத்தூதரின் தோழராகிய உஸ்மானுக்கு வெளிப்படையாக முரண்பட இவர் விரும்பவில்லை. அதிருப்தியாளர்களின் எண்ணமும் தன் எண்ணமும் ஒன்று தான் என்பதை முஅவியா அறிந்திருந்தார் (பக்கம் 185).
அதன் பிறகு, உஸ்மானுக்கு எதிராக 600 எகிப்திய மக்கள் மதினாவை நோக்கி வந்தார்கள். இந்த கூட்டத்திற்கு தலைமை வகித்தவர் "அமர் பி புதல் பி. வர்ஃகா அல் குஜைய்" என்பவராவார். இவர் இறைத்தூதரின் தோழராவார். . . . . அவர்கள் உஸ்மானுக்கு எழுதிய கடிதத்தில் இவ்விதமாக எழுதியிருந்தார்கள்: "... அல்லாஹ்வின் பெயரில் இதனை அறிந்துக்கொள்ளுங்கள், அதாவது அல்லாஹ்விற்காக நாங்கள் உங்கள் மீது கோபமாக இருக்கிறோம், நாங்கள் அல்லாஹ்வில் திருப்தி அடைகிறோம். நீங்கள் நேர்மையோடு, குழப்பமில்லாமல் எங்களிடம் வந்தாலும் சரி, அல்லது உங்கள் தவறை ஒப்புக்கொள்ளாமல் வந்தாலும் சரி, நாங்கள் எங்கள் தோள்களில் உள்ள வாள்களை கீழே வைப்பதில்லை என்று சத்தியம் செய்கிறோம். இது தான் நாங்கள் உங்களுக்கு சொல்ல விரும்பும் விஷயம் மற்றும் உங்களுக்கு எதிரான முன்வைக்கும் குற்றச்சாட்டுமாகும். உங்களுக்கு எதிராக நாங்கள் செய்யும் இந்த செயல்களை அல்லாஹ் எங்களுக்கு மன்னிப்பானாக. உங்களுக்கு சமாதானம் உண்டாகட்டும். (பக்கங்கள் 186, 187)
தம்மை அவர்கள் கொன்றுவிடுவார்கள் என்று உஸ்மான் பயந்தார். அவர் தன்னுடைய குடும்பத்தினர்களிடமும், தமக்கு அறிவுரை கூறுபவர்களிடமும் வினவினார். "இந்த அதிருப்தியாளர்கள் என்ன செய்தார்கள் என்று பார்த்தீர்களா? இதிலிருந்து விடுபடுவது எப்படி?" என்று அவர்களிடம் உஸ்மான் கேட்டார். அதற்கு அவர்கள் "அலி" அவர்களை அழைத்து பேசுங்கள் என்று அறிவுரை கூறினார்கள்.
அலி அவர்களை வரும் படி உஸ்மான் சொல்லியனுப்பினார், அலியும் வந்து சேர்ந்தார். உஸ்மான் அலி அவர்களிடம் "அபூ ஹசன் அவர்களே, மக்கள் என்ன செய்தார்கள் என்றும், நான் என்ன செய்தேன் என்றும் நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். அவர்கள் என்னை கொன்றுவிடுவார்கள் என்று எனக்கு பயமாக இருக்கிறது. என்னை விட்டு சென்றுவிடும்படி அவர்களுக்குச் சொல்லுங்கள். அல்லாஹ்வின் மீது ஆணையிட்டுச் சொல்கிறேன், அவர்கள் கேட்பதெல்லாம் அவர்களுக்கு செய்வேன், எனக்கு எதிராகவும், மற்றவர்களுக்கு எதிராகவும் அவர்கள் பக்கத்தில் நின்று அவர்களுக்கு நியாயம் செய்வேன். நான் இரத்தம் சிந்த நேரிட்டாலும் சரி, அவர்களுக்கு நியாயம் செய்வேன். . . . இவைகளைக் கேட்டு அலி வெளியே வந்து, மக்களிடம் இப்படியாக கூறினார், "ஓ.. மக்களே, நீங்கள் நீதிவேண்டும் என்று கேட்டீர்கள், இதோ உங்களுக்கு நீதி கிடைத்துள்ளது. . . ". இதற்கு மக்கள் "நாங்கள் இதனை அங்கீகரிக்கிறோம்" என்றுச் சொன்னார்கள். பக்கங்கள் (187, 188).
. . . உஸ்மான் இவ்விதமாக கூறினார், "எனக்கு அவகாசம் கொடுங்கள், அவர்கள் கேட்கும் காரியங்களை ஒரே நாளில் செய்யமுடியாது, எனக்கு அவகாசம் கிடைத்தால், நான் எல்லாவற்றையும் சரி செய்கிறேன்". இதற்கு அலி, "இதர இடங்களின் காரியங்களுக்கு நீங்கள் அவகாசம் எடுத்துக்கொள்ளுங்கள், உங்கள் கட்டளைகள் அந்த இடங்களுக்குச் சென்றடைய அதிக நாட்கள் ஆகும், ஆனால் மதினாவின் காரியங்களுக்காக அவகாசம் தரமுடியாது" என்று பதில் அளித்தார். உடனே உஸ்மான் அவர்கள், "சரி, மதினாவின் காரியங்களை சரி செய்வதற்கு எனக்கு மூன்று நாட்கள் அவகாசம் தாருங்கள்" என்று கேட்டார். இதற்கு அலி ஒப்புதல் அளித்தார். அதன் பிறகு, அலி வெளியே சென்று மக்களுக்கு இவைகளை தெரிவித்தார். அலி அவர்கள் அந்த மக்களுக்கும், உஸ்மானுக்கும் இடையே ஒரு உடன்படிக்கையை உண்டாக்கினார்கள், அதாவது, மூன்று நாட்கள் அவகாசம் தரப்படுகின்றது, இதற்குள் எல்லா வகையான அநீதி காரியங்களை சரி செய்து, மற்றும் இந்த மக்கள் வெறுக்கும் ஆளுநர்களை பதவியிலிருந்து நீக்கவேண்டும் என்பதாகும். (பக்கம் 188).
ஆனால், உஸ்மான் அவர்கள் போர் செய்வதற்கு தன்னை தயார்படுத்திக் கொண்டார்கள், ஆயுதங்களை சேகரித்துக் கொண்டார்கள். போரில் கிடைத்த பொருட்களில், அடிமைகளில் ஐந்தில் ஒரு பாகம் கலிஃபாவிற்கு தரப்படும். இதன் மூலம் கிடைத்த அடிமைகளை சேகரித்துக்கொண்டு, உஸ்மான் மிகப்பெரிய இராணுவத்தை தயார் படுத்திக்கொண்டார். மூன்று நாட்கள் கடந்துவிட்டது, இன்னும் உஸ்லாம் அவர்கள் தான் ஒப்புக்கொண்ட காரியங்களை செய்யவில்லை, அதாவது மக்களுக்கு வெறுப்புண்டாக்கிய எந்த காரியத்தையும் அவர் ஒழித்துக்கட்டவில்லை, அவர்கள் வெறுத்த ஆளுநர்களை நீக்கவில்லை. இதனால், மக்கள் மறுபடியும் இவருக்கு எதிராக புரட்சியில் இறங்கினார்கள். (பக்கம் 189).
இதுவரை நாம் கண்ட விவரங்களின் சுருக்கம்:
இஸ்லாமிய சாம்ராஜ்ஜியத்தில் வாழ்ந்த மக்களுக்கு உஸ்மானுடைய ஆட்சியில் மகிழ்ச்சியில்லை. இந்த சாம்ராஜ்ஜியங்களில் உள்ள மக்கள் ஒன்று கூடி, உஸ்மானுக்கு எதிராக மதினாவை நோக்கி புறப்பட்டார்கள். உஸ்மான் தனக்கு கீழே ஆளுநர்களாக இருக்கும் நபர்களை உதவிக்கு அழைத்தார், ஆனால், யாரும் உதவ முன்வரவில்லை. இந்த அதிருப்தியாளர்கள் தங்களுக்கு நியாயம் கிடைக்கவேண்டுமென்று விரும்பி, உஸ்மானை எதிர்த்தார்கள். உஸ்மான் தன்னுடைய செயல்களுக்காக மன்னிப்புக் கோரி அவைகளை சரி செய்துக்கொள்வார் என்று எதிர்ப்பார்த்தார்கள். அவர்களின் கோரிக்கைகளை தாம் நிறைவேற்றுவதாக உஸ்மான் வாக்குறுதி கொடுத்தார், அதிருப்தியாளர்கள் இதனை அங்கீகரித்து நிம்மதியாக நாடு திரும்பினார்கள். இந்த மக்கள் திரும்பிச் செல்லும்போது, ஒரு மனிதனை சந்தித்தார்கள், அவனிடம் ஒரு கடிதம் இருந்தது. எகிப்து நாட்டு ஆளுநர்களுக்கு இந்த கடிதம் எழுதப்பட்டு இருந்தது. இந்த எதிர்ப்பாளர்களை தண்டிக்கும்படியாகவும், கொல்லும்படியாகவும் அந்த கடிதத்தில் எழுதப்பட்டு இருந்தது. இந்த முறை இன்னும் அதிக கோபத்தோடு இந்த மக்கள் உஸ்மானை சந்திக்கச் சென்றார்கள். உஸ்மான் அலியின் உதவியுடன், தன் தவறுகளை சரி செய்துக்கொள்ள மூன்று நாட்கள் அவகாசம் தேவை என்று கேட்டு பெற்றுக்கொண்டார். எனினும் தன் தவறுகளை சரி செய்துக் கொள்ளாமல், தன் வார்த்தையை காத்துக் கொள்ளாமல், உஸ்மான் ஒரு இராணுவத்தை போருக்காக தயார் படுத்திக்கொண்டார். தன்னுடைய இராணுவத்தால் இந்த புரட்சியாளர்களை ஒழித்துக்கட்டிவிடலாம் என்று உஸ்மான் எண்ணிவிட்டார். ஆனால், அந்த எதிர்ப்பாளர்கள் மறுபடியும் உஸ்மானை நோக்கி வந்தார்கள்.
கடைசி நிமிடங்கள்:
முஹம்மது பி. அபி பக்கர் (அபூபக்கரின் மகன்) 13 பேரோடு உஸ்மானிடம் வந்தார். அவர் உஸ்மானின் தாடியை பிடித்து இழுத்தார், இதனால் அவரது வாய் ஆட்டம்கண்டது. முஹம்மது பி. அபி பக்கர் உஸ்மானிடம் "முஅவியாவும் உங்களுக்கு உதவமுடியாது, இப்னு அமரும் உங்களுக்கு உதவமுடியாது, உங்களுடைய கடிதங்களும் உங்களுக்கு உதவாது" என்று கூறினார்."என் தாடியை விட்டுவிடு, என்னை போகவிடு என் சகோதரரின் மகனே, என் தாடியை விட்டுவிடு" என்று உஸ்மான் கூறினார். இப்னு அபி பக்கர், தன் கண்களால் வேறு ஒரு நபருக்கு சைகை செய்வதை நான் கண்டேன். அந்த நபர் உஸ்மான் மீது பாய்ந்து, அம்புகள் கொண்ட ஒரு பெரிய இரும்பு கம்பியினால் அவரது தலையில் குத்தினார்…. அவர்கள் ஒன்று சேர்ந்து உஸ்மானை கொன்றுவிட்டனர். (பக்கங்கள் 190, 191).
"முஹம்மது பி. அபி பக்கர்" அவரிடம் சென்றார் மற்றும் அவரது தாடியை இழுத்து பிடித்துக்கொண்டு, இவ்விதமாக கூறினார், "அபூ பக்கர் அவர்கள் எங்களிடம் நடந்துக்கொண்டது போல நீங்கள் எங்களிடம் நடந்துக்கொள்ளவில்லை". அதன் பிறகு அவர் வெளியே சென்றுவிட்டார். கருப்பு மரணம் என்ற பெயர் கொண்ட இன்னொரு மனிதன் உஸ்மானின் அறைக்குள் வந்தான், உஸ்மானின் கழுத்தை நெருக்கிப்பிடித்து அவரை முகத்தில் அறைந்தான். அதன் பிறகு அவன் வெளியே சென்று "அல்லாஹின் பெயரில் ஆணையிட்டுச் சொல்கிறேன், உஸ்மானின் தோண்டையைப் போல மிகவும் மிருதுவான தோண்டையை நான் காணவில்லை" என்று கூறினான். அல்லாஹ்வின் பெயரைக் கொண்டுச் சொல்கிறேன், அவரது கழுத்தை நான் நெருக்கினேன், ஒரு ஜின்னின் ஆவி பிரிவது போல அவரது ஆவி ஆட்டம் கண்டு அவரது உடல் நடுங்கும் வரை நான் அவரை விடவில்லை. அதன் பிறகு அவன் சென்றுவிட்டான்.
ஒரு குறிப்பிட்ட மனிதன் உஸ்மானிடம் சென்றான், அப்போது அவர் குர்-ஆனை தன்னிடம் வைத்திருந்தார். அவர் அப்போது "உனக்கும் எனக்கும் இடையே குர்-ஆன் உள்ளது" என்று கூறினார். அந்த மனிதன் தன் வாளை எடுத்துச் சென்றான், உஸ்மான் தன் கையால் தடுத்தார், அப்போது அவரது கை துண்டிக்கப்பட்டது. அவரது கை முழுவதுமாக துண்டிக்கப்பட்டதோ அல்லது அதிகமாய காயப்பட்டதோ எனக்குத் தெரியாது. பிறகு அவன் "அல்லாஹ்வின் பெயரில் சொல்கிறேன், குர்-ஆனுக்கு மேலாகச் சென்ற ஒரே கை இதுவாகத்தான் இருக்கும்" என்றுச் சொன்னான். (பக்கம் 205).
"அமர் பி. அல் ஹமிக்", உஸ்மானின் மீது பாய்ந்து, அவரின் நெஞ்சின் மீது உட்கார்ந்துவிட்டான். உஸ்மானின் உயிர் ஊசலாடிக்கொண்டு இருந்தது. இவன் அவரை ஒன்பது முறை கத்தியால் குத்தினான். அமர் "அல்லாஹ்விற்காக நான் மூன்று முறை அவரை குத்தினேன், எனக்குள் இருந்த கோபத்தின் காரணமாக ஆறு முறை குத்தினேன்" என்று கூறினான் (பக்கம் 220).
வீட்டிற்குள் இருந்த படியே அந்த எதிர்ப்பாளர்கள் "பொக்கிஷ சாலையை(கஜானாவை) பிடியுங்கள், உங்களுக்கு முன்பாக வேறு யாரும் அங்கு செல்லக்கூடாது" என்று கத்தினார்கள். அந்த பொதுவான பொக்கிஷ சாலையை பாதுகாத்துக்கொண்டு இருந்த காவலாளிகள், இந்த சத்தத்தை கேட்டவுடன் "ஓடு.. ஓடு… இவர்கள் உலக பொருட்கள் மீது ஆசை கொண்டு வருகிறார்கள், ஓடு" என்று சொல்லிக்கொண்டு ஓடிவிட்டார்கள். அதன் பிறகு அந்த எதிர்ப்பாளர்கள், அங்கு வந்து அனைத்தையும் கொள்ளையிட்டாரள் (பகம் 216).
உஸ்மான் ஆட்சியின் முடிவு:
உஸ்மான் ஆட்சி செய்த சமயத்தில் அவர் குறைஷி இனத்தில் இருந்த முக்கியமான நபர்களை உமர் நடத்தியது போல சரியாக நடத்தவில்லை. ஆகையால் இவர்கள் இஸ்லாமிய ஆட்சி புரியும் அனைத்து இடங்களுக்கும் சென்றார்கள். இஸ்லாம் ஆட்சி புரிந்த இடங்களில் வாழும் இதர குறைஷி மக்களின் நிலையை இவர்கள் கண்டார்கள். அவர்களுக்கு இஸ்லாமில் எந்த ஒரு சலுகைகளும், அதிகாரங்களும் அளிக்கப்படாமல் இருந்தது. ஆகையால், குறைஷிகள் ஒரு கூட்டமாக சேர்ந்து விட்டனர். குறைஷிகள் அவர்களின் நம்பிக்கையை தட்டி எழுப்பினார்கள், இதன் மூலம் தங்களுக்கு முன்னுரிமை கிடைக்கும் என்று எதிர்ப்பார்த்தார்கள். இதன் பிறகு அவர்கள் இவ்விதமாக கூறிக்கொண்டார்கள், "குறைஷி மக்கள் சக்தி வாய்ந்தவர்கள், நாம் அவர்களின் மத்தியிலே புகழைப் பெறுவோம், நமக்கு முன்னுரிமை இனி கிடைக்கும்படிச் செய்வோம்". இஸ்லாமில் நுழைந்த முதல் தவறு இது தான். சராசரி மக்களின் மத்தியில் உருவான முதன் முதல் முரண்பாடு இது தான்.(பக்கம் 224).
புறாக்களை பறக்கவிட்டு, அவைகளை கற்களால் அடித்து, அதன் மூலம் செல்வங்களை பிரித்துக்கொள்ளும் பழக்கம் மதினாவின் மக்களிடையே பரவியது. இதனை முதன் முதலில் ஒழித்துக்கட்டியவர் உஸ்மான் ஆவார். உஸ்மான் ஒரு ஊழியரை இதற்காக அமர்த்தி, அவர் மூலமாக மக்கள் இப்படிப்பட்ட பழக்கத்தில் ஈடுபடாமல் பார்த்துக்கொண்டார். (பக்கம் 226)
மக்களிடையே குடிப்பழக்கம் தொடங்கியிருந்தது. உஸ்மான் ஒரு குழுவை உருவாக்கினார். அந்தக் குழு ஊர் முழுவதும் சுற்றித்திரிந்து இப்படிப்பட்ட குடிக்கும் மக்களை கண்டுபிடித்தது. இதன் பிறகு குடிப்பழக்கம் இன்னும் அதிகமாக ஊர் முழுவதும் பரவியது. மக்களுக்கு வெளிப்படையாக உஸ்மான் எச்சரித்தார், அதாவது அல்லாஹ்வின் சட்டத்தின் படி குடிக்கும் மக்கள் தண்டிக்கப்படுவார்கள் என்று எச்சரித்தார். குடிக்கும் போது கண்டுபிடிக்கப்பட்டால் சாட்டையடி தரப்படும் என்ற தண்டனையை மக்களும் ஏற்றுக்கொண்டார்கள். மேலும் சிலர் குடிக்கும் போது கண்டுபிடிக்கப்பட்டு சாட்டையால் தண்டிக்கப்பட்டார்கள். (பக்கம் 226)
சாராம்சம்:
உமர் மரிக்கும் வரையில், மக்கள் இஸ்லாமின் பாரமான சட்டதிட்டங்களால், தாங்கமுடியாத நுகத்தினால் அதிகமாக சோர்ந்து போய் இருந்தனர். இதுமாத்திரமல்ல, உஸ்மான் கலிஃபா ஆனவுடன், முஸ்லிம்கள் உலகத்தின் பல பகுதிகளுக்குச் சென்று அவைகளை ஆக்கிரமித்துக்கொள்ள ஆரம்பித்தனர், மேலும் இவர்களின் கண் உலக ஆசைகளின் பக்கம் சாய்ந்தது. சிலர் தங்களுக்கு அதிகாரமும், மதிப்பும் வேண்டுமென்பதற்காக இப்படிப்பட்ட முஸ்லிம் தலைவர்களோடு தங்களை இணைத்துக்கொண்டு வாழ்ந்தார்கள். தடைசெய்யப்பட்ட பில்லிசூனிய மந்திரங்கள் செய்வது, மதுபானம் குடிப்பது போன்ற பழக்கங்கள் மறுபடியும் மதினாவில் தலை தூக்கியது. ஆரம்பத்தில் சில எதிர்ப்புக்கள் இருந்தாலும், காலப்போக்கில் இது அபரிதமாக வளர ஆரம்பித்தது. ஆனால், அரசராக இருக்கும் உஸ்மான் இப்படிப்பட்டவர்களை கண்டும் காணாதவர் போல இருந்துவிட்டார், அவர்களை கண்டுக்கொள்ளவில்லை. இப்படிப்பட்ட மக்கள் தங்களை கட்டுப்படுத்திக்கொள்ளாமல், தங்கள் இச்சைகளை இன்னும் அதிகமாக பூர்த்தி செய்துக்கொள்ள, தீவிரமாக செயல்பட்டுக்கொண்டு இருந்தார்கள். அவர்களுக்கு இப்படிப்பட்ட செயல்கள் இன்னும் அதிகமாக செய்ய ஆர்வம் இருந்தது. உஸ்மான் அவர்களோ தன்னுடைய நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு அதிகமான சலுகைகளைக் கொடுத்தார், மேலும் முக்கியமான பதவிகளை அவர்களுக்கு கொடுத்தார். இவர்களில் சிலர் நம்பிக்கைத் துரோகிகளாக இருந்தார்கள், இன்னும் அதிகார தாகத்திற்காக ஏங்கிக்கொண்டு இருந்தார்கள். இவர்கள் அநியாயமாக செயல்பட ஆரம்பித்தார்கள் மற்றும் ஊழல் நிறைந்தவர்களாக மாறினார்கள். கடைசியாக, சராசரி மக்களின் கோபமும், பாவ ஆசைகளும் தலைதூக்கியது,
இவர்கள் உஸ்மானுக்கு எதிராக செயல்பட ஆரம்பித்தார்கள். உஸ்மானுடைய இந்த பாவமான செயல்களினாலும், பொறுப்பற்ற தனத்தினாலும் மக்கள் அதிகமாக அவதிக்குள் அகப்பட்டார்கள். இதுவரை சகித்துக்கொண்டது போதும் என்ற நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டதும், உஸ்மானுக்கு எதிரான போர்க்கொடியை தூக்க ஆரம்பித்தார்கள். இது ஒரு புறமிருக்க, உஸ்மான் இந்த மக்களோடு சமரசம் பேசினார், தன்னுடைய தவறான செயல்களை சரி செய்துக்கொள்வதாக வாக்கு கொடுத்தார், ஆனால், அவர் பொய் சொல்லி மக்களை ஏமாற்றிவிட்டு, அதன் பிறகு அவர்களோடு போர் செய்ய தன்னை தயார்படுத்திக்கொண்டார். உஸ்மானுடைய தொழர்களாகவும், இன மக்களாகவும் இருந்த, அலி, தல்ஹா, ஜுபைர் மற்றும் முஅவியா இன்னும் இதர மக்கள், தங்கள் கலிஃபாவை காப்பாற்ற பெரிய முயற்சி எடுக்கவில்லை, ஏதோ பெயரளவில் உதவி செய்வது போல பாசாங்கு செய்துவிட்டு கடந்துச் சென்றார்கள். இவர்கள் அனைவரும் அறிந்திருந்த விஷயம் என்னவென்றால், உஸ்மான் அழிக்கப்பட்டால், தாங்கள் அடுத்ததாக கலிஃபாவாக வரமுடியும் என்பதாகும்.
கேள்விகளும் கருத்துப்பரிமாற்றங்களும்:
இஸ்லாமிய சரித்திரத்தின் ஒவ்வொரு முன்னேற்றத்திலும், இஸ்லாமிய முகம் படிப்படியாக கருக ஆரம்பித்தது. முஹம்மதுவின் மரணத்திற்கு பிறகு ஒரே ஒரு வம்சத்திற்குள்ளாகவே, இஸ்லாமின் உண்மை கனிகள் பழுக்க ஆரம்பித்ததை காணமுடியும். பாருங்கள்! உண்மையான முஸ்லிம்களின் பரிசுத்த இரத்தம் எப்படி சிந்தப்பட்டது என்று, அதுவும் சிறந்த முஸ்லிம்களாலேயே இந்த காரியம் நடந்தேரியது. இஸ்லாமுடைய தீவிர எதிரிகள் முஸ்லிம்களே! இஸ்லாமிய சாம்ராஜ்ஜியத்திற்கு என்ன நடந்தது என்று பார்த்தீர்களா?
முஹம்மதுவின் நெருங்கிய நண்பர்கள் ஒருவரை ஒருவர் கொலை செய்துக்கொள்கிறார்கள். தோளோடு தோள் சேர்த்துக் கொண்டு, ஆரம்ப காலத்தில் இஸ்லாமுக்காக போர் புரிந்த இவர்கள், இன்று தங்கள் வாள்களை தோள் கொடுத்து தாங்கிய தன் இஸ்லாமிய தோழனுக்கு எதிராக காட்டுகிறார்கள். இப்போது இஸ்லாமிய சாம் ராஜ்ஜியத்தில் நோய் பற்றிக்கொண்டது. தன் நன்னடத்தை, அரசியல் வலிமை மற்றும் பொருளாதார ஸ்திரத்தை இழந்த இஸ்லாமிய சாம்ராஜ்ஜியம் தன் நோயை மதினாவை சுற்றியுள்ள இதர இடங்களுக்கு பரப்பிக்கொண்டு இருக்கிறது. முஹம்மதுவின் மீது நம்பிக்கை வைத்து அவரை பின்பற்றியவர்களில் நான்காவதாக இருப்பவர் இவர் என்று கருதப்பட்ட "உஸ்மான் கலிஃபாவை", முஹம்மதுவின் நெருங்கிய நண்பரின் மகன் கொன்றான். இஸ்லாமிய சாம்ராஜ்ஜியத்தின் வலிமை வாய்ந்த பதவி என்று கருதப்படும், கலிஃபா என்ற பதவியை வகித்த "உஸ்மான்" தன் சொந்த வீட்டிலேயே கொலை செய்யப்பட்டார். இஸ்லாமிய சமுதாயம் என்று ஒன்று இருந்ததா என்ற சந்தேகம் வருகின்றது, தேடிப்பார்த்தலும் அது கண்களுக்கு தென்படவில்லை. தன் அன்பான கலிஃபாவை காப்பாற்றாமல் அவருக்கு முதுகை காட்டினது இஸ்லாமிய சமுதாயம்.
இவைகளை சரியான கோணத்தில் நீங்கள் புரிந்துக்கொள்ள இப்போது சொல்லப்போகும் உதாரணத்தைக் கவனியுங்கள். இயேசுவின் சீடனாகிய யோவான், மற்றோரு சீடனாகிய பேதுருவிற்கு விரோதமாக சதி செய்து அவரைக் கொன்றால், கிறிஸ்தவத்தைப் பற்றி நீங்கள் என்ன நினைப்பீர்கள்? குறைந்தபட்சம் இப்படியெல்லாம் நடக்குமென்று உங்களால் கற்பனையாவது செய்யமுடிகின்றதா?
நீங்கள் இப்போது குர்ஆன் ஸூரா 8:63ஐ பற்றி என்ன சொல்வீர்கள்? முஹம்மதுவின் தோழர்களுக்கு மத்தியிலே அன்பின் பிணைப்பை உண்டாக்குவதற்கு பதிலாக அல்லாஹ் அவர்களை சபித்துவிட்டு, பிரிவினையையும், வெறுப்பையும் உண்டாக்கினார் என்று தோன்றுகிறதல்லவா?
சரி, இப்போது இதன் விளைவுகள் என்ன என்பதை கவனிப்போம்.
1) வெறுப்புணர்வும் கொலையும்:
இஸ்லாமிய சமுதாயத்தின் இதயத்தில் எவ்வளவு பாவம் புகுந்துவிட்டதென்றால், அவர்கள் தங்களை அடக்கிக்கொள்ளாமல், கொடுமையான வன்முறையிலும் ஈடுபடவும் தயங்கவில்லை. இஸ்லாமிய தலைவர்கள் (கலிஃபா) கொலை செய்யப்பட்டு சாய்க்கப்பட்டார்கள். இது ஏதோ ஒரு நபர் செய்த கொலையில்லை. முஹம்மதுவின் அனேக தோழர்கள் தங்கள் முந்தைய தொழருக்கு எதிராக புறப்பட்டு அவரை கடுமையாக கொலை செய்கிறார்கள்.
2) இருமனப்போக்கு:
உஸ்மானை பாதுகாக்கவேண்டிய முஸ்லிம்கள், அவரை விட்டுச்சென்றுவிட்டனர். உஸ்மான் தனக்கு வரும் பிரச்சனைகளை தானே சந்திக்கட்டும் என்று அவரை தனிமையாக விட்டுவிட்டார்கள்.
3) ஆன்மீக ஊழல்
பதினைந்து ஆண்டுகளிலேயே இஸ்லாமிய சமுதாயம் ஊழல் நிறைந்ததாக மாறிவிட்டது. முஹம்மதுவோடு தோளோடு தோள் கொடுத்து போர் புரிந்த அதே முஸ்லிம்கள், அவரோடு கூட வறுமையில் வாழ்ந்த அதே முஸ்லிம்கள், இன்று முஹம்மது கற்றுக்கொடுத்த அனைத்து காரியங்களையும் விட்டுவிட்டு தங்களை வன்முறைக்கு விற்றுவிட்டார்கள். அவர்களுக்கு அதிகாரத்தின் மீது ஆசை இருந்தது, அவர்களுக்கு செல்வத்தின் மீது ஆசை இருந்தது. அவர்களுக்கு வரட்டு கௌரவம் அதிமுக்கியமான காரியமாக காணப்பட்டது. ஒருவரை ஒருவர் வெறுத்து, ஒருவரை ஒருவர் காட்டிக்கொடுத்து, ஒருவரை ஒருவர் கொன்றார்கள். நாம் இங்கே பார்ப்பது என்னவென்றால், ஒரு வயதான மனிதர், வலுவிழந்த மனிதர், கன்னத்தில் அறையப்பட்டார், கேவலப்படுத்தப்பட்டார், தன் எதிரிகளால் கழுத்து நெருக்கப்பட்டார், கடைசியாக, குர்-ஆன் படித்துக்கொண்டு இருக்கும்போது, வெட்டப்பட்டார், அவரைக் காப்பாற்ற வந்த அவரது மனைவியும் காயப்படுத்தப்பட்டார்கள்.
விமர்சனம்:
ஒரே ஒரு தலைமுறை கடந்துச்செல்வதற்கு முன்பே, இஸ்லாமிய சமுதாயத்தில், ஒருவரைப் பார்த்து ஒருவர் குரைத்துக்கொள்ளும் நாய்களின் கூட்டம் போல மக்கள் மாறிவிட்டார்கள். இவர்களின் ஆன்மீக நிலை மிகவும் மோசமான நிலையை அடைந்துவிட்டது. இந்த நிலை கலிஃபா நாற்காலியிலிருந்தே தொடங்கியது. இந்த ஆன்மீக மரணம் இஸ்லாமிய சமுதாயத்தில் தன் கனிகளை பெற்றெடுக்க ஆரம்பித்துவிட்டது. இஸ்லாமிய சமுதாயத்தில் என்ன நடந்தது என்று பார்த்தீர்களா? உண்மையான இஸ்லாம் என்னவென்று இப்போது உங்களுக்கு புரிந்ததா?
குறிப்புக்கள்:
1) al-Tabari, "The History of al-Tabari", (Ta'rikh al-rusul wa'l-muluk), State University of New York Press 1993
ஆங்கில மூலம்: http://www.answering-islam.org/Silas/rf3_uthman_murder.htm
சைலஸ் அவர்களின் இதர கட்டுரைகள்
© Answering Islam, 1999 - 2013. All rights reserved.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக