இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவத்தை அறிய உதவும் சின்னஞ்சிறு கேள்வி பதில்கள் 1000
குர்ஆன் பாகம் 1
(2020 ரமளான் தொடர் கட்டுரைகள்)
முன்னுரை:
இஸ்லாமை கற்றுக்கொள்ள பல ஆய்வுக் கட்டுரைகள் தமிழில் பதித்துக்கொண்டு வருகிறேன். பல ஆண்டுகளுக்கு முன்பு தொடர்ந்த இந்த பயணத்தில் இன்றுவரை 700க்கும் அதிகமான கட்டுரைகள் நம் தளங்களில் (ஈஸா குர்ஆன் & ஆன்சரிங் இஸ்லாம்) பதிக்கப்பட்டுள்ளது.
இன்று மக்கள் சின்னத்திரையில் அதாவது மொபைள் போனில் அதிகமாக நேரத்தை செலவிடுகிறார்கள். மேலும், வாட்ஸப் மூலமாக அனேக விவரங்களை பகிர்ந்துக்கொண்டும், கற்றுக்கொண்டும் வருகிறார்கள். மக்கள் சுலபமாக இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவம் பற்றி அறிந்துக்கொள்ள வசதியாக இருக்கும் என்பதால், சின்னஞ்சிறு கேள்விகள் 1000+ என்ற தலைப்பில் கேள்வி பதில்களை எழுதலாம் என்று விரும்பினேன். இவைகளை சுலபமாக வாட்ஸப்பில் படிக்கமுடியும் மற்றும் மற்றவர்களுக்கும் அனுப்பமுடியும்.
இந்த தொடரின் பெரும்பான்மையான பதில்கள், ஒரு வார்த்தை அல்லது ஒரு வாக்கியமாகவே இருக்கும். சில கேள்விகள் மட்டும் அதிகபட்சமாக நான்கு பத்திகள் அதாவது ஒரு பக்கம் மட்டுமே இருக்கும். ஒருவர் இந்த 1000 கேள்விகளை படித்தால், இஸ்லாமையும், கிறிஸ்தவத்தையும் சுலபமாக அறிந்துக்கொள்ள முடியும். மேலும் இஸ்லாமையும் கிறிஸ்தவத்தையும் இன்னும் ஆழமாக கற்றுக்கொள்ள ஆர்வம் உண்டாகும்.
இப்போதைக்கு 1000 கேள்விகளை கீழ்கண்ட தலைப்புக்களில் தயார் செய்துள்ளேன்.
தலைப்புக்கள்:
- குர்ஆன்
- அல்லாஹ் - யெகோவா
- முஹம்மது
- ஹதீஸ்கள் - சீரா(முஹம்மதுவின் வரலாறு)
- இஸ்லாம்
- பெண்கள்
- பைபிள்
- கிறிஸ்தவம்
- கலைச்சொற்கள்
- இஸ்லாமிய அறிஞர்கள்
- இஸ்லாமிய புத்தகங்கள்/தளங்கள்
ஒவ்வொரு கட்டுரையில் 30 கேள்விகளுக்கு பதில்கள் கொடுக்கப்படுகின்றது. இவ்வருடம் 2020 ரமளான் மாதம் முடிவதற்குள் அனைத்து கேள்வி பதில்களை (1000) பதிக்கவேண்டும் என்று எண்ணியுள்ளேன்.
இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவத்தை அறிய உதவும் சின்னஞ்சிறு கேள்வி பதில்கள் 1000
(பாகம் 1 - குர்ஆன் கேள்விகள் பதில்கள் 1 - 30 வரை)
கேள்வி 1: குர்ஆனின் மூல மொழி என்ன?
பதில் 1: அரபி மொழி
கேள்வி 2: குர்ஆனில் எத்தனை அத்தியாயங்கள் மற்றும் வசனங்கள் உள்ளன?
பதில் 2: குர்ஆனில் 114 அத்தியாயங்கள் மற்றும் 6236 வசனங்கள் உள்ளன.
கேள்வி 3: ஸூரா மற்றும் ஆயத் என்றால் என்ன?
பதில் 3: அத்தியாயத்தை அரபியில் ஸூரா (சூரா) என்றும், வசனங்களை ஆயத் என்றும் அழைப்பார்கள். "ஆயா" என்றால் வசனம், "ஆயத்" என்றால் வசனங்கள் (பன்மை) ஆகும்.
கேள்வி 4: குர்ஆனில் 6666 வசனங்கள் உள்ளதாகச் சொல்கிறார்களே!
பதில் 4: இது தவறு, இன்றைய குர்ஆனில் 6236 வசனங்கள் மட்டுமே உள்ளன.
கேள்வி 5: அது என்ன இன்றைய குர்ஆனில் 6236 என்றுச் சொல்கிறீர்கள், அப்படியானால், ஆரம்பகால குர்ஆனில் 6236 வசனங்கள் இல்லையா?
பதில் 5: இல்லை, ஆரம்ப கால குர்ஆனில் இருந்த சில வசனங்கள் இன்றைய குர்ஆனில் இல்லை என்று ஹதீஸ்கள் சொல்கின்றன. இவைகள் பற்றி அடுத்தடுத்த கேள்விகளில் காண்போம்.
கேள்வி 6: குர்ஆனின் முதல் அத்தியாயத்தின் பெயர் என்ன?
பதில் 6: அல் ஃபாத்திஹா (தமிழில் இதன் பொருள்: தோற்றுவாய்)
கேள்வி 7: குர்ஆனின் கடைசி அத்தியாயத்தின் பெயர் என்ன?
பதில் 7: அந் நாஸ் (தமிழில் இதன் பொருள்: மனிதர்கள்). சிலர் ஸூரா (அத்தியாயம்) என்ற வார்த்தையோடு சேர்த்து "ஸூரத்துந் நாஸ்" என்று எழுதுகிறார்கள்.
கேள்வி 8: குர்ஆனின் மக்கீ, மதனீ வசனங்கள் என்றுச் சொல்கிறார்களே, அவைகளின் அர்த்தமென்ன?
பதில் 8: முஹம்மது முதலில் சில ஆண்டுகள் மக்கா நகரிலும், பிறகு மதினா நகரிலும் வாழ்ந்தார். அவர் மக்காவில் வாழ்ந்த காலத்தில் இறக்கப்பட்ட குர்ஆன் வசனங்களை மக்கீ என்றும், மதினா நகரில் வாழ்ந்த போது இறக்கப்பட்ட வசனங்களை மதனீ என்றும் அழைக்கிறார்கள்.
கேள்வி 9: குர்ஆனில் குறிப்பிடப்படும் "ஜபூர், தோறா மற்றும் இன்ஜில்" என்ற பெயர்கள் எவைகளை குறிக்கின்றன?
பதில் 9: இவைகள் பைபிளின் புத்தகங்கள் ஆகும்.
- தோறா - இது பழைய ஏற்பாட்டின் முதல் ஐந்து நூல்களை (ஐந்தாகமங்களை) குறிக்கிறது.
- ஜபூர் - இது சங்கீத நூலை குறிக்கிறது.
- இன்ஜில் - இது பைபிளின் நற்செய்தி (சுவிசேஷங்கள்) நூல்களை குறிக்கின்றது.
இன்ஜில் என்றால் வெறும் நற்செய்திகளை மட்டுமே குறிக்குமா? அல்லது புதிய ஏற்பாடு முழுவதையும் குறிக்குமா? என்று சில முஸ்லிம்களுக்கு சந்தேகம் உண்டு.
கேள்வி 10: குர்ஆன் மட்டும் போதாதா? ஹதீஸ்களும் தேவையா?
பதில் 10: முஸ்லிம்களுக்கு குர்ஆனும் ஹதீஸ்களும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள். ஒரே ஒரு பக்கத்தை வைத்திருந்தால் அந்த நாணயத்திற்கு மதிப்பில்லை. எப்படி ஒரு மனிதனுக்கு உயிரும் உடலும் முக்கியமோ, அது போன்றது தான் குர்ஆனும், ஹதீஸ்களும். ஒன்றை வைத்துக்கொண்டு மற்றதை புறக்கணிக்கமுடியாது. இதில் ஏதாவது ஒன்றை புறக்கணித்தால், இஸ்லாம் அர்த்தமற்றதாகிவிடும்.
கேள்வி 11: அரபிமொழி தெய்வ மொழியா?
பதில் 11: அரபி தெய்வ மொழி இல்லை. உலகில் எந்த மொழியும் தெய்வ மொழி ஆகமுடியாது.
கேள்வி 12: குர்ஆன் என்ற வார்த்தையின் அர்த்தமென்ன?
பதில் 12: குர்ஆன் என்றால், ஓதுதல் (recitation) என்று பொருள்.
கேள்வி 13: முதன் முதலாக எந்த இரவில் குர்ஆன் இறக்கப்பட்டதாக குர்ஆன் சொல்கிறது?
பதில் 13: லைலத்துல் கத்ர் என்ற இரவில் குர்ஆன் இறங்கியதாக குர்ஆன் சொல்கிறது.
"நிச்சயமாக நாம் அதை (குர்ஆனை) கண்ணியமிக்க (லைலத்துல் கத்ர்) என்ற இரவில் இறக்கினோம்" (குர்ஆன் 97:1) என்று அல்லாஹ் கூறுகின்றான்.
[இந்த தொடர்களில் முஹம்மது ஜான் தமிழாக்கமே பிரதானமாக மேற்கோள் காட்டப்படுகின்றது.]
கேள்வி 14: குர்ஆனின் மிகவும் நீண்ட மற்றும் சிறிய அத்தியாயங்கள் எவை?
பதில் 14: இரண்டாவது அத்தியாயம் அல்-பகரா 286 வசனங்களை கொண்டது, மற்றும் 103, 108 மற்றும் 110 அத்தியாயங்கள் மூன்று வசனங்களைக் கொண்ட சிறிய அத்தியாயங்களாகும்.
கேள்வி 15: மக்காவில் மற்றும் மதினாவில் இறக்கப்பட்ட அத்தியாயங்களின் (ஸூராக்களின்) எண்ணிக்கை எத்தனை?
பதில் 15: மக்கீ அத்தியாயங்கள் 86, மதினா அத்தியாயங்கள் 28 என்று இஸ்லாமிய அறிஞர்கள் வகைப்படுத்தியுள்ளார்கள் (பார்க்க: http://www.tamililquran.com/suraindex.asp ).
சில அறிஞர்களுக்கு இதில் முரண்பட்ட கருத்து உண்டு.
கேள்வி 16: குர்ஆனில் எந்த நபியின்(தீர்க்கதரிசியின்) பெயர் அதிகமாக வருகிறது?
பதில் 16: மூஸா என்கின்ற மோசே தீர்க்கதரிசியின் பெயர் அதிகமாக (115 முறை) வருகிறது என்று கூறப்படுகின்றது. சிலர் 136 முறை வருகிறது என்கிறார்கள்.
கேள்வி 17: குர்ஆனில் எத்தனை தீர்க்கதரிசிகளின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன?
பதில் 17: குர்ஆனில் 25 நபிமார்கள் பற்றி வருகின்றது என்று முஸ்லிம்கள் கூறுகிறார்கள் (பார்க்க: http://www.tamililquran.com/nabinames.asp ). பைபிளின் படி இவர்கள் அனைவரும் தீர்க்கதரிசிகள் அல்ல, உதாரணம்: ஆதாமை பைபிள் தீர்க்கதரிசி (நபி) என்று அழைப்பதில்லை மற்றும் முஹம்மதுவை பைபிள் படி தீர்க்கதரிசி என்று அழைக்கமுடியாது.
கேள்வி 18: குர்ஆன் வசனங்கள் அத்தியாயங்கள், முஹம்மதுவிற்கு இறக்கப்பட்ட வரிசையில் குர்ஆனில் அமைக்கப்பட்டுள்ளதா?
பதில் 18: இல்லை. முஹம்மது உயிரோடு இருக்கும் போது, அவர் குர்ஆனை ஒரு புத்தக வடிவில் தொகுக்கவில்லை. புத்தகமே இல்லாத போது, வரிசைப்படி முழு புத்தகத்தை அமைப்பது எப்படி?
முஹம்மதுவின் மரணத்திற்கு பிறகு, பல ஆண்டுகள் கழித்து, குர்ஆனை தொகுத்தபோது, பெரிய அத்தியாயங்கள் தொடங்கி சிறிய அத்தியாயங்கள் வரை வரிசைப்படுத்தி தொகுத்தார்கள். அதன் பிறகு வந்தவர்கள், வசனங்களாக பிரித்த போது, அத்தியாயங்களில் வசன எண்களின் எண்ணிக்கை மாறுபட்டது.
கேள்வி 19: முஹம்மதுவின் காலத்தில் அனேகர் குர்ஆனை 100% முழுவதுமாக மனனம் செய்திருந்ததாகச் சொல்கிறார்களே இது சரியா?
பதில் 19: பலர் குர்ஆனை 100% மனப்பாடம் செய்திருந்தார்கள் என்று முஸ்லிம்கள் நம்புகிறார்கள், ஆனால் இது உண்மையல்ல.
முஹம்மதுவின் தோழர்கள் குர்ஆனை தொகுத்த போது, இவர்கள் பட்ட பாடு இருக்கின்றதே! அது யாரால் சொல்லிமுடியும்.
உண்மையாகவே, குர்ஆனை இவர்கள் 100% மனப்பாடம் செய்திருந்தால், ஒரே வாரத்தில் குர்ஆனை தொகுத்து இருந்திருக்கலாம். ஆனால், இந்த காரியத்தைச் செய்ய, ஒரு குழுவை அமைத்து, பல மாதங்கள் கழித்து தொகுப்பை முடித்தார்கள். இதன் மூலம் அறிவது என்னவென்றால், ஒருவரும் 100% குர்ஆனை மனப்பாடம் செய்யவில்லை, செய்யமுடியவில்லை என்பதாகும்.
கேள்வி 20: முஹம்மதுவிற்கு இறக்கப்பட்ட குர்ஆன் வசனங்கள் எழுதப்பட்ட எலும்புகள், இலைகள், தோல்கள் இன்று நம்மிடம் உள்ளனவா?
பதில் 20: இல்லை அவைகள் நம்மிடம் இப்போது இல்லை. அவைகள் எரிக்கப்பட்டுவிட்டன, தொலைந்துபோய் விட்டன. குர்ஆனின் ஆதி மூலம் நம்மிடம் இல்லை.
கேள்வி 21: குர்ஆன் தமிழாக்கங்கள் சிலவற்றை இணையத்தில் படிக்கமுடியுமா?
பதில் 21: குறைந்தபட்சம், ஐந்து தமிழாக்கங்களை நீங்கள் இணையத்தில் படிக்கலாம்.
தமிழில் குர்ஆன் ( http://www.tamililquran.com/ ) என்ற தளத்தில் நான்கு தமிழாக்கங்களை படிக்கமுடியும். அவைகள்:
- டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்,
- அப்துல் ஹமீது பாகவி தமிழாக்கம்,
- இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் (IFT) தமிழாக்கம் மற்றும்
- மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி) தமிழாக்கம்.
பீஜே அவர்களின் குர்ஆன் தமிழாக்கத்தை அவரது தளத்தில் ( https://www.onlinepj.in/ ) படிக்கமுடியும்.
கேள்வி 22: குர்ஆனை அரபியில் படித்தால் தான் நன்மை என்றுச் சொல்வது சரியா?
பதில் 22: முஸ்லிம்கள் இப்படி நம்புகிறார்கள். ஆனல், உண்மையான இறைவன் என்றைக்கும் ஒரு குறிப்பிட்ட மொழியில் என்னை தொழுதால் தான், பூஜை செய்தால் தான் நான் அவைகளை ஏற்றுக்கொள்வோன் என்று சொல்லமாட்டான்.
கேள்வி 23: முஹம்மது உயிரோடு இருந்த போது, அவரிடம் ஒரு புத்தக வடிவில் குர்ஆன் ஒரு தொகுப்பாக இருந்ததா?
பதில் 23: இல்லை, முஹம்மது அப்படிப்பட்ட ஒரு புத்தகத்தை வைத்திருக்கவில்லை. குர்ஆனை ஒரு புத்தகமாக தொகுக்கவேண்டும் என்று அவர் விரும்பியதும் இல்லை. முஹம்மதுவின் மரணத்திற்கு பல ஆண்டுகள் கழித்து, குர்ஆனை ஒரு புத்தகமாக தொகுக்கவேண்டும் என்று முஹம்மதுவின் தோழர் ஒருவர் சொன்னபோது, முஹம்மது செய்யாத ஒரு காரியத்தை எப்படி செய்வதென்று மற்றொரு சஹாபா கேள்வி கெட்டார். இது மிகவும் கடினமான காரியம் என்றார். எனவே, முஹம்மதுவிடம் மரணம்வரை ஒரு முழூ குர்ஆன் ஒரு புத்தகமாக இருந்ததில்லை.
இதற்கு இன்னொரு சான்றையும் கொடுக்கலாம். முஸ்லிம்களின் நம்பிக்கையின் படி, ஒவ்வொரு ஆண்டும், அந்த ஆண்டில் முஹம்மதுவிற்கு கொடுக்கப்பட்ட குர்ஆன் வசனங்களை சரி பார்க்க ஜிப்ரீல் தூதன் வந்து, சரி பார்த்துச் செல்வாராம். கடைசி ஆண்டு, இரண்டு முறை ஜிப்ரீல் தூதன் சரி பார்த்தாராம். ஒரு புத்தகமாக இருந்தால், இப்படி இரண்டு முறை சரி பார்க்கவேண்டிய அவசியம் இருந்திருக்காது. முஹம்மது ஞாபகத்திலிருந்து சொல்லச் சொல்ல, ஜிப்ரீல் சரி பார்த்து இருந்திருக்கவேண்டும். இது இன்னொரு உண்மையையும் எடுத்துக்காட்டுகின்றது, அது என்னவென்றால், முஹம்மது நம்மைப்போன்று மறதியுள்ளவர், அவர் குர்ஆனையும் மறப்பார் என்பதாகும்.
கேள்வி 24: குர்ஆனை முஹம்மது 100% முழுவதுமாக மனப்பாடம் செய்திருந்தாரா? அவர் ஒரு வசனத்தையும் மறக்கவில்லையா?
பதில் 24: முஹம்மது முழூ குர்ஆனை மனப்பாடம் செய்திருந்தார் என்று முஸ்லிம்கள் நம்புகிறார்கள். ஆனால், இது உண்மையில்லை. இதற்கும் எந்த ஒரு சான்றுமில்லை. சில வேளைகளில் முஹம்மது குர்ஆனின் சில வசனங்களை மறந்துள்ளார் என்பதற்கு ஆதாரங்கள் உண்டு.
முஹம்மதுவும் நம்மைப்போன்று மறதியுள்ளவர் தான் என்பதை புகாரி ஹதீஸ் 401 கூறுகிறது.
முஹம்மது குர்ஆனின் சில வசனங்களை மறந்துவிட்டார், அதனை மற்றொருவர் ஞாபகப்படுத்தினார், புகாரி நூல் எண் 5042:
5042. ஆயிஷா(ரலி) கூறினார்: இரவு நேரம் பள்ளிவாசலில் ஒருவர் குர்ஆன் ஓதிக்கொண்டிருப்பதை நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். அப்போது நபியவர்கள், 'அல்லாஹ் அவருக்குக் கருணை புரியட்டும்! இன்ன அத்தியாயங்களிலிருந்து நான் மறந்துவிட்டிருந்த இன்ன இன்ன வசனங்களை அவர் எனக்கு நினைவூட்டிவிட்டார்' என்று கூறினார்கள்.
குர்ஆனை யாராவது மறந்துவிட்டால், ' நான் மறந்துவிட்டேன் என்று சொல்லாமல்,அது மறக்கவைக்கப்பட்டுவிட்டது என்று சொல்லவேண்டும் என முஹம்மது கூறியுள்ளார். ஏனென்றால், "ஒட்டகங்களை விடவும் வேகமாக மனிதர்களின் நெஞ்சங்களிலிருந்து குர்ஆன் தப்பக்கூடியதாகும்" என்றும் அவர் கூறியுள்ளார்: புகாரி நூல் எண்கள்: 5032, 5039
கேள்வி 25: இஸ்லாமின் தூண்களில் ஒன்றான ஐந்து வேளை தொழுவது பற்றி குர்ஆனில் எந்த இடத்தில் சொல்லப்பட்டுள்ளது?
பதில் 25: முஸ்லிம்கள் இன்று தொழும் "ஐந்து வேளை தொழுகையை நிலைநிறுத்துங்கள்" என்று குர்ஆனில் எந்த ஒரு வசனத்திலும் சொல்லப்படவில்லை. குர்ஆனில் மூன்று வேளை தொழுகை பற்றித் தான் சொல்லப்பட்டுள்ளது .
ஹதீஸ்களிலிருந்து முஸ்லிம்கள் ஐந்து வேளை தொழுகையை கற்றுக்கொண்டு அதை பின்பற்றிக்கொண்டு இருக்கிறார்கள்.
கேள்வி 26: புனித ஹஜ் பயணத்தில் செய்யவேண்டிய கடமைகள் சட்டங்கள் பற்றி குர்ஆனில் எங்கு சொல்லப்பட்டுள்ளது?
பதில் 26: இஸ்லாமிய புனித யாத்திரையைப் பற்றிய அனைத்துச் சட்டங்களையும் குர்ஆன் சொல்லவில்லை. அவைகளை ஹதீஸ்களிலிருந்து கற்றுக்கொண்டு முஸ்லிம்கள் செய்கிறார்கள்.
கேள்வி 27: குர்ஆனை புரிந்துக்கொள்வதற்கு தேவையான பின்னணியை எங்கு காணலாம்?
பதில் 27: முஹம்மதுவின் சொல்லும் செயலும் அடங்கிய நூல்கள் என்றுச் சொல்லப்படும் ஹதீஸ்களிலிருந்தும், அவரது வாழ்க்கை சரித்திர நூல்களிலிருந்தும் அறியமுடியும், அதிலும் 100% அறியமுடியும் என்றுச் சொல்லமுடியாது.
கேள்வி 28: தௌஹீத் என்ற வார்த்தை குர்ஆனில் உள்ளதா?
பதில் 28: தௌஹித் அதாவது ஏகத்துவம் (ஒரே இறைவன்) என்ற பொருள் வரும் இந்த வார்த்தை குர்ஆனில் ஒரு முறையும் வருவதில்லை. ஆனால், ஆங்காங்கே இந்த கோட்பாடு சொல்லப்பட்டிருக்கும். உதாரணத்திற்கு, அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்ற வாக்கியத்தை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம்.
கேள்வி 29: குர்ஆன் மட்டும் (Quran Only Muslims) முஸ்லிம்கள் என்கிறார்களே! இவர்கள் யார்?
பதில் 29: இவர்கள் குர்ஆன் மட்டும் தான் இறைவேதம் என்று நம்புகிறவர்கள். முஹம்மதுவின் சொல்லும் சொயலும் அடங்கிய ஹதீஸ்களையும், இதர இஸ்லாமிய சரித்திர நூல்களையும் இவர்கள் இறைவேதம் என்று நம்புவதில்லை.
கேள்வி 30: குர்ஆனில் வரும் ஒரே பெண்ணின் பெயர் என்ன?
பதில் 30: குர்ஆனில் பெயர் குறிப்பிடப்பட்டிருக்கின்ற ஒரே ஒரு பெண் 'மர்யம்' ஆவார், அதாவது இயேசுவின் தாயின் பெயர் குர்ஆன் வருகிறது வேறு எந்த ஒரு பெண்ணின் பெயர் வருவதில்லை.
இன்னாருடைய மனைவி, இன்னாருடைய மகள், சகோதரி என்று சொல்லப்பட்டிருக்குமே தவிர, அந்த பெண்ணின் பெயர் குறிப்பிடப்படுவதில்லை, இதற்கு ஒரே ஒரு விதி விளக்கு மர்யம் என்ற பெயர் மட்டும் தான்.
முடிவுரை:
இந்த கேள்விகள் குர்ஆனைச் சுற்றியே இருக்கும்படி அமைத்துள்ளேனே தவிர, ஒரு பாட நூல் போன்று ஒரு கோர்வையாக எழுதவில்லை. ஏனென்றால், படிப்பவர்களுக்கு சலுப்பூட்டக்கூடாது என்பதற்காக அடிக்கடி உப தலைப்பை மாற்றி கேள்விகளை அமைத்துள்ளேன்.
அடுத்த தொடரில், இன்னும் 30 கேள்விகளுக்கான பதில்களை சுருக்கமாக காணலாம்.
வாசகர்களுக்கு ஏதாவது கேள்விகள் தோன்றினால், எனக்கு எழுதவும் அவைகளுக்கும் பதில்கள் கொடுக்க முயலுவேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக