கொரொனா வைரஸ் பற்றி நாம் அனைவரும் அறிவோம். இந்திய அரசாங்கம் 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. எல்லோரும் வீட்டுக்குள் இருந்துகொண்டு இந்தக் கொரொனாவிலிருந்து காக்கப்பட உதவுங்கள் என்று பிரதமரும் கூறியுள்ளார். மக்கள் கூடுகின்ற எந்த ஒரு நிகழ்ச்சியையும் இந்த காலங்களில் நடத்த வேண்டாம் என்று அரசாங்கம் கூறியுள்ளது. இதனால் சபைகள் கோவில்கள் மற்றும் மசூதிகள், தொழிற்சாலைகள், பள்ளிகள், நிறுவனங்கள் என்று அனைத்தும் முடக்கப்பட்டுள்ளன.
சிலர் இந்த அறிவுரையை ஏற்றுக்கொள்ளாமல் தங்கள் விருப்பப்படி இங்கும் அங்கும் உலாவிக்கொண்டு இருக்கிறார்கள். மிக மிக சொற்பமானவர்கள் இன்னும் மசூதிகளுக்குச் சென்றும், சர்சுகளுக்குச் சென்றும், கோயில்களுக்குச் சென்றும் பூஜைகள் செய்துக்கொண்டும், ஆராதனை செய்துக்கொண்டும் இருக்கிறார்கள். இவர்களை காவலர்கள் அடித்து துரத்தும் வீடியோக்களும் வாட்ஸப்பில் வந்துக்கொண்டு இருக்கிறது. இந்த காலக்கட்டங்களில் இது சட்ட விரோதமான செயல் என்பதை இவர்கள் அறிந்துக்கொள்வதில்லை.
- இப்படிப்பட்ட காலங்களில், அதாவது கொள்ளை நோய்கள் அதிவேகமாக பரவி கொண்டிருக்கிற காலங்களில் கிறிஸ்தவர்களின் கடமை என்ன?
- சிலர் "இறைவனை சர்ச்சில், மசூதிகளில், கோவில்களில் தொழுதால் தான் சரியானது, நமக்கு கொரொனா நோய் அண்டாது" என்று பேசிக்கொண்டு இருக்கிறார்கள். இது சரியான புரிதலா?
- தேவன் அனுப்பிய தண்டனை தான் கொரொனா என்று சிலர் கூறுகிறார்கள்.
- ஏசாயா 26:20 தனித்திருத்தல் பற்றித் தான் சொல்கிறதா?
- பைபிள் இதைப் பற்றி என்ன சொல்கிறது?
- நம் முன்னோர்கள் இப்படிப்பட்ட சூழ்நிலையில் எப்படி நடந்துக்கொண்டார்கள்?
போன்றவற்றை சுருக்கமாக இங்கு பார்ப்போம்?
1) மார்ட்டின் லூதர் & அரையாப்பு பிளேக் (Bubonic plague)
1527 ஆம் ஆண்டு "அரையாப்பு பிளேக் (Bubonic plague)" என்ற பெயரில் ஒரு கொள்ளை நோய் மார்ட்டின் லூதர் வாழ்ந்த பிராந்தியத்தில் பரவியது. அந்த நேரத்தில் மார்டின் லூதர் அவர்கள் தன் குடும்பத்தோடு ஊரை விட்டு வேறு ஊருக்கு சென்று விடுங்கள் என்று அறிவுரை கூறப்பட்டது.
நாம் சந்திக்கிற கொரொனாவைப் போன்று அந்த நோயும் மக்களை அதிகமாக கொன்று குவித்துக் கொண்டு இருந்தது. இதனால் 30 சதவிகிதத்துக்கு அதிகமான மக்கள் மரிக்க கூடுமென்றும் சொல்லப்பட்டது. நீங்களும் உங்கள் குடும்பமும் இதிலிருந்து தப்பித்துக் கொள்ளுங்கள் என்று சொல்லப்பட்டபோது "ஒரு கிறிஸ்தவனாக நான் இப்படி செய்ய முடியாது, என் மக்களோடு இருந்து அவர்களுக்கு உதவி செய்வது என் கடமை என்று சொல்லி அவர் அங்கேயே இருந்துவிட்டார். இதனால் தம் மகளை (எலிசபெத்) அந்த நோய்க்கு பலியாக அவர் கொடுக்கவேண்டி இருந்தது.
தன்னுடைய ஊர்க்காரர்கள் நோய்வாய்ப்பட்டு இருக்கும்போது அவர்களுக்கு உதவி செய்வதை விட்டுவிட்டு நாம் எப்படி ஊரைவிட்டு ஓட முடியும் என்று அவர் கேட்டார்.
அவர் பயன்படுத்திய உதாரணம் என்னவென்றால், ஒருவேளை இயேசுவோ அல்லது அவருடைய தாயாரோ இந்த கொள்ளைநோயினால் நோய்வாய்பட்டு இருந்தால், இப்படி நாம் விட்டு ஓடிப்போவோமா? ஓடிப்போகமாட்டோம் அல்லவா! இதைப்போலத்தான் ஒரு மனிதன் நோயினால் பாதிக்கப்பட்டு இருக்கும்போது, நாம் உதவி செய்ய வேண்டும், அவருடைய துக்கத்தில் பங்கு கொள்ள வேண்டும். அப்படி உதவி செய்யும் போது தான், நாம் இயேசுவை காணமுடியும் என்று சொல்லி லூதர் அதே ஊரில் தங்கிவிட்டார்.
அவர் கூறியதை ஆங்கிலத்தில் கீழே படியுங்கள்:
"This I well know, that if it were Christ or his mother who were laid low by illness everybody would be so solicitous and would gladly become a servant or helper. Everyone would want to be bold and fearless; nobody would flee but everyone would come running… If you wish to serve Christ and to wait on him, very well, you have your sick neighbour close at hand. Go to him and serve him, and you will surely find Christ in him…"
மேலும் அவர் கூறும்போது, யாரும் தம் கடமையை செய்வதிலிருந்து இந்த காலத்திலே மற்றவர்களை விட்டுப் போகக் கூடாது என்றும் கட்டளையிட்டார்.
"Likewise, fathers and mothers are bound by God's law to serve and help their children, and children their fathers and mothers. Likewise, paid public servants such as city physicians, city clerks, and constables, or whatever their titles, should not flee unless they provide capable substitutes who are acceptable to their employer." He goes on to add those looking after children, or with sick neighbours.
மேலும் கிறிஸ்தவத்தின் முன்னோடிகள் இப்படிப்பட்ட கொள்ளை நோய்கள் பரவியபோது எப்படி நடந்துக்கொண்டார்கள் என்பதை கீழ்கண்ட கட்டுரையில் படித்துக்கொள்ளவும்.
கிறிஸ்தவர்களும் கொரொனாவும்
2) சட்டத்திற்கு கீழ்படியவேண்டும்:
முதலாவதாக, கிறிஸ்தவர்கள் சட்டத்திற்கு கீழ்படியவேண்டும். மேலும் இப்படிப்பட்ட கொள்ளை நோய்கள் அதிவேகமாக பரவிக்கொண்டும், மக்களை கொன்றுக்கொண்டும் இருக்கும் போது, நாட்டின் சட்டத்திற்கு கிறிஸ்தவர்கள் கீழ்படியவேண்டும்.
கிறிஸ்தவர்கள் எந்த நாட்டின் குடிமக்களாக இருக்கிறார்களோ, அந்த நாட்டின் நல்ல குடிமக்களாக நடந்துக்கொள்ள்வேண்டும்.
நாட்டு தலைவர்களுக்காகவும், அதிகாரத்தில் உள்ளவர்களுக்காகவும் ஜெபிக்கவேண்டும்:
1. நான் பிரதானமாய்ச் சொல்லுகிற புத்தியென்னவெனில், எல்லா மனுஷருக்காகவும் விண்ணப்பங்களையும் ஜெபங்களையும் வேண்டுதல்களையும் ஸ்தோத்திரங்களையும் பண்ணவேண்டும்;
2. நாம் எல்லாப் பக்தியோடும் நல்லொழுக்கத்தோடும் கலகமில்லாமல் அமைதலுள்ள ஜீவனம்பண்ணும்படிக்கு, ராஜாக்களுக்காகவும், அதிகாரமுள்ள யாவருக்காகவும் அப்படியே செய்யவேண்டும்.
3. நம்முடைய இரட்சகராகிய தேவனுக்குமுன்பாக அது நன்மையும் பிரியமுமாயிருக்கிறது. (I தீமோத்தேயு 2:1-3)
7. நான் உங்களைச் சிறைப்பட்டுப்போகப்பண்ணின பட்டணத்தின் சமாதானத்தைத் தேடி, அதற்காகக் கர்த்தரை விண்ணப்பம்பண்ணுங்கள்; அதற்குச் சமாதானமிருக்கையில் உங்களுக்கும் சமாதானமிருக்கும். (எரேமியா 29:7)
ராஜாவை கனம் பண்ணுங்கள்:
எல்லாரையும் கனம்பண்ணுங்கள்;
சகோதரரிடத்தில் அன்புகூருங்கள்;
தேவனுக்குப் பயந்திருங்கள்;
ராஜாவைக் கனம்பண்ணுங்கள். (I பேதுரு 2:17)
இந்த வசனத்தில் சொல்லப்பட்டதைப் போன்று, நம்மை ஆள்கிறவர்களை கனம் பண்ணவேண்டும்.
இந்த வார்த்தைகளை அப்போஸ்தலர் பேதுரு அவர்கள் எழுதும் போது, கிறிஸ்தவர்களை கொடுமைப்படுத்திக்கொண்டு இருந்த கொடூரமான அரசன் நீரோ ஆட்சி செய்துக்கொண்டு இருந்தான். இருந்தபோதிலும், நமக்கு கொடுக்கப்பட்ட கட்டளை ராஜாவை கனம் பண்ணவேண்டும். இதன் மூலமாகத் தான் நாம் கிறிஸ்தவர்கள் என்று அடையாளம் காட்டப்படமுடியும்.
மேற்கண்ட எட்டு வார்த்தைகளை கிறிஸ்தவர்கள் பின்பற்றினால், இந்த கொரொனா காலக்கட்டத்தில் நன்மை அதிகமாக விளையும்.
எல்லா இந்திய மக்களையும் கனம் பண்ணவேண்டும். எப்படி கனம் பண்ணுவது? நாம் நம் குடும்பத்தோடு தனித்திருக்கும் படி சட்டம் போடப்பட்டு இருப்பதினால், நாம் இந்த சட்டத்தை பின்பற்றினால், மேற்கண்ட வசனத்தில் சொன்னதுபோன்று, மக்களையும் கனம் பண்ணுவதுபோன்றும் ஆகிவிடும், அதே வேளையில் ராஜாவையும் கனம் பண்ணுவதும போன்றும் ஆகிவிடும். ஒரு கல் இரண்டு மாங்காய் சொல்வது போன்று இது அமைந்துள்ளது.
அதன் பிறகு உன் சக கிறிஸ்தவன் மீது அன்பு கூறு, மற்றும் தேவனுக்கு பயந்திரு, என்ற கட்டளைகள் நமக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இதைப் பற்றி மேலதிக விவரங்களை இக்கட்டுரையில் எழுதியுள்ளேன் படிக்கவும்.
எனவே, கிறிஸ்தவர்களும், சபை ஊழியர்களும் இதுவரை சட்டத்திற்கு எப்படி கீழ்படிந்து இருந்தீர்களோ, அதே போன்று, இனியும் சட்டத்திற்கு கீழ்படிந்து இருங்கள்.
3) மக்கள் உங்களுக்கு என்ன செய்யவேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களோ,? அதையே நீங்கள் செய்யுங்கள்:
இயேசு கூறினார்:
31. மனுஷர் உங்களுக்கு எப்படிச் செய்யவேண்டுமென்று விரும்புகிறீர்களோ, அப்படியே நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள். (லூக்கா 6:31)
இன்றைய சூழலை நீங்கள் புரிந்துக்கொள்ள "நேரடியாக கேள்விக்கு வருகிறேன்", உங்கள் அயலான், உங்கள் தெருவில் உள்ளவர், உங்கள் ஊரில் உள்ளவர் உங்களுக்கு கொரொனா வைரஸை பரப்ப நீங்கள் விரும்புவீர்களா?
"இல்லை, விரும்பமாட்டேன்" என்பது உங்கள் பதிலாக இருந்தால், அதே வேலையை நீங்கள் செய்யாதீர்கள். அதாவது நீங்கள் வெளியே சென்று உங்கள் அயலானுக்கு, தெருவில் உள்ளவனுக்கு, ஊரில் உள்ளவனுக்கு கொரொனா வைரஸை பரப்பவேண்டாம். இதைத் தான் இயேசு மேலே சொல்லியுள்ளார். சட்டத்தை மீறி வெளியே சென்று நம் சக குடிமகனுக்கு சுகவீனம் வரும் படி எதையும் செய்யவேண்டாம்.
4) உண்மையை பரப்புங்கள், அறியாமலும் பொய்யை பரப்பாதீர்கள்
கொரொனாவைப் பற்றி பல உண்மைகளும் பல பொய்களும் வாட்ஸப்பில் உலாவருகின்றது. உடனே அவைகளை உண்மையென்று நம்பி நாம் மற்ற குரூப்புகளுக்கு பார்வோர்ட் செய்கிறோம். இது தவறு. கிறிஸ்தவர்கள் இதனை செய்யக்கூடாது. வழியும் சத்தியமாக உள்ள இயேசுவை பின்பற்றுகிறவர்கள் இப்படிப்பட்ட பொய்களை பரப்பக்கூடாது, இதனை இயேசுவும் அங்கீகரிக்கமாட்டார்.
ஒரு தீர்மானம் எடுங்கள், அதாவது பைபிள் வசனங்கள், மற்றும் பாடல்கள், செய்திகளைத் தவிர, மற்ற செய்திகளை உடனுக்குடன் நான் பரப்பமாட்டேன். அவைகளைப் பற்றி சரியான ஆய்வு செய்யாமல், உண்மையை அறிந்துக்கொள்ளாமல், நான் மற்ற வாட்ஸப் குரூப்புகளுக்கு பார்வோர்ட் செய்யமாட்டேன் என்று முடிவு எடுங்கள்.
இதனால் சில உண்மையான செய்திகள் பரப்பமுடியாமல் போய்விடுமே என்று கவலைப்படாதீர்கள். பத்து உண்மையான செய்திகளை நீங்கள் பரப்புவது தவறிவிட்டாலும், ஒரு பொய்யான செய்தியை பரப்பாமல் இருந்ததே சிறந்தது.
மெய்யைப் பேசக்கடவன்:
அன்றியும், நாம் ஒருவருக்கொருவர் அவயவங்களாயிருக்கிறபடியால், பொய்யைக் களைந்து, அவனவன் பிறனுடனே மெய்யைப் பேசக்கடவன். (எபேசியர் 4:25)
Therefore, laying aside falsehood, SPEAK TRUTH EACH ONE of you WITH HIS NEIGHBOR, for we are members of one another. (Eph. 4:25):
தேவனுடைய வேதத்தை நேசிப்பவன், பொய்யை வெறுப்பான்:
பொய்யைப் பகைத்து அருவருக்கிறேன்; உம்முடைய வேதத்தையோ நேசிக்கிறேன். (சங்கீதம் 119:163)
5) இன்று (5, ஏப்ரில் 2020 ) ஒன்பது மணிக்கு, ஒன்பது நிமிடங்கள் விளக்கு:
இன்று - 5, ஏப்ரில் 2020 மாலை ஒன்பது மணிக்கு ஒன்பது நிமிடங்கள் மின் விளக்குகளை அணைத்துவிட்டு, அகல் விளக்குகளை, மொபைல் டார்ச் லைட்களை, மெழுகுவத்திகளை கொளுத்துங்கள் என்று பிரதமர் சொன்னதை, கீழ்படியவேண்டுமா? என்று கேட்டீர்களானால், அது உங்கள் விருப்பம். இப்படி பிரதமர் சொன்னதற்கு என்ன பின்னணி இருந்தாலும் நமக்கு அது தேவையில்லை. அவர் உள்ளார்ந்த அர்த்தம் வைத்து இப்படி செய்கிறார் என்று சிலர் கூறுகிறார்கள், அது உண்மையாகவும் இருக்கலாம், அல்லது பொய்யாகவும் இருக்கலாம்.
நம்முடைய ஒற்றுமையையும் ஒத்துழைப்பையையும் காட்டுவதற்கு இந்த விளக்கு ஏற்றும் நிகழ்ச்சி பயன்படுமா? என்று சிலர் கேட்கிறார்கள். என் கருத்து எதுவென்றால், நம் நாட்டில் இந்த காலக்கட்டங்களில் அரசாங்கத்திற்கு மக்கள் கொடுத்த ஒத்துழைப்பு மிகவும் மெச்சிக்கொள்ளக்கூடியது. 130 கோடி மக்கள் தொகையுள்ள நாட்டில், 30% க்கும் அதிகமான மக்கள் படிப்பறிவில்லாமல் இருக்கும் நம் நாட்டில், இந்த ஊரடங்கு சட்டத்திற்கு கொடுத்த ஒத்துழைப்பு ஆச்சரியத்தை வரவைக்கிறது. ஏதோ சொற்பமான மக்கள் சட்டத்தை மதிக்காமல் சாலைகளில் செல்வதை வைத்துக்கொண்டு, ஒட்டுமொத்த மக்கள் ஒத்துழைக்கவில்லை என்றுச் சொல்வது அறிவுடமையாகாது. நம் நாட்டின் ஜனத்தொகை 130 கோடி என்பதை மனதில் வைத்துக்கொண்டு, சட்டத்தை மீறுகிறவர்களை கணக்கெடுத்தால், அது ஒரு சதவிகிதத்திற்கும் உள்ளாகவே இருக்கும்.
நம் ஒத்துழைப்பை வீட்டில் அமர்ந்துக்கொண்டு விளக்கு ஏற்றுவதால் வெளிக்காட்டப்படாது, இதை விட முக்கியமானது, வெளியில் தேவையில்லாமல் செல்பவர்கள் தான் ஒத்துழைக்கவேண்டும். எது எப்படியோ, இது அவரவர் விருப்பம். மக்களுக்கு நம்பிக்கையை ஊட்டுவதற்கு இன்னும் பல நல்ல நிகழ்ச்சிகள் இருக்கிறது, அவர்களின் கேள்விகளுக்கு சரியான பதில்களைச் சொல்வதும், அவர்களின் சந்தேகங்களை தீர்ப்பதும், அவர்களின் எதிர்காலம், பொருளாதாரம் பற்றி ஒரு நம்பிக்கையை ஊட்டுவதும் முக்கியமானவைகளாகும். பிரதமர் பேசிய 9 நிமிடங்களில் இதைப்பற்றி பேசாமல், மக்களுக்கு ஒரு நம்பிக்கையை ஊட்டாமல், வெறும் விளக்கை ஏற்றி உங்கள் ஒத்துழைப்பை பறைசாற்றுங்கள் என்று சொன்னது சிறிது ஏமாற்றமே.
சரி, விளக்கை ஏற்றமாட்டோம் என்றுச் சொல்பவர்கள், சட்டத்தை மட்டும் மதித்து நடந்துக்கொள்ளுங்கள் அதுபோதும்.
6) ஏசாயா 26:20 தனித்திருத்தல் பற்றித் தான் சொல்கிறதா?
இந்திய அரசாங்கம் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தவுடன், வீட்டிற்குள் இருங்கள் அப்போது இந்த கொரொனா வைரஸை நாம் கட்டுப்படுத்தலாம் என்று அரசு சொன்னவுடன், ஏசாயா 26:20 வசனம் பற்றிய ஒரு குறுச்செய்தி வாட்ஸப்பில் கிறிஸ்தவர்கள் மத்தியில் பரப்பட்டது.
ஏசாயா 26:20
20. என் ஜனமே, நீ போய் உன் அறைக்குள்ளே பிரவேசித்து, உன் கதவுகளைப் பூட்டிக்கொண்டு, சினம் கடந்துபோகுமட்டும் கொஞ்சநேரம் ஒளித்துக்கொள்.
21. இதோ, பூமியினுடைய குடிகளின் அக்கிரமத்தினிமித்தம் அவர்களை விசாரிக்கும்படி கர்த்தர் தம்முடைய ஸ்தானத்திலிருந்து புறப்பட்டுவருவார்; பூமி தன் இரத்தப்பழிகளை வெளிப்படுத்தி, தன்னிடத்தில் கொலைசெய்யப்பட்டவர்களை இனி மூடாதிருக்கும்.
இந்த வசனம் "இன்று உலகில் காணும் வீட்டிற்குள் இருங்கள்" என்ற அரசின் கட்டளைப் பற்றிய முன்னறிவிப்புத் தான் என்று சிலர் கூறுகின்றனர்.
இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தை கவனித்தால், இது ஒரு பாடல் என்று சொல்லப்பட்டுள்ளது. யூதர்கள் அடிமைகளாக வேறு தேசத்திற்கு கொண்டு போன பிறகு, கர்த்தர் அவர்களை சந்தித்து, மறுபடியும் தங்கள் நாட்டில் வாழும்படி ஆசீர்வதிப்பார் என்ற நம்பிக்கையில் பாடப்பட்ட பாடலாகும்.
ஏசாயா 26:1
அக்காலத்திலே யூதாதேசத்தில் பாடப்படும் பாட்டாவது: பெலனான நகரம் நமக்கு உண்டு; இரட்சிப்பையே அதற்கு மதிலும் அரணுமாக ஏற்படுத்துவார்.
தேவன் தம்முடைய கோபத்தை கொட்டும் வரை யூதர்களின் தவறுகளுக்கு தண்டனை கொடுக்கும்வரை பொறுமையுடன் காத்திருங்கள் என்று ஏசாயா தீர்க்கதரிசி இங்கு அவர்களை எச்சரித்து, அதே நேரத்தில் எதிர்காலத்தில் கர்த்தர் கொடுக்கப்போகும் இரட்சிப்பையும் இங்கு சுட்டிக்காட்டுகின்றார்.
இந்த அத்தியாயம் முழுவதும் படித்துப் பாருங்கள், இதன் உண்மைப் பொருள் விளங்கும்.
சரி, இந்த 26:20ம் வசனம் கொரொனா பற்றியதா? ஊரடங்கு பற்றியதா என்று கேட்டால் இல்லையென்று நான் சொல்லுவேன். இது யூதர்கள் பற்றியது. யாராவது இது நம்முடைய இன்றைய நிலையைத் தான் சொல்கிறது என்றுச் சொல்வார்களானால், அது அவர்களின் விருப்பம்.
ஒருவேளை அவர்கள் அடம்பிடித்தால், இந்த கொரொனா பற்றிய மேலதிக விவரங்கள் ஏதாவது இந்த பகுதியில் உண்டா? எப்போது இந்த கொரொனா இவ்வுலகை விட்டு போகும்? போன்ற விவரங்களுக்கு பதில் தேடுவது கடினமாகிவிடும்.
எனவே, எதற்கெடுத்தாலும் உடனே பைபிளில் தேடுவதை விட்டுவிட்டு, மேற்கொண்டு நாம் என்ன செய்யவேண்டும் என்பதை கவனிப்பது தான் சிறந்தது.
7) கொரொனா தேவனின் தண்டனையா?
இன்னும் சிலர் 'இந்த கொரொனா தேவன் அனுப்பிய தண்டனையே' என்று சொல்கிறார்கள். இது உண்மையா? என்று கேட்டால், இதற்கு இரண்டு பதில்கள் உண்டு.
ஒரு வகையில் பார்த்தால், 'ஆம், கொரொனா தேவனின் தண்டனை தான்' என்று நமக்கு சொல்லத்தோன்றும். இன்னொரு வகையில் பார்த்தால், இது தேவனின் தண்டனை அல்ல, இது மனிதன் செய்த தவறு (ஆய்வுக்கூடங்களில் ஆய்வு செய்யும் போது தவறுதலாக வெளியே வந்துவிட்டது அல்லது வேறு காரணங்கள் உள்ளன) என்றுச் சொல்லலாம்.
சர்வ ஞானியான தேவன்:
இங்கு ஒரு முக்கியமான விவரத்தை அறியவேண்டும். நம் தேவனுக்கு தெரியாமல் இந்த கொரொனா வரவில்லை. அவர் அனுப்பவில்லை என்று நாம் சொன்னாலும், அவருக்கு தெரியாமல், அவரது ஞானத்திற்கு தெரியாமல் இது வரவில்லை என்று நிச்சயம் சொல்லமுடியும்.
மனிதன் தவறு செய்ததால் இது வந்தது என்று ஒப்புக்கொண்டாலும், மனிதனின் இந்த தவறு மூலமாக, மக்களுக்கு நன்மையாக இதனை மாற்றுவார்.
(குறிப்பு: ஆயிரக்கணக்கான மக்கள் மரிப்பது எப்படி மனிதர்களுக்கு நன்மை பயக்கும்? என்று சிலர் கேட்கலாம். இந்த கொரொனா பிரச்சனை முடிந்து சில மாதங்களுக்கு பிறகு பாருங்கள், மக்களின் வாழ்வில், நடத்தையில் மாற்றம் உண்டாகும். இப்போதைக்கு நமக்கு உள்ள ஞானம் இவ்வளவு தான்.)
முதல் உலகப்போர், இரண்டாம் உலகப்போர், சுனாமி (2004, 2.25 லட்ச மக்கள் மரணம்) போன்றவைகளால் கோடிக்கணக்கான மக்கள் மரித்தார்கள். இப்படிப்பட்ட ஒவ்வொரு துன்பங்களுக்கு பிறகு மக்கள் மாறினார்கள், வாழ்க்கை முறை மாறியது, அது போலவே, இந்த கொரொனாவிற்கு பிறகு கூட மக்களின் வாழ்வில் மாற்றங்கள் வரும்.
கொரொனா தேவனின் தண்டனையா என்று கேட்டால், 'ஆம்' என்றும் 'இல்லை' என்றும் பதில் சொல்லமுடியுமே தவிர, ஏதாவது ஒரு பதிலைக் கொடுத்து, இதுதான் உண்மை என்று உறுதியாக கூறமுடியாது.
பக்தியுள்ளவர்களில் சிலர் இறைவனின் தண்டனையாக பார்க்கிறார்கள், வேறு சிலர் மனித தவறு என்கிறார்கள். நாம் பார்க்கும் பார்வையைப் பொருத்து பதில் அமைகிறது.
இந்த கட்டுரையை இதோடு முடித்துக்கொள்வோம், தேவைப்பட்டால் மேலதிக விவரங்களைக் காண்போம்.
Date: 5th April 2020
உமரின் கட்டுரைகள்/மறுப்புக்கள்
Source: https://www.answering-islam.org/tamil/authors/umar/general-topics/corona_and_christians.html
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக