முந்தைய கட்டுரைகளும் பதில்களும்:
- நம் கேள்வி: அல்லாஹ்வும் அஹத் வார்த்தையும் (112:1) - அல்லாஹ் "ஒருவனா?" (அ) "ஆயிரத்தில் ஒருவனா?"
- பீஜே அவர்களின் பதில்: கிருஸ்துவர்களின் அஹத் ஒரு ஆய்வு கட்டுரைக்கு பிஜே யின் பதில் | நேரலை | 05/07/2021 | PJ
- பீஜே அவர்களுக்கு நம்முடைய பரிசு: Answering PJ: ஆயிரத்தில் ஒருவன் அல்லாஹ்(அஹத்) - 2: பீஜே அவர்களின் ஒரு வீடியோ பதிலுக்கு ஒரு ஆயிரம் பரிசு
- பீஜே அவர்களுக்கு முதல் பதில்: Answering PJ: ஆயிரத்தில் ஒருவன் அல்லாஹ்(அஹத்) - 3: அஹதுக்கு எண்களும், பன்மையும், பெண்மையும் உண்டு!
- Answering PJ: ஆயிரத்தில் ஒருவன் அல்லாஹ்(அஹத்) - 4: இலக்கண பிழையையே அரபியின் சிறப்பம்சம் என்றுச் சொல்வது அல்லாஹ்விற்கே அடுக்காது
குர்ஆன் 112:1ல் வரும் "அஹத்" என்ற வார்த்தைப் பற்றிய நம்முடைய முந்தைய ஆய்வுக் கட்டுரைக்கு பீஜே அவர்கள் கொடுத்த பதில்களுக்கு மறுப்புக்களைக் கொடுத்துக்கொண்டு இருக்கிறோம். இந்த தொடரில் அவரது மீதமுள்ள விவரங்களை ஆய்வு செய்வோம்.
பீஜே அவர்களின் பதில்:
1. பிலால் நிகழ்ச்சி ஒரு உதாரணம் ஆகும், அவர் துன்புறுத்தப்படும் போது "அஹதுன் அஹத்" என்றார், வாஹிது என்றுச் சொல்லவில்லை. அன்று பிலால் இதே அர்த்தத்தில் சொன்னார், மற்றவர்களும் அதே அர்த்தத்தில் புரிந்துக்கொண்டார்கள்.
நம்முடைய முந்தைய பதிலில், அஹத் என்ற வார்த்தை குர்ஆன் 112:1ல் வந்திருப்பது, அரபி மொழி இலக்கண பிழை என்பதை சான்றுகளோடு நிருபித்தோம். குர்ஆனின் இந்த 112வது அத்தியாயத்திற்கு முன்பு, அரபி மொழி வழக்கத்தில் உடன்பாட்டு வாக்கிய அமைப்பில் இந்த அஹத் வார்த்தையை யாருமே பயன்படுத்தவில்லை. முதன் முதலில் ஒரு இலக்கண பிழையை குர்ஆன் செய்துள்ளது என்பதை காட்டினோம்.
முஸ்லிம் அறிஞர்களின் கூற்றுப்படி, குர்ஆனின் 112 வது அத்தியாயம், மக்காவில் இறங்கியதாக சில ஹதிஸ்கள் உள்ளன, அதே போன்று மதினாவில் இறங்கியதாகவும் சில ஹதீஸ்கள் உள்ளன.
ஒருவேளை மதினாவில் தான் இந்த 112வது அத்தியாயம் உண்மையாக இறங்கியிருந்தால், பிலாலின் மேற்கண்ட விவரத்தின் படி, பிலால் செய்த பிழையைத் தான் அல்லாஹ் குர்ஆனில் புகுத்திவிட்டான் என்று சொல்ல வாய்ப்பு இருக்கின்றதல்லவா?
ஒருவேளை மக்காவில் இந்த அத்தியாயம் இறக்கப்பட்டு இருந்தது என்று வைத்துக்கொண்டாலும், இந்த அத்தியாயத்தை பிலால் நன்கு அறிந்திருக்கிறார் என்று வைத்துக்கொண்டாலும், அவரை மக்கா மக்கள் துன்புறுத்தும் போது, பிலால் எப்படி உச்சரித்தாலும் அது யாரையே குறிக்கும்? அல்லாஹ்வைத் தானே!
பிலால் "அஹதுன் அஹதுன்" என்று சொல்வதற்கு பதிலாக, "வாஹித், வாஹித்" என்று கத்தியிருந்தாலும் அது யாரைத் தான் குறிக்கும்? அல்லாஹ்வைத் தானே!
இதே போன்று, பிலால் "இலா இலா" என்று அரபியில் எல்லா சாமிகளுக்கும் பயன்படுத்தும் பொதுவான வார்த்தையை உச்சரித்திருந்தாலும், அது யாரை குறித்து இருந்திருக்கும்? காபாவில் இருந்த 360 விக்கிரகங்களை குறித்திருக்குமா? இல்லையல்லவா? எந்த இறைவனுக்காக அவர் துன்புறுத்தப்படுகிறாரோ அவரைத் தானே அது குறிக்கும்?
சரி போகட்டும், பிலால் "வாஹித் வாஹித் "என்று சொல்லியிருந்தால், அது அல்லாஹ்வை குறிக்காதா? அல்லாஹ்விற்கு இருக்கும் 99 பெயர்களில் "அல் வாஹித்" என்றும் ஒரு பெயர் இருக்கின்றதல்லவா?
ஏற்கனவே குர்ஆன் ஒரு இலக்கண பிழையை செய்துள்ளது என்பதை நாம் விளக்கிவிட்டோம், அதை சரி என்று நம்பி பிலால் சொல்லியிருந்திருக்கலாம் அல்லவா? மேலும், பெரும்பான்மையான மக்கா மக்கள் படிப்பறிவில்லாதவர்கள் என்பதை அறிவோம். இதன் படி பார்த்தால், ஒரு மனிதனை துன்புறுத்தப்படும் போது (Torture) , அவன் குய்யோ முறையோ என்று கத்தும் போது, யாராவது இலக்கண பிழைகளை பார்ப்பார்களா? நீ ஏன் இங்கு பெயர்ச்சொல்லை பயன்படுத்தாமல், உரிச்சொல்லை பயன்படுத்தினாய்? இந்த இடத்தில், இந்த வார்த்தை இப்படி வரக்கூடாது, இது இலக்கணப்பிழையாகும் என்று சொல்லுவார்களா?
சரி, இந்த வரிகளை வாசிக்கின்ற நீங்கள் குறைந்தபட்சம் 10வது வரையாவது படித்திருந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். உங்களால் பெயர்ச்சொல், உரிச்சொல், வினைச்சொல், " வல்லினம் மிகும் இடங்கள்" "வல்லினம் மிகா இடங்கள்" போன்றவைகள் பற்றிய தமிழ் இலக்கண விதிகளை, வாக்கிய அமைப்பு விதிகளை சரியாக ஞாபகப்படுத்திச் சொல்லமுடியுமா?
இலக்கணம் என்று வரும் போது, ஓரளவு படிப்பறிவுள்ள நமக்கே சில வேளைகளில் தலை சுற்றுகிறதே, மக்காவின் படிப்பறிவில்லாதவர்கள் "எப்படி" பிலால் "அஹதுன் அஹதுன்" என்று கத்தும் போது, இலக்கண விதிகளை தேடிக்கொண்டு இருப்பார்கள்?
பீஜே அவர்களின் பதில்:
2. ஒரு மொழியின் அர்த்தம் அந்த மொழிக்காரர்கள் எப்படி புரிந்துக் கொண்டுள்ளார்களோ, அதை வைத்து தான் பார்க்கவேண்டும். அக்கால மக்கள் அஹது என்ற வார்த்தையை எதற்கு பயன்படுத்தினார்கள் என்பதை பார்க்கவேண்டும்.
3. முஹம்மது அஹது என்று அல்லாஹ்வைப் பற்றி சொன்ன போது, "அல்லாஹ் பலரில் ஒருவர்" என்று இவர் சொல்கிறாரே என்று புரிந்துக்கொண்டு ஏன் அவரை ஆதரிக்கவில்லை? அம்மக்கள் ஏன் அவரை எதிர்த்தார்கள்?
உண்மை தான், ஒரு மொழியில் உள்ள சில வார்த்தைகளின் சரியான அர்த்தம் அம்மொழி பேசும் மக்கள் தான் சரியாக அறியமுடியும். ஆனால், படிப்பறிவில்லாத சமுதாயம் எப்படி மொழியின் உண்மை பொருளை அறிவார்கள் சொல்லுங்கள் பார்க்கலாம்?
தமிழை தாய்மொழியாக கொண்டுள்ள நம்மில் எத்தனை பேருக்கு, 'திருக்குறளை' விளக்கவுரையில்லாமல் பொருள் கூறமுடியும் சொல்லுங்கள் பார்க்கலாம்? நம்மில் எத்தனை பேருக்கு அகநானூறு, புறநானூறு, கம்பராமாயணம், சிலப்பதிகாரம் போன்ற செய்யுள்கள் விளக்கவுரை இல்லாமல் புரியும்?
ஆக, அரபிக்கு வரும் போது கூட இதே நிலை தான், அனேக நேரங்கள் சஹாபாக்களுக்கே சில வார்த்தைகளின் பொருள் புரிவதில்லை, உடனே முஹம்மதுவிடம் கேட்பார்கள். இவர்களின் தாய்மொழி அரபி தானே! ஒவ்வொருவரும் 40+ ஆண்டுகள் கடந்துள்ளவர்களும் இருந்தார்களே! ஏன் இவர்களுக்கு குர்ஆனில் வரும் அனேக வார்த்தைகள் புரியவில்லை?
இது மட்டுமல்லாமல், இந்த "அஹத்" என்ற வார்த்தையின் பயன்பாடு குர்ஆனில் ஒரு இலக்கணப்பிழையாகும், இதனை எல்லா அறிஞர்களும், பீஜே உட்பட ஒப்புக்கொண்டுள்ளார்கள். இதனால் தான் "குர்ஆனில் இவ்வார்த்தையின் பயன்பாடு ஒரு இலக்கணப்பிழை" என்று நேரடியான பதிலை கொடுக்காமல், பீஜே அவர்கள் அங்கும் இங்கும் சுற்றி பதில் கொடுத்துள்ளார், மன்னிக்கவும் பதில் கொடுக்க முயன்றுள்ளார்.
இந்த அத்தியாயம் மதினாவில் இறங்கியதாக இருந்திருந்தால், மக்கா மக்கள் இந்த அஹது வார்த்தைப் பற்றி முஹம்மதுவிடம் கேள்வி கேட்கவேண்டிய அவசியம் இருந்திருக்காது.
பீஜே அவர்களின் பதில்:
4. கிறிஸ்தவர்கள் எடுத்துக்காட்டும் வசனங்களில், அஹத் வார்த்தையோடு சேர்த்து வேறு வார்த்தையும் சொல்வார்கள். அப்போது தான் வாஹித் அர்த்தம் வரும், இது ஒருவகை. அஹது வார்த்தைகளின் வாக்கிய அமைப்பில் எதிர்மறையாக இருப்பது இன்னொரு வகையாகும். மேலும் அஹது கேள்வியாகவும் வரும் (இன்னொரு வகை).
அரபி இலக்கணத்தின் படி, அஹத் வார்த்தையோடு வேறு வார்த்தைகள் சேர்க்கப்பட்டு பொருள் தரப்படுகின்றது. ஆனால், குர்ஆன் செய்த பிழை என்னவென்றால், அஹத் வார்த்தை தனியாக உடன்பாடு வாக்கிய அமைப்பில் இறக்கியதாகும் . இதைத் தான் முஸ்லிம் அறிஞர்கள், 'குர்ஆனுக்கு முந்தைய காலத்தில் இந்த அஹத் வார்த்தையை குர்ஆன் 112:1ல் வருவது போன்று யாரும் பயன்படுத்தமாட்டார்கள், இது இலக்கணத்தின் படி சரியானதல்ல' என்று சொல்கிறார்கள். குர்ஆனில் கூட, 112:1ம் வசனத்தைத் தவிர்த்து மீதமுள்ள அஹத் வார்த்தையுள்ள வசனங்கள் சரியான வாக்கிய அமைப்பில் இலக்கண விதிகளின் படி உள்ளதைத் தான் மேற்கோள் காட்டினோம்.
ஆக, இங்கு பிரச்சனை அஹத் வார்த்தை வரும் குர்ஆனின் மற்ற வசனங்கள் அல்ல, குர்ஆனின் 112:1வது வசனம் தான். எல்லா இடங்களில் சரியான வாக்கிய அமைப்பில் அஹத் வார்த்தையை கொடுத்துவிட்டு, இந்த ஒரு இடத்தில் மட்டும் இலக்கணப்பிழையை குர்ஆனில் செய்தது யார் என்பது தான் கேள்வி?
பீஜே அவர்களின் பதில்:
5. கேள்வி: கிறிஸ்தவர்கள் 112:1 மாதிரி உள்ள வசனத்தை உதாரணம் காட்டவேண்டும், ஆனால் அவர்களால் காட்டமுடியாது.
எப்படி 112:1ம் வசனத்தில் உள்ளதின்படி வேறு வாக்கியத்தை காட்டமுடியும்? யார் இந்த வசனத்தில் உள்ளது போன்று இலக்கண பிழை செய்வார்கள்? யாருமே செய்யமாட்டார்கள் என்ற தைரியத்தில் தானே நீங்கள் எங்களிடம் உதாரணத்தைக் கேட்கிறீர்கள்? அல்லாஹ்வைப்போன்று யாராவது இலக்கண பிழையோடு அஹத் வார்த்தையை பயன்படுத்தியிருந்தால் தான் நாம் அப்படிப்பட்ட உதாரணத்தைக் காட்டமுடியும்.
அரபி இலக்கிய புத்தகங்களில், நூல்களில், பாடப்புத்தகங்களில் யாருமே இப்படி தவறாக பயன்படுத்தமாட்டார்கள், எனவே 'கிறிஸ்தவர்களிடம் இப்படி கேட்டுவைத்தால் அவர்களால் கண்டுபிடித்து கொடுக்கமுடியாது' என்ற தைரியத்தில் தானே இந்த கேள்வியை கேட்கிறீர்கள்.
பீஜே அவர்கள் கிறிஸ்தவர்களிடம் கேட்கும் கேள்வி எப்படியுள்ளதென்றால், 10வது வகுப்பு பாடங்களில், எல்லா பாடங்களிலும் 100க்கு 99 மதிப்பெண்கள், அல்லது 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றவர்களின் பட்டியல் தரமுடியுமா? என்று கேள்வி கேட்டால் அல்லது சவால் விட்டால், நிச்சயமாக நாம் தேடி கண்டுபிடித்துவிடலாம். ஒவ்வொரு ஆண்டும் இப்படி அதிக மதிப்பெண்கள் எடுக்கும் மாணவர்கள் மாணவிகள் இருக்கத்தான் செய்வார்கள். ஆனால், அனைத்து பாடங்களிலும் தோல்வி அடைந்த இரண்டு மாணவர்களை/மாணவிகளை கண்டுபிடியுங்கள், அதிலும், இவ்விருவரின் தாள்களைப் பார்த்தால், இவ்விருவரும் ஒரே மாதிரியாக தவறு செய்திருக்கவேண்டும், எல்லா பாடங்களிலும் ஒரே மாதிரியான மதிப்பெண்கள் பெற்று தோல்வி அடைந்திருக்கவேண்டும் என்று கேள்வி கேட்டால், இதனை எப்படி கண்டுபிடிப்பது?
1) எல்லா பாடங்களிலும் 100க்கு 35 மதிப்பெண்கள் கூட எடுக்கமுடியாமல் தோல்வி அடைந்தவர்கள் இருப்பார்கள், இவர்களை கண்டுபிடிப்பது சுலபம்.
2) ஆனால், இவர்களில் இருவர் ஒரே மாதிரியான மதிப்பெண்களோடு தோல்வி அடைந்திருக்க வேண்டும், அதாவது இவ்விருவரும் தமிழ் பாடத்தில் 29 மதிப்பெண் எடுத்து தோல்வி அடைந்திருக்க வேண்டும், கணக்கு பாடத்தில் 17 மதிப்பெண்கள் எடுத்து தோல்வி அடைந்திருக்க வேண்டும், அறிவியல் பாடத்தில் 21 மதிப்பெண்கள் எடுத்து இருந்திருக்கவேண்டும் என்று ஒவ்வொரு பாடத்திலும் ஒரே மதிப்பெண்களோடு தோல்வி அடைந்த இருவரை கொண்டு வந்து காட்டு என்று சவால் விட்டால் எப்படி இதனை நாம் கண்டுபிடிக்கமுடியும்?
இதே போன்று தான் அல்லாஹ் செய்த தவறு போன்று இன்னொருவரை கண்டுபிடித்து காட்டு என்று கேட்டால், எங்கே சென்று நாம் தேடமுடியும்? இவரைப்போன்று இலக்கணப்பிழை செய்பவரைத் தேடுவது கடினம் தான்.
பீஜே அவர்களே! உங்களின் எதிர்ப்பார்ப்பு சரியானது தான், எங்களால் "குர்ஆனில் வரும் பிழை போன்றுள்ள வசனத்தை அல்லது வாக்கியத்தை வேறு அரபி நூல்களிலிருந்து காட்டமுடியாது, என்பதை ஒப்புக்கொள்கிறோம்'. இலக்கண பிழைகளைச் செய்வதில் அல்லாஹ்வைப்போன்று யார் இருக்கமுடியும்! அரபி மொழியிலேயே மிகவும் சிறந்த இலக்கிய நூலாக குர்ஆன் இருக்கிறது என்ற உங்களின் வாதம் இப்படிப்பட்ட இலக்கண பிழைகளை கருத்தில் கொண்டு சொல்லப்பட்ட ஒன்றாக இருந்தால், நிச்சயம் இப்படிப்பட்ட நூலை யாருமே கொண்டுவரமுடியாது என்பது உண்மை. இப்படிப்பட்ட இலக்கண பிழைகளைச் செய்வதில் அல்லாஹ்விற்கு இணை அல்லாஹ் தான். அல்ஹம்துலில்லாஹ்! இந்த விஷயத்திலாவது முஸ்லிமல்லாதவர்கள் அல்லாஹ்வின் சிறப்பை அறிந்துக்கொண்டார்களே என்று இப்போது முஸ்லிம்கள் மகிழலாம்.
பீஜே அவர்களின் பதில்:
6. மக்கா மக்கள் கூட "லாத், உஸ்ஸா" போன்ற தங்கள் 360 விக்கிர சாமிகளுக்கும் அஹது என்று சொல்லவில்லையே! ஏன்? அல்லாஹ் மட்டும் தான் "அஹத்".
நாம் ஏற்கனவே பார்த்த விவரங்களின் படி, அரபியர்கள் உடன்பாட்டு வாக்கியத்தில் "அஹது என்ற வார்த்தையை" பயன்படுத்தமாட்டார்கள், இலக்கணத்தின் அது தவறு என்று அவர்களுக்கே தெரியும். இலக்கண விதிகளை சரியாக அறியாத பேதைகளாக அவர்கள் இருந்தாலும், பேச்சு வழக்கில் அப்படிப்பட்ட வாக்கியத்தை பயன்படுத்தாமல் இருந்தபடியினால், அவர்களால் 'லாத் அஹது, உஸ்ஸா அஹது' என்று சொல்லவில்லை. அல்லாஹ் செய்த தவறை மற்றவர்களும் செய்யவேண்டும் என்று எதிர்க்கக்கூடாது பீஜே அவர்களே!
இலக்கண விதிகளை சரியாக அறியாத குர்ஆனை கொடுத்தவன் தான் "அல்லாஹ் அஹதுன்" என்று தவறாக பயன்படுத்தினான்.
பீஜே அவர்களின் பதில்:
7. கேள்வி: முஹம்மது "அல்லாஹ் பலரில் ஒருவர் என்ற போதனையில் இருந்தாரா?" என்று கிறிஸ்தவர்கள் விளக்கவேண்டும்? ஒரு வார்த்தையை எடுத்து பொருள் சொல்லக்கூடாது.
முஹம்மது "அல்லாஹ் பலரில் ஒருவன்" என்ற கோட்பாட்டில் இருந்தார் என்று நாம் சொல்லவில்லையே! நாம் சொன்னதெல்லாம், 'குர்ஆனில் 112:1ம் வசனத்தில் அஹத் என்ற வார்த்தையின் பயன்பாடு இலக்கண பிழையானது இது இஸ்லாமிய இறையியலோடு மோதுகின்றது' என்று நாம் சொன்னோம். ஒரு புறம் அல்லாஹ் ஒருவன் என்று குர்ஆன் போதிக்கிறது, ஆனால், இந்த வசனத்தில் அது தகர்த்துவிடும்படியாக பொருள் வருகிறது, இது இலக்கண பிழையென்றுச் சொன்னோம்.
பீஜே அவர்களே! நாம் கேட்காத கேள்வியை நம்மிடம் கேட்பது சரியான கேள்வியல்ல, கேள்வியை மாற்றிக்கேளுங்கள். நாங்கள் தெளிவாகத் தான் இருக்கிறோம். உங்களைப்போன்ற முஸ்லிம்களுக்குத் தான் குர்ஆன் பற்றிய மேலதிகத் தெளிவு தேவை.
பீஜே அவர்களின் பதில்:
8. கேள்வி: எபிரேய மொழியிலிருந்து முஹம்மது ஏகாத் வார்த்தையை காப்பி அடித்தார் என்ற குற்றச்சாட்டு தவறானது. ஏனென்றால், மக்காவில் அப்போது யாரும் யுதர்கள் இல்லை, ஒருவர் இருந்தார் அவரும் சீக்கிரமாக மரித்துவிட்டார். முஹம்மது மக்காவில் யூதர்களை அறிந்திருந்தார் என்பது சான்றுகள் இல்லாத வாதமாகும்.
9. குர்ஆன் ஒரு தெளிவான அரபி மொழியாகும், ஏகாத் வார்த்தையை எபிரேயத்திலிருந்து காப்பி அடித்திருந்தால், மக்கா மக்கள் கேள்வி கேட்டுயிருந்திருப்பார்கள்.
பீஜே அவர்களே! நீங்கள் சொல்வது எப்படியுள்ளதென்றால், முஹம்மது மக்காவை விட்டு வெளியே எங்குமே செல்லாமல் இருந்தார் என்றும், அவர் தம் வாழ்நாட்களில் ஒரு யூதரையும் கண்டு பேசவில்லையென்றும் சொல்கிறீர்கள். இது தவறு.
கீழ்கண்ட விவரங்களை சிறிது கவனியுங்கள்.
1) யூதர்களும் கிறிஸ்தவர்களும் அரேபிய பகுதிகளில் முஹம்மதுவின் காலத்தில் வாழ்ந்துவந்தார்கள்.
2) யூதர்கள் பெரும் செல்வந்தர்களாகவும், படித்தவர்களாகவும் இருந்தார்கள்.
3) மதினாவில் கூட யூதர்கள் பல இனக்குழுக்களாக இருந்தார்கள், அவர்களையெல்லாம் முஹம்மது விரட்டியடித்தார்.
4) முஹம்மது ஒரு வியாபாரியாக, பல முறை மக்காவைவிட்டு சிரியாவிற்கு மற்றவர்களோடுச் சென்று வந்துள்ளார்.
5) அவர் செல்லும் வழிகளில் பல யூதர்களையும், கிறிஸ்தவர்களையும் சந்தித்துள்ளார், பேசியுள்ளார், இதற்கு இஸ்லாமிய சரித்திர நூல்களிலிருந்து சான்றுகள் உள்ளன.
6) எப்படி முஸ்லிம்களின் ஷஹதா உள்ளதோ, அதே போன்று, யூதர்களின் விசுவாச அறிக்கையும் மிகவும் புகழ் பெற்றது, இதனை யூதர்களோடு தொடர்பில் இருக்கும் நபர்கள் நன்கு அறிவார்கள்.
எனவே, யூதர்களோடு முஹம்மதுவிற்கு அறிமுகம் இல்லை, அவர் யாரையும் பார்க்கவில்லை பேசவில்லையென்றுச் சொல்வது 'பொய்யான வாதமாகும்'.
மேலும், முஹம்மது "ஏகாத்" என்ற வார்த்தையை அப்படியே காபி அடித்தார் என்று சொல்லவில்லையே! யூதர்களின் ஒருவரி விசுவாச அறிக்கையைப்போன்று, இவரும் சொல்ல விரும்பினார், மேலும், சுருக்கமான வார்த்தைகளைக் கொண்டு சொல்லவேண்டும் என்பதற்காக அஹத் என்ற வார்த்தையை தவறாக பயன்படுத்திவிட்டார் என்று தான் சொன்னோம். இது இலக்கண பிழைக்கு வழி வகுத்துவிட்டது என்பது தான் எங்கள் வாதம்.
குர்ஆன் என்பது ஒரு சுத்தமான அரபி மொழியில் உள்ள நூல் அல்ல, அதில் பல வேற்று மொழி வார்த்தைகள் உள்ளன. இன்னும் பல வார்த்தைகளுக்கு அரபியில் என்ன பொருள் என்று தெரியாமல் தலையை பீய்த்துக்கொள்ளும் அளவிற்கு வார்த்தைகளும் உள்ளன என்பது தான் உண்மை. இதைப் பற்றி இன்னொரு கட்டுரையில் தெளிவாக காண்போம்.
பீஜே அவர்களின் பதில்:
10. கேள்வி: "என்னை வாஹித்" என்றும்,"உன்னை வாஹித்" என்றும் சொல்லலாம், "அல்லாஹ்வை அஹத்" என்று மட்டும் தான் சொல்லமுடியும். 14 நூற்றாண்டுகளாக அஹதை அரபியர்கள் யாருக்காவது பயன்படுத்தியிருக்கிறார்கள் என்று கண்டுபிடித்துச் சொல்? அல்லாஹ்விற்கு மட்டும் தான், அது பயன்படுத்தப்பட்டுள்ளது.
இது தானே இலக்கண பிழை. யாரையுமே அஹத் என்று சொல்லக்கூடாது என்பது அரபி இலக்கணம். ஆனால், இலக்கணத்திற்கு மாறாக "அல்லாஹ் அஹத்" என்றுச் சொன்னது தவறு. இதனை முஸ்லிம் அறிஞர்கள் அங்கீகரித்துள்ளார்கள், நீங்களும் மறைமுகமாக அங்கீகரித்துள்ளீர்கள். நீங்கள் எங்களிடம் கேட்ட ஒவ்வொரு கேள்வியும், நீங்கள் குர்ஆனின் இலக்கண பிழையை அங்கீகரித்துவிட்டு, அதன் பிறகு கொடுத்த மழுப்பல் பதிலாகும் என்பது தான் நிதர்சணம்.
முடிவுரை:
இதுவரை பீஜே அவர்கள் "அல்லாஹ்வும் அஹத் வார்த்தையும் (112:1) - அல்லாஹ் "ஒருவனா?" (அ) "ஆயிரத்தில் ஒருவனா?" என்ற எங்களுடைய கட்டுரைக்கு கொடுத்த ஒவ்வொரு வரிக்கும் நாங்கள் பதில் கொடுத்துள்ளோம். வாசகர்கள் எங்களுடைய பதில்கள் அனைத்தையும் படியுங்கள், ஆய்வு செய்யுங்கள், இன்னும் கேள்விகள் இருந்தால் எங்களிடம் கேளுங்கள், பதில் தரப்படும்.
இதுவரை 112:1ல் வரும் அஹத் என்ற வார்த்தையை ஆய்வு செய்தோம், அடுத்த கட்டுரையில், 112:2ல் வரும், ஸமத் என்ற வார்த்தையை ஆய்வு செய்வோம்.
என்னது ! அஹத் தான் பிரச்சனையென்றால், ஸமது என்ற வார்த்தையிலும் பிரச்சனை உள்ளதா? என்று வாசகர்கள் கேட்கவிரும்பினால், ஆமாம்.. வாருங்கள்.. அடுத்த கட்டுரையில்.. ஸமது வார்த்தையை சமத்தாக அமர்ந்து ஆய்வு செய்வோம்.
குர்ஆனின் இதர (இலக்கணப்)பிழைகளை அறிய கீழ்கண்ட கட்டுரைகளை படிக்கவும்:
- குர்ஆனின் இன்னொரு இலக்கண பிழை: "நாங்கள் வெறும் இறைத்தூதர் தான்"
- குர்ஆன் 35:8 - அல்லாஹ்வின் பிழையை சரி செய்யும் பீஜே போன்ற இஸ்லாமியர்கள்
- குர்ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள்
தேதி: ஜூலை 25, 2021
Source: https://www.answering-islam.org/tamil/authors/umar/answerpj/allah_ahad_pj_5.html
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக