முஸ்லிம்களின் மிக முக்கியமான பண்டிகை "ஈத் உல் அதா" என்று அழைக்கப்படக்கூடிய பக்ரீத் பண்டிகையாகும். இந்த பண்டிகையின் போது இறைவன் இப்ராஹீமிடம் தன் மகனை பலியிட கட்டளையிட்ட சோதனையான நிகழ்ச்சியை முஸ்லிம்கள் நினைவு கூறுகிறார்கள். இந்த பக்ரீத் பண்டியையோடு, யூதர்களின் பஸ்கா பண்டிகையை ஒப்பிட்டு, மூன்று ஒற்றுமைகளை குறிப்பிட நான் விரும்புகிறேன்.
1) இந்த இரண்டு பண்டிகைகளிலும், 'ஆடுகளை பலியிடப்படுவதை' காணமுடியும்.
2) இந்த இரண்டு பண்டிகைகளின் மூல நிகழ்ச்சிகளை பார்க்கும்போது, இரண்டிலும் குடும்பத்தின் மூத்த மகனின் உயிர் ஒரு ஆபத்தான நிலையில் இருந்ததை கவனிக்கமுடியும்.
3) இந்த இரண்டு தியாகபலிகளிலும் "ஒரு உயிருக்கு பதிலாக இன்னொரு உயிர் பகரமாக(Ransom) கொடுத்து மீட்கப்படுவதை காணமுடியும்".
பஸ்கா பண்டிகைப் பற்றி பரிசுத்த வேதம் கீழ்கண்டவிதமாக கூறுகின்றது:
"14. பிற்காலத்தில் உன் குமாரன்: இது என்ன என்று உன்னைக் கேட்டால்; நீ அவனை நோக்கி: கர்த்தர் எங்களைப் பலத்த கையினால் அடிமைத்தன வீடாகிய எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினார். 15. எங்களை விடாதபடிக்கு, பார்வோன் கடினப்பட்டிருக்கும் போது, கர்த்தர் எகிப்துதேசத்தில் மனிதரின் தலைப்பிள்ளைகள்முதல் மிருகஜீவன்களின் தலையீற்றுகள் வரைக்கும் உண்டாயிருந்த முதற்பேறுகள் யாவையும் கொன்றுபோட்டார்; ஆகையால், கர்ப்பந்திறந்து பிறக்கும் ஆணையெல்லாம் நான் கர்த்தருக்குப் பலியிட்டு என் பிள்ளைகளில் முதற்பேறனைத்தையும் மீட்டுக்கொள்ளுகிறேன். (யாத்திராகமம் 13:14-15).
இப்ராஹீமின் பலி நிகழ்ச்சி பற்றி குர்ஆன் "ஆயினும், நாம் ஒரு மகத்தான பலியைக் கொண்டு அவருக்குப் பகரமாக்கினோம் (37:107)" என்று கூறுகின்றது.
மேலும், இரட்சிப்பதைப் பற்றி குர்ஆன் கூறும் போது, அல்லாஹ் " மூஸாவையும், இஸ்ரேல் மக்களையும் எகிப்திலிருந்தும் மற்றும் செங்கடலிலிருந்தும் காப்பாற்றினான்" என்று கூறுகின்றது.
இரட்சித்தல் (Saving) மற்றும் மீட்டுக்கொள்ளுதல் (Redeem) என்ற இவ்விரு வார்த்தைகளுக்கு இடையேயுள்ள ஒற்றுமையை சங்கீதம் 106:9-11வரையுள்ள வசனங்களில் காணலாம்:
"அவர் சிவந்த சமுத்திரத்தை அதட்டினார், அது வற்றிப்போயிற்று; வெட்டாந்தரையில் நடக்கிறதுபோல அவர்களை ஆழங்களில் நடந்துபோகப்பண்ணினார். பகைஞன் கைக்கு அவர்களை விலக்கி இரட்சித்து, சத்துருவின் கைக்கு அவர்களை விலக்கி மீட்டார். அவர்கள் சத்துருக்களைத் தண்ணீர்கள் மூடிக்கொண்டது; அவர்களில் ஒருவனும் மீந்திருக்கவில்லை (சங்கீதம் 106: 9-11)".
இந்த வியத்தகு மீட்பு இஸ்ரேலியர்களின் வரலாற்றில் ஒரு மைல்கல்லாக கருதப்படுகின்றது. இதைப் பற்றி மோசேயின் மாமனார் எத்திரோ கேள்விப்பட்டபோது, எகிப்தின் எல்லா கடவுள்களையும் விட இஸ்ரவேலின் இறைவன் பெரியவர் என்று அறிவித்தார் (யாத்திராகமம் 18: 8-11). உண்மையில், இந்த இரட்சிப்பு மிகவும் முக்கியமானது, எனவே தான் கர்த்தர், 10 கட்டளைகளில் முதலாவதாக எகிப்திலிருந்து இரட்சித்ததையும் சேர்த்தார்.
2. உன்னை அடிமைத்தன வீடாகிய எகிப்துதேசத்திலிருந்து புறப்படப்பண்ணின உன் தேவனாகிய கர்த்தர் நானே. 3. என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்கவேண்டாம் (யாத்திராகமம் 20: 2-3)
மேலும், இந்த முக்கியமான நிகழ்வின் காரணமாகவே யூத மக்கள் தேவனை "இரட்சகராகவும் மீட்பராகவும்" ஏற்றுக்கொண்டு கொண்டாடினர். (ஓசியா 13: 4; ஏசாயா 60:16; 63: 8)
நாம் கூர்ந்து படிக்கவில்லையென்றால், கர்த்தர் கொடுத்த இந்த முக்கியமான இரட்சிப்பின் நிகழ்ச்சியை கவனிக்காமல் விட்டிருப்போம். கர்த்தர் பல வாதைகளின் மூலம் அழுத்தத்தை கொடுத்தபோதிலும், எகிப்தின் பார்வோன் அரசன் தன் இதயத்தை அதிகமதிகமாய் கடினப்படுத்தினான். கடைசியாக, கர்த்தர் மிகவும் கடினமான தண்டனையை கட்டளையிட்டார், அதாவது பார்வோன் சிம்மாசனத்தின் வாரிசு உட்பட எகிப்தியரின் மூத்த மகன்கள் மரிக்கவேண்டும் என்பது தான் அந்த தீர்ப்பு. இந்த தண்டனை வந்த போது தான், பார்வோன் அரசனின் ஆணவம் அடங்கியது, அவன் இஸ்ரேல் மக்களை போக அனுமதித்தான், அடிமைகளை விடுவிக்க ஒப்புக்கொண்டான்.
ஆனால் அந்த மரணத்தை கொண்டு வந்த தேவதூதனால் பாதிக்கப்பட்டவர்கள், எகிப்திய மக்களின் மூத்த குமாரர்கள் மட்டும் தான். அதே நேரத்தில் இஸ்ரேல் மக்கள் தங்கள் பிள்ளைகளின் உயிர் கூட ஆபத்தில் உள்ளது என்பதை நன்கு அறிந்திருந்தனர். எகிப்தில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் அந்த மரணத்தூதன் நுழைவான் என்ற மோசேயின் எச்சரிப்பை இஸ்ரேல் மக்கள் அசட்டையாக எடுத்துக்கொள்ளவில்லை. உண்மையில், இஸ்ரேல் மக்கள் அவர்கள் கேட்ட எச்சரிப்பின்படி செய்ய ஜாக்கிரதையாக இருந்தனர், மோசேயினால் கட்டளையிட்டதின்படி, ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் ஒரு பஸ்கா ஆட்டை தெரிந்துக்கொண்டு, அதனை பலியிட்டு, அதன் இரத்தத்தை தங்கள் வீட்டு வாசற்படியின் நிலைகளில் பூசிவிட்டனர்.
இந்த விவரங்கள் ஒரு சிந்திக்கத்தூண்டும் கேள்வியை எழுப்புகிறது, அதாவது "கர்த்தர் ஏன் இஸ்ரேல் மக்களை அச்சுறுத்தினார்?" அவரது முதலாவது இலக்கு, பார்வோனின் ஆணவத்தை அதமாக்கி, இஸ்ரேல் மக்களை அடிமைத்தனத்திலிருந்து விடுவிப்பதாகத் தானே இருந்தது! அவர் பாரபட்சம் பார்க்காதவர் என்றும், அவரது வழிகளெல்லாம் நியாயம், அவர் நியாயக்கேடில்லாத சத்தியமுள்ள தேவன்; அவர் நீதியும் செம்மையுமானவர் என்று வேதம் சொல்கிறதல்லவா?(உபாகமம் 10:17, 32:4). உண்மையில், தேவன் பாரபட்சமற்றவர், அவர் இஸ்ரேலை ஒரு மாதிரியாகவும், மற்றவர்களை வேறு மாதிரியாகவும் பார்க்கிறவர் அல்ல. கவனிக்கவும், அந்த மரண தேவதூதன் எகிப்து தேசத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் செல்லும் படி கட்டளையிடப்பட்டிருந்தார், அது எகிப்தியரின் வீடாக இருந்தாலும் சரி, இஸ்ரேல் வீடாக இருந்தாலும் சரி, அந்த தூதன் சென்று முதற்பேரான குமாரனை அதம் செய்வது தான், அவனுக்கு கொடுக்கப்பட்டிருந்த கட்டளை. ஆக, இஸ்ரேல் மக்களின் மூத்த குமாரன்கள் கூட மரிக்கக்கூடிய ஆபத்தில் இருந்தனர் என்பது தான் உண்மை. அப்படியானால், இந்த ஆபத்திலிருந்து தப்பிக்க என்ன வழி? மோசேவும், இஸ்ரேல் மக்களும் இதிலிருந்து தப்பிக்க ஒரே வழி தான் இருந்தது. அது என்னவென்றால், கர்த்தரின் கட்டளைக்கு கீழ்படிந்து, ஒவ்வொருவரும் ஒரு ஆட்டை பஸ்கா பலியாக கொடுத்து அதன் இரத்தத்தை தங்கள் வாசல் நிலைகளில் பூசவேண்டும்.
"மீட்பது (Redeem)" என்ற வார்த்தையின் பொருள் என்ன? இதற்கு ஒரு உதாரணத்தைக் காண்போம். ஒரு அடிமையை மீட்பது என்றால் இதன் அர்த்தம் என்ன? அந்த அடிமையை வைத்திருக்கும் நபரிடம் சென்று, ஒரு பெருந்தொகையைச் செலுத்தி, அந்த அடிமையை விடுதலைச் செய்வதாகும். இந்த செயலைச் செய்கிறவருக்கு "மீட்பர்" என்று பொருள். அவர் செலுத்திய அந்த பெருந்தொகையை "பகரமாக கொடுக்கப்பட்ட தொகை" என்று அழைப்பர்.
இப்ராஹீமின் மகனுக்கு பகரமாக ஒரு ஆட்டை இறைவன் வைத்திருந்தார். அதே போன்று, இஸ்ரேலர்களின் புதல்வர்களை மீட்க, ஒவ்வொரு குடும்பத்திலும் ஒரு ஆடு பகரமாக கொடுக்கப்பட்டது, அதாவது அது கொல்லப்பட்டு, அதன் இரத்தம் இஸ்ரேல் மக்களின் வீட்டு வாசல்களில் பூசப்பட்டது. யாருடைய வீட்டின் வாசல் நிலைகளில் பஸ்கா ஆட்டின் இரத்தம் பூசப்பட்டுள்ளதோ, அந்த வீட்டின் மூத்த புதல்வர்களின் உயிர் மீட்கப்பட்டுவிட்டது. அந்த மரணதூதன், அவ்வீட்டை விட்டு கடந்து சென்றுவிடுவான்.
கர்த்தரும்/அல்லாஹ்வும் ஒரு மீட்பர் என்று அழைக்கப்படுவார்களானால், இந்த பஸ்கா ஆட்டு பலியினால் நாம் கற்றுக்கொள்ளும், அல்லது பின்பற்ற வேண்டிய பாடம் என்ன? ஒரு கிறிஸ்தவனாக, அதே நேரத்தில் யூத நபிகளில் பிரதானமான நபியாகிய மோசேயை கனப்படுத்துகின்ற நான், முஸ்லிம்களிடம் கேட்கவிரும்பும் கேள்வி இது தான்: "நம்முடைய முந்தைய நபிமார்கள் இறைவனை இரட்சகராகவும், மீட்பராகவும் கருதி கனப்படுத்தினர், ஒரு முஸ்லிமாக நீங்களும் இறைவனை ஒரு இரட்சகராகவும் மீட்பராகவும் கருதி கனப்படுத்துகிறீர்களா?", நம் இறைவன் இரட்சகர் மற்றும் மீட்பர் என்ற குணங்களை கொண்டுள்ளார் என்று நம்புகிறீர்களா? குர்ஆனை மேலோட்டமாக படித்தாலும் சரி, இதனை நீங்கள் மறுக்கமுடியாது. ஏனென்றால், முஹம்மது முந்தைய நபிமார்களின் செய்தியைத் தான் கொண்டுவந்தார் என்றும், அவர் சுயமாக ஒன்றும் கொண்டுவரவில்லையென்றும் குர்ஆன் சொல்கிறது.
இப்போது நாம் கட்டுரையின் கடைசிக்கு வந்திருக்கிறோம். நம் இறைவன் இரட்சகராகவும், மீட்பராகவும் இருக்கிறார் என்பதில் நமக்கு சந்தேகமில்லை. ஆனால், இந்த கேள்வியை கவனியுங்கள்: அல்லாஹ்விற்கு இருக்கும் 99 அழகான பெயர்களில் ஏன் மீட்பர் என்ற பெயர் மட்டும் அவருக்கு கொடுக்கப்படவில்லை? இறைவனுக்கு இருந்த 'மீட்பர்' என்ற பெயர் எப்படி, அல்லாஹ்விடமிருந்து விடுபட்டுவிட்டது அல்லது மறைந்துவிட்டது? இந்த கேள்வியை சிந்தித்துப் பார்த்திருக்கிறீர்களா?
ஏதோ உங்களோடு வாதம் புரியவேண்டுமென்று இந்த கேள்வியை நான் கேட்டிருக்கிறேன் என்று நீங்கள் எண்ணவேண்டாம். நீங்கள் சுயமாக 'மீட்பர்' என்ற இறைகுணத்தைப் பற்றி சிந்திக்கவேண்டும் என்று இந்த கேள்வியை எழுப்பியுள்ளேன். முந்தைய நபிமார்கள் அனைவரும் முன்மொழிந்த "மீட்பர்" என்ற இறைகுணத்தை ஏன் இஸ்லாம் அல்லாஹ்விற்கு முன்மொழியவில்லை?
இந்த கட்டுரையில் சொல்லப்பட்ட விவரங்கள் பற்றி மேலும் நீங்கள் ஆய்வு செய்ய விரும்பினால், கீழ்கண்ட கட்டுரையை ஒரு முறை படித்துப் பாருங்கள்:
ஆசிரியர்: ரோலண்ட் கிளார்க்
தேதி: ஜூலை 21, 2021
ஆங்கில மூலம்: https://www.answering-islam.org/authors/clarke/eid_passover.html
ரோலண்ட் கிளார்க் அவர்களின் இதர கட்டுரைகள்
source: https://www.answering-islam.org/tamil/authors/rolandclarke/eid_passover.html
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக