ஆசிரியர் : ராபர்ட் ஸீவர்ஸ்
தமிழாக்கம்: தமிழ் கிறிஸ்தவர்கள்
என்னுடைய இந்த தளத்தை தொடர்ச்சியாக படிக்கும் வாசகர்கள், "நான் சமீப நாட்களாக, இடைக்காலங்களில் வாழ்ந்த கிறிஸ்தவ அறிஞர்கள் (Medieval Christian Apologists)" பற்றி அதிகமாக படித்து எழுதுகிறேன் என்பதை கவனித்து இருப்பார்கள். ஆம், அப்படிப்பட்ட அறிஞர்களின் புத்தகங்களை படித்து ஆய்வு செய்து எழுதுவது எனக்கு விருப்பமான ஒன்றாகும். அப்படிப்பட்ட அறிஞர்கள் அதிகமான தலைப்புகளில் தங்கள் ஆய்வை செய்து இருக்கிறார்கள், அவைகள் பற்றி என்னுடைய அடுத்தடுத்த கட்டுரைகளில் விவரிக்கிறேன். இப்போது, இந்த கட்டுரையில், ஒரு சுவாரசியமான விஷயத்தைப் பற்றி எழுதப் போகிறேன். அதாவது, இஸ்லாமிய ஆரம்ப காலகட்டங்களில் வாழ்ந்த "அரேபிய கிறிஸ்தவ சிந்தனையாளர்" ஒருவரின் வாதத்தை இப்போது விளக்கப் போகிறேன்.
ஆரம்ப காலத்தில் இஸ்லாமை நேர்த்தியாக ஆராய்ந்து, வாத பிரதிவாதங்களை முன் வைத்தவர் "தியோடர் அபூ குர்ரா (Theodore Abu Qurrah)" என்பவர் ஆவார். இவருடைய வாழ்க்கை வரலாற்று விவரங்கள் குறித்து சில சர்ச்சைகள் உள்ளது. ஆனால், ஒன்று மட்டும் தெளிவாக உள்ளது, அது என்னவென்றால், இவர் எட்டாம் நூற்றாண்டில் வாந்தவர், மேலும் அரபி மொழியில் பாண்டித்தியம் பெற்றவர். இவர் அப்பாஸித் வம்சத்தார்கள் (Abbasid Dynasty) காலகட்டத்தில் இஸ்லாமியர்கள் கைப்பற்றிய நாட்டில் வாழ்ந்தவர் ஆவார். எடிஸ்ஸாவில் (Edessa) பிறந்து, நீண்ட காலம் "மர் ஸபாஸ் துறவிமடத்தில் (Mar Sabas monastery)" ஊழியம் செய்தார். இவர் எழுதிய புத்தகம் தான் அரபியில் எழுதப்பட்ட முதல் கிறிஸ்தவ புத்தகமாக கருதப்படுகின்றது.
எந்த மார்க்கம் சரியான மார்க்கம் என்பதை அறிந்துக்கொள்ள தர்க்க சாஸ்திர காரணங்கள் நமக்கு உதவுகின்றன, இதன் மூலம் எது சரியான மார்க்கம் என்பதை அறிந்துக் கொள்ளலாம் என்பது தியோடர் அபூ குர்ராவின் கருத்தாக இருந்தது. இவர் அனேக ஆய்வுக் கட்டுரைகளை ஒழுங்காக சிறப்பாக அனேக தலைப்புகளில் எழுதியிருக்கிறார். அவைகளில் ஒரு முக்கியமான ஆய்வுக்கட்டுரையில் ஒரு உவமையை கூறினார், அதாவது "எப்படி சரியான உண்மையான இறைவனை கண்டுபிடிப்பது" என்பது பற்றியாகும். அபூ குர்ராவின் கருத்துப்படி, ஒரு உண்மையான இறைவன் தன் செய்தியை உலக மக்களுக்கு தெரிவிக்க ஒரு இறைத்தூதரை (தீர்க்கதரிசியை) அனுப்புவார் என்பதாகும். அதே நேரத்தில், பொய்யான இறைத்தூதர்களும் இடையிலே எழும்பி, என்னையும் இறைவன் தான் அனுப்பினார் என்றும் சுயமாக சொல்லிக்கொண்டு வருவார்கள் என்பதும் உண்மையே. இப்போது நம்முன் இருக்கும் கேள்வி என்னவென்றால், தங்களை நபிகள்/தீர்க்கதரிசிகள் என்று சொல்லிக்கொண்டு வரும் நபர்களை சரிபார்த்து எப்படி உண்மையான தீர்க்கதரிசியை அடையாளம் கண்டுபிடிப்பது? எப்படி பொய்யான நபியை கண்டுபிடிப்பது? இதனை கண்டுபிடிக்க, அபூ குர்ரா ஒரு உவமையை அல்லது கதையைக் கூறுகிறார், அந்த உவமையை இப்போது காண்போம்:
ஒரு இராஜா தன் மகனை ஒரு நீண்ட பயணத்திற்கு தூர தேசத்திற்கு அனுப்புகிறார். மேலும் தன் மகனோடு ஒரு புத்திசாலியான வைத்தியனையும் அனுப்புகிறார். ஏதாவது காலகட்டத்தில் தன் மகனுக்கு உடல் நலக்குறைவு வந்தால், அவனுக்கு உதவியாக இருக்க வைத்தியனையும் அனுப்புகிறார். சில நாட்கள் கழித்து, உண்மையாகவே இராஜாவின் மகனுக்கு உடல் நலக்குறைவு வந்துவிடுகிறது. இந்த விஷயம் இராஜாவிற்கு தெரிவிக்கப்படுகின்றது. தன் மகனுக்கு உடல் நலம் சரியில்லை என்பதை அறிந்ததும், இராஜா ஒரு தூதரை சரியான மருந்துகளோடு அனுப்புகிறார். தன் மகனின் வியாதியை நீக்கும் சரியான மருந்தை அவர் அனுப்புகிறார். இந்த இராஜாவின் எதிரிகள் இந்த செய்தியை அறிந்து, அவர்களும் பொய்யான மருந்துகளோடு அனேக தூதர்களை 'இராஜா' அனுப்பினார் என்றுச் சொல்லி அனுப்புகிறார்கள். இந்த எதிரிகளின் நோக்கமெல்லாம், இராஜாவின் மகனுக்கு வியாதி இன்னும் அதிகமாக வேண்டும், அதற்காக தீமைசெய்யும் மருந்துகளை அனுப்புகிறார்கள். இப்போது இராஜாவின் மகனோடு இருக்கும் வைத்தியருக்கு இது ஒரு சவாலாக இருக்கிறது. இராஜா அனுப்பிய உண்மையான தூதர் யார்? எதிரிகள் அனுப்பிய தூதர்கள் யார்? என்பதை கண்டுபிடிக்கவேண்டும், அவர் கொண்டு வந்த மருந்து உண்மையானதா பொய்யானதா என்பதை கண்டுபிடிக்கவேண்டும்?
இந்த அறிவாளியான வைத்தியன் செய்தது ஒரு மறைமுகமான யுக்தியாகும். அதாவது அவன் நேரடியாக மருந்தைப் பற்றி கேட்கவில்லை, அதற்கு பதிலாக தன்னிடம் வந்த ஒவ்வொரு தூதரிடமும், "நீங்கள் கொண்டு வந்த மருந்து எந்த நோய்க்கு கொண்டு வந்தீர்கள். நம் இளவரசரிடம் காணப்பட்ட அந்த நோயின் அறிகுறிகள் என்னென்ன?" என்று கேள்விகளை கேட்டார். இராஜாவின் மகனுக்கு வந்த வியாதி பற்றி, அதன் வீரியத்தைப் பற்றி எந்த தூதன் சரியான அறிகுறிகளை சொல்கின்றானோ, அவன் தான் உண்மையான இராஜா அனுப்பிய தூதன், அவனிடம் உள்ளது தான் உண்மையான மருந்தாகும்.
அபூ குர்ரா கீழ்கண்ட விதமாக தன் உவமையை முடிக்கிறார்:
அனேக தூதர்கள் கொண்டு வந்த மருந்துகளில் ஒன்று மட்டுமே உண்மையான மருந்தாக இருக்கக்கூடும். அப்படியானால், எந்த தூதரிடம் அந்த வியாதிக்கான உண்மையான அறிகுறிகள், காரணங்கள் இருக்குமோ, அவரிடம் மட்டுமே அந்த வியாதியை குணமாக்கும் மருந்தும் இருக்கும். அந்த வியாதியின் வீரியத்தை சரியான அறிகுறிகள் மூலம் விளக்கமுடியாத எந்த ஒரு தூதரும், அவர் கொண்டு வந்த எந்த ஒரு மருந்தும் போலியானதாகும். [1]
இந்த உவமை சொல்லும் செய்தி மிகவும் தெளிவாக உள்ளது. இறைவனின் உண்மையான தீர்க்கதரிசி, மனிதர்களின் நிலையை (பிரச்சனையை) சரியான முறையில் அறிவிப்பார், அதற்கான சரியான காரணத்தை அறிவிப்பார், அப்போது தான் அந்த பிரச்சனையை அந்த இறைவனால் தீர்த்துவைக்க முடியும். இறைவன் கொடுக்கும் அந்த வழிகாட்டுதலை (இரட்சிப்பை) நாம் பெற்றுக்கொள்வதற்கு, மனித வர்க்கத்தின் உண்மையான நிலையை (பாவ நிலையை) சரியாகச் சொல்வது எது? குர்-ஆனா அல்லது பைபிளா?
என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யமுடியாது என்று இயேசு கூறினார் (யோவான் 15:5)
ஆவியினால் நீங்கள் மறுபடியும் பிறக்காவிட்டால், தேவனுடைய இராஜ்ஜியத்தில் பிரவேசிக்க முடியாது என்று இயேசு கூறினார் (யோவான் 3:5-6)
இதைப் பற்றி பைபிள் அனேக இடங்களில் கூறுகிறது (எரேமியா 17:9, ரோமர் 5:12)
பைபிளின் படி, நம்முடைய வியாதியை (பாவங்களை) நம்முடைய சுய பலத்தினால் நாம் சுகமாக்கிக் கொள்ளமுடியாது, ஏனென்றால் பாவமானது நம்மில் ஆரம்பமுதல் குடிகொண்டு இருக்கிறது.
ஆனால், இஸ்லாமின் படி நம்முடைய பாவங்கள் என்பது, நம்முடைய ஒரு சிறிய பலவீனமாகும் அல்லது நம்முடைய மறதியாகும் (Qur'an 39:8;20:115). இஸ்லாமின் படி நாம் அனைவரும் பிறக்கும் போது முஸ்லிம்களாக (பாவமில்லாதவர்களாக) பிறக்கிறோம் (Qur'an 30:30), ஆனால் நம்முடைய பெற்றோர்கள் நம்மை வழி தவற வைத்துவிடுகின்றனர் [2].
இந்த இரண்டில் எது சரியானது? பைபிள் சொல்வதா? குர்-ஆன் சொல்வதா? நாம் அனைவரும் பிறந்தது முதல் பாவம் செய்ய இயற்கையாக சாய்கின்றவர்களாக பிறக்கிறோமா? அல்லது குர்-ஆன் சொல்வது போல, பிறக்கும் போது இறைவனின் சரியான வழிகாட்டுதலை இருதயத்தில் உடையவர்களாக பிறந்து, அதன் பிறகு நம்முடைய பெற்றோர்களால் வழி தவற வைக்கப்படுகின்றோமா? பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளிடம் மற்ற குழந்தைகளின் பொம்மைகளை திருடச் சொல்லி கற்றுக்கொடுக்கிறார்களா? அல்லது பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளிடம், மற்றவர்களோடு உன் பொருட்களை பகிர்ந்துக்கொள் என்றுச் சொல்கிறார்களா? முதன் முதலாக குழந்தை எந்த வார்த்தைகளை கற்றுக்கொள்கிறது "இது என்னுடையது" என்ற வார்த்தைகளா? அல்லது "இது உன்னுடையது" என்ற வார்த்தைகளா? குழந்தைகள் இயற்கையாகவே "சுயநலத்துடன்" தங்கள் தேவைகளை முதலாவது பூர்த்தி செய்துக்கொள்ள விரும்புகிறார்களா? அல்லது குழந்தைகள் சுயநலமில்லாமல் செயல்படுகிறார்களா? அதாவது மற்றவர்களின் தேவைகளை முதலாவது பூர்த்தி செய்துவிட்டு அதன் பிறகு தங்கள் சுய தேவைகளுக்கு வருகிறார்களா?
நாம் மேலேகண்ட உவமையின் வைத்தியரைப் போல, நாம் முதலாவது மனிதனின் இருதயத்தின் நிலையை பிரச்சனையை புரிந்துக் கொள்ளவேண்டும், அதன் பிறகு தான் நமக்கு சரியான மருந்தை கொண்டு வந்தவர் இயேசுவா அல்லது முஹம்மதுவா என்பது தெளிவாக புரியும்.
பின் குறிப்புக்கள்:
[1] Samir, Samir Khalil and Jorgan S Nielsen. Christian Arabic Apologetics During the Abbasid Period (750-1258). E.J. Brill: Leiden, The Netherlands, 1994, p35.
[2] Sahih Bukhari, USC-MSA web (English) reference : Vol. 2, Book 23, Hadith 440
ஆங்கில மூலம்: The King's Physician
ராபர்ட் ஸீவர்ஸ் அவர்களின் இதர கட்டுரைகள்
© Answering Islam, 1999 - 2013. All rights reserved.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக