ஆசிரியர்: உமர்
முன்னுரை – இப்புத்தகத்தின் நோக்கமென்ன?
கிறிஸ்தவத்திற்கு பிறகு 600 ஆண்டுகள் கழித்து மக்காவில் முஹம்மது என்ற பெயரில் ஒருவர் தோன்றி, தன்னை தீர்க்கதரிசி என்று சுயபிரகடனம் செய்து கொண்டார். அல்லாஹ் என்ற இறைவன் தன்னை இறைத்தூதுவராக அனுப்பினார் என்றுச் சொல்லிக்கொண்டார். அந்த அல்லாஹ் தனக்கு கொடுக்கும் வார்த்தைகள் தான் குர்-ஆன் என்றும் சொன்னார். யூதர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் வணங்கும் இறைவன் தான் தன்னையும் அனுப்பினார் என்றுச் சொல்லிக்கொண்டார். அவர்கள் தன்னை ஒரு தீர்க்கதரிசியாக ஏற்றுக்கொள்ளவேண்டுமென்று விரும்பினார், ஆனால் அவரது விருப்பம் நிறைவேறவில்லை.
யூத கிறிஸ்தவர்களின் வேதத்திலிருந்து அனேக நிகழ்ச்சிகளை குர்-ஆனில் மறுபதிவு செய்தார், சிலவற்றை மாற்றியும் மறுபதிவு செய்தார். இயேசு ஒரு தீர்க்கதரிசி மட்டுமே என்று குர்-ஆனில் எழுதிவிட்டார். இயேசுவிற்கு இறைத்தன்மையில்லை, அவர் சிலுவையில் மரிக்கவில்லை, உயிர்த்தெழவில்லை என்றார். இந்த முஹம்மதுவையும், அவர் கொண்டு வந்த புத்தகத்தையும் பின்பற்றும் மக்கள் தான் நாம் காணும் முஸ்லிம்கள். இவர்களின் மதம் தான் இஸ்லாம்.
முஸ்லிம்களின் குற்றச்சாட்டுகள்: கிறிஸ்துவை மட்டுப்படுத்தவும், கிறிஸ்தவத்தை குற்றப்படுத்தவும் முஸ்லிம்கள், முக்கியமாக தமிழ் நாட்டில் உள்ள இஸ்லாமிய அறிஞர்கள் கீழ்கண்ட குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர்:
- இயேசு போதித்த போதனை பவுல் என்பவரால் திருத்தப்பட்டுவிட்டது. இயேசு போதித்தது இஸ்லாமைத் தான்.
- இன்று கிறிஸ்தவர்கள் பின்பற்றும் கோட்பாடுகளை போதித்தவர் பவுல் என்பவராவார். இயேசுவின் சிலுவையில் அறையப்பட்டார், உயிர்த்தெழுந்தார் போன்ற போதனைகள் பவுலின் போதனைகளாகும்.
- புதிய ஏற்பாட்டில் பவுலின் வார்த்தைகளே மிகுந்து காணப்படுகிறது, பவுல் ஒரு கள்ள அப்போஸ்தலர் ஆவார்.
இப்படி அனேக குற்றச்சாட்டுகளை முஸ்லிம்கள் முன்வைக்கிறார்கள். ஆனால், இயேசு போதித்ததும், இயேசுவின் சீடர்களாகிய அப்போஸ்தலர்கள் போதித்ததும், பவுலடியார் போதித்ததும் ஒரே செய்தியைத் தான் என்பதை கிறிஸ்தவர்கள் அறிவார்கள், ஆய்வு செய்யும் ஒவ்வொருவரும் அறிந்துக்கொள்வார்கள். முஸ்லிம்கள் உண்மையாக ஆய்வு செய்தால், இதே முடிவிற்குத் தான் வருவார்கள், ஆனால் அவர்கள் ஆய்வு செய்து உண்மையை அறிந்துக்கொள்ள தயாராக இல்லை என்பது தான் கசப்பான உண்மை.
பவுலடியாரைப் பற்றி இப்படிப்பட்ட தவறான கண்ணோட்டத்தை குர்-ஆனோ, ஹதீஸ்களோ அல்லது இதர இஸ்லாமிய சரித்திர நூல்களோ கொண்டிருக்கவில்லை என்பது முஸ்லிம்களுக்கு பிடிக்காத இன்னொரு கசப்பான உண்மையாகும். எல்லா உண்மைகளும் இனிக்காது, சில உண்மைகள் கசப்பாக இருக்கும், இருந்தபோதிலும், நித்தியத்தைக் கருதி முஸ்லிம்கள் ஆய்வு செய்து சத்தியத்தை அறிந்துக் கொள்ளவேண்டுமென்பது தான் எங்கள் விருப்பம்.
முஸ்லிம்களின் நம்பிக்கையின் படி:
- அல்லாஹ்வின் வார்த்தைகள் அடங்கிய புத்தகம் தான் குர்-ஆன்.
- குர்-ஆன் போதிக்கும் போதனையை விட மேன்மையான போதனையை உலகில் எந்த ஒரு புத்தகத்திலும் காணமுடியாது.
- இதே போல, முஹம்மதுவின் செயல்களும், பேச்சுக்களும் அல்லாஹ்வின் வெளிப்பாடுகளாக உள்ளன.
- முஹம்மது சுயமாகப் பேசவில்லை, சுயமாக எதையும் செய்யவில்லை, அல்லாஹ்வின் சொற்படியே அவர் பேசினார் மற்றும் நடந்துக்கொண்டார். ஆக, முஹம்மதுவின் போதனைகளையும், செயல்களையும் நாம் காணும்போதெல்லாம், அவைகள் அல்லாஹ்வின் வார்த்தைகளே, அல்லாஹ் செய்யச் சொன்ன செயல்களே என்று கருதவேண்டும்.
இப்படி முஸ்லிம்கள், குர்-ஆனைப் பற்றியும், முஹம்மதுவின் செயல்கள் பற்றியும் அதிக மேன்மையாகச் சொல்லிக் கொள்வார்கள்.
இதுவரை நாம் மேலே பார்த்த விவரங்கள் முஸ்லிம்களின் நம்பிக்கையை பிரதிபலிக்கும் விவரங்களாகும். முஸ்லிம்களின் நம்பிக்கையின் படி புதிய ஏற்பாட்டில் பவுலடியார் எழுதிய கடிதங்களின் போதனைகள் மனித சிந்தனையில் உதித்த சிந்தனைகளாகும், அவைகள் தேவனின் வார்த்தைகள் அல்ல. அவைகள் பவுல் என்ற ஒரு கள்ள அப்போஸ்தலரின் போதனைகளாகும்.
கிறிஸ்தவர்களின் நம்பிக்கையின் படி, பரிசுத்த ஆவியானவர் தான் அப்போஸ்தலர் பவுலடியார் மூலமாக அனேக கடிதங்களை எழுதவைத்தார். அப்போஸ்தலர் பேதுரு, யோவான் மற்றும் இதர நபர்களை எப்படி பரிசுத்த ஆவியானவர் பயன்படுத்திக்கொண்டாரோ அதே போல பவுலடியாரையும் பயன்படுத்திக்கொண்டார், கிறிஸ்தவர்களுக்கு இதில் ஒரு அணு அளவும் சந்தேகமில்லை.
இப்போது அல்லாஹ்விற்கு/முஸ்லிம்களுக்கு கிறிஸ்தவர்கள் விடுக்கும் சவால் என்ன?
ஒரு வாதத்திற்காக பவுலடியாரின் வார்த்தைகள் மனித வார்த்தைகள் என்று நாம் ஏற்றுக்கொள்வோம். அப்படியானால், "பவுலடியாரின் போதனைகள் அல்லாஹ்வின் போதனைகளைக் காட்டிலும் சிறப்பானதாக இருக்கக்கூடாது. அதாவது குர்-ஆன் மற்றும் முஹம்மதுவின் போதனைகள் பவுலடியாரின் போதனைகளைக் காட்டிலும் மேன்மையானதாக இருக்கவேண்டும்". இதனை இஸ்லாமிய அறிஞர்கள் ஒப்புக்கொள்வார்கள் என்று நாம் நம்புகிறோம்.
ஆனால், உண்மையில் இப்படி இருக்கின்றதா? என்பது தான் கேள்வி?
- பவுலடியாரின் போதனைகள் முஹம்மதுவின் போதனைகளைக் காட்டிலும் சிறப்பாக இருக்கிறது என்பதை நாம் காணப்போகிறோம்.
- பவுலடியாரின் வார்த்தைகள் அல்லாஹ்வின் வார்த்தைகளைக் காட்டிலும் இமய மலை அளவிற்கு உயர்ந்து காணப்படுகின்றது என்பதை நாம் காணப்போகிறோம்.
பவுலடியாரின் வார்த்தைகள் மனித வார்த்தைகள் என்றும் கள்ள அப்போஸ்தலரின் வார்த்தைகள் என்றும் கருதும் முஸ்லிம்கள் இந்த சவாலை மனமுவந்து மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்ளவேண்டும். முஸ்லிம்கள் வேதம் என்று நம்பும் தங்கள் குர்-ஆன் வசனங்களை பவுலடியாரின் வசனங்களோடு ஒப்பிடவேண்டும். பவுலடியாரின் வார்த்தைகள் முஹம்மதுவின் வார்த்தைகளோடு ஒப்பிடவேண்டும். முஸ்லிம்களின் நம்பிக்கையின் படி பவுலடியாரின் ஒரு போதனை கூட முஹம்மதுவின் மற்றும் அல்லாஹ்வின் போதனையைக் காட்டிலும் சிறப்பானதாக, மேன்மையானதாக இருக்கக்கூடாது.
முஸ்லிம்களுக்கு தங்கள் அல்லாஹ்வின் வார்த்தைகள் மீது நம்பிக்கை இருந்தால், பவுலடியாரின் கீழ்கண்ட புத்தகங்களை (கடிதங்களை) படித்துப் பார்க்கவேண்டும். முஸ்லிம்கள் பவுலடியாரின் புத்தகங்களை படிக்க முன்வரவில்லையென்றால், அவர்களுக்கு தங்கள் அல்லாஹ்வின் வார்த்தைகள் அடங்கிய குர்-ஆன் மீது நம்பிக்கையில்லை, பவுலடியாரின் ஞானத்திற்கு முன்பு அல்லாஹ்வின் ஞானம் தோற்றுவிடும் என்று அவர்கள் பயப்படுகிறார்கள் என்று அர்த்தமாகிவிடும்.
இந்த புத்தகத்தை ஒரு இஸ்லாமிய விமர்சனமாக கருதாமல், உண்மையான இறைவனை கண்டுபிடிக்கும் ஒரு தேடலாக இருக்கிறது என்று முஸ்லிம்கள் கருதுவார்கள் என்று எண்ணுகின்றேன். முஸ்லிம்களின் மனதை புண்படுத்துவது எமது நோக்கமில்லை, அதற்கு பதிலாக பொய்யான மார்க்கமாகிய இஸ்லாமை விட்டு விட்டு, உண்மை இறைவனையும், மெய் மார்க்கத்தையும் முஸ்லிம்கள் கண்டு கொண்டு மேன்மை அடைவார்கள் என்பது தான் எமது விருப்பமாகும். முஸ்லிம்கள் தேவனின் இராஜ்ஜியத்தின் குடிமக்களாக மாறவேண்டும், தேவனின் அன்பையும் பாதுகாப்பையும் இவ்வுலகத்தில் இருக்கும் போதே பெற்றுக்கொள்ளவேண்டும். முஸ்லிம்கள் உண்மை தெய்வத்திடம் வருவதற்கு தடையாக இருப்பது "பவுலடியார் பற்றி முஸ்லிம் அறிஞர்கள் கொண்டிருக்கும் தவறான கண்ணோட்டமாகும்" எனவே, இந்த தவறான கண்ணோட்டத்தை தகர்த்தெறிவது தான் இந்த புத்தகத்தின் நோக்கம்.
புதிய ஏற்பாட்டில் காணப்படும் பவுலடியாரின் கடிதங்கள் / புத்தகங்கள்:
1) ரோமர்
2) 1 கொரிந்தியர்
3) 2 கொரிந்தியர்
4) கலாத்தியர்
5) எபேசியர்
6) பிலிப்பியர்
7) கொலோசெயர்
8) 1 தெசலோனிக்கேயர்
9) 2 தெசலோனிக்கேயர்
10) 1 தீமோத்தேயு
11) 2 தீமோத்தேயு
12) தீத்து
13) பிலேமோன்
14) அப்போஸ்தலருடைய நடபடிகள் (இந்த புத்தகத்தை பவுலடியார் எழுதவில்லை, ஆனால் அவரைப் பற்றிய விவரங்கள் இதில் உள்ளதால், இந்த பட்டியலோடு இணைத்துள்ளோம்).
குறிப்பு: பி ஜைனுல் ஆபிதீன் போன்ற இஸ்லாமிய அறிஞர்கள் இன்னும் ஒரு படி மேலே சென்று, மேற்கண்ட கடிதங்கள் மட்டுமல்ல, புதிய ஏற்பாட்டில் உள்ள அனைத்து புத்தகங்களிலும் பவுலடியாரின் தவறான போதனைகள் உள்ளது என்றுச் சொல்கிறார்கள். முதலாவது பவுலின் கையெழுத்துள்ள மேற்கண்ட புத்தகங்களிலிருந்து விவரங்களைக் காண்போம், அதன் பிறகு இதர புதிய ஏற்பாட்டு புத்தகங்களிலிருந்து குர்-ஆனை உரசிப்பார்ப்போம். இப்படி செய்யும் போது தான், எது சுத்த தங்கம், எது இரும்பு என்பது தெளிவாக விளங்கும்.
உமரின் கட்டுரைகள்/மறுப்புக்கள்
Source: http://www.answering-islam.org/tamil/authors/umar/paul_and_islam/introduction.html
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக