தொழுகை அல்லது ஜெபம் என்பது பூமியிலுள்ள ஒரு மனிதன், எங்கேயோ தூரத்தில் உள்ள இறைவனிடம் பேசுவது. வேறு வகையில் சொல்வதென்றால், இது ஒரு ஆன்மீகச் செயல், கண்ணுக்கு தெரியாத இறைவன் நம் பேச்சுக்களைக் கேட்பார் என்று நம்பி பேசுவது. இந்த தொழுகையை/ஜெபத்தை முறிப்பவைகள் எவைகள் என்று இயேசுவிடமும், முஹம்மதுவிடமும் கேட்டால், இவ்விருவரின் பதில்கள் ஆச்சரியப்படும் விதத்தில் அமைந்திருப்பதைக் காணமுடியும்.
முதலாவது, முஹம்மதுவின் படி தொழுகையை முறிப்பவைகள் எவைகள் என்பதை சுருக்கமாக காண்போம் - இரண்டு உதாரணங்களை மட்டுமே காண்போம்.
1) கழுதை, பெண் & கறுப்புநாய் தொழும் நபரின் குறுக்கே சென்றால் தொழுபவரின் தொழுகை முறிக்கப்படும்
முஹம்மதுவின் படி, ஒருவர் அல்லாஹ்வை தொழுதுக்கொள்ளும் போது, அவருக்கு முன்பாக ஒரு கழுதையோ, பெண்ணோ அல்லது கறுப்பு நாயோ சென்றால், அந்த நபரின் தொழுகை முறிக்கப்படும். அந்த நபர் மறுபடியும் ஆரம்பத்திலிருந்து தொழுகை நடத்தவேண்டி வரும்.
882. அப்துல்லாஹ் பின் அஸ்ஸாமித் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அபூதர் அல்கிஃபாரீ (ரலி) அவர்கள், உங்களில் ஒருவர் (திறந்தவெளியில்) தொழ நிற்கும் போது தமக்கு முன்னால் வாகன (ஒட்டக)த்தின் (சேணத்திலுள்ள) சாய்வுக்கட்டை போன்றது இருந்தால் அதுவே அவருக்குத் தடுப்பாக அமைந்துவிடும். சாய்வுக்கட்டை போன்றது இல்லாவிட்டால் கழுதை, பெண் மற்றும் கறுப்புநாய் ஆகியன அவரது (கவனத்தை ஈர்த்து) தொழுகையை முறித்துவிடும் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்றார்கள். உடனே நான், அபூதர் (ரலி) அவர்களே! சிவப்பு நிற நாய், மஞ்சள் நிற நாய் ஆகியவற்றை விட்டுவிட்டுக் கறுப்பு நிற நாயை மட்டுமே குறிப்பிடக் காரணம் என்ன? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், என் சகோதரரின் புதல்வரே! நீங்கள் என்னிடம் கேட்டதைப் போன்றே நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் கறுப்பு நாய் ஷைத்தான் ஆகும் என்று கூறினார்கள் என்றார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ், மேலும் ஆறு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. (ஆதாரம்: நூல் முஸ்லிம் ஹதீஸ், எண் 882)
இது எப்படி சாத்தியம்? கண்ணுக்கு தெரியாத அல்லாஹ்விடம் ஒருவர் மனதுக்குள் பேசும் போது, யாரோ ஒருவர் குறுக்கே வந்தால் எப்படி அந்த தொழுகையை அல்லாஹ் முறித்துப்போடுவான். யாரோ குறுக்கே வந்தால் ஏன் தொழுபவருக்கு தண்டனை கொடுக்கப்படுகின்றது? (தன் தொழுகை முறிக்கப்பட்டதென்பதால், மறுபடியும் தொழவேண்டும், இது தண்டனைத்தானே! அல்லது இரண்டாம் முறை தொழுவது ஆசிர்வாதமா?).
தொழுகின்ற முஸ்லிம் பூமியில், ஏதோ ஒரு கண்டத்தில், ஒரு குறிப்பிட்ட நாட்டில், ஒரு குறிப்பிட்ட ஊரில், ஒரு குறிப்பிட்ட இடத்தில் தொழும் போது, மனிதனின் கற்பனைக்கு எட்டாத தூரத்தில் இருக்கும் அல்லாஹ் அதனை கேட்கமுடியுமென்றால், ஒரு கழுதை தொழுபவருக்கு குறுக்கே சென்றால், அவரின் தொழுகை அல்லாஹ்விடம் சென்றடைவது தடைபடும் என்றுச் சொல்வது, அறிவுடையோர் ஏற்கும் படி இல்லையே!
இதில் இன்னொரு கேள்வி? கழுதை என்ன பாவம் செய்தது? அதன் மீது ஏன் இந்த பழியை முஹம்மது சுமத்தினார்? பூனையும், இதர மிருகங்களும் குறுக்கே வந்தால் தொழுகை முறிக்கப்படாதா? ஏன் பெண்கள் மட்டும் தொழுகையை முறிப்பார்கள்? ஆண்கள் முறிக்கமாட்டார்களா?
முஹம்மதுவின் படி, இந்த 'தொழுகையை முறிக்கும்' விவரங்கள் ஹலால் ஆகும். ஆனால், இயேசுவின் படி, இவைகள் ஹராம் ஆகும். இந்த விவரங்களை கேள்விபடும் முஸ்லிமல்லாத உலக மக்கள் சிரிபபர்கள்.
ஒருவர் தொழும்போது அவரின் குறுக்கே சென்றால் சண்டையிடலாம்:
இதனுடைய அடுத்த நிலை என்னவென்றால், இப்படி யாராவது குறுக்கே வந்தால், அவர்களை தடுக்கவேண்டும், அவர் மறுத்தால் அவரோடு சண்டையும் போடலாம்.
அபூ ஸாலிஹ் அறிவித்தார்.
எவரும் குறுக்கே செல்லாமலிருக்கத் தடுப்பு வைத்துக் கொண்டு அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) ஒரு வெள்ளிக்கிழமையன்று தொழுது கொண்டிருந்தார்கள். பனூ அபூ முயீத் என்ற கூட்டத்தைச் சேர்ந்த இளைஞரொருவர் குறுக்கே செல்ல முயன்றார். உடனே அபூ ஸயீத்(ரலி) அவரின் நெஞ்சில் கையால் தள்ளினார்கள். வேறு வழியேதும் உள்ளதா என்று அந்த இளைஞர் கவனித்தபோது, அபூ ஸயீத்(ரலி)யின் குறுக்கே செல்வதைத் தவிர அவருக்கு வேறு வழிதென்படவில்லை. எனவே மீண்டும் அவர்களுக்குக் குறுக்கே செல்ல முயன்றார். முன்பை விடக் கடுமையாக அபூ ஸயீத்(ரலி) அவரைத் தள்ளினார்கள். அதனால் அவருக்குப் பாதிப்பு ஏற்பட்டது. உடனே அவர் (ஆட்சித் தலைவராக இருந்த) மர்வானிடம் சென்று இது பற்றி முறையிட்டார். அவரைத் தொடர்ந்து அபூ ஸயீத்(ரலி) மர்வானிடம் சென்றார்கள். 'உமக்கும் உம் சகோதரர் மகனுக்குமிடையே என்ன பிரச்சினை?' என்று மர்வான் கேட்டார். 'உங்களில் எவரேனும் தமக்கு முன்னால் 'தடுப்பு' வைத்துத் தொழும்போது, எவரேனும் குறுக்கே செல்ல முயன்றால் அவரைத் தடுக்க வேண்டும்; அதை அவர் எதிர்த்தால் அவருடன் சண்டையிட வேண்டும். ஏனெனில் அவர் நிச்சயம் ஷைத்தானாவார்' என்று நபி(ஸல்) அவர்கள் கூற செவியுற்றுள்ளேன்' என அபூ ஸயீத்(ரலி) கூறினார். (ஆதாரம்: நூல் புகாரி ஹதீஸ், எண் 509)
2) குனிந்து நிமிர்தலைச் சரியாகச் செய்யாவிட்டால் முஸ்லிம்களின் தொழுகை ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை
தொழுகையின் போது சரியாக குனிவது, நிமிர்வது செய்யாவிட்டால் தொழுகை ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என்று முஹம்மது கூறியுள்ளார். இது மட்டுமல்ல, சரியாக குனியாத/நிமிராத காரணத்தினால் சொர்க்கத்திற்கே செல்லமுடியாத நிலையும் உண்டாகுமாம். இதன்படி ஒருவர் சிறுவயது முதல் பல ஆண்டுகள் சரியாக குனிந்து எழுந்திருந்தாலும், கடைசியில் தவறாக செய்தால், அவரின் வாழ்க்கை முழுவதும் செய்தவைகள் அனைத்தும் வீணாகிவிடும்.
'தங்களின் தொழுகையில் ருகூவு ஸுஜுதைச் சரியாகச் செய்யாத ஒருவரைப் பார்த்த ஹுதைஃபா(ரலி) அவர் தொழுகையை முடித்த பின்னர், 'நீர் தொழவில்லை; இந்த நிலையில் நீர் மரணித்தால் நபி(ஸல்) அவர்களின் ஸுன்னத்தின் மீது மரணித்தவராக மாட்டீர்' என்று கூறினார்' என அபூ வாயில் அறிவித்தார். (ஆதாரம்: நூல் புகாரி ஹதீஸ், எண் 389)
இஸ்லாமின் படி, இது ஹலால், ஆனால் இயேசுவின் படி இது ஹராமாகும். இயேசுவின் படி ஒரு மனிதன் தன் இறைவனிடம் ஜெபிக்கும் போது, அவர்களுக்கு இடையே யாருமே குறுக்கே வரமுடியாது, ஏனென்றால் அந்த செயல் ஒரு ஆவிக்குரிய செயல் உலகப்பிரகாரமான செயல் அல்ல. ஒரு கழுதையோ பெண்ணோ குறுக்கே வந்தால் உடைந்துவிடுவதற்கு அந்த செயல் ஒரு பலவீனமான செயல் அல்ல.
இவைகள் எல்லாம் முஹம்மதுவின் படி ஹலால், ஆனால் இயேசுவின் படி ஹராம் ஆகும். ஏனென்றால், இயேசுவின் படி தொழுகையை முறிப்பவைகள் வெளியே அல்ல, தொழுகை புரிபவருக்கு உள்ளேயிருந்து வருகிறது.
இயேசுவின் படி தொழுகையை முறிப்பவைகள்:
முஹம்மது சொல்வது போல கழுதை குறுக்கே வந்தால், கறுப்பு நாய் குறுக்கே வந்தால் தொழுகை முறிக்கப்படும் என்பது இயேசுவின் படி ஹராம் அல்லது அவைகள் தவறான போதனைகள்.
1) மன்னிக்காதவர்களின் ஒப்புறவாகாதவர்களின் ஜெபங்கள் கேட்கப்படாது:
நாம் மற்றவர்களை மன்னிக்கவில்லையென்றால், நம் குடும்ப நபர்களோடு, நண்பர்களோடு சக மனிதனோடு ஒப்புறவாகாமல், கோபத்தையும் கசப்பையும் மனதில் வைத்துக்கொண்டு ஜெபம் செய்தால், நம்முடைய ஜெபம் முறிக்கப்படும், ஏற்றுக்கொள்ளப்படாது என்று இயேசு போதித்தார்.
மத்தேயு 5:23-24
23 ஆகையால் நீ பலிபீடத்தினிடத்தில் உன் காணிக்கையைச் செலுத்த வந்து, உன் பேரில் உன் சகோதரனுக்குக் குறை உண்டென்று அங்கே நினைவு கூருவாயாகில், 24 அங்கேதானே பலிபீடத்தின் முன் உன் காணிக்கையை வைத்துவிட்டுப் போய், முன்பு உன் சகோதரனோடே ஒப்புரவாகி, பின்பு வந்து உன் காணிக்கையைச் செலுத்து.
இயேசு ஜெபிக்க கற்றுக்கொடுக்கும் போது நாம் மற்றவர்களை மன்னிக்கவேண்டும் என்பதை ஒரு கட்டாயமான நிபந்தையாக வைத்துள்ளார்.
மத்தேயு 6:12 எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறது போல எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும்.
நீ மற்றவர்களை மன்னிக்கவில்லையென்றால், நீ என்னால் மன்னிக்கப்படமாட்டாய் என்பது தான் இயேசுவின் முக்கிய போதனையாக இருக்கிறது.
2) தற்பெருமையாக பேசுபவர்கள், மற்றவர்களை கீழ்தரமாக நினைப்பவர்களின் ஜெபங்கள் கேட்கப்படாது
அடுத்தபடியாக, சமுதாயத்தில் ஏற்றத்தாழ்வுகளை பேசிக்கொண்டு இருப்பவர்கள், மற்றவர்களை தாழ்வாக நினைப்பவர்களின் ஜெபமும் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது என்று ஒரு கதையோடு இயேசு விளக்கினார். இறைவனுக்கு முன்பாக தன்னை தாழ்த்துபவன் தான் நீதிமான் ஆக்கப்படுவான் என்று இயேசு கூறினார்.
லூக்கா 18:9-14
9 அன்றியும், தங்களை நீதிமான்களென்று நம்பி, மற்றவர்களை அற்பமாயெண்ணின சிலரைக்குறித்து, அவர் ஒரு உவமையைச் சொன்னார்.
10 இரண்டு மனுஷர் ஜெபம்பண்ணுபம்படி தேவாலயத்துக்குப் போனார்கள்; ஒருவன் பரிசேயன், மற்றவன் ஆயக்காரன்.
11 பரிசேயன் நின்று; தேவனே! நான் பறிகாரர், அநியாயக்காரர், விபசாரக்காரர் ஆகிய மற்ற மனுஷரைப்போலவும், இந்த ஆயக்காரனைப்போலவும் இராததனால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன்.
12 வாரத்தில் இரண்டுதரம் உபவாசிக்கிறேன்; என் சம்பாத்தியத்திலெல்லாம் தசமபாகம் செலுத்திவருகிறேன் என்று, தனக்குள்ளே ஜெபம்பண்ணினான்.
13 ஆயக்காரன் தூரத்திலே நின்று, தன் கண்களையும் வானத்துக்கு ஏறெடுக்கத் துணியாமல், தன் மார்பிலே அடித்துக்கொண்டு; தேவனே! பாவியாகிய என்மேல் கிருபையாயிரும் என்றான்.
14 அவனல்ல, இவனே நீதிமானாக்கப்பட்டவனாய்த் தன் வீட்டுக்குத் திரும்பிப்போனான் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஏனெனில் தன்னை உயர்த்துகிறவனெவனும் தாழ்த்தப்படுவான், தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான் என்றார்.
இயேசுவின் படி எவைகள் ஹராம், எவைகள் ஹலால் என்பதை தெளிவாக புரிந்துக்கொள்ளுங்கள்.
4) சுய இச்சைகளை நிறைவேற்ற விரும்புபவர்களின் ஜெபங்கள் கேட்கப்படாது
பைபிளின் படி, சுய இச்சைகளை நிறைவேற்ற ஜெபம் செய்வதும் ஹராம், அவைகளுக்கு பதில் கிடைக்காது.
யாக்கோபு 4:3 நீங்கள் விண்ணப்பம் பண்ணியும், உங்கள் இச்சைகளை நிறைவேற்றும்படி செலவழிக்க வேண்டுமென்று தகாதவிதமாய் விண்ணப்பம் பண்ணுகிறபடியில், பெற்றுக் கொள்ளாமலிருக்கிறீர்கள்.
5) தியகுணங்களோடு ஜெபம் செய்தால் ஏற்றுக்கொள்ளப்படாது
பழைய ஏற்பாட்டின் படி கூட, மனதில் தீய எண்ணங்களை வைத்துக்கொண்டு மகா பரிசுத்தமான தேவனிடம் ஜெபம் செய்தால், அவர் அவைகளுக்கு பதில் தரமாட்டார்.
சங்கீதம் 66:18 என் இருதயத்தில் அக்கிரமசிந்தை கொண்டிருந்தேனானால், ஆண்டவர் எனக்குச் செவிகொடார்.
இப்படி அனேக விவரங்களைச் சொல்லிக்கொண்டு போகலாம்.
முஸ்லிம்களின் வாதம்: இயேசு சொன்னவைகள் அனைத்தும் உண்மையே! இஸ்லாமில் கூட மேற்கண்ட எண்ணங்களோடு தொழுதால் அதனையும் அல்லாஹ் அங்கீகரிக்கமாட்டான் என்று முஸ்லிம்கள் சொல்லக்கூடும்.
ஆனால், நாம் கேட்க விரும்பும் கேள்விகள் எவைகளென்றால்,
இஸ்லாமின் படி,
- தொழுபவருக்கு முன்பாக கழுதை வந்தால், தொழுகை முறிக்கப்படுமா?
- பெண் குறுக்கே வந்தால், தொழுகை முறிக்கப்படுமா?
- கறுப்பு நாய் குறுக்கே வந்தால் தொழுகை முறிக்கப்படுமா?
- ருகூவு ஸுஜுதைச் சரியாகச் செய்யாதவரின் தொழுகை முறிக்கப்படுமா?
இவைகளுக்கு உண்மையான ஹதீஸ்களின் படி "ஆம்" என்பது தான் பதில். இவைகளைத் தான் இயேசு ஹராம் என்றுச் சொல்கிறார். நீங்கள் ஜெபிக்கும் போது கழுதை, பெண்கள், கறுப்பு நாய் குறுக்கே வந்தால் உங்கள் ஜெபங்கள் கேட்கப்படாது என்று இயேசு சொல்லவில்லை. ஒரு வேளை ஒரு கிறிஸ்தவ போதகர் இஸ்லாமில் உள்ளது போல போதிப்பாரானால், அவருடைய இந்த செயலை இயேசு ஹராம் என்று சொல்லுவார்.
ஆக, இஸ்லாமில் ஹலால் என்று கருதப்படுபவை, கிறிஸ்தவத்தில் அவைகள் ஹராம் ஆகும்.
தொழுகையை முறிக்கும் காரியங்களிலும் முஹம்மதுவின் ஹலால் இயேசுவின் ஹராம் ஆனதைக் கண்டோம்.
தேதி: 8th May 2019
2019 ரமளான் கட்டுரைகள்
அனைத்து ரமளான் தொடர் கட்டுரைகளை படிக்க
உமரின் இதர கட்டுரைகள்/மறுப்புக்கள் பக்கம்
Source: https://www.answering-islam.org/tamil/authors/umar/ramalan/2019ramalan/2019-ramalan-3.html
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக