குர்-ஆனில் அதிகமாக குறிப்பிடப்பட்டிருக்கும் நபர்களில் மூஸா மற்றும் இப்ராஹீமுக்கு அடுத்தபடியாக மூன்றாவதாக வரும் ஈஸா பற்றி நாம் தொடர்ந்து சிந்தித்து வருகிறோம். ஈஸாவின் இறைப்பணி பற்றி சுமார் 15 வசனங்களும் , அவர் பேசிய வார்த்தைகள் பற்றி சுமார் 15 வசனங்கள் என அவரைப் குறிப்புகள் மிகவும் குறைவாகவே குர்-ஆனில் இருப்பது சற்று ஆச்சரியம்தான். நூஹ் (நோவா), இப்ராஹீம், மற்றும் மூஸா போன்றவர்களின் இறைப்பணி பற்றி விரிவாகக் கூறும் குர்-ஆன், நாம் முன்பு பார்த்தது போல, ஈஸாவின் பிறப்பு பற்றிய கதைக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை அவருடைய வாழ்க்கை, இறைப்பணி மற்றும் அவர் பேசிய வார்த்தைகளுக்குக் கொடுக்கவில்லை. ஈஸா பேசிய வார்த்தைகளை குர்-ஆன் 3:49-53; 5:111,112, 114, 116-118; 19:30-33; 61:6,14 ஆகிய பகுதிகளில் நாம் காணலாம். மேலே கொடுக்கப்பட்டிருக்கும் குர்-ஆன் பகுதிகளை வாசிக்கும்போது, குழந்தை ஈஸா தன் தாயாருக்கு ஆதரவாக தான் யார் (அல்லாஹ்வின் அடியார்) என்று பேசுவதையும், தான் செய்யப்போகிற அற்புதங்கள் பற்றி ஈஸா சொல்வதையும், தவ்ராத்தை உறுதிப்படுத்தியும் அஹமதுவின் வருகையை முன்அறிவிப்பதையும், தன் சீடர்களிடம் உதவி கேட்பதையும், தன் சீடர்களுக்கு வானத்தில் இருந்து உணவுப் பொருட்கள் அடங்கிய ஒரு மேஜையை இறக்குமாறு கேட்டதையும், மற்றும் அல்லாஹ்வையே வணங்க வேண்டும் என்பதைத் தவிர வேறு எதையும் போதிக்கவில்லை, அல்லாஹ்வின் இருதயத்தில் இருப்பதை தன்னால் அறியமுடியாது என்று ஒரு தற்காப்பு விளக்கத்தை அல்லாஹ்வுக்கு கொடுப்பதையும் பார்க்கிறோம். அல்லாஹ்வின் அடியாராக முந்தைய வேதங்களை உறுதிப்படுத்துகிறவராகவும், வரப்போகிற அஹமது பற்றி முன்னறிவிப்பவராகவும் தன்னைப்பற்றி சொல்வதால், குர்-ஆன் ஈஸாவைப் பற்றி எவ்வளவுதான் மிகையாகக் கூறினாலும், ஈஸாவின் வார்த்தைகள் அவ்ர் தன்னை எப்படிப்பட்ட ஒரு சாதாரண, வலுவற்றவராக கருதினார் என்பதையே காட்டுகிறது.
குர்-ஆன் சொல்வதற்கு நேர் எதிராக, பரிசுத்த வேதாகமம் இயேசுவைப் பற்றிய விவரமாக மற்றும் உயர்வாகக் குறிப்பிடுகிறது. நற்செய்தி நூல்களில், இயேசுவின் பிறப்புச் சம்பவத்தை விட, அவருடைய ஊழியம் மற்றும் அவர் பேசிய வார்த்தைகளை மிக அதிகமாகக் காண்கிறோம். இயேசு பேசிய வார்த்தைகளைக் கேட்டவர்கள் ஆச்சரியமடைந்தனர் என்று வேதாகமத்தில் பல இடங்களில் வாசிக்கிறோம். ஆனால் குர்-ஆனில் அப்படி சொல்லக் கூடிய அளவுக்கு வசனங்களே இல்லை. குர்-ஆனில் உள்ள ஈஸாவைப் போல் அல்லாது, வேதாகமம் கூறும் இயேசு தன்னை எதிர்த்துக் கேள்வி கேட்டவர்களை கேள்விகளினாலேயே எதிர்கொண்டார், தற்காப்பு விளக்கம் கொடுத்துக் கொண்டிருக்கவில்லை. மாறாக, அவரை எப்படியாவது தங்கள் வலைக்குள் விழ வைக்க வேண்டும் என்று முயற்சிசெய்தவர்கள் கூட அவருடைய கேள்விகளை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறினார்கள். மேலும் தான் யார் என்பதை தைரியமாக, "நானே..." என்று சொல்லி மக்களுக்குத் தன்னை வெளிப்படுத்தியதுடன், தன்னைப் பின்பற்றும் வழியையும் காட்டிக் கொடுத்தார். "நான் உங்களுக்குச் சொல்கிறேன்..." என்று சொல்லி புதிய பிரமாணத்தின் படி வாழும் வழிகாட்டினார். எல்லாவற்றிற்கும் மேலாக பிதாவாகிய தேவனுக்கும் தனக்கும் இருந்த உறவையும், உறவின் நெருக்கத்தை வெளிப்படுத்தினார் (யோவான் 17). அப்படிப்பட்ட ஒரு உறவை நாம் தேவனுடன் பெற வேண்டும் என்று அவர் ஜெபித்தார். அதற்காகவே தன்னை பலியாக ஒப்புக் கொடுக்கவும் செய்தார்.
இதை வாசிக்கும் நாம், இக்காலத்தில் குர்-ஆனை வாசிக்கும் முஸ்லீம்களுக்காகவும், அவர்கள் இயேசு பற்றி கேட்கும் கேள்விகளுக்கு கிறிஸ்தவர்கள் எப்பொழுதும் ஆயத்தமாக இருக்கவும் ஜெபிப்போம் "நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்" எம்று சொன்ன இயேசுவை முஸ்லீம்கள் அனைவரும் கண்டு கொள்ளவும், சத்தியத்தை அறிகிற அறிவு அவர்களுக்கு உண்டாகவும் ஜெபிப்போம்.
- அற்புதராஜ் சாமுவேல்
தேதி: 8th May 2020
Source: http://arputhaa.blogspot.com/2020/05/15.html
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக