மனிதன் அல்லாஹ்வை அறிந்து கொள்ள முடியுமா என்பது பற்றியும், அல்லாஹ்வுக்கும் மனிதனுக்குமிடையேயான உறவு பற்றியும் முந்தைய பார்த்தோம். ஆனால், இஸ்லாமைப் பொறுத்தவரையில், அல்லாஹ்வைப் பற்றிய அவர்களின் வாய்மொழி அறிக்கை முஸ்லீம்களின் நம்பிக்கையில் முக்கியமானதாகவும், இஸ்லாத்தின் ஐந்து அடிப்படைக் கடமைகளில் ஒன்றாகவும் இருக்கிறது. அஷ்-ஷஹாதா اَلشَّهَادَةُ (aš-šahādah) என்று அரபி மொழியில் சொல்லப்படும் இஸ்லாமிய விசுவாச அறிக்கை என்னவெனில், "அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை, முஹம்மது அல்லாஹ்வின் தூதர்" (lā ʾilāha ʾillā -llāh muḥammadun rasūlu -llāh). இதை ஒருவர் நம்பிக்கையுடன் சொன்னால் அவர் அதன் பின் முஸ்லீமாகிவிடுகிறார் என முஸ்லீம்கள் நம்புகின்றனர்.
முஸ்லீம்கள் அறிக்கை செய்யும் இந்த கலீமாவானது, அவர்கள் அறிக்கை செய்கிற அதே வடிவத்தில் குர்-ஆனில் அடுத்தடுத்து எங்கும் இல்லை. குர்-ஆனில், "அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை" என்ற சொற்றொடர் 40க்கும் அதிகமான முறை வருகிறது. இறைவன் ஒருவனே என்று சொல்லும் குர்-ஆன் வசனங்கள் பல உண்டு (37:4-5; 2:163; 6:19; 16:22; 112:1-4). இஸ்லாமின் அடிப்படை போதனையான இதை மீறுபவர் ஷிர்க் எனப்படும் அல்லாஹ்வுக்கு இணைவைத்தல் என்கிற பாவத்தை செய்தவராகிவிடுகிறார். அல்லாஹ் ஒருவனே என்றும், முஹம்மது பற்றியும் அறிக்கை செய்யும் முஸ்லீம்கள், அல்லாஹ்வுக்கு இணையாக முஹம்மதுவுக்கும் கீழ்ப்படியும்படி சொல்கிற பல வசனங்களை குர்-ஆனில் (5:93; 24:54; 64:12) காணலாம். அது மட்டுமல்ல, குர்-ஆன் 53:19,20 வசனங்களில் மூன்று அரேபிய பெண் தெய்வங்கள் பற்றி வாசிக்கிறோம்.
இறைவன் ஒருவனே என்று சொல்லும் குர்-ஆன் ஏன் அரேபியப் பெண் கடவுள்களைப் பற்றி குறிப்பிடவேண்டும்? இஸ்லாமிய ஆதார நூல்களை வாசிக்கும்போது, அவை சாத்தானின் வசனங்கள் என்றழைக்கப்படுகிற, முஸ்லீம்களின் தீர்க்கதரிசியான முஹம்மதுவின் வாழ்க்கையில் நடந்ததாகச் சொல்லப்படுகிற ஒரு சம்பவத்தை அவை குறிப்பிடுவதாக சொல்கின்றன. குர்-ஆன் கூறும் இறை நம்பிக்கையான தனி ஒருமை (absolute one) கொள்கையில் பிரச்சனை இருக்கிறது என்று முன்பு சொல்லி இருந்தேன். அது பற்றி நாளை எழுதுகிறேன். இங்கே நான் சுட்டிக்காட்ட விரும்புவது என்னவெனில், இறைவன் ஒருவனே என்று போதித்த முஹம்மதுவே அல்லாஹ்வுக்கு இணைவைத்தார் என்று இஸ்லாமிய நூல்கள் சொல்கின்றன, மற்றும் அல்லாஹ்வுக்கு கீழ்ப்படிதலையும் முஹம்மதுவுக்கு கீழ்ப்படிதலையும் பிரித்துப் பார்க்க முடியாதபடி பல குர்-ஆன் வசனங்கள் சொல்வதன் பொருள் என்ன?
ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து ஆவியானவரால் ஏவப்பட்டு நாற்பது நாள் வனாந்திரத்தில் உபவாசமிருந்து மிகவும் பசியாயிருந்தபோதும் கூட, "அப்பாலே போ சாத்தானே; உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக" என்று சொல்லி பிசாசுக்கு எதிர்த்து நின்றதை நாம் மத்தேயு 4:1-11 ல் வாசிக்கிறோம். மிகவும் சோதனையான நேரத்திலும் கூட, "அப்பா பிதாவே,..ஆகிலும் என் சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது" என்று ஒப்புக் கொடுத்து ஜெபிப்பதை நாம் நற்செய்தி நூலில் வாசிக்கிறோம். அதுமட்டுமல்ல, பிதாவாகிய தேவனுக்கும் அவருக்கும் உள்ள உறவின் நெருக்கத்தையும் அறிகிறோம். அல்லாஹ் பற்றி குர்-ஆன் சொல்வது, சீனாய் மலையில் மோசேக்கு தேவன் கொடுத்த பத்து கற்பனைகளில் முதலாவதான, "என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்கவேண்டாம்" என்பதற்கு ஒத்ததாக இருப்பது போல காணப்பட்டாலும், நாம் குர்-ஆன் கூறும் அல்லாஹ்வின் குணாதிசயங்களை பரிசுத்த வேதாகமத்தின் வெளிச்சத்தில் ஆராய்ந்து பார்க்கும்போது வித்தியாசம் என்ன என்பதை அறிந்து கொள்கிறோம். அதுமாத்திரமல்ல, வேதாகமத்தின்படி முஹம்மது யார் என்பதையும் பற்றி தெரிந்து கொள்கிறோம் (உபாகமம் 18). ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து பிசாசை ஜெயிப்பதற்கு மட்டுமல்ல, நித்திய வாழ்விற்கும் வழிகாட்டினார். " ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசுகிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன்" என்று இயேசு சொல்லி இருக்கிறார் (யோவான் 17:3).
உண்மை இன்னதென்று உணர்ந்து, ஒன்றான மெய் தேவனையும், அவரைச் சென்றடைவதற்கான வழியையும் முஸ்லீம்கள் கண்டு, ஏற்றுக் கொள்ள நாம் ஜெபிப்போம். நம் ஜெபங்கள் ஒரு போதும் வீணாவதில்லை.
- அற்புதராஜ் சாமுவேல்
தேதி: 14th May 2020
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக