முஸ்லீம்கள் "அல்லாஹ் ஒருவனே" என்றும், "அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை" என்று நம்புகின்றனர் என்று பார்த்தோம். அல்லாஹ்வின் ஒருமைத்தன்மையைப் பற்றிய தங்கள் நம்பிக்கையை குறிப்பிட "தவ்ஹீத்" என்ற வார்த்தையை முஸ்லீம்கள் பயன்படுத்துகின்றனர். குர்-ஆனின் ஸூரா 112 இறைவனின் ஒருமைத் தன்மையைப் பற்றி குறிப்பிட்டு பேசுவதால், அதை ஸூரத்துல் தவ்ஹீத் என்றும் முஸ்லீம்கள் குறிப்பிடுவர். ஆயினும், குர்-ஆனில் "தவ்ஹீத்" என்ற வார்த்தை குர்-ஆனில் ஒரு இடத்தில் கூட இல்லை. இது பற்றி முஸ்லீம்களிடம் கேட்டால், "தவ்ஹீத்" என்ற வார்த்தை இல்லாவிட்டாலும், "தவ்ஹீத்" ஐ குறிப்பிடும் கருத்து அல்லது கொள்கை குர்-ஆனில் பல இடங்களில் இருக்கிறது என்று பதில் சொல்வர். தவ்ஹீத் பற்றி பேசும்போது, அல்லாஹ்வை தனி ஒருவன் என்று சொல்லும்போது, அவரை அன்புடையவர் என்று சொல்ல முடியாது, ஏனெனில் அன்பைக் காண்பிக்க அல்லது செயல்படுத்த வேறொரு பொருள் அல்லது நபர் தேவை.
குர்-ஆனில் "அல்லாஹ் ஒருவனே" என்று சொல்லும் இடங்களில் எல்லாம், அல்லாஹ் தொடர்புத்தன்மை மறுக்கப்படுவதை நாம் காணலாம் (குர்-ஆன் 112:3). அன்பைக் குறிக்கும் அரபிச் சொல் habb ஆகும். ஆனால் குர்-ஆனில், அல்லாஹ் மனிதர்களுடன் அன்புறவு கொள்ள விரும்புகிறான் என்பதைக் குறிக்கும் ஒரு வசனமும் கிடையாது. மாறாக, படைக்கப்பட்ட மனிதர்களுடன் அல்லாஹ்வுக்கு அன்புறவு கிடையாது என்றும், அவர்கள் இறைவனால் அன்புசெய்யப்படுபவர்கள் அல்ல என்றே குர்-ஆன் 5:18 கூறுகிறது. குர்-ஆன் கூறும் அல்லாஹ்வின் அன்பு நிபந்தனைக்க்குட்பட்டதாகும். நீங்கள் அல்லாஹ்வை நேசித்தால். கீழ்ப்படிந்தால், அவன் உங்களை நேசிப்பான். நீங்கள் நேசிக்காவிட்டால் அவனும் உங்களை நேசிக்கமாட்டான் என குர்-ஆன் 3:31,32 கூறுகிறது. மனிதர்களை அல்லாஹ்வை நேசிப்பது பற்றி கூறும் குர்-ஆன், அல்லாஹ் மனிதர்களை நேசிப்பது பற்றி கூறுவதில்லை. ஏனெனில் அல்லாஹ் மனிதர்களால் அறியமுடியாத, மனித அறிவுக்கு அப்பாற்பட்டவர் (Transcendence God).
திரித்துவம் பற்றி கேள்வி எழுப்பும் முஸ்லீம்களிடம், திரித்துவம் என்ற வார்த்தை பரிசுத்த வேதாகமத்தில் இல்லை என்றாலும், தேவனுடைய திரித்துவம் எப்படி பல இடங்களில் கூறப்பட்டிருக்கிறது என்பதை நாம் எளிதில் விளக்கிக் கூறமுடியும். அத்துடன், தேவனுக்கும் மனிதனுக்குமான அன்புறவுக்கு அது எப்படி ஆதாரமாக இருக்கிறது என்பதையும் நாம் சொல்ல வேண்டும். திரித்துவத்தை விளக்கும்போது, "தேவன் அன்பாகவே இருக்கிறார்" என்று வேதம் (1 யோவான் 4:16) சொல்வதை நாம் விளங்கிக் கொள்ள முடியும். அந்த அன்பின் தேவன், தம் அன்பினால் மனிதனை தமது சாயலாகப் படைத்து, அவருடைய அன்பை மனிதனும் தேவனுடைய அன்பை அனுபவித்து மகிழ அவர் அருள் செய்திருக்கிறார். மனிதன் தன் பாவத்தினால் அந்த அன்புறவில் இருந்து விழுந்து போனாலும், தேவன் தம் அன்பினால் திரும்பவும் உறவைப் புதுப்பிக்க வழிவகை செய்திருக்கிறார். "தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்" (யோவான் 3:16). "நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார்" (ரோமர் 5:8). பரிசுத்த வேதாகமம் கூறும் தேவனுடைய அன்பு நிபந்தனையற்றது. எல்லோரும் அந்த அன்பில் இணைந்து வாழ தேவன் விரும்புகிறார்.
இயேசுகிறிஸ்துவை ஏற்றுக் கொண்ட முஸ்லீம்களில் பெரும்பாலானோர் தங்கள் நண்பர்கள் மூலமாக இயேசுவை, தேவ அன்பை அறிந்து கொண்டதாக முன்பு சொல்லி இருந்தேன். தேவன் நம்மேல் வைத்த அன்பு பெரிது. நாம் பார்க்கிற முஸ்லீம்களிடம் தேவ அன்பைக் காட்ட தீர்மானிப்போம். ஆயிரம் வார்த்தைகளை விட நீங்கள் காட்டும் அன்பு பெரிய மாற்றங்களை உண்டாக்கும். ஏனெனில் "அன்பே பெரியது."
- அற்புதராஜ் சாமுவேல்
தேதி: 15th May 2020
Source: http://arputhaa.blogspot.com/2020/05/22.html
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக