முஸ்லீம்களிடைய காணப்படுகிற இறையச்சம் மற்றும் பயம் பற்றி முன்பு எழுதி இருந்தேன். இவை இரண்டும் அவர்களுடைய ஆன்மீக வாழ்க்கையிலும், அன்றாட நடவடிக்கைகளிலும் முக்கிய பங்காற்றுகின்றன. ஐந்து வேளை தொழுகை, பலவிதமான துஆக்கள் (ஜெபங்கள்) என பலவிதங்களில் அவர்கள் இறைவனை நோக்கி வேண்டுதல் செய்தாலும், எந்த ஒரு முஸ்லீமும் உறுதியாக இறைவன் எனக்குச் செவிகொடுப்பார் என சொல்லுவதில்லை. மாறாக, "இறைவன் நாடினால்" என்று சொல்வதை நீங்கள் கேட்டிருக்கக் கூடும். முஸ்லீம்கள் செய்கிற வேண்டுதலுக்கு பதில் கிடைக்கும் என்ற நம்பிக்கையை இஸ்லாம் போதிப்பதில்லை. எப்படி தொழுகை செய்ய வேண்டும், சமயத்திற்கேற்ற தூஆக்கள் எவை என போதிக்கும் இஸ்லாம், இறைவனுடன் நேரடி தொடர்புகொள்ள போதிப்பதில்லை. இஸ்லாத்தைப் பொறுத்த வரையில், இறைவனுக்கும் மனிதனுக்கும் இடையேயான உறவு என்பது ஒரு எஜமானனுக்கும் அடிமைக்குமான உறவைப் போன்றதாகும். அங்கே கேள்வியே கேட்காமல் கட்டளைக்குக் கீழ்ப்படிவதே எதிர்பார்க்கப்படுகிறது. அதைத் தான் முஸ்லீம்களும் செய்கிறார்கள். ஏனெனில், எஜமானனை எதிர்த்து கேள்வி கேட்டால் என்ன கிடைக்கும் என்பதை ஒரு அடிமை நன்றாக அறிந்திருப்பான்.
பரிசுத்த வேதாகமம் தேவனுக்குப் பயப்படுகிற பயம் பற்றி போதிக்கிறது. ஆனால், வேதாகமத்தின் படியான தெய்வ பயம் என்பது, இஸ்லாம் கூறும் இறையச்சத்தில் இருந்து முற்றிலும் வேறுபடுகிறது. கிறிஸ்தவர்களிடையே எதிர்பார்க்கப்படுவது "பயபக்தி" (Reverential Fear) ஆகும். "ஜெபத்தைக் கேட்கிறவரே" (சங்கீதம் 65:2) என்று சங்கீதக்காரன் தேவனைப் பார்த்து சொல்கிறார். வேதாகமத்தின் தேவன் நாம் அவரிடம் பண்ணும் ஜெபங்களுக்குப் பதிலளிக்கிறவராக இருக்கிறார். ஏனெனில், ஒரு கிறிஸ்தவனுக்கும் தேவனுக்கும் இடையேயான உறவு தெய்வீக அன்பின் அடிப்படையிலானது, பயத்தின் அடிப்படையிலானது அல்ல. பரிசுத்த வேதாகமம், பயம் நிறைந்த ஒரு வாழ்க்கைக்கு நம்மை அழைக்காமல், "அப்பா பிதாவே" என்று உரிமையுடன் அழைக்கக் கூடிய ஒரு வாழ்க்கைக்கு அழைக்கிறது.
அப்பாவிற்கு தெரியும் பிள்ளையின் தேவைகள், அவர் தரத் தவறுவதில்லை. அது போல, தகப்பனின் இருதயம் அறிந்த பிள்ளைகளும் தகப்பனின் ஆசையை நிறைவேற்றுகின்றனர். நாம் நிறைவேற்றுகின்றோமா!
-அற்புதராஜ் சாமுவேல்
தேதி: 29th April 2020
Source: http://arputhaa.blogspot.com/2020/04/6.html
சகோ. அற்புதராஜ் சாமுவேல் பக்கம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக