முஸ்லீம்கள் அதிகம் பயன்படுத்தும் பயன்படுத்தும் சொற்றொடர்களில் மிக முக்கியமானது (அனைத்தையும் விட) அல்லாஹ் மிகப் பெரியவன் என்ற பொருள் தரும் "அல்லாஹு அக்பர்" ஆகும். ஐந்துவேளைத் தொழுகைகள், மற்றும் எந்த நேரத்திலும், மகிழ்ச்சி, துக்கம் என எல்லாவித உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதற்கும் முஸ்லீம்கள் "அல்லாஹு அக்பர்" என்று கூறுவர். "தக்பீர்" என்பது "அல்லாஹு அக்பர்" என்ற சொற்றொடரைக் குறிக்கும் அரபிச் சொல் ஆகும். குர்-ஆனில் இந்த சொற்றொடர் இல்லை என்றாலும், இதைச் சொல்லாத முஸ்லீமைக் காண்பதரிது. "அல்லாஹ் பெரியவன்" என்று முஸ்லீம்கள் நம்பினாலும், குர்-ஆனை வாசிக்கும்போது, அல்லாஹ் செய்யும் சத்தியங்களின் பட்டியல் அதன் உண்மைத்தன்மை பற்றி பல கேள்விகளை எழுப்புகிறது. உயிருள்ள, உயிரற்ற, அசையும், அசைவற்ற, விண்ணிலுள்ள, மண்ணிலுள்ள, பார்க்கக் கூடிய, மற்றும் பார்க்க முடியாத என பலவற்றின் மீதும் அல்லாஹ் செய்யும் சத்தியங்களைக் குறிப்பிடும் குர்-ஆன் வசனங்கள் அனைத்தையும் பற்றிச் சொல்ல இங்கு இடம் போதாது. ஆகவே, எனக்குத் தெரிந்த வரையில், அவற்றின் இருப்பிடம் மட்டும் இங்கே கொடுத்திருக்கிறேன் (குர்-ஆன்: 37:1-4; 43:2, 3; 44:2, 3; 51:1-4, 7, 8; 52:1-6; 53:1; 68:1; 69:38,39; 70:23, 32-34,70; 75:1-2; 77:1-5; 79:1-5; 81:15-18; 84:16-18; 85:1-3; 86:1,11,12; 89:1-4; 90:3; 91:1-7; 92:1-3; 93:1,2; 95:1-3; 100:1-5; 103;1).
குர்-ஆனில் காணும் சத்தியங்களின் பட்டியலைக் கண்டதும் நினைவுக்கு என்ன? வேதாகமத்தில் ஆணையிடுதல் அல்லது சத்தியம் செய்தல் பற்றி என்ன இருக்கிறது! "என் பேரில்", "என் பரிசுத்தத்தின் பேரில்" "என்னைக் கொண்டு" (ஆதியாகமம் 22:18, சங்கீதம் 89:35; எரேமியா 49:13) என தேவன் தன் பேரிலேயே ஆணையிடுவதைக் காண்கிறோம். ஏன் அவ்வாறு செய்தார் என்று ஆராய்ந்து பார்க்கும்போது, "ஆணையிடும்படி தம்மிலும் பெரியவர் ஒருவருமில்லாதபடியினாலே தமது பேரிலே தானே ஆணையிட்டு" என்று எபிரேயர் 6:13ல் வாசிக்கிறோம். இவ்வேதபகுதியை தொடர்ந்து வாசிக்கும்போது, "தங்களிலும் பெரியவர்பேரில் ஆணையிடுவார்கள்" என்று வாசிக்கிறோம். அப்படியானால், இவ்வசனத்தின் வெளிச்சத்தில் குர்-ஆன் வசனங்களைப் பார்க்கும்போது என்னமாய் தோன்றுகிறது. எதன் மீதும் "சத்தியம்பண்ணவேண்டாம்" என்பதே ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நமக்கு கொடுத்திருக்கும் மலைப்பிரசங்க போதனை. வேதாகமத்தில், இதெல்லாவற்றையும் விட மிகச் சிறப்பானதாக இருப்பது என்னவெனில், இம்மகா பெரிய தேவன், மரித்தோரின் தேவனாயிராமல், ஜீவனுள்ளோரின் தேவனாக இருக்கிறார் என்பதே! (மத்தேயு 22:32) நாம் அவரை உண்மையாய் சேவிக்கும் பட்சத்தில், நம்முடன் அவரை ".........ன் தேவன்" என்று அடையாளப்படுத்திக் கொள்ள தயங்குவதில்லை.
வானாதி வானங்களும் கொள்ளக் கூடாத பரலோகத்தின் தேவன், நம் இருதயத்திலும் வாசம் பண்ண விரும்புகிறார். நாமும் அவரைப் போல பரிசுத்தமானவராக மாற வேண்டும் என்பதே அவருடைய விருப்பம். இந்த அன்பும் பரிசுத்தமும் அனைவரும் பெற வேண்டும் என்பது அவர் விருப்பம். இதை இஸ்லாமியர்களும் அறிந்து கொள்ள நம் ஜெபத்தில் அறைகூவல் விடுப்போம்.
- அற்புதராஜ் சாமுவேல்
தேதி: 17th May 2020
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக