கேள்வி : கர்த்தர் "கெர்ச்சிக்கிறார்" என்றுச் சொல்வது, இறைவனது இலக்கணத்துக்கு அடுக்குமா? பார்க்க: ஏசாயா 42:13 & எரேமியா 25:30
பதில்: கர்த்தர் "சிங்கம் போல கெர்ச்சிக்கிறார்" என்றுச் சொல்வது, இறைவனது இலக்கணத்துக்கு எதிரானது அல்ல. சிங்கம் அதிகாரத்திற்கும், வலிமைக்கும் உதாரணமாக காட்டப்படுகின்றது. சிங்கத்தின் கெர்ச்சிப்பு பலசாலிகளின் வெற்றியை குறிக்கிறது. தம்மை பல இடங்களில் சிங்கத்திற்கு தேவன் ஒப்பிட்டு பேசுகின்றார்.
ஒரு சிங்கம் எப்படி கெர்ச்சித்து காட்டு மிருகங்களை கலங்கடிக்குமோ, அதே போன்று கர்த்தரும் தம் எதிர்களை கலங்கடிக்கிறார் என்பதைத் தான் இதன் மூலம் புரிந்துக்கொள்ள வேண்டும்.
ஏசாயா 42:13
13. கர்த்தர் பராக்கிரமசாலியைப்போல் புறப்பட்டு, யுத்தவீரனைப்போல் வைராக்கியமூண்டு, முழங்கிக் கெர்ச்சித்து, தம்முடைய சத்துருக்களை மேற்கொள்ளுவார்.
எரேமியா 25:30
30. ஆதலால் நீ அவர்களுக்கு விரோதமாக இந்த வார்த்தைகளையெல்லாம் தீர்க்கதரிசனமாக உரைத்து, அவர்களை நோக்கி: கர்த்தர் உயரத்திலிருந்து கெர்ச்சித்து, தமது பரிசுத்த வாசஸ்தலத்திலிருந்து தம்முடைய சத்தத்தைக் காட்டி, தம்முடைய தாபரத்துக்கு விரோதமாய்க் கெர்ச்சிக்கவே கெர்ச்சித்து, ஆலையை மிதிக்கிறவர்கள் ஆர்ப்பரிப்பதுபோல் பூமியினுடைய எல்லாக் குடிகளுக்கும் விரோதமாக ஆர்ப்பரிப்பார் என்று சொல் என்றார்.
யுத்த வீரனைப்போன்று, பராக்கிரசாலியைப்போன்று கர்த்தர் கெர்ச்சித்து தம் வல்லமையை காட்டுகின்றார், தம் எதிர்களை கலங்கடிக்கிறார் என்று மேற்கண்ட வசனங்கள் கூறுகின்றன. இவைகள் இறைவனின் இலக்கணத்திற்கு முரண்பட்டதன்று, இவைகள் இறைவனுக்கு ஏற்ற குணமாகும். மக்கள் மீது தாயைப்போல அன்பு செலுத்தவும், அதே நேரத்தில் தவறான வழியில் நடக்கின்ற மக்களை தன் நீதியான வழியில் கொண்டுவர சிங்கத்தைப்போன்று கெர்ச்சித்து, அவர்களை தண்டிக்க அவருக்கு உரிமையுண்டல்லவா! நம் தகப்பனும் தாயும், அண்ணன் அக்காளும் நம் மீது அன்பு செலுத்தியது போன்று, நாம் தவறு செய்யும் போது, 'சிங்கத்தைப்போன்று கெர்ச்சித்து, சத்தம் போட்டு சில வேளைகளை நம்மை அடித்து திருத்தியிருக்கிறார்கள்'.
தேவன் பல இடங்களில் தம்மை தந்தைக்கு, தாய்க்கு, நண்பனுக்கு, எஜமானனுக்கு என்று பலவாறு ஒப்பிடுகின்றார், இதே போன்று, எதிர்களோடு சண்டையிடுவதை காட்டும் போது தம்மை சிங்கத்தின் கெர்ச்சிப்புக்கு ஒப்பிடுகின்றார்.
யோவேல் 3:16
கர்த்தர் சீயோனிலிருந்து கெர்ச்சித்து, எருசலேமிலிருந்து சத்தமிடுவார்; வானமும் பூமியும் அதிரும்; ஆனாலும் கர்த்தர் தமது ஜனத்துக்கு அடைக்கலமும் இஸ்ரவேல் புத்திரருக்கு அரணான கோட்டையுமாயிருப்பார்.
ஆமோஸ் 1:2
கர்த்தர் சீயோனிலிருந்து கெர்ச்சித்து, எருசலேமிலிருந்து சத்தமிடுவார்; அதினால் மேய்ப்பரின் தாபரங்கள் துக்கங்கொண்டாடும்; கர்மேலின் கொடுமுடியும் காய்ந்துபோகும்.
சிங்கத்தின் கெர்ச்சிப்பு தேவனுக்கு மட்டுமல்ல, சாதாரண ராஜாவிற்கும், சில இடங்களில் பலசாலியான தீயவர்களுக்கும் ஒப்பிட்டு பேசப்பட்டுள்ளது.
நீதிமொழிகள் 19:12
ராஜாவின் கோபம் சிங்கத்தின் கெர்ச்சிப்புக்குச் சமானம்; அவனுடைய தயை புல்லின்மேல் பெய்யும் பனிபோலிருக்கும்.
நீதிமொழிகள் 20:2
ராஜாவின் உறுக்குதல் சிங்கத்தின் கெர்ச்சிப்புக்குச் சமானம்; அவனைக் கோபப்படுத்துகிறவன் தன் பிராணனுக்கே துரோகஞ்செய்கிறான்.
I பேதுரு 5:8
தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள், விழித்திருங்கள்; ஏனெனில், உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித்திரிகிறான்.
எனவே, ஏசாயா 42:13 & எரேமியா 25:30 வசனங்களில் "கர்த்தர் கெர்ச்சிக்கிறார்" என்ற வார்த்தைகள் வருவது இறைவனது இலக்கணத்திற்கு இழுக்கு அல்ல என்பது இதன் மூலம் நாம் அறிந்துக்கொள்ளமுடியும்.
Source: https://www.answering-islam.org/tamil/authors/umar/ramalan/2020ramalan/2020-ramalan-19.html
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக