Answering PJ: பீஜே அவர்களின் "இது தான் பைபிள்" புத்தகத்திற்கு மறுப்பு – 2
(அப்போஸ்தலர்கள் இயேசுவிற்கு பிறகு வந்தவர்களா?)
பீ ஜைனுல் ஆபிதீன் அவர்கள் எழுதிய "இது தான் பைபிள்" புத்தகத்திற்கு நாம் கொடுத்த முதல் மறுப்பை இந்த தொடுப்பில் படிக்கலாம்: Answering PJ: பீஜே அவர்களின் "இது தான் பைபிள்" புத்தகத்திற்கு மறுப்பு - 1 முதல் பாகத்தில் பீஜே அவர்கள் "முன்னுரை"யில் எழுதிய விவரங்களுக்கு (பக்கம் 2 மற்றும் 3) நாம் பதிலைக் கண்டோம்.
இந்த தற்போதைய இரண்டாம் மறுப்பில், பிஜே அவர்கள் தம்முடைய புத்தகத்தில் "பைபிள் ஓர் அறிமுகம்" என்ற தலைப்பின் கீழ் எழுதிய விவரங்களுக்கு (பக்கம் 4 மற்றும் 5) நம் பதிலைக் காண்போம்.
பீஜே அவர்கள் எழுதியது :
பைபிள் ஓர் அறிமுகம்
...
புதிய ஏற்பாடு என்பது இயேசுவுக்குப் பிறகு வந்தவர்கள் பரிசுத்த ஆவியினால் உந்தப்பட்டு எழுதியவைகளாகும். இப்படிப் பலர் எழுதியவைகளின் தொகுப்பே புதிய் ஏற்பாடு. உதாரணமாக மத்தேயு என்றொரு சுவிசேஷம். இது மத்தேயு என்பவரால் எழுதப்பட்டது. மாற்கு என்ற சுவிசேஷம் மாற்கு என்பவரால் எழுதப்பட்டது" (பக்கம் 4, 5)
கிறிஸ்தவன் எழுதியது :
"பைபிள் ஓர் அறிமுகம்" என்ற தலைப்பின் கீழ் பீஜே அவர்கள், முதலாவது பழைய ஏற்பாடு பற்றிய சிறு குறிப்பை எழுதியுள்ளார். அதன் பிறகு புதிய ஏற்பாடு பற்றி எழுதியுள்ளார். அவர் புதிய ஏற்பாடு பற்றிய எழுதியவைகளில் சில குறைபாடுகள் உள்ளன. அவைகளை நாம் காண்போம்.
பீஜே அவர்கள் "தமது சுயநம்பிக்கையாகிய புதிய ஏற்பாடு நம்பத்தகுந்தது அல்ல என்பதை நிலை நாட்ட விரும்பி " அனேக விவரங்களை மறைத்துவிடுகின்றார். முதலாவதாக அவர் "புதிய ஏற்பாடு என்பது இயேசுவுக்குப் பிறகு வந்தவர்கள் பரிசுத்த ஆவியினால் உந்தப்பட்டு எழுதியவைகளாகும்" என்று எழுதியுள்ளார். நான் பீஜே அவர்களுக்கு கூறிக்கொள்வது என்னவென்றால்,
இயேசுவோடு இருந்து
அவரைக் கண்டு,
அவரிடம் பேசி,
அவரை தொட்டுப்பார்த்து
அவரது அற்புதங்களை தங்கள் கண்களால் கண்ட சீடர்களை பரிசுத்த ஆவியானவர் பயன்படுத்தி புதிய ஏற்பாட்டை எழுதியுள்ளார்.
இயேசுவின் நேரடி சீடர்கள் எழுதியவைகளும், இந்த நேரடி சீடர்களுக்கு சீடர்களாக இருந்தவர்கள் எழுதியவைகளும் புதிய ஏற்பாட்டில் உண்டு. இயேசுவோடு வாழ்ந்த சீடர்களின் பிரசங்கங்களை கேட்டு, விவரங்களை சேகரித்து எழுதியவைகளும் புதிய ஏற்பாட்டில் உண்டு. பீஜே அவர்களே, நீங்கள் சொல்வதைப் பார்த்தால் இயேசுவை கண்களால் காணாதவர்களால் மட்டுமே புதிய ஏற்பாடு எழுதப்பட்டதாக மறைமுகமாக கூறுகிறீர்கள். இது தவறு என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
மத்தேயு:
முதலாவதாக, மத்தேயு என்பவர் இயேசுவின் 12 சீடர்களில் இவரும் ஒருவர். இவர் இயேசுவோடு 3 ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்தவர், கூடவே இருந்தவர், இயேசுவின் அற்புதங்களை கண்டவர், இயேசுவின் போதனைகளை கேட்டவர். ஆக, மத்தேயு என்பவர் இயேசுவிற்கு பிறகு வந்தவர் அல்ல, அவர் இயேசுவோடு வாழ்ந்தவர் என்பதை இஸ்லாமிய அறிஞர் பீ ஜைனுல் ஆபீதீன் அவர்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன்.
மாற்கு:
இரண்டாவதாக, மாற்கு என்பவர் இயேசுவின் காலத்திற்கு பிறகு பல நூற்றாண்டுகளுக்கு பின்பாக வந்தவர் அல்ல. இவர் பேதுருவின் உடன் ஊழியக்காரர் அல்லது தோழர். இயேசுவின் சீடராகிய பேதுருவோடும்,பவுலோடும் ஊழியம் செய்தவர். பேதுருவிடமிருந்து இவர் பெற்றுக்கொண்ட அறிவை, விவரங்களை சேகரித்து சுவிசேஷத்தை எழுதினார். இந்த மாற்கு சுவிசேஷத்திற்கு அடிப்படை பேதுரு ஆவார், இந்த பேதுரு, இயேசுவின் 12 சீடர்களில் முக்கியமானவர் மற்றும் இயேசுவின் நெருங்கிய சீடர்களில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
லூக்கா:
மூன்றாவதாக, லூக்கா என்பவர் ஒரு மருத்துவர், இவர் பேதுரு மற்றும் பவுலையும் அறிந்தவர். பவுலோடு பல ஆண்டுகள் ஊழியம் செய்தவர், மாற்கும் லூக்காவும் ஒருமித்து பவுலோடு ஊழியம் செய்துள்ளார்கள். இவர் அனேக விவரங்களை சேகரித்து சுவிசேஷத்தை எழுதியுள்ளார். இந்த லூக்கா இயேசுவின் அனேக சீடர்களை கண்டவர் அவர்களிடம் உரையாடி அனேக விவரங்களை சேகரித்தவர். லூக்கா என்பவர் ஏதோ கண்மூடித்தனமாக எழுதவில்லை, அனேக சாட்சிகளை சந்தித்து, ஆய்வு செய்து எழுதியதாக லூக்கா முதல் அத்தியாயத்தின் முதல் சில வசனங்களில் கூறுகிறார்:
மகா கனம்பொருந்திய தேயோப்பிலுவே, நாங்கள் முழுநிச்சயமாய் நம்புகிற சங்கதிகளை,
ஆரம்பமுதல் கண்ணாரக்கண்டு வசனத்தைப் போதித்தவர்கள் எங்களுக்கு ஒப்புவித்தபடியே அவைகளைக் குறித்துச் சரித்திரம் எழுத அநேகம்பேர் ஏற்பட்டபடியினால்,
ஆதிமுதல் எல்லாவற்றையும் திட்டமாய் விசாரித்தறிந்த நானும் உமக்கு உபதேசிக்கப்பட்ட விசேஷங்களின் நிச்சயத்தை நீர் அறியவேண்டுமென்று,
அவைகளை ஒழுங்காய் உமக்கு எழுதுவது எனக்கு நலமாய்த் தோன்றிற்று. (லூக்கா 1:1-4)
மேற்கண்ட நான்கு வசனங்களில் லூக்கா "ஆரம்பமுதல் கண்ணாரக்கண்டு வசனத்தைப் போதித்தவர்கள் எங்களுக்கு ஒப்புவித்தபடியே" என்று கூறுகிறார். அதாவது இந்த வசனத்தில் அவர் குறிப்பிடுவது, இயேசுவோடு இருந்த சீடர்கள் மற்றும் அவரது தாய் மற்றும் அவரிடமிருந்து அற்புதங்களை பெற்றவர்களைத் தான். மட்டுமல்ல, தாம் சேகரித்த விவரங்களை அவரும் "ஆதிமுதல் எல்லாவற்றையும் திட்டமாய் விசாரித்தறிந்த நானும்" என்று எழுதுகிறார், அதாவது திட்டமாய் விசாரித்து அறிந்துக்கொண்டு தான் இவைகளை எழுதுகிறேன் என்று கூறுகிறார். எனவே, அருமை பீஜே அவர்களே இயேசுவை கண்ணார கண்டு அவரோடு இருந்த சீடர்கள் மற்றும் மற்றவர்களின் நேரடி சாட்சிகளை விசாரித்து தான் லூக்கா எழுதினார் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
யோவான்:
நான்காவதாக, யோவான் என்ற சீடர் எழுதிய நற்செய்தி நூல். இவர் இயேசுவிற்கு மிகவும் பிரியாமான சீடர், மற்றும் முக்கியமான சீடர்களில் ஒருவர். இவர் இயேசுவின் மார்ப்பில் சாய்ந்துக்கொண்டு இருக்கும் அளவிற்கு இயேசுவிற்கு அன்பான சீடராக இருந்தார். இவர் ஒரு நற்செய்தி நூலையும், மூன்று கடிதங்களையும் எழுதியுள்ளார். மட்டுமல்ல, புதிய ஏற்பாட்டின் முத்திரையாகிய "வெளிப்படுத்தின விசேஷம்" என்ற கடைசி புத்தகத்தை எழுதும் படி இயேசுவிடமிருந்து வெளிப்ப்பாட்டைப் பெற்றவர்.
இந்த பிரியமான சீடன், இயேசுப் பற்றி கூற தனக்கு இருக்கும் உரிமை மற்றும் அதிகாரத்தை சாட்சியாக கூறும்போது கீழ்கண்ட விதமாக கூறுகிறார்:
ஆதிமுதல் இருந்ததும், நாங்கள் கேட்டதும், எங்கள் கண்களினாலே கண்டதும், நாங்கள் நோக்கிப்பார்த்ததும், எங்கள் கைகளினாலே தொட்டதுமாயிருக்கிற ஜீவவார்த்தையைக் குறித்து உங்களுக்கு அறிவிக்கிறோம் (1 யோவான் 1:1)
இந்த சீடரின் மேற்கண்ட வார்த்தைகளை சிறிது கவனித்துப் பாருங்கள். "ஆதி முதல் இருந்ததும்" என்று அவர் சொல்வதிலிருந்து, இயேசுவின் தெய்வீகத்தன்மையை குறிப்பிடுகிறார். மேலும், " நாங்கள் கேட்டதும், எங்கள் கண்களினாலே கண்டதும், நாங்கள் நோக்கிப்பார்த்ததும், எங்கள் கைகளினாலே தொட்டதுமாயிருக்கிற" என்று சொல்வதிலிருந்து தன்னுடைய ஐம்புலங்களினால் இயேசுவை அறிந்ததாக கூறுகிறார். அதாவது அவரை தொட்டு பார்த்துஇருக்கிறோம், அவரின் பேச்சை கேட்டு இருக்கிறோம், அவரை கண்டு இருக்கிறோம் என்றுச் சொல்கிறார். ஆகையால், இயேசுவின் ஊழிய வாழ்க்கையை மிகவும் அருகில் இருந்து கவனித்த சீடர்களின் சாட்சியை நாம் பைபிளில் காணமுடியும்.
ஒரு முக்கியமான விவரம் என்னவென்றால், கிட்டத்தட்ட முதல் நூற்றாண்டின் கடைசிவரை இந்த சீடர் உயிர் வாழ்ந்துள்ளார். மற்ற சீடர்கள் கொல்லப்பட்டு மரித்தார்கள். இந்த சீடரின் காலத்திற்கு முன்பே புதிய ஏற்பாட்டின் எல்லா நற்செய்தி நூல்களும், இதர கடிதங்களும் எழுதி முடித்தாகிவிட்டது. கடைசியாக, இவருக்கு "வெளிப்படுத்தின விசேஷம்" என்ற உலகத்தின் கடைசி கால நிகழ்வுகள் வெளிப்படுத்தப்பட்டது. ஆக, இந்த சீடர் தன் காலத்தில் எழுதப்பட்ட நற்செய்தி நூல்கள், கடிதங்கள் போன்ற எல்லா புதிய ஏற்பாட்டு நூல்களையும் காண வாய்ப்பு உள்ளது. மட்டுமல்ல், எருசலேமின் தலைமை சபையின் தலைவர்களில் பேதுருவோடு சேர்ந்து இவரும் ஒருவராக செயல்பட்டுள்ளார். ஆக, புதிய ஏற்பாட்டு நுல்களின் நம்பகத்தன்மையை சோதிக்கும் வாய்ப்பு இவருக்கு கிட்டி இருக்கும்.
பேதுரு:
மேலும் இயேசு தன் சபைக்கு தலைவராக நியமித்த சீடர்களில் முக்கியமானவராகிய இருந்த "பேதுரு" என்ற சீடர், மாற்கு சுவிசேஷம் எழுதிய மாற்கு என்பவரின் ஆன்மீக குருவாக இருந்தார். மற்றும், இரண்டு முக்கியமான கடிதங்களை ஆரம்பகால சபைகளுக்கு எழுதியுள்ளார் (1 பேதுரு, 2 பேதுரு). இயேசுவின் தெய்வீகத்தன்மைப் பற்றி பேச தனக்கு அதிகாரம் உள்ளது, மற்றும் அதற்கு தாம் எப்படி தகுதியுள்ளவர் என்பதை கீழ்கண்ட வரிகளில் கூறுகிறார்:
நாங்கள் தந்திரமான கட்டுக்கதைகளைப் பின்பற்றினவர்களாக அல்ல, அவருடைய மகத்துவத்தைக் கண்ணாரக் கண்டவர்களாகவே நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் வல்லமையையும் வருகையையும் உங்களுக்கு அறிவித்தோம். இவர் என்னுடைய நேசகுமாரன், இவரிடத்தில் பிரியமாயிருக்கிறேன் என்று சொல்லுகிற சத்தம் உன்னதமான மகிமையிலிருந்து அவருக்கு உண்டாகி, பிதாவாகிய தேவனால் அவர் கனத்தையும் மகிமையையும் பெற்றபோது, அவரோடேகூட நாங்கள் பரிசுத்த பருவதத்திலிருக்கையில், வானத்திலிருந்து பிறந்த அந்தச் சத்தத்தைக்கேட்டோம் (2 பேதுரு 1:16-18)
2008ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பீஜே அவர்களின் இயேசு இறைமகனா என்ற புத்தகத்திற்கு, பேதுரு பற்றி பீஜே அவர்கள் கொடுத்த விமர்சனத்திற்கு நான் மறுப்பை எழுதினேன், அதனை இங்கு படிக்கவும்: Answering PJ: இயேசு நியமித்த நேர்த்திமிகு தலைவர் "பேதுரு". எனக்கு தெரிந்தவரை இதுவரையில் பிஜே அவர்கள் இந்த மறுப்பிற்கு பதில் அளிக்கவில்லை.
யாக்கோபு:
மேலும் இயேசுவின் சகோதரர் "யாக்கோபு" என்பவரும் ஒரு கடிதத்தை எழுதியுள்ளார். இவர் ஆரம்ப காலத்தில் இயேசுவின் மீது நம்பிக்கை வைக்கவில்லை, இயேசு மரித்து உயிரோடு எழுந்த பிறகு இவரும் நம்பிக்கையாளர் ஆனார், பிறகு எருசலேம் சபையின் முக்கிய தலைவர்களாகிய பேதுரு யோவான் போன்றவர்களுடன் சேர்ந்து இவரும் ஊழியம் செய்தவர், இவர்கள் அனைவரும் ஆதிகால திருச்சபையின் "தூண்கள்" என்று எண்ணப்பட்டனர் (கலாத்தியர் 2:9). இந்த யாக்கோபும் இயேசுவைக் கண்டவர் தான் என்பதை பீஜே அவர்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன்.
பவுல்:
இன்னும் நான் பவுலைக் குறித்து சொல்லவேண்டியதில்லை, இயேசுவே சவுலை சந்தித்தார், கிறிஸ்தவ சபையின் முதல் எதிரியை முதல் நண்பனாக இயேசு மாற்றிவிட்டார்.
"இயேசுவிற்கு பிறகு வந்தவர்களால்" என்ற வரிகளின் மூலமாக, புதிய ஏற்பாட்டில் இயேசுவிற்கு நெருங்கியவர்களுக்கு பங்கில்லை, அவரின் சீடர்களுக்கு பங்கில்லை, அவரை கண்டு பேசி அவரோடு வாழ்ந்தவருக்கு பங்கில்லை என்ற தோரணையில் நீங்கள் எழுத ஆரம்பித்தால் அதனை கிறிஸ்தவர்கள் தெரிந்துக்கொள்ளாமல் போய்விடுவார்கள் என்று நினைத்தீர்களா பீஜே அவர்களே! உங்கள் எண்ணங்களை மாற்றிக் கொள்ளுங்கள்.
முடிவுரை: முஹம்மதுவின் மனைவியாகிய ஆயிஷா அவர்கள், மற்றும் அவரின் தோழர்களாகிய அபூ பக்கர், உமர், உஸ்மான், அலி போன்றவர்களை நீங்கள் எந்த காலத்திற்கு சம்மந்தப்பட்டவர்கள் என்று கருதுவீர்கள் பீஜே அவர்களே? இவர்களை நாம் "முஹம்மதுவிற்கு பின்பு வந்தவர்கள்" என்ற பட்டியலில் சேர்க்கலாமா? அல்லது முஹம்மதுவை கண்டவர்கள், அவரின் வார்த்தைகளை கேட்டவர்கள், அவரை தொட்டுப்பார்த்தவர்கள் என்ற பட்டியலில் சேர்க்கலாமா? இவர்கள் "முஹம்மதுவிற்கு பின்பு வந்தவர்கள்" என்று கூறினால், இப்படி கூறுபவர்களை என்னவென்று நீங்கள் அழைப்பீர்கள்? அதே போலத்தான், இயேசுவை கண்டும், அவரது பேச்சுக்களை கேட்டும், அவரை தொட்டுப்பார்த்தும், அவரோடு பேசியும் இருந்த சீடர்களை "இயேசுவிற்கு பிறகு வந்தவர்கள்" என்றுச் சொல்வது அறியாமையாகும். அந்த அறியாமையில் இருக்கும் உங்களுக்கு தெளிவை உண்டாக்கவே இந்த மறுப்புக்கள் எழுதப்படுகின்றன. ஒருவேளை இது உங்கள் அறியாமையாக இருக்காது, வேண்டுமென்றே குற்றம் பிடிக்கவேண்டும் என்பதற்காக இட்டுக்கட்டும் உங்கள் வஞ்சகமாக இருக்கலாம். உங்கள் நிலை எதுவாக இருந்தாலும் சரி, அதற்கு சரியான மறுப்புக்களை அளிப்பது கிறிஸ்தவர்களின் கடமை.
பீஜே அவர்களுக்கு ஒரு சவால்: அல்லாஹ்வின் வேதம் என்று நீங்கள் கருதும் குர்ஆனை மட்டும் வைத்துக்கொண்டு, முஹம்மதுவின் தோழர்கள் மற்றும் அவரை அறிந்த இதர மக்கள் அறிவித்த ஹதீஸ்கள், சரித்திர நூல்கள் போன்றவற்றை அப்புறப்படுத்தி "இஸ்லாம் என்றால் என்ன? அதன் தூண்கள் என்ன? ஒரு நாளுக்கு எத்தனை முறை தொழவேண்டும்? இன்னும் இதர இஸ்லாமிய கடமைகள், சட்டங்கள்" போன்வற்றை உங்களால் விளக்கமுடியுமா?
ஒரு சராசரி மனிதன் இஸ்லாமியனாக மாறி ஒரு முஸ்லிமாக வாழுவதற்கு தேவையான விவரங்கள் குர்ஆனில் எத்தனை சதவிகிதம் உள்ளது என்று உங்களால் சொல்லமுடியுமா?
குர்ஆனை மட்டும் வைத்துக்கொண்டு இஸ்லாமை நாம் 50 சதவிகிதமாவது புரிந்துக்கொள்ளமுடியுமா? இப்படிப்பட்ட ஒரு அறைகுறை வேதமாகிய குர்ஆனை வைத்துக்கொண்டு, நீங்கள் மற்றவர்களின் வேதத்தைப் பற்றி பேச வந்துள்ளீர்கள். அந்த அறைகுறை வேதத்தையும், அரபியிலேயே படித்தால் நான் நன்மை என்ற மூடநம்பிக்கையையும் மக்களின் மனதில் பதிய வைத்துக்கொண்டு வருகிறீர்கள்.
நான் ஏன் இப்படி கேள்விகளை உங்கள் முன்வைக்கிறேன் என்றால், ஹதீஸ்கள், சீராக்கள், சரித்திர நூல்கள் இஸ்லாமுக்கு இல்லையென்றால், இஸ்லாம் ஒரு சூன்யம், குர்ஆன் ஒரு மரித்த சடலத்திற்கு சமம், ஹதீஸ்கள் மற்றும் இதர நூல்கள் அந்த மரித்த சடலத்திற்கு உயிர் போன்றது என்பதை விளக்கவே கேள்விகளை கேட்கிறேன்.
எனவே, முஸ்லிம்களாகிய நீங்கள் சொல்கிறீர்கள் என்பதினால், இயேசுவின் நேரடி சீடர்கள் சொல்வதை கிறிஸ்தவர்கள் விட்டுவிடமுடியாது? கிறிஸ்தவ ஆரம்ப கால சரித்திரத்தை மறுக்கமுடியாது. ஒரு கள்ளத் தீர்க்கதரிசியாகிய முஹம்மது சொல்வதைக் கேட்டு வாழும் இஸ்லாமியர்களாகிய உங்களைப் போன்றவர்கள் சொல்வதைக் கேட்டு, இயேசுவின் அப்போஸ்தலர்கள் சொல்வதை கிறிஸ்தவர்கள் விட்டுவிடமுடியாது.
தமிழ் இஸ்லாமிய அறிஞர்களின் வஞ்சகமான வார்த்தைகளையும், பொய்களையும் தமிழ் கிறிஸ்தவர்கள் கவனித்துக்கொண்டு இருக்கிறார்கள், அவைகளை ஆராய்ந்துக்கொண்டு இருக்கிறார்கள். இனி உங்கள் வஞ்சகத்தில் யாரும் விழ தயாராக இல்லை.
"பைபிள் ஓர் அறிமுகம்" என்ற தலைப்பில் நீங்கள் எழுதிய இதர வரிகளுக்கு அடுத்த மறுப்பில் பதிலைக் காண்போம்.