முன்னுரை:
குர்-ஆன் பற்றி முஸ்லிம்கள் பெருமையாக பேசுவார்கள். குர்-ஆன் மாறாதது, குர்-ஆன் அல்லாஹ்வின் வார்த்தை, அதை அல்லாஹ் பாதுகாப்பான், முஹம்மது ஓதிய அதே குர்-ஆன் தான் நாம் இன்று பயன்படுத்துகிறோம். நம்மிடம் உள்ள குர்-ஆனுக்கும், முஹம்மதுவிற்கு இறங்கிய குர்-ஆனுக்கும் இடையே ஒரு வசனம் அல்லது ஒரு எழுத்து கூட வித்தியாசம் இருக்காது என்று காலங்காலமாக சொல்லிக்கொண்டு வருகிறார்கள். ஆனால், பொய் கலந்த முஸ்லிம்களின் வெறும் நம்பிக்கைகள் மட்டுமே, இவைகளில் உண்மையில்லை.
குர்-ஆனின் சரித்திரத்தை ஆய்வு செய்யும் எந்த ஒரு மனிதனுக்கும், முஸ்லிம்களின் மேற்கண்ட நம்பிக்கைகள் பொய்யானவை என்று நன்றாகத் தெரியும். இந்த ஆய்வை ஒரு முஸ்லிம் செய்தாலும், அவனும் இதே முடிவைத் தான் எடுப்பான்.
குர்-ஆன் முழுமையானதல்ல என்று பல ஆண்டுகளாக கிறிஸ்தவர்களும், இதர மக்களும் இணையத்தில் தங்கள் ஆய்வின் முடிவை எழுதிக்கொண்டு இருக்கிறார்கள்.
1) பீஜே போன்ற அறிஞர்களின் மாய்மாலப் பேச்சுக்கள்
பி. ஜைனுல் ஆபீதின் போன்ற முஸ்லிம் அறிஞர்களுக்கு, இந்த விஷயம் தெரிந்திருந்தாலும், முஸ்லிமல்லாதவர்களுக்காக பேசும் பேச்சுக்களில், அதாவது மேடை பேச்சுக்களில், விவாதங்களில் 'குர்-ஆனைப் பற்றி ஆஹா ஓஹோ' என்று பொய்களை அள்ளி அள்ளி வீசுவார்கள். ஆனால், இஸ்லாமுக்கு ஒரு தனித்தன்மை உள்ளது. இஸ்லாமின் இறையியல் விஷயங்கள் பற்றி 'முஸ்லிம்களே தங்களுக்குள் சண்டை போட்டுக்கொள்வது' முஸ்லிம் அறிஞர்கள் இடையே ஒரு தகுதியாக மாறிவிட்டது.
நம் தமிழ் நாட்டில் ஒருவர் '(பெரிய) முஸ்லிம் அறிஞர்' என்று பெயர் பெறவேண்டுமென்றால், அதற்கான அடிப்படை தகுதி, "அவர் இன்னொரு முஸ்லிம் அறிஞரின் கருத்துக்களை மறுத்து மேடைகளில் பேசவேண்டும்". அப்போது தான் நம் தமிழ் முஸ்லிம்கள்,"அவரை முஸ்லிம் அறிஞர்" என்று ஏற்றுக்கொள்வார்கள்.
இந்த நிலையில் பார்க்கும் போது, பீஜே அவர்களின் பேச்சுக்களை கூர்ந்து கவனித்தால், முஸ்லிமல்லாத மக்கள் மேடைகளில் ஒரு பேச்சு, அவர்களுக்குள் விவாதித்துக்கொள்ளும் போது இன்னொரு பேச்சு. ஒரு மேடையில் "உலகில் எங்கு போனாலும் ஒரே குர்-ஆன் தான் என்று வீர முழக்கவிடுவார்", இன்னொரு மேடையில், குர்-ஆனில் பல மூலங்கள் உண்டு என்று ஒப்புக்கொள்வார். நம் தமிழ் கிறிஸ்தவர்கள் கடந்த சில ஆண்டுகளாக தங்கள் சாப்பாட்டில் கொஞ்சம் அதிகமாகவே உப்பு போட்டு சாப்பிட ஆரம்பித்துள்ளார்கள் என்று தெரிகிறது[என்னையும் சேர்த்து தான்]. எனவே, இப்படிப்பட்ட முஸ்லிம்களின் பேச்சுக்களில் உள்ள வித்தியாசங்களை கச்சிதமாக படம் பிடித்து பதித்துவிடுகிறார்கள். இந்த வகையில் தமிழ் கிறிஸ்தவர்கள் பீஜே அவர்களின் இரண்டு நிமிட பேச்சை வெட்டி எடுத்து பதித்துள்ளார்கள், அந்த விடியோ தான் இக்கட்டுரையின் கருப்பொருள்.
2) பீஜே அவர்களின் வாக்கு மூலம் - இப்னு மஸ்வூத் குர்ஆனில் 112 அத்தியாயங்களே இருந்தன
இந்த வீடியோவை பதித்த சகோதரருக்கு என் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
யூடியூப் மூலம்: https://www.youtube.com/watch?v=buoNMeO5jv0
தலைப்பு: இப்னு மஸ்வூத் குர்ஆனில் 112 அத்தியாயங்களே இருந்தன - பீஜே
வீடியோ: 2:09 நிமிடங்கள்.
இவ்வீடியோவில் பீஜே அவர்கள் பேசியவைகளின் எழுத்துவடிவம் (பேச்சு வழக்கு வார்த்தைகளை மொழியாக்கம் செய்தது, படிப்பதற்கு சிறிது சிரமமாக இருக்கும், எனவே, பிஜே அவர்களின் இரண்டு நிமிட வீடியோவையும் பார்த்துக்கொள்ளுங்கள்).
குர்-ஆனில் இல்லாத, ஹதீஸில் இல்லாத ஒரு விஷயத்தில், சஹாபாக்கள் அத்தனைப் பேரும் ஒருமித்த கருத்துக்கு வந்தார்கள் என்றுச் சொன்னால், அதுக்கு ஒரு உதாரணம் காட்ட இயலாது. காட்டராங்கன்னா, அந்த குர்-ஆனை "அவங்க தானே தொகுத்தாங்கன்னு காட்டுவாங்க" அதுவே தவறு. என்ன தவறு? குர்-ஆன் "இஜ்மா" வாக ஏற்றுக் கொள்ளப்படவே கிடையாது. இப்போ, இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் குர்-ஆனை எழுதக்கூடிய எழுத்தாளர்களில் அவரும் ஒரு ஆள். அவருடைய குர்-ஆனில் 112 ஸூரா தான். இப்னு மஸ்வூத் ரலி தொகுத்த குர்-ஆனில் எத்தனை ஸூரா? 114 ஸூரா கிடையாது. கடைசி இரண்டு ஸூரா குர்-ஆனே கிடையாது என்று சொல்லிவிட்டார் அவர். கடைசி வரைக்கும், கடைசி வரைக்கும் என்ன பண்ணிட்டாரு? குல் அஊது பி ரப்பில் ஃபலக் வந்து குர்-ஆன் கிடையாது, குல் அஊது பி ரப்பின்னாஸ் குர்-ஆன் கிடையாது. குல் ஹுவல்லாஹு அஹத்வோடு முடிந்துவிட்டது குர்-ஆன் என்று சொல்லிவிடுவார். அப்ப, அவருடைய குர்-ஆன், குர்-ஆனில் எல்லாரும் ஏகமனதாக வந்தார்கள் என்றுச் சொன்னால், ஏக மனதாக வரவில்லையே. ஏகமனதாக வரவில்லை, அத நல்லா விளங்கிக்கொள்ளுங்கள்.
அதே மாதிரி வந்து, அலி (ரலி) அவருடைய குர்-ஆனை எடுத்துப் பார்த்தீங்க என்றுச் சொன்னால், இப்ப நீங்க வெச்சிக்கிட்டு இருக்கீங்களே, இந்த ஆர்டரில் இருக்காது, அவருடைய குர்-ஆனில் எப்படி இருக்கும்? அவர் முதல் ஸூரா இக்ரா தான் போட்டு வெச்சிருப்பாரு. குர்-ஆன் எந்த வரிசையில் வந்ததோ, அந்த வரிசையில் அவர் தொகுத்து இருப்பாரு. நம்ம குர்-ஆனில், நம்மலே விளங்கி வெச்சிருக்கிறோம், ஃபர்ஸ்ட் குர்-ஆனில் எது எறங்கிடுச்சி? இக்ரா ஸூரா எறங்கிடுச்சி என்று வெச்சிருக்கிறோம். அதை கொண்டு போய் 96வதில் வெச்சிருக்கிறோம். இக்ரா தான் முதல்லெ எறங்கிச்சுன்னா அது தானே மொதல்ல இருக்கணும். ஆனால், நம்ம குர்-ஆன் எங்கே இருக்கு அந்த இக்ரா ஸூரா? 96வது ஸூராவாக கொண்டு போய் வெச்சிருக்கிறோம், ஃபர்ஸ்ட் எறங்கின ஸூராவே, இல்லையா?! அப்படியெல்லாம் இருக்கும் போது, சஹாபாக்கள் கிட்டேயே 40க்கு மேற்பட்ட இது இருந்தது, குர்-ஆனுடைய விஷயங்கல்லே, மாறுபட்ட கருத்து வேறுபாடுகள் இருந்தது.
உஸ்மான் (ரலி) அவர்கள் வந்து ஆட்சியிலே இருந்ததினாலே, அவங்க சட்டம் போட்டு, சில விஷயங்களே செஞ்சாங்க, அதை மக்கள் கிட்டே கொண்டு போனாங்க, கவர்மெண்ட் இருந்ததுனாலே. அதுனாலே நாம் என்ன விளங்கிக் கொள்ளக்கூடாது? சஹாபாக்கள் எல்லாம் குர்-ஆன் விஷயத்தில், ஒண்ணா, அப்படியெல்லாம் நாம் சொல்லுவது சரி கிடையாது, விளங்குதா! இஜ்மா என்பது எதிலேயும் ஏற்பட்டது கிடையாது. எந்த ஒரு விஷயத்துலேயுமே! இஜ்மா எடுத்துக்கிடது விட்டுவிடுவோம், ஒரு உதாரணம் சொல்லுங்க என்றுச் சொன்னால், சொல்லமாட்டேங்கிரீங்களே. எதை எடுத்துக்கிடறது என்றுச் சொல்றீங்க? இஜ்மா என்று ஒன்றை காட்டினால் தானே, நாம் எடுத்துக்கிற பேச்சே வரும். இஜ்மா என்பதே கிடையாது. எந்த ஒரு சஹாபாக்களும் ஏகமனதாக சேர்ந்து என்ன செய்யலே, எங்க எல்லாருக்கும் இது தான் கருத்து என்று ஒருத்தரும் சொன்னதே கிடையாது.
3) இந்த இரண்டு நிமிட பேச்சு சொல்லும் உண்மைகள் என்ன?
மேற்கண்ட வீடியோவை பார்த்து இருந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். இந்த இரண்டு நிமிட பேச்சு எவைகளை நமக்குச் சொல்கிறது? இவைகள் ஒரு சராசரி முஸ்லிமின் இஸ்லாமிய நம்பிக்கையை தகர்த்துவிடுகின்றதாக இருக்கிறது. இதற்கு பீஜே அவர்கள் பொறுப்பு என்று சொல்லக்கூடாது, ஏனென்றால், அவர் சொந்தமாக அவைகளைச் சொல்லவில்லை, இஸ்லாமிய சரித்திர நூல்களில், ஸஹீஹ் ஹதீஸ்களில் உள்ளவைகளைத் தான் அவர் சொல்லியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. உண்மையை எத்தனை ஆண்டுகள் மறைத்தாலும், அது மறைந்தே இருக்கும் என்று எண்ணுவது முட்டாள்தனமாகும்.
சரி, விஷயத்துக்கு வருவோம், மேற்கண்ட பேச்சு நமக்கு கற்றுக்கொடுக்கும் விவரங்களும் இதர பின்னணிகளும். முஸ்லிம்கள் ஒரு பொய்யான விவரங்களை இதுவரை நம்பிக்கொண்டு இருக்கிறார்கள் என்பது இதன் மூலம் தெளிவாக விளங்குகிறது.
1) முஹம்மது மரித்த போது, அவர் தன்னிடம் ஒரு முழு குர்-ஆனை வைத்திருக்கவில்லை. அதனை அவர் வைத்திருந்திருந்தால், அதனை சஹாபாக்கள் அனைவரும் அறிந்திருந்திருப்பார்கள். அவர் மரித்த பிறகு, தங்கள் பிரதிகளை, அவர் விட்டுச்சென்ற பிரதியோடு ஒப்பிட்டுக்கொண்டு தங்கள் பிரதிகளை திருத்திக்கொண்டு இருந்திருப்பார்கள். ஆனால், முஹம்மது தன்னிடம் ஒரு பிரதியை அதாவது 23 ஆண்டுகளாக ஜிப்ரீல் மூலமாக இறக்கப்பட்ட அல்லாஹ்வின் வசனங்கள் அடங்கிய ஒரு பிரதி அவரிடம் முழுவதுமாக, புத்தகமாக இருந்ததில்லை. முஹம்மது மரித்த போது அவரது உள்ளத்தில் அல்லாஹ் பாதுகாத்த குர்-ஆனும் அழிந்துவிட்டது.
2) முஹம்மது மரித்து 20 ஆண்டுகளில், உத்மான் குர்-ஆனை தொகுத்த போது, 40க்கும் அதிகமான குர்-ஆன்கள் சஹாபாக்களிடம் இருந்தன. கவனிக்கவும், இவைகள் மொழியாக்கங்கள் அல்ல, அரபி மூலங்கள்.
3) முஹம்மதுவின் நெருங்கிய தொழர்கள் தங்களுக்காக குர்-ஆனை தொகுத்து வைத்திருந்தார்கள். இப்னு மஸ்வூத் என்பவரிடம் குர்-ஆனின் 113, 114 அத்தியாயங்கள் இல்லை. (இன்னும் சிலர் அல் ஃபாத்திஹா என்ற அத்தியாயத்தையும் இவர் குர்-ஆனாக கருதவில்லை என்றுச் சொல்வார்கள்).
4) இந்த வீடியோவை பொருத்தமட்டில், இப்னு மஸ்வூத் என்பவரைப் பற்றி மட்டுமே பார்போம். "கடைசிவரை" என்று பீஜே அவர்கள் குறிப்பிடுவது எதனை என்றுச் சொன்னால், இப்னு மஸ்வூத் மரிக்கும் வரை என்று பொருள். உஸ்மான், இவரிடமிருந்த குர்-ஆனை பரித்து எறித்துவிடுங்கள் என்று ஆணையிட்ட பிறகும் இவர் கொடுக்கவில்லை. பாவம் இவர், தன்னிடமிருந்த குர்-ஆனுக்காக உயிரை தியாம் செய்தார்.
5) இவர்களிடமிருந்து குர்-ஆனை கற்றுக்கொள்ளுங்கள் என்று முஹம்மது குறிப்பிட்ட நான்கு நபர்களில், இந்த இப்னு மஸ்வூத் என்பவர் முதலாவது வருபவர்[1]. மேலும், முஹம்மதுவிடம் இவர் 70க்கும் அதிகமான அத்தியாயங்களை ஓதிக்காட்டியுள்ளாராம், அவ்வளவு முக்கியமானவர் இவர்.
6) மிகவும் வயது முதிர்ந்த பெரியவராக இருந்த இவரை அடித்து இவரது குர்-ஆனை பரித்துக் கொண்டதாக இஸ்லாமிய சரித்திரம் கூறுகின்றது. தன் குர்-ஆனை கொடுக்காததால் தாக்கப்பட்ட இவர், அதே காயங்களால் சில நாட்களில் மரித்தாராம்.
7) 40க்கும் அதிகமான குர்-ஆன்களை சஹாபாக்கள் வைத்திருந்தனர். அதாவது ஒவ்வொருவரிடம் இருக்கும் குர்-ஆன்கள் வசனத்துக்கு வசனம் ஒரே மாதிரியாக அப்போது இருந்ததில்லை. அத்தியாயங்களின் வரிசைகள், வசன எண்களைப் பற்றி இங்கு குறிப்பிடவில்லை.
8) வசன எண்ணிக்கையில் வித்தியாசம், வார்த்தைகளில் வித்தியாசம், அத்தியாயங்களில் வித்தியாசங்கள் இருந்தன. இதனைத் தான் பீஜே அவர்கள் குறிப்பிட்டார்கள், "இப்னு மஸ்வூத்திடம் இரண்டு அத்தியாயங்கள் இல்லை". இது மட்டுமல்ல இன்னொரு சஹாபாவிடம் இரண்டு ஸூராக்கள் அதிகமாக இருந்தன.
9) "இந்த குர்-ஆனை சஹாபாக்களாகிய நாங்கள் ஒருமித்து ஏற்றுக்கொள்கிறோம்" என்ற கருத்து ஒருமித்து உருவானதில்லை. இது தான் இஸ்லாமிய சரித்திரம் சொல்லும் விவரம், இதனை பீஜே அவர்களும் ஒப்புக்கொண்டுள்ளார்கள்.
10) உத்மான் அரசு பதவியில் இருந்தபடியினால் தான், இப்படிப்பட்ட குர்-ஆனை நாம் வைத்திருக்கிறோம், வேறு ஒரு நபர் ஆட்சியில் இருந்திருந்தால், இன்று நாம் வைத்திருக்கும் குர்-ஆன் வேறு ஒரு குர்-ஆனாக இருந்திருக்கும் என்று மறைமுகமாக பீஜே சொல்கிறார். ஒரு வேளை இப்னு மஸ்வூத் ஆட்சியில் இருந்திருந்தால்? இன்று நம்மிடம் இருக்கும் குர்-ஆனில் 112 அத்தியாயங்கள் மட்டுமே இருந்திருக்கும். [இதைத் தானே, நாங்களும் 10 ஆண்டுகளாக சொல்லிக்கொண்டு இருக்கிறோம், பீஜே அவர்களே, தமிழ் முஸ்லிம்களே].
முடிவுரை:
இவைகளை பார்க்கும் போது, ஒரு சின்ன திட்டம் கூட இல்லாமல் அல்லாஹ் தன் வேதத்தை உலகிற்கு அனுப்பியுள்ளான் என்று தெரிகின்றது. முஹம்மதுவின் உயிரை எடுத்துக்கொள்வதற்கு முன்பாக, ஒரு புத்தகமாக குர்-ஆனை தொகுத்துவிட்டு, அதனை சரி பார்த்து ஒரு அதிகார பூர்வமான தொகுப்பை அல்லாஹ் கொடுத்திருந்தால், இஸ்லாமிய சரித்திரம் வேறு மாதிரியாக இருந்திருக்கும், இப்னு மஸ்வூத் தம் உயிரை தியாகம் செய்திருக்கவேண்டிய அவசியம் இருந்திருக்காது. அவ்வளவு ஏன், ஷியா என்ற இஸ்லாமிய பிரிவு உருவாகியிருந்திருக்குமா? என்பது கூட சந்தேகமே. ஏன் அல்லாஹ் முஹம்மது உயிரோடு இருக்கும் போதே குர்-ஆனை தொகுக்கவில்லை? சரி, முஹம்மதுவிற்காகவாவது இந்த ஐடியா வந்ததா என்று பார்த்தால், அதுவும் இல்லை. கடைசியாக, சஹாபாக்களாவது முஹம்மதுவிற்கு சொல்லி இருக்கலாம் அல்லவா? முஹம்மதுவும் சஹாபாக்களும் குர்-ஆனை ஒரு புத்தகமாக தொகுப்பதைவிட இன்னொரு பெரிய வேலையில் பிஸீயாக இருந்திருக்கவேண்டும்.
- முஸ்லிம்களே, உங்கள் கைகளில் தவழுவது அல்லாஹ் இறக்கிய குர்-ஆனா? அல்லது உஸ்மான் அதிகாரத்தில் இருந்தபடியினால் தொகுத்த குர்-ஆனா?
- உஸ்மான் தொகுத்த குர்-ஆனை மஸ்வூத் ஏன் ஏற்க மறுத்தார்?
- மஸ்வூதின் குர்-ஆனை உஸ்மான் ஏன் ஏற்க மறுத்தார்? அதனை கொளுத்தவேண்டும் என்று ஏன் உஸ்மான் விடாப்பிடியாக இருந்தார்?
- மஸ்வூதுக்கு 113, 114 அத்தியாயங்கள் குர்-ஆனின் ஒரு பாகம் என்று தெரியாமல் போனது எப்படி?
- அரைகுறை விவரங்கள் அறிந்திருந்த மஸ்வூத்திடமா குர்-ஆனை கற்றுக்கொள்ளுங்கள் என்று முஹம்மது சொன்னார்? அரைகுறை குர்-ஆனையா மஸ்வூத் தன் பகுதியில் இருந்த முஸ்லிம்களுக்கு கற்றுக்கொடுத்துக் கொண்டு இருந்தார்?
- உஸ்மான் தொகுத்த குர்-ஆனைத்தான் அல்லாஹ் முஹம்மதுவிற்கு இறக்கியிருந்தான் என்பதற்கு என்ன கியாரண்டி?
பீஜே அவர்களே, தமிழ் முஸ்லிம்களே, இன்று நீங்கள் ஓதும் குர்-ஆனைத் தான் முஹம்மது ஓதினார் என்பதற்கு என்ன கியாரண்டி? சில அத்தியாயங்கள், வசனங்கள் உஸ்மானின் குர்-ஆன் தொகுப்பிலிருந்து விடப்பட்டுவிட்டன என்று இஸ்லாமிய சரித்திரம் சொல்லும்போது, எந்த நம்பிக்கையில் நீங்கள் குர்-ஆனை படித்துக்கொண்டு இருக்கிறீர்கள்?
இவ்விவரங்கள் அனைத்தும் நமக்குச் சொல்லும் உண்மை: 'அல்லாஹ் தன் கடைசி வேதத்தை காக்க வல்லமையற்றவனாகிவிட்டானே' என்று நினைக்கும் போது மனதுக்கு வேதனையாக உள்ளது.
குர்-ஆன் ஆய்வு பற்றிய இதர தமிழ் கட்டுரைகள்
1. குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா? (Is the Quran Preserved?)
2. ஒரு குர்ஆனா அல்லது பல குர்ஆன்களா?! (Quran or Qurans?!)
3. குர்ஆனில் உள்ள எழுத்துப்பிழைகள் (Scribal Errors in the Quran)
4. பல விதமான அரபி குர்ஆன்கள் (THE DIFFERENT ARABIC VERSIONS OF THE QUR'AN)
8. அரபி குர்ஆனின் தாறுமாறான மேற்கோள்கள்?(Mis-Quotations in the Arabic Text of the Qur'an?)
அடிக்குறிப்புக்கள்:
[1] யாரிடமிருந்து குர்-ஆனை கற்கவேண்டும்? - ஸஹீஹ் புகாரி எண் 3758
மஸ்ரூக்(ரஹ்) அறிவித்தார்
அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அவர்களிடம் அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களைப் பற்றிய பேச்சு வந்தது. அப்போது அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி), 'அவர் எத்தகைய மனிதரென்றால், இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத், அபூ ஹுதைஃபாவின் (முன்னாள்) அடிமையான சாலிம், உபை இப்னு கஅப், முஆத் இப்னு ஜபல் ஆகிய நால்வரிடமிருந்தும் குர்ஆனை ஓதக் கற்றுக் கொள்ளுங்கள்" என்று சொல்லி அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் அவர்களை முதலாவதாகக் குறிப்பிட்டதைக் கேட்ட பிறகு அவரை நிரந்தரமாக நான் நேசிக்கலானேன் " என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர்களில் ஒருவரான அம்ர் இப்னு முர்ரா(ரஹ்), 'அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி), உபை இப்னு கஅப்(ரலி) அவர்களை முதலாவதாகச் சொன்னாரா, முஆத்(ரலி) அவர்களை முதலாவதாகச் சொன்னாரா (இவர்களிருவரில் யாரை முதலில் குறிப்பிட்டார்) என்று எனக்குத் தெரியாது" என்று கூறுகிறார்கள்.
பீஜே அவர்களுக்கு கொடுத்த இதர பதில்கள்/மறுப்புக்கள்
உமரின் கட்டுரைகள்/மறுப்புக்கள் பக்கம்
Source: http://www.answering-islam.org/tamil/authors/umar/answerpj/quran_authority_doubt.html