இரத்து செய்தல்(அரபியில்: நஸ்க்ஹ்) என்றால், அல்லாஹ் குர்ஆனில் இறக்கிய முந்தைய வசனங்களை வேறு புதிய வசனங்களைக் கொண்டு இரத்து செய்வதாகும்.
இதனை அல்லாஹ் கீழ்கண்டவாறு கூறுகின்றான்:
குர்ஆன் 2:106. ஏதேனும் ஒரு வசனத்தை நாம் மாற்றினால் அல்லது அதனை மறக்கச் செய்தால் அதைவிட சிறந்ததையோ அல்லது அது போன்றதையோ நாம் கொண்டுவருவோம். நிச்சயமாக அல்லாஹ் அனைத்துப்பொருட்களின் மீதும் சக்தியுள்ளவன் என்பதை நீர் அறியவில்லையா?
குர்ஆன் 16:101. (நபியே!) நாம் ஒரு வசனத்தை மற்றொரு வசனத்தின் இடத்தில் மாற்றினால், (உம்மிடம்) "நிச்சயமாக நீர் இட்டுக்கட்டுபவராக இருக்கின்றீர்" என்று அவர்கள் கூறுகிறார்கள்: எ(ந்த நேரத்தில், எ)தை இறக்க வேண்டுமென்பதை அல்லாஹ்வே நன்கறிந்தவன், எனினும் அவர்களில் பெரும்பாலோர் (இவ்வுண்மையை) அறிய மாட்டார்கள்.
(முஹம்மது ஜான் குர்ஆன் தமிழாக்கம்)
குர்ஆன் வசனங்களை இரத்து செய்தல் பற்றிய முந்தைய கட்டுரைகளை கீழ்கண்ட தொடுப்புக்களில் படிக்கலாம்.
- குர்-ஆன் வசனங்களை இரத்து செய்தல் பற்றிய உவமை
- குர்ஆனின் வினோதமான இரத்து செய்தல் - குர்ஆன் 33:52: கரு உண்டாவதற்கு முன்பாகவே கருக்கலைப்பு செய்த அல்லாஹ்
- பிறந்த ஒரு மணி நேரத்திற்குள் மரித்த (ரத்து செய்யப்பட்ட) குர்ஆன் வசனம் 58:12 (முஹம்மதுவிடம் தனிமையில் பேச பணம் தர வேண்டுமா?)
குர்ஆனில் இரத்து செய்யப்பட்ட வசனங்கள் எத்தனை உள்ளன?
இந்த கேள்விக்கு முஸ்லிம் அறிஞர்கள் ஒருமித்த பதிலைச் சொல்வதில்லை. கீழ்கண்ட பட்டியலைப் பாருங்கள், ஒவ்வொரு அறிஞரும் வெவ்வேறு விதமான எண்ணிக்கையை கொடுத்துள்ளார்கள்.
எண் | இஸ்லாமிய அறிஞர்கள் | இரத்து செய்யப்பட்ட குர்ஆன் வசனங்களின் எண்ணிக்கை |
1 | ஸுயுதி (al-Suyuti) | 21 |
2 | ஜுஹ்ரி (al-Zuhri) | 42 |
3 | நஹஸ் (al-Nahhas) | 138 |
4 | இப்னு அதைய்கி (Ibn 'Ata'iqi) | 231 |
5 | இப்னு ஸலம (Ibn Salama) | 238 |
6 | ஃபர்ஸி (al-Farsi) | 248 |
இப்னு அதைய்கி (Ibn 'Ata'iqi) என்ற அறிஞர் 231 வசனங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன என்று சொல்லிவிட்டு, இன்னும் 26 வசனங்கள் சந்தேகத்திற்கு இடமளிக்கும்வகையில் உள்ளன என்கிறார்.
இஸ்லாமிய அறிஞர் ஸுயுதி குறிப்பிட்ட இரத்து செய்யப்பட்ட வசனங்கள்
இந்த கட்டுரையில் இஸ்லாமிய அறிஞர் ஸுயுதி அவர்கள் குறிப்பிட்ட அந்த 21 இரத்து செய்யப்பட்ட வசனங்களையும், அவைகளை இரத்து செய்த வசனங்களையும் ஒரு பட்டியலாக காண்போம்.
எண் | Abrogated (Mansūkh) இரத்து செய்யப்பட்ட வசனங்கள் | Abrogator (Nāsikh) இரத்து செய்த வசனங்கள் |
---|---|---|
1 | 2:115. கிழக்கும், மேற்கும் அல்லாஹ்வுக்கே (சொந்தம்); நீங்கள் எந்தப் பக்கம் திரும்பினாலும் அங்கே அல்லாஹ்வின் முகம் இருக்கிறது. நிச்சயமாக அல்லாஹ் விசாலமானவன்; எல்லாம் அறிந்தவன். | 2:144. (நபியே!) நாம் உம் முகம் அடிக்கடி வானத்தை நோக்கக் காண்கிறோம்; எனவே நீர் விரும்பும் கிப்லாவின் பக்கம் உம்மைத் திடமாக திருப்பி விடுகிறோம்; ஆகவே நீர் இப்பொழுது (மக்காவின்) மஸ்ஜிதுல் ஹராம் பக்கம் உம் முகத்தைத் திருப்பிக் கொள்ளும். (முஸ்லிம்களே!) இன்னும் நீங்கள் எங்கிருந்தாலும் (தொழுகையின் போது) உங்கள் முகங்களை அந்த (கிப்லாவின்) பக்கமே திருப்பிக் கொள்ளுங்கள்; நிச்சயமாக எவர்கள் வேதம் கொடுக்கப்பட்டிருக்கின்றார்களோ அவர்கள், இது அவர்களுடைய இறைவனிடமிருந்து வந்த உண்மை என்பதை நிச்சயமாக அறிவார்கள்; அல்லாஹ் அவர்கள் செய்வது பற்றிப் பராமுகமாக இல்லை. |
2 | 2:180. உங்களில் எவருக்கு மரணம் நெருங்கி விடுகிறதோ அவர் ஏதேனும் பொருள் விட்டுச் செல்பவராக இருப்பின், அவர் (தம்) பெற்றோருக்கும், பந்துக்களுக்கும் முறைப்படி வஸிய்யத்து (மரண சாஸனம்)செய்வது விதியாக்கப்பட்டிருக்கிறது; (இதை நியாயமான முறையில் நிறைவேற்றுவது) முத்தகீன்கள்(பயபக்தியுடையோர்) மீது கடமையாகும். | 4:7. பெற்றோரோ, நெருங்கிய உறவினர்களோ விட்டுச் சென்ற (சொத்)தில் ஆண்களுக்கு பாகமுண்டு; அவ்வாறே பெற்றோரோ, நெருங்கிய உறவினரோ விட்டுச் சென்ற (சொத்)தில் பெண்களுக்கும் பாகமுண்டு - (அதிலிருந்துள்ள சொத்து) குறைவாக இருந்தாலும் சரி, அதிகமாக இருந்தாலும் சரியே; (இது அல்லாஹ்வினால்) விதிக்கப்பட்ட பாகமாகும். |
3 | 2:183. ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது; (அதன் மூலம்) நீங்கள் இறையச்சமுடையோர் ஆகலாம். | 2:187. நோன்புக் கால இரவில் நீங்கள் உங்கள் மனைவியருடன் கூடுவது உங்களுக்கு அனுமதிக்கப் பட்டுள்ளது அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும், நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கின்றீர்கள்; நீங்கள் இரகசியமாகத் தம்மைத் தாமே வஞ்சித்துக் கொண்டிருந்ததை அல்லாஹ் நன்கறிவான்; அவன் உங்கள் மீது இரக்கங்கொண்டு உங்களை மன்னித்தான்; எனவே, இனி(நோன்பு இரவுகளில்) உங்கள் மனைவியருடன் கூடி அல்லாஹ் உங்களுக்கு விதித்ததை தேடிக்கொள்ளுங்கள்; இன்னும் ஃபஜ்ரு (அதிகாலை)நேரம் என்ற வெள்ளை நூல்(இரவு என்ற) கருப்பு நூலிலிருந்து தெளிவாகத் தெரியும் வரை உண்ணுங்கள், பருகுங்கள்; பின்னர், இரவு வரும் வரை நோன்பைப் பூர்த்தி செய்யுங்கள்; இன்னும் நீங்கள் பள்ளிவாசலில் தனித்து (இஃதிகாஃபில்) இருக்கும் போது, உங்கள் மனைவியருடன் கூடாதீர்கள்-இவையே அல்லாஹ் விதித்த வரம்புகளாகும்; அந்த வரம்புகளை(த் தாண்ட) முற்படாதீர்கள்; இவ்வாறே (கட்டுப்பாடுடன்) தங்களைக்காத்து பயபக்தியுடையோர் ஆவதற்காக அல்லாஹ் தன்னுடைய சான்றுகளைத் தெளிவாக்குகின்றான். |
4 | 2:184. (இவ்வாறு விதிக்கப் பெற்ற நோன்பு) சில குறிப்பட்ட நாட்களில் (கடமையாகும்); ஆனால் (அந்நாட்களில்) எவரேனும் நோயாளியாகவோ, அல்லது பயணத்திலோ இருந்தால் (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பைப்) பின்னால் வரும் நாட்களில் நோற்க வேண்டும்; எனினும்(கடுமையான நோய், முதுமை போன்ற காரணங்களினால்) நோன்பு நோற்பதைக் கடினமாகக் காண்பவர்கள் அதற்குப் பரிகாரமாக - ஃபித்யாவாக - ஒரு மிஸ்கீனுக்கு (ஏழைக்கு) உணவளிக்க வேண்டும்; எனினும் எவரேனும் தாமாகவே அதிகமாகக் கொடுக்கிறாரோ அது அவருக்கு நல்லது - ஆயினும் நீங்கள் (நோன்பின் பலனை அறீவீர்களானால்), நீங்கள் நோன்பு நோற்பதே உங்களுக்கு நன்மையாகும் (என்பதை உணர்வீர்கள்). | 2:185. ரமளான் மாதம் எத்தகையதென்றால் அதில் தான் மனிதர்களுக்கு (முழுமையான வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும்; (நன்மை - தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல் குர்ஆன் இறக்கியருளப் பெற்றது; ஆகவே, உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ, அவர் அம்மாதம் நோன்பு நோற்க வேண்டும்; எனினும் எவர் நோயாளியாகவோ அல்லது பயணத்திலோ இருக்கிறாரோ (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பைப்) பின்வரும் நாட்களில் நோற்க வேண்டும்; அல்லாஹ் உங்களுக்கு இலகுவானதை நாடுகிறானே தவிர, உங்களுக்கு சிரமமானதை அவன் நாடவில்லை; குறிப்பிட்ட நாட்கள் (நோன்பில் விடுபட்டுப் போனதைப்) பூர்த்தி செய்யவும், உங்களுக்கு நேர்வழி காட்டியதற்காக அல்லாஹ்வின் மகத்துவத்தை நீங்கள் போற்றி நன்றி செலுத்துவதற்காகவுமே (அல்லாஹ் இதன் மூலம் நாடுகிறான்). |
5 | 2:217. (நபியே!) புனிதமான (விலக்கப்பட்ட) மாதங்களில் போர் புரிவது பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள்; நீர் கூறும்: "அக்காலத்தில் போர் செய்வது பெருங் குற்றமாகும்; ஆனால், அல்லாஹ்வின் பாதையை விட்டுத் தடுப்பதும், அவனை நிராகரிப்பதும், மஸ்ஜிதுல் ஹராமுக்குள் (வரவிடாது) தடுப்பதும், அங்குள்ளவர்களை அதிலிருந்து வெளியேற்றுவதும் (-ஆகியவையெல்லாம்) அதைவிடப் பெருங் குற்றங்களாகும்; ஃபித்னா (குழப்பம்) செய்வது, கொலையைவிடக் கொடியது; அவர்களுக்கு இயன்றால் உங்கள் மார்க்கத்திலிருந்து உங்களைத் திருப்பிவிடும் வரை உங்களுடன் போர் செய்வதை நிறுத்த மாட்டார்கள்; உங்களில் எவரேனும் ஒருவர் தம்முடைய மார்க்கத்திலிருந்து திரும்பி, காஃபிராக (நிராகரிப்பவராக) இறந்துவிட்டால் அவர்களின் நற்கருமங்கள் இவ்வுலகத்திலும், மறு உலகத்திலும் (பலன் தராமல்) அழிந்துவிடும்; இன்னும் அவர்கள் நரகவாசிகளாக அந்நெருப்பில் என்றென்றும் தங்கிவிடுவார்கள்." | 9:36. நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் அல்லாஹ்வுடைய (பதிவுப்) புத்தகத்தில் வானங்களையும் பூமியையும் படைத்த நாளிலிருந்தே மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டு ஆகும் - அவற்றில் நான்கு (மாதங்கள்) புனிதமானவை; இது தான் நேரான மார்க்கமாகும் - ஆகவே அம்மாதங்களில் (போர் செய்து) உங்களுக்கு நீங்களே தீங்கிழைத்துக் கொள்ளாதீர்கள்; இணை வைப்பவர்கள் உங்கள் அனைவருடனும் போர் புரிவது போல் புரியுங்கள். நிச்சயமாக அல்லாஹ் பயபக்தியுடையோருடனேயே இருக்கின்றான் என்பதை அறிந்து கொள்ளுங்கள். |
6 | 2:240. உங்களில் எவரேனும் மனைவியரை விட்டு இறக்கும் நிலையில் இருப்பார்களானால், தங்கள் மனைவியருக்கு ஓராண்டு வரை (உணவு, உடை போன்ற தேவைகளைக் கொடுத்து) ஆதரித்து, (வீட்டை விட்டு அவர்கள்) வெளியேற்றப்படாதபடி (வாரிசுகளுக்கு) அவர்கள் மரண சாசனம் கூறுதல் வேண்டும்; ஆனால், அப்பெண்கள் தாங்களே வெளியே சென்று முறைப்படி தங்கள் காரியங்களைச் செய்து கொண்டார்களானால், (அதில்) உங்கள் மீது குற்றமில்லை - மேலும் அல்லாஹ் வல்லமையுடையவனும், அறிவாற்றல் உடையோனும் ஆவான். | 2:234. உங்களில் எவரேனும் மனைவியரை விட்டு மரணித்தால் அம்மனைவியர் நான்கு மாதம் பத்து நாள் பொறுத்திருக்க வேண்டும்; (இந்த இத்தத்)தவணை பூர்த்தியானதும், அவர்கள் (தங்கள் நாட்டத்துக்கு ஒப்ப) தங்கள் காரியத்தில் ஒழுங்கான முறையில் எதுவும் செய்துகொள்வதில் உங்கள் மீது குற்றமில்லை; அல்லாஹ் நீங்கள் செய்வதை நன்கறிந்தவனாகவே இருக்கின்றான். |
7 | 2:284. வானங்களிலும், பூமியிலும் உள்ளவை (அனைத்தும்) அல்லாஹ்வுக்கே உரியன; இன்னும், உங்கள் உள்ளங்களில் இருப்பதை நீங்கள் வெளிப்படுத்தினாலும், அல்லது அதை நீங்கள் மறைத்தாலும், அல்லாஹ் அதைப் பற்றி உங்களைக் கணக்கு கேட்பான் - இன்னும், தான் நாடியவரை மன்னிப்பான்; தான் நாடியவரை வேதனையும் செய்வான் - அல்லாஹ் அனைத்துப் பொருட்கள் மீதும் சக்தியுடையவன். | 2:286. அல்லாஹ் எந்த ஓர் ஆத்மாவுக்கும் அது தாங்கிக் கொள்ள முடியாத அளவு கஷ்டத்தை கொடுப்பதில்லை; அது சம்பாதித்ததின் நன்மை அதற்கே; அது சம்பாதித்த தீமையும் அதற்கே! (முஃமின்களே! பிரார்த்தனை செய்யுங்கள்:) "எங்கள் இறைவா! நாங்கள் மறந்து போயிருப்பினும், அல்லது நாங்கள் தவறு செய்திருப்பினும் எங்களைக் குற்றம் பிடிக்காதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்களுக்கு முன் சென்றோர் மீது சுமத்திய சுமையை போன்று எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்கள் சக்திக்கப்பாற்பட்ட (எங்களால் தாங்க முடியாத) சுமையை எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் பாவங்களை நீக்கிப் பொறுத்தருள்வாயாக! எங்களை மன்னித்தருள் செய்வாயாக! எங்கள் மீது கருணை புரிவாயாக! நீயே எங்கள் பாதுகாவலன்; காஃபிரான கூட்டத்தாரின் மீது (நாங்கள் வெற்றியடைய) எங்களுக்கு உதவி செய்தருள்வாயாக!" |
8 | 3:102. நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வை அஞ்ச வேண்டிய முறைப்படி அஞ்சுங்கள்; மேலும், (அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிப்பட்ட) முஸ்லிம்களாக அன்றி நீங்கள் மரணிக்காதீர்கள். | 64:16. ஆகவே, உங்களால் இயன்ற வரை அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள்; (அவன் போதனைகளைச்) செவிதாழ்த்திக் கேளுங்கள்; அவனுக்கு வழிபடுங்கள்; (அவன் பாதையில்) செலவு செய்யுங்கள்; (இது) உங்களுக்கே மேலான நன்மையாக இருக்கும்; அன்றியும்; எவர்கள் உலோபத்தனத்திலிருந்து காக்கப்படுகிறார்களோ, அவர்கள் தாம் வெற்றி பெற்றவர்கள். |
9 | 4:15. உங்கள் பெண்களில் எவளேனும் மானக்கேடான செயல் செய்துவிட்(டதாகக் குற்றம் சுமத்தப்பட்)டால், அதை நிரூபிக்க உங்களிலிருந்து நான்கு பேர்களை அழையுங்கள்; அவர்கள் அதை (மெய்ப்படுத்தி) சாட்சி கூறிவிட்டால், (அப்பெண்களை) மரணம் கைப்பற்றும் வரையில் அல்லது அவர்களுக்கு அல்லாஹ் ஒரு வழியை உண்டாக்கும் வரையில் அவர்களை வீடுகளில் தடுத்து வையுங்கள். | 24:2. விபசாரியும், விபசாரனும் - இவ்விருவரில் ஒவ்வொருவரையும் நூறு கசையடி அடியுங்கள்; மெய்யாகவே, நீங்கள் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாள் மீதும் ஈமான் கொண்டவர்களாக இருந்தால். அல்லாஹ்வின் சடடத்(தை நிறைவேற்றுவ)தில், அவ்விருவர் மீதும் உங்களுக்கு இரக்கம் ஏற்பட வேண்டாம்; இன்னும் அவ்விருவரின் வேதனையையும் முஃமின்களில் ஒரு கூட்டத்தார் (நேரில்) பார்க்கட்டும். |
10 | 4:33. இன்னும், தாய் தந்தையரும், நெருங்கிய பந்துக்களும் விட்டுச் செல்கின்ற செல்வத்திலிருந்து (விகிதப்படி அதையடையும்) வாரிசுகளை நாம் குறிப்பாக்கியுள்ளோம்; அவ்வாறே நீங்கள் உடன்படிக்கை செய்து கொண்டோருக்கும் அவர்களுடைய பாகத்தை அவர்களுக்குக் கொடுத்து விடுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்கள் மீதும் சாட்சியாளனாக இருக்கிறான். | 8:75. இதன் பின்னரும், எவர்கள் ஈமான் கொண்டு, தம் ஊரைத்துறந்து, உங்களுடன் சேர்ந்து (மார்க்கத்திற்காகப்) போர் புரிகின்றார்களோ, அவர்களும் உங்களை சேர்ந்தவர்களே. இன்னும் அல்லாஹ்வின் வேதவிதிப்படி உங்கள் உறவினர்களே; ஒருவர் மற்றொருவருக்கு மிக நெருக்கமுடையவர்களும் ஆவார்கள் - நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்களையும் நன்கறிந்தவனாக இருக்கின்றான். |
11 | 5:2. முஃமின்களே! (நீங்கள் இஹ்ராம் கட்டியிருக்கும் சமயத்தில் உங்களுக்கு ஏற்படுத்தப்பட்ட) அல்லாஹ்வின மார்க்க அடையாளங்களையும், சிறப்பான மாதங்களையும், குர்பானிகளையும், குர்பானிக்காக அடையாளம் கட்டப்பெற்றவைற்றையும், தங்களுடைய இறைவனின் அருளையும் திருப்பொருத்தத்தையும் நாடி கண்ணியமான (அவனுடைய) ஆலயத்தை நாடிச் செல்வோரையும் (தாக்குவதையோ, அவமதிப்பதையோ) நீங்கள் ஆகுமாக்கிக் கொள்ளாதீர்கள்; நீங்கள் இஹ்ராமைக் களைந்து விட்டால் (அனுமதிக்கப்பட்டவற்றை) நீங்கள் வேட்டையாடலாம்; மேலும் புனித மஸ்ஜிதை (கஃபத்துல்லாஹ்வை) விட்டும் உங்களைத் தடுத்த கூட்டத்தினர் மீதுள்ள வெறுப்பானது, நீங்கள் வரம்பு மீறுமாறு உங்களைத் தூண்டி விட வேண்டாம்; இன்னும் நன்மையிலும்; பயபக்தியிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ளுங்கள்; பாவத்திலும், பகைமையிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ள வேண்டாம்; அல்லாஹ்வுக்கே பயப்படுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் கடுமையாக தண்டிப்பவன். | 9:36. நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் அல்லாஹ்வுடைய (பதிவுப்) புத்தகத்தில் வானங்களையும் பூமியையும் படைத்த நாளிலிருந்தே மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டு ஆகும் - அவற்றில் நான்கு (மாதங்கள்) புனிதமானவை; இது தான் நேரான மார்க்கமாகும் - ஆகவே அம்மாதங்களில் (போர் செய்து) உங்களுக்கு நீங்களே தீங்கிழைத்துக் கொள்ளாதீர்கள்; இணை வைப்பவர்கள் உங்கள் அனைவருடனும் போர் புரிவது போல் புரியுங்கள். நிச்சயமாக அல்லாஹ் பயபக்தியுடையோருடனேயே இருக்கின்றான் என்பதை அறிந்து கொள்ளுங்கள். |
12 | 5:42. அன்றியும், இவர்கள் பொய்யையே அதிகமாகக் கேட்போராகவும், விலக்கப்பட்ட பொருட்களையே விழுங்குவோராகவும் இருக்கின்றனர்; (நபியே!) இவர்கள் உம்மிடம் வந்தால், இவர்களுக்கிடையே தீர்ப்பு வழங்கும்; அல்லது இவர்களைப் புறக்கணித்து விடும்; அப்படி இவர்களை விடுவீராயினும், இவர்கள் உமக்கு யாதொரு தீங்கும் செய்ய முடியாது; ஆனால், நீர் (இவர்களிடையே) தீர்ப்பளிப்பீராயின் நியாயமாகவே அவர்களிடையில் தீர்ப்பளிப்பீராக; ஏனெனில் நிச்சயமாக அல்லாஹ் நீதிமான்களையே நேசிக்கின்றான். | 5:49. இன்னும் அல்லாஹ் அருள் செய்த (சட்ட திட்டத்)தைக் கொண்டே அவர்களிடையில் தீர்ப்புச் செய்வீராக; அவர்களுடைய மன இச்சைகளைப் பின்பற்றாதீர்கள்; அல்லாஹ் உம்மீது இறக்கிவைத்ததில் சிலவற்றை விட்டும் அவர்கள் உம்மைத் திருப்பிவிடாதபடி, அவர்களிடம் எச்சரிக்கையாக இருப்பீராக; (உம் தீர்ப்பை) அவர்கள் புறக்கணித்து விடுவார்களானால், சில பாவங்களின் காரணமாக அவர்களைப் பிடிக்க நிச்சயமாக அல்லாஹ் நாடுகிறான் என்பதை அறிந்து கொள்வீராக; மேலும் நிச்சயமாக மனிதர்களில் பெரும்பாலோர் பாவிகளாகவே இருக்கின்றனர். |
13 | 5:106. ஈமான் கொண்டவர்களே! உங்களில் யாருக்கேனும் மரணம் சமீபித்து (அவர் மரணசாஸனம் கூற விரும்பினால்) அச்சமயத்தில் உங்களுக்குள் நம்பிக்கைக்குரிய இரண்டு சாட்சிகள் இருக்கவேண்டும்; அல்லது உங்களில் எவரும் பூமியில் பிரயாணம் செய்து கொண்டிருக்கும்போது மரணம் சமீபித்தால் (அப்போது முஸ்லிம்களாக இரு சாட்சிகள் கிடையாவிடின்) உங்களையல்லாத வேறிருவர் சாட்சியாக இருக்கட்டும்; (இவர்கள் மீது) உங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டால் இவ்விருவரையும் (அஸரு) தொழுகைக்குப் பின் தடுத்து வைத்துக் கொள்ளவும்; இவ்விருவரும் "நாங்கள் (சாட்சி) கூறியது கொண்டு யாதொரு பொருளையும் நாங்கள் அடைய விரும்பவில்லை; அவர்கள், எங்களுடைய பந்துக்களாயிருந்த போதிலும், நாங்கள் அல்லாஹ்வுக்காக சாட்சியங் கூறியதில் எதையும் மறைக்கவில்லை; அவ்வாறு செய்திருந்தால் நிச்சயமாக நாங்கள் பாவிகளாயிவிடுவோம்" என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து கூறவேண்டும். | 65:2. ஆகவே, அவர்கள் தங்கள் (இத்தாவின்) தவணையை நெருங்கினால், அப்பொழுது முறைப்படி (மனைவியராக) அவர்களை நிறுத்தி வைத்துக் கொள்ளுங்கள்; அல்லது முறைப்படி அவர்களைப் பிரித்து (விட்டு) விடுங்கள்; அன்றியும், உங்களில் நியாயமுடைய இருவரைச் சாட்சியாக வைத்துக் கொள்ளுங்கள்; மேலும், சாட்சியத்தை அல்லாஹ்வுக்காக (நேர்மையாக) நிலைப்படுத்துங்கள்; அல்லாஹ்வையும், மறுமை நாளையும் விசுவாசம் கொண்டிருப்போருக்கு இந்த நற்போதனை செய்யப்படுகிறது - தவிர, எவர் அல்லாஹ்வுக்கு அஞ்சி நடக்கின்றாரோ, அவருக்கு அவன் (தக்க ஒரு) வழியை உண்டாக்குவான். |
14 | 8:65. நபியே! நீர் முஃமின்களை போருக்கு ஆர்வ மூட்டுவீராக; உங்களில் பொறுமையுடையவர்கள் இருபது பேர் இருந்தால், இருநூறு பேர்களை வெற்றி கொள்வார்கள். இன்னும் உங்களில் நூறு பேர் இருந்தால் அவர்கள் காஃபிர்களில் ஆயிரம் பேரை வெற்றி கொள்வார்கள்; ஏனெனில் (முஃமின்களை எதிர்ப்போர்) நிச்சயமாக அறிவில்லாத மக்களாக இருப்பது தான் (காரணம்). | 8:66. நிச்சயமாக உங்களில் பலவீனம் இருக்கின்றது என்பதை அறிந்து, தற்சமயம் அல்லாஹ் (அதனை) உங்களுக்கு இலகுவாக்கி விட்டான் - எனவே உங்களில் பொறுமையும் (சகிப்புத் தன்மையும்) உடைய நூறு பேர் இருந்தால் அவர்கள் இருநூறு பேர் மீது வெற்றிக் கொள்வார்கள்; உங்களில் (இத்தகையோர்) ஆயிரம் பேர் இருந்தால் அல்லாஹ்வின் உத்திரவு கொண்டு அவர்களில் இரண்டாயிரம் பேர் மீது வெற்றிக் கொள்வார்கள் - (ஏனெனில்) அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கின்றான். |
15 | 9:41. நீங்கள் சொற்ப(மான போர்த் தளவாட)ங்களைக் கொண்டிருந்தாலும் சரி, நிறைய(ப் போர்த் தளவாடங்களைக்) கொண்டிருந்தாலும் சரி, நீங்கள் புறப்பட்டு, உங்கள் பொருட்களையும், உயிர்களையும் கொண்டு அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரியுங்கள் - நீங்கள் அறிந்தவர்களாக இருந்தால், இதுவே உங்களுக்கு மிகவும் நல்லது. | 9:91. பலஹீனர்களும், நோயாளிகளும், (அல்லாஹ்வின் வழியில்) செலவு செய்ய வசதியில்லாதவர்களும், அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் உண்மையுடன் இருப்பார்களானால், (இத்தகைய) நல்லோர்கள் மீது எந்த குற்றமும் இல்லை. அல்லாஹ் மன்னிப்பவன்; கிருபையுள்ளவன். 9:122. முஃமின்கள் ஒட்டு மொத்தமாக புறப்பட்டுச் செல்லலாகாது. ஆனால் அவர்களில் ஒவ்வொரு வர்க்கத்தாரிலிருந்தும் ஒரு சிறிய கூட்டத்தார் சன்மார்க்க (ஞானத்தைக்) கற்று கொள்வதற்காகவும், (வெளியேறி சென்ற அவர்கள் பின்னே தங்கியவர்களிடம்) திரும்பி வந்தால் அவர்களுக்கு அச்சமூட்டி எச்சரிப்பதற்காகவும் புறப்பட வேண்டாமா? இதைக் கொண்டே அவர்கள் தங்களை(த் தீமையினின்றும்) பாதுகாத்துக் கொள்வார்கள். 24:61. (முஃமின்களே! உங்களுடன் சேர்ந்து உணவருந்துவதில்) குருடர் மீதும் குற்றமில்லை; முடவர் மீதும் குற்றமில்லை, நோயாளியின் மீதும் குற்றமில்லை; உங்கள் மீதும் குற்றமில்லை; நீங்கள் உங்கள் சொந்த வீடுகளிலோ அல்லது உங்கள் தந்தைமார் வீடுகளிலோ, அல்லது உங்கள் தாய்மார் வீடுகளிலோ, அல்லது உங்கள் சகோதரர் வீடுகளிலோ, அல்லது உங்கள் சகோதரிகள் வீடுகளிலோ, அல்லது உங்கள் தந்தையின் சகோதரர் வீடுகளிலோ, அல்லது உங்கள் தந்தையின் சகோதரிகள் வீடுகளிலோ, அல்லது உங்கள் தாயின் சகோதரர்கள் வீடுகளிலோ, அல்லது உங்கள் தாயாரின் சகோதரிகள் வீடுகளிலோ, அல்லது எ(ந்த வீட்டுடைய)தின் சாவிகள் உங்கள் வசம் இருக்கின்றதோ (அதிலும்) அல்லது உங்கள் தோழரின் வீடுகளிலோ, நீங்கள் சேர்ந்தோ அல்லது தனித்தனியாகவோ புசிப்பது உங்கள் மீது குற்றமாகாது; ஆனால் நீங்கள் எந்த வீட்டில் பிரவேசித்தாலும் அல்லாஹ்விடமிருந்து உங்களுக்குக் கிடைத்திருக்கும் முபாரக்கான - பாக்கியம் மிக்க - பரிசுத்தமான ("அஸ்ஸலாமு அலைக்கும்" என்னும்) நல்வாக்கியத்தை நீங்கள் உங்களுக்குள் கூறிக்கொள்ளுங்கள் - நீங்கள் அறிந்து கொள்வதற்காக, இவ்வாறு அல்லாஹ் உங்களுக்கு(த் தன்) வசனங்களை விவரிக்கிறான்.
|
16 | 24:3. விபசாரன், விபசாரியையோ அல்லது இணை வைத்து வணங்குபவளையோ அன்றி வேறு எந்தப் பெண்ணையும் விவாகம் செய்ய மாட்டான்; விபசாரி, விபசாரனையோ அல்லது இணை வைத்து வணங்குபவனையோ அன்றி (வேறுயாரையும்) விவாகம் செய்ய மாட்டாள் - இது முஃமின்களுக்கு விலக்கப்பட்டிருக்கிறது. | 24:32. இன்னும், உங்களில் வாழ்க்கைத் துணை இல்லா (ஆடவர், பெண்டி)ருக்கும், அவ்வாறே (வாழ்க்கைத் துணையில்லா) ஸாலிஹான உங்கள் (ஆண், பெண்) அடிமைகளுக்கும் விவாகம் செய்து வையுங்கள்; அவர்கள் ஏழைகளாக இருந்தால், அல்லாஹ் தன் நல்லருளைக் கொண்டு அவர்களைச் சீமான்களாக்கி வைப்பான்; மேலும் அல்லாஹ் (கொடையில்) விசாலமானவன். (யாவற்றையும்) நன்கறிந்தவன். |
17 | 24:58. ஈமான் கொண்டவர்களே! உங்கள் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர் (அடிமை)களும், உங்களிலுள்ள பருவம் அடையாச் சிறுவர்களும் (உங்கள் முன் வர நினைத்தால்) மூன்று நேரங்களில் உங்களிடம் அனுமதி கோர வேண்டும்; ஃபஜ்ரு தொழுகைக்கு முன்னரும், நீங்கள் (மேல் மிச்சமான உங்கள் உடைகளைக் களைந்திருக்கும் "ளுஹர்" நேரத்திலும், இஷாத் தொழுகைக்குப் பின்னரும்-ஆக இம்மூன்று நேரங்களும் உங்களுக்காக (அமையப் பெற்றுள்ள) மூன்று அந்தரங்க வேளைகளாகும் - இவற்றைத் தவிர (மற்ற நேரங்களில் மேல்கூறிய அடிமைகளும், குழந்தைகளும் அனுமதியின்றியே உங்கள் முன் வருவது) உங்கள் மீதும் அவர்கள் மீதும் குற்றமில்லை; இவர்கள் அடிக்கடி உங்களிடமும் உங்களில் ஒருவர் மற்றவரிடம் வரவேண்டியவர்கள் என்பதினால்; இவ்வாறு, அல்லாஹ் தன் வசனங்களை உங்களுக்கு விவரிக்கின்றான்; மேலும் அல்லாஹ் (யாவற்றையும்) நன்கறிந்தவன்; ஞானம் மிக்கவன். | இந்த வசனத்தை எந்த வசனம் இரத்து செய்தது என்று ஸுயுதி குறிப்பிடவில்லை. |
18 | 33:52. இவர்களுக்குப் பின்னால் உம் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்கள் தவிர இதர பெண்கள் உமக்கு ஹலால் ஆகமாட்டார்கள்; இன்னும் இவர்களுடைய இடத்தில் வேறு மனைவியரை மாற்றிக் கொள்வதும்; அவர்களுடைய அழகு உம்மைக் கவர்ந்த போதிலும் சரியே - ஹலால் இல்லை - மேலும், அல்லாஹ் அனைத்துப் பொருள்களையும் கண்காணிப்பவன். | 33:50. நபியே! எவர்களுக்கு நீர் அவர்களுடைய மஹரை கொடுத்து விட்டீரோ அந்த உம்முடைய மனைவியரையும், உமக்கு(ப் போரில் எளிதாக) அல்லாஹ் அளித்துள்ளவர்களில் உம் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்களையும், நாம் உமக்கு ஹலாலாக்கி இருக்கின்றோம்; அன்றியும் உம் தந்தையரின் சகோதரர்களின் மகள்களையும், உம் தந்தையரின் சகோதரிகள் மகள்களையும், உம் மாமன் மார்களின் மகள்களையும், உம் தாயின் சகோதரிமாரின் மகள்களையும் - இவர்களில் யார் உம்முடன் ஹிஜ்ரத் செய்து வந்தார்களோ அவர்களை (நாம் உமக்கு விவாகத்திற்கு ஹலாலாக்கினோம்); அன்றியும் முஃமினான ஒரு பெண் நபிக்குத் தன்னை அர்ப்பணித்து, நபியும் அவளை மணந்து கொள்ள விரும்பினால் அவளையும் (மணக்க நாம் உம்மை அனுமதிக்கின்றோம்); இது மற்ற முஃமின்களுக்கன்றி உமக்கே (நாம் இத்தகு உரிமையளித்தோம்; மற்ற முஃமின்களைப் பொறுத்தவரை) அவர்களுக்கு அவர்களுடைய மனைவிமார்களையும், அவர்களுடைய வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்களையும் பற்றி நாம் கடமையாக்கியுள்ளதை நன்கறிவோம்; உமக்கு ஏதும் நிர்ப்பந்தங்கள் ஏற்படாதிருக்கும் பொருட்டே (விதி விலக்களித்தோம்); மேலும் அல்லாஹ் மிக மன்னிப்பவன்; மிக்க அன்புடையவன். |
19 | 58:12. ஈமான் கொண்டவர்களே! நீங்கள் (நம்) தூதருடன் இரகசியம் பேச நேரிட்டால் உங்கள் இரகசியத்திற்கு முன்னர் ஏதேனும் தான தர்மத்தை முற்படுத்துங்கள். இது உங்களுக்கு, நன்மையாகவும், (உள்ளத்திற்குத்) தூய்மையாகவும் இருக்கும், ஆனால் (தான தர்மம் செய்வதற்கு) நீங்கள் வசதிபெற்றிராவிடின் - நிச்சயமாக அல்லாஹ் மிக மன்னிப்பவன்; மிக்க கிருபையுடையவன். | 58:13. நீங்கள் உங்கள் இரகசியப் பேச்சுக்கு முன்னால் தான தர்மங்கள் முற்படுத்திவைக்க வேண்டுமே என்று அஞ்சுகிறீர்களா? அப்படி நீங்கள் செய்ய (இயல)வில்லையெனின் (அதற்காக தவ்பா செய்யும்) உங்களை அல்லாஹ் மன்னிக்கிறான்; ஆகவே, தொழுகையை முறைப்படி நிலைநிறுத்துங்கள்; இன்னும், ஜகாத்தும் கொடுத்து வாருங்கள்; மேலும் அல்லாஹ்வுக்கும், அவன் தூதருக்கும் வழிப்படுங்கள்; அன்றியும் நீங்கள் செய்பவற்றையெல்லாம் அல்லாஹ் நன்கு அறிகிறான். |
20 | 60:10. ஈமான் கொண்டவர்களே! முஃமினான பெண்கள் ஹிஜ்ரத் செய்து (நாடு துறந்தவர்களாக) உங்களிடம் வந்தால், அவர்களை நீங்கள் பரிசோதித்துக் கொள்ளுங்கள்; அல்லாஹ் அவர்கள் ஈமானை நன்கறிந்தவன்; எனவே அவர்கள் முஃமினான (பெண்கள்) என நீங்கள் அறிந்தால், காஃபிர்களிடம் அவர்களைத் திருப்பியனுப்பி விடாதீர்கள்; ஏனெனில், அந்த பெண்கள் அந்த ஆண்களுக்கு அனுமதிக்கப்பட்டவர்களில்லை. அந்த ஆண்கள் இந்தப் பெண்களுக்கு அனுமதிக்கப்பட்டவர்களில்லை. (ஆனால், இப் பெண்களுக்காக) அவர்கள் செலவு செய்திருந்ததை அவர்களுக்குக் கொடுத்து விடுங்கள்; அன்றியும் நீங்கள் அப்பெண்களுக்குரிய மஹரை கொடுத்து அவர்களை விவாகம் செய்து கொள்வது உங்கள் மீது குற்றமில்லை; மேலும் நிராகரித்துக் கொண்டிருக்கும் பெண்களின் விவாக பந்தத்தை நீங்கள் பற்றிப்பிடித்துக் கொள்ள வேண்டாம்; அன்றியும், நீங்கள் செலவு செய்திருந்ததை (அவர்கள் போய்ச் சேருவோரிடம்) கேளுங்கள்; (அவ்வாறே ஈமான் கொண்டு உங்களிடம் வந்து விட்டோருக்காகத்) தாங்கள் செலவு செய்ததை அவர்கள் (உங்களிடம்) கேட்கலாம் - இதுவே அல்லாஹ்வுடைய கட்டளையாகும்; உங்களிடையே அவன் (இவ்வாறே) தீர்ப்பு வழங்குகிறான் - மேலும், அல்லாஹ் நன்கறிந்தவன்; ஞானம் மிக்கவன். | 9:5. (போர் விலக்கப்பட்ட துல்கஃதா, துல்ஹஜ்ஜு, முஹர்ரம், ரஜபு ஆகிய நான்கு) சங்ககைமிக்க மாதங்கள் கழிந்து விட்டால் முஷ்ரிக்குகளைக் கண்ட இடங்களில் வெட்டுங்கள், அவர்களைப் பிடியுங்கள்; அவர்களை முற்றுகையிடுங்கள், ஒவ்வொரு பதுங்குமிடத்திலும் அவர்களைக் குறிவைத்து உட்கார்ந்திருங்கள் - ஆனால் அவர்கள் (மனத்திருந்தி தம் பாவங்களிலிருந்து) தவ்பா செய்து மீண்டு, தொழுகையையும் கடைப்பிடித்து (ஏழைவரியாகிய) ஜகாத்தும் (முறைப்படிக்) கொடுத்து வருவார்களானால் (அவர்களை) அவர்கள் வழியில் விட்டுவிடுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்போனாகவும், கிருபையுடையவனாகவும் இருக்கின்றான். |
21 | 73:2. இரவில் - சிறிது நேரம் தவிர்த்து (தொழுகைக்காக எழுந்து) நிற்பீராக; | 73:20. நிச்சயமாக நீரும், உம்முடன் இருப்போரில் ஒரு கூட்டத்தாரும் இரவில் மூன்றில் இரு பாகங்களுக்குச் சமீபமாகவோ, இன்னும் அதில் பாதியோ இன்னும் இதில் மூன்றில் ஒரு பாகத்திலோ (வணக்கத்திற்காக) நிற்கிறீர்கள் என்பதை உம்முடைய இறைவன் நிச்சயமாக அறிவான்; அல்லாஹ்வே இரவையும் பகலையும் அளவாகக் கணக்கிடுகின்றான்; அதை நீங்கள் சரியாகக் கணக்கிட்டுக் கொள்ள மாட்டீர்கள் என்பதையும் அவன் அறிகிறான்; ஆகவே, அவன் உங்களுக்கு மன்னிப்பு அளித்து விட்டான். எனவே, நீங்கள் குர்ஆனில் உங்களுக்குச் சுலபமான அளவு ஓதுங்கள். (ஏனெனில்) நோயாளிகளும்; அல்லாஹ்வின் அருளைத் தேடியவாறு பூமியில் செல்லும் வேறு சிலரும், அல்லாஹ்வின் பாதையில் போர் செய்யும் மற்றும் சிலரும், உங்களில் இருப்பார்கள் என்பதை அவன் அறிகிறான்; ஆகவே, அதிலிருந்து உங்களுக்குச் சுலபமான அளவே ஓதுங்கள்; தொழுகையை முறையாக நிலை நிறுத்துங்கள்; இன்னும் ஜகாத்தும் கொடுத்து வாருங்கள்; அன்றியும் (தேவைப்படுவோருக்கு) அல்லாஹ்வுக்காக அழகான கடனாக கடன் கொடுங்கள்; நன்மைகளில் எவற்றை நீங்கள் உங்கள் ஆத்மாக்களுக்காச் செய்து (மறுமைக்காக) முற்படுத்துகிறீர்களோ, அவற்றை நீங்கள் அல்லாஹ்விடம் மிகவும் மேலானதாகவும், நற்கூலியில் மகத்தானதாகவும் காண்பீர்கள்; அன்றியும் அல்லாஹ்விடமே மன்னிப்புக் கோருங்கள் - நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவன், மிக்க கிருபையுடையவன். |
மேற்கண்ட பட்டியலில் உள்ள வசனங்களை அல்லாஹ் ஏன் இரத்து செய்தான்? காரணமென்ன? போன்றவைகள் பற்றி தேவைப்பட்டால் தனி கட்டுரைகளாக ஆய்வு செய்வோம்.
அடுத்த கட்டுரையில் இஸ்லாமிய அறிஞர் இப்னு ஸலமா அவர்கள் கொடுத்த இரத்து செய்யப்பட்ட பட்டிலைக் காண்போம்.
இந்த கட்டுரைக்கு உதவிய தொடுப்புக்கள்:
- Abrogated Verses Of the Quran - Evidence from Islamic Sources (Answering Islam)
- List of Abrogations in the Qur'an (Wiki Islam)
- Abrogation and the Koran (Political Islam)
இதர குர்-ஆன் ஆய்வுக்கட்டுரைகள்
உமரின் இதர கட்டுரைகள்/மறுப்புக்கள்
Source: https://www.answering-islam.org/tamil/authors/umar/arabic_quran/abrogation_suyuti_list.html