(2016ம் ஆண்டின் – இயேசு உயிர்த்தெழுந்த நாள் சிறப்புக் கட்டுரை)
முன்னுரை: இன்று 2016ம் ஆண்டு, மார்ச் மாதம் 27ம் தேதி, நான் திருச்சபையில் ஆராதனையில் உட்கார்ந்து இருந்தேன். இன்று உலகமெங்கும் கிறிஸ்தவர்கள் இயேசுவின் உயிர்த்தெழுந்த நாளை நினைவு கூறுகிறார்கள். என் சபையின் போதகர் இன்று 1 கொரிந்தியர் 15ம் அத்தியாயத்திலிருந்து பிரசங்கம் செய்தார். அப்போது எனக்கு தோன்றிய ஒரு முக்கியமான விஷயத்தைப் பற்றி சுருக்கமாக இந்த கட்டுரையில் எழுதவுள்ளேன்.
இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவத்தின் அஸ்திபாரங்கள் என்ன? முஹம்மதுவின் நபித்துவத்திற்கு சாட்சி யார்? பவுலடியாரின் சீஷத்துவத்திற்கு சாட்சி யார்? இந்த மூன்று கேள்விகள் இக்கட்டுரையில் கேட்கப்பட்டு ஆய்வு செய்யப்படுகிறது.
1) முஹம்மது பற்றிய கிறிஸ்தவர்களின் நிலைப்பாடு
முஸ்லிம்கள் முஹம்மது என்பவரை தீர்க்கதரிசியாக (இறைத்தூதராக) கருதுகிறார்கள், இவர்களின் நம்பிக்கைக்கு ஆதாரம் குர்-ஆன் ஆகும். கிறிஸ்தவர்கள் முஹம்மதுவை ஒரு "கள்ளத் தீர்க்கதரிசி" என்று நம்புகிறார்கள், இவர்களின் நம்பிக்கைக்கு ஆதாரம் பைபிள் ஆகும்.
முஹம்மதுவை ஒரு தீர்க்கதரிசியாக கிறிஸ்தவர்கள் ஏற்றுக் கொள்ளவேண்டும் என்று முஸ்லிம்கள் பெரும் முயற்சி எடுக்கிறார்கள், ஆனால், அவர்களால் வெற்றிப்பெற முடிவதில்லை. சில முஸ்லிம் அறிஞர்கள், பைபிளின் அடிப்படையிலேயே முஹம்மதுவின் நபித்துவத்தை நிருபிக்க இமாலய முயற்சி எடுக்கிறார்கள், ஆனால், அதுவும் தோல்வி அடைகிறது.
பைபிளின் படி, முஹம்மது ஒரு பொய் தீர்க்கதரிசி ஆவார். இயேசுவின் போதனைகளின் படியும், அப்போஸ்தலர்களின் போதனைகளின் படியும், முஹம்மது ஒரு பொய்யராவார்.
2) பரிசுத்த பவுலடியார் பற்றிய முஸ்லிம்களின் நிலைப்பாடு
புதிய ஏற்பாட்டின் படி, பவுலடியார் ஒரு அப்போஸ்தலர் ஆவார். இயேசுவின் சீடர்களாகிய பரிசுத்த பேதுரு, யோவான் போன்ற வரிசையில், பவுலடியாரையும் கிறிஸ்தவம் "அப்போஸ்தலர்" என்று அழைக்கிறது. ஆனால், முஸ்லிம்களின் படி, "பவுலடியார் ஒரு கள்ள சீடர், இயேசு போதிக்காதவற்றை போதித்தவர்". மேலும், "இயேசு தாம் ஒரு தீர்க்கதரிசி மட்டுமே என்று போதித்தார், ஆனால், பவுல் வந்து இதனை மாற்றி, இயேசு தேவகுமாரன் என்றும், இயேசுவிற்கு தெய்வீகத்தன்மை உண்டு என்றும் போதித்தார்" என்று முஸ்லிம்கள் பரிசுத்த பவுலடியார் மீது குற்றம் சுமத்துகிறார்கள்.
ஒரு சராசரி மனிதன் புதிய ஏற்பாட்டை படிப்பாரானால், முஸ்லிம்களின் மேற்கண்ட நிலைப்பாட்டில் உள்ள பிழைகளை சுலபமாக கண்டுபிடிப்பார். இந்த சவாலை ஏற்கவிரும்பும் முஸ்லிம்கள் புதிய ஏற்பாட்டை படிக்க இன்று முதல் ஆரம்பிக்கட்டும்.
3) கிறிஸ்தவத்தின் அஸ்திபாரமாகிய இயேசுவின் உயிர்த்தெழுதல் பற்றிய பரிசுத்த பவுலடியாரின் போதனைகளுக்கு சாட்சிகள் உண்டா?
கிறிஸ்தவத்தின் அஸ்திபாரம் இயேசுவின் உயிர்த்தெழுதல் ஆகும். இதனை சுருக்கமாக பரிசுத்த பவுலடியார், கொரிந்தியருக்கு எழுதிய நிருபத்தில் எழுதுகிறார்.
1 கொரிந்தியர் 15:14
15:14 கிறிஸ்து எழுந்திருக்கவில்லையென்றால், எங்கள் பிரசங்கமும் விருதா, உங்கள் விசுவாசமும் விருதா.
மேற்கண்ட வசனத்தில் "கிறிஸ்தவத்தின் நம்பிக்கை" இயேசுவின் உயிர்த்தெழுதலில் அடங்கியுள்ளது என்பதை பரிசுத்த பவுலடியார் குறிப்பிடுகிறார். 1 கொரிந்தியர் 15ம் அத்தியாயத்தை முழுவதுமாக படிக்கவும், நான் இங்கு சில வசனங்களை மட்டும் மேற்கோள் காட்டுகிறேன்.
இயேசுவின் உயிர்த்தெழுதலுக்கு யார் சாட்சிகள்? இதனை மக்கள் நம்புவது எப்படி?
பவுலடியார் ஒருவர் மட்டும் இயேசுவின் உயிர்த்தெழுதலுக்கு சாட்சியாக இருந்திருந்தால், முஸ்லிம்களின் நிலைப்பாட்டில் நியாயம் இருக்கிறது என்று நாம் கருதலாம். ஆனால், இயேசுவின் உயிர்த்தெழுதலுக்கு அவரது உள்வட்ட சீடர்கள் தான் முதலாவது சாட்சிகள் என்று பவுலடியார் குறிப்பிடுகிறார், இதனை வரிசைப்படுத்தி எழுதுகிறார்:
1 கொரிந்தியர் 15:3 - 8
15:3 நான் அடைந்ததும் உங்களுக்குப் பிரதானமாக ஒப்புவித்ததும் என்னவென்றால், கிறிஸ்துவானவர் வேதவாக்கியங்களின்படி நமது பாவங்களுக்காக மரித்து,
15:4 அடக்கம்பண்ணப்பட்டு, வேதவாக்கியங்களின்படி மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்து,
15:5 கேபாவுக்கும், பின்பு பன்னிருவருக்கும் தரிசனமானார்.
15:6 அதன்பின்பு அவர் ஐந்நூறுபேருக்கு அதிகமான சகோதரருக்கும் ஒரேவேளையில் தரிசனமானார்; அவர்களில் அநேகர் இந்நாள்வரைக்கும் இருக்கிறார்கள், சிலர் மாத்திரம் நித்திரையடைந்தார்கள்.
15:7 பின்பு யாக்கோபுக்கும், அதன்பின்பு அப்போஸ்தலரெல்லாருக்கும் தரிசனமானார்.
15:8 எல்லாருக்கும் பின்பு, அகாலப்பிறவிபோன்ற எனக்கும் தரிசனமானார்.
இயேசுவின் உயிர்த்தெழுதல் பற்றி பவுலடியார் போதனை செய்துள்ளார், உயிர்த்தெழுந்த இயேசுவை முதலாவது கண்டவர் பவுலடியார் ஆவாரா? இல்லை! இவர் உயிர்த்தெழுந்த இயேசுவை கடைசியாக கண்டவர் ஆவார்.
மேலேயுள்ள வசனங்களை கவனிக்கும் போது, உயிர்தெழுந்த இயேசுவானவர்:
அ) பேதுருவிற்கு காணப்பட்டார்
ஆ) இதர சீடர்களுக்கு காணப்பட்டார்
இ) அதன் பின்பு, ஐந்நூறு பேருக்கும் அதிகமானவர்களுக்கு காணப்பட்டார்
ஈ) கடைசியாக, பவுலடியாருக்கு காணப்பட்டார்.
இயேசுவின் சீடர்களில் சிலரும், அந்த ஐந்நூறு பேர்களில் பலரும் இந்த நிருபத்தை பவுலடியார் எழுதிய போது உயிரோடு இருந்துள்ளார்கள். அக்காலக்கட்டத்தில், பவுலடியாரின் போதனையின் நம்பகத்தன்மையை சரி பார்க்க விரும்புகிறவர்கள், உயிரோடு இருந்த இதர சீடர்களிடம் கேட்டு தெரிந்துக் கொள்ளலாம். உயிர்த்தெழுந்த இயேசுவை பார்த்தவர்களில் பவுலடியார் தம்மை "கடைசியாக குறிப்பிடுகிறார்" என்பதை கவனிக்கவும்.
பரிசுத்த பவுலடியார் பொய் சொல்கிறார் என்று முஸ்லிம்கள் கூறுவார்களானால், முதலாவது அவர்கள் இயேசுவின் முக்கிய சீடர்களாகிய பேதுரு, யோவான் போன்ற சீடர்களைத் தான் குற்றப்படுத்த வேண்டும். மேலும் இதர 500 சீடர்களை குற்றப்படுத்தவேண்டும். இந்த வசனத்தில் "நாங்கள்" என்று பவுலடியார் குறிப்பிடுவது, இயேசுவின் சீடர்களையும் சேர்த்துத் தான்.
1 கொரிந்தியர் 15:15 மரித்தோர் உயிர்த்தெழாவிட்டால், தேவன் எழுப்பாத கிறிஸ்துவை அவர் எழுப்பினாரென்று நாங்கள் தேவனைக்குறித்துச் சாட்சிசொன்னதினாலே, தேவனுக்காகப் பொய்ச்சாட்சி சொல்லுகிறவர்களாகவும் காணப்படுவோமே.
ஆனால், இயேசுவின் இந்த சீடர்கள் பற்றி 7ம் நூற்றாண்டில் வந்த குர்-ஆன் என்ன சொல்கிறது? இச்சீடர்கள் பொய் சொல்பவர்கள் என்றோ, இவர்களின் விசுவாசம் கெடுக்கப்பட்டுவிட்டதென்றோ சொல்கிறதா? குர்-ஆன் வசனத்தைப் பாருங்கள்:
குர்-ஆன் 61:14. ஈமான் கொண்டவர்களே! மர்யமின் குமாரர் ஈஸா (தம்) சீடர்களை நோக்கி, "அல்லாஹ்வுக்காக எனக்கு உதவி செய்வோர் யார்?" எனக் கேட்க, சீடர்கள், "நாங்கள் அல்லாஹ்வின் உதவியாளர்களாக இருக்கின்றோம்" என்று கூறியதுபோல், நீங்கள் அல்லாஹ்வின் உதவியாளர்களாக ஆகிவிடுங்கள் - எனினும், இஸ்ராயீல் மக்களில் ஒரு கூட்டம் ஈமான் கொண்டது; பிறிதொரு கூட்டமோ நிராகரித்தது; ஆகவே ஈமான் கொண்டவர்களுக்கு, அவர்களுடைய பகைவர்களுக்கு எதிராக உதவி அளித்தோம் - அதனால் அவர்கள் வெற்றியாளராய் ஆகிவிட்டார்கள். (முஹம்மது ஜான் தமிழாக்கம்)
இந்த வசனத்தில் வரும் "அவர்கள் வெற்றியாளராய் ஆகிவிட்டார்கள்" என்பது இயேசுவின் சீடர்களைத் தான் குறிக்கும். இந்த வசனம் இறக்கப்பட்டது 7ம் நூற்றாண்டில், இயேசுவின் சீடர்களும் பவுலடியாரும் வாழ்ந்த காலம் முதலாம் நூற்றாண்டாகும். இந்த வசனத்தின் படி, வெற்றியாளர்களாக அல்லாஹ் மாற்றியது முதல் நூற்றாண்டில் வாழ்ந்த கிறிஸ்தவர்களாகிய இயேசுவின் சீடர்கள் மற்றும் பவுலடியாரைத் தான். மேலும் இவர்களின் போதனைகளின் படி வாழ்ந்த கிறிஸ்தவர்களைத் தான்.
இதுவரை கண்ட விஷயங்களின் படி, பரிசுத்த பவுலடியாரின் போதனைகளுக்கு முதலாவது சாட்சிகள், ஐந்நூறுக்கும் அதிகமான இயேசுவின் சீடர்கள் ஆவார்கள்.
பரிசுத்த பவுலடியாரின் செய்திக்கு இன்னொரு ஆதாரத்தையும் இயேசு கொடுத்திருந்தார், அது "அற்புதங்களும் அடையாளங்களுமாகும்". இறைவன் தன் இறைத்தூதர்களை அனுப்பும் போது, மக்கள் நம்பிக்கை கொள்வதற்காக, அற்புதங்களைச் செய்யும் அதிகாரத்துடன் அனுப்புவார். இதனை பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகளாகிய மோசே முதற்கொண்டு, இயேசுவின் அப்போஸ்தலர் பவுலடியார் வரை நாம் பரவலாக காணலாம். பவுலடியார் மூலமாக இயேசு செய்த அற்புதங்களை காண புதிய ஏற்பாட்டின் அப்போஸ்தல நடபடிகள் புத்தகத்தை படிக்கவும்.
சுருக்கமாக சொல்வதென்றால், இயேசுவின் உயிர்த்தெழுதல் கிறிஸ்தவத்தின் அஸ்திபாரம் ஆகும், இதனை இயேசுவின் சீடர்களோடு கூட சேர்ந்து, பவுலடியாரும் போதனை செய்துள்ளார். பவுலடியாரின் போதனைகளுக்கு இரண்டு வகையான சாட்சிகளை ஆதாரங்களை தேவன் கொடுத்திருந்தார். முதலாவது ஆதாரம், உயிர்த்தெழுந்த இயேசுவைக் கண்ட ஐந்நூறுக்கும் அதிகமான சீடர்கள், இரண்டாவது ஆதாரம், பவுலடியார் மூலமாக இயேசு செய்த அற்புதங்கள் ஆகும். இவ்விவரங்கள் முஸ்லிம்களின் பவுலடியார் பற்றிய குற்றச்சாட்டை தவிடுபொடியாக்கிவிடுகிறது.
இப்போது, முஹம்மதுவின் செய்திக்கு என்ன சாட்சிகளை அல்லாஹ் கொடுத்துள்ளான் என்பதை சுருக்கமாக பார்ப்போம்.
4) இஸ்லாமின் அஸ்திபாரமாகிய முஹம்மதுவின் நபித்துவமும், மற்றும் குர்-ஆனின் நம்பகத்தன்மையை நிருபிக்கும் சாட்சிகளும்
இஸ்லாமின் முதலாவது அஸ்திபாரம் "முஹம்மதுவின் நபித்துவம் ஆகும்", இரண்டாவது அஸ்திபாரம் குர்-ஆன் ஆகும். முஹம்மதுவின் நபித்துவத்தின் வெளிப்பாடு தான் குர்-ஆன். குர்-ஆனில் உள்ளவைகளை முஹம்மது போதித்தார். குர்-ஆனில் இல்லாதவைகளையும் முஹம்மது போதித்தார், அதனை ஹதீஸ்கள் என்று கூறுவார்கள்.
பரிசுத்த பவுலடியாரின் "அப்போஸ்தலத்துவத்தையும், செய்தியையும் மேலே ஆய்வு செய்தது போல, முஹம்மதுவின் நபித்துவத்தையும், செய்தியையும் ஆய்வு செய்வோம்".
அ) முஹம்மது ஒரு இறைத்தூதர் என்றுச் சொல்வதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது?
ஆ) குர்-ஆன் இறைவேதம் என்றுச் சொல்வதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது?
இந்த கேள்விகளை நாம் முஸ்லிம்களிடம் கேட்டால்,
முஹம்மது இறைத்தூதர் என்று குர்-ஆன் சொல்கிறது என்று முதலாவது கேள்விக்கு பதில் சொல்வார்கள்.
குர்-ஆன் இறைவேதம் என்று முஹம்மது சொல்கிறார் என்று இரண்டாவது கேள்விக்கு பதில் சொல்வார்கள்.
இது எப்படிப்பட்ட வேடிக்கையாக இருக்கிறது என்று பாருங்கள். முஹம்மதுவிற்கு குர்-ஆன் சாட்சி, குர்-ஆனுக்கு முஹம்மது சாட்சி. இவ்விரண்டிற்கு வெளியே இஸ்லாமில் எந்த ஒரு ஆதாரமும் இல்லை. இஸ்லாம் இறைவனால் (பைபிளின் தேவனால்) கொண்டுவரப்பட்ட மார்க்கம் என்றுச் சொல்வதற்கு, எந்த ஒரு ஆதாரத்தையும் இஸ்லாம் கொடுப்பதில்லை. பைபிளின் தீர்க்கதரிசிகளுக்கு தேவன் கொடுத்து அனுப்பியது போல, எந்த ஒரு அற்புதமும் முஹம்மதுவிற்கு கொடுக்கப்படவில்லை.
பரிசுத்த பவுலடியாருக்கு முன்னோடிகளாக, இயேசுவின் சீடர்கள் இருந்தார்கள், பவுலடியாரின் செய்தியை சரி பார்க்கும் உரைக்கற்களாக அப்போஸ்தலர்கள் இருந்தார்கள். ஆனால், முஹம்மதுவின் செய்தியை பரிசோதிக்க, இயேசுவிற்கு பிறகு முஹம்மதுவிற்கு முன்பு, எந்த ஒரு தீர்க்கதரிசியும் இல்லை, இதனை இஸ்லாமே சொல்கிறது. முஹம்மதுவின் செய்தியின் நம்பகத்தன்மையை சரிப்பார்க்க இருந்த ஒரே ஆதாரம் பைபிள் தான். இதனை குர்-ஆன் பல இடங்களில் சொல்லியுள்ளது, முந்தைய வேதங்களை மெய்ப்பிக்க குர்-ஆன் வந்தது என்றுச் சொல்லும் குர்-ஆன் வசனங்களே, பைபிளை நீதிபதியின் இருக்கையில் அமர்த்திவிட்டு, குற்றவாளி கூண்டில் தன்னை நிறுத்திக்கொண்டது. எந்த பைபிளை நிருபிக்க குர்-ஆன் வந்ததோ, அந்த பைபிளுக்கு எதிராக குர்-ஆன் போதனை செய்துள்ளது.
ஆக, இஸ்லாமின் முதலாவது அஸ்திபாரமாகிய "முஹம்மதுவின் நபித்துவத்தை" நிருபிக்கும் ஆதாரம் இஸ்லாமிடம் இல்லை என்பதை இதன் மூலம் அறியலாம்.
இரண்டாவதாக, பரிசுத்த பவுலடியாரின் மூலமாக இயேசு செய்த அற்புதங்களைப்போல, ஒரு அற்புதத்தையும் முஹம்மது மூலமாக அல்லாஹ் செய்யவில்லை. வியாதிகளை குணமாக்குவது, மரித்தவர்களை உயிரோடு எழுப்புவது போன்ற அற்புதங்கள் ஒன்றையும் முஹம்மது செய்து தன் "நபித்துவத்தையும், குர்-ஆன் இறைவேதம் தான்" என்பதையும் நிருபித்துக் கொள்ளவில்லை.
முடிவுரை: இச்சிறிய கட்டுரையில், கிறிஸ்தவத்தின் அஸ்திபாரமாகிய "இயேசுவின் உயிர்த்தெழுதல் பற்றி பவுலடியாரின் செய்தியை பார்த்தோம்". தன் செய்திக்கு சாட்சிகளை பவுலடியார் கோர்வையாக கொடுத்துள்ளதை, 1 கொரிந்தியர் 15ம் அத்தியாயத்திலிருந்து எடுத்துக் காட்டினோம். பழைய ஏற்பாட்டின் படி, ஒரு வழக்கிற்கு இரண்டு சாட்சிகள் தேவைப்படுகிறது, ஆனால், இயேசுவின் உயிர்த்தெழுதலுக்கு 500க்கும் அதிகமானோரின் சாட்சி இருப்பதைக் கண்டோம்.
இதே போல, இஸ்லாமின் அஸ்திபாரமாகிய முஹம்மதுவின் நபித்துவம் மற்றும் குர்-ஆன் பற்றி என்னென்ன ஆதாரங்களை இஸ்லாம் கொடுத்துள்ளது என்று ஆய்வு செய்யும் போது, நமக்கு எந்த ஒரு சாட்சியும் கிடைக்கவில்லை. முஹம்மதுவைப்போல கள்ளத்தீர்க்கதரிசிகள் அனேகர் எழும்புவார்கள், தங்கள் போதனைகளை ஒரு புத்தகமாக மாற்றி, இது தான் இறைவேதம் என்றுச் சொல்வார்கள். நீ ஒரு இறைத்தூதன் என்பதற்கு என்னய்யா ஆதாரம் என்று கேட்டால், புத்தகத்திற்கு நேராக தங்கள் விரலை நீட்டுவார்கள். இந்த புத்தகம் இறைவேதம் தான் என்பதற்கு என்ன ஆதாரம் என்று கேட்டால், இறைத்தூதர் நான் சொல்கிறேன் என்றுச் சொல்வார்கள். ஏதாவது அற்புதம் செய்து உம் நபித்துவத்தை நிருபியுங்கள் என்று கேட்டால், இந்த புத்தகம் தான் என் அற்புதம் என்றுச் சொல்வார்கள். இப்படிப்பட்டவரை முஸ்லிம்கள் நபி என்று நம்புவார்களா? நிச்சயமாக இல்லை, இதே போலத்தான் கிறிஸ்தவர்களும் முஹம்மதுவை தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை.
குர்-ஆனின் இலக்கிய நடை "அது இறைவேதம் என்பதற்கு ஆதாரம்" என்று முஸ்லிம்கள் சொன்னால், திருக்குறளும், இதர பண்டைய இலக்கியங்களும் குர்-ஆனை மிஞ்சும் இலக்கிய நடையில் இருப்பதை இவர்கள் கவனிக்க தவறுகிறார்கள் என்று அர்த்தம். மேலும், குர்-ஆன் இறைவேதம் என்று எண்ணும் முஸ்லிம்கள், இதர மொழி/தமிழ் இலக்கியங்களையும் இறைவேதம் என்று நம்பவேண்டும்.
குர்-ஆன் சொல்லும் செய்தி வேறு நூலில் இல்லை என்று முஸ்லிம்கள் சொன்னால், இது மிகப்பெரிய பொய்யாகும். நான் சவால் விடுகிறேன், குர்-ஆனை விட கருத்தில், கட்டளைகளில் மேன்மையுள்ள நூல்கள் உலகில் அனேகம் உள்ளன. உண்மையைச் சொல்லவேண்டுமென்றால், தரத்தில் குர்-ஆனின் சில கட்டளைகள் மிகவும் கேவலமானதாகவும், சமுதாயத்திற்கு கேடு விளைவிக்கும் கட்டளைகளாகவும் இருக்கின்றன (உதாரணத்திற்கு, ஒரு முஸ்லிம் நான்கு திருமணங்களைச் செய்ய குர்-ஆன் அனுமதிப்பதையும், அடிமைப்பெண்களோடு விபச்சாரம் புரிவதை குர்-ஆன் அனுமதிப்பதையும் சொல்லலாம்.)
ஆக, இயேசு உயிர்த்தெழுந்த நாளை கிறிஸ்தவர்கள் நினைவு கூறும் இந்த நாளில், முஹம்மதுவின் நபித்துவம், பவுலின் அப்போஸ்தலத்துவத்திற்கு முன்பாக மண்டியிட்டுள்ளதை காணமுடிகின்றது. அருமையான அப்போஸ்தலர்களை கொடுத்த இயேசுவையும், இவ்வப்போஸ்தலர்கள் செய்த ஊழியத்தையும் பார்த்து நாங்கள் பிரமிக்கிறோம். இயேசுவை துதிக்கிறோம். அவர் உயிர்த்தெழுந்தது போல, எங்களையும அவரது வருகையில் உயிர்ப்பிப்பார் என்ற விசுவாசத்துடன், இவ்வுலகப் பயணத்தை தைரியத்துடன் தொடருகிறோம்.