(உமரின் தம்பி சௌதி அரேபியாவில் வேலை பார்க்கிறான். அவன் இஸ்லாமை தழுவியதால் பல சூடான விவாதங்களை தன் அண்ணன் உமரிடம் செய்வான். சமீப கால ஜாகிர் நாயக் விவகாரம் பற்றிய ஒரு சின்ன உரையாடல் இது).
தம்பி: ஹலோ, உமரண்ணா!
உமர்: ஹலோ தம்பி. எப்படி இருக்கிறாய்?
தம்பி: அல்லாஹ்வின் அருளால் நான் நலமாக இருக்கிறேன். நீங்க எப்படி இருக்கீங்க?
உமர்: கர்த்தரின் கிருபையால், சுகமாக இருக்கிறேன்.
தம்பி: ரமளான் மாதத்தில் பாரா அவர்களின் புத்தகம் பற்றி விமர்சனம் எழுதினீங்க! 15 பாகத்திற்கு பிறகு திடீரென்று நிறுத்திட்டீங்க, என்ன காரணம்? உங்க காட்டேரி தாகத்தை தணிக்கும் அளவிற்கு நிலமெல்லாம் இரத்தம் புத்தகத்தில் குடிப்பதற்கு தேவையான இரத்தம் கிடைக்கவில்லையா உங்களுக்கு?
உமர்: என் ரமளான் கட்டுரைகளைப் பார்த்து ரொம்ப கோபமாக இருக்கிறாய் போல் தெரிகிறது! சும்மா சொல்லக்கூடாது, பாரா அவர்களின் புத்தகம் ஒரு அமுதசுரபி, எடுக்க எடுக்க சுரந்துக்கொண்டே இருக்கிறது.
தம்பி: சுரப்பது எது, அமிர்தமா?
உமர்: நிலமெல்லாம் இரத்தம் புத்தகத்திலிருந்து அமிர்தமா சுரக்கும்? இரத்தம் தான் சுரக்கும். எனக்கு தேவையான நிறைய சரக்கு அதில் இருக்கிறது. ரமளான் மாதத்தில் என்னுடைய ராடாரை பாரா அவர்கள் மீது ஃபோகஸ் செய்து ஸ்கான் செய்துக்கொண்டு இருந்தேன். நேரமின்மையின் காரணமாக, ரமளான் மாதம் முடியும் போது என்னால் 15 கட்டுரைகளை மட்டுமே எழுதமுடிந்தது. அதன் பிறகு தொடரலாம் என்று பார்த்தால், ரமளானின் கடைசி வாரத்தில் மதினாவில் ஒரு குண்டு வெடிப்பு பற்றிய செய்தி வந்தது. உடனே என் ராடாரை மதினாவின் பக்கம் திருப்பினேன். ஆனால், மறுபடியும் என் ராடாரை ஜாகிர் நாயக் பக்கம் திருப்பவேண்டிய அவசியம் வந்தது. அடேங்கப்பா! எவ்வளவு செய்திகளை முஸ்லிம்கள் கொடுத்துக்கொண்டு இருக்கிறார்கள். உலக ஊடகங்களை பிஸியாக வைத்திருப்பதில் இஸ்லாம் முதலாவது நிற்கிறது என்றுச் சொன்னால், மிகையாகாது. மதினா குண்டு வெடிப்பு, பிரான்ஸ் வன்முறை என்று சரமாரியாக முஸ்லிம் தீவிரவாதிகள் தங்கள் திறமையை பல கோணங்களில் காட்டிக்கொண்டே இருக்கிறார்கள். சும்ம சொல்லக்கூடாது, முஸ்லிம்களுக்கிடையில் நிறைய ஒற்றுமை இருக்கிறது. சர்வதேச அளவில் சகோதரத்துவத்தை நேர்த்தியாக நிலைநாட்டிக்கொண்டு இருக்கிறார்கள்.
தம்பி: போதும் போதும், நிறுத்துங்கள். நான் ஒரு முக்கியமான கேள்வியை உங்களிடம் கேட்க போன் செய்தேன்.
உமர்: என்ன கேள்வி?
தம்பி: டாக்டர் ஜாகிர் நாயக் அவர்கள் பற்றியது தான்.
உமர்: அடடே! இன்னொரு தலைப்பை எனக்கு எடுத்துக்கொடுக்க முடிவு செய்துட்டியா? சரி கேள்.
தம்பி: தாகா தாக்குதலில் ஈடுபட்ட ஒருவன், நான் ஜாகிர் நாயக்கின் ரசிகன் (Fan) என்று சொன்னதை பிடித்துக்கொண்டு, இந்த ஊடகங்கள் ஏன் இவ்வளவு பெரிய பிரச்சனையாக மாற்றினார்கள்? இதற்கு நெத்தியடியாக டாக்டர் ஜாகிர் நாயக் அவர்கள் அப்போதே கீழ்கண்டவாறு பதில் கொடுத்துள்ளார்.
என்னை பாங்களாதேஷில் 90% மக்களுக்கு மேல் தெரியும், மேலும் பாங்களாதேஷில் என் ரசிகர்களாக 50% க்கு மேல் இருக்கக்கூடும். என்னுடைய ரசிகர்களாக இருப்பதினால் மாத்திரம் நான் அவர்களை தீவிரவாத செயல்கள் செய்ய தூண்டியதாகச் சொல்வது உண்மையாகாது. இதுமட்டுமல்ல, அந்த நபர் இறைத்தூதர் முஹம்மது அவர்களின் தீவிர ரசிகனாகவும் இருப்பான், அதற்காக அவன் தீவிரவாத செயல்கள் செய்யும் படி முஹம்மது தான் தூண்டினார்/ஊக்குவித்தார் என்றுச் சொல்லமுடியுமா?
மூலம்: Amid Dhaka row, Zakir Naik calls IS 'un-Islamic' & The Daily Star protests Dr Naik's claims
இப்போது உங்களுக்கு என்னுடைய கேள்விகள் என்னவென்றால்:
1) ஒரு தலைவருக்கு ஒருவர் ரசிகனாக இருப்பதினால், அந்த நபர் செய்யும் குற்றங்களுக்கு அந்த தலைவர் பொறுப்பேற்க முடியுமா?
2) ஒருவரின் பேச்சுத்திறமையைப் பார்த்து கவரப்படுவது தவறா?
நீங்களும் ஜாகிர் நாயக் பற்றி கட்டுரைகளையும் எழுதியுள்ளீர்கள். மேற்கண்ட கேள்விகளுக்கு மட்டும் பதில் சொல்லுங்கள்.
உமர்: ஒரு நல்ல கேள்வியைத் தான் நீ கேட்டு இருக்கின்றாய். இதுவரை நீ சொன்ன விவரங்களில் எனக்கு "ரசிகன்" மற்றும் "கவரப்படுவது" என்ற இரண்டு வார்த்தைகள் பளிச்சென்று தெரிகின்றது, ஆங்கிலத்தில் சொல்வதானால், FAN மற்றும் INSPIRE என்பதாகும். உனக்கு நான் பதில் சொல்வதற்கு முன்பு, இந்த கேள்விக்கு பதில் சொல்: ரசிகன் (fan) என்றால் யார்?.
தம்பி: இரசிகன் என்றால் ஒருவருக்கு இன்னொருவரின் திறமை பிடித்திருந்தால், அந்த திறமையை ரசிப்பவன் ரசிகன் ஆவான். உதாரணத்திற்கு, நடிகர்களை எடுத்துக்கொண்டால், எம்ஜியாருக்கும் சிவாஜிக்கும் ரசிகர்கள் இருக்கிறார்கள். இவ்விருவரின் நடிப்பை ரசிப்பவர்கள் ரசிகர்கள் என்றுச் சொல்கிறோம். இன்ஸ்ஃபைர் என்றால்...
உமர்: போதும் நிறுத்து, நான் ரசிகன் என்றால் யார்? என்று மட்டுமே கேட்டேன், இன்ஸ்ஃபைர் பற்றி பிறகு கேட்கிறேன். ரசிகன் என்றால் யார் என்று தெளிவாக விளக்கினாய். இப்போது என் கேள்வி என்னவென்றால்: ஒருவன் ஜாகிர் நாயக்கிற்கு இரசிகன் என்று தன்னை அறிமுகம் செய்துக்கொண்டால் அதற்கு என்ன அர்த்தம்?
தம்பி: ... அது வந்து...
உமர்: என்ன யோசிக்கிறாய்...? ஜாகிர் நாயக் நடிகராக இருந்தால், அவரது நடிப்பை ரசிக்கிறார்கள் என்றுச் சொல்லமுடியும். அவர் ஒரு இசை அமைப்பாளராக இருந்தால், அவரது இசையை ரசிக்கிறார்கள் என்றுச் சொல்லமுடியும். கிரிக்கெட்டராக இருந்தாலும், அவரது ஆட்டத்தை இரசிப்பவராக இருக்கிறார் எனலாம். ஜாகிர் நாயக்கின் திறமை என்ன?
தம்பி: அவரது சிறப்பு பேச்சாற்றல், விவாத திறமை, எப்படி கேள்வி கேட்டாலும், கச்சிதமாக பதில் சொல்லக்கூடியவர்.
உமர்: சரியாகச் சொன்னாய். அவரது வெளிப்புற தோற்றத்தைப் பார்த்து யாரும் ரசிக்கமுடியாது! அவரது பேச்சுத்திறமை தான் அவரது பிளஸ் பாயிண்ட். உனக்கு அடுத்த கேள்வி. அவர் பேச்சுத்திறமையுள்ளவர் என்றால், அவர் எப்படிப்பட்ட பேச்சுக்களை பேசுகிறார்? அதாவது, அவர் ஒரு நகைச்சுவை பேச்சாளரா? அரசியல் பேச்சாளரா அல்லது தென்கச்சி கோ சுவாமிநாதம் போன்று "இன்று ஒரு தகவல்" என்ற நிகழ்ச்சியை தினமும் கொடுக்கும் ரேடியோ பேச்சாளாரா?
தம்பி: அவர் இஸ்லாமை தன் பேச்சுக்களால் பரப்பும் இஸ்லாமிய அறிஞர்.
உமர்: வெரிகுட், இப்போது தான் நீ சரியான வழிக்கு வந்தாய். ஆக, ஜாகிர் நாயக் ஒரு சிறந்த பேச்சாளர், தன் பேச்சுத்திறமையை வைத்துக்கொண்டு இஸ்லாமுக்கு ஊழியம் செய்கிறார் அப்படித்தானே!
தம்பி: ஆமாம், இப்போது இதுவா கேள்வி? நான் கேட்ட கேள்வி வேறு அல்லவா?
உமர்: நானும் அதற்குத்தான் வருகிறேன். இப்போது எனக்கு பதில் சொல்லு. ஜாகிர் நாயக்கின் இரசிகன் அவரிடம் எதனை ரசிக்கிறான்?
தம்பி: அவரது பேச்சு மற்றும் இஸ்லாமிய போதனையை இரசிக்கிறான்.
உமர்: அப்படியானால், ஒருவன் தன்னை ஜாகிர் நாயக்கின் இரசிகன் என்று அடையாளப்படுத்திக்கொண்டால், அவன் அவரது இஸ்லாமிய போதனைகளை இரசிக்கின்றான் என்று அர்த்தம், சரி தானே.
தம்பி: இருக்கட்டும், அவரது ரசிகர்கள் அவரது பேச்சுக்களை ரசிக்கிறார்கள். இதிலென்ன பிரச்சனை உங்களுக்கு?
உமர்: இப்படி அவரது பேச்சுக்களை அதிகமாக ரசிப்பவர்களில் ஒருவன் தீவிரவாதியாக இருந்தால்? இதன் அர்த்தமென்ன?
தம்பி: நான் ஒப்புக்கொள்ளமாட்டேன். நீங்கள் நான் கேட்ட கேள்வியை திசை திருப்புகிறீர்கள்? இன்னும் நீங்கள் இன்ஸ்ஃபைர் பற்றி ஒன்றுமே சொல்லவில்லை.
உமர்: நான் இன்ஸ்ஃபைர் பற்றிய விளக்கம் அளிப்பதற்கு தான் இவ்வளவு நேரம் பேசிக்கொண்டு இருக்கிறேன்.
தம்பி: இது அநியாயம். . .
உமர்: எது அநியாயம். சச்சினின் ரசிகன் சச்சினைப் போல பேட்டிங் செய்ய முயலுவது அநியாயமா? சிவாஜியின் இரசிகன் ஒருவேளை இன்னொரு நடிகனாக இருந்தால், அவரது நடிப்பினால் உந்தப்பட்டு (ஊக்குவிக்கப்பட்டு), அவரைப்போலவே சிறப்பாக நடிக்க முயற்சி செய்வது அநியாயமா?
தம்பி: நீங்க என்னத்தைச் சொல்லவருகிறீங்க...
உமர்: பார் தம்பி. முதலாவது, ஒருவர் இன்னொருவருக்கு ரசிகனாக இருப்பார், அது முத்திப்போச்சுன்னா, அதாவது அவர் இன்னும் அதிகமாக அந்த தலைவரின் திறமையை ரசிக்க ரசிக்க அவரைப் போலவே மாற முயற்சி எடுப்பார். மேலும் தனக்கு ரோல் மாடலாக இருக்கும் தலைவரை பார்த்துக்கொண்டே அவரது வழியில் நடக்க முயலுவார். இதைத் தான் இன்ஸ்ஃபைர் என்றுச் சொல்லுவோம்.
தம்பி: இதனை நான் ஒப்புக்கொள்ளமாட்டேன், இரசிகன் (Fan) என்பது வேறு, ஊக்குவித்தல் (Inspire) என்பது வேறு. இரண்டும் ஒன்றல்ல.
உமர்: தம்பி, நான் இவ்விரண்டும் ஒன்று என்றா சொன்னேன்? இவ்விரண்டும் வரிசையாக ஒன்றன் பின் ஒன்றாக வருபவை. முதல் நிலை ரசிகன், இரண்டாம் நிலை அவரால் அதிகமாக கவரப்படுவதல் ஆகும். சிலர் ரசிகர்களாகவே மட்டுமே நின்றுவிடுவார்கள். ஆனால், சிலர் இரசிகன் என்ற நிலையைத் தாண்டி, அடுத்த நிலைக்கு சென்றுவிடுவார்கள்.
தம்பி: எனக்கு புரியவில்லை.
உமர்: உனக்கு புரியும் படி சொல்கிறேன். ஒரு கிரிக்கெட் வீரர் 'நான் இளையராஜாவின் ரசிகன், அவரது இசையால் ஈர்க்கப்பட்டவன்' என்று சொல்கிறான் என்று வைத்துக்கொள்வோம். இதன் அர்த்தம் என்ன?
தம்பி: அந்த நபர், இளையராஜாவின் இசையை ரசிக்கிறார் என்று அர்த்தம்.
உமர்: ஆனால், இசைத்துறையில் புதிதாக நுழையும் இன்னொரு நபர் 'நான் இளையராஜாவின் ரசிகன், அவரது இசையால் ஈர்க்கப்பட்டவன்' என்றுச் சொன்னால் என்ன அர்த்தம்?
தம்பி: இளையராஜாவின் இசையை ரசிப்பதோடு நின்றுவிடாமல், தான் அமைக்கும் இசையில் இளையராஜாவின் சில யுக்திகளை, டெக்னிக்குகளை பயன்படுத்தி இசை அமைக்க முயற்சி செய்பவர் என்று அர்த்தம், அல்லது குறைந்தபட்சம், இளையராஜாவைப் போல தானும் ஒரு நாள் பெரிய இசையமைப்பாளராக வரவேண்டும் என்று விரும்பி அவரை தன் வழிகாட்டியாக வைத்திருப்பவர் என்று அர்த்தம்.
உமர்: சரியாகச் சொன்னாய். இதே போலத்தான், ஜாகிர் நாயக்கின் பேச்சை கேட்பவர்கள் பல கோடி பேர். அவர்களில் ரசிகர்களாக மட்டுமே இருப்பவர்கள் சில கோடி இருப்பார்கள். இவர்கள் அவரை நேசிப்பார்கள், அவரது பேச்சுக்களை ஆர்வமாக கேட்பார்கள், அனேகருக்கு சிபாரிசும் செய்வார்கள். இவர்கள் ரசிகர்கள் என்ற நிலையிலேயே நின்றுவிடுபவர்கள். ஆனால், ஒரு சிலர், ஜாகிர் நாயக்கின் பேச்சுக்களை அதிகமாக நேசிப்பார்கள். அவர் சொல்வதில் ஒரு பிழையும் இல்லை என்று நம்புவார்கள். ஏனென்றால், குர்ஆன், ஹதீஸ்கள் மற்றும் முஹம்மது பற்றி ஜாகிர் நாயக் உயர்த்திப் பேசுவதினால் இப்படி நினைப்பார்கள்.
இப்படிப்பட்டவர்களை சில இஸ்லாமிய தீவிரவாத குழுக்கள் தொடர்பு கொண்டு (இதில் ஜாகிர் நாயக்கிற்கு தொடர்பு இல்லை), இஸ்லாமுக்காக தீவிரவாத செயல்களில் ஈடுபடும்படி கேட்டுக்கொண்டால், ஆரம்பத்தில் ஜாகிர் நாயக்கின் ரசிகர்கள் மறுப்பார்கள். ஆனால், ஜாகிர் நாயக் போன்ற புகழ் பெற்ற அறிஞர்கள் கூட "இஸ்லாமுக்காக தீவிரவாத செயல்களில் ஈடுபடுவதை ஆதரிக்கிறார்கள்" என்று அவர்களுக்கு சொல்லப்படும் போது, அவர்கள் ஒப்புக்கொள்ளமாட்டார்கள். உடனே அவர்களுக்கு ஜாகிர் நாயக் மறைமுகமாக தீவிரவாதிகளை ஆதரிக்கும் வீடியோ பேச்சுக்களை காண்பித்து விளக்கமளிக்கும் போது, இப்படிப்பட்டவர்கள் தீவிரவாத செயல்களில் ஈடுபட ஒப்புக்கொள்வார்கள். தாங்கள் ஏற்கனவே ரசிகனாக இருக்கும், ஜாகிர் நாயக் கூட அங்கீகாரம் அளிக்கிறாரே என்று எண்ணி, தங்களை தீவிரவாதத்திற்கு விற்றுவிடுவார்கள்.
தம்பி: நீங்கள் சொல்வது நான்சென்ஸ். இதில் ஒரு லாஜிக்கும் இல்லை. ஜாகிர் நாயக் நேரடியாகவோ மறைமுகமாகவோ ஒரு போதும் தீவிரவாதிகளை ஆதரித்தது இல்லை. உங்களால் முடிந்தால் நிரூபிக்கமுடியுமா?
உமர்: நேரடியாக ஜாகிர் நாயக் தீவிரவாதத்தை ஆதரிக்கிறார் என்று நான் சொல்லவில்லை, மறைமுகமாக அதுவும் வாழைப்பழத்தில் ஊசியை நுழைப்பது போல, யாருக்கும் தெரியாமல் அவர் தீவிரவாதத்தை தன் பேச்சுக்களில் ஊக்குவிக்கிறார் என்று தான் குற்றம் சாட்டுகின்றேன்..
தம்பி: சத்தியமாக இல்லை. அவர் இப்படியெல்லம் செய்யவே இல்லை.
உமர்: தம்பி, முஸ்லிம்களைத் தவிர "மற்றவர்கள் எல்லோரும் முட்டாள்கள்" என்று நினைத்துவிட்டாயா? இந்திய அரசாங்கமும், உளவுத்துறையும், பத்திரிக்கையாளர்களும் ஜாகிர் நாயக்கின் குறிப்பிட்ட பேச்சுக்களில் மறைந்திருக்கும் உண்மைகளை கண்டுபிடிக்கமுடியாத அளவிற்கு அறியாமையில் இல்லை.
தம்பி: ஒரு உதாரணத்தை உங்களால் காண்பிக்கமுடியுமா?
உமர்: தாரளமாகச் சொல்லமுடியும். 9/11 பற்றியும் பின்லாடன் பற்றியும் கேள்வி கேட்கப்பட்டபோது, ஜாகிர் நாயக் அளித்த பதிலைப்பார்:
"ஒசாமா பின் லாடன் இஸ்லாமின் எதிரியுடன் போர் புரிந்தால், நான் அவரோடு இருக்கிறேன். எனக்கும் அவருக்கும் தனிப்பட்ட முறையில் நட்பு இல்லை... இருந்தாலும் நான் அவருக்காக இருக்கிறேன். ஒசாமா அமெரிக்கா என்ற மிகப்பெரிய தீவிரவாதியோடு தீவிரவாதம் புரிந்தால், நான் அவரோடு இருக்கிறேன். ஒவ்வொரு முஸ்லீமும் தீவிரவாதியாக இருக்கவேண்டும்....."
If he is fighting enemies of Islam, I am for him. I don't know him personally. If he terrorizing America, the biggest terrorist, I am with him. Every Muslim should be a terrorist. The thing is that if he is terrorizing a terrorist, he is following Islam.
மூலம்: விகிபீடியா
(இவரது இப்படிப்பட்ட பேச்சுக்கள் இஸ்லாமுக்கு கெட்டப்பெயரை கொண்டுவரும் என்று நான் 2008ம் ஆண்டு, மார்ச் மாதம் ஒரு கட்டுரையை எழுதினேன் -isakoran.blogspot.in/2008/03/ans-tamil-islam.html)
தம்பி: இந்த பதிலில் நீங்கள் ஆயுதங்கள் எடுத்து தீவிரவாத செயல்களில் ஈடுபடுங்கள் என்று ஜாகிர் நாயக் சொல்லியுள்ளார? அவரது இந்த பதில் எப்படி தீவிரவாதத்திற்கு வக்காளத்து வாங்குவதாக அமையும?
உமர்: நீ முஸ்லிம் ஆனதிலிருந்து உன் மூளை சிந்திக்கும் திறமையை இழந்திருக்கிறது என்று நினைக்கிறேன். வன்முறையை தூண்டவேண்டுமென்றால், நீ ஆயுதம் எடுத்து போரிடு என்று நேரடியாக சொல்லவேண்டியதில்லை. ஜாகிர் நாயக் சொன்ன பதிலைப்போல மறைமுகமாக சொன்னாலே போதும் யாருக்கு புரியவேண்டுமோ அவர்களுக்கு சரியாக புரிந்துவிடும்.
இப்போது அவரது கூற்றில் மறைந்திருக்கும் விஷத்தை உனக்கு அடையாளம் காட்டுகிறேன்.
பின் லாடன் யார்:
1) பின் லாடன் ஒரு தீவிரவாதி என்று உலகம் கண்டுக்கொண்டது. முக்கியமாக அமெரிக்காவில் உலக வர்த்தக மையங்கள் தாக்கப்பட்டதிலிருந்து அனைவருக்கு பின் லாடன் பற்றி தெரிந்துவிட்டது.
2) தானே அந்த தீவிரவாத செயலுக்கு காரணம் என்று பின்லாடனே ஒப்புக்கொண்டு விட்டார். இன்னும் பல இடங்களில் தாக்குதல்களை பின்லாடன் நடத்திக்காட்டியுள்ளார்.
3) பின் லாடன் தன்னை முஸ்லிம் என்று அடையாளம் காட்டிக்கொண்டார்.
ஜாகிர் நாயக் யார்:
1) திரு டாக்டர் ஜாகிர் நாயக் அவர்கள் புகழ் பெற்ற ஒரு முஸ்லிம் அறிஞர்.
2) தன் பேச்சுத்திறமையால், பீஸ் டீவி மூலமாக இஸ்லாமிய தாவா பணியை செய்பவர். பல கோடி மக்கள் அவரது பேச்சை கேட்கிறார்கள்.
3) முஸ்லிம்கள் இவரது பேச்சுக்கள் மூலமாக தங்கள் இஸ்லாமிய நம்பிக்கையை வளர்த்துக்கொள்கிறார்கள் அதாவது சந்தேகங்கள் தீர்க்கப்பட்டு தங்கள் நம்பிக்கையை திடப்படுத்துக்கொள்கிறார்கள்.
4) இவர் சொல்வதெல்லம் இஸ்லாம் என்றும், உண்மை என்றும் பல கோடி முஸ்லிம்கள் நம்புகிறார்கள் (சில முஸ்லிம் அறிஞர்களைத் தவிர). இவர் சொல்லும் ஒவ்வொரு வார்த்தைக்கும் பல கோடி மதிப்பு உள்ளது.
பார்வையாளர்கள்:
1) இவரது பேச்சுக்களை, வீடியோக்களை, புத்தகங்களை படிக்கும் பார்வையாளர்கள் பல வகைகளில் இருப்பார்கள்.
2) முஸ்லிம்கள், இந்துக்கள், கிறிஸ்தவர்கள், நாத்தீகர்கள் மேலும் இதர மக்கள்.
3) இவர்களில் படித்த பட்டதாரிகள், மேதாவிகள், ஓரளவிற்கு படித்தவர்கள், படிப்பறிவில்லாதவர்கள்
4) ஏழைகள், நடுத்தர மக்கள், பணக்காரர்கள், மாணவர்கள்
தம்பி: இதையெல்லாம் ஏன் இப்போது சொல்லிக்கொண்டு இருக்கிறீர்கள்?
உமர்: கொஞ்சம் பொறுத்திரு தம்பி. மதத்தை சார்ந்த ஒரு உயர்ந்த மனிதன் பேசும் ஒவ்வொரு வார்த்தைக்கும் விலை இருக்கும். இதனை உணராமல், தெருவில் கோலி விளையாடும் சின்ன பையன்கள் போல வாய்க்கு வந்தபடியெல்லாம் பேசக்கூடாது.
மேலே கொடுக்கப்பட்ட பார்வையாளர்களில் முஸ்லிம்களை மட்டும் தனியாக பிரித்து எடு.
இவரது பேச்சுக்களைக் கேட்கும் முஸ்லிம் பார்வையாளர்களில் படித்த மேதாவிகள், பட்டதாரிகள், பணம் படைத்தவர்கள், ஏழைகள், சரியாக சிந்திப்பவர்கள், சரியாக சிந்திக்க தெரியாதவர்கள் என்று பலர் இருப்பார்கள்.
இவர்களில் சரியாக சிந்திக்கத்தெரியாத, இதர இஸ்லாமிய அறிஞர்களால் மூளைச் சலவை செய்யப்பட்டவர்கள், இவரது மேற்கண்ட பதிலை படித்தால், எப்படிப்பட்ட முடிவுக்கு வருவார்கள்? 99.9% பார்வையாளர்களை விட்டுவிடு, வெறும் 0.1% மக்களை மட்டும் கணக்கில் எடுத்துக்கொள். உலகிற்கு பிரச்சனை இந்த 0.1% மக்களால் தான்.
a) ஜாகிர் நாயக்: ஒசாமா பின் லாடன் இஸ்லாமின் எதிரியுடன் போர் புரிந்தால், நான் அவரோடு இருக்கிறேன்:
இந்த வரியை படிப்பவன், பின் லாடன் இஸ்லாமின் எதிரிகளோடு போர் புரிகின்றார் என்று நினைப்பான். இஸ்லாமுடைய எதிரிகளுடன் போர் செய்யவேண்டும் என்பது இஸ்லாமின் படி தவறானது அல்லவே! எனவே, பின்லாடன் ஒரு ஹீரோ என்று கருதுவான், இதனை ஜாகிர் நாயக்கின் வாய் மூலமாகவே கேட்டதால், பின் லாடன் செல்லும் வழி இஸ்லாமின் படி நேரான வழி என்று கருதுவான். உலக புகழ்பெற்ற ஜாகிர் நாயக் அவர்களே, பின் லாடனோடு இருக்கிறேன், அவருக்கு என்னுடைய ஆதரவு உண்டு என்றுச் சொல்லும் போது, அதில் ஒரு சராசரி முஸ்லிம் சந்தேகம் கொள்வானா? நிச்சயமாக இல்லை.
b) ஜாகிர் நாயக்: ஒசாமா அமெரிக்கா என்ற மிகப்பெரிய தீவிரவாதியோடு தீவிரவாதம் புரிந்தால், நான் அவரோடு இருக்கிறேன்.
இதனை படிக்கும் பாமர முஸ்லிம், அமெரிக்கா ஒரு தீவிரவாத நாடு என்றும், அதற்கு எதிராக சண்டைப்போடும் பின்லாடன் இஸ்லாமை காக்க வந்த இரட்சகன் என்றும் எண்ணுவான். மேலும், அமெரிக்காவை பின்லாடன் எதிர்ப்பதை ஜாகிர் நாயக் விரும்புகிறார், அதனால் தன் ஆதரவை தருகிறார். எனவே, ஜாகிர் நாயக்கின் வழியில் நாமும் சென்றால் என்ன தவறு? பின் லாடனை ஆதரித்தால் என்ன தவறு? முடிந்தால், பின் லாடனின் இயக்கத்தோடும், இதர தீவிரவாத இயக்கங்களோடும் சேர்ந்து இஸ்லாமின் எதிரிகளோடு போர் புரிந்தால் என்ன தவறு? என்று எண்ணுவான்.
c) ஜாகிர் நாயக்: ஒவ்வொரு முஸ்லீமும் தீவிரவாதியாக இருக்கவேண்டும்:
மேற்கண்ட இரண்டு வரிகளின் சாராம்சம் தான் இந்த வரி. இஸ்லாமின் எதிரியோடு ஒவ்வொரு முஸ்லிமும் சண்டை போடவேண்டும். அமெரிக்காவோடு சண்டையிடும் இயக்கத்தோடு சேர்ந்து போராடுவது ஜாகிர் நாயக்கால் அனுமதிக்கப்படுகின்றது என்று முஸ்லிம் எண்ணுவான்.
வன்முறையை தூண்ட வேண்டுமென்றால், "ஆயுதம் எடுத்து சண்டை போடு" என்று ஜாகிர் நாயக் சொல்லத்தேவையில்லை. மேற்கண்ட விதமாக பின் லாடனின் எடுத்துக்காட்டை எடுத்துக்கொண்டு, பின் லாடனை ஆதரித்துக்கொண்டு, ஜாகிர் நாயக் மிகவும் தெளிவாக யாருக்குப்போய் அந்த செய்தி சென்றடையவேண்டுமோ அவர்களிடம் சேர்த்துவிட்டார் (இந்த நச்சுத்தன்மையை கண்டுபிடிக்க, இந்திய சட்டத்திற்கு இத்தனை ஆண்டுகள் பிடித்தது). இவரின் பதிலை வீடியோவில் பார்க்கும் ஒவ்வொரு தீவிரவாத குழுவும், தீவிரவாதிகளும், விசில் அடித்து கைகளை தட்டி, சபாஷ், சமுதாயத்தில் மக்களோடு மக்களாக இருந்துக்கொண்டே இப்படி தெளிவாக நம்மை ஆதரிக்க யாரால் முடியும் என்று பெருமைப்பட்டுக்கொள்வார்கள் அல்லவா? "பின் லாடனை ஆதரிப்பது தவறு" என்றுச் சொல்லும் சில முஸ்லிம் வாலிபர்களுக்கு இந்த வீடியோவைக் காட்டி, மூளைச் சலவை செய்வார்கள் அல்லவா? ஜாகிர் நாயக் எவ்வளவு பெரிய அறிஞர், அதுவும் மருத்துவத்துக்கு படித்தவர், இவர் பொய் சொல்வாரா? இவர் தவறான வழியில் நடத்துவாரா என்றுச் சொல்லி, இளம் முஸ்லிம் மூளைகளில் விஷ ஊசிகளை நிதானமாக செலுத்துவார்கள் அல்லவா?
அடுத்தது என்ன? பாங்களாதேஷில் நடந்தது போல, தீவிரவாத செயல்களில் அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் ஈடுபட்டு, பலரைக் கொன்று தாங்களும் கொல்லப்பட்டு மரிப்பார்கள்.
தம்பி: இப்படியும் நடக்குமா?
உமர்: பாரு தம்பி, உலகில் பிறந்த ஒவ்வொரு மனிதனும் ஒரு செய்தியை ஒரே மாதிரியாக புரிந்துக்கொள்வதில்லை. தன்னுடைய அனுபவம், படிப்பு, கலாச்சாரம் போன்றவற்றைப் பொருத்து வெவ்வெறு வகையாக புரிந்துக்கொள்வான். நாம் இருவர் ஒரே குடும்பத்தில் பிறந்திருந்தாலும், உன்னைப் போல நான் சிந்திக்கமுடியாது, என்னைப் போல நீயும் சிந்திக்கமாட்டாய். ஒவ்வொருவருக்கும் அறிவில், அதனை பயன்படுத்துவதில், பயிற்சி கொடுப்பதில் ஏற்றத்தாழ்வுகள் உள்ளன.
பலவீனமான சிலர் ஜாகிர் நாயக் போன்றவர்களின் இப்படிப்பட்ட சர்ச்சைக்குரிய பேச்சுக்களைக் கேட்டு, வழிதப்பி போய்விடுகிறார்கள். தன் பேச்சுக்களைக் கேட்கும் பலவீனமானவர்கள் தவறான வழிக்கு சென்றுவிடுவார்களே என்ற அடிப்படை ஞானம் கூட இல்லாத இப்படிப்பட்டவரை எப்படி முஸ்லிம்கள் பேச்சாளராக அனுமதிக்கிறார்கள். இவர் அறியாமையினால் பேசிய வார்த்தைகள் அல்ல, மறைமுகமாக தீவிரவாதிகளை ஊக்குவிப்பதற்காக பேசிய வார்த்தைகள்.
தம்பி: ஜாகிர் நாயக் அவர்களிடம் பின் லாடன் பற்றி கேட்டால் வேறு எப்படி பதில் சொல்வதாம்?
உமர்: பின் லாடன் ஒரு தீவிரவாதியாவான். அவன் இஸ்லாமுக்கு எதிரி ஆவான் என்று இரண்டு வரிகளில் ஜாகிர் நாயக் பதில் சொல்லி இருக்கவேண்டும். இப்படி சொல்வதை விட்டுவிட்டு, நான் பின் லாடனோடு இருக்கிறேன், அமெரிக்கா தான் தீவிரவாதம் புரிவது, ஒவ்வொரு முஸ்லிமும் தீவிரவாதியாக இருக்கவேண்டும் என்றுச் சொல்வது, பிள்ளைகள் குடிக்கும் பாலில் விஷத்தை கலப்பதற்கு சமம் ஆகும்.
தம்பி: நான் கேட்ட கேள்வி, ஜாகிர் நாயக்கிற்கு ரசிகனாக இருப்பது குற்றமா என்பது தான்.
உமர்: ஜாகிர் நாயக்கிற்கு ரசிகனாக இருப்பது குற்றமல்ல. அந்த அப்பாவி ரசிகனை தீவிரவாதியாக மாற்றும்படி, புத்தியில்லாமல் பேசுவது தான் குற்றம். செய்வதெல்லாம் செய்துவிட்டு, நான் என்ன செய்வேன், என்னுடைய பேச்சை சிலர் தவறாக புரிந்துக்கொண்டால் நான் பொறுப்பாளி அல்ல என்றுச் சொல்வது ஏற்றுக்கொள்ளப்படாதது.
தம்பி: டெய்லி ஸ்டார் பத்திரிக்கை, "ஜாகிர் நாயக் தான் தீவிரவாதிகளை ஊக்குவித்தார் என்று சொல்லவில்லை" என்று சொன்னதாமே!
உமர்: உனக்கு ஒரு முக்கியமான விவரத்தைச் சொல்கிறேன்.
பாங்களாதேஷ் டெய்லி ஸ்டார் பத்திரிக்கை, அந்த தீவிரவாதி ஜாகிர் நாயக்கின் ரசிகன் (Fan) என்றோ, அவரால் ஊக்குவிக்கப்பட்டான் (Inspire) என்றோ சொல்லவில்லை. அது கீழ்கண்ட விதமாகச் சொன்னது:
The Daily Star categorically denies this allegation and wants to say it did not report that any terrorist was inspired by Zakir Naik to kill innocent people. The report said that one of the terrorists had propagated on Facebook last year quoting Peace TV's preacher Zakir Naik urging all Muslims to be "terrorists".
தீவிரவாதிகளில் ஒருவன், சில மாதங்களுக்கு முன்பு முகநூலில், ஜாகிர் நாயக்கின் பீஸ் டீயில் வெளிவந்த ஜாகிர் நாயக்கின் பேச்சுக்களை மேற்கோள் காட்டி, "ஒவ்வொரு முஸ்லிமும் தீவிரவாதியாக இருக்கவேண்டும்" என்று பிரச்சாரம் செய்தானாம்.
டெய்லி ஸ்டார் பத்திரிக்கை செய்தியில் "ரசிகன், கவரப்பட்டவன்" என்ற வார்த்தைகள் இல்லை, ஆனால், தீவிரவாதிகளுக்கு ஜாகிர் நாயக்கின் பதில்கள் மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது என்பது மட்டும் உண்மை. தங்கள் தீவிரவாத செயலில் அனேகரை சேர்த்துக்கொள்ள பயன்படும் கருவியாக ஜாகிர் நாயக் இருந்துள்ளார். ஜாகிர் நாயக்கின் பேச்சால் கவரப்படாமலா (Inspire) அந்த தீவிரவாதி முகநூலில் அவரது வீடியோக்களைக் காட்டி பிரச்சாரம் செய்தான்.
தவறு எங்கே நடந்தது?
தீவிரவாதிகளை மறைமுகமாக ஆதரிக்கும் ஜாகிர் நாயக்கின் பதில்களில் தான் தவறுகள் உள்ளன.
தம்பி, உன்னிடம் சில தனிப்பட்ட கேள்விகளை கேட்கவிரும்புகிறேன் (ஜாகிர் நாயக்கை ஆதரிக்கும் ஒவ்வொரு முஸ்லிமும் இந்த கேள்விகளுக்கு பதில் அளிக்கவேண்டும்).
1) "பின் லாடன் ஒரு தீவிரவாதி" என்று ஒப்புக்கொள்ள ஜாகிர் நாயக்கிற்கு தடையாக இருப்பது எது? ஜாகிர் நாயக்கின் "முஸ்லிம்" அடையாளமா? அல்லது பின் லாடன் கூட ஒரு முஸ்லிம் தானே என்ற சகோதரப் பாசமா??
2) இஸ்லாமின் எதிரிகள் என்று பொதுவாக ஜாகிர் நாயக் சொல்கிறாரே, அதன் உள்ளார்ந்த அர்த்தமென்ன?
3) உலக மக்களை அழித்த ஒரு தீவிரவாதியை பல கோடி மக்கள் பார்க்கின்ற/பார்க்கப்போகின்ற பொதுமேடையில் ஆதரித்து பேசுவது ஏன்?
4) பொதுவில் தீவிரவாதிகளை ஆதரித்து பேசும் இவரை மக்கள் "தீவிரவாதிகளை ஊக்குவிக்கிறார்" என்று சொல்வதில் தவறில்லையே!
5) புரிந்துக்கொள்வதில் ஏற்றத்தாழ்வுள்ள பலவகையான மக்கள் சமுதாயத்தில் இருப்பார்கள், அவர்கள் தன் பேச்சை தவறாக நினைக்கக்கூடும் என்ற ஞானம் இல்லாதவர் எப்படி மருத்துவத்துக்கு படித்தார்?
6) பல கோடி மக்கள் பார்க்கும் நிகழ்ச்சியில், தீவிரவாதிகளை வெளிப்படையாக ஆதரிக்கும் இவர், மறைவில் தீவிரவாதிகளுக்கு உதவமாட்டார் என்று எப்படி நம்புவது? நான்கு சுவர்களுக்குள் இவர் தீவிரவாதிகளோடு கை குலுக்கமாட்டார் என்று எப்படி நம்பாமல் இருப்பது? ஏனென்றால், இஸ்லாமுக்கு எதிராக சண்டையிடுபவர்களோடு இவர் இருப்பாராமே! ஆதரவு அளிப்பாராமே!
7) இவர் பின் லாடனை புகழ்ந்துப் பேசி, இஸ்லாமின் எதிரிகளோடு போரிடுவபர் என்ற பட்டத்தைச் சூட்டி, அவருக்கு ஆதரவாக பேசியதை அப்பாவி சராசரி முஸ்லிம்கள் கேட்கும் பொது, இப்படிப்பட்ட தீவிரவாத கும்பளுக்கு மறைமுகமாக உதவுவது தவறு இல்லை என்ற எண்ணத்தை அவர்களின் மனதில் இது விதைக்காதா?
8) ஒருவேளை ஒரு தீவிரவாத இயக்கம், "இந்தியா இஸ்லாமுக்கு எதிரி என்று சொன்னால்", இவர் அந்த இயக்கத்தோடு சேர்ந்துக்கொண்டு, இஸ்லாமின் எதிரியோடு அதாவது இந்தியாவோடு போர் புரிவார் என்று எடுத்துக் கொள்ளலாம் அல்லவா? ஏற்கனவே, பல தீவிரவாத இயக்கங்கள் இந்தியாவை இஸ்லாமின் எதிரியாக கருதிக்கொண்டு தான் மும்பையை தாக்கினார்கள், பாராளுமன்றத்தை தாக்கினார்கள். இந்த குழுக்களை ஜாகிர் நாயக் ஆதரிப்பார் என்று இவரது பேச்சுக்கள் மூலமாக மக்கள் கருதலாம் அல்லவா?
அடிநாக்கிலே நஞ்சும் நுனிநாக்கில் அமிர்தமும் வைத்துப் மேடையில் பேசினால் முஸ்லிமல்லாதவர்கள் புரிந்துக்கொள்ளமாட்டார்கள் என்று ஜாகிர் நாயக் நினைத்துவிட்டார் போல் தெரிகிறது.
ரசிகன் மாங்காய் தின்றால், ஏன் தலைவனின் பற்கள் கூசாது. வெளியாக்கப்படாத மறைபொருளுமில்லை, அறியப்படாத இரகசியமுமில்லை.
தம்பி: அண்ணே, லைன் சரியாக இல்லை... உங்க பேச்சு சரியாக கேட்கவில்லை.
உமர்: ஹலோ.. .ஹலோ.. தம்பி கேட்கிறதா?... போனை வெச்சிட்டான்.