Dead Sea Scrolls
சவக்கடலின் மேற்கு திசையில், எரிகோவிற்கு 8 மைல் தூரத்தில் ஒரு பாழடைந்த இடம் உள்ளது. அது கடல் மட்டத்திலிருந்து 1300 அடிகள் தாழ்வாக உள்ள இடம். இந்த இடத்திற்கு 'கும்ரான்' என்று பெயர். இங்கு யூதமதத்தை பின்பற்றும் ஒரு குழுவினர், இதர யூதர்களோடு கலக்காமல் தனித்து வாழ்ந்துவந்தார்கள். திடீரென்று ஒரு நாள் இவர்களில் சிலர் இரகசியமாக பக்கத்தில் இருக்கும் குகைகளின் உச்சிக்கு ஏறினார்கள். தாங்கள் உயிரினும் மேலாக கருதும் சுருள்களை பல ஜாடிகளில் அடைத்து குகைகளுக்குள் பதுக்கி வைத்தார்கள். அச்சுருள்கள் அங்கு இருந்தால் பாதுகாப்பாக இருக்கும் என்று அவர்கள் நம்பினார்கள். ஆனால், அவர்களின் நம்பிக்கைக்கு இவ்வளவு வலிமையிருக்கும் என்று யாரும் அப்போது எதிர்ப்பார்க்கவில்லை. ஒரு நாள் தங்களுக்கு நல்ல காலம் வரும், அப்போது வந்து இவைகளை எடுத்துச்செல்லலாம் என்று எண்ணி அவைகளை விட்டுச் சென்றார்கள். அவர்களின் துரதிஷ்டமோ அல்லது நம்முடைய அதிர்ஷ்டமோ, அதன் பிறகு, அச்சுருள்களை எடுத்துச் செல்ல மறுபடியும் யாருமே வரவில்லை. அச்சுருள்கள் எந்த ஒரு மனிதனின் கண்களுக்கு தென்படாமல், 2000 ஆண்டுகள் அமைதியாக அக்குகைகளிலேயே தூங்கிக்கொண்டு இருந்தது.
கி.பி. 70களில் ரோமர்களுக்கு எதிரான யூத கிளர்ச்சிக்கு பிறகு யூதர்கள் சிதரடிக்கப்பட்டார்கள். ஒரு ஊரை விட்டு அடுத்த ஊருக்கு, ஒரு நாட்டை விட்டு அடுத்த நாட்டுக்கு, ஒரு கண்டத்தை விட்டு அடுத்த கண்டத்துக்கு அவர்கள் துரத்தப்பட்டார்கள். ஒரு வேளை, அக்காலத்தில் ராக்கெட் வசதி இருந்திருந்தால், பூமியை விட்டு வேறு கிரகத்துக்கு அவர்களை துரத்தியிருப்பார்கள். எருசலேமுக்கு வெளியே அச்சுருள்கள் குகைகளில் தூங்கிக்கொண்டு இருக்கும் காலமும், யூதர்கள் இஸ்ரேலுக்கு வெளியே வாழ்ந்த காலமும் ஒன்றாகவே இருந்தது. நூறு, இருநூறு அல்ல, கிட்டத்தட்ட இரண்டாயிரம் ஆண்டுகள் கழித்து நல்ல காலம் பிறந்தது. 1947ம் ஆண்டு, கும்ரான் குகைகளுக்குள் இருக்கும் சுருள்கள் இடையர்களின் கண்களில் பட்டுவிட்டன. இஸ்ரேல் என்ற தனி நாடு உயிர்த்தெழுவதற்கு முன்பாக அவர்களின் மூதாதையர்கள் பாதுகாத்து வைத்திருந்த சுருள்களுக்கு உயிர் வந்தது. பல நூற்றாண்டுகளுக்கு முன்பாக, ரோமர்களின் கைகளிலிருந்து அழிக்கப்படாமல் காக்கப்படவேண்டும் என்று பாதுகாக்கப்பட்ட சுருள்கள் வெளிச்சத்துக்கு வந்தது. இந்த கும்ரான் குகைகளில் 1947 லிருந்து 1956 வரை கண்டெடுக்கப்பட்ட சுருள்களைத் தான் 'சவக்கடல் அல்லது கும்ரான் சுருள்கள்' என்று கூறுகிறோம்.
இச்சுருள்கள் 900க்கும் அதிகமான எண்ணிக்கையுடையவை, ஆனால், பல ஆயிர துண்டு பிரதிகளாகவும், முழு புத்தகங்களாகவும் கிடைத்துள்ளன. இவைகள் எபிரேயம், அராமிக் மற்றும் கிரேக்க மொழிகளில் எழுதப்பட்டிருந்தன.
சவக்கடல் சுருள்களை இரண்டு வகையான பிரிக்கலாம்:
- பைபிள் சம்மந்தப்பட்ட சுருள்கள் - பைபிளின் பழைய ஏற்பாட்டில் காணப்படும் புத்தகங்கள் (Biblical scrolls).
- பைபிளுக்கு சம்மந்தமில்லாத இதர வகையைச் சேர்ந்த சுருள்கள் (Non-Biblical scrolls) - தள்ளுபடி ஆகமங்கள், ஜெபங்கள், சட்டம் மற்றும் நிர்வாகம் சம்மந்தப்பட்ட சுருள்கள் போன்றவை.
இக்கட்டுரைகளின் நோக்கம்:
சவக்கடல் சுருள்கள் என்ற பெயரில் தொடர் கட்டுரைகள் எழுதப்படுவதற்கு இரண்டு முக்கியமான காரணங்களுண்டு. முதலாவதாக, தமிழ் முஸ்லிம்கள் 'சவக்கடல் சுருள்களை' அடிப்படையாக வைத்துக்கொண்டு தவறாக கிறிஸ்தவத்தை விமர்சித்திருக்கிறார்கள், இவர்களுக்கு பதில் கொடுக்கவேண்டும். அதாவது பி ஜைனுல் ஆபிதீன் என்ற முஸ்லிம் அறிஞர் தம்முடைய குர்-ஆன் தமிழாக்கத்தில், விளக்கக்குறிப்பு 271ல் சவக்கடல் சுருள்கள் பற்றி எழுதி, கிறிஸ்தவத்தை விமர்சித்துள்ளார். இவர் அறியாமையில் இதனைச் செய்துள்ளார், இவருக்கு பதில் கொடுப்பது தான் முதல் நோக்கம். இரண்டாவதாக, சவக்கடல் சுருள்களின் அருமை பெருமைகளை தமிழ் கிறிஸ்தவர்களுக்கு எடுத்துக்காட்டலாம் என்பதாகும்.
இந்த தொடர் கட்டுரைகளை கோர்வையாக படிப்பவர், கீழ்கண்டவைகளை புரிந்துக்கொள்வார்.
1) சவக்கடல் சுருள்கள் என்றால் என்ன? இவைகளின் முக்கியத்துவம் என்ன?
2) ஒவ்வொரு கும்ரான் குகையிலும் கண்டெடுக்கப்பட்ட ஆவணங்கள் என்னென்ன?
3) கிறிஸ்தவ சபை சவக்கடல் சுருள்களை வெளியுலகிற்கு காட்டாமல் மறைத்தது உண்மையா?
4) இச்சுருள்களுக்கும், இஸ்லாமுக்கும் ஏதாவது சம்மந்தமுண்டா?
5) சவக்கடல் சுருள்கள் இஸ்லாமை மெய்ப்படுத்துகின்றதா?
6) சவக்கடல் சுருள்கள் கிறிஸ்தவத்தை ஆதரிக்கின்றதா? அல்லது எதிர்க்கின்றதா?
7) பேராசிரியர் ராபர்ட் ஐஸன்மேன் என்பவரின் கோட்பாடு என்ன?
8) இஸ்லாமை இச்சுருள்கள் உறுதிப்படுத்துகிறது என்று ஐஸன்மேன் கூறியது எதனால்?
9) ஐஸன்மேனின் கைகளைக் கொண்டு, இஸ்லாமை இடித்துப்போட முயற்சி எடுக்கும் பிஜே அவர்கள் (பிஜே அவர்களின் 271வது குறிப்பிற்கு மறுப்பு)
10) பேராசிரியர் ஐஸன்மேனின் ஊகக்கொள்கைக்கு மறுப்பு
தமிழ் முஸ்லிம் அறிஞர் பிஜே அவர்களின் விளக்கம் 271க்கு கொடுத்த அறிமுக மறுப்புக் கட்டுரையை இங்கு சொடுக்கி படிக்கலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக