எனக்கு இஸ்லாமில் அதிக ஆர்வம் இருப்பதினால், நான் பங்கு பெரும் நிகழ்ச்சிகளில் பல முஸ்லிம்களோடு உரையாடுவதற்கு அதிக நேரத்தை செலவிடுகிறேன். சில நேரங்களில் என் கட்டுரைகளுக்கான தலைப்பு அப்படிப்பட்ட உரையாடல்களின் மூலம் கிடைக்கிறது. தற்போதைய கட்டுரைக் கூட இப்படிப்பட்ட ஒரு உரையாடலின் போது உதித்தது தான். அதாவது முஹம்மது எப்படி மற்றவர்களுக்கு கடினமான பதில்களைக் கொடுத்தார் என்ற விவரத்தைப் பற்றி உரையாடிக்கொண்டு இருக்கும் போது உதித்தது தான். இயேசு மற்றும் புதிய ஏற்பாட்டின் படி கிறிஸ்தவர்கள் மற்றவர்களுக்கு எப்படி பதில் தரவேண்டும்? அதே போல, முஹம்மது மற்றும் இஸ்லாமின் படி முஸ்லிம்கள் எப்படி மற்றவர்களுக்கு பதில் தரவேண்டும்? என்ற விவரத்தை சுருக்கமாக ஒப்பிட்டுப்பார்ப்போம்.
இஸ்லாமிய சமுதாயத்தில் பல முஸ்லிம் அறிஞர்கள், 'முஹம்மதுவின் நற்செய்லகள்' பற்றி பலவாறு புகழ்ந்துப் பேசுவார்கள், பல புத்தகங்களை எழுதுவார்கள். இவைகளில் ஒரு செயல் முக்கியமான இடம் பிடிக்கும், அது என்னவென்றால், 'தம்மை துன்புறுத்துபவர்களிடம் கூட முஹம்மது மிகவும் அன்பாக நடந்துக்கொண்டார்' என்பதாகும். இதற்காக முஸ்லிம் அறிஞர்கள் கீழ்கண்ட குர்-ஆன் வசனங்களையும் ஆதாரமாகச் சொல்வார்கள். இவ்வசனங்களில் முஸ்லிம்கள் முக்கியமாக முஹம்மது கூட, 'தம்மை அவதூறு செய்யும் நபர்களின் வார்த்தைகளை புறக்கணித்துவிட்டு, பொறுமையாக இருக்கவேண்டும்' என்று குர்-ஆன் கட்டளையிடுகிறது.
குர்-ஆன் 33:48. அன்றியும் காஃபிர்களுக்கும், முனாஃபிக்குகளுக்கும் நீர் வழிப்படாதீர்; அவர்கள் (தரும்) துன்பத்தை(ப் புறக்கணித்து) விடுவீராக;அல்லாஹ்வின் மீதே முற்றிலும் உறுதிகொண்டு (அவனையே சார்ந்து) இருப்பீராக! அல்லாஹ்வே போதுமான பாதுகாவலனாக இருக்கின்றான்.
குர்-ஆன் 50:39. எனவே (நபியே!) அவர்கள் கூறுவதைப் பற்றிப் பொறுமையோடிருப்பீராக; இன்னும், சூரிய உதயத்திற்கு முன்னரும், (அது) அஸ்தமிப்பதற்கு முன்னரும் உம்முடைய இறைவனின் புகழைக் கொண்டு நீர் தஸ்பீஹு செய்வீராக. (முஹம்மது ஜான் தமிழாக்கம்)
முஸ்லிம்கள் அவதூறுச் சொற்களை புறக்கணித்துவிட்டு, பொறுமையோடு இருக்கவேண்டும் என்று குர்-ஆன் போதிக்கிறது. ஆனால், தற்போது நாம் உலகத்தில் நடக்கும் நிகழ்வுகளை கவனிக்கும் போது, இஸ்லாமையும், முஹம்மதுவையும் விமர்சிப்பவர்களிடம் முஸ்லிம்கள் குர்-ஆன் சொல்வது போல நடந்துக்கொள்வதில்லை என்பதை காணமுடியும். ஏன் முஸ்லிம்கள் குர்-ஆனுக்கு எதிராக இப்படி நடந்துக்கொள்கிறார்கள் என்று கவனிக்கும் போது, இன்னொரு உண்மை பளிச்சென்று தெரியும். அது என்னவென்றால், முஸ்லிம்கள் தங்கள் அனுதின வாழ்வின் சிறந்த வழிகாட்டியாக, அழகிய முன்மாதிரியாக 'முஹம்மதுவையே நோக்கிப் பார்க்கிறார்கள்' என்பதாகும் (பார்க்க குர்-ஆன் 33:21).
33:21. அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஆதரவு வைத்து, அல்லாஹ்வை அதிகம் தியானிப்போருக்கு நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி உங்களுக்கு இருக்கிறது. (முஹம்மது ஜான் தமிழாக்கம்).
அவதூறு வார்த்தைகளுக்கு முஸ்லிம்கள் எப்படி பதில் கொடுப்பார்கள் என்பதை அறியவேண்டுமென்றால், முஹம்மது அப்படிப்பட்ட சூழ்நிலையில் எப்படி நடந்துக்கொண்டார் என்பதை பார்க்கவேண்டும்.
முஹம்மதுவிற்கு வன்மையான எதிர்ப்பு கிளம்பியபோது, பல நேரங்களில் அவர் அமைதியாகவும், அன்பாகவும் பதில் அளித்துள்ளார். ஆனால், அதே முஹம்மது இதர நேரங்களில் மிகவும் வன்மையாக பதில் அளித்தார், சில நேரங்களில் கொடுமையாகவும் நடந்துக்கொண்டுள்ளார். உதாரணத்திற்குச் சொல்லவேண்டுமென்றால், என்னுடைய முந்தைய கட்டுரையில் நான் விளக்கியபடி, அபூ லஹப் என்பவருக்கு முஹம்மது அளித்த பதிலைச் சொல்லலாம். அதாவது அபூ லஹப் முஹம்மதுவை கடுமையாக விமர்சித்தார், பல தொல்லைகளைக் கொடுத்தார். இதற்கு முஹம்மதுவின் மூலமாக அல்லாஹ் கொடுத்த பதில் என்ன தெரியுமா? குர்-ஆனில் ஒரு முழு அத்தியாயத்தை (குர்-ஆன் அத்தியாயம் 111) இந்த அபூ லஹப்பையும், அவரது மனைவியையும் சபிப்பதற்காகவே இறக்கியது தான்.
இன்னொரு உதாரணத்தை இப்போது காண்போம். முஹம்மதுவிற்கு மிகவும் பிரியமான மனைவியாகிய ஆயிஷா அவர்கள் இந்த நிகழ்ச்சியை விவரித்துள்ளார்கள், அதனை இங்கு படிப்போம்.
ஸஹீஹ் முஸ்லிம் எண் 4373
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
யூதர்களில் ஒரு குழுவினர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து (உள்ளே வர) அனுமதி கேட்டு "அஸ்ஸாமு அலைக்கும்" (உங்களுக்கு மரணம் உண்டாகட்டும்) என்று (சற்றே மாற்றி முகமன்) கூறினர். உடனே நான் "அலைக்குமுஸ் ஸாமு வல்லஅனா" (உங்களுக்கு மரணமும் சாபமும் உண்டாகட்டும்) என்று பதில் சொன்னேன்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ஆயிஷா! (நிதானம்!) அல்லாஹ் எல்லாக் காரியங்களிலும் நளினத்தைக் கையாள்வதையே விரும்புகிறான்" என்று கூறினார்கள்.
நான் "அவர்கள் சொன்னதை நீங்கள் செவியுறவில்லையா?" என்று கேட்டேன்.அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நான்தான் "வ அலைக்கும்" (நீங்கள் சொன்னது உங்களுக்கும் உண்டாகட்டும்) என்று (நளினமாகச்) சொல்லிவிட்டேனே (அதை நீ கவனிக்க வில்லையா)?" என்று (திருப்பிக்) கேட்டார்கள்.
இந்த நிகழ்ச்சிலிருந்து அறிவது என்னவென்றால், ஒருவர் முஹம்மதுவிற்கு சாபத்தை வாழ்த்தாக கூறினால், உடனே முஹம்மதுவும் சாபத்தை பதிலாக தருகிறார் என்பதாகும். உலக பிரகாரமாக பார்த்தால், கண்ணுக்கு கண், பல்லுக்கு பல் என்ற தண்டனைகளை கவனிக்கும் போது, தற்காலிகமாக இவைகள் நமக்கு திருப்தியை கொடுப்பதாக இருந்தாலும், எதிர்ப்புகளை வேறுவகையாக சந்திக்கும்படி தேவன் நமக்கு பைபிளில் கற்றுக்கொடுத்துள்ளார்.
1 தெசலோனிக்கேயர் 5:15ம் வசனத்தில், ஒருவருக்கும் தீமைக்கு பதில் தீமை செய்யாதீர்கள் என்று கட்டளையிடப்பட்டுள்ளது. இதே போதனையை ரோமர் 12:17லும் காணமுடியும். மேலும், தேவனின் போதனை இதோடு நின்றுவிடாமல், இன்னொரு அடி மேலே செல்கிறது. அதாவது 'ஒருவர் நமக்குச் செய்த தீமைக்கு பதிலாக தீமை செய்யாமல் இருப்பது' முதல் நிலையென்றால், 'அந்த தீமைக்கு ஆசீர்வாதத்தை பதிலாக திருப்பிக் கொடுப்பதுதான் அடுத்த நிலை' என்று பைபிள் போதிக்கிறது. இந்த வசனத்தைப் பாருங்கள்.
1 பேதுரு 3:9 தீமைக்குத் தீமையையும், உதாசனத்துக்கு உதாசனத்தையும் சரிக்கட்டாமல், அதற்குப் பதிலாக, நீங்கள் ஆசீர்வாதத்தைச் சுதந்தரித்துக்கொள்ளும்படி அழைக்கப்பட்டிருக்கிறவர்களென்று அறிந்து,ஆசீர்வதியுங்கள்.
1 Peter 3:9 not returning evil for evil or insult for insult, but giving a blessing instead; for you were called for the very purpose that you might inherit a blessing.
இப்படிப்பட்ட போதனையை முதலாவது இயேசுவே செய்துக்காட்டினார், பார்க்க 1 பேதுரு 2:23. இதே போதனைத் தான் கிறிஸ்தவர்களின் வழிகாட்டியாகவும் இருக்கிறது, பார்க்க எபிரேயர் 12:3.
இவைகள் அனைத்தையும் இரத்தினச் சுருக்கமாக, ரோமர் 12:21 நமக்கு சுட்டிக்காட்டுகிறது:
ரோமர் 12:21 நீ தீமையினாலே வெல்லப்படாமல், தீமையை நன்மையினாலே வெல்லு.
Romans 12:21 Do not be overcome by evil, but overcome evil with good.
இஸ்லாமின் போதனையும், கிறிஸ்தவ போதனையும் நமக்கு இப்போது தெளிவாக புரிந்திருக்கும். முஸ்லிம்கள் பின்பற்றும் போதனை 'சாபத்திற்கு சாபத்தை பதிலாக கொடு' என்பதாகும். ஆனால், கிறிஸ்தவர்களுக்கு கிடைத்துள்ள போதனை என்னவென்றால், 'ஒருவர் உன்னை சபித்தால், அவமானப்படுத்தினால், அவரை ஆசீர்வதியுங்கள், சபிக்காதிருங்கள்' என்பதாகும்.
முஸ்லிம்களோடு நான் உரையாடும் போது 'இக்கட்டுரையின் கருப்பொருள்' உருவாகியது என்பதை துவக்கத்தில் குறிப்பிட்டு இருந்தேன். அந்த ஒரு குறிப்பிட்ட முஸ்லிம் சகோதரரிடம், 'சாபத்தை திருப்பிக் கொடுக்கும் முஹம்மதுவின் இந்த குணம், எப்படி அவரை அன்புள்ளவராகவும், நற்குணமுள்ளவராகவும் வெளிப்படுத்தும்?' என்று கேட்டேன். பல நிமிடங்கள் சிந்தித்துவிட்டு, அந்த சகோதரர் கொடுத்த பதில் 'எனக்குத் தெரியாது' என்பதாகும். ஏனென்றால், இந்த செயலைச் செய்தவர் முஹம்மது என்பதால், முஸ்லிம்கள் 'எங்களுக்கு தெரியாது' என்ற பதிலைத் தவிர வேறு என்ன பதிலை அவர்களால் சொல்லமுடியும்?
இயேசு செய்த செயல்கள் ஒருமுறை கூட என்னை தர்மசங்கடத்தில் ஆழ்த்தியதில்லை என்பதை இங்கு சுட்டிக்காட்டவேண்டும். ஆனால், ஒருவேளை நான் முஸ்லிமாக இருந்திருந்தால், முஹம்மது செய்த இப்படிப்பட்ட செயல்கள் என்னை பல முறை தர்மசங்கடத்தில் ஆழ்த்தியிருந்திருக்கும். இயேசு மற்றும் முஹம்மது, இவ்விருவருக்கு இடையே இருக்கும் இப்படிப்பட்ட வித்தியாசங்கள், கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாமுக்கு இடையே இருக்கும் வித்தியாசங்களை சுட்டிக்காட்ட போதுமானதாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக