(Letting God Take the Heat)
ஆசிரியர்: ஆலன் ஸ்லெமன்
நான் கடந்த 10 ஆண்டுகளாக Stand To Reason (ஸ்டாண்ட் டூ ரீஸன்) குழுவின் பேச்சாளனாக ஊழியம் செய்துக்கொண்டு இருக்கிறேன். பல முறை என்னை பலர் ஏளனமாக பேசியுள்ளார்கள், சபித்தும் உள்ளார்கள், சிலர் மிரட்டியும் உள்ளார்கள். எது எப்படி இருந்தாலும், நான் திருப்பி ஏளனமாக பேசவில்லை, சபிக்கவில்லை மற்றும் மிரட்டவில்லை. இப்படிப்பட்ட சூழ்நிலைகளில் நான் மிகவும் பொறுமையோடு அமைதியாக பதில் அளித்துள்ளேன். இப்படி என்னால் எப்படி செய்யமுடிகின்றது? என்று கேட்டால், இதற்கு ஒரு இரகசியம் இருக்கிறது, அது என்னவென்றால், 'என்னை நோக்கி வீசப்படும் சூடான வார்த்தைகளை அப்படியே, தேவனுக்கு நேராக நான் திருப்பி விடுகிறேன், அவைகளின் சூட்டை தேவன் தாங்க விட்டு விடுகிறேன்'.
இறைவன் நம்முடைய அரசராக இருக்கின்றார், நாம் அவரின் பிள்ளைகளாக இருக்கிறோம் என்றுச் சொல்கிறோமே, அந்த கோட்பாட்டின் வெளிப்பாடு தான் இது. அதாவது, எது நடந்தாலும் அவர் பார்த்துக்கொள்கிறார், நாம் அவரை தொடர்ந்து பின்பற்றிகொண்டு சென்றால் போதும் என்றுச் சொல்வது இதைத் தான். நாம் வாழும் காலம்வரை அவரது கட்டளைகளுக்கு கீழ்படிந்து, அவரது நற்செய்தியை அறிவித்துக்கொண்டு இருக்கவேண்டும். நாம் நற்செய்தியை அறிவிக்கும் போது, மக்கள் அதைக் கேட்டு வருத்தமடைந்தால், அவர்களை நேராக இறைவனிடம் கேட்கச் சொல்லவேண்டியது தான். நான் அவர்களிடம் இப்படி கூறுவேன்: 'தேவன் எதனை கட்டளையிட்டாரோ, எதனை சத்தியம் என்று சொல்லியுள்ளாரோ, அதனை நான் அறிவிக்கிறேன், என் வேலை இது மட்டும் தான்'. மக்கள் என்னை திட்டினால் அதற்காக நான் வருந்தமுடியாது, அதனை தேவனிடம் விட்டுவிடுகிறேன். ஏனென்றால், என்னை திட்டும் திட்டுக்களுக்கு சொந்தக்காரர் அவர் தான்.
இங்கு ஒரு முக்கியமான விவரத்தை தெளிவு படுத்தவேண்டும். இயேசுவுக்காக நான் பேசுகிறேன் என்றுச் சொல்லி, தேவையில்லாத பேச்சுக்களை பேசுவதைப் பற்றி நான் இங்கு குறிப்பிடவில்லை. நீங்கள் கடினமான மற்றும் கெட்ட வார்த்தைகளை பேசி மற்றவர்களை துக்கப்படுத்தினால், இந்த நிலைக்கு நீங்கள் தான் காரணம். இதற்கு தேவனை குற்றப்படுத்த முடியாது. இப்படி நீங்கள் செய்தால், நீங்கள் பைபிளின் படி நடந்துக்கொள்பவரல்ல, எனவே தேவனிடம் மன்னிப்பு கோரி, அப்படி பேசுவதை விட்டுவிடுங்கள்.
இந்த கட்டுரையில் நான் சொல்லவருவது எதுவென்றால், நீங்கள் உண்மையாளராக இருந்து, பைபிளின் படி நடந்துக்கொள்பவராக இருக்கும் பட்சத்தில், உங்களின் நற்செய்தியைக் கேட்டு மக்கள் உங்களை திட்டினால், அவதூறு பேச்சுக்களை உங்களுக்கு எதிராக பொய்யாக பேசினால், இந்த சமயங்களில் அந்த சூடான அவதூறு பேச்சுக்களை தேவனிடம் விட்டுவிடுங்கள் என்பதைத் தான். அந்த அவதூறு பேச்சுக்கள் "உங்களுக்குத் தான்" என்று தனிப்பட்ட முறையில் எடுத்துக் கொள்ளாதீர்கள். அவர்கள் பற்களை கடித்துகொண்டு உங்கள் மீது வந்தாலும் சரி, அவர்கள் தேவன் மீது தான் பற்களை கடித்துக்கொண்டு திட்டிக்கொண்டு இருக்கிறார்கள் என்பதை நீங்கள் ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் தேவனுடைய பிரதிநிதியாக மட்டுமே செயல்படுகிறீர்கள். எனவே, நான் எப்போதெல்லாம் இப்படிப்பட்ட சூழலில் என்னை காண்பேனோ, என்னை திட்டிய அந்த நபரின் மீது கோபம் கொள்ளமாட்டேன், பழிக்கு பழி வாங்குகிறேன் என்றுச் சொல்லி நானும் பலவாறு திட்டி தீர்க்கமாட்டேன்.
உதாரணத்துக்கு சொல்வதென்றால், பரலோகம் செல்ல இயேசு ஒருவரே வழி என்று நான் சொல்லும் போது, பலர் என் மீது கோபம் கொண்டு, இவனுக்கு குறுகிய புத்தி என்று சொல்வார்கள். இப்படி என் முகத்தின் மீத் நேரடியாக சொல்லும் போது, என் மனதில் ஒரு வகையான வலி உண்டானாலும், அந்த வலியின் தீவிரத்தை நான் தேவனிடம் செலுத்திவிடுவேன். இயேசு ஒருவர் தான் வழி என்று நானா சொல்கிறேன்? பைபிள் தான் சொல்கிறது என்றுச் சொல்லி, கடந்து சென்றுக்கொண்டே இருப்பேன். என் மீது கோபம் கொண்டவர்களிடம், யோவான் 14:6ம் வசனத்தை சுட்டிக்காட்டுவேன்:
அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான் (யோவான் 14:6)
இந்த வசனத்தில் சொல்லப்பட்டது பற்றி அவர்கள் கோபம் கொண்டால், என் மீதல்ல, இயேசுவின் மீது கோபம் கொள்ளட்டும். அவர்களுக்கு வேதவசனத்தை சுட்டிக்காட்டிவிட்டு, அந்த கோபமான வார்த்தைகளிலிருந்து வரும் அனலை இயேசுவின் பக்கம் திருப்பிவிடுவேன்.
சில நேரங்களில் "ஓரினச்சேர்க்கை" பற்றி நான் பேசிக்கொண்டு இருக்கும் போது, சிலர் என்னை 'மதவெறி பிடித்தவன், அடிப்படைவாதி' என்றுச் சொல்வார்கள். அந்த நேரங்களில் என் இரத்தம் கொதிக்கும், உடனே ஏதாவது கோபமாக சொல்லிவிடலாமா என்றுத் தோன்றும். ஆனால், பரிசுத்த ஆவியானவர் உள்ளே இருந்துக்கொண்டு என்னை ஆறுதல் படுத்திக்கொண்டு இருப்பார், நான் அமைதியான வார்த்தைகளால் பதில்களைச் சொல்லி கடந்துவிடுவேன், இதற்காக நான் பரிசுத்த ஆவியானவருக்கு நன்றி செலுத்துகிறேன். மனிதர்களை நான் ஆணும் பெண்ணுமாக படைத்தேன், அவர்கள் ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுவதை நான் விரும்பவில்லை, அது தவறானது என்பதை தேவன் எனக்கு ஞாபகப்படுத்துவார். இந்த நேரத்தில் தான் அந்த திட்டுக்களை ஆண்டவர் வாங்கட்டும் என்று மனதில் சொல்லிக்கொள்வேன். என் நிதானத்தை இழக்காமல், தேவனின் பிரதிநிதியாக, அவர்களுக்கு மத்தேயு 19:1-6 வசனங்களை மேற்கோள் காட்டிவிடுவேன். இவ்வசனங்களில் இயேசு, திருமணம், மற்றும் ஆண் பெண் மத்தியில் இருக்கவேண்டிய திருமண உறவு பற்றிய சுருக்கத்தைச் சொல்வதை காணலாம். இவைகள் என்னுடைய கருத்துக்கள் அல்ல, அவைகள் இயேசுவின் கருத்துக்கள். ஓரினச்சேர்க்கை பற்றிய என்னுடைய கருத்தை அவர்கள் விமர்சித்தால், இயேசுவை அவர்களுக்கு காட்டிவிடுவேன்.
எல்லா நேரங்களிலும் எல்லா கேள்விகளுக்கும் நான் வசனத்தை காட்டிவிடமாட்டேன், அல்லது ஏதாவது பேசிவிடமாட்டேன். சில நேரங்களில் நான் அமைதியாக இருந்துவிடுவேன். அவர்களது கோபம் தானாக தனிந்துவிடும், அதன் பிறகு பேசுவேன். நான் நற்செய்திப் பற்றி பேசினாலும், ஓரினச்சேர்க்கை, இஸ்லாம், பரினாமவளர்ச்சி, கருக்கலப்பு, இன்னும் இதர தலைப்புக்களில் பேசும் போது எழும்பும் கோப அனலை நேரடியாக தேவனிடம் திருப்பிவிடுவேன், அவர் அதன் சூட்டை தாங்கிக்கொள்ளட்டும் என்பதற்காக. இப்படி செய்வதினால், என் மீது அதிகமான தாக்கம் உண்டாகாமல் இருக்கும், மேலும் நான் மனம்பதறி ஏதாவது தேவையில்லாத வார்த்தைகளை பேசாமல் இருக்கவும் இது உதவும்.
இப்படி மக்களின் கோப அனலை தேவனிடம் திருப்புவது மூன்று வகையான பிரச்சனைகளை தடுத்துவிடுகிறது.
1) நாம் பெருமை கொள்ளாமல் இருப்பதற்கு உதவுகிறது
மக்கள் உங்கள் மீது கோபம் கொள்ளும் போது, மறுப்பு தெரிவிக்கும் போது, 'இது என்னுடைய ஞானத்தை வெளிப்படுத்தியதால் தான் உண்டானது' என்று நீங்கள் நினைத்தால், நீங்கள் தேவனுடைய கோட்பாடுகளின் மகிமையை எடுத்துக்கொண்டதற்கு சமமாகும். வேதத்தில் சொல்லப்பட்ட சத்தியங்களை நீங்கள் எடுத்துச் சொல்லும் போது, அவைகளின் எஜமானர் தேவன் தான், நீங்கள் இல்லை என்பதை உணரவேண்டும். நீங்கள் வெறும் தேவனின் பிரதிநிதி மட்டுமே. அவருடைய சத்தியங்களை தெளிவாகவும், மென்மையாகவும் எடுத்துச் சொல்வது மட்டுமே உங்கள் கடமையாக இருக்கிறது. இதைத் தான் இயேசு "ஊழியக்காரன் தன் எஜமானிலும் பெரியவனல்ல, அனுப்பப்பட்டவன் தன்னை அனுப்பினவரிலும் பெரியவனல்ல" என்றுச் சொன்னார் (யோவான் 13:16). எனவே, நீங்கள் சொல்லிக்கொண்டு இருக்கும் சத்தியத்தின் உண்மையான எஜமான் யார் என்பதை கவனத்தில் கொண்டு, தாழ்மையாக இருக்க கற்றுக்கொள்ளுங்கள்.
2) தேவையில்லாத மனஅழுத்தத்தை இது தடுக்கும்
மக்கள் என் மீது கோபம் கொள்ளும்போதெல்லாம், நான் துக்கப்படுவேன். நான் ஏதோ தவறு செய்துவிட்டேனோ, கோபத்தில் ஏதாவது சொல்லிவிட்டேனோ? என்று என்னை நானே நொந்துக்கொள்வேன். இது மிகவும் பாரமாகவும், மன அழுத்தமாகவும் இருக்கும். உண்மையைச் சொல்லவேண்டுமென்றால், அவர்கள் என் மீது அல்ல, தேவன் மீது தான் கோபம் கொண்டு பேசுகிறார்கள். இதனை அவர்கள் ஒப்புக்கொண்டாலும் சரி, ஒப்புக்கொள்ளாவிட்டாலும் சரி, இது தான் உண்மை. தம்முடைய சத்தியத்திற்கு மக்கள் கீழ்படியவேண்டும் என்று தேவன் எதிர்ப்பார்க்கிறார். இதனை புரிந்துக்கொள்ளாமல், மக்கள் கோபம் கொள்வார்கள். நம் மீது வீசிய கோபக்கனலை தேவன் மிது வைத்துவிடுவது, என்னிடைய மனபாரத்தை அழுத்தத்தை குறைத்துவிடுகிறது. மேலும், இது என் பிரச்சனை அல்ல, தேவனின் பிரச்சனை, அவர் பார்த்துக்கொள்ளட்டும் என்று சொல்லிக்கொண்டு, விடுதலையாக இருந்துவிடலாம்.
3. பழி வாங்கவேண்டும் என்ற எண்ணத்தை இது தடுத்துவிடுகிறது
உங்களுடைய வார்த்தைகளுக்காக அல்லாமல் "தேவனின் கோட்பாடுகளுக்காகத்தான்" மக்கள் உங்கள் மீது கோபமாக இருக்கிறார்கள் என்பதை நீங்கள் அறியும் போது, உங்களுக்கு பழிவாங்க வேண்டும் என்ற எண்ணம் வராது. என்னையா அவர்கள் எதிர்க்கிறார்கள்? இல்லையே! எனவே, நான் ஏன் பழிவாங்க துடிக்கவேண்டும், அவர்களை திட்டித்தீர்க்கவேண்டும் என்ற எண்ணம் வரும். நம்முடைய வேதம் நமக்கு கீழ்கண்டவாறு போதிக்கிறதே:
பிரியமானவர்களே, பழிவாங்குதல் எனக்குரியது, நானே பதிற்செய்வேன், என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று எழுதியிருக்கிறபடியால், நீங்கள் பழிவாங்காமல், கோபாக்கினைக்கு இடங்கொடுங்கள். (ரோமர் 12:19)
நீங்கள் பதிலையே கொடுக்காமல், வாயை மூடிக்கொண்டு இருங்கள் என்று நான் இங்கு சொல்லவில்லை. உங்கள் பதில் பழிவாங்கும் எண்ணத்தோடு இருக்கக்கூடாது, அதற்கு பதிலாக, உங்கள் மீது கோபம் கொண்ட நபருக்கு புரியும் வண்ணமாக தெளிவாகவும், விவரமாகவும் விளக்கவேண்டும் என்றுச் சொல்கிறேன். சுருக்கமாகச் சொல்வதென்றால், கோட்பாடுகள், சத்தியங்கள் தேவனுக்கு சொந்தமானவைகள், நம்முடைய பொறுப்பு அவைகளை தெளிவாகவும், அமைதியான முறையிலும் மக்களுக்கு எடுத்துச் சொல்வதாகும், அவ்வளவு தான்.
நான் கொடுத்த அதே பதிலை நீங்களும் சொல்லுங்கள் என்று நான் சொல்லவில்லை. தேவன் சூட்டை தாங்க அவருக்கு விட்டுக்கொடுங்கள் என்பதை மட்டும் மறக்கவேண்டாம். ஏனென்றால், அவர் இறைவனாக இருக்கிறார், இது அவரது பிரச்சனை, அவர் இரட்சகராக இருக்கிறார், எனவே, பாரத்தையும் அவரே சுமக்கட்டும். இதைத் தான் இயேசுவும் நமக்கு சுட்டிக்காட்டியுள்ளார்:
உலகம் உங்களைப் பகைத்தால், அது உங்களைப் பகைக்கிறதற்குமுன்னே என்னைப் பகைத்ததென்று அறியுங்கள் (யோவான் 15:18)
இயேசுவிற்கு கீழ்படியாதவர்களின் முக்கியமான பிரச்சனை இயேசு ஆவார். நாம் தேவையில்லாத பாரத்தையும் கோபத்தையும் சுமந்துக்கொண்டு இருக்கவேண்டியதில்லை. பவுலடியார் "கூடுமானால் உங்களாலான மட்டும் எல்லா மனுஷரோடும் சமாதானமாயிருங்கள்" என்றுச் சொல்கிறார் (ரோமர் 12:18). இதனை எப்படி செய்வது? நமக்குத் தெரிந்த ஒரு வழி "தேவன் சூட்டை தாங்கும் படி அவருக்கு விட்டுக்கொடுப்பது தான்'.
Author: Alan Shlemon - A speaker for Stand to Reason
To know about the Author, visit: www.str.org/training/speakers/alan-shlemon
Translation: Answering Islam Tamil Team
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக