முன்னுரை:
இது ரமளான் மாதம், மற்றும் நோன்பின் கடைசி 10 நாட்களில் இருக்கிறோம். முகநூல் மற்றும் வாட்ஸப் பரவலாக பயன்படுத்தப்படும் இக்காலத்தில், வாட்ஸப்பில் சில செய்திகள் உலா வருகின்றன. வாட்ஸப்பில் வந்த ஒரு செய்தி தான் இக்கட்டுரையின் கருப்பொருள்.
ரமளானின் கடைசி பத்து நாட்களில் அதிகமான நன்மைகளை அடைய, ஒரு குறுக்கு வழியை மக்காவின் இமாம் ஷேக் மாஹிர் என்பவர் கூறியதாக ஒரு செய்தி. இதன் நம்பகத்தன்மையை நான் ஆய்வு செய்யப்போவதில்லை, இது தேவையும் இல்லை. இவ்விதமான விவரங்கள் உலா வருவதற்கு எப்படி இஸ்லாமிய இறையியல் காரணமாக இருக்கிறது என்பதை ஆய்வு செய்வோம். மேலும், இப்படிப்பட்ட இறையியலினால் முஸ்லிம்களுக்கு நன்மையுண்டாகுமா? என்பதையும் பார்ப்போம்.
வாட்ஸப்பில் வந்த செய்தி:
புனித ரமளானின் இறுதிப் பத்து நாட்களில், அதிகமான நன்மைகளை அடைய மிக இலேசான முறை ஒன்றை, மக்கா இமாம் ஷேக் மாஹிர் அவர்கள் கூறுகிறார்கள்:
1) ரமளானின் கடைசிப் பத்து நாட்களில், ஒவ்வொரு இரவிலும் ஒரு திர்ஹம் (அல்லது ஒரு குறிப்பிட்ட அளவு பணம்) தர்மம் செய்து வர வேண்டும்.
இதில் ஏதேனும் ஒரு இரவு நிச்சயமாக லைலதுல் கத்ர் இரவாக இருக்கும்.
ஆகவே, அந்த ஒரு இரவில் தருமம் கொடுத்தது, லைலத்துல் கத்ரு இரவில் தருமம் கொடுத்ததாக ஆகி விடும். அவ்வாறு ஆகும்போது, அது 84 வருடங்களின் ஒவ்வோரு இரவிலும், பகலிலும், தொடர்ந்து தர்மம் செய்த நன்மைகள் இறைவனிடம் இருந்து கிடைக்கும்!
2) இதேபோல், ரமலானின் கடைசிப்பத்து இரவுகளில், ஒவ்வொரு இரவும் ஸஹர் நேரத்தில் இரண்டு ரகஅத்துகள் நபில் தொழுது வர வேண்டும்.
இதில் ஏதேனும் ஒரு இரவு நிச்சயமாக லைலத்துல் கத்ர் இரவாக இருக்கும்.
ஆகவே, அந்த ஒரு இரவில் தொழுத தொழுகை லைலத்துல் கத்ரு இரவில் தொழுதது ஆக ஆகிவிடும். அவ்வாறு ஆகும்போது, அது 84 வருடங்களின் ஒவ்வோரு இரவிலும், பகலிலும், தொடர்ந்து தொழுது வந்த நன்மைகளை இறைவன் கொடுத்து விடுவான்.
3) மேலும், இதேபோல், கடைசிப்பத்தின் ஒவ்வொரு இரவும், சூரா இஃக்லாசை, குல்ஹுவல்லாஹு சூராவை) ஓதி வர வேண்டும்.
(குல்ஹுவல்லாஹு சூராவை 3 முறை ஓதினால் முழு குர்ஆனையும் ஓதிய நன்மை கிடைக்கும்)
அவ்வாறு ஓதிவரும்போது, அதில் ஏதேனும் ஒரு இரவு, லைலத்துல் கத்ர் இரவாக அமைந்துவிடும். ஆகவே, அந்த ஒரு இரவில் ஓதிய குல்ஹுவல்லாஹு சூரா, லைலத்துல் கத்ரு இரவில் ஒதியதாக ஆகிவிடும். அவ்வாறு, லைலத்துல் கத்ர் இரவில் ஓதியதன் காரணமாக, 84 வருடங்கள் தொடர்ந்து தினமும் முழுக் குர்ஆனையும் ஓதிவந்த நன்மை கிடைக்கும்.
இந்தச்செய்தியை பரப்புவதனால், அதனை மக்கள் அமல் செய்வதனால்,
அல்லாஹ் பெரும் நன்மைகளை அள்ளித்தருவான் இதை மற்றவர்களுக்கும் share செய்யுங்கள்.
குறுக்குவழி என்னும் சூதாட்டம்:
இந்த செய்தியை நான் மறுபடியும் விளக்கத்தேவையில்லை. ரமளானின் கடைசி 10 நாட்களில் "லைலதுல் கத்ர்" என்ற ஒரு நாள் வருகிறது. இந்த நாளில் தான் முதன் முதலாக குர்-ஆன் இறக்கப்பட்டது, அதனால் இந்த நாளுக்கு சிறப்புக்கள் அதிகம் என்று இஸ்லாம் சொல்கிறது. இந்த நாளில் ஒரு முஸ்லிம் எதைச் செய்தாலும், அதற்கு அதிக நன்மைகள் உள்ளது என்று முஸ்லிம்கள் நம்புகிறார்கள். ஆனால், அந்த நாள் எது? என்று முஹம்மது சரியாக சொல்லவில்லை, ரமளானின் கடைசி 10 நாட்களில், ஒற்றைப்படை நாளாக அது வருகிறது என்று முஹம்மது கூறியுள்ளார். [இதற்கு காரணம், அந்த நாள் எதுவென்று அல்லாஹ் சொன்னதை முஹம்மது மறந்துவிட்டார் அல்லது அல்லாஹ் மறக்கடித்துவிட்டான். அடிக்கடி வந்து முஹம்மதுவிடம் குர்-ஆன் வசன பொட்டலங்களை கொடுத்துவிட்டுச் செல்லும் ஜிப்ரீல் தூதன், அடுத்தமுறை வரும் போது, அது எந்த நாள் என்று கேட்டு, சரியான நாளை முஹம்மது சொல்லியிருந்திருக்கலாம். ஒன்ஸ்மோர் என்று கேட்கும் வழக்கம் முஹம்மதுவிற்கும் ஜிப்ரீலுக்கும் இடையில் உள்ளதோ இல்லையோ யார் அறிவார்!].
இதைப் பற்றி வரும் ஒரு ஹதீஸை முதலாவது காண்போம்.
புகாரி ஹதீஸ்: 813
அபூ ஸலமா அறிவித்தார்: நான் அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அவர்களிடம் சென்றேன். எங்களுடன் தாங்கள் பேரீச்ச மரத்தோட்டத்திற்கு வந்தால் நாம் பேசிக் கொண்டிருக்கலாமே என்று கேட்டேன். அவர்களும் புறப்பட்டனர். லைலதுல் கத்ரு இரவு பற்றி நீங்கள் நபி(ஸல்) அவர்களிடம் செவியுற்றதை எனக்குக் கூறுங்கள்! என்று கேட்டேன்.
அப்போத அபூ ஸயீத்(ரலி), 'நபி(ஸல்) அவர்கள் ரமளானின் முதல் பத்து நாள்கள் இஃதிகாப் இருந்தார்கள். நாங்களும் அவர்களுடன் இஃதிகாப் இருந்தோம். அவர்களிடம் ஜிப்ரீல்(அலை) வந்து 'நீங்கள் தேடக் கூடியது (லைலத்துல் கத்ரு) உங்களுக்கு இனி வரும் (நாள்களிலுள்ளது)' என்றார்கள். உடனே நபி(ஸல்) அவர்கள் நடுப் பத்து நாள்கள் இஃதிகாப் இருந்தார்கள். நாங்களும் அவர்களுடன் இஃதிகாப் இருந்தோம். அவர்களிடம் ஜிப்ரீல்(அலை) வந்து, 'நீங்கள் தேடக் கூடியது உங்களுக்கு இனி வரும் (நாள்களிலுள்ளது)' என்றார்கள்.
ரமளான் இருபதாம் நாள் காலையில் நபி(ஸல்) அவர்கள் சொற்பொழிவு செய்ய எழுந்தார்கள். 'யார் நபியுடன் இஃதிகாப் இருந்தார்களோ அவர்கள் திரும்பிச் செல்லட்டும்! லைலத்துல் கத்ரு இரவு பற்றி எனக்குக் காட்டப்பட்டது. நான் மறக்கடிக்கப் பட்டு விட்டேன். நிச்சயமாக அது கடைசிப் பத்து நாள்களில் ஒற்றையான நாளிலுள்ளது. . . . .
அந்த "லைலதுல் கத்ர்" எப்போது என்று சரியாக சொல்லாதபடியினால், முஸ்லிம்கள் குழம்பியுள்ளார்கள். அந்த நாளின் நன்மையை இழந்துவிடக்கூடாது என்று முஸ்லிம்கள் விரும்பி, மேற்கண்ட விதமான வாட்ஸப் செய்திகளை பரப்பிக்கொண்டு இருக்கிறார்கள்.
ஒரு நாள் செய்யும் நன்மை, 84 ஆண்டுகளுக்கு எப்படி சமமாகும்?
மேற்கண்ட வாட்ஸப் செய்தியில், கடைசி 10 நாட்களில் ஒவ்வொரு நாளும் தர்மம் செய்வது, மேலதிக தொழுகைச் செய்வது, குர்-ஆனின் குல்ஹுவல்லாஹு அத்தியாயத்தை வாசிப்பது போன்றவைகளைச் செய்தால், கண்டிப்பாக, ஏதாவது ஒரு நாளில் லைலதுல் கத்ர் நாளும் அடங்கிவிடும், இதனால் 84 ஆண்டுகள் செய்த நன்மைகள் வரும் என்று சொல்லப்பட்டுள்ளது.
84 ஆண்டு கணக்கு எங்கேயிருந்து வந்தது?
குர்-ஆனின் 97வது அத்தியாயத்தில் ஒரு வசனம் வருகிறது. ஐந்து வசனங்கள் கொண்ட அந்த அத்தியாயத்தின் 3வது வசனத்தை கவனியுங்கள்.
97:1. நிச்சயமாக நாம் அதை (குர்ஆனை) கண்ணியமிக்க (லைலத்துல் கத்ர்) என்ற இரவில் இறக்கினோம்.
97:2. மேலும் கண்ணியமிக்க இரவு என்ன என்பதை உமக்கு அறிவித்தது எது?
97:3. கண்ணியமிக்க (அந்த) இரவு ஆயிரம் மாதங்களை விட மிக்க மேலானதாகும்.
97:4. அதில் மலக்குகளும், ஆன்மாவும் (ஜிப்ரீலும்) தம் இறைவனின் கட்டளையின் படி (நடைபெற வேண்டிய) சகல காரியங்களுடன் இறங்குகின்றனர்.
97:5. சாந்தி (நிலவியிருக்கும்); அது விடியற்காலை உதயமாகும் வரை இருக்கும்.
அந்த லைலதுல் கத்ர் என்ற ஓர் இரவு, 1000 மாதங்களை விட மேலானது என்று அல்லாஹ் சொல்கிறான். அதனால், 1000 மாதங்களை 12 ஆல் வகுத்தால் வருவது 83.33 ஆண்டுகள். இந்த 83.33 ஆண்டுகளை தாராளமாக ரவுண்ட் செய்து, 84 ஆண்டுகள் என்று கணக்கிட்டுள்ளனர் (83.33ஐ ரவுண்ட் செய்தால் 83 என்றல்லவா வரும்? அது எப்படி 84 என்ற சந்தேகம் வரலாம். அதற்காகத் தான் நான் "தாராளமாக ரவுண்ட் செய்து" என்று குறிப்பிட்டுள்ளேன். இஸ்லாமிய நாட்காட்டியின் படி ஆண்டுக்கு 354/355 நாட்கள் ஆகும், இது வேறு விஷயம்).
இஸ்லாமின் 'நன்மை-தீமை' கணக்கு:
முஸ்லிம்கள் பின்பற்றுவதற்கு அல்லாஹ் பல சட்டங்களை கொடுத்துள்ளான். தொழுகை முதற்கொண்டு, ஹஜ் செய்வது வரை முஸ்லிம்கள் பின்பற்றுவதற்கு பல சட்டங்கள் உள்ளன. இச்சட்டங்களை பின்பற்றினால், அல்லாஹ் நன்மைகளைத் தருவான், அதிகமான நன்மைகளை சேகரித்துக்கொண்டு அல்லாஹ்வின் சொர்க்கத்தில் முஸ்லிம்கள் தங்கள் சீட்டை உறுதிப்படுத்திக் கொள்ளவேண்டும். [இந்த சீட்டு ரிசர்வேஷனுக்கு முஸ்லிம்கள் வாழும் போது அப்ளை செய்தால், மரித்த பிறகு தான் சீட்டும் பர்த்தும் கன்ஃபாமா இல்லையா? என்பதை அல்லாஹ் சொல்லுவான்.]
முஸ்லிம்கள் செய்யும் ஒவ்வொரு நல்ல செயல்களுக்கு ஒரு/சில நன்மைகளை அல்லாஹ் அவர்களின் பெயரில் கணக்கில்(Credit) வைக்கின்றான். அதே போல, முஸ்லிம்கள் செய்யும் தீய காரியங்களுக்கு அவர்களின் "நன்மைகள் கணக்கிலிருந்து" ஒரு/சில நன்மைகளை மைனஸ்(Debit) செய்கின்றான். சில அரசாங்க பரிட்சைகளில் தவறான பதில்களுக்கு மைனஸ் மதிப்பெண்கள் இருப்பது போல, அல்லாஹ்வும் செய்கின்றான். இது தான் இஸ்லாமிய இறையியல்.
இஸ்லாமின் இறையியல் இந்த கணக்கைச் சொல்வதினால், ஒவ்வொரு முஸ்லிமும் தான் மரிக்கும் வரை ஒவ்வொரு நாளும் பரிட்சை எழுதுவது போல உணருகின்றான் (உணரவேண்டும்).
எடுத்துக்காட்டு:
ஒரு நல்ல செயலுக்கு ஒரு மதிப்பெண் (நன்மை) கூட்டப்படுமென்றும், ஒரு தீய செயலுக்கு அரை மதிப்பெண் (நன்மை) கழிக்கப்படும் என்று நாம் வைத்துக்கொண்டால். ஒரு நாளில் ஒரு முஸ்லிம் 10 நன்மைகள் செய்து, 20 தீமைகள் செய்தால், அந்த நாள் முடியும் போது, அவனது கணக்கில் அல்லாஹ்விடம் ஜீரோ (பூஜ்ஜியம்) மதிப்பெண்கள் இருக்கும்.
10 நன்மைகள் = 10 மதிப்பெண்கள்.
20 தீமைகள் = -10 மதிப்பெண்கள்.
----------------------------------------------
மொத்தம்: 0 மதிப்பெண்கள்
----------------------------------------------
கணக்கு சரியாகத்தானே இருக்கிறது, முஸ்லிம்கள் நன்மைகளை/தீமைகளை தெளிவாக கூட்டிக்கொண்டு வாழ்ந்தால், ஒவ்வொரு நாளும் சில நன்மைகளை மிச்சம் வைத்துக்கொள்ளலாம் இல்லையா? என்று கேள்வி கேட்கலாம். பிரச்சனை என்னவென்றால், இது காசு இல்லை சரியாக கூட்டிக்கழித்து கணக்கு போடுவதற்கு, இது வாழ்க்கை.
- ஒரு மனிதன் எப்போது என்ன நன்மை செய்வான், என்ன தீமை செய்வான் என்று அவனுக்குத் தெரியாதல்லவா?
- சில நேரங்களில் நன்மை என்று அவன் கருதியதே, தீமையாக இருந்தால்? கணக்கு தவறாக மாறிவிடுமே!
இன்னொரு இமாலய பிரச்சனை என்னவென்றால், இதுவரை முஸ்லிம்கள் தங்கள் மார்க்கம் பற்றிய ஒரு தெளிவான நிலைப்பாட்டுக்கு வரவில்லை என்பதாகும்.
நேற்றைய நல்ல செயல், இன்றைய தீய செயல் ஆகலாம்:
போன வருஷம் நல்லது என்று கருதி செய்துக்கொண்டு வந்த செயல், இந்த வருஷம் அது பாவமாக (ஷிர்க்) மாறலாம். இந்த வருஷம் நல்லது என்று கருதி செய்துக்கொண்டு இருப்பவைகள், அடுத்தவருடம் ஷிர்க்காக கூட மாற வாய்ப்பு உள்ளது. கடந்த 1400 ஆண்டுகளுக்கு மேலாக முஸ்லிம் அறிஞர்கள் ஆய்வுகள் செய்தும், பல ஆயிர புத்தகங்கள் எழுதியும், இன்னும் இது தான் இஸ்லாம் என்றுச் சொல்ல யாராலும் முடியவில்லை. இந்த 2017ம் ஆண்டுவரையிலும் இன்னும் முஸ்லிம் அறிஞர்கள் ஆய்வுகள் செய்துக்கொண்டே இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது, இன்னும் பல நூறு ஆண்டுகள் இந்த ஆய்வு தொடரும். ஆக, முஸ்லிம்களுக்கு எது நன்மை எது தீமை என்று இதுவரை முழுவதுமாக தெரியாது. [நம் தமிழ நாட்டில், முஸ்லிம் அறிஞர்கள் ஒருவரை ஒருவர் திட்டிக்கொண்டு, நான் சொல்வது தான் உண்மை இஸ்லாம் என்று சொல்லிக்கொண்டு ரூம் போட்டு விவாதம் நடத்துகிறார்கள். இவர்கள் இதுவரை 'இது தான் உண்மை இஸ்லாம்' என்று ஒரு சரியான முடிவுக்கு வரவில்லை என்பது முக்கியச் செய்தி].
எனவே, தான் இந்த "நன்மை-தீமை" கணக்கு வழக்கு முஸ்லிம்களுக்கு ஒரு தலைவலியாகவே உள்ளது. ஒரு முஸ்லிம் 80 வயது வரை தன் மனசாட்சி உருத்தாமல் இஸ்லாம் சொல்கின்றபடி நடந்துக்கொண்டாலும், 'அல்லாஹ் தன்னை 100% ஏற்றுக்கொள்வான்' என்ற நம்பிக்கையில்லாமல் இருப்பான். தனக்கு டிக்கெட்டும் பர்த்தும் 100% நிச்சயமாக கிடைக்கும் என்ற நம்பிக்கை மரிப்பதற்கு முன்பு அவனுக்கே தெரிய வாய்ப்பு இல்லை. நேரடியாக ஸ்டேஷனுக்குச் செல்லவேண்டியது (மரணம்), அதன் பிறகு இரயில் பெட்டியில் ஒட்டியிருக்கும் பட்டியலில் தன் பெயர் இருக்கின்றதா இல்லையா என்று பார்க்கவேண்டியது. பெயர் இருந்தால், அல்லாஹு அக்பர், பெயர் இல்லையென்றால், இன்னொரு இரயில் வரும், அதன் பட்டியலில் நிச்சயம் பெயர் இருக்கும், ஏறி உட்காரவேண்டியது தான், டெஸ்டினேஷன்: நரகம். ஏனய்யா என் பெயர் முதல் இரயிலில் இல்லை? என்று ஸ்டேஷன் மாஸ்டரிடம் கேட்டால், நீ செய்த மொத்த தீமைகள், உன் மொத்த நன்மைகளை மிஞ்சிவிட்டது என்பார்.
இந்த 'நன்மை-தீமை' கணக்கு அவன் சாகும்வரை அவனை அலைகழித்துக் கொண்டே இருக்கும்.
நன்மைக்கு ஒரு மதிப்பெண், தீமைக்கு அரை மதிப்பெண்ணா?
அல்லாஹ்வின் இந்த நன்மை-தீமை கணக்கில் இன்னொரு சிக்கலும் உள்ளது. எல்லா தீமைக்கும் அரை மதிப்பெண் இல்லை, தீமையின் தீவிரத்தின் அடிப்படையில் மதிப்பெண் மாறுகின்றது. சில தீமைகளுக்கு அல்லாஹ் ஒரு மதிப்பெண்ணை கொடுப்பான், சிலவற்றுக்கு இன்னும் அதிகமாக கொடுப்பான்.
எனவே, ஒரு முஸ்லிம் தீயவைகளைச் செய்யும் போது, அவனுக்கு 'இதற்காக அல்லாஹ் என் நன்மை கணக்கிலிருந்து ஒரு மதிப்பெண்ணை குறைப்பானா? அல்லது இரண்டா? மூன்றா?' என்ற சந்தேகம் வரும்.
சுருக்கமாகச் சொல்வதென்றால், ஒரு முஸ்லிம் மரிப்பதற்கு முன்பு, எப்படியாவது, அதிக நன்மைகள் (மதிப்பெண்கள்) சம்பாதித்துக் கொள்ளவேண்டும். அதாவது வாழ் நாளெல்லாம் செய்த நன்மைகளிலிருந்து தீமைகளை கழித்துவிட்ட பிறகும், அவன் கணக்கில் அதிக நன்மைகள் இருக்கவேண்டும். அப்போது தான், மரித்த பிறகு அல்லாஹ் சொர்க்கம் அனுப்புவான். இந்த கணக்கு மூச்சு இருக்கும் போது தப்பாகப்போச்சு, மூச்சு நின்ற பிறகு எல்லாம் போச்சு.
இந்த பிரச்சனைகளிலிருந்து யார் காப்பாற்றுவார்? பிரச்சனையை எவன் உருவாக்கினானோ, அவன் தான் வழியையும் காட்டவேண்டும், அதாவது அல்லாஹ்.
அல்லாஹ்வும் குறுக்கு வழியும்:
அல்லாஹ் ரொம்பவும் ஸ்மார்ட். தன்னுடைய எதிர்ப்பார்ப்பிற்கு ஏற்றபடி முஸ்லிம்களால் வாழமுடியாது என்பதால், பல குறுக்குவழிகளை அவனே காட்டியுள்ளான். இதைத் தான் முஸ்லிம்கள் குரங்குபிடியாக பிடித்துக்கொண்டு தொங்குகிறார்கள்.
ஒவ்வொரு காரியத்திலும் குறுக்கு வழிகளைச் சொல்லி முஹம்மது முஸ்லிம்களை வலைத்து இருக்கிறார். இதர குறுக்கு வழிகள் பற்றிய விவரங்களை தனிக்கட்டுரையாக பார்ப்போம். இந்த கட்டுரையில், லைலத்துல் கத்ர் என்ற இரவு பற்றிய குறுக்கு வழியை மட்டுமே சுருக்கமாக காண்போம்.
குறுக்குவழி என்றால் என்ன? நம் அனைவருக்கும் தெரிந்திருக்கும். நேரடியாகச் சென்று அடையவேண்டியதை, குறுக்குவழியில் அடைய விரும்புவதாகும்.
உதாரணத்திற்கு:
- சரியாக படிக்காத மாணவன், பரிட்சையில் "பிட்" அடித்து, பரிட்சையில் பாஸ் செய்வது ஒரு குறுக்கு வழி அல்லது பரிட்சை தாள்களை திருத்துபவர்களிடம் பணத்தை (லஞ்சம்) கொடுத்து, வெற்றியடைவது குறுக்குவழி.
- தேசிய நெடுஞ்சாலையில் கடக்கவேண்டிய 100 கிலோ மீட்டர் தூரத்தை, குறுக்கு வழியில் சில கிராமங்களின் வழியாகச் சென்று, 60 கிலோமீட்டர்களில் செல்லவேண்டிய இடத்தை அடந்துவிடுதல் (40 கிலோமீட்டர் தூரத்தை கடக்கும் நேரத்தை, டீசலை மிச்சப்படுத்துவது).
- கடினமாக உழைத்து பணம் சம்பாதிப்பதை விட்டுவிட்டு, லாட்டரி டிக்கெட்டை 100 ரூபாய்க்கு வாங்கி, கோடீஸ்வரன் ஆகவேண்டும் என்று விரும்புவதும், குறுக்கு வழியே ஆகும்.
- சூதாட்டம் என்ற பெயரில் 1000 ரூபாயைக் கொண்டு, பல ஆயிரங்கள் லட்சங்கள் சம்பாதிக்க விரும்புவது.
இப்படி குறுக்குவழி என்பது பல முகங்களைக் கொண்டு உலாவிக்கொண்டு இருக்கிறது.
இஸ்லாமிய குறுக்குவழி இலக்கை அடைய போதுமானதாக உள்ளதா?
இஸ்லாமிய இறையியல் எப்படி முஸ்லிம்களை திருப்திப்படுத்தவில்லை என்பதை காண்போம்.
ஒரு முஸ்லிம், தன்னுடைய 40 ஆண்டுகள் வரை, தன் விரும்பிய படி வாழ்ந்துவிட்டன் என்று வைத்துக் கொள்வோம். அதன் பிறகு இஸ்லாம் சொல்கின்றபடி வாழ்ந்து, மேலும் அடுத்த 23 ஆண்டுகள் அனைத்து லைலத்துல் கத்ர் இரவுகளில் மேற்கண்ட அனைத்து நன்மைகளையும் செய்துள்ளான் என்று வைத்துக்கொள்வோம் (தர்மம், தொழுகை, குர்-ஆன் ஸூரா வாசிப்பு). தன்னுடைய 63ம் ஆண்டு மரித்துவிட்டான் என்று கருதுவோம். இப்போது அந்த முஸ்லிமின் கணக்கைப் பார்ப்போம்.
ஒரு லைலதுல் கத்ர் இரவுக்கு: 84 ஆண்டுகள் நன்மை கிடைக்கும்.
23 லைலதுல் கத்ர் இரவுகளுக்கு: 23 x 84 = 1932 ஆண்டுகளின் நன்மை கிடைக்கும்.
இது தவிர, தன்னுடைய 23 ஆண்டுகள் கடைபிடித்த இதர அமல்களுக்கும் (நற்காரியங்களுக்கும்) நன்மைகளை அல்லாஹ் கூட்டுவான் மேலும் அவன் செய்த தீய காரியங்களுக்கு நன்மைகளை கழிப்பான்.
ஆக, 23 ஆண்டுகள் வாழ்ந்த ஒரு முஸ்லிம் 1932 ஆண்டுகள் செய்த நன்மைகளோடு கூட, இதர நன்மைகளையும் பெறுகிறான். இம்மனிதன் மரணத்தருவாயில் இருக்கும் போது, "நான் ஒரு நல்ல வாழ்க்கையை வாழ்ந்துவிட்டேன், என் இஸ்லாமிய விசுவாசத்தை (தீனை) காத்துக்கொண்டேன், 1932 ஆண்டுகளுக்கான நன்மைகளை நான் செய்துவிட்டேன், ஆகையால் அல்லாஹ் எனக்கு நிச்சயம் சொர்க்கம் கொடுப்பான் என்று மனநிறைவோடும், நம்பிக்கையோடும் சொல்லமுடியுமா?".
இந்த மனிதன் செய்த நன்மை/தீமைகளை, அல்லாஹ் தராசிலே நிறுத்தும் போது, இவன் செய்த நன்மைகள்(Credit), தீமைகளை(Debit) மிஞ்சுமா? இந்த நம்பிக்கை அம்மனிதனுக்கு கிடைக்குமா?
அல்லாஹ்வின் குறுக்குவழி ஒரு சூதாட்டமா?
குறுக்குவழியில் செல்வது நல்லதா? கெட்டதா? குறுக்குவழியில் செல்வதை யாரும் தவறு என்று நினைக்கமாட்டார்கள். ஆனால், பெரும்பான்மையான குறுக்கு வழிகள் தவறாகத் தான் இருக்கும். நான் மேலே உதாரணங்களாக காட்டிய செயல்களில், பரிட்சையில் பிட் அடிப்பது, லஞ்சம் கொடுப்பது, லாட்டரி டிக்கெட் வாங்குவது, சூதாட்டம் ஆடுவது போன்றவை தவறானவை என்று உடனே நாம் சொல்லிவிடுவோம். ஆனால், 100 கி.மி. தூரம் செல்லும் பயணத்தை 60 கி.மில் குறுக்குவழியில் கடப்பது தவறு என்று யாரும் சொல்லமாட்டோம். ஆனால், இதிலும் தவறு உள்ளது. அதாவது, தேசிய நெடுங்சாலைகளை, பலகோடிகளை செலவு செய்து அரசு அமைக்கின்றது. ஆனால், நாம் குறுக்குவழியில் செல்லவேண்டும் என்பதற்காக, கிராகங்களின், ஊர்களின் வழியே சென்று விடுகிறோம், பல கி.மி.க்களை மிச்சப்படுத்திவிடுகிறோம். இது எப்படி தவறாகும்? என்ற சந்தேகம் நமக்கு எழலாம்.
இதனை கவனியுங்கள். "ஒரே ஒருவர்" இப்படி குறுக்கு வழியாக கிராமங்களுக்குள் சென்று தூரத்தை மிச்சப்படுத்துவது அவ்வளவு பெரிய பிரச்சனையாக தவறாக இருக்காது. ஆனால், நெடுஞ்சாலைகளை பயன்படுத்தாமல், அனைத்து வாகனங்களும் (லாரிகள், டிரக்குகள், கார்கள், பஸ்கள், இருசக்கர வாகங்கள்) கிராமங்களுக்குள் சென்று தூரத்தை கடந்தால், அந்த கிராகங்களில் இருக்கும் சாலைகள் கெட்டுவிடும், கிராகங்களின் காற்று மாசுப்படும், பல விபத்துக்கள் நேரிடும், அரசு பல கோடிகள் செலவழித்து கட்டிய நெடுஞ்சாலைகள் வீணாகிவிடும். ஆக, மேலோட்டமாக பார்த்தல், குறுக்குவழியில் தூரத்தை மிச்சப்படுத்த நாம் பயணிப்பது தவறாகவோ குற்றமாகவோ இல்லாமல் இருந்தாலும், அடிப்படையில் அது குற்றமாகும்.
குறுக்கு வழியில் நாம் பயணிப்பது ஒருவகையான சூதாட்டம் தான். குறுக்குவழி என்பது நியாயமான முறையில் செல்லாமல், சம்பாதிக்காமல், ஏதாவது ஒரு வழியில் (அது மற்றவர்களுக்கு பிரச்சனையாக இருந்தாலும் சரி) அநியாயமான வழியில் செல்வதாகும், அல்லது சம்பாதிப்பதாகும்.
லைலதுல் கத்ர் இரவில் தர்மம் செய்வது ஒரு குறுக்குவழி:
வருடமெல்லாம் தர்மம் செய்வது நல்லது, ஆனால், லைலதுல் கத்ர் இரவில் தர்மம் செய்துவிட்டால், 84 ஆண்டுகள் தர்மம் செய்வதற்கான நன்மைகளை அள்ளிக்கொண்டுச் செல்வது குறுக்குவழியாகும். இதனால் யாருக்கு என்ன தீமை உண்டாகிவிடும்? என்று இப்போது வாசகர்கள் கேட்கலாம். அல்லாஹ் நன்மைகளை எங்களுக்கு வழங்கும் போது, யாருக்கும் இதனால் நட்டமில்லையே! என்ற கேள்வி எழலாம்.
இதை கவனியுங்கள்: ஒரு முஸ்லிம் ஒரு நாளுக்கு ரூபாய் 100 தர்மம் செய்தால், வருடத்திற்கு 365 x 100 = 36500 ரூபாய் ஆகும். ஆனால், அதே 100 ரூபாயை லைலதுல் கத்ர் இரவு மட்டும் தர்மம் செய்துவிட்டால், 84 ஆண்டுகள் தினமும் 100 ரூபாய் தர்மம் செய்வதற்கு சமம் (1000 x 30 x 100 = 30,00,000).
சுருக்கமாக பார்த்தால், ஒரு 100 ரூபாயை லைலதுல் கத்ர் இரவில் தர்மம் செய்தால், 30 லட்சம் தர்மம் செய்ததற்கு சமம்.
இது குறுக்கு வழி இல்லையா? இது சூதாட்டம் இல்லையா? ரூபாய் 100ஐ தர்மம் செய்து, 30 லட்சத்திற்கு நன்மைகளை நம் சொந்தமாக்கிக்கொள்வது, சூதாட்டமா இல்லையா?
இப்படி செய்வதை விட, ஒவ்வொரு நாளும் 100 தர்மம் செய்து, ஆண்டுக்கு 36,500 ரூபாய் நன்மைகளை மட்டுமே ஒரு முஸ்லிம் பெற்றால், இந்த பணத்தைப் பெற்ற ஏழைகளுக்கு நன்மையுண்டாகுமே. இப்படி முஸ்லிம்கள் ஏழைகளுக்கு தர்மம் செய்வதை இந்த லைலதுல் கத்ர் இரவின் குறுக்குவழி தடுத்துவிடுகின்றதல்லவா? இது சூதாட்டமில்லையா? ஆக, இரமளான் மாதத்தில் முக்கியமாக லைலதுல் கத்ர் இரவில் செய்யப்படும் தர்மம் ஒரு சுயநலம் தானே! இது ஒரு சூதாட்டம் தானே! இதனை சொல்லிக்கொடுத்தவர் அல்லாஹ் தானே (குர்-ஆன் 97:3)! முஸ்லிம்கள் சிந்திக்கவேண்டும்.
லைலதுல் கத்ர் இரவு தர்மம் செய்வதில், ஏழைகளுக்கு அநியாயம் நடக்கிறது.
பிரச்சனை குறுக்கு வழியில் இல்லை, இறையியலில் உள்ளது:
தர்மம் செய்வது எனக்கு புரிந்துவிட்டது, ஆனால் லைலதுல் கத்ர் இரவில் உபரியாக தொழுவது அல்லது குல்ஹுவல்லாஹு குர்-ஆன் அத்தியாயத்தை ஓதுவது பற்றிய குறுக்குவழியில் என்ன பிழையுள்ளது? என்ற கேள்வி வாசகர்களுக்கு எழலாம்.
குல்ஹுவல்லாஹு ஸூராவை ஓதினால் முழு குர்-ஆனையும் ஓதுவதற்கு சமம் என்ற குறுக்குவழி:
நான் இந்த கட்டுரைக்கு தலைப்பிடும் போது "குறுக்குவழி அல்லாஹ்" என்று பெயரிட்டேன். ஏன் அல்லாஹ் மேற்கண்டவிதமான குறுக்குவழியை கொடுத்துள்ளான்? இஃக்லாஸ் என்ற 112வது அத்தியாயத்தை ஓதுதல் முழு குர்-ஆனையும் ஓதுவதற்கு சமம். இது என்ன கூத்து? ஒரு முஸ்லிம் அல்லாஹ்வின் 114 அத்தியாயங்களை (6236 வசனங்களை) பொருள் உணர்ந்து படிக்கும் போது வரும் ஞானம் அல்லது அறிவு, இதனால் வரும் நன்மைகள், கீழ்கண்ட 4 வசனங்களை படித்தால் வந்துவிடுமா? இது நம்பக்கூடியதாக உள்ளதா? அறிவுடமையாக உள்ளதா?
112:1. (நபியே?!) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே.
112:2. அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன்.
112:3. அவன் (எவரையும்) பெறவுமில்லை; (எவராலும்) பெறப்படவுமில்லை.
112:4. அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை.
முழு குர்-ஆனை அரபியில் இல்லாமல், தன் தாய் மொழியில், அதாவது தமிழில் ஓதும் முஸ்லிமுக்கு, அல்லாஹ்வின் கட்டளைகள் புரியும், தன் மார்க்கம் விளங்கும், அல்லாஹ்வின் எச்சரிப்புக்களை பல இடங்களில் படிப்பதினால், அவைகளின் படி தன் வழியை சரி செய்துக்கொள்வான். ஆனால், மேற்கண்ட 4 வசனங்களை படித்தால், அது எப்படி மேற்கண்ட அனைத்து நன்மைகளையும் அவனுக்கு கொடுக்கும்? இது குறுக்கு வழி இல்லையா? இது சூதாட்டம் இல்லையா? 10 ரூபாய் லாட்டரி வாங்கிக்கொண்டு, ஒரு கோடிக்கு ஆசைப்படும் மனிதனின் தவறுக்கு சமம் இல்லையா?
இதே போலத்தான், லைலதுல் கத்ர் இரவு தொழுகையும். ஒரு இரவு முழித்துக்கொண்டு தொழுதுவிட்டு, 1000 மாதங்களின் (84 ஆண்டுகளின்) நன்மைகளை பெற நினைப்பது சரியானதா? அல்லாஹ்வின் சமுகத்துக்கு முன்பாக ஆண்டு முழுவதும் அனுதினமும் தொழுவது எங்கே? சில மணித்துளிகள் ஒரு நாள் மட்டும் தொழுதுவிட்டு, 'எனக்கு 1000 மாதங்களில் தொழுவதற்கு சமமான நன்மை கிடைத்துவிட்டது' என்று மனப்பால் குடிப்பது எங்கே!? வாசகர்களுக்கு எங்கே தவறு நடக்கிறது என்று புரிகின்றதா?
லைலதுல் கத்ர் இரவு தொழுவதில் மற்றும் ஒரு ஸூராவை மட்டுமே படிப்பதில், அந்த செயலைச் செய்யும் முஸ்லிம்களுக்கே அநியாயம் நடக்கிறது. அன்று ஒரு நாள் தர்மம் செய்துவிட்டு, 84 ஆண்டுகளின் நன்மை கிடைத்துவிடும் என்று எண்ணுவதில் ஏழைகளுக்கு அநியாயம் நடக்கிறது.
குறுக்குவழிகள் சறுக்கும் படிகள்.
குறுக்குவழி அல்லாஹ்:
குறுக்குவழி தவறா? குறுக்குவழி எப்படி சூதாட்டம் ஆகும்?
சூதாட்டம் ஆடுபவனின் முக்கிய நோக்கமென்ன? கொஞ்சம் பணத்தைப் போட்டு, அதிகமாக உழைக்காமல் அதிகம் சம்பாதித்துவிடவேண்டும் என்பதாகும். இதுவரை நாம் பார்த்த லைலதுல் கத்ர் இரவில் செய்யப்படும், தர்மம், தொழுகை, மற்றும் குர்-ஆன் ஓதுதலில் வேறு ஏதாவது எதிர்ப்பார்ப்பு உள்ளதா? இதுவும் ஒரு சூதாட்டம் தானே! ஒரே நாளில் 84 ஆண்டுகளில் (1000 மாதங்களில்) கிடைக்கும் நன்மைகளைப் பெற்றுவிடவேண்டும் என்பதும் சூதாட்டம் தானே!
ஹிந்து சட்டங்களுக்கும், 'லைலதுல் கத்ர்' க்கும் இடையே வித்தியாசம் உள்ளதா?
இந்து மதத்திலே சில நாட்கள், சில மணித்துளிகள் விசேஷித்தமானவை என்று வரையறுக்கப்பட்டுள்ளது. அதாவது நல்ல நேரம், எமகண்டம் என்று பல விதங்களில் இறைவன் உண்டாக்கிய காலத்தில் சில காலத்தை கணக்கிட்டு, அவைகளுக்கு நல்ல நேரங்கள், கெட்ட நேரங்கள் என்று முத்திரைக் குத்திவிட்டுள்ளார்கள்.
இந்த கட்டுரையில் 'லைலதுல் கத்ர்' பற்றி நாம் படித்தது போல, தான தர்மங்களை, பூஜைகளை இந்துக்கள் அந்த குறிப்பிட்ட விசேஷித்த நாட்களில், அந்த குறிப்பிட்ட மணித்துளிகளில் செய்வார்கள். ஏன் இப்படி என்று கேட்டால்? இந்த நாளில் இந்த மணித்துளியில் செய்தால் அதிக நன்மைகள் கிடைக்கும் என்று சாத்திரங்கள் சொல்கின்றன என்றுச் சொல்வார்கள்.
இந்த குறிப்பிட்ட நாளில் உங்களின் செயல்களுக்கு உங்கள் சாமி அதிக நன்மைகளை கொடுப்பாரா? அப்படியானால், அதே சாமி மற்ற நாட்களில் ஏன் அதிக நன்மைகளைச் செய்யமாட்டார் என்று முஸ்லிம்கள் இந்துகளிடம் கேட்பார்கள். அதே கேள்வியை திருப்பி முஸ்லிம்களிடமும் லைலதுல் கத்ர் பற்றி கேட்கப்படவேண்டும்.
இந்துக்களின் நல்ல நாட்கள் நல்லநேரம் என்ற கோட்பாட்டிற்கும், முஸ்லிம்களின் லைலதுல் கத்ர் இரவுக்கும் இடையே ஏதாவது வித்தியாசம் தெரிகின்றதா?
ஒரு குறிப்பிட்ட நாளில் இந்த காரியத்தைச் செய்தால், அதிக நன்மை என்று இந்துக்கள் நம்புகிறார்கள், இதையே இஸ்லாமும் சொல்கிறது. இதனுடைய செயல்விளக்கம் லைலதுல் கத்ர் நாளில் நாம் பார்க்கலாம்.
முடிவுரை:
இதுவரை பார்த்த விவரங்களிலிருந்து அறிவதென்ன?
1. மனிதனுக்கு நன்மை-தீமை என்பதை கணக்கிட்டு, தராசிலே நிறுத்தி, நன்மை அதிகமாக இருந்தால் சொர்க்கம் வழங்குவேன் என்றுச் சொல்லும் மார்க்கம் இஸ்லாம்.
2. வாழ்க்கையே ஒரு கணக்கு என்று வந்துவிட்டால், மனிதன் பாவம்! அவன் என்ன செய்வான்? குறுக்குவழிகளைத் தேடுவான்.
3. அவனுடைய ஆசைக்கு தகுந்த பதில், குறுக்குவழி அல்லாஹ்வும், அவனுக்கு சூதாட்டத்திற்கு நிகரான குறுக்குவழிகளை கற்றுக்கொடுத்துள்ளான்.
4. பெரும்பான்மையான குறுக்குவழிகள் சுயநலத்தோடு சம்மந்தப்பட்டவைகளாகவும், சட்டத்தை மீறும் செயல்களாகவும், மற்றவர்களுக்கு தீமையை விளைவிக்கும் செயல்களாகவும் இருக்கின்றன. அது போல, முஸ்லிம்களுக்கு பயனில்லாத குறுக்குவழியாக, லைலதுல் கத்ர் இரவின் செயல்பாடுகள் உள்ளன.
5. இந்துக்களின் நல்ல நேரம், சுப மூகூர்த்த நாள் போன்றவைகளை குற்றம் சாட்டும் முஸ்லிம்கள், லைலதுல் கத்ர் நாளையும் மறைமுகமாக குற்றம் சாட்டுகிறார்கள் என்று அர்த்தம்.
இந்த கட்டுரையில் பதித்த விவரங்கள் பற்றி வாசகர்கள் கேள்வி எழுப்பினால், நான் பதில் தர தயாராக இருக்கிறேன்.
- - -கட்டுரை முற்றிற்று- - -
அடிக்குறிப்புக்கள்
1) நல்ல குறுக்கு வழிகள் இல்லையா? நான் குறுக்குவழிகள் அனைத்தும் சட்டவிரோதமானது தவறானது என்று கூறவில்லை. உதாரணத்திற்கு: இதற்கு முன்பாக நாம் பணத்தை ஒருவருக்கு அனுப்புவதற்கு, வங்கிக்குச் சென்று பணத்தை நம் அக்கவுண்டிலிருந்து நண்பரின் அக்கவுண்டிற்கு அனுப்புவோம். தற்போது, வீட்டில் உட்கார்ந்துக்கொண்டு ஆன்லைனில் அதனைச் செய்கிறோம். இதனை குறுக்குவழி என்றுச் சொன்னாலும் சரி அல்லது தொழில்நுட்ப வளர்ச்சி என்றுச் சொன்னாலும் சரி, இதில் தவறு இல்லை. உண்மையில் இது நம் வேலையை சுலபமாக்குகிறது. இதை தொழில் நுட்பவளர்ச்சி என்று சொல்லவேண்டும். எந்த செயலில் நம் வேலை சுலபமாகி, அதே நேரத்தில் மற்றவர்களுக்கோ, சட்டத்திற்கோ பங்கம் விளைவித்தால், அந்த குறுக்குவழி தவறானது என்பது என் கருத்து.
ரமளான் தொடர் கட்டுரைகள் (2012 - 2017)
உமரின் கட்டுரைகள்/மறுப்புக்கள் பக்கம்
Source: http://www.answering-islam.org/tamil/authors/umar/ramalan/2017ramalan_shortcut.html
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக