முந்தைய கட்டுரைகள்:
முன்னுரை:
பாரா அவர்கள் நிலமெல்லாம் இரத்தம் புத்தகத்தின் 20ம் அத்தியாயத்தில், முஸ்லிம்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும் ஒரு விவரத்தை எழுதியுள்ளார். அது என்னவென்றால், ஆதாரபூர்வமான விவரங்களின் படி, முஹம்மது மொத்தம் செய்த யுத்தங்கள் மூன்று தான். மூன்றுக்கு மேலே யாராவது எண்ணிக்கையை உயர்த்திச் சொன்னால், அவன் பொய்யனாவான், அவன் யூதனாவான். ஏனென்றால், முஹம்மதுவின் மீதும், இஸ்லாமின் மீதும் அபாண்டமான பழியை சுமத்துவது யூதர்களின் வேலையாகும். இப்படி அவர் எழுதியுள்ளார்.
முந்தையை கட்டுரையில் பாராவின் இந்த கூற்று எப்படி குர்-ஆனை அவமானப்படுத்துகிறது என்பதை விளக்கினேன். மூன்றைவிட அதிகமான போர்களில் முஹம்மது ஈடுபட்டதாக குர்-ஆன் சொல்கிறது. இந்த கட்டுரையில், முஸ்லிம்கள் "அல்லாஹ்வின் வஹி" என்று கருதும் ஹதிஸ்களின் வெளிச்சத்தில், பாரா அவர்களின் மேற்கண்ட கூற்று எப்படி பொய்யாக நிருபனமாகிறது என்பதை காண்போம். இதற்காக நான் ஒரே ஒரு ஹதீஸை மட்டுமே இக்கட்டுரையில் மேற்கோள் காட்டப்போகிறேன்.
1) பாரா அவர்களின் முத்தான மூன்று போர்கள்
பாரா அவர்களின் புத்தகத்திலிருந்து சில வரிகளை மட்டுமே இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன். அவரது 20வது அத்தியாயத்தை படிக்க விரும்புகிறவர்கள், கீழே கொடுக்கப்பட்ட தொடுப்பை சொடுக்கி படித்துக்கொள்ளலாம்.
பாரா அவர்கள் எழுதியவை:
பா.ராகவன் - நிலமெல்லாம் இரத்தம்
அத்தியாயம் 20 - இஸ்லாம் வாள்முனையில் பரவியதா?
இதை ஆராய்வதற்கு முதல் தடையாக இருப்பது, "அது அச்சுறுத்தலால் பரப்பப்பட்ட மதம்" என்கிற முன் அபிப்பிராயம், அல்லது முன் முடிவு அல்லது முன் தீர்மானம். இந்த முன் தீர்மானம் அல்லது முன் அபிப்பிராயத்தை இஸ்லாத்தைக் காட்டிலும் வேகமாகப் பரப்பி வேரூன்றச் செய்தவர்கள் மேற்கத்திய சரித்திர ஆசிரியர்கள். பெரும்பாலும் யூதர்கள். சிறுபான்மை கிறிஸ்துவ சரித்திர ஆய்வாளர்கள்.
உண்மையில் முகம்மது நபியின் காலத்தில் நடைபெற்ற யுத்தங்களாக ஆதாரங்களுடன் கிடைப்பது மொத்தம் மூன்றுதான். பத்ரு, உஹைத், ஹுனைன் என்கிற மூன்று இடங்களில் முஸ்லிம்கள் நேரடியாக யுத்தத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். இஸ்லாம் குறித்து அல்லாமல், முகம்மது நபியின் வாழ்க்கை குறித்து ஆராய்ச்சி செய்திருக்கும் மேற்கத்திய ஆய்வாளர்களின் நூல்களில் இந்த யுத்தங்கள் பற்றிய குறிப்புகள் இருக்கின்றன. உண்மையில் எண்பது யுத்தங்கள் அவர் காலத்தில் நடந்திருக்குமானால், இந்த வாழ்க்கை வரலாற்றாசிரியர்கள் அவற்றையும் அவசியம் பதிவு செய்திருப்பார்கள். மாறாக, மேற்சொன்ன மூன்று யுத்தங்கள் பற்றி மட்டுமே அவர்கள் பேசுகிறார்கள்.
இதைக்கொண்டே, இஸ்லாத்தை முன்னிட்டு முகம்மது நபியின் காலத்தில் நிகழ்த்தப்பட்ட யுத்தங்கள் மூன்றுதான் என்கிற முடிவுக்கு வரவேண்டியதாகிறது.
. . . ஆதாரங்களுடன் உள்ள மூன்று யுத்தங்கள் கூட ஒரே தினத்தில் ஆரம்பித்து, நடந்து, முடிந்தவையாகவே இருக்கின்றன. அதாவது, ஒருநாள் கலவரம்.
கட்டக்கடைசி வினாடி வரை அவர் யுத்தங்களைத் தவிர்ப்பதற்கான முயற்சிகளையே மேற்கொண்டிருப்பதாகச் சரித்திரம் சுட்டிக்காட்டுகிறது. தவிர்க்கவே முடியாத மூன்று சந்தர்ப்பங்களில் தான் முகம்மது, யுத்தத்துக்கான உத்தரவு அளித்திருக்கிறார்.
நன்றாக கவனியுங்கள், பாராவின் ஆய்வின் படி "ஆதாரங்களுடன் கிடைத்திருப்பது மூன்று யுத்தங்கள் தான்". யாராவது வேறு எண்ணிக்கையைச் சொன்னால், அது ஆதாரமற்ற பொய்யான செய்தியாகும்.
2) ஹதீஸ்கள் சொல்லும் உண்மை என்ன?
குர்-ஆனுக்கு அடுத்தபடியாக, புகாரி மற்றும் முஸ்லிம் ஹதீஸ்கள் நம்பகமானது என்று முஸ்லிம்கள் கருதுகிறார்கள். இந்த ஹதீஸ்கள் இல்லையென்றால், ஒரு முஸ்லிம் ஒரு முஸ்லிமாக வாழமுடியாது, சரியாகச் சொல்லவேண்டுமென்றால், குர்-ஆனை மட்டுமே வைத்துக்கொண்டு ஒரு முஸ்லிமினால் 50% முஸ்லிமாக கூட வாழமுடியாது. ஒருவன் முஸ்லிமாக மாறும் நாளில் சொல்லும் "விசுவாச பிரமாணம் – ஷஹதா" சொல்வதிலிருந்து அவன் மரிக்கும் வரைக்கும் நடக்கும் அனைத்தும் ஹதிஸ்களில் கிடைக்கிறது. மேலும், அவன் அனுதினமும் செய்கின்ற பெரும்பான்மையான ஆசாரங்கள், தொழுகை செய்யும் முறைகள் அனைத்தும் ஹதீஸ்களிலிருந்து வருகின்றன.
முஹம்மது அவர்கள் பங்கு பெற்றது 19 போர்களில்:
புகாரி மற்றும் முஸ்லிம் ஹதீஸ் தொகுப்புக்களில், முஹம்மது 19 போர்களில் பங்கு பெற்றார் என்ற ஒரே விவரம் நான்கு ஹதிஸ்களில் வருகிறது.
புகாரி எண்: 3949 & 4471
3949. அபூ இஸ்ஹாக்(ரஹ்) அறிவித்தார்
நான் ஸைத் இப்னு அர்கம்(ரலி) அவர்களுக்கும் அருகிலிருந்தபோது, 'நபி(ஸல்) அவர்கள் புரிந்த போர்கள் எத்தனை?' என்று அவர்களிடம் வினவப்பட்டது. 'பத்தொன்பது' என்று அவர்கள் பதிலளித்தார்கள். 'நபி(ஸல்) அவர்களுடன் நீங்களும் பங்கெடுத்த போர்கள் எத்தனை?' என்று வினவப்பட்டபோது, 'பதினேழு' என்றார்கள். 'இவற்றில் முதல் போர் எது?' என்று நான் அவர்களிடம் கேட்டேன். அவர்கள், 'உஸைரா' அல்லது 'உஷைர்' என்று பதிலளித்தார்கள். கதாதா(ரஹ்) அவர்களிடம் நான் கேட்டபோது அவர்கள், 'உஷைரா தான் (சரியான உச்சரிப்பு)' என்றார்கள்.
4471. அபூ இஸ்ஹாக் அம்ர் அஸ்ஸபீஈ(ரஹ்) அறிவித்தார்
'இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் எத்தனை புனிதப் போர்களில் நீங்கள் கலந்து கொண்டீர்கள்?' என்று நான் ஸைத் இப்னு அர்கம்(ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள், 'பதினேழு (புனிதப் போர்களில் நபி அவர்களுடன் நான் கலந்து கொண்டேன்)' என்று பதிலளித்தார்கள். நான், 'நபி(ஸல்) அவர்கள் எத்தனை புனிதப் போர்களில் பங்கெடுத்தார்கள்' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'பத்தொன்பது போர்களில் (பங்கெடுத்தார்கள்)' என்று பதிலளித்தார்கள்.
முஸ்லிம் எண்: 2405 & 3706
2405. அபூஇஸ்ஹாக் அம்ர் அஸ்ஸபீஈ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் ஸைத் பின் அர்கம் (ரலி) அவர்களிடம், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் எத்தனை அறப்போர்களில் நீங்கள் கலந்துகொண்டீர்கள்?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "பதினேழு அறப்போர்களில் (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் நான் கலந்து கொண்டேன்)" என்று விடையளித்தார்கள். தொடர்ந்து அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பத்தொன்பது போர்களில் கலந்துகொண்டார்கள். அவர்கள் (மதீனாவிற்கு) நாடு துறந்து (ஹிஜ்ரத்) சென்ற பிறகு ஒரேயொரு ஹஜ் -விடைபெறும் ஹஜ்- மட்டுமே செய்தார்கள்" என்றும் கூறினார்கள். இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அபூஇஸ்ஹாக் (ரஹ்) அவர்கள், "(நாடு துறந்து செல்வதற்கு முன்) அவர்கள் மக்காவில் இருந்தபோது மற்றொரு ஹஜ் செய்துள்ளார்கள்" என்று குறிப்பிடுகிறார்கள்.
3706. அபூஇஸ்ஹாக் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்களது ஆட்சியில் கூஃபாவின் ஆளுநராயிருந்த) அப்துல்லாஹ் பின் யஸீத் அவர்கள் மழை வேண்டிப் பிரார்த்திப்பதற்காக மக்களுடன் புறப்பட்டுச் சென்றார். அப்போது அவர் இரண்டு ரக்அத்கள் தொழுவித்துவிட்டு மழை வேண்டிப் பிரார்த்தித்தார்.
அப்போது நான் ஸைத் பின் அர்கம் (ரலி) அவர்களைச் சந்தித்தேன். எனக்கும் அவர்களுக்குமிடையே ஒரு மனிதர் மட்டுமே இருந்தார். அப்போது நான் ஸைத் (ரலி) அவர்களிடம், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கலந்துகொண்ட போர்கள் எத்தனை?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "பத்தொன்பது" என விடையளித்தார்கள்.
"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் நீங்கள் கலந்துகொண்ட போர்கள் எத்தனை?" என்று வினவியபோது, "பதினேழு" என்றார்கள். "அவர்கள் கலந்துகொண்ட முதல் போர் எது?" என்று கேட்டதற்கு "தாத்துல் உசைர், அல்லது உஷைர்" என்று பதிலளித்தார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
3) பாராவின் பொய்யும் ஹதீஸ்களின் மெய்யும்
என்னுடைய முந்தைய கட்டுரைகளில் நான் குறிப்பிட்டது போல, பாரா ஹதீஸ்களை படிக்கவில்லை என்று தெரிகிறது. அவர் "நிலமெல்லாம் இரத்தம்" தொடர்களை எழுதுகின்ற போது, குறைந்த பட்சம் தான் தொடுகின்ற தலைப்புக்களைப் பற்றி ஹதீஸ்கள் என்ன சொல்கின்றன என்று படித்து இருந்திருந்தால், இப்படிப்பட்ட பல பிழைகளை செய்து இருந்திருக்கமாட்டார். புத்தகத்தின் கடைசியில் அவர் பதித்த "உதவிய நூல்கள்" பட்டியலில், தமிழ் குர்-ஆனும், ஹதீஸ்களில் ஒரே ஒரு ஹதீஸின் தொகுப்பும் இடம் பெறாமல் இருந்தது, மன்னிக்கமுடியாத சோகமாக ஆச்சரியம்.
குர்-ஆனையும், ஹதீஸ்களையும் படிக்காமல், எப்படி இவர் இஸ்லாம் பற்றி இப்படி வாரி வாரி வழங்குகிறார் என்று நான் ஆச்சரியப்பட்டேன். நண்பனின் செல்வங்களை எடுத்து கர்ணன் வாரி வழங்கியது போல, யாரோ அரைகுறை வேக்காடுகள் எழுதிய புத்தகங்களை படித்துவிட்டு, அவர் தன் பாணியில் அடித்து தள்ளினார்.
மேலே குறிப்பிட்ட ஹதீஸ் பலமான ஆதார பூர்வமானதாக முஸ்லிம்கள் நம்புகிறார்கள். இந்த ஹதீஸ் சொல்கிறது – "முஹம்மது 19 போர்களில் சுயமாக ஈடுபட்டார்" என்று, ஆனால் பாராவோ "அதெல்லாம் பொய், வெறும் மூணு தானய்யா" என்று சாலமென் பாப்பைய்யா போல மிகவும் லேசாக சொல்லிவிட்டுச் சென்றுவிட்டார். இதனை கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக படித்துவிட்டு, சரமாரியாக பாராட்டுகிறார்கள் முஸ்லிம்கள், இவர்களை என்னச் சொல்ல!?
முஸ்லிம்களுக்கும் குர்-ஆன் மற்றும் ஹதீஸ்களின் முக்கியத்தும் சரியாக புரியவில்லை என்று நினைக்கிறேன். பாரா சொல்வது குர்-ஆனுக்கு முரணாக இருக்கிறதே, ஹதீஸ்களுக்கு முரணாக இருக்கிறதே! இதனை திருத்திக்கொள்ளும் படி அவருக்கு எடுத்துச் சொல்லலாம் என்ற எண்ணம் யாருக்காவது வந்ததா? வந்தவர்கள் பாரா அவர்களுக்கு இதனை எடுத்துக்காட்டினார்களா?
இதில் ஒரு சிக்கல் இருக்கிறது:
பாரா எழுதிய பாணியைப் பார்த்தால், உலகத்தில் உள்ள ஒரே ஒரு அமைதி மார்க்கம் இஸ்லாம் தான் என்ற பாணியில் விளாசிக்கட்டியுள்ளார். இந்த எண்ணத்தை மனதில் வைத்துக்கொண்டு தான் அவர் புத்தகம் முழுவதும் எழுதியுள்ளார். இதன் உச்சக்கட்டம் தான் அல்லது இரத்தினச் சுருக்கம் தான் "நிலமெல்லாம் இரத்தத்தின் 20வது அத்தியாயம்". ஒருவேளை இந்த அத்தியாயத்தை அவர் திருத்தவேண்டுமென்றால், முழு புத்தகத்தையும் அவர் திருத்தி எழுதவேண்டும், குறைந்தபட்சம் முதல் 20 அத்தியாயங்களில் மாற்றம் செய்யவேண்டும். இப்படி செய்தால், நலமெல்லாம் இரத்தத்தில், நிலமும் இருக்காது, இரத்தமும் இருக்காது. முதல் 20 அத்தியாயங்கள் மாற்றமடைந்தால், அடுத்த 80 அத்தியாயங்களின் அஸ்திபாரம் ஆட்டம் கண்டுவிடும்.
படித்த முஸ்லிம்கள் ஏன் சும்மா இருந்துவிட்டார்கள்?
இந்த புத்தகத்தை பாராட்டிய முஸ்லிம்கள், அதனை முழுவதுமாக படித்து, சுவைத்து அதன் பிறகு தான் அவரை பாராட்டுகிறார்கள். அப்படியிருக்க அவர்களது கண்களில் இந்த விவரங்கள் தென்படவில்லையா? தென்பட்டு இருக்கும், இருந்தாலும் ஏன் பாராவிற்கு திருத்தும்படி சொல்லவேண்டும்? ஒருவகையில் பார்த்தால், பல போர்களை புரிந்ததாக குர்-ஆனும், ஹதீஸும் சொன்னாலும், பாரா எழுதியது மனதுக்கு இதமாக இருக்கிறதல்லவா? பல கோடி தமிழர்கள் படித்து, 'ஆஹா, இஸ்லாம் ஒரு அமைதி மார்க்கம்' என்றுச் சொல்வது உண்மைத் தான் என்று நினைப்பார்கள் அல்லவா?
பாரா அவர்கள், குர்-ஆன் மற்றும் ஹதீஸ்கள் மீது சாணியை வீசினாலும், இஸ்லாம் ஒரு அமைதி மார்க்கம் என்று எழுதிவிட்டார் அல்லவா? யூதர்கள் பொய்யர்கள் என்றும், பாலஸ்தீனம் முஸ்லிம்களுக்கே சொந்தம் என்றும் எழுதிவிட்டார் அல்லவா? இப்படியிருக்க, சாணியை துடைத்துக்கொண்டு ஒன்றுமே நடக்காதபடி சென்றுவிட்டால் போகிறது. இப்படிப்பட்ட எண்ணத்தினால் தான், முஸ்லிம்களும் போனால் போகட்டும் போடா… என்று இருந்துவிட்டார்கள்.
முடிவுரை:
இந்த கட்டுரையில், பாரா அவர்களின் கூற்று எப்படி ஹதீஸ்களுக்கு முரண்படுகின்றது என்பதை பார்த்தோம். நான் மேற்கோள் காட்டியது ஒரே ஒரு ஹதீஸை மட்டுமே. முஹம்மது பங்கு பெற்ற போர்கள் பற்றிய இதர ஹதீஸ்களும் உள்ளன, அவைகளை இங்கு சுட்டிக்காட்டத் தேவையில்லை. முஸ்லிம்களுக்கு அவைகளின் விவரங்கள் நன்றாகத் தெரியும், ஒவ்வொரு வெள்ளிக்கிழமை பயானில் முஹம்மதுவின் வாழ்க்கையிலிருந்து ஒரு நிகழ்ச்சியையாவது எடுத்து பேசவில்லையென்றால், அது எப்படி நிறைவான பயானாக இருக்கமுடியும்? "முஸ்லிம்கள் போராடவேண்டும்" என்றுச் சொல்லி வாலிபர்களை உற்சாகப்படுத்துவதற்கு தேவையான உதாரணங்கள், ஹதீஸ்களிலிருந்து தானே வருகின்றன, முக்கியமாக முஹம்மதுவும், அவரது தோழர்களும் போர்களில் செய்த சாகசம் மற்றும் தியாக நிகழ்ச்சிகளிலிருந்து தானே வருகின்றன!
பாரா அவர்களே! நீங்கள் செய்தது தவறு! உண்மையை பொய்யென்று, பொய்யை உண்மையென்று எழுதுவது ஒரு எழுத்தாளனுக்கு ஏற்புடையதல்ல.
அடுத்த பதிலில், நீங்கள் உங்களின் "உதவிய நூல்களின் பட்டியலில்" குறிப்பிட்டு இருந்த ஒரு புத்தகத்திலிருந்து சில விவரங்களை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். எழுத்துலகில் மலை போன்று சாதனை செய்கின்ற உங்களைப்போன்றவர்கள், ஏன் மலை போன்ற தவறுகள் செய்ய விலைபோகிறீர்கள்? சிறியவர்கள் சிறிய தவறுகளைச் செய்வார்கள், பெரியவர்கள் பெரிய தவறுகளைச் செய்வார்கள் என்றுச் சொல்வது இதனைத்தானா!
2016-2017 ரமளான் தொடர் கட்டுரைகள்
ரமளான் தொடர் கட்டுரைகள் (2012 - 2017)
உமரின் கட்டுரைகள்/மறுப்புக்கள் பக்கம்
Source: http://www.answering-islam.org/tamil/authors/umar/ramalan/2016ramalan/2017ramalan27.html
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக