(குர்ஆன் 5:38 & லேவியராகமம் 6:1-5 & எபேசியர் 4:28)
திருடுவது யாருக்குத் தான் பிடிக்கும்? 'நீ செய்வது உனக்கு பிடிக்குமா?' என்று திருடனிடம் கேட்டால், அவனும் 'எனக்கு பிடிக்காது, ஆனால் செய்கிறேன் என்று பல காரணங்களைச் சொல்லுவான்'.
- சிலர் பணத்தை திருடுகிறார்கள்,
- சிலர் பதவியை திருடுகிறார்கள்,
- சிலர் மற்றவர்களின் நிம்மதியை திருடுகிறார்கள்,
- சிலர் இறைவனுடைய மகிமையை திருடுகிறார்கள்,
- ஒரு சிலரோ, இறைவனையும், அவனுடைய நபித்துவத்தையும் திருடுகிறார்கள்,
- இப்படி ஒவ்வொருவரும் ஏதோ ஒன்றை திருடிக்கொண்டு தான் இருக்கிறார்கள்.
இப்போது கட்டுரையின் கருப்பொருளுக்குள் வருவோம்.
"களவு செய்யாதே" என்று பைபிளும், குர்ஆனும் எச்சரிக்கின்றது. களவு செய்பவர்களுக்கு இரண்டுமே தண்டனை கொடுக்கிறது. ஆனால், யார் என்ன தண்டனை கொடுக்கிறார்கள்? இவைகளில் எந்த தண்டனை சரியானது அல்லது சமுதாயத்திற்கு நன்மை செய்யும் என்பதை சுருக்கமாக காண்போம்.
முதலில் பைபிள் சொல்லும் தண்டனையை பழைய ஏற்பாட்டிலிருந்து காண்போம்
1) திருடியவன் தண்டனையாக, திருடப்பட்டதையும் தரவேண்டும், ஐந்தில் ஒரு பகுதி அதிகமாகவும் கொடுக்கவேண்டும்
லேவியராகமம் 6:1-5
1. பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:
2. ஒருவன் கர்த்தருக்கு விரோதமாக அநியாயம் செய்து, தன் வசத்தில் ஒப்புவிக்கப்பட்ட பொருளிலாவது, கொடுக்கல் வாங்கலிலாவது, தன் அயலானுக்கு மாறாட்டம்பண்ணி, அல்லது ஒரு வஸ்துவைப் பலாத்காரமாய்ப் பறித்துக்கொண்டு, அல்லது தன் அயலானுக்கு இடுக்கண்செய்து,
3. அல்லது காணாமற்போனதைக் கண்டடைந்தும் அதை மறுதலித்து, அதைக்குறித்துப் பொய்யாணையிட்டு, மனிதர் செய்யும் இவைமுதலான யாதொரு காரியத்தில் பாவஞ்செய்தானேயாகில்,
4. அவன் செய்த பாவத்தினாலே குற்றவாளியானபடியால், தான் பலாத்காரமாய்ப் பறித்துக்கொண்டதையும், இடுக்கண்செய்து பெற்றுக்கொண்டதையும், தன் வசத்திலே ஒப்புவிக்கப்பட்டதையும், காணாமற்போயிருந்து தான் கண்டெடுத்ததையும்,
5. பொய்யாணையிட்டுச் சம்பாதித்த பொருளையும் திரும்பக் கொடுக்கக்கடவன்; அந்த முதலைக் கொடுக்கிறதும் அல்லாமல், அதினோடு ஐந்தில் ஒரு பங்கு அதிகமாகவும் கூட்டி, அதைத் தான் குற்றநிவாரணபலியை இடும் நாளில், அதற்குரியவனுக்குக் கொடுத்துவிட்டு,
2) திருடியதை அவன் செலவழித்துவிட்டால், அதற்கு தண்டனையாக, அவன் அடிமையாக விற்கப்பட்டு கடனை அடைக்கவேண்டும்
பழைய ஏற்பாட்டில் தேவன், திருடர்களுக்கு தரும் இன்னொரு தண்டனையைச் சொல்கிறார். அதாவது, எடுத்த பொருட்கள் திருடனால் செலவழித்துவிட்ட பிறகு பிடிக்கப்பட்டால், அவன் அடிமையாக விற்கப்பட்டு, அந்த கடனை அடைக்கவேண்டும்.
யாத்திராகமம் 22:1-3
1. ஒருவன் ஒரு மாட்டையாவது ஒரு ஆட்டையாவது திருடி, அதைக் கொன்றால், அல்லது அதை விற்றால், அவன் அந்த மாட்டுக்கு ஐந்து மாடுகளையும், அந்த ஆட்டுக்கு நாலு ஆடுகளையும் பதிலாகக் கொடுக்கக்கடவன்.
2. திருடன் கன்னமிடுகையில் கண்டுபிடிக்கப்பட்டு, அடிக்கப்பட்டுச் செத்தால், அவன் நிமித்தம் இரத்தப்பழி சுமராது.
3. சூரியன் அவன்மேல் உதித்திருந்ததானால், அவன் நிமித்தம் இரத்தப்பழி சுமரும்; திருடன் பதில் கொடுத்துத் தீர்க்கவேண்டும்; அவன் கையில் ஒன்றும் இல்லாதிருந்தால், தான் செய்த களவுக்காக விலைப்படக்கடவன்.
3) அடிமையாக விற்கப்பட்டவர்கள், ஆறு ஆண்டுகள் வேலை செய்தபிறகு விடுதலையாக்கப்படவேண்டும்
ஒரு திருடன் கண்டுபிடிக்கப்பட்டான், ஆனால் அவனிடம் திருடிய பணமோ பொருளோ செலவழிந்துவிட்டது, எனவே அவன் தன்னை அடிமையாக விற்று, அந்த பணத்தை சொந்தக்காரரிடம் கொடுக்கவேன்டும். இந்த திருடனை அடிமையாக வாங்கிய எஜமான், இவனிடம் ஆறு ஆண்டுகள் மட்டுமே வேலை வாங்கவேண்டும், 7வது ஆண்டு அவனை விடுதலை செய்யவேண்டும்.
ஏழாவது ஆண்டு விடுதலை செய்து அனுப்பும் போது, அவனை வெறுமையாய் அனுப்பாமல், 'கர்த்தர் அந்த எஜமானை எவ்வளவு செல்வம் கொடுத்திருக்கிறாரோ, அதன்படி, தனக்குள்ள ஆட்டு மந்தியிலிருந்தும், தானிய களத்திலிருந்தும், ஆலயத்திலிருந்து தாராளமாக அந்த அடிமைக்கு கொடுத்து அனுப்பும்படி, கர்த்தர் கட்டளையிட்டுள்ளார்'. கர்த்தருக்கு மனிதனின் எதிர்காலம் மீது இருக்கும் கரிசனையைப் பாருங்கள். திருடன் கூட ஒரு மனிதன் தான், எனவே அவன் தண்டனைப் பெற்று திரும்ப புது வாழ்க்கையை தொடங்குவதற்கு தேவையான பொருட்களை, ஆறு ஆண்டுகள் உழைத்த அந்த எஜமான் கொடுத்து அனுப்பவேண்டும் என்று கட்டளையிடுகிறார்.
ஒருவேளை அவனை வெறுமையாக அனுப்பினால், மறுபடியும் அவன் திருட்டுத் தொழிலில் ஈடுபடவாய்ப்பு உண்டாகும். பொதுவாக வறுமையும் திருடுவதற்கு ஒரு காரணமாக இருப்பதை யாராளும் மறுக்கமுடியாது.
உபாகமம் 15:11-15
11. தேசத்திலே எளியவர்கள் இல்லாதிருப்பதில்லை; ஆகையால் உன் தேசத்திலே சிறுமைப்பட்டவனும் எளியவனுமாகிய உன் சகோதரனுக்கு உன் கையைத் தாராளமாய்த் திறக்கவேண்டும் என்று நான் உனக்குக் கட்டளையிடுகிறேன்.
12. உன் சகோதரனாகிய எபிரெய புருஷனாகிலும் எபிரெய ஸ்திரீயாகிலும் உனக்கு விலைப்பட்டால், ஆறுவருஷம் உன்னிடத்தில் சேவிக்கவேண்டும்; ஏழாம் வருஷத்தில் அவனை விடுதலைபண்ணி அனுப்பிவிடுவாயாக.
13. அவனை விடுதலைபண்ணி அனுப்பிவிடும்போது அவனை வெறுமையாய் அனுப்பிவிடாமல்,
14. உன் தேவனாகிய கர்த்தர் உன்னை ஆசீர்வதித்ததின்படி, உன் ஆட்டுமந்தையிலும் உன் களத்திலும் உன் ஆலையிலும் எடுத்து அவனுக்குத் தாராளமாய்க் கொடுத்து அனுப்பிவிடுவாயாக.
15. நீ எகிப்துதேசத்தில் அடிமையாயிருந்ததையும், உன் தேவனாகிய கர்த்தர் உன்னை மீட்டுக்கொண்டதையும் நினைவுகூரக்கடவாய்; ஆகையால் நான் இன்று இந்தக் காரியத்தை உனக்குக் கட்டளையிடுகிறேன்.
4) திருடுகிறவன் இனி வேலைகளை செய்து, மற்றவர்களுக்கு உதவி செய்யும் அளவிற்கு உயரவேண்டும்
புதிய ஏற்பாட்டின் எபேசியருக்கு எழுதின கடிதத்தில், 4:28ம் வசனம் திருடர்கள் என்னசெய்யவேண்டும் என்று அவர்களுக்கு கட்டளையிடுகிறது?
திருடுகிறவன் இனித் திருடாமல், குறைச்சலுள்ளவனுக்குக் கொடுக்கத்தக்கதாகத் தனக்கு உண்டாயிருக்கும்படி, தன் கைகளினால் நலமான வேலைசெய்து, பிரயாசப்படக்கடவன். (எபேசியர் 4:28)
முதலாவதாக, திருடுகிறவர்கள் திருடுவதை நிறுத்தவேண்டும் என்று மேற்கண்ட வசனம் கூறுகிறது. மேலும் திருடுகிறவன் தன் இரண்டு கைகளாலும் (கவனிக்க பன்மை) உழைத்து மற்றவர்களுக்கு உதவி செய்யவேண்டும். எந்த திருடன் தன் இரண்டு கைகளை பயன்படுத்தி திருடினானோ, மற்றவர்களின் பொருட்களை அபகரித்தானோ, அதே கைகளை பயன்படுத்தி அவன் இப்போது கடினமாக உழைக்கவேண்டும். அவன் பணத்தை சம்பாதிக்கவேண்டும், அந்த சம்பாதித்த பணத்தைக் கொண்டு மற்றவர்களுக்கு உதவவேண்டும். திருட்டுத் தனத்திற்கு தண்டனை கொடுக்கும் சமுதாயத்தில் இரண்டு வகையான விஷயங்கள் தண்டனையாக கொடுக்கப்படும், முதலாவது அவன் திருடிய பொருட்களை திருப்பித் தரவேண்டும், இன்னும் அதிகமாக செலுத்தவேண்டும், மேலும் அவனுக்கு தண்டனையாக சில நாட்கள்/மாதங்கள்/வருடங்கள் சிறையில் போடவேண்டும். அவன் செய்த குற்றத்திற்கு ஏற்றது போல, இந்த தண்டனைகள் மாற்றமடையும்.
கடைசியாக, அவன் பணத்தை செலுத்திய பின்பு, சிறைத்தண்டனையை அனுபவித்த பின்பு, அவன் சமுதாயத்திற்கு பாரமாக இருக்காதபடி, அவன் விடுதலையாக வேண்டும். எந்த கைகளால் அவன் திருடினானோ, பாவம் செய்தானோ அந்த கைகளால் அவன் உழைத்து வாழவேண்டும், சமுதாயத்திற்கு அவன் பாரமாக இருக்கக்கூடாது. ஒரு வேளை திருட்டுத்தனத்திற்கு அவன் கைகளை சட்டம் வெட்டிவிட்டால், அவன் வாழ்நாள் முழுவதும் அவன் சார்ந்த சமுதாயத்திற்கு பாரமானவனாக மாறிவிடுகின்றான். இந்த துள்ளியமான விஷயத்தில் பைபிளின் தேவன் எப்படி செயல்பட்டுள்ளார் என்பதை கவனியுங்கள். மனிதர்கள் பற்றி தேவன் எப்படிப்பட்ட செயல்திட்டத்தை வைத்துள்ளார் என்பதை கவனியுங்கள்.
குர்ஆன் கொடுக்கும் தண்டனையை இப்போது காண்போம்
அல்லாஹ்வின் கட்டளையின் படி, திருடியவர்களுக்கு தண்டனையாக அவர்களின் கைகளை வெட்டிவிடவேண்டும்.
குர்ஆன் 5:38. திருடனோ திருடியோ அவர்கள் சம்பாதித்த பாவத்திற்கு, அல்லாஹ்விடமிருந்துள்ள தண்டனையாக அவர்களின் கரங்களைத் தரித்து விடுங்கள். அல்லாஹ் மிகைத்தவனும், ஞானம் மிக்கோனுமாக இருக்கின்றான்.
5) குர்ஆன் திருடனை சமுதாயத்திற்கு பாரமாக மாற்றுகிறது
திருடர்களின் கைகளை வெட்டிவிட்டால், அதன் பிறகு அவர்கள் வாழ்நாள் முழுவதும், ஊனமுற்றவர்களாக தன் குடும்பத்துக்கும், சமுதாயத்திற்கும் பாரமாக மாறிவிடுகிறார்கள். அவர்கள் மனந்திரும்பி, இனி திருடப்போவதில்லை என்று முடிவு எடுத்தாலும், அவர்களால் நல்ல மனிதர்களாக மாறி சமுதாயத்திற்கு மிகவும் பயனுள்ள குடிமக்களாக வாழ வாய்ப்பு இல்லாமல் போய்விடுகிறது.
இதற்கு யார் காரணம்? குர்ஆனும் அல்லாஹ்வின் கட்டளையும் தான்.
6) பொருட்சேதத்திற்கு சரீர உறுப்புகளை வெட்டுவது நியாயமற்ற செயலாகும்
பொதுவாக நீதி செலுத்துவதில், தண்டனை கொடுப்பதில் ஒரு 'நியாயம்' இருக்கவேண்டும். கொலை செய்வது என்பது வேறு, பொருட்களை திருடுவது என்பது வேறு.
ஒருவரிடமிருந்து பொருட்களை/பணத்தை திருடினால், அதற்கு தண்டனையாக 'திருடிய அனைத்து பொருட்களையும் தரவேண்டும், அதோடு கூட கூடுதலாக இன்னும் அதிக பொருட்களை கொடுக்கவேண்டும்'.
சிலவேளைகளில் திருடப்பட்ட பொருட்களின் அளவிற்கு ஏற்ப, சிறைச்சாலையிலும் சில மாதங்கள், சில ஆண்டுகள் அடைக்கலாம். ஆனால், பொருட்களை திருடியதற்கு தண்டனையாக 'தூக்கு தண்டனை கொடுப்பதும், கைகளை வெட்டுவதும்' மிகவும் அநியாயமான செயலாகும்.
7) மனந்திரும்பினாலும் வாழ்க்கையை இழந்துவிட்டதால், வாழ்நாள் முழுவதும் தண்டனை அனுபவிப்பது உண்மையான இறைவனின் செயல் அல்ல
மனிதன் அடிக்கடி மாறுபவன். நாம் எத்தனை முறை தவறுகள் செய்திருப்போம், அதன் பிறகு மனந்திரும்பி அந்த தவறுகளை செய்யாமல் இருந்திருப்போம்.
மனிதனுக்கு திருந்துவதற்கு ஒரு வாய்ப்பு கொடுக்கவேண்டும்.
எத்தனை உண்மை நிகழ்ச்சிகளை நாம் கேட்டிருப்போம், ரௌடிகளாக ஒரு காலத்தில் இருந்தவர்கள், மனந்திருந்தி நல்ல மனிதர்களாக மாறி சமுதாயத்திற்கு நன்மைகளைச் செய்யும் செம்மல்களாக மாறியிருக்கிறார்கள். திருடர்களாக இருந்தவர்கள் சிறைச்சாலைக்கு சென்று வந்த பிறகு நல்லவர்களாக வாழ்ந்தவர்கள் உலகில் உண்டு.
ஆனால் அல்லாஹ்வும் குர்ஆனும், திருடர்களின் கைகளை வெட்டிவிட்டு, அவர்களின் எதிர்காலத்தை சூனியமாக்கிவிடுகிறார்கள்.
8) அல்லாஹ்வா யெகோவா தேவனா, யார் மனிதர்களை நேசிக்கிறார்கள், யார் உண்மையான தெய்வம்
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல், உண்மையான இறைவன் யார் என்று அறிந்துக்கொள்வதற்கு, அல்லாஹ்விற்கும், யெகோவா தேவனுக்கும் இடையே இருக்கும் இந்த ஒரு வித்தியாசம் போதும்.
கைகள் எவ்வளவு முக்கியமானவைகள்! இயந்திர கைகளை தற்காலத்தில் விஞ்ஞானிகள் கண்டுபிடித்தாலும், அவைகள் ஒருபோதும் இயற்கை கைகளுக்கு சமமாகாது. கைகளால் ஒரு பொருளை எடுத்து பயன்படுத்துவதற்கு, பயன்படும் தொழில்நுட்பம் நம் இயற்கையான கைகளில் வைத்திருக்கும் இறைவன், அவைகளை ஒரு திருட்டுக்காக எப்படி வெட்டுவான்?
இதனால் தான் யெகோவா தேவன், பைபிளில் திருடர்களுக்கு சரியான தண்டனையை கொடுத்திருக்கிறார். ஆனால், அல்லாஹ்வோ திருடுபவர்களின் கைகளை வெட்டச் செய்து, சமுதாயத்திற்கும் தன் குடும்பத்திற்கும் பாரமாக அந்த நபரை மாற்றுகிறான்.
முடிவுரை:
நாட்டுக்கு கடினமான சட்டங்கள் தேவை, அதே வேளையில் அவைகள் நியாயமானதாகவும் இருக்கவேண்டியது அவசியமாக இருக்கிறது. எதிர்பாராதவிதமாக நடக்கும் தீமைகளுக்கு/குற்றங்களுக்கு மனிதாபமான முறையில் தண்டனைகள் இருக்கவேண்டும்.
பொருள் நஷ்டத்திற்கு ஒருவரை ஊனமாக்குவது மடமையாகும். உயிருக்கு உயிர் என்று சொன்னால் ஏற்றுக்கொள்ளலாம், சிறைச்சாலையில் பல ஆண்டுகள் போடலாம், அதுவும் எதிர்பாராத விதமாக நடந்தால் அதிக நஷ்டஈடை கொடுத்து தண்டிக்கலாம், உயிரை எடுக்கமுடியாது.
வாகனத்தில் வேகமாக சென்றுக்கொண்டு இருக்கும் போது, திடீரென்று ஒருவர் வாகனத்திற்கு முன்பாக ஓடிவந்ததால், வாகனம் இடித்து அவர் மரித்துவிட்டால், அந்த வாகன ஓட்டுனருக்கு மரண தண்டனை கொடுக்கமுடியாது. இதே போன்று, ஒரு லட்ச ரூபாயை திருடிவிட்டான் என்பதற்காக அவரது கைகளை வெட்டிவிடமுடியாது, இது சரியானதல்ல.
நியாயமான முறையிலும், மனிதாபமான முறையிலும் அதே வேளையில் சமுகத்திற்கு அதிக நன்மையுண்டாகும் முறையிலும் பைபிளின் தேவன் 'திருடர்களுக்கு தண்டனை கொடுத்துள்ளார், அதுவும் பழைய ஏற்பாட்டு இஸ்ரேல் மக்களுக்கு மட்டுமே'. ஆனால், அநியாயமாகவும், மனிதாபமற்ற முறையில், சமுதாயத்திற்கு கேடுவிளைவிக்கும் வகையில் திருடர்களின் கைகளை வெட்டி, அல்லாஹ் தண்டனை கொடுத்திருப்பது 'ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை'.
திருடர்கள் இன்னொரு கட்டுரையை இங்கு படிக்கலாம்.
தேதி: 3rd Jun 2023
இதர குர்ஆன் ஆய்வு கட்டுரைகள்
Source: https://www.answering-islam.org/tamil/authors/umar/arabic_quran/5-38.html
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக