(2024 ரமளான் - ஜபூர் காட்டும் ஸிராத்தல் முஸ்தகீம்)
ரமளான் தியான முந்தைய கட்டுரைகளை படிக்க கீழே சொடுக்கவும்.
- நாள் 1 - ஜபூர் காட்டும் ஸிராத்தல் முஸ்தகீம் : (சங்கீதம் காட்டும் சத்திய வழி)
- நாள் 2 - ஜபூர் காட்டும் ஸிராத்தல் முஸ்தகீம் : 'தவ்ராத்'ஐ முஸ்லிம்கள் படித்து பாக்கியமுள்ளவர்களாக மாற அல்லாஹ் அழைக்கிறான்
- நாள் 3 - சங்கீதம் 1ல் முஹம்மது இல்லை என்பதற்கான நான்கு காரணங்கள்
- நாள் 4 - ஜபூர் 22 காட்டும் இறைவழி மஸீஹாவின் மரண துன்பங்கள்
- நாள் 5 - வெள்ளித்தட்டில் வைக்கப்பட்ட ஓர் தங்கப்பழம் ஜபூர் 23
இந்த கட்டுரையில் அல்லாஹ் தன்னை 'ஒரு மேய்ப்பனாக' அடையாளம் காட்டினானா? இல்லையா? என்பதை சான்றுகளோடு காண்போம்.
சங்கீதம் - ஜபூர் 23:
சங்கீதம் - 23 அதிகாரம் | சங்கீதம் – 23 - அரபியில் |
---|---|
1. கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார்; நான் தாழ்ச்சியடையேன். | الرَّبُّ رَاعِيَّ فَلاَ يُعْوِزُنِي شَيْءٌ |
இறைவன் என் மேய்ப்பன் என்று சங்கீதம் 23 சொல்கிறது. மக்கள் ஆடுகளைப் போலவும், இறைவன் அவர்களை மேய்க்கும் ஒரு நல்ல மேய்ப்பனாகவும் இருக்கிறார் என்றுச் சொல்கிறது.
ஷிர்க்:
'அல்லாஹ் என் மேய்ப்பனாக இருக்கிறான்' என்று சொல்வது, ஷிர்க் என்ற மன்னிக்கமுடியாத பாவம் என்று இஸ்லாமிய அறிஞர்களில் சிலர் கூறுகிறார்கள்.
குர்ஆனில் எந்த ஒரு இடத்திலும் 'அல்லாஹ் ஒரு மேய்ப்பனாக இருக்கிறான்' என்று சொல்லப்படவில்லை. இதேபோன்று, அல்லாவுக்கு இருக்கும் 99 பெயர்களில் ஒரு பெயரும் 'மேய்ப்பன்' என்று சொல்லப்படவில்லை. மேலும். ஹதீஸ்களிலும் 'அல்லாஹ் ஒரு மேய்ப்பன்' என்று முஹம்மது கூறியதாக பதிவு செய்யப்படவில்லை.
ஜபூரோடு (சங்கீதங்களோடு) முரண்படும் குர்ஆன்:
இயேசுவுக்கு 1000 ஆண்டுகளுக்கு முன்பு (கி.மு. 1000) ஜபூரை தாவூத் என்ற நபிக்கு அல்லாஹ் கொடுத்தான் என்று குர்ஆன் சொல்கிறது. இதனை கீழ்கண்ட குர்ஆன் வசனங்கள் உறுதிப்படுத்துகின்றன.
குர்ஆன் 4:163. (நபியே!) நூஹுக்கும், அவருக்குப் பின் வந்த (இதர) நபிமார்களுக்கும் நாம் வஹீ அறிவித்தது போலவே, உமக்கும் நிச்சயமாக வஹீ அறிவித்தோம். மேலும், இப்ராஹீமுக்கும், இஸ்மாயீலுக்கும், இஸ்ஹாக்குக்கும், யஃகூபுக்கும் (அவர்களுடைய) சந்ததியினருக்கும், ஈஸாவுக்கும், அய்யூபுக்கும், யூனுஸுக்கும், ஹாரூனுக்கும், ஸுலைமானுக்கும் நாம் வஹீ அறிவித்தோம்; இன்னும் தாவூதுக்கு ஜபூர் (என்னும் வேதத்தைக்) கொடுத்தோம்.
குர்ஆன் 17:55. உம்முடைய இறைவன் வானங்களிலும் பூமியிலும் உள்ளவர்களைப் பற்றி நன்கு அறிவான்; நபிமார்களில் சிலரை வேறு சிலரைவிடத் திட்டமாக நாம் மேன்மையாக்கியிருக்கிறோம்; இன்னும் தாவூதுக்கு ஜபூர் (வேதத்தையும்) கொடுத்தோம்.
குர்ஆன் 21:105. நிச்சயமாக நாம் ஜபூர் வேதத்தில், (முந்திய வேதத்தைப் பற்றி) நினைவூட்டிய பின்: "நிச்சயமாக பூமியை (ஸாலிஹான) என்னுடைய நல்லடியார்கள் வாரிசாக அடைவார்கள் என்று எழுதியிருக்கிறோம்.
(முஹம்மது ஜான் தமிழாக்கம்)
ஜபூரை அல்லாஹ் இறக்கியிருந்தால், குர்ஆனையும் அல்லாஹ் இறக்கியிருந்தால், இவைகளுக்கு இடையே ஏன் இந்த முரண்பாடு?
யூதர்கள் ஜபூரை திருத்திவிட்டார்கள் என்ற குற்றச்சாட்டு:
எப்போதெல்லாம் குர்ஆனுக்கும் முந்தைய வேதங்களுக்கும் இடையே முரண்பாடு உள்ளது என்று சுட்டிக்காட்டப்படுமோ, உடனே முஸ்லிம்கள் வைக்கும் முதல் குற்றச்சாட்டு "யூதர்கள் திருத்திவிட்டார்கள்" என்பதாகும்.
இந்த குற்றச்சாட்டில் ஒரு சதவிகிதமாவது உண்மையுள்ளதா என்பதை பார்ப்போம். நம்முடைய கேள்வி என்னவென்றால் "முதலாவதாக, ஏன் யூதர்கள் ஜபூரில் கர்த்தர் என் மேய்ப்பராக இருக்கிறார்" என்று எழுதவேண்டும்?
- கி.பி. 610ல் முஹம்மது என்ற நபர் வருகிறார், அல்லாஹ் என்ற இறைவனை, அதுவும் பைபிளோடு சம்மந்தப்படுத்தி அறிமுகம் செய்கிறார்.
- ஆனால், இஸ்லாமுக்கு 1500 ஆண்டுகளுக்கு முன்பு, ஜபூர் வந்தது, இதனை தாமே இறக்கினோம் என்று அல்லாஹ் சொல்கிறான் (தாவூதின் காலம் கி.மு. 1000).
முஹம்மதுவிற்கு முன்பு வாழ்ந்த யூதர்கள் தங்கள் ஜபூரை மாற்றி எழுதுவதற்கு அவர்களுக்கு என்ன அவசியம் வந்தது?
முதலாவது ஜபூர் வந்தது, அதன் பிறகு 1500 ஆண்டுகளுக்கு பிறகு குர்ஆன் வந்தது மற்றும் முஹம்மதுவும் வந்தார். எப்போது யூதர்கள் இதனை மாற்றி எழுதினார்கள்? முஹம்மதுவிற்கு முன்பா? அப்படியானால், அல்லாஹ்வை விட யூதர்கள் சர்வஞானியாக இருக்கிறாரகள் என்று பொருள் படுகிறது. எதிர்காலத்தில் முஹம்மது என்ற ஒரு நபர் வருவார், தன்னை நபி என்று சொல்லிக்கொள்வார், அல்லாஹ் என்ற இறைவனை அறிமுகம் செய்வார். ஆனால், அல்லாஹ் என்பவன் மேய்ப்பனாக தன்னை காட்டிக்கொள்ளமாட்டான். எனவே, முஹம்மதுவிற்கு மாறு செய்வதற்கு, எதிர்ப்பதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே தங்கள் வேதத்தில் "கர்த்தர் என் மேய்ப்பராக இருக்கிறார்" என்று எழுதிக்கொள்வோம் என்று எண்ணி, அவர்கள் இப்படி செய்தார்கள் என்றுச் சொல்வது, ஒரு முட்டாள்தனமான வாதமாகும்.
எனவே யூதர்கள் ஜபூரை மாற்றி எழுதினார்கள் என்ற குற்றச்சாட்டுக்கு எந்த ஒரு சரியான சான்றும் இல்லாமல், இந்த வாதம் அடிபட்டுப்போகிறது.
கிறிஸ்தவர்கள் ஜபூரை திருத்திவிட்டார்கள் என்ற குற்றச்சாட்டு:
அடுத்த படியாக, கிறிஸ்தவர்கள் மாற்றிவிட்டார்கள் என்று கூட முஸ்லிம்கள் கூறக்கூடும். இந்த வாதமும் நிலை நிறகாது.
இதற்கும் கீழ்கண்ட சான்றுகளைச் சொல்லலாம்.
1) இயேசுவிற்கு முன்பு அதாவது கி.பி. முதல் நூற்றாண்டுக்கு முன்பே, பழைய ஏற்பாடு மற்றும் அதிலுள்ள ஜபூர் புத்தகமும் எபிரேய மொழியில் நூற்றுக்கணக்கான பிரதிகள் எடுக்கப்பட்டு, அக்காலத்தில் பல நாடுகளில் பரவியிருந்த யூதர்கள் படித்துக்கொண்டு இருந்தார்கள்.
2) இதே போன்று, இயேசுவிற்கு 200 ஆண்டுகளுக்கு முன்பே, எபிரேய மொழியிலிருந்து கிரேக்க மொழிக்கு பழைய ஏற்பாடு மொழியாக்கம் (செப்டாஜிண்ட்) செய்யப்பட்டு, கிரேக்கம் பேசும் யூதர்கள் அதனை பயன்படுத்திக்கொண்டு இருந்தார்கள்.
3) சவக்கடல் சுருள்கள் 1947 காலக்கட்டத்தில் கண்டெடுக்கப்பட்டன. இவைகளின் காலக்கட்டமும் இயேசுவிற்கு முன்பு பல ஆண்டுகள் பழையதாகும். இவைகளில் கிடைத்த எபிரேய சங்கீத புத்தகமும் மாற்றப்படாமல் அப்படியே கிடைத்துள்ளது.
குகை 1ல் கிடைத்த சுருள்கள் (சங்கீதம்/ஜபூர் கையெழுத்துப் பிரதிகள்):
எண் | சுருள் பெயர் | சுருள் விவரம் | பைபிளின் புத்தகமா? (ஆம் / இல்லை) |
10 | 1Q10 | Psalms (சங்கீதம்) | ஆம் |
11 | 1Q11 | Psalms (சங்கீதம்) | ஆம் |
12 | 1Q12 | Psalms (சங்கீதம்) | ஆம் |
16 | 1Q16 | Pesher Psalms (சங்கீதம் புத்தகத்தின் விளக்கவுரை) | இது பைபிள் புத்தகத்தின் விளக்கவுரை |
குகை 2ல் கிடைத்த சுருள்கள் (சங்கீதம்/ஜபூர் கையெழுத்துப் பிரதிகள்):
எண் | சுருள் பெயர் | சுருள் விவரம் | பைபிளின் புத்தகமா?(ஆம்/இல்லை) |
14 | 2Q14 | Psalms (சங்கீதம்) | ஆம் |
குகை 3ல் கிடைத்த சுருள்கள் (சங்கீதம்/ஜபூர் கையெழுத்துப் பிரதிகள்):
எண் | சுருள் பெயர் | சுருள் விவரம் | பைபிளின் புத்தகமா?(ஆம்/இல்லை) |
2 | 3Q2 | Psalms (சங்கீதம்) | ஆம் |
குகை 4ல் கிடைத்த சுருள்கள் (சங்கீதம்/ஜபூர் கையெழுத்துப் பிரதிகள்):
எண் | சுருள் பெயர் | சுருள் விவரம் | பைபிளின் புத்தகமா?(ஆம்/இல்லை) |
18 | 4Q83-98 | Psalms (சங்கீதம்) | ஆம் |
41 | 4Q171 | Pesher Psalms (எபிரேய மொழியில் சங்கீதம் புத்தகத்தின் விளக்கவுரை) | ஆம் |
42 | 4Q173 | Pesher Psalms (எபிரேய மொழியில் சங்கீதம் புத்தகத்தின் விளக்கவுரை) | ஆம் |
குகை 5ல் கிடைத்த சுருள்கள் (சங்கீதம்/ஜபூர் கையெழுத்துப் பிரதிகள்):
எண் | சுருள் பெயர் | சுருள் விவரம் | பைபிளின் புத்தகமா?(ஆம்/இல்லை) |
5 | 5Q5 | Psalms (சங்கீதம்) | ஆம் |
குகை 8ல் கிடைத்த சுருள்கள் (சங்கீதம்/ஜபூர் கையெழுத்துப் பிரதிகள்):
எண் | சுருள் பெயர் | சுருள் விவரம் | பைபிளின் புத்தகமா?(ஆம்/இல்லை) |
2 | 8Q2 | Psalms (சங்கீதம்) | ஆம் |
குகை 11ல் கிடைத்த சுருள்கள் (சங்கீதம்/ஜபூர் கையெழுத்துப் பிரதிகள்):
எண் | சுருள் பெயர் | சுருள் விவரம் | பைபிளின் புத்தகமா?(ஆம்/இல்லை) |
5 | 11Q4-9 | Psalms (சங்கீதம்) | ஆம் |
இப்படி பல்லாயிர பிரதிகள் உலகத்தில் எபிரேய மற்றும் கிரேக்க மொழிகளில் இருக்கும் போது, எப்படி கிறிஸ்தவர்கள் இதனை மாற்றமுடியும்? இதில் வேடிக்கை என்னவென்றால், 1947 காலத்திற்கு பிறகு தான் சவக்கடல் சுருள்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இப்படியிருக்கும் போது, எப்படி கிறிஸ்தவகர்கள், "உலகத்தில் உள்ள எல்லா ஜபூரை கண்டுபிடித்து, அவைகளை ஒன்று சேர்த்து, "கர்த்தர் என் மேய்ப்பராக" இருக்கிறார்" என்று மாற்றமுடியும்? இது நடைமுறை சாத்தியமற்ற கூற்றாகும். மேலும், யூதர்கள் தங்களிடம் உள்ள பிரதிகளில் மாற்றம் செய்ய எப்படி ஒப்புக்கொள்வார்கள்?
ஆகையால், இந்த குற்றச்சாட்டும் அடிபட்டு போகிறது.
'ஜபூரில் அல்லாஹ் மேய்ப்பனாக தன்னை வெளிப்படுத்தினான், தாவூது நபியும் அதனை எழுதியும் வைத்துவிட்டார், ஆனால் குர்ஆனில் மட்டும் ஏன் அல்லாஹ் ஒரு மேய்ப்பனாக தன்னை அடையாளம் காட்டிக்கொள்ளவில்லை?' என்பதாகும்.
இந்த கேள்விக்கு இஸ்லாமிய அறிஞர்கள், இமாம்கள், கல்விமான்கள் பதில் சொல்வார்களா?
சிலர் ஒருவேளை இந்த பதிலை சொல்லக்கூடும், அதாவது "ஜபூரில் அல்லாஹ் தன்னை ஒரு மேய்ப்பன்' என்றுச் சொல்லி, தாவூத் நபிக்கு இறக்கியது உண்மை தான்", ஆனால், அதற்காக, குர்ஆனிலும், ஏதாவது ஒரு வசனத்தில் "தன்னை மேய்ப்பன்" என்று அல்லாஹ் அடையாளப்படுத்திக் கொள்ளவேண்டும் என்ற அவசியம் இல்லையே!?
இது ஒரு சரியான கூற்றாகும், இதனை நாம் அங்கீகரிக்கலாம். ஆனால், முஸ்லிம்களின் இந்த பதில் உண்மையாக இருந்தால், "அல்லாஹ் ஒரு மேய்ப்பன்" என்றுச் சொல்வது "ஷிர்க்" ஆகாது என்று முஸ்லிம்கள் ஒப்புக்கொள்ளவேண்டும்.
அல்லாஹ் என் மேய்ப்பானாக இருக்கிறான் என்ற ஃபத்வா
அல்லாஹ் என் மேய்ப்பானாக இருக்கிறான், அவன் என்னை நல்ல புல்லுள்ள இடத்தில் மேய்த்து, அமர்ந்த நீர் நிலைகளில் என் தாகத்தை தீர்த்து, எனக்கு பாக்கியத்தை அருளுகிறான் என்றுச் சொல்வது ஷிர்க் ஆகாது என்ற ஃபத்வாவை முஸ்லிம்கள் கொடுப்பார்களா?
அல்லாஹ்வின் 99 பெயர்களும் 23வது ஜபூரும் (சங்கீதமும்)
அல்லாஹ்வின் 99 பெயர்களில் வரும், கீழ்கண்ட பெயர்களின் விளக்கங்கள் சங்கீதம் 23ல் வரும் விளக்கங்கள் போல உள்ளதல்லவா?
- 6. அல் முஃமின் - المُؤْمِنُ - அபயமளிக்கிறவன்
- 7. அல் முஹைமின் - المُهَيْمِنُ – கண்காணிப்பவன்
- 16. அல் வஹ்ஹாப் - الْوَهَّابُ - கொடையாளன்
- 17. அர் ரஜ்ஜாக் - الرَّزَّاقُ – உணவளிப்பவன்
- 23. அர் ராஃபிஃ - الرَّافِعُ – உயர்த்துவோன்
- 27. அல் பஸீர் - الْبَصِيرُ – பார்ப்பவன்
- 42. அல் கரீம் - الْكَرِيمُ - தயாளன்
- 43. அர் ரகீப் - الرَّقِيبُ – கண்காணிப்பவன்
- 52. அல் வகீல் - الْوَكِيلُ – பொறுப்பேற்பவன்
- 55. அல் வலிய்யு - الْوَلِيُّ – பாதுகாவலன்
- 69. அல் காதிர் - الْقَادِرُ - சக்தியுள்ளவன்
- 70. அல் முக்ததிர் - الْمُقْتَدِرُ – ஆற்றலுடையவன்
- 77. அவ்வாலீ - الْوَالِي – உதவியாளன்
- 79. அல் பர்ரு - الْبَرُّ - நன்மை செய்கிறவன்
- 92. அன் நாஃபிஃ - النَّافِعُ - நற் பயனளிப்பவன்
- 94. அல் ஹாதி - الْهَادِي - நேர்வழி காட்டுபவன்
- 98. அர் ரஷீத் - الرَّشِيدُ - நேர்வழி காட்டுவோன்
Source: அல்லாஹ்வின் அழகிய பெயர்கள் (தமிழ் அர்த்தம்) 99
மேற்கண்ட பெயர்களை, முந்தை கட்டுரயில் கொடுக்கப்பட்ட பட்டியலோடு, 23ம் சங்கிதத்தோடு ஒப்பிட்டுப் பாருங்கள்.
சங்கீதம் 23:
- 1. கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார்; நான் தாழ்ச்சியடையேன்.
- 2. அவர் என்னைப் புல்லுள்ள இடங்களில் மேய்த்து, அமர்ந்த தண்ணீர்கள் அண்டையில் என்னைக் கொண்டுபோய் விடுகிறார்.
- 3. அவர் என் ஆத்துமாவைத் தேற்றி, தம்முடைய நாமத்தினிமித்தம் என்னை நீதியின் பாதைகளில் நடத்துகிறார்.
- 4. நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படேன்; தேவரீர் என்னோடேகூட இருக்கிறீர்; உமது கோலும் உமது தடியும் என்னைத் தேற்றும்.
- 5. என் சத்துருக்களுக்கு முன்பாக நீர் எனக்கு ஒரு பந்தியை ஆயத்தப்படுத்தி, என் தலையை எண்ணெயால் அபிஷேகம்பண்ணுகிறீர்; என் பாத்திரம் நிரம்பி வழிகிறது.
- 6. என் ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும் என்னைத் தொடரும்; நான் கர்த்தருடைய வீட்டிலே நீடித்த நாட்களாய் நிலைத்திருப்பேன்.
முடிவுரை:
இதுவரை பார்த்த விவரங்களின் படி, "ஜபூரில் அல்லாஹ் தன்னை ஒரு மேய்ப்பனாக அடையாளப்படுத்தியுள்ளான் என்பதை முஸ்லிம்கள் அறியவேண்டும்".
- அல்லாஹ் ஜபூரை இறக்கவில்லை என்று முஸ்லிம்கள் சொன்னால், அல்லாஹ்வை மேய்ப்பன் என்றுச் சொல்வது ஷிர்க் என்று முஸ்லிம்கள் கூறிக்கொள்ளலாம்.
- ஆனால், ஜபூரை அல்லாஹ் இறக்கினான் என்று குர்ஆன் சொல்வதினால், முஸ்லிம்கள் அதனை ஏற்பதினால், "அல்லாஹ் என் மேய்ப்பன்" என்றுச் சொல்வது "ஷிர்க்" இல்லை என்று முஸ்லிம்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும்.
அடுத்த கட்டுரையில் ஜபூரில் மட்டுமல்ல, பழைய ஏற்பாட்டில் தேவன் தம்மை எப்படி மேய்ப்பராக வெளிப்படுத்தினார் என்பதை ஆய்வு செய்வோம்...
தேதி: 21st March 2024
Source: 2024 ரமளான் - நாள் 6: ஜபூர் 23 - அல்லாஹ் என் மேய்ப்பன் என்று சொல்வது ஷிர்க்கா? (answering-islam.org)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக