2024ம் ஆண்டின் ரமளான் மாதத்தை இன்று தொட்டுள்ளோம். இந்த ரமளான் மாத நோன்பு நாட்களில், ஜபூர் என்ற வேதத்தில் காட்டப்பட்டுள்ள ஸிராத்தல் முஸ்தகீம் (நேரான வழி) என்னவென்பதை ஆய்வு செய்வோம்.
1) ஜபூர் என்ற சங்கீத புத்தகம்:
பரிசுத்த வேதாகமத்தின் பழைய ஏற்பாட்டின் முக்கியமான ஒரு வேத நூல், சங்கீத புத்தகம் ஆகும். இந்த சங்கீத புத்தகத்தை குர்ஆன் 'ஜபூர்' என்று அழைக்கிறது.
கீழ்கண்ட மூன்று குர்ஆன் வசனங்களில், ஜபூர் என்ற வேதத்தை, அல்லாஹ் 'தாவூத்' என்ற நபிக்கு கொடுத்ததாக கூறுகின்றான்.
குர்ஆன் 4:163. (நபியே!) நூஹுக்கும், அவருக்குப் பின் வந்த (இதர) நபிமார்களுக்கும் நாம் வஹீ அறிவித்தது போலவே, உமக்கும் நிச்சயமாக வஹீ அறிவித்தோம். மேலும், இப்ராஹீமுக்கும், இஸ்மாயீலுக்கும், இஸ்ஹாக்குக்கும், யஃகூபுக்கும் (அவர்களுடைய) சந்ததியினருக்கும், ஈஸாவுக்கும், அய்யூபுக்கும், யூனுஸுக்கும், ஹாரூனுக்கும், ஸுலைமானுக்கும் நாம் வஹீ அறிவித்தோம்; இன்னும் தாவூதுக்கு ஜபூர் (என்னும் வேதத்தைக்) கொடுத்தோம்.
குர்ஆன் 17:55. உம்முடைய இறைவன் வானங்களிலும் பூமியிலும் உள்ளவர்களைப் பற்றி நன்கு அறிவான்; நபிமார்களில் சிலரை வேறு சிலரைவிடத் திட்டமாக நாம் மேன்மையாக்கியிருக்கிறோம்; இன்னும் தாவூதுக்கு ஜபூர் (வேதத்தையும்) கொடுத்தோம்.
குர்ஆன் 21:105. நிச்சயமாக நாம் ஜபூர் வேதத்தில், (முந்திய வேதத்தைப் பற்றி) நினைவூட்டிய பின்: "நிச்சயமாக பூமியை (ஸாலிஹான) என்னுடைய நல்லடியார்கள் வாரிசாக அடைவார்கள் என்று எழுதியிருக்கிறோம்.
(முஹம்மது ஜான் தமிழாக்கம்)
இந்த இடத்தில் தாவூத் என்பவர், பைபிளின் "தாவீது ராஜா" ஆவார்.
2) குர்ஆனில் சங்கீத புத்தகத்தின் நேரடி மேற்கோள்:
பைபிளிலிருந்து ஒரு மேற்கோள் அப்படியே குர்ஆனில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று சொன்னால், அது சங்கீதம் 37:29 வசனமாகும். குர்ஆன் 21:105ம் வசனத்தின், இரண்டாவது வாக்கியத்தை கவனிக்கவும், அது சங்கீதம் 37:29 ஐ அப்படியே மறுபதிவு செய்யப்பட்டதாக தெரிகிறது.
குர்ஆன் 21:105. நிச்சயமாக நாம் ஜபூர் வேதத்தில், (முந்திய வேதத்தைப் பற்றி) நினைவூட்டிய பின்: "நிச்சயமாக பூமியை (ஸாலிஹான) என்னுடைய நல்லடியார்கள் வாரிசாக அடைவார்கள்" என்று எழுதியிருக்கிறோம்.
சங்கீதம் 37:29. நீதிமான்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொண்டு, என்றைக்கும் அதிலே வாசமாயிருப்பார்கள்.
3) ஜபூர் (சங்கீதம்) புத்தகத்தை உயர்ந்த இடத்தில் வைக்கும் குர்ஆன்
குர்ஆன் ஜபூரை "வேதம்" என்று அழைக்கிறது, மோசேக்கு வஹீ மூலமாக தௌராத் வேதம் கொடுத்தது போல, ஜபூரை தாவூத் நபிக்கு கொடுத்தோம் என்று அல்லாஹ் கூறுகின்றான். தௌராத்துக்கு சமமாக ஜபூர் வேதம் உள்ளது என்று குர்ஆன் சொல்கிறது
இந்த ரமளான் மாதத்தில், முஸ்லிம்கள் அதிகமாக ஆன்மீக விஷயங்களில் ஈடுபட்டு இருப்பதினால், ஜபூர் என்ற வேதத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் நேரான வழி என்னவென்பதை ஆய்வு செய்து, அதனை தியானிப்பது ஒரு நல்ல செயலாக இருக்கும்.
ஜபூர் (சங்கீதம்) - ஒரு சுருக்கம்:
- ஜபூரில் 150 பாடல்கள்/அத்தியாயங்கள் உள்ளன.
- தாவூத் எழுதியதாக 73 சங்கீதங்கள் உள்ளன
- சங்கீதம் 2 மற்றும் 95ஐயும் தாவூத் எழுதியதாக புதிய ஏற்பாட்டிலும் குறிப்பு வருகிறது [1]
- சாலொமோன் (சுலைமான்) அரசர் 27 மற்றும் 127 சங்கீதங்களை எழுதினார்
- மூஸா (மோசே) சங்கீதம் 90ஐ எழுதினார்
- ஆசாப் என்ற நபரும் அனேக சங்கீதங்களை (50, 73-83) எழுதினார் [2]
- கோராவின் புத்திரர்கள் 11 சங்கீதங்கள் (42, 44-49, 84-85, 87-88) எழுதினார்கள், இவர்களும் ஆசாப் போன்று தேவாலயத்தில் தேவனை பாடிதுதிக்கும் பாடகர் குழுவாக இருந்தனர்.
- சங்கீதம் 88ஐ ஹெமன் என்பவரும், 89ஐ ஈதான் என்பவரும் எழுதினார்கள்.
- இன்னும் 50 சங்கீதங்களில் யார் அவைகளை எழுதினார்கள் என்ற குறிப்பு இல்லை, இருந்த போதிலும் பல வேத பண்டிதர்களின் ஆய்வின் படி, இந்த 50 சங்கீதங்களிலும், தாவீது அனேக சங்கீதங்களை எழுதியிருக்கலாம் என்று கருதுகிறார்கள்.
சுருக்கமாக பார்த்தோமானால், பெரும்பான்மையான சங்கீதங்களை தாவீது எழுதியிருப்பதினால், அவரது பெயரையே பொதுவாக சங்கீத புத்தகத்தின் ஆசிரியர் என்று கூறுவார்கள், இதையே குர்ஆனும், "தாவூதுக்கு நாம் ஜபூரை இறக்கினோம்" என்று கூறுகிறது.
ஜபூரிலிருந்து சில வசனங்கள் இங்கு தருகிறேன், படித்துப் பாருங்கள், இவ்வசனங்கள் உங்கள் உள்ளத்தில் உள்ள துதியாகவும், ஏக்கமாகவும், விண்ணப்பமாகவும் தெரிகின்றதா?
Psalm 119:105 | "Your word is a lamp for my feet, a light on my path." | உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது |
---|---|---|
Psalm 23:1 | "The Lord is my shepherd, I lack nothing." | கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார்; நான் தாழ்ச்சியடையேன். |
Psalm 27:1 | "The Lord is my light and my salvation — whom shall I fear? The Lord is the stronghold of my life — of whom shall I be afraid?" | கர்த்தர் என் வெளிச்சமும் என் இரட்சிப்புமானவர், யாருக்குப் பயப்படுவேன்? கர்த்தர் என் ஜீவனின் பெலனானவர், யாருக்கு அஞ்சுவேன்? |
Psalm 86:5 | "You, Lord, are forgiving and good, abounding in love to all who call to you." | ஆண்டவரே, நீர் நல்லவரும், மன்னிக்கிறவரும், உம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவர்மேலும் கிருபை மிகுந்தவருமாயிருக்கிறீர் |
Psalm 127:1-2 | "Unless the Lord builds the house, the builders labor in vain. Unless the Lord watches over the city, the guards stand watch in vain." | கர்த்தர் வீட்டைக் கட்டாராகில், அதைக் கட்டுகிறவர்களின் பிரயாசம் விருதா; கர்த்தர் நகரத்தைக் காவாராகில் காவலாளர் விழித்திருக்கிறது விருதா |
Psalm 111:10 | "The fear of the Lord is the beginning of wisdom; all who follow his precepts have good understanding. To him belongs eternal praise." | கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; அவருடைய கற்பனைகளின்படி செய்கிற யாவருக்கும் நற்புத்தியுண்டு; அவர் புகழ்ச்சி என்றைக்கும் நிற்கும் |
Psalm 19:14 | "May these words of my mouth and this meditation of my heart be pleasing in your sight, Lord, my Rock, and my Redeemer." | என் கன்மலையும் என் மீட்பருமாகிய கர்த்தாவே, என் வாயின் வார்த்தைகளும், என் இருதயத்தின் தியானமும், உமது சமுகத்தில் பிரீதியாயிருப்பதாக |
Psalm 139:14 | "I praise you because I am fearfully and wonderfully made; your works are wonderful, I know that full well." | நான் பிரமிக்கத்தக்க அதிசயமாய் உண்டாக்கப்பட்டபடியால், உம்மைத் துதிப்பேன்; உமது கிரியைகள் அதிசயமானவைகள், அது என் ஆத்துமாவுக்கு நன்றாய்த் தெரியும் |
Psalm 8:3-4 | "When I consider your heavens, the work of your fingers, the moon, and the stars, which you have set in place, what is mankind that you are mindful of them, human beings that you care for them?" | உமது விரல்களின் கிரியையாகிய உம்முடைய வானங்களையும், நீர் ஸ்தாபித்த சந்திரனையும் நட்சத்திரங்களையும் நான் பார்க்கும்போது, மனுஷனை நீர் நினைக்கிறதற்கும், மனுஷகுமாரனை நீர் விசாரிக்கிறதற்கும் அவன் எம்மாத்திரம் என்கிறேன் |
Psalm 42:1 | "As a deer pants for flowing streams, so pants my soul for you, O God." | மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல, தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது |
மேற்கண்ட வசனங்களை படிக்கும் போது, உங்களுக்கு ஜபூர் புத்தகத்தை வாசிக்க வேண்டும் என்று தோன்றுகிறதா? அப்படியானால், இந்த தொடுப்பை சொடுக்கி ஜபூர் புத்தகத்தின் 150 அத்தியாயங்களை ஒவ்வொன்றாக சொடுக்கி படித்துக்கொள்ளுங்கள்.
அடுத்த கட்டுரையில் ஜபூர் புத்தகத்தின் ஸிராத்தல் முஸ்தகீம் ஆய்வுகளை செய்வோம்.
அடிக்குறிப்புக்கள்:
- அப்போஸ்தலர் நடபடிகள் 4:25–26 (இரண்டாவது சங்கீதம் குறிப்பு)
- ஆசாப் என்பவர், தாவூத் போல தேவனுக்காக பாடல்களை பாடிபவர், அவரை இந்த வேலைக்காக தாவூத் அரசர் நியமித்தார், மேலும், அவரது பிள்ளைகளும், தேவாலயத்தில் பாடல்கள் பாடி துதிக்கும் குழுவில் இந்த வேலையை தொடர்ந்து செய்து வந்தார்கள்.
I நாளாகமம் 6:31-32, 39
31. கர்த்தருடைய பெட்டி நிலைபெற்றபோது, தாவீது கர்த்தருடைய ஆலயத்தில் சங்கீத சேவையை நடத்துகிறதற்கு ஸ்தாபித்தவர்களும்,
32. சாலொமோன் எருசலேமிலே கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டித் தீருமட்டும் ஆசரிப்புக்கூடார வாசஸ்தலத்திற்கு முன்பாக சங்கீத சேவையுடன் தங்கள் முறைமையின்படியே பணிவிடை செய்துவந்தவர்களுமாகிய மனுஷரும் அவர்கள் குமாரருமானவர்கள்.
39. இவன் சகோதரனாகிய ஆசாப் இவன் வலதுபக்கத்திலே நிற்பான்; ஆசாப் பெரகியாவின் குமாரன்; இவன் சிமேயாவின் குமாரன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக