நித்திய நம்பிக்கை
ரோலண்ட் கிளார்க்
ETERNAL HOPE
மரணம் என்பது முடிவா?
ஒவ்வொரு இனத்தையும் ஒவ்வொரு மதத்தையும் சார்ந்தவர்களும் மரணத்திற்குப் பின்பும் ஏதோ ஒரு வாழ்க்கை உள்ளது என நம்புகிறார்கள். மரணம் என்பது முடிவுதான் எனப் பெரும்பாலும் ஒருவரும் நம்புவதில்லை - அதாவது நம் உடல்கள் அழுகிவிடுவது போன்று நாமும் அழிந்து விடுகிறோம் என்பதுபோல. நாம் மிகவும் நேசிப்பவர் மரிக்கும் போது, அவர்களை மறுபடியும் எங்கேயாவது எப்போதாவது பார்ப்போம் என நம்புகிறோம். நமக்கும்கூட, நம் மரணத்திற்குப் பிறகும் நமது வாழ்க்கை தொடரும் என்கின்ற ஓர் உள்ளுணர்வு உண்டு. மரணத்திற்குப்பின் வரும் மகிழ்வான வாழ்க்கை பற்றிய ஆசை ஒவ்வொரு கலச்சாரத்திலும் ஒவ்வொரு விதமாக விவரிக்கப்படுகிறது, ஆனால் இவையனைத்தும் முக்கியமாக ஒன்றே ஒன்றைத் தான் இறுதியாக நாடுகின்றது - அதுதான் நித்திய வாழ்வு.
தற்கால எழுத்தாளர் ஒருவர் இந்த ஆவலை இவ்விதமாகக் குறிப்பிடுகிறார் :"நம்மில் ஒவ்வொரு அணுவும் சாவதற்கு எதிராக ஓலமிட்டு, நிரந்தரமாக வாழ வாஞ்சிக்கிறது" (Ugo Betti in 'Struggle to Dawn', 1949). மூவாயிரம் ஆண்டுகட்கு முன்பு, சாலொமோன் ராஜா இதற்கொப்ப இவ்விதமாய் எழுதினார். "உலகத்தையும் அவர்கள் உள்ளத்திலே வைத்திருக்கிறார்."(பிரசங்கி 3 : 11) இந்த வாஞ்சை நம்மைப் படைத்தவரின் பிரதிபலிப்பே. நித்தியமானவர் நம் உள்ளத்தில் நித்தியத்தைப் பதித்து வைத்திருக்கிறார். தேவன் நாம் நித்தியத்தை வாஞ்சிப்பதற்கு வகை செய்துள்ளார், அவர் அதை நிறைவேற்றவும் சித்தமாயுள்ளார். எனினும், நித்திய வாழ்வு ஒன்றே நமது மேலான இலக்காய் இருத்தலாகாது. நமது இறுதியான ஆசை, அது நிறைவேறும்போது, தேவனுடன் அவரது நித்திய வீட்டில் குடியிருத்தல் என்பதாகவே இருக்க வேண்டும்.
சாலொமோன் மரணத்தை வீடு திரும்புதல் என்பதாகவே விளக்குகிறார். அந்திம காலத்தை(முதிர் வயது காலத்தை ) அவர் இவ்வாறு குறிப்பிடுகிறார் :
"...மனுஷன் தன் நித்திய வீட்டுக்குப் போகிறதினாலே, துக்கங்கொண்டாடுகிறவர்கள் வீதியிலே திரியாததற்கு முன்னும், ...இவ்விதமாய் மண்ணானது தான் முன்னிருந்த பூமிக்குத் திரும்பி, ஆவி தன்னைத் தந்த தேவனிடத்திற்கு மறுபடியும் போகாததற்கு முன்னும்..."பிரசங்கி 12 : 5-7
ஆனால் இந்த "வீடு திரும்புதல் _ Home Coming", ஏனைய அனேக நிகழ்வுகளில், அதாவது, மக்கள் பல ஆண்டுகள் பிரிவிற்குப் பிறகு மறுபடியும் ஒன்று சேருவது போல, ஒரு மகிழ்ச்சியான சம்பவம் அல்ல. இது மரண வாயிலாக, அதாவது, சாதாரணமாக நாம் துக்கம், வேதனை மற்றும் பயம் போன்ற உணர்வுகளுடன் கலந்து, உள்ளே செல்வது எனப் பொருள் படும். என்னே ஒரு மாறுபாடு! நாம் மரணத்தினாலுண்டாகும் கசப்பான உணர்வுகளைக் கண்டுகொள்ளாதபடி, இந்தப் புதிரை மிகவும் அவசரக் கோலத்தில் தீர்க்க முயலாமல் இருப்போம்.
இந்தப் புதிரை விடுவிப்பது எப்படி?
சில ஆண்டுகளுக்கு முன்பு என்னுடைய தாயார் மரணமடைந்தார். அச்சமயத்தில் நான் அடைந்த வேதனையை எளிதில் என்னால் மறக்க இயலாது. இது என் மனதில் வேறொரு நெஞ்சத்தைப்பிழியும் சம்பவத்தையும் நினைவு படுத்தியது, அதாவது, எனது எட்டாவது இளைய வயதில் என்னுடைய தந்தையை இழந்த சம்பவம் அது. நாம் இள வயதினரோ அல்லது முதியவரோ, நாம் நேசிக்கும் ஒருவரை இழக்கும்போது மிகவும் வருத்தத்திற்குள்ளாகிறோம். இது சில கலாச்சாரத்திற்கு மட்டும் என்பது இல்லாமல், எல்லா இடங்களிலும் எல்லா மக்களுக்கும் பொதுவானது தான்.
மரணம் என்பது உணர்வுபூர்வமான வேதனை மட்டுமல்லாமல், உடல்ரீதியாகவும் நம்மை வருத்துகிறது. மரணத்திற்குக் கொண்டுச் செல்லும் மிகச் சாதாரணமான சூழ்நிலை ஏதாவதொரு நோய் மூலமாக இருக்கும். நாம் பொதுவாக இத்தகைய வேதனைகளினின்று விடுபட, அது மேலும் தீவிரமாகி நம்மைத் துன்புறுத்தாதபடி ஏதாவதொரு சிகிட்சையை மேற்கொண்டு சாவதைக் கூடியமட்டும் தவிர்க்க முயலுகிறோம்.
மரணத்தைக்கண்டு பயப்படுதலும், அதற்காக துக்கம் கொண்டு, வேதனைப்பட்டு அதற்கெதிராகப் போரடுவதே மரணத்திற்கெதிராக மனிதர்களின் வழியாய் இருக்கிறது. பைபிள் மனிதர்களை இவ்விதமாய் விவரிக்கிறது : ஜீவ காலமெல்லாம் மரண பயத்தினாலே அடிமைத் தனத்திற்குள்ளானவர்கள் யாவரையும் விடுதலை பண்ணும்படிக்கும் அப்படியானார்." (எபிரேயர் 2:15) புற்று நோய் அல்லது எய்ட்ஸ் போன்ற தீராத வியாதியினால் நாம் பீடிக்கப்பட்டு இருக்கும்போது, நாம் மருத்துவ சிகிட்சையையோ அல்லது தெய்வீக குணப்படுத்துதலையோ நாடுகிறோம். ஏனெனில் நாம் மரணத்திற்கு பயந்து அதை வெறுக்கிறோம். இத்தகைய மனோனிலை தாவீது அரசன் மற்றும் இயேசுவின் ஜெபங்களிலும் காணப்படுகிறது.
ஒருமுறை தாவீது ஒரு மிகவும் பயங்கரமான சூழ்நிலையில் இருந்தபோது தேவனிடம் இவ்வாறு கதறினார், "என் இருதயம் எனக்குள் வியாகுலப்படுகிறது; மரணத்திகில் என்மேல் விழுந்தது. பயமும் நடுக்கமும் என்னைப் பிடித்தது; அருக்களிப்பு என்னை மூடிற்று."(சங்கீதம் 55:4-5)
மீட்பராகிய இயேசுவும் கூட மரணத்தைச் சந்திக்கும்போது ஏற்படும் மனச்சஞ்சலத்தினை அறிவார், "அவர் மாம்சத்திலிருந்த நாட்களில், தம்மை மரணத்தினின்று இரட்சிக்க வல்லமையுள்ளவரை நோக்கி, பலத்த சத்தத்தோடும் கண்ணீரோடும் விண்ணப்பம்பண்ணி, வேண்டுதல்செய்து, தமக்கு உண்டான பயபக்தியினிமித்தம் கேட்கப்பட்டு,"(எபிரேயர் 5:7)
மரணம் எதிர்மறையான உணர்வுகளை வெளிப்படுத்தும் என்பதை அனைவரும் அறிவர். ஆனால் பின் வரும் வசனம் சில ஆழமான வெளிப்படுகளைக் காண்பிக்கிறது. இதனை சாலொமோன் கூறுகிறார், "பரிமளதைலத்தைப்பார்க்கிலும் நற்கீர்த்தியும், ஒருவனுடைய ஜநநநாளைப்பார்க்கிலும் மரணநாளும் நல்லது. விருந்துவீட்டுக்குப் போவதிலும் துக்கவீட்டுக்குப் போவது நலம்; இதிலே எல்லா மனுஷரின் முடிவும் காணப்படும்; உயிரோடிருக்கிறவன் இதைத் தன் மனதிலே சிந்திப்பான். நகைப்பைப் பார்க்கிலும் துக்கிப்பு நலம்; முகதுக்கத்தினாலே இருதயம் சீர்ப்படும். ஞானிகளின் இருதயம் துக்கவீட்டிலே இருக்கும்; மூடரின் இருதயம் களிப்புவீட்டிலே இருக்கும்." (பிரசங்கி 7:1-4)
மோசேயும் இதேபோன்று மரணத்தின் அர்த்தத்தை ஆழ்ந்து சிந்திக்கிறார், "அவர்களை வெள்ளம்போல் வாரிக்கொண்டுபோகிறீர்; நித்திரைக்கு ஒத்திருக்கிறார்கள்; காலையிலே முளைக்கிற புல்லுக்கு ஒப்பாயிருக்கிறார்கள்….. எங்கள் அக்கிரமங்களை உமக்குமுன்பாகவும், எங்கள் அந்தரங்க பாவங்களை உமது முகத்தின் வெளிச்சத்திலும் நிறுத்தினீர்….. உமது கோபத்தின் வல்லமையையும் உமக்குப் பயப்படத்தக்க விதமாயும் உமது உக்கிரத்தையும் அறிந்து கொள்ளுகிறவன் யார்? நாங்கள் ஞான இருதயமுள்ளவர்களாகும்படி, எங்கள் நாட்களை எண்ணும் அறிவை எங்களுக்குப் போதித்தருளும்." (சங்கீதம் 90:5-12)
மரணம் எனும் புதிரை விடுவித்தல்
இந்த சங்கீதத்தில் மரணத்தின் பாரமான உணர்வுகளைப் புரிந்துகொள்ள நமக்கு ஒரு தடம் கிடைக்கிறது. நமது பாவம் தேவனின் கோபத்தைத் தூண்டுகிறதென்றும், அதனால் இறுதியில் நம்மில் மரணம் சம்பவிக்கிறது என்றும் மோசே மறுபடியும் மறுபடியும் சொல்கிறார். இந்த சங்கீதத்தின் வாயிலாக நாம் காணும்போது, இஸ்ரவேலருக்கு எதிரான தேவனின் தண்டனையின் எதிரொலியை நாம் கேட்க முடியும்.
"அப்படியே கர்த்தருடைய கோபம் இஸ்ரவேலின்மேல் மூண்டது; கர்த்தருடைய சமுகத்தில் பொல்லாப்புச் செய்த அந்தச் சந்ததியெல்லாம் நிர்மூலமாகுமட்டும் அவர்களை வனாந்தரத்திலே நாற்பது வருஷம் அலையப்பண்ணினார்." (எண்ணாகமம் 32:13).
பாவத்தை நாம் மரணத்தின் மூல காரணமாகப் புரிந்துகொள்ளும்போது, மரணம் ஏன் இவ்வளவு எதிர்மறையான உணர்வுகளை உருவக்குகிறது என நமக்குப் புலப்படும். இதுவரை மரணம் எவ்வாறு மனிதர்களைப் பாதிக்கிறது எனப் பார்த்தோம். இப்போது மரணத்தை தேவனின் பார்வையில் நோக்குவோம்.
தேவன் மரணத்தை அருவெறுக்கிறார்
செத்து அழுகிய நிலையில் உள்ள ஒரு பிணத்தினின்று வீசும் துர்நாற்றத்தை மனிதர்களாகிய நாம் அருவறுத்து விலகி ஓடுகிறோம். எனவே தேவனும் மரணத்தில் அருவெறுப்பு கொள்கிறார் என நாம் அறிவதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. மரணம் தொடர்பான கட்டளைகளை தேவன் மோசே மூலமாகக் கொடுத்தார். இஸ்ரவேலரின் பரிசுத்தத் தொழுகை இடமான ஆசரிப்புக்கூடத்திற்கு, ஒரு எலும்பைத் தொட்டவனாவது அல்லது புதைக்க ஒரு உடலைச் சுமந்தவனாவது ஏழு நாளைக்கு உள் நுழைய அனுமதியில்லை. ஏதாவது இறந்தவரின் வீட்டிற்குப் போயிருப்பின், சுத்திகரிப்பின் முறைகளின்படி சுத்தமாக வேண்டுமென மக்கள் நிர்பந்திக்கப்பட்டனர். உண்மையில், இந்த ஆணைகளெல்லாம் ஏதாவதொரு சுத்திகரிப்பின் முறைமை இல்லாமல், தேவனின் கூடாரத்தில் தொழுகை செய்ய நுழைவதற்கு முழுமையடையாது. (எண்ணாகமம் 19 ம் அதிகாரம் )
தேவன் மரணத்தில் மகிழ்பவரல்லர்
தேவன் இஸ்ரவேலருடன் எசேக்கியேல் தீர்க்கதரிசி மூலமாய்ப் பேசியபோது, அவர்கள் பாவம் செய்வதை விட்டு மனம் திரும்பாவிட்டால் அவர்கள் சாகவே சாவார்கள் என எச்சரித்தார். "இஸ்ரவேல் வம்சத்தாரே, நீங்கள் ஏன் சாகவேண்டும்...மனந்திரும்புங்கள், அப்பொழுது பிழைப்பீர்கள்; சாகிறவனுடைய சாவை நான் விரும்புகிறதில்லை என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.(எசேக்கியேல் 18:31-32)
தேவன் மரணத்திற்கு எதிர்த்து நிற்பவர், அதனை அவர் அழிப்பார்
மரணத்தைக் குறித்த தேவனின் மனோநிலை இவ்வளவாய் எதிர்மறையானதினால், ஏசாயா தீர்க்கதரிசியின் இந்த எழுத்தில் நாம் வியப்படையத் தேவையில்லை, "சகல ஜனங்கள்மேலுமுள்ள முக்காட்டையும், சகல ஜாதிகளையும் மூடியிருக்கிற மூடலையும், இந்த மலையிலே அகற்றிப்போடுவார். அவர் மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; கர்த்தராகிய தேவன் எல்லா முகங்களிலுமிருந்து கண்ணீரைத் துடைத்து, தமது ஜனத்தின் நிந்தையை பூமியிலிராதபடிக்கு முற்றிலும் நீக்கிவிடுவார்; கர்த்தரே இதைச் சொன்னார்.;. அக்காலத்திலே: இதோ, இவரே நம்முடைய தேவன்; இவருக்காகக் காத்திருந்தோம், இவர் நம்மை இரட்சிப்பார்; இவரே கர்த்தர், இவருக்காகக் காத்திருந்தோம்; இவருடைய இரட்சிப்பினால் களிகூர்ந்து மகிழுவோம் என்று சொல்லப்படும்" (ஏசாயா 25:7-9)
இந்த வாக்குறுதி உண்மையிலேயே மிகவும் குறிப்பிடத்தக்கது மற்றும் சிறப்பானது. ஆனால், இது எவ்வாறு நிறைவேற்றப்படும்?
தேவன் எவ்விதம் மரணத்தைத் தோற்கடிப்பார்?
தேவன் கல்லறையினின்று மக்களை எழுப்பும் நாள் ஒன்று வருகிறது. மரணம் மேற்கொள்ளப்படும். மரணத்தின் பிடியினின்று மக்கள் விடுவிக்கப்படுவார்கள். அப்போஸ்தலனாகிய யோவான்கூட இந்த நாள் பற்றிப் பேசினார். உயிர்த்தெழும் நாளுக்குப்பிறகு, விசுவாசிப்போருக்கு வாழ்க்கை எவ்விதம் இருக்கும் என அவர் விளக்கியிருக்கிறார், "அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை; முந்தினவைகள் ஒழிந்துபோயின." (வெளிப்படுத்துதல் 21:4 குர்ஆன் 44:56உடன் ஒப்பிட்டுப்பார்க்கவும்)
"அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்" என்கின்ற எண்ணம் நம் மனத்தில் நாம் உள் மனதில் சிந்திக்கும் மரணத்தைத் தோற்கடிப்பேன் என்ற வார்த்தையை நினைவு படுத்துகிறது.
இந்த இறைவாக்கு எப்படியும் விண்ணகத்தில் நிறைவேறும் என்ற நம்பிக்கை நமக்கு உருவாகிறது. மரணத்தை தேவன் எவ்வாறு அழிப்பார் என்பதை நாம் புரிந்துகொள்ள உதவும் வகையில், அவர் நமக்கு மற்றும் ஒரு தடத்தைக் காண்பிக்கிறார். இந்தத்தடம் வெகு நாட்கள் கழித்தல்லாமல் இப்போதே நடந்துக்கொண்டு இருக்கிறது. ஒரு விசேஷித்த ஊழியன் தேவனின் இரட்சிப்பை பூமியின் கடைசி வரைக்கும் கொண்டுவருவான் என ஏசாயா தீர்க்கதரிசி முன் மொழிகிறார். (ஏசாயா 49:6). ஏசாயா, தேவன் மரணத்தை வெற்றிகொள்ளும் நாளையே இரட்சிப்பின் நாள் எனக்குறிப்பிடுகிறார் என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும். "அக்காலத்திலே: இதோ, இவரே நம்முடைய தேவன்…; இவருடைய ரட்சிப்பினால் களிகூர்ந்து மகிழுவோம் என்று சொல்லப்படும்." (ஏசாயா 25:9)
தேவனின் இரட்சிப்பைக் கொண்டுவரும் 'ஊழியன்' யார்? ஏசாயா இந்த தீர்க்கதரிசனத்தைக் கொடுத்து எழுனூறு ஆண்டுகளுக்குப் பின்பு ஒரு கன்னிப்பெண்ணுக்கு ஒரு குழந்தை பிறந்தது. தேவன் தன் தூதன் மூலம் ஒரு விசேஷித்த பெயரைக் அவருக்கு கொடுத்தார். இந்த நபர் யார் என நீங்கள் நிச்சயம் கண்டுகொண்டிருப்பீர்கள். அவருடைய பெயர் என்ன? இயேசு என்பதற்குப் பொருள் "தேவனே இரட்சிப்பு" என்பதாகும். இது இரட்சிப்பைக் குறித்த ஏசாயாவின் தீர்க்கதரிசனத்திற்கு முற்றிலும் பொருந்துகிறது. இப்பெயரின் அர்த்தம் மேசியாவின் செயல்களிலும் குண நலன்களிலும் அதிகமாக பிரதிபலிக்கின்றது.
இயேசு, குஷ்டரோகம் போன்ற தீராத வியாதியால் பாதிக்கப்பட்டவர்களை குணமாக்கினார். இத்தகைய அற்புதங்கள் எண்ணற்றவர்களை மரணத்தினின்று காப்பாற்றியது. இதுவும் ஒருவகையில் மரணத்தை மேற்கொள்ளும் வல்லமையே.(மத்தேயு 11:5 மற்றும் குர்ஆன் 5:113)
இயேசு மரணத்தின் எல்லையில் இருந்தவர்களைக் காப்பாற்றினார். அதற்கப்பால் சென்றவர்களையும், அதாவது, கல்லறைக்குள் சென்றவர்களையும் அதனின்று எழுப்பினார். இந்த அற்புதம் மரணத்தின் மீதான அவரின் வல்லமையை மிகவும் குறிப்பிடத்தக்க வகையில் விளங்கச்செய்தது. ஆனால் இந்த அற்புதத்தின் அடையாளம் வரப்போகும் நிகழ்ச்சிக்கு ஒப்பிடும்போது மிகவும் சிறியதே. இயேசு கீழ்கண்டவாறு முன்னறிவித்தார்:
"மரித்தோர் தேவகுமாரனுடைய சத்தத்தைக் கேட்குங் காலம் வரும், அது இப்பொழுதே வந்திருக்கிறது; அதைக் கேட்கிறவர்கள் பிழைப்பார்கள் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். ஏனெனில், பிதாவானவர் தம்மில் தாமே ஜீவனுடையவராயிருக்கிறதுபோல, குமாரனும் தம்மில்தாமே ஜீவனுடையவராயிருக்கும்படி அருள் செய்திருக்கிறார் ... இதைக்குறித்து நீங்கள் ஆச்சரியப்படவேண்டாம்; ஏனென்றால் பிரேதக்குழிகளிலுள்ள அனைவரும் அவருடைய சத்தத்தைக் கேட்குங் காலம் வரும்; அப்பொழுது, நன்மைசெய்தவர்கள் ஜீவனை அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும், தீமை செய்தவர்கள் ஆக்கினையை அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும் புறப்படுவார்கள்." (யோவான் 5:25-29) இதில் நாம் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது, மரித்தவர்கள் அனைவரும் "அவருடைய சத்தத்தைக் கேட்குங் காலம் வரும்… எழுந்திருக்கிறவர்களாகவும் புறப்படுவார்கள்" என்பதே
உயிர்த்தெழுதல் பற்றிய இந்தக் குறிப்பிடத்தக்க போதனை, லாசருவின் கல்லறையினருகில் இயேசு சம்பாஷித்த வார்த்தைகளின் மூலம் மேலும் உறுதிப்படுகிறது. மார்த்தாளை துக்கத்தினின்று தேற்றும்படிக்கு,
"இயேசு அவளை நோக்கி: உன் சகோதரன் உயிர்த்தெழுந்திருப்பான்" என்றார்.
அதற்கு மார்த்தாள்: உயிர்த்தெழுதல் நடக்கும் கடைசிநாளிலே அவனும் உயிர்த்தெழுந்திருப்பான் என்று அறிந்திருக்கிறேன் என்றாள்.
இயேசு அவளை நோக்கி: நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்; உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவனெவனும் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான்; இதை விசுவாசிக்கிறாயா என்றார்."(யோவான் 11:23-26)
இந்த வார்த்தைகள், இயேசு, "பிரேதக்குழிகளிலுள்ள அனைவரும் அவருடைய சத்தத்தைக் கேட்குங் காலம் வரும்; அப்பொழுது, ...எழுந்திருக்கிறவர்களாகவும் புறப்படுவார்கள்." எனக்கூறியபோது, அதனுடைய அர்த்தத்தை நமக்கு விளங்கப்பண்ணுகிறது. இதைச் சிந்திக்கும்போது, ஒரு சாதாரண மனிதன் "நானே உயிர்த்தெழுதல்" என்றுச் சொன்னால் அது நம்பத்தகாததாக இருக்கும்; ஆயினும் இயேசு லாசருவை உயிரோடு எழுப்பியவரானபடியினால், இத்தகைய வார்த்தைகள் சொல்ல அவர் அதிகாரமுடையவராகிறார்.
உங்களை மரியாளாக எண்ணிக்கொள்ளுங்கள். மரித்து நான்கு நாட்கள் ஆகிய உங்கள் சகோதரன் கல்லறையிலிருந்து எழும்பி வருவதை நீங்கள் காணும்போது, மேசியாவின் "உயிர்த்தெழுதல்" குறித்து உங்களுக்கு ஏதாகிலும் சந்தேகம் வருமா? தேவன் இவ்விடத்தில், ஒவ்வொருவரையும் உயிர்த்தெழுதலின் நாளிலே, அவரவர்கள் கல்லறையினின்று உயிர்பெறச்செய்ய அவருக்கு அதிகாரம் கொடுக்கிறார், எனத் தெளிவாகக் காண்கிறோம்.
ஏசாயா தீர்க்கதரிசி எவ்விதம் மரணம் மேற்கொள்ளப்பட்டது என உரைத்த தீர்க்கதரிசனத்தைக் கவனமாக ஆராய்ந்ததில், தேவன் அவரது ஊழியனாகிய மேசியாவின் மூலம் இரட்சிப்பைக் கொண்டுவரும் திட்டத்திற்கு அது மிகச்சரியாகப் பொருந்துவதைக் கண்டோம். தேவன் மேசியாவுக்குக் கொடுத்த "இயேசு" என்ற பெயரும் அவர் செய்த அற்புதங்களும் இந்த தீர்க்கதரிசனத்துக்குப் பொருத்தமாகவே அமைவதைப் பார்க்கிறோம். எனினும், மேலும் ஓர் விவரத்தை ஏசாயாவின் தீர்க்கதரிசனத்தில் நாம் ஆராய வேண்டியுள்ளது.
மரணம் எங்கு முறியடிக்கப்படும்?
ஏசாயாவின் தீர்க்கதரிசனத்தின்படி, மரணத்திற்கு எதிரான யுத்தம் "இந்த மலையில்" (ஏசாயா 25:7) நடக்கும். ஆனால் அந்த மலையின் பெயர் சொல்லப்படவில்லை. எனவே நாம் அதற்கு முந்திய பத்தியில் பார்ப்போமானால் அது "சீயோன் மலை, எருசலேம்" எனப் பெயரிடப்பட்டிருப்பதைக் காணலாம். (ஏசாயா 24:23).
இந்த யுத்தம் எங்கு நடைபெறும் என்பதை முன்னறிவித்தவர் ஏசாயா ஒருவர் மட்டுமல்ல. மேசியாவும் இதற்கொப்பான தீர்கதரிசனத்தினைச் சொல்லி, அந்த இடம் எருசலேம் தான் எனவும் அங்கு தான் அவர் மரணத்துடன் மோதி வெற்றிக்களிப்புடன் எழும்புவார் எனவும் வெளிப்படுத்துகிறார்.
லூக்காவின் சுவிசேஷத்தில், இயேசு தம்முடைய பன்னிரண்டு சீஷரையும் தம்மிடையே வரவழைத்து இவ்வாறாகக் கூறுவதைக் காண்கிறோம். "பின்பு அவர் பன்னிருவரையும் தம்மிடத்தில் அழைத்து: இதோ, எருசலேமுக்குப் போகிறோம், மனுஷகுமாரனைக் குறித்துத் தீர்க்கதரிசிகளால் எழுதப்பட்டவைகளெல்லாம் நிறைவேறும். எப்படியெனில், அவர் புறஜாதியாரிடத்தில் ஒப்புக்கொடுக்கப்பட்டு, பரியாசமும் நிந்தையும் அடைந்து, துப்பப்படுவார். அவரை வாரினால் அடித்து, கொலை செய்வார்கள்; மூன்றாம் நாளிலே அவர் உயிரோடே எழுந்திருப்பார் என்றார்" (லூக்கா 18: 31-33)
இயேசு முன்னறிவித்ததை ஆழ்ந்து சிந்திப்போமானால், அது மரணத்தின் முறியடிப்பும், அது நடைபெறும் இடம் எருசலேம் தான் என்பதுமான ஏசாயாவின் தீர்க்கதரிசனத்துடன் ஒத்துப் போவதை அறியலாம்.
பொருத்தமான உச்சகட்டம்
உயிர்த்தெழுதல் மேசியாவின் வாழ்க்கைக்கு ஒரு பொருத்தமான முடிவு. இது குரானின் வார்தைக்கு மாறாகக் காணப்படுகிறது. "எந்த வழி தேவ ஊழியனாகிய மேசியாவின் மூலம் மரணத்தை வெல்ல தேவனுக்கு உகந்தது?" என நமக்கு நாமே இவ்விரு வழிகளையும் ஒப்பிட்டுக் கேட்டுப் பார்க்கலாம்.
பைபிளில் போதித்துள்ளபடி, கிறிஸ்துவின் உயித்தெழுதல் என்பது மரணத்தின் மீதான மகத்தான வல்லமைக்கு ஓர் எடுத்துக்காட்டு. இது அவர் மரணத்தை ஜெயித்தார் என அறிக்கையிடுகிறது. இயேசுவின் உயிர்த்தெழுதல் சர்வவல்லமையுள்ள தேவனின் வெற்றிக்களிப்பான செயல் என வேதம் நமக்குச் சொல்கிறது. "தேவன் அவருடைய மரண உபாதிகளின் கட்டை அவிழ்த்து, அவரை எழுப்பினார்; அவர் மரணத்தினால் கட்டப்பட்டிருக்கக் கூடாதிருந்தது." (அப்போஸ்தலர் நடபடிகள் 2:24)
இஸ்லாமியரின் பார்வையின்படி, மேசியா இறுதியில் தான் உலகிற்கு வருவார் என்பதாகும். அவர் மேலும் 40 ஆண்டுகள் வாழ்ந்து, மரித்து, பின்பு அடக்கம் செய்யப்படுவார். இது மேசியாவின் வாழ்க்கைக்கு ஒரு பொருத்தமான முடிவு என நீங்கள் எண்ணுகிறீர்களா? அதாவது அவர் மரித்து, கல்லறையிலேயே உயிர்த்தெழுதல் நாள் வரை செயலற்றுப்போய் இருப்பார் என நம்புகிறீர்களா?
சிந்தனைக்கு இதோ மற்றும் ஓர் கேள்வி. உயித்தெழுதலின் நாளில் கிறிஸ்து ஒரு கல்லறையில் இருந்துகொண்டு, அந்த உதவியற்ற நிலையில், "கல்லறையில் உள்ள அனைவரும் எழும்பி வாருங்கள்" என அறைகூவல் விடுப்பார் எனச் சிந்திப்பது அறிவுடைமையா? மேசியா இவ்விதம் அறைகூவல் விடுக்கையில், உயிருடனும் நன்றாகவும் இருக்கத்தான் வேண்டும் என எதிர்பார்ப்பதே பொருத்தமுள்ளதாய் இருக்கும் அல்லவா? இயேசு இவ்விதம் மரித்தவர்களை எழுப்ப அறைகூவும்போது கல்லறையினுள் அல்ல, மாறாக பரலோகத்தில் ஒரு மகா உன்னத நிலையில் இருப்பார் என பைபிளில் நாம் காண்கிறோம்.
முடிவாக இயேசுவின் இவ்வார்த்தைகளை நோக்குவோம்: "நான் அவரைக் கண்டபோது செத்தவனைப்போல அவருடைய பாதத்தில் விழுந்தேன்; அப்பொழுது அவர் தம்முடைய வலதுகரத்தை என்மேல்வைத்து, என்னை நோக்கி: பயப்படாதே, நான் முந்தினவரும் பிந்தினவரும், உயிருள்ளவருமாயிருக்கிறேன்; மரித்தேன், ஆனாலும், இதோ, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன், ஆமென்; நான் மரணத்திற்கும் பாதாளத்திற்கு முரிய திறவு கோல்களை உடையவராயிருக்கிறேன்." (வெளிப்படுத்துதல் 1:17-18)
முடிவுரை
தேவன் பாவத்தை வெறுத்து அதற்கான தண்டனையையும் கொடுக்கிறார் என்பதைக் காண்பது நமக்கு அரிதல்ல. ஆனால், பாவத்தின் கொடிய விளைவுகளை அறிந்துகொள்ளாமல் அதன் உண்மையான அர்த்தத்தினை நாம் விளங்கிக்கொள்ள முடியாது. பாவம், மரணத்திற்கு நம்மை வழிந்டத்துகிறது. ஆனால் தேவன் நமக்கு வேதனை உண்டக்கவோ அல்லது நம்மை வருத்தப்பட வைக்கவோ விரும்பவில்லை. அவர் கருணை மிக்கவர்; நம் கண்ணீரைத் துடைத்து நம்மைத் தேற்றுபவர். அவர் முதலில் மரணத்தை அழித்து, நிச்சயமாகவே இவைகளைச் செய்வார்.
இவ்வுண்மைகளை நமக்குரியதாக்குதல்
ஒருவேளை நாம், "மார்த்தாளைப் போன்று தேவனின் அன்பையும் அரவணைப்பையும் எவ்விதம் பெற்றுக்கொள்வது?" என வியப்புடன் சிந்திக்கலாம். தன்னுடைய சோகத்தில், மார்த்தாள், அவளின் சகோதரனான லாசருவை குணமாக்க இயேசு மிகவும் தாமதமாக வந்தார் எனத் தனது வருத்தத்தை தெரிவித்தாள். இயேசு அவனை குணமாக்கி அவளின் அதிகமான அழுகையைத் தவிர்த்திருக்கலாம். அவள் உணராமலிருந்தது என்னவென்றால், இயேசு லாசருவை வெறுமனே வியாதியினின்று மட்டுமே குணமாக்குபவர் மட்டுமல்ல, கல்லறையினின்றும் கூட எழுப்ப வல்லவர் என்பதை அவள் அறியவில்லை. அவர் அவனை உயிரோடு எழுப்பியதும், முன்பாகவே இயேசு அவனை வியாதியினின்று எழுப்பியிருந்தால் கூட அடையும் மகிழ்ச்சியை விட அவள் அதிக ஆழமான மகிழ்வடைந்தாள். இது ஒரு தனிப்பட்ட சொந்த உண்மை ஆகிவிட்டது.
ஒரு வகையில் மார்த்தாள் தாற்காலிகமாகவே ஆறுதல் அடைந்தாள் எனச் சொல்லலாம், ஏனெனில், லாசரு எல்லா மனிதர்களையும் போலவே முதிர்வயதில் மரணமடைந்தான். எனவே இந்த தாற்காலிகமான ஆறுதல் பின்பு வரும் ஒரு சிறப்புக்கு முன்னோடியாக இருக்கிறது எனக் கருதலாம், அதாவது, இந்த வாழ்க்கையில் உள்ளதைவிட அதிக ஆறுதலும் சமாதானமும். மார்த்தாளைப் போலவே நீங்களும் நானும் "இயேசுவே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறார்" என விசுவாசிக்க வேண்டும். அவளைப் போலவே இந்த மேசியாவின் வாக்குறுதியில் நீங்களும் நித்திய ஆறுதல் அடைவீர்கள்:
"நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்; உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவனெவனும் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான்; இதை விசுவாசிக்கிறாயா என்றார்." (யோவான்: 11:25-26)
மார்த்தாள் தன் இதயபூர்வமாக இதற்குப் பணிவான "ஆம்" என்ற பதிலை அளித்தாள். நீங்கள் எப்படி, உங்கள் பதில் என்ன?
இயேசுவைக் குறித்த உங்கள் பதில் சிறு வயதுமுதல் உங்கள் உள்ளத்தில் ஊட்டப்பட்ட எதிர்மறை சிந்தனைகளால் சூழப்பட்டிருக்கலாம் - இதற்குச் சிலுவை ஒரு எடுத்துக்காட்டு. நீங்கள் கடினமான உணர்வுகளால் வேதனைப்பட்டு மரணத்தைக் குறித்த கோபம் கூட உங்களில் இருக்கலாம். கோபம் என்பது மரணத்தைக் குறித்த நடைமுறையில் ஏற்படும் ஒரு சாதாரண நிகழ்வுதான் என்று விவரம் அறிந்தோர்(நிபுணர்கள் – Experts) கூறுகின்றனர். இயேசுவும் கூட லாசருவின் கல்லறையின் அருகே அழுதுகொண்டிருந்தவர்களை நோக்கும் போது, மரணத்தின் மீது தம் பரிசுத்தமான கோபத்தினை வெளிப்படுத்தினார் என்பது ஒரு குறிப்பிடத்தக்க விஷயம்.
"அவள் அழுகிறதையும் அவளோடேகூட வந்த யூதர்கள் அழுகிறதையும் இயேசு கண்டபோது ஆவியிலே கலங்கித் துயரமடைந்து," என யோவான் 11:33 ல் வாசிக்கிறோம்.
எனவே நமது கோபம் சரியானது தான் எனப் புரிந்துகொள்ள வகை செய்யும் அதே வேளையில், இயேசுவை மரணத்தின் மீது வெற்றி சிறந்தவராகவும் நித்திய வாழ்வினை அளிப்பவராகவும் இருக்கிறார் என்பதை காணுவதில் நாம் இடறலடையக்கூடாது.
பாவமே மரணத்தின் ஆணிவேர் என நாம் அறிந்திருக்கிறோம். இந்த அடிப்படைப் பிரச்சனைக்கு இயேசு கிறிஸ்துவே தீர்வு. யோவான் 1:29 மற்றும் ஆதியாகமம் 22:1-14 இல் நாம் அறிந்துகொண்டபடி, மேசியாவே "உலகத்தின் பாவத்தைச் சுமந்துதீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி". உங்கள் பாவங்களை நீங்கள் ஒப்புக்கொண்டு இயேசு நமக்காகவும், நமது பாவங்களுக்காகவும் மரித்தார் என விசுவாசித்தால், தேவனின் மன்னிப்பை அறிந்துகொள்வீர்கள். மேசியாவின் மரணத்தையும் உயிர்த்தெழுதலையும் விசுவாசித்தால் மட்டுமே நீங்கள் நியாயத்தீர்ப்பின் பயம் இல்லாமல் மரணத்தை எதிர்கொள்ள முடியும்.
தியானிக்க ஒரு நீதி மொழி
ஆரம்பத்தில் நாம் பார்த்த நீதி மொழி நினைவில் உள்ளதா?
"பரிமள தைலத்தைப் பார்க்கிலும் நற்கீர்த்தியும், ஒருவனுடைய ஜநநநாளைப் பார்க்கிலும் மரணநாளும் நல்லது. விருந்து வீட்டுக்குப் போவதிலும் துக்க வீட்டுக்குப் போவது நலம்;" (பிரசங்கி 7:1,2)
இந்தப் நீதி மொழி அல்லது வசனம் நாம் விவாதித்துக் கொண்டிருக்கும் மரணம் என்கின்ற தலைப்புக்கு சம்பந்தப்பட்டது. விலையுயர்ந்த வாசனைப் பொருளுக்கும் மரணத்திற்கும் தொடர்பு உண்டா? பழங்காலத்தில், ஏன் இன்றும் கூட, மக்கள் சில நேரங்களில், மரித்த உடலின் மீது அதைப் புதைப்பதற்கு முன் விலையுயர்ந்த வாசனைப் பொருட்களைத் தெளிக்கிறார்கள். ஆனால் இந்த நறுமணம் எவ்வளவு நேரம் நீடிக்கும்? - அது அழுகும் வரையிலும், துர்நாற்றம் நறுமணத்தை மேற்கொள்ளும் வரையிலும் தானே?
ஒரு தேவ மனிதன் (நல்ல மனிதன் ) புதைக்கப்படும் போது, அவனது புகழ் அவனைச் சுற்றி இருக்கிறது. அது விலையுயர்ந்த நறுமண தைலத்தைவிட அதிக நேரம் நீடிக்கிறது. இது எவ்வாறு நாம் மேற்கண்ட பழமொழியின் இரண்டாவது பாகத்தைப் புரிந்து கொள்ள உதவுகிறது? சங்கீதம் 116:15 ல் நாம் வாசிக்கிறோம், "கர்த்தருடைய பரிசுத்தவான்களின் மரணம் அவர் பார்வைக்கு அருமையானது." நீதிமொழிகள் 14:32 சொல்கிறது: "துன்மார்க்கன் தன் தீமையிலே வாரிக்கொள்ளப்படுவான்; நீதிமானோ தன் மரணத்திலே நம்பிக்கையுள்ளவன்." ஏசாயா தீர்க்கதரிசியும் இதேபோன்ற நம்பிக்கையை வெளிப்படுத்துகிறார்: "நேர்மையாய் நடந்தவர்கள் சமாதானத்துக்குள் பிரவேசித்து, தங்கள் படுக்கைகளில் இளைப்பாறுகிறார்கள்…. மரித்த உம்முடையவர்கள் பிரேதமான என்னுடையவர்களோடே கூட எழுந்திருப்பார்கள்;…"ஏசாயா 57:2; 26:19
நீதிமான் மரிக்கும் நாள் அவனது பிறந்த நாளைக்காட்டிலும் நல்லது, ஏனெனில் அவன் மேலும் சிறந்த இடத்துக்கே போகிறான். அங்கு " ......இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை; முந்தினவைகள் ஒழிந்துபோயின..." (வெளிப்படுத்துதல் 21:4) " நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை." நீதிமொழிகள் 12:28 . இதே போன்று அப்போஸ்தலனாகிய பவுலும் விவரிக்கிறார்:
"பூமிக்குரிய கூடாரமாகிய நம்முடைய வீடு அழிந்துபோனாலும், தேவனால் கட்டப்பட்ட கைவேலையல்லாத நித்திய வீடு பரலோகத்திலே நமக்கு உண்டென்று அறிந்திருக்கிறோம்….." (2 கொரிந்தியர் 5:1-6) மேலும் அவர்,"…. தேகத்தைவிட்டுப்பிரிந்து, கிறிஸ்துவுடனேகூட இருக்க எனக்கு ஆசையுண்டு, அது அதிக நன்மையாயிருக்கும்…" (2 கொரிந்தியர் 5:1-6; பிலிப்பியர் 1:21-24)
நீதிமொழிகளில் சாலமோன் கூறுவதை மேலும் புரிந்துகொள்ள நம் ஆண்டவராகிய இயேசுவின் எடுத்துக்காட்டிலேயே நாம் காணலாம். அவர் மரிப்பதற்குச் சற்று முன்பு அவரது மரணமே மகிமையின் வழி என விளக்கினார், "அப்பொழுது இயேசு அவர்களை நோக்கி: மனுஷகுமாரன் மகிமைப்படும்படியான வேளை வந்தது. மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், கோதுமை மணியானது நிலத்தில் விழுந்து சாகாவிட்டால் தனித்திருக்கும், செத்ததேயாகில் மிகுந்த பலனைக்கொடுக்கும்." யோவான் 12:23,24
இயேசு, சிலுவையின் மீது ஒரு அவமானமான சாவைச் சந்திக்க நேர்ந்தாலும், பின்பு வரப்போகும் மகிழ்ச்சியினை அவர் அறிந்திருந்ததினால் அவரால் அதை எதிர்கொள்ள முடிந்தது.(எபிரேயர் 12:2) கிறிஸ்துவின் சிலுவை மரணத்திற்குப் பின் அவர் எதிர்பார்த்த மகிழ்ச்சியான தருணம் எது? "இவரோ, பாவங்களுக்காக ஒரே பலியைச் செலுத்தி, என்றென்றைக்கும் தேவனுடைய வலது பாரிசத்தில் உட்கார்ந்து" என எபிரேயர் 10:12 ல் வாசிக்கிறோம். இதன் மூலம், கிறிஸ்துவின் மரணம் அவர் மகிமையில் உயர்த்தப்பட வழி வகுத்தது என்பது தெளிவு.
இயேசு என்கின்ற மீட்பர் "மரணத்திற்கும் பாதாளத்திற்குமான திறவுகோல்களை உடையவராய் இருக்கிறார்" என்று நாம் அறிகிறோம். எனவே, அவரை நம்புகின்ற யாவருக்கும் மரணம் என்பது நித்திய வாழ்வுக்கு ஒரு படிக்கல் ஆகும். இது இயேசுவின் கீழ்கண்ட வார்த்தைகளினால் ஊர்ஜிதமாகிறது.
"...பிரேதக்குழிகளிலுள்ள அனைவரும் அவருடைய சத்தத்தைக் கேட்குங் காலம் வரும்; அப்பொழுது, நன்மைசெய்தவர்கள் ஜீவனை அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும், தீமை செய்தவர்கள் ஆக்கினையை அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும் புறப்படுவார்கள்." …"குமாரனைக் கண்டு, அவரிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ அவன், நித்திய ஜீவனை அடைவதும், நான் அவனைக் கடைசிநாளில் எழுப்புவதும், என்னை அனுப்பினவருடைய சித்தமாயிருக்கிறது என்றார்." (யோவான் 5:28,29 ;6:40 )
மேலும் அதிகபடியான விவரங்கள் அறிய தொடர்பு கொள்ளவும்
பின் குறிப்புக்கள்
1. இஸ்லாமியர்கள் தினமும் மரணம் குறித்து தியானிக்க வேண்டும் என நம்புகிறார்கள்; ஏனெனில், மரணம் குறித்த பயம் அவர்களை நல்வழிப்படுத்தும் என்பதினாலேயே. "Sakrat Nama: The Agony of Death" என்ற புத்தகத்தில், அவர்கள் பின்வருமாறு எச்சரிக்கப்படுகிறார்கள்: "தீர்க்கதரிசிகளும் கூட இத்தருணத்தில் பயம் கொள்கிறார்கள். மரணத்தின் நாள் எத்துனை கொடியது! ஆதாமும் நோவாவும் மரண பயத்தினால் இரவும் பகலும் அழுதார்கள். யோனா இதுகுறித்து பெருமூச்சுவிட்டு அழுதார், ஏனெனில் இதை விடக் கொடிதான நேரம் உலகில் இல்லை என அவர் உணர்ந்தார்........ மரணம் தவிர்க்க முடியாதது; நமது இதயம் அதின் பயத்தினால் நிரம்பியுள்ளது."(பக்கம் 2,3)
2. தேவனின் கோபம் கொடியது முழுத் தலைமுறையையும் அழிக்க வல்லது; அனால் அனைத்து மனிதரையும் அவர் அழிப்பாரா? தேவன் மல்கியா தீர்க்கதரிசி மூலம் பேசி இவ்விதம் தெளிவுபடுத்துகிறார்: "நான் கர்த்தர் நான் மாறாதவர்; ஆகையால் யாக்கோபின் புத்திரராகிய நீங்கள் நிர்மூலமாகவில்லை. நீங்கள் உங்கள் பிதாக்களின் நாட்கள் தொடங்கி என் கட்டளைகளைக் கைக்கொள்ளாமல், அவைகளைவிட்டு விலகிப்போனீர்கள்; என்னிடத்திற்குத் திரும்புங்கள், அப்பொழுது உங்களிடத்திற்குத் திரும்புவேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்; " (மல்கியா 3:6,7). இக்காரியத்தின் உண்மை என்னவெனில், தேவன் பாவத்துக்கு எதிரான தம் கோபத்தை பொறுமையும் கருணையும் இன்றி வெளிப்படுத்துவாரானால், அவர் பூமியில் ஒருவரையும் விடமாட்டார் என்பதே. பைபிள் இதித்தெளிவாகக் கூறுகிறது - குர்ஆனும் கூட. (ஆதியாகமம் 6:5..8,செப்பனியா 1:18, ஏசாயா 57:16, குர்ஆன் 16:61). இவ்வுலகின் சில சமுதாயங்கள் இன்று எய்ட்ஸ் நோயினால் பிடிக்கப்பட்டு தலைமுறையே அழியும் என்ற நிலையில் இருக்கிறார்கள். நாம் தேவனின் வல்லமையான கரங்களுக்குள் நம்மை தாழ்த்தி அடங்கியிருக்கிறோமா?
3. இஸ்லாமியர்கள் இறந்தவர்களைப் புதைக்கும்போது செய்யும் புனித்ச்சடங்குகளில் ஆச்சாரமான சுத்தத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். இறந்த சடலத்தை சுத்தீகரிப்பதில் நீடிய வழிமுறைகள் வைத்திருக்கிறார்கள் (ghusl). அவர்கள் இறந்தவர்களை உயிரோடு இருப்பவர்களிலிருந்து எதுவும் மாசு படாதபடி பாதுகாக்கிறார்கள். (உதாரணமாக: தங்களின் மாதந்திர நாட்களில் இருக்கும் பெண்கள்). இது குறித்து மோசே கொடுத்த ஆணைகளை நாம் நன்கு ஆராய்வோமானால், இஸ்லாமியரின் நடைமுறைகள் தேவன் ஆகமங்களில் கொடுத்த விவரங்களுக்கு முரணாக இருப்பதைக் காணலாம். ஆகமங்களின்படி, மாசுபடும் பாதிப்பு (தீட்டு) என்பது உயிரோடு இருப்பவர்களுக்குத் தானேயன்றி, இறந்தவர்களுக்கு அல்ல. மாசுபடுதல் (தீட்டு) இறந்தவர்களினின்று உயிரோடிருப்பவர்களுக்கு வருமேயன்றி எதிர் வழியில் அல்ல. (எண்ணாகமம் 19). சுத்தீகரிப்பது உயிரோடிருப்பவர்களுக்கே செய்திடல் வேண்டும், இறந்தவர்களுக்கல்ல
4. பரலோகத்தில் விசுவாசிகளின் நிலை பற்றி குரான் கூறுவது:"முந்திய மரணத்தைத் தவிர, அங்கு மரணத்தை அவர்கள் அனுபவிக்கமாட்டார்கள்; மேலும் (இறைவன்) அவர்களை நரகத்தின் வேதனையை விட்டும் காப்பாற்றிவிட்டான்." என்பதே. (சுரா 44:56)
5. நமக்குள் இந்தக் கேள்வி எழுகிறது: "நற்கிரியைகள், உண்மையான ஆவிக்குரிய காரியங்களுடன் எவ்விதத்தில் தொடர்பு கொண்டுள்ளது?". யூதத் தலைவர்கள் இயேசுவிடமிருந்து அறிந்துகொள்ளும்படி முக்கியமாகக்கேட்டது இதுதான்: "தேவனுக்கேற்ற கிரியைகளை நடப்பிக்கும்படி நாங்கள் என்ன செய்யவேண்டும்?" இந்தக் கேள்வியில் "கிரியைகள்" என்ற வார்த்தைக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளதை நாம் கவனிக்கலாம். யூத மார்க்கத்தில் தேவனைப் பிரியப்படுத்த ஆச்சாரமான நல்ல காரியங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளதில் வியப்பில்லை. ஆனால் இயேசு அவர்களைத் தம் வார்த்தைகளினால் வியப்பிலாழ்த்தினார் :"அவர் அனுப்பினவரை நீங்கள் விசுவாசிப்பதே தேவனுக்கேற்ற கிரியையாயிருக்கிறது" (யோவான் 6:28,29). மீட்பரின் மீது மெய்யான விசுவாசம் வைப்பது தேவனோடான நித்திய வாழ்க்கையினை அதிக நிச்சயமாக்குகிறது. தேவனின் மீட்பரை விசுவாசித்தலே இக்காரியத்தில் முக்கியத்துவம் வாய்ந்தது. இது பரிசேயர் செய்யச் சம்மதிக்காத ஒன்று. மேலும் ஒருவன் உண்மை விசுவாசத்துடன் இருந்தால், அவனுடைய செயல்களினால் அது வெளிப்படும்.(யக்கோபு 2:17)
5. நமக்குள் இந்தக் கேள்வி எழுகிறது: "நற்கிரியைகள், உண்மையான ஆவிக்குரிய காரியங்களுடன் எவ்விதத்தில் தொடர்பு கொண்டுள்ளது?". யூதத் தலைவர்கள் இயேசுவிடமிருந்து அறிந்துகொள்ளும்படி முக்கியமாகக்கேட்டது இதுதான்: "தேவனுக்கேற்ற கிரியைகளை நடப்பிக்கும்படி நாங்கள் என்ன செய்யவேண்டும்?" இந்தக் கேள்வியில் "கிரியைகள்" என்ற வார்த்தைக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளதை நாம் கவனிக்கலாம். யூத மார்க்கத்தில் தேவனைப் பிரியப்படுத்த ஆச்சாரமான நல்ல காரியங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளதில் வியப்பில்லை. ஆனால் இயேசு அவர்களைத் தம் வார்த்தைகளினால் வியப்பிலாழ்த்தினார் :"அவர் அனுப்பினவரை நீங்கள் விசுவாசிப்பதே தேவனுக்கேற்ற கிரியையாயிருக்கிறது" (யோவான் 6:28,29). மீட்பரின் மீது மெய்யான விசுவாசம் வைப்பது தேவனோடான நித்திய வாழ்க்கையினை அதிக நிச்சயமாக்குகிறது. தேவனின் மீட்பரை விசுவாசித்தலே இக்காரியத்தில் முக்கியத்துவம் வாய்ந்தது. இது பரிசேயர் செய்யச் சம்மதிக்காத ஒன்று. மேலும் ஒருவன் உண்மை விசுவாசத்துடன் இருந்தால், அவனுடைய செயல்களினால் அது வெளிப்படும்.(யக்கோபு 2:17)
யூதத் தலைவர்கள் வேதத்தை உண்மையுடன் பின்பற்றி இருப்பார்களேயானால், "தேவனுக்கு அபராதம் செலுத்தித் தங்களைத் தாங்களே மரணத்தினின்று இரட்சிக்க முடியாது" என அறிந்து கொண்டிருப்பார்கள். மீட்பு எளிதில் வருவதில்லை, ஏனெனில், ஒருவரும் ஒருபோதும் காலங்காலமாக கல்லறையையே காணாதபடி வாழ்வதற்குப் போதுமான அளவுக்கு மீட்கும் பொருளைச் செலுத்தமுடியாது. (சங்கீதம் 49:7,8). ஆனால் தேவன் நம்மை நிச்சயம் மீட்டார்.(வசனம் 15) அவர் அவரது மீட்பரான மேசியாவை பலி ஆடாய், மீட்கும் பொருளாய்க் கொடுத்தார். இதுதான் தேவனுடைய மீட்பின் திட்டம் என இயேசு உறுதி செய்தார்."அப்படியே, மனுஷகுமாரனும் ஊழியங்கொள்ளும்படி வராமல், ஊழியஞ்செய்யுவும், அநேகரை மீட்கும்பொருளாகத் தம்முடைய ஜீவனைக்கொடுக்கவும் வந்தார்" என இயேசு சொன்னார்.(மாற்கு 10:45).
கீழ்க்காணும் தொடுப்பில் உள்ள கட்டுரையைப் படித்து அபிரகாமுக்கு தேவன் முன்பொரு காலத்தில் வாக்குப்பண்ணின ஆட்டுக்குட்டியாக எவ்விதம் இயேசு பயன்பட்டார் என அறிந்து கொள்ளுங்கள்.
சங்கீதம்:49, வசனங்கள் 1 முதல் 15 வரை (மரணத்தின் பொருள் எனும் புதிரைப் பற்றி ஆராய ஒரு தியானம்)
ஜனங்களே, நீங்கள் எல்லாரும் இதைக் கேளுங்கள். பூமியின் குடிகளே, சிறியோரும் பெரியோரும் ஐசுவரியவான்களும் எளியவர்களுமாகிய நீங்கள் எல்லாரும் ஏகமாய்ச் செவிகொடுங்கள். என் வாய் ஞானத்தைப் பேசும்; என் இருதயம் உணர்வைத் தியானிக்கும். என் செவியை உவமைமொழிக்குச் சாய்த்து, என் மறைபொருளைச் சுரமண்டலத்தின்மேல் வெளிப்படுத்துவேன்.
என்னைத் தொடருகிறவர்களுடைய அக்கிரமம் என்னைச் சூழ்ந்துகொள்ளுந் தீங்குநாட்களில் நான் பயப்படவேண்டியதென்ன? தங்கள் செல்வத்தை நம்பி தங்கள் திரளான ஐசுவரியத்தினால் பெருமைபாராட்டுகிற, ஒருவனாவது தன் சகோதரன் அழிவைக் காணாமல் இனி என்றைக்கும் உயிரோடிருக்கும்படி, எவ்விதத்தினாலாவது அவனை மீட்டுக்கொள்ளவும், அவனிமித்தம் மீட்கும்பொருளை தேவனுக்குக் கொடுக்கவுங் கூடாதே. அவர்கள் ஆத்துமமீட்பு மிகவும் அருமையாயிருக்கிறது; அது ஒருபோதும் முடியாது. ஞானிகளும் மரித்து, அஞ்ஞானிகளும் நிர்மூடரும் ஏகமாய் அழிந்து, தங்கள் ஆஸ்தியை மற்றவர்களுக்கு வைத்துப்போகிறதைக் காண்கிறான். தங்கள் வீடுகள் நித்தியகாலமாகவும், தங்கள் வாசஸ்தலங்கள் தலைமுறை தலைமுறையாகவும் இருக்குமென்பது அவர்கள் உள்ளத்தின் அபிப்பிராயம், அவர்கள் தங்கள் நாமங்களைத் தங்கள் நிலங்களுக்குத் தரிக்கிறார்கள். ஆகிலும் கனம்பொருந்தியவனாயிருக்கிற மனுஷன் நிலைத்திருக்கிறதில்லை; அழிந்துபோகும் மிருகங்களுக்கு ஒப்பாயிருக்கிறான்.
இதுதான் அவர்கள் வழி; இதுதான் அவர்கள் பைத்தியம்; ஆகிலும் அவர்கள் சந்ததியார் அவர்கள் சொல்லை மெச்சிக்கொள்ளுகிறார்கள்.
ஆட்டுமந்தையைப்போல பாதாளத்திலே கிடத்தப்படுகிறார்கள்; மரணம் அவர்களை மேய்ந்துபோடும்; செம்மையானவர்கள் அதிகாலையில் அவர்களை ஆண்டுகொள்வார்கள்; அவர்கள் தங்கள் வாசஸ்தலத்தில் நிலைத்திருக்கக் கூடாதபடி அவர்களுடைய ரூபத்தைப் பாதாளம் அழிக்கும்.
ஆட்டுமந்தையைப்போல பாதாளத்திலே கிடத்தப்படுகிறார்கள்; மரணம் அவர்களை மேய்ந்துபோடும்; செம்மையானவர்கள் அதிகாலையில் அவர்களை ஆண்டுகொள்வார்கள்; அவர்கள் தங்கள் வாசஸ்தலத்தில் நிலைத்திருக்கக் கூடாதபடி அவர்களுடைய ரூபத்தைப் பாதாளம் அழிக்கும்.
ஆனாலும் தேவன் என் ஆத்துமாவைப் பாதாளத்தின் வல்லமைக்குத் தப்புவித்து மீட்பார், அவர் என்னை ஏற்றுக்கொள்வார்.
ரோலண்ட் கிளார்க் அவர்களின் இதர கட்டுரைகள்
முகப்புப் பக்கம் ஆன்சரிங் இஸ்லாம் தமிழ்
© Answering Islam, 1999 - 2008. All rights reserved.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக