நான் சிறுவனாக இருந்த போது கொண்டாடிய பக்ரீத் பண்டிகைகள் இன்னும் ஞாபகத்தில் பசுமையாக இருக்கிறது. பக்ரீத் பண்டிகையின் இரண்டு நாட்களுக்கு முன்பாகவே அப்பா ஒரு ஆட்டை வாங்கிவிடுவார். அந்த ஆட்டுக்கு தேவையான புல்லை நான் அதற்கு உண்ணக்கொடுப்பேன். பக்ரீத் பண்டிகையன்று, மசூதிக்குச் சென்று தொழுதுவிட்டு, வீடு திரும்பிவோம். ஆட்டை அறுப்பதற்கும், அதன் தோலை உரித்து கறி வெட்டுவதற்கும் ஆட்களை அப்பா அழைத்து வருவார்.
ஆடு அறுக்கப்படும் போது அதனை பார்க்கவேண்டாம் என்று பெரியவர்கள் எங்களை தடுப்பார்கள். ஆட்டு இறைச்சி மூன்று சம பகுதிகளாக பிரிக்கப்படும். ஒரு பங்கு சொந்தக்காரர்களுக்கும் நண்பர்களுக்கும் கொடுக்கப்படும். இன்னொரு பங்கு ஏழை முஸ்லிம்களுக்கு. மூன்றாவது பங்கு எங்களுக்கு. நான்கு கறித்துண்டுகளை சின்ன பொட்டலங்களாக கட்டி, எங்கள் பகுதியில் இருக்கும் இதர முஸ்லிம்களின் வீடுகளுக்குச் சென்று கொடுத்துவருவோம். அடுத்த சில நாட்கள் எங்கள் வீட்டில் அசைவ சமையல் தான், காயவைத்த கபாப் வாசனை வீடு முழுக்க வீசும். இந்த நேரத்தில் அசைவ உணவை சாப்பிடாதவர்கள் வீட்டிற்கு வந்தால் அவ்வளவு தான் அவர்களின் கதை. மாடியில் காயவைத்த கபாப் தூண்டுகளை மாலையில் கொண்டு வந்து பத்திரப்படுத்துவோம், மறுநாள் காலை மறுபடியும் காயவைப்போம். அடுத்த சில வாரங்கள், உணவு பறிமாறப்படும் போது, கபாப் துண்டுகள், அதிகமாக எங்கள் சாப்பாட்டில் காணப்படும்.
பக்ரீத் பண்டிகை
சரி விஷயத்துக்கு வருகிறேன். இன்னும் பத்து நாட்களில் பக்ரீத் பண்டிகை வருகிறது. பக்ரீத் பண்டிகைக்கு முன்பாக ஒரு முக்கியமான விஷயத்தைப் பற்றி முஸ்லிம்களோடு உரையாடலாம் என்று விரும்பி இந்த சிறிய தொடர் கட்டுரைகளை எழுதுகிறேன். இவைகள் பற்றி முஸ்லிம் சகோதரர்கள் தங்கள் விமர்சனங்களை முன்வைக்கலாம்.
கருப்பொருள்: கிறிஸ்தவம் பற்றி முஸ்லிம்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்களில் மிகவும் முக்கியமானவைகள் இவைகள் தான்:
அ) ஒருவரின் சுமையை (பாவங்களை) இன்னொருவர் சுமக்கமுடியாது.
ஆ) உலக மக்களின் பாவங்கள் அனைத்தையும், இயேசுவின் மீது சுமத்தி, அவரை தண்டிப்பது என்பது அநியாயமாகும், இதனை இறைவன் ஒருபோதும் செய்யமாட்டான்.
இ) செய்யாத குற்றத்திற்காக ஒருவரை தண்டிப்பது தவறானதாகும்.
ஈ) இறைவன் பாவங்களை மன்னிக்கவேண்டுமென்றால், அவன் ஒரு வார்த்தையில் மன்னித்துவிடலாம். மனிதர்களை மன்னிக்க இறைவனுக்கு பலிகள் பரிகாரங்கள் தேவையில்லை. ஒரு குற்றவாளியின் குற்றத்தை எடுத்து நிரபராதியின் மீது சுமத்தி, அந்த குற்றவாளியை தண்டிக்காமல் இருப்பதும், ஆனால், அந்த நிரபராதியை தண்டிப்பதும் அநீதி இல்லையா?
இப்படிப்பட்ட பல கேள்விகளை முஸ்லிம்கள் கிறிஸ்தவர்களிடம் கேட்பார்கள். இக்கேள்விகள் நியாயமானவைகளாக தெரிகின்றதல்லவா! குர்-ஆனும், ஹதீஸ்களும் இவைகள் பற்றி என்ன சொல்கின்றன என்பதை ஆய்வு செய்வது இத்தொடர் கட்டுரைகளின் நோக்கம் ஆகும். இந்த தற்போதைய கட்டுரையில் குர்-ஆனில் காணப்படும் பக்ரீத் பண்டிகை (ஈத் அல்-அதா) சம்மந்தப்பட்ட சில வசனங்களை மட்டும் ஆய்வு செய்து, சில கேள்விகளை முன்வைப்போம்.
இப்ராஹீம் தம் மகனை பலியிட முயன்ற நிகழ்ச்சி:
இந்த நிகழ்ச்சி எல்லோருக்கும் தெரிந்த ஒன்று தான். பைபிளில் ஆதியாகமம் 22ம் அத்தியாயத்தில் இதனை காணலாம். குர்-ஆன் 37ம் அத்தியாயத்திலிருந்து சில வசனங்களை படிப்போம்.
குர்-ஆன் 37:102-107
37:102. பின் (அம்மகன்) அவருடன் நடமாடக்கூடிய (வயதை அடைந்த) போது அவர் கூறினார்: "என்னருமை மகனே! நான் உன்னை அறுத்து பலியிடுவதாக நிச்சயமாகக் கனவு கண்டேன். இதைப்பற்றி உம் கருத்து என்ன என்பதைச் சிந்திப்பீராக!" (மகன்) கூறினான்; "என்னருமைத் தந்தையே! நீங்கள் ஏவப்பட்டபடியே செய்யுங்கள். அல்லாஹ் நாடினால் - என்னை நீங்கள் பொறுமையாளர்களில் நின்றுமுள்ளவனாகவே காண்பீர்கள்." 37:103. ஆகவே, அவ்விருவரும் (இறைவன் கட்டளைக்கு) முற்றிலும் வழிப்பட்டு, (இப்ராஹீம்) மகனைப் பலியிட முகம் குப்புறக்கிடத்திய போது.
37:104. நாம் அவரை "யா இப்ராஹீம்!" என்றழைத்தோம்.
37:105. "திடமாக நீர் (கண்ட) கனவை மெய்ப்படுத்தினீர். நிச்சயமாக நன்மை செய்வோருக்கு நாம் இவ்வாறே கூலி கொடுத்திருக்கிறோம்.
37:106. "நிச்சயமாக இது தெளிவான ஒரு பெருஞ் சோதனையாகும்."
37:107. ஆயினும், நாம் ஒரு மகத்தான பலியைக் கொண்டு அவருக்குப்பகரமாக்கினோம்.(முஹம்மது ஜான் தமிழாக்கம்).
(ஆபிரகாம் பலியிட முன்வந்தது, ஈசாக்கையா, இஸ்மவேலையா என்பதைப் பற்றி இக்கட்டுரையில் ஆராயத்தேவையில்லை, பின் குறிப்பில் கொடுக்கப்பட்ட கட்டுரைகளை படிக்கவும்).
அல்லாஹ்விற்கு ஏன் பலியும் இரத்தமும் தேவைப்பட்டது?
மேற்கண்ட வசனங்களை நன்றாக கவனியுங்கள். இப்ராஹீமின் தியாகத்தை, அல்லாஹ் மெச்சிக்கொள்கிறான். ஆனால், அதோடு நின்று விடாமல், ஒரு ஆட்டை ஆபிரகாமுக்கு காட்டி, அதை பலியிட சொல்கின்றான். குர்-ஆன் 37:107ம் வசனத்தை கவனியுங்கள், "நாம் ஒரு மகத்தான பலியைக் கொண்டு அவருக்குப் பகரமாக்கினோம்". இந்த வசனத்தை மட்டும், இதர தமிழாக்கங்களிலும், ஆங்கிலத்திலும் பார்த்துவிட்டு, நம் கேள்விகளுக்குச் செல்வோம்.
அப்துல் ஹமீது பாகவி தமிழாக்கம்:
37:107. ஆகவே, மகத்தானதொரு பலியை அவருக்கு பகரமாக்கினோம்.
இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் (IFT) தமிழாக்கம்:
37:107. மேலும், ஒரு பெரும் பலியை ஈடாகக் கொடுத்து அக்குழந்தையை நாம்விடுவித்துக் கொண்டோம்.
பிஜே தமிழாக்கம்:
37: 107. பெரிய பலிப்பிராணியை அவருக்குப் பகரமாக்கினோம்.
Yusuf Ali: And We ransomed him with a momentous sacrifice:
Khalifa: We ransomed (Ismail) by substituting an animal sacrifice.
Palmer: And we ransomed him with a mighty victim;
இந்த வசனத்தை பார்க்கும் போது, கீழ்கண்ட கேள்விகள் எழுகின்றன:
1) ஆபிரகாமின் மகன் கொல்லப்படுவதற்கு முன்பு அல்லாஹ் அவனை காப்பாற்றிவிட்டான், இது நல்லது தான். ஆனால், பலியிட குறிக்கப்பட்ட ஆபிரகாமின் மகனுக்கு பதிலாக ஒரு பலியை அல்லாஹ் ஏன் தயார் படுத்தவேண்டும்?
2) கொல்லப்படவேண்டியவனுக்கு பதிலாக, அந்த இடத்தில் ஏன் ஒரு ஆடு கொல்லப்படவேண்டும்?
3) அல்லாஹ் ஆபிரகாமை மெச்சிக்கொண்டுவிட்ட பிறகு, அவர்களை அப்படியே வீட்டிற்கு அனுப்பியிருக்கவேண்டியது தானே! ஏன் அந்த இடத்தில் ஒரு மிருகம் கொல்லப்படவேண்டும் என்று அல்லாஹ் விரும்பினான்?
4) அல்லாஹ் ஆபிரகாமின் மகனை காப்பாற்றுவதை முன்னமே திட்டமிட்டிருந்தான், அங்கு ஒரு ஆட்டை தயார் படுத்தி வைத்திருந்தது ஏன்? ஒரு ஆட்டின் பலி வேண்டும் என்று ஏன் அல்லாஹ் விரும்பினான்?
ஆபிரகாமின் மகனை விடுவிக்கவேண்டியது ஏன்?(Ransom)
போரில் பிடிப்பட்ட அடிமைகளை விடுவிப்பதற்காக, "மீட்பு பணம் அல்லது பிணைப்பணம்" என்றுச் சொல்லக்கூடிய பணத்தை கொடுத்து, அடிமைகளை விடுவிப்பார்கள். அது போல, ஒரு மகத்தான பலியைக் கொண்டு நாம் விடுவித்தோம் என்று அல்லாஹ் சொல்வது ஏன்?
1) IFT தமிழாக்கத்தில் "ஒரு பெரும் பலியை ஈடாகக் கொடுத்து அக்குழந்தையை நாம் விடுவித்துக் கொண்டோம்." என்று விவரமாக விளக்கப்பட்டுள்ளது.
2) ஆபிரகாமின் மகன் எப்போது அடிமையானான்? யாருக்கு அடிமையானான்?
3) அவனை யாரிடமிருந்து ஆபிரகாம் விடுவித்தான்?
4) ஒருவேளை அல்லாஹ் மீட்பு பணம் (ஆடு) கொடுத்து விடுவித்தான் என்றுச் சொன்னால், யாரிடமிருந்து அல்லாஹ் விடுவித்தான்? அல்லாஹ்வை விட பெரியவன் யார் இருக்கின்றார்கள்? தனக்குத் தானே மீட்பு பலியைக் கொடுத்துக்கொண்டு, அக்குழந்தையை அல்லாஹ் மீட்டானா? இதனை எப்படி புரிந்துக்கொள்வது?
5) இரத்தம் சிந்தாமல் ஒருவர் மீட்கப்படமுடியாதா?
6) ஒருவரின் பாரம் ஒருவர் சுமக்கமுடியாது என்றுச் சொன்னால், ஏன் அந்த ஆடு அநியாயமாக ஆபிரகாமின் மகனுக்காக கொல்லப்படவேண்டும்? ஆடு நிரபராதி தானே! யாரோ ஒருவரை மீட்க இந்த ஆடு ஏன் சாகவேண்டும்?
7) ஆபிரகாமே, உன் தியாகத்தை நான் பார்த்துவிட்டேன், குழந்தையை கொல்லாதே, சந்தோஷமாக வீட்டுக்குப்போ என்றுச் சொல்வதை விட்டுவிட்டு, ஏன் அல்லாஹ் ஒரு மகத்தான பலியை அங்கு கொடுத்தான்?
8) ஒருவேளை, பலியில்லாமல் விடுதலை கிடைக்காது, இரத்தம் சிந்தப்படாமல் மன்னிப்பு இல்லை, தண்டனையிலிருந்து விடுதலை இல்லை என்பதைச் சொல்லவேண்டி, அல்லாஹ் இப்படி ஆட்டை பலியிடச் சொன்னானா?
முஸ்லிம்களே, குர்-ஆனில் ஒருவரின் பாரத்தை ஒருவர் சுமக்கமுடியாது என்றுச் சொல்லும் 6:164, 17:13-15 போன்ற வசனங்கள் உண்டு என்று எனக்கு எடுத்துக் காட்டாதீர்கள்! அவைகள் பற்றி அடுத்தடுத்த தொடர்களில் பார்ப்போம். இந்த கட்டுரையை பொருத்தமட்டில், குர்-ஆன் 37:107ல், ஏன் அல்லாஹ் ஒரு ஆட்டை பலியிட அனுமதித்தான்? அதன் பின்னனி என்ன? இப்படி பலியிட்டு இரத்தம் சிந்துவதினால் அவனுக்கு (அல்லாஹ்விற்கு) என்ன நன்மை? அல்லது ஆபிரகாமின் மகனுக்கு என்ன லாபம்? என்பதை மட்டுமே விளக்குங்கள்.
அல்லாஹ் ஆபிரகாமுக்கு மகனை பலியிடும்படி கனவை கொடுத்தான், அவனே அதனை தடுத்தும்விட்டான், அவ்வளவு தான். இந்த இடத்தில் பலி எங்கே வந்தது? "மீட்புப்பணம்"(Ransom) ஏன் வந்தது? ஏன் இரத்தம் சிந்தப்படவேண்டும்?
ஆபிரகாம் கத்தியை ஓங்கிவிட்டார், எனவே அதற்கு இரத்தத்தை காட்டாமல் கீழே வைக்கக்கூடாது என்று சில முஸ்லிம்கள் சொல்லக்கூடும். தமிழ் படங்களில் ஹீரோ "நான் மேலே எடுத்த கத்திக்கு இரத்தத்தை காட்டாமல் கீழே வைக்கமாட்டேன்" என்றுச் சொல்வது போல, பஞ்ச் வசனம் சொல்லவேண்டாம். இது மிகவும் முக்கியமான விஷயம், எந்த ஒரு காரணமும் இல்லாமல், அல்லாஹ் பலிக்காக ஆட்டை கொடுத்து, ஆபிரகாமின் மகனை நான் மீட்டுக்கொண்டேன் என்று சொல்லமாட்டான்.
ஆட்டை அறுக்கும் படி அல்லாஹ் சொல்லவில்லை, ஆபிரகாம் சுயமாக செய்தார் என்று சொல்லவருகிறீர்களா? குர்-ஆன் 37:107ம் வசனத்தை நன்றாக படியுங்கள், அல்லாஹ் சுயமாகவே பலிக்காக ஒரு ஆட்டை கொடுத்தானாம், அதுவும் அது மகத்தான ஒரு பலியாம்!
முஸ்லிம்களில் சிலர், அந்த ஆடு, அல்லாஹ்வின் சொர்க்கத்தில் பல (40) ஆண்டுகள் மேய்ந்த ஆடு என்றும், அதனைத் தான் அக்குழந்தையை மீட்க அல்லாஹ் கொடுத்தான் என்றும் சொல்வார்கள். அது சொர்க்கத்தின் ஆடோ, பூமியின் ஆடோ! அது பிரச்சனை அல்ல! கேள்வி என்னவென்றால், ஏன் அந்த ஆடு மரிக்கவேண்டும்? ஏன் அதன் இரத்தம் சிந்தப்படவேண்டும் என்பது தான்?
இந்த கேள்விகளுக்கு பதில் சொல்ல விரும்பும் முஸ்லிம்கள், குர்-ஆன் 37:107ம் வசனத்தை ஆய்வு செய்து பதில் சொல்லுங்கள்.
அடுத்த தொடரில் சந்திக்கிறேன்…
அடிக்குறிப்புக்கள் (பயனுள்ள கட்டுரைகள்):
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக