2015ம் ஆண்டின் டிசம்பர் மாதத்தை சென்னைவாசிகள் ஒருபோதும் மறக்கமாட்டார்கள். பல நாட்கள் தொடர்ந்து பெய்த கனமழையினால் பல பகுதிகள் தண்ணீரில் மூழ்கின, மக்கள் என்னசெய்வதென்று அறியாமல் கண்ணீரில் மூழ்கினர். பல நாட்கள் அடிப்படை வசதிகள் கூட கிடைக்காமல் அவதிப்பட்டனர். கோடிக்கணக்கில் பணமுள்ளவர்கள் கூட தெருக்கோடிக்குச் சென்று தங்கள் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்துக் கொள்ளமுடியாத நிலையில் இருந்தனர். இந்த நேரத்தில் இந்துக்களும், முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் இன்னும் இதர மக்களும், "ஜாதி மத பேதம்" பார்க்காமல் உதவிகள் செய்தனர். மனித நேயத்தின் உண்மை வடிவம், முழு பௌர்ணமி நிலவு போல பலிச்சென்று சென்னையில் தெரிந்தது. உதவி செய்த அனைத்து பிரிவினருக்கும் என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். அரசாங்கமும் தன் கடமையை செய்தது.
முஸ்லிம்களின் மனித நேய உதவிகள்:
இந்த முறை முஸ்லிம்கள் செய்த உதவியை யாரும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது. ஒவ்வொரு இஸ்லாமிய பிரிவினரும் போட்டி போட்டுக் கொண்டு உதவிகள் செய்தனர். மக்களுக்கு உதவி புரியச்சென்றவர்களில் இரண்டு முஸ்லிம் சகோதரர்கள் மரித்துவிட்டதாகவும் நாம் இணையத்தில் வாசிக்கிறோம். இவர்களின் இவ்வுதவிகள் பற்றி மேலும் அறிய அவரவர்களின் இணைய தளங்களுக்குச் சென்று படித்துக் கொள்ளலாம்.
பதிநான்கு நூற்றாண்டுகளாக பூட்டிவைத்திருந்த மனித நேயத்தின் கதவுகளை முஸ்லிம்கள் ஒரே நேரத்தில் திறந்துவிட்டது போல் இருந்தது. சென்னையில் முஸ்லிம்கள் செய்த உதவிகளில் முஸ்லிமல்லாதவர்களும் இருந்தார்கள் என்பது தான் கவனிக்கவேண்டிய ஒன்று.
- "இவர்கள் இந்துக்கள் ஆயிற்றே!" என்றுச் சொல்லி நீட்டிய கைகளை முஸ்லிம்கள் சொடுக்கென்று திரும்ப எடுத்துக் கொள்ளவில்லை.
- "இவர்கள் கிறிஸ்தவர்கள் ஆயிற்றே!" என்றுச் சொல்லி உதவி செய்ய ஓடும் தங்கள் கால்களுக்கு முஸ்லிம்கள் தடை விதிக்கவில்லை.
தடைகளையும், ஆபத்துக்களையும் பாராமல் உதவி செய்தனர். எனவே முஸ்லிம்களை மெச்சிக்கொள்ளாமல் நம்மால் இருக்கமுடியாது. முஸ்லிம்கள் என்றால் தீவிரவாதிகளாக இருப்பார்கள் என்று முஸ்லிமல்லாதவர்கள் நம்புகிறார்கள். ஆனால், இந்த முறை வானத்திலிருந்து வந்த தண்ணீரால் "சென்னை கழுவப்பட்டப்போது", அதோடு கூட முஸ்லிம்களின் இந்த அவப்பெயரும் சிறிது கழுவப்பட்டது என்றுச் சொல்லமுடியும். வாழ்க தமிழ் முஸ்லிம்கள்! வளர்க அவர்களின் மனித நேயம்! இக்கட்டுரையின் கருப்பொருள் முஸ்லிம்களின் இவ்வுதவிப் பற்றியது தான். மேற்கொண்டு படியுங்கள்.
கிறிஸ்தவர்களின் மனித நேய உதவிகள் பற்றி ஏன் இக்கட்டுரையில் அதிகமாக எழுதவில்லை?
நான் முஸ்லிம்களை அதிகமாக புகழுவதைக் கண்டு, கிறிஸ்தவர்கள் என் மீது கோபம் கொள்ளலாம். இக்கட்டுரையில் கிறிஸ்தவர்களின் உதவிகள் பற்றி ஏன் அதிகமாக எழுதவில்லை என்பதைப் பற்றி அறிய அடிக்குறிப்பு [1] ஐ பார்க்கவும்.
முஸ்லிம்களின் உதவிகள் பற்றிய ஆய்விற்கு நாம் வெள்ளத்தை இப்போது திருப்பிவிடுவோம்.
சில முத்துச்சிதரல்கள்:
மழை நீரில் சென்னை மிதந்த போது, குறிப்பிடும்படி சில நிகழ்வுகள் நடந்ததாக இணையத்தில் படிக்கலாம். அவைகளில் நான்கு செய்திகளை மட்டும் பார்த்துவிட்டு, நம் கருப்பொருளைத் தொடுவோம்.
1) ஒரு இந்து சகோதரி பிரசவ வேதனையில் துடித்துக் கொண்டு இருந்தபோது, மழை நீரால் மருத்துவமனைக்கும் செல்லமுடியாத நிலையில் தவித்துக் கொண்டு இருந்தபோது, ஒரு முஸ்லிம் சகோதரர் அந்த பெண் மருத்துவ மனையில் பத்திரமாக சேர்ப்பதற்கு உதவி செய்தாராம். இதனால், அந்த இந்து பெற்றோர்கள் பிறந்த குழந்தைக்கு, தங்களுக்கு உதவி செய்த முஸ்லிம் சகோதரரின் பெயரையே சூட்டினார்களாம்.
2) முஸ்லிம்கள் உதவி செய்வதை படமாக போட்டு, "இப்படிப்பட்ட உதவி செய்யும் எங்களையா பாகிஸ்தானுக்கு போகச்சொல்கிறீர்கள்? நாங்கள் பாகிஸ்தானுக்கு போகட்டுமா?" என்ற கேள்வியை முஸ்லிம்கள் பெருமிதத்துடன் கேட்டு இருந்தார்கள்.
3) ஒரு முஸ்லிம் தன் கையில் செருப்பை எடுத்துக் கொண்டு சென்றுக் கொண்டு இருக்கிறார், இந்த படத்தைப் போட்டு, "பாருங்கள், மாற்று மதங்களின் வணக்க ஸ்தலங்களுக்கு மதிப்பு கொடுக்கும் வண்ணமாக, ஒரு முஸ்லிம் தன் செருப்பை கையில் எடுத்துக் கொண்டுச் செல்கிறார்" என்று எழுதி இருந்தார்கள். மாற்று மத கோயில்களுக்கு நாங்கள் எவ்வளவு மதிப்பு தருகிறோம் என்பதை பாருங்கள்!?! என்று கேள்வி கேட்டு இருந்தார்கள்.
4) இதே போல, இந்துக்களும் ஒரு படத்தைப் போட்டு, ஒரு முஸ்லிம் சகோதரி பிரசவத்திற்கு ஒரு விநாயகர் கோயிலை இந்துக்கள் திறந்து கொடுத்தார்களாம், அதனால், அந்த முஸ்லிம் பெற்றோர்கள் தங்களுக்கு பிறந்த குழந்தைக்கு "கணேசன்" என்று பெயர் சூட்டினார்களாம்.
இப்படி அனேக விஷயங்களை இணையத்தில் நாம் காணலாம். இவ்விவரங்கள் உண்மையா இல்லையா என்று ஆய்வு செய்வது இக்கட்டுரையின் நோக்கமல்ல.
இக்கட்டுரையின் நோக்கம் இது தான்:
சென்னையில் பேருதவி புரிந்த முஸ்லிம்களை முஹம்மதுவும் அல்லாஹ்வும் மன்னிப்பார்களா?
பாகம் 1
இக்கட்டுரையின் கருப்பொருள் கீழ்கண்ட கேள்விகளுக்கு விடை காண விழைவதாகும்:
1) இந்துக்களிடமும், கிறிஸ்தவர்களிடமும் முஸ்லிம்கள் பாராட்டின இந்த மனித நேய அன்பை, தங்கள் வேதமாகிய குர்-ஆனின் அடிப்படையில் செய்தார்களா? அல்லது இவ்வுதவிகளுக்கு பின்னணியில் ஏதாவது உள்ளார்ந்த அர்த்தமிருக்கின்றதா?
2) நம் கண்முன்னே முஸ்லிம்கள் செய்த இந்த பேருதவிகளை முஹம்மதுவும், அல்லாஹ்வும் அங்கீகரிப்பார்களா?
3) அல்லாஹ் காஃபிர்களை (முஸ்லிமல்லாதவர்களை) வெறுக்கிறார், ஆனால் முஸ்லிம்கள் காஃபிர்களுக்காக உயிரை பணயம் வைத்து உதவி செய்தார்கள், இதனை இஸ்லாமும் குர்-ஆனும் அனுமதிக்குமா?
4) காஃபிர்களுக்கு பேருதவி செய்யச் சொல்லி குர்-ஆன் முஸ்லிம்களுக்கு கட்டளையிடுகின்றதா? இதற்கு குர்-ஆன் வசன ஆதாரமிருக்கின்றதா?
5) முஸ்லிமல்லாதவர்களிடம் முஹம்மது எப்படி நடந்துக்கொண்டார்? முஸ்லிம்கள் காஃபிர்களிடம் எப்படி நடந்துக்கொள்ளவேண்டும் என்று முஹம்மது கட்டளையிட்டார்?
6) நம் தமிழ் முஸ்லிம்கள் செய்தது போலவே, இஸ்லாமிய நாடுகளில் வாழும் சிறும்பான்மை காஃபிர்களுக்காக (இந்துக்கள், கிறிஸ்தவர்கள், யூதர்கள் . . .) உயிரை பணயம் வைத்து முஸ்லிம்கள் உதவி புரிகின்றார்களா? அல்லது காஃபிர்களின் உயிரை பணயமாக எடுத்துக் கொண்டு இருக்கிறார்களா? முஸ்லிம்கள் இஸ்லாமிய நாடுகளில் ஒருவகையிலும், இந்தியா போன்ற ஜனநாயக நாடுகளில் வேறுவகையிலும் நடந்துக் கொள்கிறார்களே? இதற்கு காரணமென்ன?
7) இஸ்லாமிய ஷரியா சட்டத்தில் காஃபிர்களின் நிலை என்ன? ஷரியா சட்டம் முஸ்லிம்களுக்கும் முஸ்லிமல்லாதவர்களுக்கும் இடையே வேறுபாட்டை காட்டுகின்றதா? அல்லது சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற கோட்பாட்டை ஆதரிக்கின்றதா?
8) கடைசியாக, இந்த சென்னையின் வெள்ளம் நமக்கு கற்றுக் கொடுக்கும் பாடங்கள் எவைகள்?
போன்ற கேள்விகளுக்கு இந்த தொடர் கட்டுரைகளில் பதில்களைக் காண்போம். ஒருவேளை தமிழ் முஸ்லிம்கள் கூட மேற்கண்ட கேள்விகளுக்கு பதில்களைக் கொடுக்க முன்வரலாம். சென்னையில் தமிழ் முஸ்லிம்கள் செய்த உதவிகளை யாரும் மறுக்கமுடியாது, ஆனால், இவ்வுதவிகளின் பின்னணி என்ன? ஏன் இஸ்லாமிய நாடுகளில் முஸ்லிம்கள் இதே போல உதவிகள் செய்வதில்லை? இதற்கு மூலக் காரணங்கள் என்னவென்பதைத் தான் இக்கட்டுரை ஆய்வு செய்கிறது.
முஸ்லிமல்லாதவர்களின் மிகப்பெரிய எதிரி - இஸ்லாம் பற்றிய அறியாமை
இஸ்லாம் பற்றிய அறியாமை மிகப்பெரிய ஆபத்தை இஸ்லாமியரல்லாதவர்களுக்கு கொண்டுவரும் என்பதை நாம் மனதில் பதித்துக் கொள்ளவேண்டும். இந்துக்கள் பகவத் கீதையை தெரிந்துவைத்திருக்கிறார்களோ இல்லையோ, ஆனால் குர்-ஆனையும், முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்றையும் படித்து புரிந்துக்கொள்ள வேண்டும். இயேசுவின் போதனைகளை கிறிஸ்தவர்கள் அரைகுறையாக புரிந்துக் கொண்டாலும் பரவாயில்லை, முஹம்மதுவின் போதனைகளை மட்டும் முழுவதுமாக புரிந்துக் கொள்ளவேண்டும்.
(இப்போது சில இந்துக்கள் "குர்-ஆனை நாங்கள் படித்து இஸ்லாமிய போதனைகளை தெரிந்துக் கொள்வது போல, பைபிளையும் படித்து அதன் போதனைகளையும் தெரிந்துக் கொள்ளக்கூடாதா?" என்று என்னிடம் கேள்வி கேட்கலாம். எல்லோரும் பைபிளை படிக்கவேண்டும் என்று தான் நாங்கள் இலவசமாக பைபிளைத் தருகிறோம். எபிரேய கிரேக்க மொழிகளில் கொடுக்காமல், நீங்கள் படிப்பது உங்களுக்கு புரியவேண்டும் என்பதற்காக உங்கள் தாய் மொழிகளில் பைபிளை மொழியாக்கம் செய்து தருகிறோம். இந்துக்கள் பைபிளையும் படிக்கவேண்டும், இயேசுவின் போதனைகளையும் அறிந்துக் கொள்ளவேண்டும், எனவே, எல்லோரும் தாராளமாக பைபிளை படிக்கலாம். நான் இஸ்லாம் பற்றி எவைகளை எழுதுகிறேனோ, அவைகள் அனைத்தும் பைபிளுக்கும் பொருந்தும். நாம் குர்-ஆனை கேள்வி கேட்டால், அதே கேள்வியை பைபிளுக்கும் கேட்கலாம், இதர மார்க்க வேதங்களுக்கும் கேட்கலாம். பதில் உள்ளவர்கள் பதில் சொல்லட்டும், பதில் இல்லாதவர்கள் அமைதியாக ஜகா வாங்கிக்கொண்டுச் செல்லட்டும்.)
தமிழ் முஸ்லிம்களின் மனித நேய செயல்களை சென்னைவாசிகள் கண்டார்கள், இப்போது இந்த முஸ்லிம்களின் வேதம் இதைப் பற்றி என்ன சொல்கிறது என்று பார்ப்போம். முஹம்மதுவும், அல்லாஹ்வும் முஸ்லிமல்லாதவர்களிடம் எப்படி நடந்துக் கொள்ளவேண்டும்? என்று சொல்லியுள்ளார்கள் என்பதை ஆய்வு செய்வோம். இவ்விவரங்களுக்கு ஆதாரமாக முஸ்லிம்களின் வேதமாகிய குர்-ஆனையும், ஹதீஸ்களையும் மேற்கோள் காட்டியுள்ளோம். இஸ்லாமிய வேதம் சொல்கின்றபடி தானே முஸ்லிம்கள் நடந்துக் கொண்டு இருப்பார்கள்? என்று முஸ்லிமல்லாதவர்கள் நினைக்கலாம், இதற்கான பதிலை இக்கட்டுரையில் கொடுத்திருக்கிறேன், வாசகர்கள் கொடுத்திருக்கும் ஆதாரங்களை சுயமாக ஆய்வு செய்து பார்த்துக் கொள்ளட்டும்.
இந்த கட்டுரையில் எடுத்துவைக்கும் குர்-ஆன் மற்றும் ஹதீஸ்கள் பற்றி முஸ்லிம்கள் தங்கள் விளக்கங்களை பதில்களை பின்னூட்டமிட்டால் அதற்கான பதில் தரப்படும்.
1) முஸ்லிம்கள் முஸ்லிமல்லாதவர்களுக்கு எதிரான செயல்களைச் செய்யவேண்டும், இது தான் முஸ்லிம்களின் தனித்துவம்:
முஹம்மது என்பவரை முஸ்லிம்கள் தீர்க்கதரிசியாக நம்புகிறார்கள். இஸ்லாமை கி.பி. ஏழாம் நூற்றாண்டில் மக்காவில் தோற்றுவித்தவர் இவர். முஹம்மதுவின் ஒவ்வொரு வாக்கையும் முஸ்லிம்கள் வேதவாக்காக பாவித்து கீழ்படிகிறார்கள். ஒவ்வொரு முஸ்லிமும் முஸ்லிமல்லாதவர்களுக்கு எதிரான காரியங்களைச் செய்யவேண்டும் என்று முஹம்மது கட்டளையிட்டுள்ளார். சென்னையில் முஸ்லிம்கள் செய்த உதவிகளை எண்ணிப்பார்த்து நாம் வியக்கிறோம். ஆனால், அவைகளை விட பெரிய வியப்பு நமக்கு இப்போது காத்திருக்கிறது.
முஸ்லிமல்லாதவர்களுக்கு எதிரான மாறுபாடு 1: தாடிகளுக்கும், தலைமுடிக்கும் சாயமிடுங்கள்
யூதர்களும் கிறிஸ்தவர்களும் தங்கள் தாடிகளுக்கும் தலைமுடிக்கும் சாயமிட்டுக் கொள்வதில்லையாம், எனவே முஸ்லிம்கள் தங்கள் தாடிக்கும் தலைமுடிக்கும் சாயமிட்டுக் கொள்ளவேண்டுமாம். இப்படி செய்வது எதற்கு? "முஸ்லிம்கள் முஸ்லிமல்லாதவர்களுக்கு எதிராக நடந்துக் கொள்கிறார்கள்" என்று காட்டிக் கொள்வதற்காக.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: யூதர்களும் கிறிஸ்தவர்களும் (தம் தாடிகளுக்கும் தலைமுடிக்கும்) சாயமிட்டுக் கொள்வதில்லை. எனவே, நீங்கள் (அவற்றிற்குக் கருப்பு அல்லாத சாயமிட்டு) அவர்களுக்கு மாறு செய்யுங்கள்.
என அபூ ஹுரைரா(ரலி) கூறினார்.
ஆதாரம்: புகாரி 3462, மேலும் பார்க்க புகாரி எண் 5899 மற்றும் முஸ்லிம் 4271
முஸ்லிமல்லாதவர்களுக்கு எதிரான மாறுபாடு 2: தாடியை வளரவிடுங்கள், மீசையை ஒட்ட நறுக்குங்கள்
ஒருவரது மீசையும், தாடியும் அவருக்கே சொந்தம், அவைகளை அவர் என்னவாவது செய்யலாம் தவறில்லை. இதே போல, ஒரு மார்க்கத்தின் அடிப்படையில் நம் வெளிப்புற தோற்றத்தை நாம் மாற்றிக் கொள்ளலாம், இதிலும் தவறில்லை. ஆனால், மற்ற மதத்தவர்களுக்கு எதிராக நாங்கள் நடந்துக் கொள்கிறோம் என்று காட்டிக்கொள்ள இப்படி செய்வது, கேவலமானதாகும். அமைதி மார்க்கம் என்றுச் சொல்லிக்கொள்ளும் இஸ்லாமின் இறைத்தூதர் இப்படி கேவலமான கட்டளைகளை கொடுத்துள்ளார். சமுதாயத்தின் ஒற்றுமையை குலைக்க, சமுதாய மக்களிடையே ஏற்றத்தாழ்வு மனப்பான்மையை உருவாக்க, மற்ற மதத்தவரிடம் வெறுப்புணர்வை வெளிப்படையாக காட்டிக் கொள்ள வித்திட்டவர் இஸ்லாமிய இறைத்தூதர் முஹம்மது ஆவார். இவைகளை இஸ்லாமின் புனித நூல்கள் புகாரி, முஸ்லிம் மற்றும் அஹ்மத் போன்றவைகளில் காணலாம், இதோ அந்த ஆதாரங்கள்:
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இணைவைப்பாளர்களுக்கு மாறு செய்யுங்கள்: தாடிகளை வளரவிடுங்கள். மீசையை ஒட்ட நறுக்குங்கள். என இப்னு உமர்(ரலி) அறிவித்தார். (ஸஹீஹ் புகாரி எண்: 5892)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இணைவைப்பாளர்களுக்கு மாறு செய்யுங்கள்: மீசையை ஒட்ட நறுக்குங்கள். தாடியை வளரவிடுங்கள்.-இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (ஸஹீஹ் முஸ்லிம் 434)
நாங்கள், அல்லாஹ்வின் தூதரே, வேதமுடையவர்கள் தங்களது தாடிகளை (ஒட்ட) கத்தரித்துக் கொள்கிறார்கள்; மீசைகளை வளர விடுகிறார்கள் என்று கூறினோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள், உங்களது மீசைகளை நீங்கள் கத்தரியுங்கள். தாடிகளை வளர விடுங்கள். வேதமுடையவர்களுக்கு மாறு செய்யுங்கள் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ உமாமா (ரலி),
நூல்: அஹ்மது (21252)
இதர மார்க்க மக்களின் "தீய பழக்கவழக்கங்களை செய்யாமல் இருங்கள்" என்று முஹம்மது கட்டளையிட்டிருக்கவேண்டும். மீசையை வளரவிடுவதில் என்ன தவறு இருக்கிறது? தாடியை ஒட்ட கத்தரிப்பதில் (ட்ரிம் செய்வதில்) என்ன தவறு இருக்கிறது? இதில் அல்லாஹ்விற்கு எதிரான பாவம் என்ன இருக்கிறது? முஹம்மதுவின் ஒரே நோக்கம், முஸ்லிமல்லாதவர்களுக்கு எதிராக செயல்படவேண்டும் அவ்வளவு தான். இதைத் தான் முஸ்லிம்கள் இன்றும் செய்துக் கொண்டு இருக்கிறார்கள். என்னே அறியாமை! முஸ்லிம்களின் மனதில் மாற்று மதத்தவரைப் பற்றிய விஷ வெறுப்புணர்வை இப்படிப்பட்ட கட்டளைகள் விதைத்துவிடுமல்லவா?
முஸ்லிமல்லாதவர்களுக்கு எதிரான மாறுபாடு 3:
அவன் வேட்டி அணிவதில்லையா? முஸ்லிமே! நீ வேட்டி அணிந்து அவனுக்கு மாறு செய். அவன் செருப்பு அணிவதில்லையா? முஸ்லிமே! நீ செருப்பு அணிந்து அவனுக்கு மாறு செய்.
வேட்டியையும் செருப்பையும் விட்டுவைக்கவில்லை இஸ்லாமிய இறைத்தூதர். இதர மார்க்க மக்களுக்கு எதிராக நடப்பதே முஸ்லிம்களின் முக்கிய நோக்கமாக மாற்றியிருக்கிறார் முஹம்மது. கீழ்கண்ட ஹதீஸ்களை படிக்கும் முஸ்லிம்களின் உள்ளத்தில் எப்படிப்பட்ட எண்ணங்கள் ஓடும் என்பதை கற்பனை செய்துப் பாருங்கள். கீழ்கண்ட ஹதீஸில் எத்தனை முறை "அவர்களுக்கு மாறு செய்யுங்கள்" என்று முஹம்மது கூறியுள்ளார் என்பதை கவனியுங்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மூத்த அன்சாரிகளைக் கடந்து சென்றனர். அவர்களின் தாடிகள் வெண்மையாக இருந்தன. அப்போது "அன்சார்களே (உங்கள் முடிகளை) மஞ்சளாகவோ, சிவப்பாகவோ ஆக்கிக் கொள்ளுங்கள்.வேதக்காரர்களுக்கு மாறு செய்யுங்கள்'' எனக் கூறினார்கள். "அப்படியானால் வேதக்காரர்கள் கால்சட்டை அணிகின்றனர். வேட்டி அணிவதில்லையே'' என்று நாங்கள் கேட்டோம். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் "நீங்கள் கால்சட்டையும் அணியுங்கள். வேட்டியும் அணியுங்கள் வேதக்காரர்களுக்கு மாறு செய்யுங்கள்'' எனக் கூறினார்கள்.
"அல்லாஹ்வின் தூதரே வேதக்காரர்கள் காலுறை அணிகின்றனர். செருப்புஅணிவதில்லையே'' என்று நாங்கள் கேட்டோம். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், "நீங்கள் காலுறைகளும் அணியுங்கள். செருப்பும் அணியுங்கள்.வேதக்காரர்களுக்கு மாறு செய்யுங்கள்'' எனக் கூறினார்கள். "அல்லாஹ்வின் தூதரே வேதக்காரர்கள் தங்கள் தாடிகளைக் கத்தரித்து மீசைகளை முழுமையாக வைக்கின்றனரே'' எனக் கேட்டோம். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் "நீங்கள் உங்கள் தாடிகளை முழுமையாக வைத்து மீசையைக் கத்தரியுங்கள்'' எனக் கூறினார்கள்.
நூல் : அஹ்மத் (21252)
குருவிற்கு ஏற்ற சீடர்கள் தப்பாமல் கிடைத்துள்ளார்கள் முஹம்மதுவிற்கு. அவர் ஏதோ ஒரு விஷயத்தில் மாறு செய்யுங்கள் என்றுச் சொன்னால், எல்லாவற்றையும் நோண்டி நோண்டி ஏன் கேட்கவேண்டும்? இப்படியெல்லாம் கேட்கும் தோழர்கள் கீழ்கண்டவிதமாகவும் கேட்டு இருக்கவேண்டியது தானே! ஒருவேளை அதற்கும் முஹம்மது பதில் சொல்லியிருப்பார்.
இதோடு கூட, வேதக்காரர்கள் தினமும் சாப்பாடு சாப்பிடுகிறார்கள் என்று நாங்கள் கேட்டோம், அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், "நீங்கள் சாப்பாடும் சாப்பிடுங்கள், ஒட்டகங்கள் சாப்பிடுவது போல இலைகளையும், வைக்கோளையும் சாப்பிட்டு வேதக்காரர்களுக்கு மாறு செய்யுங்கள்" எனக் கூறினார்கள்.
இஸ்லாமிய அறிஞர்களின் அங்கீகாரம்:
மேற்கண்ட விவரங்கள் அனைத்தும் எங்கள் இஸ்லாமிய நூல்களில் இருந்தாலும், அவைகளை பின்பற்றும் படி இஸ்லாமிய அறிஞர்கள் எங்களுக்கு போதிப்பதில்லை, அவைகளை நாங்கள் பின்பற்றுவதும் இல்லை என்று முஸ்லிம்கள் சொல்லமுடியாது. ஏனென்றால், முஹம்மது சொன்னவைகளில் நியாயம் இல்லாவிட்டாலும், அறிவுடமைக்கு எதிராக இருந்தாலும், கேவலமான கட்டளைகளாக இருந்தாலும், முஸ்லிம்கள் அவைகளை முழுமூச்சோடு பின்பற்றுகிறார்கள். கேள்வி கேட்காமல், முஹம்மது சொன்னதை கடைபிடித்தால் முஸ்லிம்களுக்கு அதிக நன்மைகளை அல்லாஹ் கொடுப்பான் என்பது இஸ்லாமிய நம்பிக்கை.
ஆன்லைன் பீஜே தளத்திலும், பத்திரிக்கைகளிலும் மேற்கண்ட ஹதீஸ்களை மேற்கோள் காட்டி, முஸ்லிம்கள் அவைகளை பின்பற்றுங்கள் என்று உற்சாகப்படுத்தியுள்ளார்கள். முஸ்லிம்களின் அடையாளமே, மற்ற மதத்தவருக்கு மாறு செய்யும் படி தங்கள் வெளிப்புற தோற்றத்தை காட்டிக்கொள்வதாகும் என்று எழுதியுள்ளார்கள். முஹம்மது சொன்னது போல செய்யாத முஸ்லிம்கள் தங்கள் தனித்துவத்தை இழந்து விடுகிறார்களாம். அதனை நீங்களே படியுங்கள்:
இந்த செய்திகளுக்கு மாற்றமாக, முழுக்க முழுக்க வெள்ளை வெளேரென்று தலைமுடியும் தாடியும் வைத்திருப்பது, அல்லது கருப்பு சாயம் பூசுவது, ஒட்டு முடி வைப்பது, பர்தாவை பெண்கள் பேணாமல் இருப்பது போன்ற காரியங்களை முஸ்லிம்கள் மக்களிடம் பார்க்க முடிகிறது. வெறும் பெயரை மட்டும் வைத்துத் தான் முஸ்லிம் என்று அடையாளம் கண்டு கொள்ளும் வகையில் தங்களது தனித்துவத்தை தொலைத்துவிட்டு பெயரளவிற்கு முஸ்லிம்களாக இருக்கிறார்கள்.
2) தமிழ் முஸ்லிம்களின் மனித நேய செயல்களும் முஹம்மதுவும்:
இதுவரை நாம் இரண்டு விஷயங்களை அறிந்துக் கொண்டோம். முதலாவது, முஸ்லிம்களின் சென்னை உதவிகள் பற்றி அறிந்துக் கொண்டோம், இரண்டாவதாக, இஸ்லாமிய ஆதார நூல்களிலிருந்து "முஸ்லிமல்லாதவர்களுக்கு எப்படியெல்லாம் முஸ்லிம்கள் மாறு செய்யவேண்டும் என்று முஹம்மது கட்டளையிட்டுள்ளார் என்பதை" அறிந்துக் கொண்டோம்.
இதன் அடிப்படையில் முஸ்லிம்களுக்கு சில கேள்விகளை முன்வைத்து, இந்த முதலாவது பாக கட்டுரையை முடிக்க விரும்புகிறேன்.
அ) முஸ்லிமல்லாதவர்களுக்கு எதிராக செயல்படுங்கள் என்று முஹம்மது முஸ்லிம்களுக்கு கட்டளையிட்டுள்ளார். ஆனால், முஸ்லிம்கள் இந்துக்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் தங்கள் உயிரை பணயம் வைத்து உதவி செய்துள்ளார்கள்.
ஆ) சென்னையில் இந்துக்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் உதவிகள் செய்து, முஸ்லிம்கள் முஹம்மதுவின் கட்டளைகளுக்கு எதிராக நடந்துக் கொண்டார்கள் என்று நாம் கருதலாமா? அல்லது முஸ்லிம்களின் இந்த உதவிகளுக்கு பின், ஒரு மாய்மாலமான செயல் உள்ளதா?
இ) முஹம்மதுவின் மேற்கண்ட ஹதீஸ்களில் சொல்லிய கட்டளைகளை இந்துக்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் முஸ்லிம்கள் விளக்க கடமைப்பட்டுள்ளார்கள். இதனை செய்வார்களா?
ஈ) முஸ்லிமல்லாதவர்களின் அற்பமான தாடி மற்றும் தலைமுடி விஷயத்தில், ஒரு மிகப்பெரிய இஸ்லாமிய தீர்க்கதரிசி முஸ்லிம்களுக்கு கீழ்தரமாக அறிவுரை கூறுவாரா? இப்படி முஹம்மது கட்டளையிடுவதிலிருந்து, இஸ்லாமிய மார்க்கம் எந்த தரத்தில் செயல்பட்டுக்கொண்டு இருக்கிறது என்பதை நாம் எடை போடலாம்.
உ) தமிழ் நாட்டில் வாழும் இந்துக்களே, கிறிஸ்தவர்களே! உங்கள் பகுதியில் வாழும் முஸ்லிம்கள் தங்கள் தாடிகளுக்கும் தலைமுடிகளுக்கும் மருதானி போன்ற சாயம் போட்டுக்கொண்டு, வெள்ளை முடிகளை சிகப்பாக மாற்றிக்கொண்டுச் செல்வதை பார்த்து இருப்பீர்கள். இதன் மூலம் முஸ்லிம்கள் தெரிவிப்பது என்ன? "எங்கள் இறைத்தூதர் சொல்லியபடி, நாங்கள் எங்கள் தாடிகளுக்கும் தலைமுடிக்கும் சிகப்பு சாயம் போட்டுக்கொண்டு, உங்களுக்கு எதிராக நடந்துக் கொண்டு இருக்கிறோம்" என்று அவர்கள் சொல்கிறார்கள் என்று அர்த்தம், அப்படித்தானே! நீங்கள் கருப்பு சாயம் போட்டால், நாங்கள் சிகப்பு போடுவோம்! நீங்கள் வேட்டி கட்டவில்லையானால், நாங்கள் வேட்டி கட்டுவோம்! நீங்கள் மீசையை வளரவிட்டால், நாங்கள் அதனை ஒட்ட வெட்டுவோம்! நாங்கள் எதைச் செய்தாலும், அது அற்பமான விஷயமாகிய தாடி மிசை செருப்பு போன்றவைகளாக இருந்தாலும் சரி, உங்களுக்கு எதிராக செய்வது தான் எங்கள் இறைத்தூதர் கற்றுக்கொடுத்த பாதை. இஸ்லாமிய ஆதாரங்கள் இப்படித் தான் சொல்கின்றன. முஸ்லிம்களே! இதற்கு என்ன சொல்லப்போகிறீர்கள்?
ஊ) ஒரு கேவலமான விஷயத்தில் கூட முஹம்மதுவை அணுவணுவாக அப்படியே பின்பற்றும் முஸ்லிம்கள், எப்படி இப்படிப்பட்ட உதவிகளை அதுவும் முஸ்லிமல்லாதவர்களுக்கு செய்தார்கள்? இதில் இருவர் மரித்தும் விட்டார்களாம். இவர்களை முஹம்மது மன்னிப்பாரா?
எ) சென்னையில் உதவி செய்த முஸ்லிம்கள் அனைவரும் "பெயரளவு முஸ்லிம்கள்" என்று சொல்லமுடியாது, அதாவது முஹம்மதுவின் மேற்கண்ட கட்டளைகளை அறியாதவர்கள் அல்ல இந்த முஸ்லிம்கள். இவர்கள் இஸ்லாமை நன்கு அறிந்திருக்கும் முஸ்லிம்கள். ஆக, முஸ்லிம்கள் இந்துக்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் உதவி செய்து, முஹம்மதுவிற்கு மாறு செய்தார்களா? அல்லது இதில் உள்ளர்த்தம் ஏதாவது உண்டா?
ஏ) முஸ்லிமல்லாதவர்களுக்கு மாறு செய்யவேண்டுமென்றால் வேறு விஷயங்களில் செய்யவேண்டியது தானே! ஒரு இனம் அல்லது மக்கள் செய்யும் தீய காரியங்களைச் செய்யாமல் இருக்க முஹம்மது கட்டளை கொடுத்திருந்தால் அதனை ஏற்றுக் கொள்ளலாம். உதாரணத்திற்கு, பிறக்கும் பெண் பிள்ளைகளை கொல்லும் பழக்கமுடைய மக்களின் செயல்களுக்கு மாறு செய்ய முஸ்லிம்களுக்கு கட்டளையிட்டால், அதனை ஏற்கலாம். மக்காவினரின் பழமைவாய்ந்த இப்படிப்பட்ட செயல்களை முஹம்மது கண்டித்துள்ளார். இவைகளை ஏற்கலாம். ஆனால், அற்பமான தாடியையும், தலை முடியையும் பிடித்துக் கொண்டு ஆட்டினால் என்ன நன்மை?
முடிவுரை:
முஸ்லிம்களே! மேற்கண்ட ஹதீஸ்களை நீங்கள் பொய் என்றுச் சொல்வீர்களா? முஹம்மது இப்படியெல்லாம் சொல்லவில்லை, புகாரி மற்றும் முஸ்லிம் ஹதீஸ்கள் சொல்லும் இவ்விவரங்கள் பொய்யானவை என்று அவைகளை ஒதுக்குவீர்களா? எங்கள் மார்க்கம் மனித நேய மார்க்கமாகும், இந்துக்களையும், கிறிஸ்தவர்களையும், யூதர்களையும் மற்ற எல்லோரையும் நேசிக்கச்சொல்லும் மார்க்கம் என்று நீங்கள் சொன்னால், மேற்கண்ட ஹதீஸ்களின் நிலை என்ன?
இந்த பாகத்தை இதோடு முடித்துக் கொள்கிறேன். இஸ்லாம் எப்படியெல்லாம் மற்ற மார்க்க மக்களிடம் நடந்துக் கொள்கிறது என்பதை அடுத்த பாகத்தில் இன்னும் மேலதிக ஆதாரங்களை குர்-ஆன் மற்றும் ஹதீஸ்களிலிருந்து பார்க்கலாம்.
அடிக்குறிப்புக்கள்:
[1] கிறிஸ்தவர்களின் மனித நேய உதவிகள் பற்றி ஏன் இக்கட்டுரையில் எழுதவில்லை.
கிறிஸ்தவர்களின் உதவிகள் பற்றி அதிகமாக எழுதாமல், ஏன் முஸ்லிம்களின் உதவிப் பற்றி அதிகமாக உமர் எழுதுகிறார்? என்ற கேள்வி கிறிஸ்தவர்களுக்கு எழும். ஆனால், கிறிஸ்தவர்கள் ஒன்றை சரியாக புரிந்துக் கொள்ளவேண்டும். இயற்கையாக நடப்பதைக் கண்டு யாரும் ஆச்சரியப்படமாட்டார்கள், அதிசயமாக நடப்பதைக் கண்டு தான் மக்கள் ஆச்சரியப்படுவார்கள். மீன்கள் நீந்துவதைக் கண்டு யாராவது ஆச்சரியப்படுவார்களா? கழுகுகள் உயர பறப்பதைக் கண்டு யாராவது மெச்சிக்கொள்வார்களா? மீனின் நீந்தும் திறமையைப் பார்த்து, கழுகின் பறக்கும் திறமையைப் பார்த்து மக்களின் புருவங்களும் உயராது. இதே போலத்தான் கிறிஸ்தவர்களின் சேவையும், உதவிகளும். கிறிஸ்தவர்கள் இயற்கையாகவே உதவிகள் செய்பவர்கள், தொன்றுதொட்டு அவர்கள் செய்துவருவது ஒன்றும் புதிதல்லவே! இதனை நான் பெருமைக்காக அதிகப்படுத்திச் சொல்லவில்லை, உண்மையைத் தான் சொல்கிறேன்.
கிறிஸ்தவர்களின் உதவிகளை நாம் அதிகமாக புகழ்ந்தால், அது அவர்களை அவமானப்படுத்துவதற்கு சமமாகும், கடமையை செய்பவர்களுக்கு அதிக புகழ்ச்சி தேவையில்லை, சத்தியத்திற்கு விளம்பரம் தேவையில்லை. கிறிஸ்தவர்களின் உதவிகளை மைக் வைத்து ஊரறிய சொல்லவேண்டிய அவசியமில்லை, ஏனென்றால், ஆபத்து காலத்தில் மட்டுமல்ல, எல்லா காலத்திலும் கிறிஸ்தவர்கள் உதவி செய்கிறார்கள். கிறிஸ்தவர்கள் உதவி செய்ய "சென்னை தண்ணீரில் மூழ்கி மிதக்கவேண்டிய அவசியமில்லை". இக்கட்டுரையின் நோக்கத்தை முழுவதுமாக அறிந்துக் கொள்ள முழு கட்டுரையையும் படிக்கவும். அதன் பிறகு இப்படிப்பட்ட கேள்வியை என்னிடம் கேட்க விரும்பமாட்டீர்கள்.
இந்துக்களும் பேருதவியை செய்தார்கள், வேற்றுமையில் ஒற்றுமை என்பதை இப்படிப்பட்ட ஆபத்தான காலத்தில் இந்தியாவில் அபரிதமாக காணமுடிகின்றது.
[2] ஆன்லைன் பீஜே தள கட்டுரைகள்
[3] இதர இஸ்லாமிய தள கட்டுரை - அழகுக்காக மொட்டையடித்துக் கொள்ளலாமா? அழகுக்காக தலையில் கறுப்பு அல்லாத வேறு கலர் சாயம் பூசிக் கொள்ளலாமா?
[4] இதர இஸ்லாமிய தள கட்டுரை - தலை நரைக்குச் சாயம் பூசுவதற்கு இஸ்லாத்தில் அனுமதி இருக்கிறதா? சிலர், மருதாணி அல்லாத நிறப்பூச்சுக் கூடாது என்கின்றனர். விளக்கம் தரவும்.
[5] உமரின் முந்தைய கட்டுரை - 101 காரணங்கள் - முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்? பாகம் 5 (காரணம் 48. தாடிக்கும் தலைமுடிக்கும் சாயமிட்டு யூதர்களுக்கு மாறு செய்யுங்கள்)
Tamil Source: http://www.answering-islam.org/tamil/authors/umar/chennai_muslims/chennai_muslims_part1.html
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக