The Creator and the Creation
ஆசிரியர்: ராபர்ட் ஸீவர்ஸ்
என் இணைய தளத்தின் கட்டுரைகள், இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவத்திற்கு இடையே காணப்படும் இறையியல் வித்தியாசங்களை பட்டியலிடும் ஆய்வு கட்டுரைகளாக இருக்கும். இவைகளில் சில கட்டுரைகள் வெளிப்படையாக உண்மைகளை சொல்வதினால், சில முஸ்லிம்களுக்கு மன வருத்தத்தை உண்டாக்கும். சில கட்டுரைகள் வாசகர்களின் சிந்தனையைத் தூண்டி, மேற்கொண்டு ஆய்வு செய்ய அவர்களை உற்சாகப்படுத்தும். இவ்விரு மார்க்கங்களுக்கு இடையே பல வித்தியாசங்களை நாம் பட்டியலிட்டாலும், படைப்பு மற்றும் படைத்தவர் பற்றிய வித்தியாசம் மிகவும் சுவாரசியமானதாகும். எனவே இக்கட்டுரையில் 'படைப்பும் படைத்தவரும்' என்ற கருப்பொருளில் ஆய்வு செய்யப்போகிறோம்.
கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம் என்ற இவ்விரு மார்க்கங்களை பின்பற்றுபவர்கள் சொல்லும் பொதுவான ஒரு விஷயம், "வானத்தையும் பூமியையும் படைத்த இறைவனை நாங்கள் தொழுதுக்கொள்கிறோம்" என்பதாகும். இது ஒரு அடிப்படை விஷயம் என்பதால், இதனை அதிகமாக விளக்கத்தேவையில்லை. பைபிள் தன் முதல் வசனத்தை தேவன் வானத்தையும் பூமியையும் படைத்த வர்ணனையோடு துவங்குகிறது (ஆதியாகமம் 1:1). இன்னும் பல இடங்களில் பைபிளின் இறைவன் தம்முடைய உருவாக்கும் வல்லமையை பறைசாற்றுவதை காணமுடியும் (பார்க்க ஏசாயா 44:24 & யோபு 38:4-6). இதே போல, குர்-ஆனிலும் அனேக இடங்களில் அல்லாஹ் வானத்தையும் பூமியையும் படைத்தவர் என்று சொல்லப்பட்டுள்ளது.
குர்-ஆன் 6:73. அவன் தான் வானங்களையும் பூமியையும் உண்மையாகவே படைத்தான்; அவன் "ஆகுக!" என்று சொல்லும் நாளில், அது (உடனே) ஆகிவிடும். அவனுடைய வாக்கு உண்மையானது; எக்காளம் (ஸூர்) ஊதப்படும் நாளில், ஆட்சி (அதிகாரம்) அவனுடையதாகவே இருக்கும்; அவன் மறைவானவற்றையும், பகிரங்கமானவற்றையும் அறிந்தவனாக இருக்கிறான்; அவனே பூரண ஞானமுடையோன்; (யாவற்றையும்) நன்கறிந்தோன். (டாக்டர் முஹம்மது ஜான் தமிழாக்கம்)
கிறிஸ்தவர்களும் முஸ்லிம்களும் "வானத்தையும் பூமியையும் படைத்தவரை" தொழுதுக் கொள்வதினால், இவ்விரு பிரிவினரும் ஒரே இறைவனைத் தான் தொழுதுக் கொள்கிறார்கள் என்று மக்கள் முடிவு செய்துவிடுகிறார்கள். அதாவது, கிறிஸ்தவர்கள் வணங்கும் இறைவனைத் தான் முஸ்லிம்களும் வணங்குகிறார்கள் என்று மக்கள் தவறாக எண்ணிவிடுகிறார்கள். ஆனால், பைபிளின் இறைவனும், குர்-ஆனின் அல்லாஹ்வும் தாம் படைத்தவைகளிடம் எப்படி தொடர்பு கொள்கிறார்கள் என்ற ஆய்வைச் செய்தால், இவ்விருவருக்கும் இடையே இருக்கும் வித்தியாசத்தை சரியாக புரிந்துக் கொள்ளமுடியும்.
இஸ்லாமின் படி, அல்லாஹ் என்பவர் தாம் படைத்தவைகளிலிருந்து மேலானவராக கருதப்படுகிறார். நாம் அல்லாஹ்வை பார்க்கமுடியாது என்றும், அவரது சத்தத்தை கேட்கமுடியாது என்றும் முஸ்லிம்கள் நம்புகிறார்கள். அதாவது, நம் ஐம்புலங்களிலிருந்து அல்லாஹ்வை அறியமுடியாது என்று முஸ்லிம்கள் நம்புகிறார்கள். இந்த விவரத்தை குர்-ஆன் தெளிவாக விளக்கவில்லை என்றாலும், குர்-ஆன் 29:6ம் வசனத்தை முஸ்லிம்கள், "அல்லாஹ் எல்லா படைப்பை விட மேலானவர்" என்று விளக்குகிறார்கள். அல்லாஹ் 'ஒரு போதும் தன் படைப்பிற்குள் வரமாட்டார்" என்று விரிவுரை கொடுக்கிறார்கள். ஒரு இஸ்லாமிய அறிஞர் கீழ்கண்ட விதமாக கூறுகிறார்:
"அல்லாஹ் தான் படைத்த அனைத்து படைப்பைவிட மேலானவன். அவன் தன் படைப்பு போல, ஒரு காலத்திற்கு இடத்திற்கு உட்பட்டவன் அல்ல. ஒருவேளை அல்லாஹ் தன் படைப்பிற்குள் நுழைந்தால், அவனும் தன் படைப்பைப்போல குறையுள்ளவனாக கருதப்படவேண்டி வரும்" [1]
"ஒரு முக்கியமான விவரத்தை தெளிவுபடுத்தவேண்டியுள்ளது. அல்லாஹ் வானத்தில் இருக்கிறான் என்று சொல்லும் போது, "அவன் வானத்திற்குள் இருக்கிறான்" என்று அர்த்தமல்ல. இதன் உண்மை பொருள் "அல்லாஹ் வானத்திற்கு மேலே இருக்கிறான்" என்பதாகும். அவன் தன் படைப்பை விட மேலானவன், தன் படைப்போடு அவன் சம்மந்தம் கலக்கமாட்டான். அல்லாஹ்வின் ஆதிக்கம், மேன்மை மற்றும் வல்லமை என்பவைகள் அவனின் முக்கிய இலக்கணங்களாக இருக்கின்றன" [2]
"Allah Most High is transcendent above any quality of His creation, including existing within time or space, as that would entail being limited."
We would like to point out that, in saying that Allah is in the heavens, we do not mean that He is present within the heavens. What we mean is that Allah is above the heavens. He is High above His creation, not connected to them, and that His Ascendancy is that of Being, Position, Honor, and Force; indeed, it is one of His Essential Attributes. [ii]
மேற்கண்ட இஸ்லாமியர்களின் மேற்கோள்களின் சுருக்கம் இது தான், அதாவது "அல்லாஹ் வானம் மற்றும் பூமிக்கு அப்பாற்பட்டவன், அவைகளுக்குள் அவன் அடங்கமாட்டான், அவனை அவைகளுக்குள் அடக்கவும் முடியாது" என்பதாகும். அல்லாஹ் யார் என்பதை ஓரளவிற்கு இப்போது புரிந்துக்கொண்டு இருப்பீர்கள்.
பைபிளின் இறைவன் பற்றி இப்போது சுருக்கமாக காண்போம்.
பைபிளின் இறைவன் அனைத்தையும் படைத்தார். கிறிஸ்தவத்தில் இருக்கும் ஒரு விசேஷம் என்னவென்றால், வானம் பூமி மற்றும் எல்லாவற்றையும் படைத்த இறைவன், தன் படைப்பிற்குள் நுழையவும் அவருக்கு வல்லமை உண்டு என்பதாகும். அவர் ஆதாமுக்கு காணப்பட்டார் (ஆதியாகமம் 3:8), மோசேவோடு ஒரு மலையில் பேசினார் (யாத்திராகமம் 19:3), சாலொமோன் கட்டிய தேவாலயத்தின் பிரதிஷ்டை நாளன்று, அனைத்து இஸ்ரவேலர்களின் மத்தியில் தேவாலயத்தில் மகிமையாக இறங்கினார் (1 இராஜாக்கள் 8:11). இவைகள் அனைத்தையும் காட்டிலும், மனித இனத்தை இரட்சிக்கும் படியாக, அவர் மனிதனாக இவ்வுலகத்தில் வந்தது முத்துக்களால் பொறிக்கப்படவேண்டிய விஷயம். ஒரு வித்தியாசமான சூழ்நிலையில் அவர் உலகில் வந்தார் (மத்தேயு 1:18), இறைவனாக இருந்தும் ஒரு குழந்தையாக பிறந்தார், மேலும் மற்ற பிள்ளைகளைப் போலவே வளர்ந்தார்.
அல்லாஹ்வைப் பற்றி சொல்லும்போது, "நாம் அவரை நம் ஐம்புலங்களால் உணரமுடியாது" என்று பார்க்கிறோம். ஆனால், இயேசுவின் சீடர்கள் தங்கள் ஐம்புலங்களால் இறைவனை உணர்ந்தார்கள், சுவாசித்தார்கள், தொட்டார்கள், பேசினார்கள். இதனை அவர்கள் சாட்சியாக பகிர்ந்தார்கள். பைபிளின் இறைவன் தான் படைத்த படைப்பின் மத்தியிலேயே ஒரு மனிதனாக இறங்கிவந்தார். அவர் தம் சீடர்களுக்கு காணப்பட்டார், அவர்களோடு பேசினார், அவர்களின் காதுகள் இறைவனின் பேச்சை நேரடியாக கேட்டன. இப்படி பல வகையில் பைபிளின் இறைவன் இப்பூவுலகில் உலாவியதை சீடர்கள் கண்டு களித்தார்கள். ஒரு சந்தர்ப்பத்தில், தோமா என்ற சீடர், இயேசுவின் காயங்களை தொட்டுப்பார்க்க விரும்பினார் (யோவான் 20:25).
இவ்விவரங்கள் 1 யோவான் 1:1-2ம் வசனங்களில் இரத்தினச் சுருக்கமாக விளக்கப்பட்டுள்ளது.
ஆதிமுதல் இருந்ததும், நாங்கள் கேட்டதும், எங்கள் கண்களினாலே கண்டதும், நாங்கள் நோக்கிப்பார்த்ததும், எங்கள் கைகளினாலே தொட்டதுமாயிருக்கிற ஜீவவார்த்தையைக்குறித்து உங்களுக்கு அறிவிக்கிறோம். அந்த ஜீவன் வெளிப்பட்டது; பிதாவினிடத்திலிருந்ததும், எங்களுக்கு வெளிப்பட்டதுமான நித்தியமாயிருக்கிற அந்த ஜீவனை நாங்கள் கண்டு, அதைக்குறித்துச் சாட்சிகொடுத்து, அதை உங்களுக்கு அறிவிக்கிறோம். (1 யோவான் 1:1-2)
அல்லாஹ் மிகவும் வல்லமை மிக்கவன், அவன் தான் படைத்த படைப்பிற்குள் வரமுடியாது என்று முஸ்லிம்கள் சொல்லக்கூடும். இப்படி முஸ்லிம்கள் சொல்வார்களானால், அல்லாஹ் பலவீனமானவன் என்று அர்த்தமாகிறது. அதாவது அல்லாஹ்வினால் தான் படைத்த படைப்பிற்குள்ளே வருவதற்கு முடியாத அளவிற்கு பலவீனமானவன் என்று சொல்லும் படி ஆகிவிடுகிறது. வேறுவகையில் சொல்வதானால், தன் படைப்பிற்குள் வருவதற்கு அல்லாஹ்வினால் முடியாது, அவ்வளவு பலவீனமானவனாக அல்லாஹ் இருக்கிறான் என்று முஸ்லிம்கள் ஒப்புக்கொள்வதாக ஆகிவிடுகிறது.
ஒரு வேலையை செய்யமுடியாத அளவிற்கு அல்லாஹ் பலமுள்ளவன் என்றுச் சொல்வது, அவன் பலவீனமானவன் என்று சொல்வதற்கு சமமாகும் (Being "too powerful" to accomplish something is equivalent to not being able to do it.).
இறைவன் சர்வ வல்லவர் ஆவார், எதுவும் அவரை பலவீனப்படுத்தாது. அவர் எவைகளை செய்ய விரும்பினாலும், அது தடைப்படாது. அவர் விரும்பினால் தன் வல்லமையை இழக்காமல் தன் படைப்பிற்குள் மனித உருவத்தில் நுழைய முடியும், இது அவருக்கு சுலபமான காரியமாகும். இதனை கிறிஸ்தவத்தில் காணலாம். இதைத்தான் இயேசுவும் செய்துக் காட்டினார்.
முடிவுரையாக, கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாமில் மற்றொரு வித்தியாசத்தை நாம் கண்டுள்ளோம். பைபிளின் இறைவனும், குர்-ஆனின் இறைவனும் நேர் எதிராக நடந்துக் கொண்டுள்ளார்கள். பைபிளின் தேவன் தாம் சர்வ வல்லவர் என்பதை தன் படைப்பில் (பூமியில்) ஒரு மனிதனாக வந்தும், தம் வல்லமையை இழக்காமல் தன் தெய்வீகத்தை நிருபித்தார். குர்-ஆனின் அல்லாஹ், தான் வல்லமையை இழக்கவேண்டி வருமோ என்று அஞ்சி, தன் படைப்பிற்குள் நுழைய மறுக்கிறார்.
அடிக்குறிப்புக்கள்:
ஆங்கில மூலம்: http://unravelingislam.com/blog/?p=357
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக