The Second Pledge of 'Aqaba
ஆசிரியர்: ராபர்ட் ஸீவர்ஸ்
நான் என் தளத்தில் பதிக்கும் கட்டுரைகளில், பொதுவாக தவிர்க்கும் ஒரு தலைப்பு உண்டு, அது இஸ்லாமிய ஜிஹாத் ஆகும். இந்த ஜிஹாத் பற்றி ஆய்வு செய்து, நேர்த்தியாக விவரங்களை தொகுத்து எழுதுவதற்கு அனேக கிறிஸ்தவ அறிஞர்கள் இருக்கிறார்கள். ஆனால், இஸ்லாமின் இறையியல் பற்றி ஆய்வு செய்து, சத்தியத்தை உலகிற்கு எடுத்துச் சொல்வதற்காக கர்த்தர் என்னை அழைத்திருக்கிறார். இஸ்லாமிய ஜிஹாதை மேலோட்டமாக பார்க்கும் போது, அது முழுக்க முழுக்க ஒரு அரசியல் மற்றும் நாடு சார்ந்த போராட்டமாக காணப்பட்டாலும், அதற்கும் இஸ்லாமிய இறையியலுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. ஜிஹாதை நாம் புரிந்துக் கொள்வதற்கு உதவியாக இருக்கும் என்பதற்காக முஹம்மதுவின் வாழ்க்கையில் நடந்த ஒரு நிகழ்ச்சியை, அதாவது 'இரண்டாவது அகபா உடன்படிக்கையை' ஆய்வு செய்வோம். அதோடு கூட இயேசுவின் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்ச்சியையும் ஒப்பிடுவோம். இக்கட்டுரை ஜிஹாதின் இறையியல் பக்கத்தை மட்டும் ஆய்வு செய்கிறது.
ஒருவர் இஸ்லாமை முழுவதுமாக அறிந்துக் கொள்ளவேண்டுமென்றால், அவர் இஸ்லாமின் சரித்திரத்தை புரிந்துக் கொள்ளவேண்டும். இஸ்லாமின் ஒவ்வொரு இறையியல் கோட்பாடும் முஹம்மதுவின் செயல்களோடு சம்மந்தப்பட்டுள்ளது. அதாவது முஹம்மதுவின் ஒவ்வொரு செயலும் இஸ்லாமுக்கு ஒரு புதிய கோட்பாட்டை கொடுத்துள்ளது. ஹதீஸ்களில் பதிவு செய்யப்பட்ட முஹம்மதுவின் வாழ்வில் நடந்த நிகழ்வுகள் அனைத்தும் ஒரு கோர்வையாக எழுதப்படவில்லை. இதனால், முஹம்மதுவின் வாழ்வில் நடந்த நிகழ்வுகளை சரியாக புரிந்துக் கொள்வது கடினமாக இருக்கும். ஆரம்ப முதல் முடிவு வரை நடந்த நிகழ்ச்சிகள் அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக சம்மந்தப்படுத்தி முஹம்மதுவின் வாழ்க்கையின் முழு படத்தை குழப்பமில்லாமல் புரிந்துக் கொள்ள அதிக நேரத்தை செலவழிக்கவேண்டும்.
இதுவரை கண்ட விவரங்களை மனதில் பதித்துக்கொள்ளுங்கள். இப்போது இஸ்லாமின் 'இரண்டாம் அகபா உடன்படிக்கையைப் பற்றி' இக்கட்டுரையில் சுருக்கமாக காண்போம். இஸ்லாமின் ஆரம்ப காலத்தில் முஹம்மது மக்காவில் வாழ்ந்தார், அப்போது முஸ்லிம்கள் அதிகமாக துன்புறுத்தப்பட்டார்கள். எனவே, முஸ்லிம்களில் சிலர் மதினாவிற்கும், இதர ஊர்களுக்கும் இடம் பெயர்ந்து விட்டார்கள். மதினா மக்களில் பலர் முஸ்லிம்களை அன்புடன் வரவேற்றார்கள்.
மக்காவில் முஹம்மதுவிற்கு தொல்லைகள் அதிகரித்துக் கொண்டு இருந்ததினால், அவர் மதினாவிற்கு தப்பித்துச் செல்ல முடிவு செய்தார். முஹம்மதுவின் உயிருக்கு ஆபத்து அதிகரித்துக் கொண்டே இருந்தது. அவர் உயிர் தப்பி மதினாவிற்கு செல்லவேண்டுமென்றால், ஒரு யுக்தியை கையாண்டு தப்பிக்கவேண்டும். இதற்கு அவருக்கு சிலரது உதவி தேவைப்படும், முக்கியமாக அவருக்கு நம்பிக்கைக்குரிய தோழர்களின் உதவியுடன் அவர் தப்பிச் செல்லவேண்டும். ஒரு வருடத்திற்கு முன்பாக "அகபாவின் முதலாம் உடன்படிக்கை" கையைழுத்து போடப்பட்டபோது, முஸ்லிம்கள் முஹம்மதுவிற்கு உதவி செய்வதாகவும், அவரை பாதுகாப்பதாகவும் வாக்கு கொடுத்து இருந்தார்கள்.
இப்னு இஷாக் தம்முடைய "முஹம்மதுவின் சரிதை" என்ற புத்தகத்தில் 'இரண்டாம் அகபா உடன்படிக்கைப்' பற்றி கீழ்கண்டவிதமாக பதிவு செய்துள்ளார். [1]
"அல்லாஹ் இறைத்தூதருக்கு சண்டையிடுவதற்கு அனுமதி கொடுத்தபோது,இரண்டாம் அகபா உடன்படிக்கையில் போர் செய்வது பற்றிய வாக்கியமும் புதிதாக சேர்க்கப்பட்டது. எனவே, முஸ்லிம்கள் அனைவரும் இனி இறைத்தூதரோடு சேர்ந்து மற்றவர்களோடு போர் புரிய வேண்டும். இறைத்தூதரையும், அல்லாஹ்வையும் எதிர்ப்பவர்களோடு முஸ்லிம்கள் போர் புரிந்தால், அல்லாஹ் அதற்கான நன்மையை அவர்களுக்கு சொர்க்கத்தில் கொடுப்பான். [2]
இரண்டாம் அகபா உடன்படிக்கை எழுதப்படுவதற்கு முன்பு வரை, இறைத்தூதர் போரிடுவதற்கும், இதர மக்களின் இரத்தம் சிந்துவதற்கும் அனுமதி கொடுக்கப்படாமல் இருந்தார். [3]
இஸ்லாமில் ஜிஹாத் என்ற விதையை விதைத்தது இந்த இரண்டாம் அகபா உடன்படிக்கையாகும். மேலும் இதனால் இஸ்லாமின் இறைத்தூதர் தைரியம் கொண்டு, தன் தோழர்களின் உதவியுடன் தன் உயிரை காத்துக் கொள்ள மக்காவிலிருந்து மதினாவிற்கு ஓடிச் சென்றார். இந்த நிகழ்வை 'ஹிஜ்ரா' என்றுச் சொல்வார்கள், இது இஸ்லாமிய சரித்திரத்தில் மிகவும் முக்கியமான நிகழ்வாகும் (இதைப் பற்றி மேலும் அறிய இந்த சிறிய கட்டுரையை படிக்கவும்). இந்த ஹிஜ்ரா 'இரண்டாம் அகபா உடன்படிக்கை' கையெழுத்தான பிறகு நடந்ததாகும்.
இதுவரை கண்ட இஸ்லாமிய விவரங்களுக்கும் கிறிஸ்தவத்திற்கும் என்ன சம்மந்தம்? இதனை அறிந்துக் கொள்ள, இஸ்லாமைப் போலவே, கிறிஸ்தவத்திலும் நடந்த ஒரு முக்கியமான நிகழ்வுக்கு முன்பு என்ன நடந்தது என்பதை நாம் அறிந்துக் கொள்ளவேண்டும். அப்போது தான் இவ்விரண்டு மார்க்கங்களின் அடிப்படை கோட்பாடுகளில் உள்ள வித்தியாசம் புரியும். இயேசுவின் வாழ்வில் நடந்த அதி முக்கிய நிகழ்வுகள் இரண்டு ஆகும். இயேசுவை சிலுவையில் அறையப்பட்ட நிகழ்வும் (ரோமர் 5:6) அவரது உயிர்த்தெழுதலும் ஆகும் (அப் 17:31). இந்த இரண்டு நிகழ்வுகளுக்கு முன்பாக நடந்த ஒரு நிகழ்ச்சி, இஸ்லாமுடைய இரண்டாம் அகபா உடன்படிக்கை போன்றதாகவே இயேசுவின் சீடர்களுக்கு காணப்பட்டது. அதாவது முஹம்மதுவின் தோழர்கள் தங்கள் உயிரை இஸ்லாமின் இறைத்தூதருக்காக பணயம் வைக்க வேண்டிய நிர்பந்தத்தில் இருந்தனர். இதே போல, இயேசுவின் சீடர்களும் தங்கள் உயிரை இயேசுவிற்காக ஊற்றவேண்டிய நிலையில் இருந்தனர். இயேசுவை கைது செய்ய ஒரு கூட்டம் வந்த போது, இயேசுவை சரீர பிரகாரமாக பாதுகாக்கவேண்டும் என்ற நிலையில் சீடர்கள் இருந்தனர். அந்த சமயத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியை லூக்கா 22:49-51ம் வசனங்கள் சுருக்கமாக விவரிக்கின்றன:
22:49 அவரைச் சூழநின்றவர்கள் நடக்கப்போகிறதைக் கண்டு: ஆண்டவரே, பட்டயத்தினாலே வெட்டுவோமா என்றார்கள். 22:50 அந்தப்படியே அவர்களில் ஒருவன் பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரனை வலதுகாதற வெட்டினான். 22:51 அப்பொழுது இயேசு: இம்மட்டில் நிறுத்துங்கள் என்று சொல்லி, அவனுடைய காதைத்தொட்டு, அவனைச் சொஸ்தப்படுத்தினார். (லூக்கா 22:49-51)
இயேசுவின் சீடர்கள் இயேசுவை காப்பாற்றுவதற்காக சண்டையிடவும் தயாராக இருந்தனர். நாம் சண்டையிடலாமா வேண்டாமா என்ற கேள்வி கேட்கப்பட்டது, ஆனால் பதில் வருவதற்கு முன்பாகவே ஒரு சீடர் காரியத்தில் இறங்கிவிட்டார், பட்டயத்தை எடுத்து வீசினார், அதனால் ஒரு காவலாளியின் காது வெட்டப்பட்டது. ஆனால், இயேசு குறிக்கிட்டு, அங்கு நடக்க இருந்த தீய நிகழ்வை தலைகீழாக மாற்றிவிட்டார். இயேசு தம் பாதுகாப்பிற்காக சீடர்கள் சண்டையிடவேண்டும் என்று கேட்டுக் கொள்ளவில்லை. அதற்கு பதிலாக, பட்டயத்தை கீழே போடுங்கள், சண்டையை நிறுத்துங்கள் என்று கட்டளையிட்டார். இயேசுவின் சீடர்கள் தங்கள் பட்டயங்களாலே தமக்கு பாதுகாப்பு அளிக்க முயலக்கூடாது, ஏனென்றால், தாம் ஒரு வித்தியாசமான இராஜாவாக இருக்கிறார் என்பதை இயேசு தெளிவுப்படுத்தினார் (யோவான் 18:36). சாதாரண இராஜாக்களை பாதுகாப்பது போல, தன்னை பாதுகாக்க முயலவேண்டாம் என்றும், தம்முடைய அரசு வித்தியாசமானது என்றும் அவர் கூறினார். இது தான் கிறிஸ்தவத்தின் அதி முக்கிய நிகழ்வுகளுக்கு முன்பாக நடந்த நிகழ்வு ஆகும்.
முடிவாக, கிறிஸ்தவத்திலும் இஸ்லாமிலும் அதி முக்கியமான நிகழ்வுகள் நடந்துள்ளன. இவ்விரண்டு மார்க்கங்களை பின்பற்றின முஹம்மதுவின் சஹாபாக்கள் மற்றும் இயேசுவின் சீடர்களுக்கு தங்கள் தலைவருக்கு, தங்கள் விசுவாசத்தை காட்டக்கூடிய சந்தர்ப்பங்கள் கிடைத்தன. இவ்விருவருக்கும் அந்த அதி முக்கியமான நிகழ்வுக்கு முன்பாகவே இந்த சந்தர்ப்பங்கள் ஒரே மாதிரியாக கிடைத்தன.
இஸ்லாமிலே, "தங்கள் இறைத்தூதர் முஹம்மதுவை காப்பாற்ற சண்டையிடுவோம்" என்ற கோஷத்தோடு, சஹாபாக்கள் இரண்டாம் அகபா உடன்படிக்கையில் கையெழுத்து போட்டனர். முஹம்மதுவிற்காக சண்டையிட ஒப்புக்கொண்டனர்.
ஆனால், கிறிஸ்தவத்திலே, இயேசுவின் சீடர்கள் தாங்கள் உயர்த்திய பட்டயங்களை தங்கள் தலைவரின் வார்த்தைகளுக்கு இணங்கி கீழே போட்டனர். இதன் மூலம் தங்கள் விசுவாசத்தை கெத்சமனே தோட்டத்தில் பறைசாற்றினர், இனி நாங்கள் பட்டயங்களை தூக்கி சண்டையிடமாட்டோம் என்று ஒப்புக்கொடுத்தனர்.
இந்நிகழ்ச்சிகளின் மூலம் இவ்விரு மார்க்கங்களின் அடிப்படை சத்தியங்கள் நமக்கு தெளிவாக தெரிகின்றது. தன்னை காப்பாற்ற சண்டையிடவும் தன் சீடர்கள் தயாராக இருக்கவேண்டும் என்று அவர்களிடம் ஒப்புதல் பெற்ற முஹம்மது எங்கே! தனக்கே ஆபத்து வந்தாலும், மேலே தூக்கிய பட்டயங்களை கீழே போடுங்கள் என்றுச் சொன்ன இயேசு எங்கே!
இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவத்தின் இறையியலை நாம் ஆய்வு செய்யச் செய்ய, இவ்விரண்டிற்கும் இடையே இருக்கும் தூரம் பெரியதாகிக்கொண்டே செல்கிறதே தவிர, இவை ஒன்றையொன்று சந்திக்கும் என்ற நம்பிக்கை நமக்கு வருவதில்லை.
அடிக்குறிப்புக்கள்
[2] Ishaq, M. i. (1955). Sirat Rasul Allah. (A. Guillaume, Trans.) Karachi: Oxford University Press, p208.
[3] ibid, p 212
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக