(ஆலன் அவர்களின் கடிதம் - ஜூலை 2014)
சில நேரங்களில் மக்கள் ஆச்சரிய குழப்பத்தில் இருப்பார்கள். நாம் கிறிஸ்தவர்களுக்கு கிறிஸ்தவத்தை ஆழமாக கற்றுக்கொடுக்கவேண்டாமா? ஏன் கிறிஸ்தவர்களுக்கு இஸ்லாமை கற்றுக்கொடுத்துகொண்டு இருக்கிறோம்? மேலும் ஏன் கிறிஸ்தவர்களை மசூதிக்கு அழைத்துச்செல்கிறோம்? என்பன கேள்விகளை மக்கள் கேட்கிறார்கள். இது ஒரு முக்கியமான கேள்விதான் என்பதில் சந்தேகமில்லை.
இந்த கேள்விக்கு ஓர் வரியில் பதில் சொல்லவேண்டுமென்றால், கிறிஸ்தவர்களுக்கு இஸ்லாம் பற்றிய அறிவை போதிப்பதற்கான ஒரு வழிமுறை தான் அவர்களை மசூதிக்கு அழைத்துச்செல்வது.
கிறிஸ்தவர்களுக்கு இஸ்லாம் பற்றி கற்றுக்கொடுத்து அவர்களுக்கு பயிற்சி அளிக்கும் போது, கொடுக்கவேண்டிய முக்கியமான பயிற்சி "மசூதி பயிற்சி" ஆகும். பொதுவாகவே, கிறிஸ்தவ ஊழியர்களின் வட்டாரங்களில் இது மிகவும் அரிதான ஒன்றாகும். இந்த "பயிற்சி" நம்மை அந்த பெரிய ஊழிய தரிசனத்தை சிறப்பாக செய்ய உதவிபுரிகின்றது (மத்தேயு 28:19-20). கிறிஸ்தவர்கள் எந்த மக்களுக்கு நற்செய்தியை அறிவிக்க விரும்புகிறார்களோ, அம்மக்களைப் பற்றி அவர்கள் அறிந்துக் கொள்ளவேண்டியது மிகவும் அவசியம் என்று நான் திடமான நம்புகிறேன். உலக அளவில் ஒவ்வொரு நாளும் 38,000 முஸ்லிம்கள் கிறிஸ்து இல்லாமல் மரித்துக்கொண்டு இருப்பதினால், முஸ்லிம்களுக்கு நற்செய்தியை அறிவிக்க நாம் கிறிஸ்தவர்களை தயார்படுத்தவேண்டும்.
இப்போது நமக்குத் தோன்றும் கேள்வி இது தான்:
கிறிஸ்தவர்களுக்கு இஸ்லாமின் இறையியலை கற்றுக்கொடுப்பதும், அவர்களை மசூதிக்கு அழைத்துச் செல்வதும் ஆபத்தானதல்லவா? இதன் மூலம் கிறிஸ்தவர்கள் முஸ்லிம்களாக மாறிவிட வாய்ப்பு உள்ளதல்லவா?
உண்மையில், இது நடக்காது, அதாவது இஸ்லாமை கிறிஸ்தவர்களுக்கு கற்றுக்கொடுப்பதினால், கிறிஸ்தவர்கள் இஸ்லாமுக்கு மாறமாட்டார்கள், ஆனால் இதற்கு எதிராகத் தான் நடக்கும். இது எப்படி என்பதை இப்போது பார்ப்போம்.
கடந்த மாதம், "இம்பாக்ட் 360 (Impact 360)" என்ற ஸ்தாபனத்தோடு கூட்டுச் சேர்ந்து அட்லாண்டாவிற்கு வெளியே வாழும் கிறிஸ்தவர்களுக்கு இஸ்லாம் பற்றிய பயிற்சி அளிக்க நான் சென்று இருந்தேன். இந்த பயிற்சியின் ஆரம்பத்தில் ஒரு சிறிய நாடகம் போன்றதொரு நிகழ்ச்சியை செய்துக்காட்டினேன். இதில் என்னை ஒரு முஸ்லிமாக கற்பனை செய்துக்கொள்ளுங்கள், என் பெயர் சையத் என்று நினைத்துக்கொள்ளுங்கள் என்றுச் சொன்னேன். நான் ஒரு குர்-ஆனை எடுத்துக்கொண்டு, இஸ்லாமுக்காக கிறிஸ்தவர்களோடு வாதம் புரிந்தேன். இப்படிப்பட்ட நாடக நடிப்புப் பயிற்சி ஏன்? முஸ்லிம்களை மசூதிகளில் நாம் சந்திக்கும் போது, அவர்கள் எப்படிப்பட்ட கேள்விகளை கேட்பார்கள், அவர்களின் செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்பதை கிறிஸ்தவர்கள் அறியவேண்டும் என்பதற்காகத் தான். இப்படிபட்ட பயிற்சி கொடுப்பதால், உண்மையாகவே முஸ்லிம்களை சந்திக்கும் போது, அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் கொடுக்க இது உதவியாக இருக்கும்.
இந்த நாடக பயிற்சியில், நான் (சையத்) முன்வைத்த கிறிஸ்தவத்திற்கு எதிரான வாதங்களுக்கும், கிறிஸ்தவ நம்பிக்கைப் பற்றிய கேள்விகளுக்கும் கிறிஸ்தவ மாணவர்கள் பதில் கொடுக்க முயன்றார்கள். அவர்களால் சில வேளைகளில் பதில் கொடுக்கமுடியாமல் போனது. இதனால் உண்டான நன்மைகள் என்னென்ன? இந்த பயிற்சியின் மூலமாக, இஸ்லாமை அதிகமாக கற்றுக்கொள்ள கிறிஸ்தவர்கள் ஆர்வம் காட்டினார்கள். மேலும், இதைத் தொடர்ந்து நான் இஸ்லாம் பற்றி கற்றுக் கொடுத்தவைகளை ஆர்வமாக கேட்டார்கள்.
அந்த நாடக ஒத்திகைக்கு பிறகு, நான் இஸ்லாமிய இறையியலின் அடிப்படை பாடங்களையும், முஸ்லிம்களின் இஸ்லாமிய கடமைகளையும் கற்றுக்கொடுத்தேன். கடைசியாக, முஸ்லிம்கள் கொடுக்கும் சவால்களுக்கு எப்படி பதில் அளிக்கவேண்டும் என்பதையும் கற்றுக்கொடுத்தேன். அதே நேரத்தில், இப்படிப்பட்ட உரையாடல்களில் நாம் அன்பாகவும், பொறுமையாகவும் பதில் சொல்லவேண்டியதின் அவசியத்தை அவர்களுக்கு போதித்தேன். இந்த பயிற்சி மற்றும் பாடங்களின் மூலமாக, கிறிஸ்தவர்கள் முஸ்லிம்களிடம் எப்படி பேசவேண்டும், எப்படி நற்செய்தி சொல்லவேண்டும் என்பதை ஓரளவிற்கு கற்றுக்கொண்டார்கள்.
கிறிஸ்தவர்கள் வகுப்பில் இஸ்லாமிய பாடங்களை கற்றுக்கொண்ட பிறகு, களத்தில் இறங்கி அவர்களுக்கு பயிற்சி அளிக்கலாம் என்று முடிவு செய்தேன். நாம் அனைவரும் ஜார்ஜியாவில் உள்ள மிகப்பெரிய "அல்-ஃபரூக் மஸ்ஜித்" என்ற மசூதிக்குச் சென்றோம். அந்த மசூதி 46,000 சதுர அடிகளில் கட்டப்பட்ட பிரமாண்டான கட்டிடமாகும். 1100 முஸ்லிம்கள் ஒன்றாக நின்று தொழுதுக்கொள்ளும் அளவிற்கு அது பெரியதாக உள்ளது. அந்த மசூதிக்குள் செல்வதற்கு முன்பாக, நாங்கள் எங்கள் காலணிகளை கழற்றிவிட்டோம். எங்களோடு வந்த கிறிஸ்தவ மாணவிகள் இஸ்லாமிய முறைப்படியான உடைகளை போட்டுக்கொண்டார்கள், அதாவது தலைமுடியை மறைத்துக்கொண்டார்கள்.
அந்த மசூதியின் ஒரு தலைவர், மசூதியை எங்களுக்கு சுற்றிக்காண்பித்தார். அதன் பிறகு முஸ்லிம்கள் தொழுதுக்கொள்ளும் அறையில் நாங்களும் அவர்களோடு உட்கார்ந்தோம். மேலும், அன்று ஒரு இஸ்லாமிய பிரசங்கத்தை (பயானை) நாங்கள் கேட்டோம். கடைசியாக, முஸ்லிம்கள் மக்காவிற்கு நேராக நின்று, தொழுதுக்கொண்டதை நாங்கள் அருகிலிருந்து பார்த்தோம். முஸ்லிம்கள் தொழுகையின் போது, உச்சரித்த குர்-ஆன் வசனங்கள் வந்திருந்த கிறிஸ்தவர்களை கவர்ந்தது, ஆனால் அவைகளுக்குள் ஒரு இருள் இருந்ததை காணமுடிந்தது.
தொழுகை முடிந்த பிறகு, இரண்டு முஸ்லிம் தலைவர்கள் எங்களை மேல்மாடிக்கு அழைத்துச் சென்று இஸ்லாம் பற்றி சொல்லிக்கொடுத்தார்கள். அவர்கள் சொல்லிக்கொண்டு இருந்த விவரங்களை என்னோடு வந்திருந்த கிறிஸ்தவ மாணவர்கள் சீக்கிரமாகவே புரிந்துக்கொண்டார்கள் மேலும் பல கேள்விகளையும் கேட்டார்கள். இந்த மாணவர்கள் என்னுடைய வகுப்பில் பல விவரங்களை ஏற்கனவே கற்றுக்கொண்டு இருந்தபடியினால், அவர்களுக்கு எந்த ஒரு பிரச்சனையும் அங்கு இருந்ததில்லை. எனவே, அவர்கள் பல கேள்விகளை அமைதியான முறையில் கேட்டு, இஸ்லாமை சொல்லிக்கொடுத்துக்கொண்டு இருந்தவர்களுக்கு சவால்களானார்கள. நாங்கள் அந்த மசூதியில் செலவிட்ட நேரம் அனைத்தும் சுவாரசியமாகவும், பயனுள்ளதாகவும் இருந்தது. அதன் பிறகு அந்த மசூதியிலிருந்து எங்கள் இடங்களுக்கு வந்தோம். வந்த பிறகு, அதுவரை நடந்த விவரங்களை நான் சுருக்கமாக அவர்களுக்கு விளக்கினேன், மேலும், அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில்களையும் கொடுத்தேன்.
சில கிறிஸ்தவர்களுக்கு இது ஒரு புதிய அனுபவமாக இருந்தது. இந்த அனுபவத்தின் மூலமாக நல்ல விளைவுகள் விளைந்தன. முதலாவதாக, இந்த அனுபவம் கிறிஸ்தவர்களுக்கு இஸ்லாம் மற்றும் முஸ்லிம்கள் பற்றிய விவரங்களை கற்றுக் கொடுத்தது. இயேசுவின் பிரதிநிதியாக இருக்கும் ஒவ்வொரு கிறிஸ்தவருக்கு இஸ்லாமை கோர்வையாகக் கற்றுக்கொள்வது முதலாவது முக்கியமான படியாகும். முஸ்லிம்களின் நம்பிக்கைகள், பழக்கவழக்கங்கள் மற்றும் கலாச்சார விவரங்களை அதிகமாக நீங்கள் அறிந்துக்கொண்டால், அவர்களுக்கு ஊழியம் செய்யும் போது, அது பயன்படும்.
இரண்டாவதாக, இப்படிப்பட்ட அனுபவங்கள் இயேசுவின் பெரிய ஊழிய அழைப்பை நிறைவேற்ற கிறிஸ்தவர்களுக்கு உதவி புரியும். ஒரு கிறிஸ்தவன் தான் சந்திக்க விரும்பும் மக்களை அறிந்துக்கொண்டால், அடுத்தபடியாக, அவர்களோடு நற்செய்தியை பகிர்ந்துக்கொள்ள களத்தில் தைரியமாக இறங்க முடியும். மேலும் 2 கொரிந்தியர் 5:18-20 வசனங்களில் சொல்லப்பட்டது போல, தேவனோடு அவர்களை ஒப்புரவாக்கும் ஊழியத்தைச் செய்ய தொடங்கலாம். இந்த மசூதி அனுபவம், கிறிஸ்தவர்களின் உள்ளத்தில் கொழுந்துவிட்டு எரிந்துக்கொண்டு இருக்கும் ஊழிய பாரத்தை இன்னும் அதிகமாக்கிவிட்டது. இதனால் தங்கள் கடமையைச் செய்ய கிறிஸ்தவர்கள் அதிக உற்சாகம் கொள்ளுவார்கள். அதே நேரத்தில், உலகத்தில் அதிகமாக கவனிப்பாரற்று இருக்கும் மக்களை சந்திக்க ஆயத்தப்படுவார்கள்.
மூன்றாவதாக, இந்த அனுபவம் இஸ்லாம் மற்றும் முஸ்லிம்கள் பற்றிய பல சந்தேகங்களை தீர்த்துவைக்கும். பொதுவாக மக்கள் முஸ்லிம்கள் பற்றி தவறாக நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். கதவுகள் மூடப்பட்ட மசூதிக்குள் பல இரகசியங்கள் இருக்கின்றன என்று சந்தேகிக்கின்றனர். மசூதிக்குள் கிறிஸ்தவர்களை அழைத்துச் சென்று, முஸ்லிம்களோடு பேசும் போதும், அங்கு என்ன நடக்கிறது என்பதை காணும் போதும் இப்படிப்பட்ட தவறான எண்ணங்கள் அனைத்தும் நீங்கிவிடுகின்றன. இதன் மூலமாக, நற்செய்தி சொல்லக்கூடிய வாசல் திறக்கப்படுகின்றது. மேலும் கிறிஸ்தவர்கள் இயேசுவைப் போன்று முஸ்லிம்களை நல்மக்களாக பார்க்க முடிகின்றது.
மசூதிக்குள் நாங்கள் நுழையும் போது, ஒரு முஸ்லிம் பெண் எங்களுடைய கிறிஸ்தவ மாணவ குழுவை வைத்த கண் எடுக்காமல் பார்த்துக்கொண்டு இருந்தார் (அப்பெண் முஸ்லிம் என்று எங்களுக்கு எப்படி தெரியும்? அப்பெண் இஸ்லாமிய உடையில் இருந்தார்). கிறிஸ்தவ விசுவாசிகளில் பலர் முஸ்லிம் பெண்களோடு பேசுவதற்கு பயப்படுகிறார்கள். அவர்களோடு பேதும் போது எதிர்ப்பாராத விதமாக, ஏதாவது மனம் நோகடிக்கும்படி பேசிவிட்டால் என்ன நடக்கும் என்ற பயம் உண்டு. ஆனால், ஆச்சரியப்படும் விதமாக, அந்த முஸ்லிம் பெண் எங்களோடு வந்த பெண் கிறிஸ்தவர்களோடு வந்து பேசினார், மேலும் தானும் மசூதிக்குள் எங்களோடு வருவதற்கு அனுமதி பெற்றுக்கொண்டு, எங்களோடு மசூதிக்குள் வந்தார்கள். எங்கள் மசூதி சுற்றுலாவின் போது, அப்பெண் எங்கள் பெண்களோடு சரளமாக பேசிக்கொண்டு வந்தார்கள், மிகவும் நட்புடனும், அன்பாகவும் பேசிக்கொண்டு வந்தார்கள். எனவே, மசூதிக்கு வந்து முஸ்லிம்களோடு பேசுவதினாலும், அந்த சூழலை பார்ப்பதினாலும், கிறிஸ்தவர்களுக்கு இருக்கும் பல தவறான எண்ணங்கள் மாறிவிடுகின்றன. இதனால், முஸ்லிம்களோடு பேசுவது ஒரு சுவாரசியமான பயமில்லாத ஒன்றாக கிறிஸ்தவர்களுக்கு மாறிவிடுகின்றது.
நான்காவதாக, மேற்கண்ட மசூதி சுற்றுப்பயணமானது, முஸ்லிம்-கிறிஸ்தவர்களிடையே இருக்கும் நட்புறவை பலப்படுத்த உதவுகிறது. பலப்டுத்துகிறது என்றுச் சொல்வதைவிட சரிப்படுத்துகிறது என்றுச் சொல்லலாம். பல வேளைகளில், கிறிஸ்தவர்கள் பொதுவான இறையியல் கோட்பாடுகளின் அடிப்படையில் இவ்விரு பிரிவினருக்கிடையே "பாளங்களை" அமைக்க முயலுகின்றார்கள். அதாவது, நம் இரு மார்க்கங்களில் உள்ள சில பொதுவான விவரங்களை முன்னிறுத்தி, நம் மார்க்கங்கள் ஒன்றையே போதிக்கின்றன என்று சொல்கிறார்கள். இதன் மூலமாக முஸ்லிம்களை திருப்திபடுத்த, அவர்களின் சுவைக்கு ஏற்றபடி நம் அடிப்படை கோட்பாடுகளை அவர்களுக்கு போதிக்கிறார்கள். முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு இடையே சாந்தியை உருவாக்குவதற்கு, இஸ்லாமையும், கிறிஸ்தவத்தையும் நாம் ஒட்டப்பார்த்தால், அதனால் எந்த பயனுமில்லை. மார்க்கங்களை ஒட்டமுயலாமல், கிறிஸ்தவர்களையும், முஸ்லிம்களையும் ஒட்டினால் தான் நல்ல பயனுண்டாகும். இரு நேர் எதிர் மார்க்கங்களை தீவிரமாக பின்பற்றும் நபர்கள் (கிறிஸ்தவர்கள் & முஸ்லிம்கள்) ஏன் நல்ல நண்பர்களாக இருக்கமுடியாது? நிச்சயமாக முடியும்.
கிறிஸ்தவர்களை மசூதிக்குள் அழைத்துச் செல்லும் போது, இவ்விருவருக்கும் இடையே இருக்கும் இடைவெளி நிச்சயமாக குறையும்.
ஐந்தாவதாக, முக்கியமான பயன்பாடு என்னவென்றால், கிறிஸ்தவர்கள் கிறிஸ்தவ இறையியலை இன்னும் ஆழமாக கற்க இப்பயணம் உதவி புரியும். அதாவது, இஸ்லாம் என்பது இன்னொரு மதம் அல்ல, அது "கிறிஸ்தவதுக்கு எதிரான மதம் (Anti-Christian)" ஆகும். அதாவது இஸ்லாமின் கோட்பாடுகள் கிறிஸ்தவ கோட்பாடுகளை நேரடியாக எதிர்க்கிறது. இஸ்லாம் திரித்துவ தேவனை எதிர்க்கிறது, இயேசுவின் பிறப்பின் நோக்கத்தை எதிர்க்கிறது, அவரது மரணம், உயிர்த்தெழுதல் மற்றும் அவர் கொடுக்கும் இரட்சிப்பை எதிர்க்கிறது. எனவே, இஸ்லாம் ஒரு மதம் அல்ல, அது ஒரு அந்திக்கிறிஸ்தவ மதமாகும். கிறிஸ்தவர்கள் முஸ்லிம்களோடு பேசும் போது, சில நொடிகளிலேயே, தங்கள் கிறிஸ்தவ விசுவாசத்தை காத்துக்கொள்ள, பதில்களை சொல்லவேண்டிய நிலையில் இருப்பார்கள். எனவே, கிறிஸ்தவர்களே, தங்கள் இறையியலை இன்னும் ஆழமாக கற்றுக்கொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறார்கள். இப்படிப்பட்ட ஊந்துதல் எப்போது கிறிஸ்தவர்களுக்கு கிடைக்கிறது? அவர்கள் முஸ்லிம்களோடு உரையாடும் போது அதன் அவசியத்தை கண்டுக்கொள்வார்கள்.
கடைசியாக, இந்த மசூதிப்பயணம் கிறிஸ்தவர்களுக்கு ஒரு நம்பிக்கையைத் தருகிறது. நீங்கள் முஸ்லிம்களோடு உரையாடி, இஸ்லாமிய மதத்தை படித்து கற்றுக்கொண்டு, அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு எப்படி பதில் சொல்லவேண்டும் என்று அறிந்துக் கொண்டு, அவர்களின் மசூதிக்குள் சென்று அங்கு நடக்கும் தொழுகையை பார்த்து, முஸ்லிம்களின் போதனைகளை கேட்கும் போது, உங்களுக்கு நற்செய்திச் சொல்ல தைரியமும், உற்சாகமும் வந்துவிடும். இனி முஸ்லிம்களுக்கு நற்செய்தி அறிவிப்பதற்கு உங்களுக்கு எந்த ஒரு தடையும் இல்லை என்று நீங்கள் உணர ஆரம்பிப்பீர்கள். இயேசுவின் கடைசி கட்டளையாகிய உலகத்துக்குள் சென்று மக்களுக்கு நற்செய்தியை அறிவியுங்கள் என்ற கட்டளையை ஒரு புதிய வழியில் நிறைவேற்ற உற்சாகம் வரும். இது தான் இந்த பயணத்தின் மூலம் கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும்.
உண்மையில் கிறிஸ்தவர்களை மசூதிக்குள் அழைத்துச் சென்று அவர்களுக்கு இஸ்லாமை கற்றுக்கொடுக்கும் இந்தச் செயல், இயேசுவின் சீடர் பேதுருவிற்கும், பவுலடியாருக்கும், இயேசுவிற்கும் புதிதாகத் தோன்றாது. இவர்கள் அனைவரும் இப்படிப்பட்ட சூழலில் தங்களை தாங்களே வைத்துக்கொண்டு, அதாவது மற்றவர்களின் வட்டத்திற்குள் வைத்துக்கொண்டு தான் ஊழியம் செய்தார்கள். நற்செய்தி என்பது உலக மக்கள் அனைவருக்கும் கொண்டுச் செல்லவேண்டிய ஒன்றாகும். அவர்கள் தேவன் கொடுக்கும் மன்னிப்பை பெறவேண்டும் என்பது தான் சாராம்சம். முஸ்லிம்கள் தேவன் தரும் இந்த மன்னிப்பை பெறவில்லை என்பது மட்டுமல்ல, அவர்கள் தீவிரமாக அந்த மன்னிப்பை தெரிந்தே புறக்கணித்துக்கொண்டு இருக்கிறார்கள் என்பது தான் கசப்பான உண்மை. உண்மையில் சொல்லவேண்டுமென்றால், இந்த கட்டுரையை நீங்கள் படித்த நேரம் தொடங்கி, இப்போது முடிக்கும் வரைக்கும், 79 முஸ்லிம்கள் தேவன் கொடுக்கும் அன்பையும், மன்னிப்பையும் பெறாமல் தங்கள் நித்தியத்தை கழிக்க சென்றுவிட்டிருப்பார்கள் என்பது மனதை நோகடிக்கும் நிஜமாகும். இதே நிலை அடுத்த மூன்று நிமிடங்களிலும் நடக்க இருக்கிறது. மறுபடியும் அடுத்த மூன்று நிமிடங்களில் கூட இதே நிலை... இது தொடர்ந்துக்கொண்டு இருக்கப்போகிறது.
நாம் ஏன் நற்செய்தி அறிவிக்கவேண்டும் என்பதை இப்போது நீங்கள் சரியாக புரிந்துக்கொண்டு இருந்திருப்பீர்கள். இது ஒரு குறிப்பிட்ட சாராரின் (மக்களின்) பிரச்சனை அல்ல. இது ஏதோ ஒரு சிறிய பிரச்சனை அல்ல. இது தான் மிகப்பெரிய ஒரே பிரச்சனை என்பதை நாம் அறியவேண்டும். இதன் விளைவை அளவிடமுடியாது. இது நற்செய்தி சம்மந்தப்பட்டது, இயேசுவின் வாழ்வு சம்மந்தப்பட்டது. இதன் அவசியத்தை அறிந்தபடியால் தான் நான் கிறிஸ்தவர்களை மசூதிக்கு சுற்றுப்பயணமாக அழைத்துச் செல்கிறேன்!
Author: Alan Shlemon - A speaker for Stand to Reason
To know about the Author, visit: www.str.org/training/speakers/alan-shlemon
Translation: Answering Islam Tamil Team
ஆலன் ஸ்லெமன் அவர்களின் கட்டுரைகள்
உமரின் கட்டுரைகள்/மறுப்புக்கள் பக்கம்
Source: http://www.answering-islam.org/tamil/authors/umar/alan_shlemon/why-take-christians-to-mosques.html
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக