பதில்:
ஒரு முஸ்லிம் பின்னணியிலிருந்து இயேசுவை பின்பற்ற முடிவு செய்தவர்கள் கேட்கும் முதலாவது கேள்வி இதுவாகத் தான் இருக்கும். ஏனென்றால், ஹலால் ஹராம் என்கின்ற இவ்விருவார்த்தைகள் தான் முஸ்லிம்களை ஒவ்வொரு நாளும் நடத்துகின்றன. ஒரு முஸ்லிம் எதைச் செய்ய நினைத்தாலும், அது ஹலாலா? ஹராமா? அல்லது சுன்னத்தா? என்று தெரிந்துக்கொண்டு செயல்படுகின்றான்.
- ஹலால் - அனுமதிக்கப்பட்டவை
- ஹராம் - செய்யக்கூடாதவை
- சுன்னத் - 'செய்தால்' நன்மை கிடைக்கும், செய்யாவிட்டால் பாவமில்லை.
இதே மனநிலையோடு இருப்பதினால் தான் நீங்களும் இந்த கேள்வியை கேட்டுள்ளீர்கள். உங்களுக்கு ஒரு நற்செய்தி சொல்லப்போகிறேன், அது என்னவென்றால், 'நீங்கள் இயேசுவை பின்பற்ற முடிவு செய்தபடியினால்', இனி நீங்கள் செய்ய விரும்பும் ஒவ்வொரு செயலுக்காக:
அ) இமாம்களைத் தேடிச் செல்லவேண்டியதில்லை.
ஆ) அறியாமையினால் தவறாக ஒரு செயலைச் செய்துவிட்டால், அல்லாஹ் தண்டித்துவிடுவானோ! என்று பயப்படத்தேவையில்லை.
இ) எந்த இஸ்லாமிய அறிஞர் சொல்வதைக் கேட்பது? ஒரு குறிப்பிட்ட இஸ்லாமிய அறிஞரின் இயக்கத்துடன் இணைந்து வாழ்ந்தால், அவரை மற்ற இயக்கத்தினர் காஃபிர்கள் என்று குற்றம்சாட்டுகிறார்கள். இவர்களை அவர்கள் 'காஃபிர்கள்' என்கிறார்கள். எனவே எந்த அறிஞர் சொல்வது 'உண்மை இஸ்லாம்' என்று புரியாமல் குழம்பத்தேவையில்லை.
ஈ) சுருக்கமாகச் சொல்வதென்றால், நீங்கள் முழுவதுமாக விடுதலை பெற்றுவிட்டீர்கள், அதாவது இஸ்லாமை பின்பற்றிக்கொண்டு இருந்தவரை நீங்கள் அடிமையாக இருந்தீர்கள் என்று அர்த்தம்.
கிறிஸ்தவத்தில் ஹலால் ஹராம் இல்லையா?
நீங்கள் விடுதலையாகிவிட்டீர்கள் என்றுச் சொன்னால், 'இனி நீங்கள் உங்கள் விருப்பபடி எப்படியும் வாழலாம்' என்று அர்த்தமில்லை. 1947ம் ஆண்டு நம் இந்தியா ஆங்கிலேயர்களின் ஆட்சியிலிருந்து விடுதலைப் பெற்றது. இதன் அர்த்தம் என்ன? இனி ஒவ்வொரு இந்தியனும் தனக்கென்று சட்டங்களை வகுத்துக்கொள்ளாமல், எல்லா வித சட்ட விரோத செயல்களையும் செய்யலாம் என்று அர்த்தமா? இல்லை. சுதந்திர இந்தியாவில், 1947லிருந்து காவல்துறையும், நீதிமன்றமும், சிறைச்சாலைகளும் இருக்காது என்று அர்த்தமா? இல்லை.
'விடுதலை' என்றால், நம்மை வெளிநாட்டவன் ஆளாமல், நம்மை நாமே ஆண்டுக்கொள்வதாகும். 'விடுதலை' என்றால் தவறான சட்டங்களை நீக்கிவிட்டு, சரியான சட்டங்களை நியமித்துக்கொண்டு வாழ்வதாகும். நமக்கென்று ஒரு அரசியல் சட்டத்தை எழுதிக்கொண்டு, நம்மை நாமே ஆண்டுக்கொண்டு இருக்கிறோம். எனவே, இஸ்லாமிலிருந்து விடுதலை பெற்றவர்களுக்கும், கிறிஸ்தவம் எது ஹலால்? எது ஹராம்? என்று கற்றுக்கொடுக்கிறது. ஆனால், இஸ்லாமின் ஹலால் ஹராமுக்கும், கிறிஸ்தவத்தின் ஹலால் ஹராமுக்கும் இடையே மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது. அவைகளை புரிந்துக்கொள்ள மேற்கொண்டு படியுங்கள்.
1) கிறிஸ்தவர்களின் முதலாவது சட்டம்: பத்து கட்டளைகள்
கிறிஸ்தவர்களுக்கும் ஹலால்/ஹராம் (அனுமதிக்கப்பட்டது, தடுக்கப்பட்டது) கட்டளைகள் உள்ளன. பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசி மோசேயின் மூலமாக, தேவன் கொடுத்த பத்து கட்டளைகளை கிறிஸ்தவர்கள் தவறாமல் பின்பற்றவேண்டும்.
அவைகளை சுருக்கமாக இங்கு தருகிறேன்:
1. உன் தேவனாகிய கர்த்தர் நானே. என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்கவேண்டாம்.
2. உன் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தை வீணிலே வழங்காதிருப்பாயாக;
3. ஓய்வுநாளைப் பரிசுத்தமாய் ஆசரிக்க நினைப்பாயாக
4. உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக
5. கொலை செய்யாதிருப்பாயாக.
6. விபசாரம் செய்யாதிருப்பாயாக.
7. களவு செய்யாதிருப்பாயாக.
8. பிறனுக்கு விரோதமாகப் பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக
9. பிறனுடைய மனைவியை இச்சியாதிருப்பாயாக
10. பிறனுடைய யாதொன்றையும் இச்சியாதிருப்பாயாக.
(யாத்திராகமம் 20:2-17 & உபாகமம் 5:6-21)
இந்த பத்து கட்டளைகளை நீங்கள் கடை பிடிக்கவேண்டும், 'செய்' என்றுச் சொன்னதை செய்யவேண்டும் (ஹலால்), 'செய்யாதே' என்றுச் சொன்னதை செய்யக்கூடாது (ஹராம்).
இவ்வளவு தானா! பத்து கட்டளைகளை மட்டுமே பின்பற்றினால் போதுமா? ரொம்பவும் ஈஸியாக இருக்கின்றதே! என்று நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்! நான் முஸ்லிமாக இருக்கும் போது மூட்டை கணக்கில் கட்டளைகளை பின்பற்றிக்கொண்டு இருந்தேனே! என்று ஆச்சரியப்படுகிறீர்கள் அல்லவா! இதனால் தான் நான் சொன்னேன் 'நீங்கள் விடுதலையாகியுள்ளீர்கள்' என்று.
இன்னொரு நற்செய்தியையும் உங்களுக்குச் சொல்லட்டுமா! இந்த பத்து கட்டளைகளையும் மிக்ஸியில் போட்டு, இயேசு இரண்டே கட்டளைகளாக மாற்றிவிட்டார்! அடுத்த பாயிண்டை படியுங்கள், நீங்கள் துள்ளி குதிப்பீர்கள்!
2) கிறிஸ்தவர்களின் இரண்டாவது சட்டம்: இரண்டு கட்டளைகள்
மேற்கண்ட 10 கட்டளைகள் மட்டுமல்ல, பழைய ஏற்பாட்டிலுள்ள இதர கட்டளைகள் அனைத்தும் இரண்டே கட்டளைகளில் அடக்கிவிட்டார் இயேசு.
• முதலாம் பிரதான கட்டளை: உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக.
• இரண்டாம் பிரதான கட்டளை: உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக (மத்தேயு 22:37-40)
இவ்வளவு தான் கிறிஸ்தவம். இக்கட்டளைகளுக்கு மேலேயும் ஒன்றுமில்லை, கீழேயும் ஒன்றுமில்லை.
ஒரு சந்தேகம்: இப்போது நான் எத்தனை கட்டளைகளை பின்பற்றவேண்டும்? 10 (அ) 2:
பழைய ஏற்பாடு 10 கட்டளைகள் என்றுச் சொல்கிறது, புதிய ஏற்பாடு 2 கட்டளைகள் என்கிறது, மொத்தம் 12 கட்டளைகள் ஆகிறதல்லவா? எனவே, நான் 12 கட்டளைகளை பின்பற்றினால் போதுமா! என்ற கேள்வி எழும்.
இயேசு அந்த இரண்டு கட்டளைகள் பற்றி சொல்லும் போது, என்ன கூறினார் என்பதை கவனிக்கவேண்டும்:
இவ்விரண்டு கற்பனைகளிலும் நியாயப்பிரமாணம் முழுமையும் தீர்க்கதரிசனங்களும் அடங்கியிருக்கிறது என்றார்(மத்தேயு 22:40)
(கவனிக்கவும்: நம் பைபிள் தமிழாக்கத்தில் 'கட்டளை' என்ற வார்த்தையை, 'கற்பனை' என்று (பிழையாக) மொழியாக்கம் செய்துள்ளார்கள். நாம் பொதுவாக பயன்படுத்தும் 'கற்பனை (Imagination)'அல்ல இது என்பதை மனதில் வைக்கவேண்டும். இவ்வசனத்தில் கற்பனை என்றால் கட்டளை (commandment) என்று அர்த்தம்).
இவ்விரண்டு கட்டளைகளை மட்டும் பின்பற்றினால் போதும், இவைகளுக்குள் அனைத்து பழைய ஏற்பாட்டுக் கட்டளைகளும் அடங்கிவிடும் என்கிறார். ஆக, நாம் 2 கட்டளைகளை மட்டுமே பின்பற்றினால் போதும்.
எப்படி 2 கட்டளைகளை பின்பற்றினால், 10 கட்டளைகளை பின்பற்றுவது போல ஆகும்? என்ற கேள்வி உங்களுக்கு எழலாம்.
கீழேயுள்ள படத்தைப் பார்க்கவும். பழைய ஏற்பாட்டின் 10 கட்டளைகளை இரண்டாக பிரிக்கலாம்.
- கட்டளைகள் 1 - 3: மனிதன் தேவனுக்காக செய்யவேண்டியவைகள்.
- கட்டளைகள் 4 - 10: மனிதன் இதர மனிதர்களுக்காக செய்யவேண்டியவைகள்.
படம் 1: 10 கட்டளைகள் & 2 கட்டளைகள்
இயேசுவின் வார்த்தைகளின் படி, ஒரு மனிதன், தேவனை தன் முழு இருதயத்தோடும், முழு பலத்தோடும், முழு மனதோடும் அன்பு கூர்ந்தால், அவன், தேவனுக்கு துக்கம் உண்டாக்கும் எந்த ஒரு செயலையும் செய்யமாட்டான். இதன் அர்த்தமென்ன? தேவன் சொன்ன ஆயிரம் கட்டளைகளை நிறைவேற்றுவதற்கு பாடுபடுவதைக் காட்டிலும், அந்த தேவனை முழு மனதோடு அன்பு கூர்ந்துவிட்டால் போதும், அந்த ஆயிரம் கட்டளைகளை நாம் மகிழ்ச்சியாக பின்பற்றிவிடுவோம், அவைகளை பாரமாக நினைக்கமாட்டோம், அன்புக்கு அவ்வளவு வலிமையுள்ளது.
இதே போல, ஒரு மனிதன், தன்னை நேசிப்பதைப்போல, பிறனையும் நேசிக்க ஆரம்பித்துவிட்டால் போதும், அவன் 10 கட்டளைகளில் உள்ள 7 கட்டளைகளை தானாகவே பின்பற்றிவிடுவான். தன் அயலகத்தார்களை நேசிப்பவன், அவர்களின் பொருட்களை திருடமாட்டான் (கட்டளை 7), அவர்களுக்கு விரோதமாக பொய் சொல்லமாட்டான் (கட்டளை 8), அவர்களின் மனைவியையோ, பொருட்களையோ இச்சித்து பாவம் செய்யமாட்டான் (கட்டளை 9 & 10). தன் பெற்றோர்களை தன்னைப்போலவே நேசிப்பவன், அவர்களை கனப்படுத்துவான் (கட்டளை 4). எனவே, ஆயிரம் கட்டளைகளை பின்பற்ற முயலுவதைக் காட்டிலும், ஒரே கட்டளையை முழு மனதோடு பின்பற்றிவிட்டால் (தன்னைப் போல அன்பு கூறிவிட்டால்) போதும், அனைத்து இதர கட்டளைகளும் நிறைவேற்றப்படும்.
ஒருவேளை பைபிளில் உள்ள அனைத்து கட்டளைகளையும் கூட்டும் போது, நமக்கு 1000 கட்டளைகள் வருகின்றது என்று வைத்துக்கொள்வோம் (திருடாதே, கொலை செய்யாதே, விபச்சாரம் செய்யாதே, பொய் சொல்லாதே, தீமை செய்யாதே, மற்றவர்களுக்கு தடங்கலாக இருக்காதே, உண்மை பேசு, நீதி செய், நன்மை செய், தேவனை மட்டுமே வணங்கு, வேதத்தை வாசி போன்றவை . . .) இவைகள் அனைத்தையும் வகைப்படுத்தினால், முதலாவதாக, தேவனுக்காக நாம் செய்யக்கூடிய கடமைகளாக (கட்டளைகளாக) இருக்கும், இரண்டாவதாக, இதர மக்களுக்காக நாம் செய்யக்கூடிய கடமைகளாக (கட்டளைகளாக) இருக்கும். எனவே, தேவனை முழு மனதோடு நேசித்து நடந்துக்கொண்டால் போதும், அதே போல, மற்றவர்களின் மனது புண்படாமல் நடந்துக்கொண்டால் போதும். இவ்விரண்டையும் செய்ய ஒரே வழி, தேவன் மீதும், மனிதன் மீதும் முழு மனதோடு அன்பு செலுத்துவது.
ஆக, கிறிஸ்தவத்தில் 'ஹலால்' 'ஹராம்' உண்டா? என்று கேட்டால், 'ஆமாம்' உண்டு என்பது தான் பதில். ஆனால், ஹலாலைச் செய்து, ஹராமை எப்படி விட்டுவிடுவது? இக்கேள்விக்கு பதில் 'அன்பு கூறுவது தான் சுலபமான மற்றும் சரியான வழி'.
இதனால் தான் நான் இந்த பதிலின் ஆரம்பத்தில், 'நீங்கள் விடுதலை ஆகிவிட்டீர்கள்' என்றுச் சொன்னேன்.
முடிவுரை:
கிறிஸ்தவத்தில் ஹலால், ஹராம் உள்ளதா என்று கேள்வி கேட்ட சகோதரருக்கு எழுதிக்கொள்வது. முதலாவது, நீங்கள் இஸ்லாமில் கற்றுக்கொண்டதை கைவிடவேண்டும், மனதளவில் மாற்றம் கொண்டுவரப்படவேண்டும். 'கிறிஸ்தவம்' இஸ்லாம் போன்ற மார்க்கமல்ல, அது வித்தியாசமானது, சுலபமானது அதே நேரத்தில் இஸ்லாமை விட பரிசுத்தமானது, மற்றும் உண்மையானது.
- இஸ்லாம் - கிரியை மார்க்கம்.
- கிறிஸ்தவம் - கிருபை மார்க்கம்.
- இஸ்லாம் மனிதனைப் பார்த்து 'எத்தனை கட்டளைகளை பின்பற்றினாய்?' என்று கேட்கிறது.
- கிறிஸ்தவம் மனிதனைப் பார்த்து 'நீ எப்படி அன்பு கூறினாய்? (எப்படி வாழ்ந்தாய்?)' என்று கேட்கிறது.
- இஸ்லாம் – உன் இரட்சிப்பை நீயே சம்பாதித்துக் கொள் என்கிறது.
- கிறிஸ்தவம் – 'உன் இரட்சிப்பை நான் சம்பாதித்து வைத்துள்ளேன், அதனை முழுமனதுடன் பெற்றுக்கொள்வாயா?' என்று கேட்கிறது.
- இஸ்லாம் – நீ சொர்க்கம் வர நீ என்ன செய்தாய்? எனக்கு அவைகளைக் காட்டு, நான் பார்க்கட்டும் என்றுச் சொல்கிறது.
- கிறிஸ்தவம் – நீ சொர்க்கம் வர உனக்காக நான் என்ன செய்துள்ளேன்? என்று நீ பார்த்து அறிந்துக்கொள் என்றுச் சொல்கிறது.
ஒருவன் இஸ்லாமை பின்பற்ற முடிவு செய்தவுடன், அவன் முதுகில் ஒரு டன் எடையுள்ள மூட்டையை எடுத்து வைத்து, இதனை உன் மரணம் வரை சுமந்துக்கொண்டு வரவேண்டும் என்று இஸ்லாம் சொல்கிறது. ஆனால், கிறிஸ்துவோ, அந்த மூட்டையை என் காலடியில் வைத்துவிட்டு, விடுதலையோடு என்னோடு நடந்துச் செல் என்றுச் சொல்கிறார்.
அன்பு சகோதரனே! சகோதரியே! நீ விடுதலையாக்கப்பட்டுள்ளாய், இனி உன்னை யாரும் அடிமைப் படுத்த இடம் கொடுக்காதே!
அடுத்த கேள்வி: ஹலால் ஹராம் என்பதை நற்செயல்களை சம்மந்தப்படுத்தி விளக்கினீர்கள், ஆனால், சாப்பிடுவதில், உடைகள் அணிவதில் மற்றும் இதர காரியங்களில் ஹலால் ஹராம் பற்றி கிறிஸ்தவம் என்ன சொல்கிறது என்பதை விளக்கமுடியுமா?
Source: http://www.answering-islam.org/tamil/authors/umar/new_creation_qa/new_creation_qa4.html
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக